உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

இங்கு தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. ஆகவே மக்களுக்கு நலன்தரத் தக்க சாதனைகள் செய்தளிப்பதில் எந்தக் கட்சி தரமானது, எந்தக்கட்சி அவ்வளவு தரம் இல்லாதது என்று கூறிட இயலாது; ஒப்பிட்டுப் பார்த்திடும் வாய்ப்பு இல்லாததால்.

ஆகவே காங்கிரசாரும் அவர்தம் ஆதரவாளரும், சாதனைகள்—சாதனைகள்—என்று பேசும்போது, ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்பது பேர், அதிலே முதலாவதாக வந்தவன் முத்துச்சாமி, இரண்டாவதாக வந்தவன் இருதயசாமி என்று கண்டறிந்து கூறுவதுபோலக் கூறவில்லை; கூறிடும் வாய்ப்பு இல்லை.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை—என்பார்கள்! அதுபோல, வேறு எந்தக்கட்சியும் ஆட்சிப் பொறுப்பினைப் பெற்றிடாத நிலையில், ஆட்சி நடத்திடும் ஒரே கட்சியான காங்கிரஸ், சாதனை! சாதனை! என்று கூறிவருகிறது.

உண்மையான மதிப்பீடு தெரியவேண்டுமானால், இன்று காங்கிரஸ் நடத்திடும் ஆட்சி, வேறோர் கட்சியிடம் கிடைத்து, அந்தக் கட்சி என்னென்ன சாதனைகளைப் பெற்றுத் தருகிறது என்று பார்த்து, இரண்டையும் ஒப்பிட்டு, எது தரமுள்ளது என்று தீர்மானிக்கவேண்டும். அதற்கு இந்த இருபதாண்டுகளாக வழி இல்லை. இன்னும் இருபது ஆண்டுகளுக்கும் வழி இல்லை என்கிறார் காமராஜப் பெரியவர்.

அதாவது வேறோர் கட்சியின் திறமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று விரும்புகிறார். அந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்.

மக்கள் அளித்திடும் தீர்ப்பைப் பொறுத்து இருக்கிறது அவர் திட்டம். ஆனால், போட்டி கூடாது!!—என்கிறார்.

குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறான் என்பார்கள்; வேறு எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த விடக் கூடாது என்று திட்டமிடுவது, அத்தகைய விளையாட்டிலே உள்ள விருப்பம் காரணமாகப் போலும்!