மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/027
6. சங்க காலத்துப் பாண்டிய அரசனின் பிராமி எழுத்துச் சாசனம்[1]
கடைச் சங்க காலத்துச் சேர அரசர்களைக் கூறுகிற பிராமி எழுத்துச் சாசனத்தைப் பற்றிச் சென்ற இதழில் எழுதினோம். இந்த இதழிலே கடைச் சங்க காலத்துப் பாண்டியனைக் கூறுகிற பிராமி எழுத்துச் சாதனத்தைப் பற்றிக் கூறுவோம்.
பாண்டி நாட்டிலே மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுகாவிலே மதுரை நகரத்துக்கு அருகிலே உள்ள மாங்குளம் என்னும் ஊரிலேயுள்ள மலைப்பாறை யொன்றிலே இந்தப் பிராமி எழுத்துச் சாசனம் செதுக்கியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் வேறு சாசனங்களுடன் எபிஃகிராபி (சாசன) இலாகாவின் 1906-ஆம் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. (460-465 of 1906, 242 of 1963-64) இந்த சாசனம் கண்டுபிடிக்கப்பட்டு அறுபது ஆண்டுகளாகியும், இந்தச் சாசனத்தைச் சாசன இலாகா வாசித்து வெளியிடாமலே இருந்திருக்கிறது! சமீப காலத்தில்தான் இச்சாசனம் முதன்முதலாகத் திரு. ஐ. மகாதேவன் அவர்களால் படித்து வெளியிடப்பட்டது.
மேலே கூறிய இடத்தில், இயற்கையாக அமைந்துள்ள குகைவாயிலின் மேற்புறத்துப் பாறையின் மேலே முன்பக்கத்தில் இந்தச் சாசனம் பெரிய எழுத்துக்களால் ஒரே வரிசையாக எழுதப்பட்டிருக்கிறது. இக்குகையிலே அக்காலத்தில் வசித்திருந்த பௌத்த அல்லது ஜைன (சமண) முனிவர் படுப்பதற்கு ஏற்றதாக இக்குகையின் கற்றரை மழமழவென்று அமைக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்து பௌத்த ஜைன முனிவர்கள் ஊரில் தங்கி வசிக்காமல், ஊருக்கப்பால் மலைக்குகைகளிலே தங்கி வசிப்பது வழக்கம். அவர்களுக்கு வசதியாக இருக்கும்படி கற்படுக்கைகளை மழமழப்பாக அமைத்துக் கொடுப்பது ஊரார் கடமை. அந்த முறைப்படி ஒருவர் இந்தக் குகையிலே கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்து அக்குகை வாயிலின் மேற்புறத்தில் இந்தப் பிராமி எழுத்துச் சாசனத்தை எழுதிவைத்தார். இந்தச் சாசனம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் * அல்லது கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்தச் சாசன எழுத்தின் உருவ அமைப்பைக் கொண்டு கருதப்படுகிறது. ஒருவேளை இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். அசோக சக்கரவர்த்தி, தமது ஆட்சிக்கு உட்படாத தமிழகத்தில் (சேர சோழ பாண்டிய சத்திய புத்திர நாடுகளில்) பௌத்த முனிவர்களை அனுப்பியதாக அவருடைய சாசனங்களில் இரண்டு சாசனங்கள் கூறுகின்றன.
நமது ஆராய்ச்சிக்குரிய இந்தச் சாசனத்திலே அந்தக் குகையில் வசித்த முனிவரின் பெயரும், அக்குகையில் கற்படுக்கைகளை அமைத்தவர் பெயரும், அக்காலத்தில் அரசாண்டிருந்த பாண்டியன் பெயரும் கூறப்படுகின்றன.
சங்க காலத்துச் சாசனங்கள் கிடைக்கவில்லை என்று இதுவரை குறை கூறப்பட்டு வந்தது. இந்தச் சாசனம் அந்தக் குறையை நீக்கிவிட்டது.
இனி, இந்தச் சாசனம் என்ன கூறுகிறது என்பதை ஆராய்வோம். கணியன் நந்தி என்னும் முனிவர் பெயரும் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் பெயரும் குகையைச் செப்பஞ் செய்து கொடுத்த கடலன் வழுதி என்பான் பெயரும் இந்தச் சாசனத்தில் கூறுப்படுகின்றன. நெடுஞ்செழியன் என்னும் பெயர்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய தலையாலங்கானத்துப் போரை வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும் அவனுக்கு முன்பு இருந்த ஆரியப் படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனையும் (இவன் கோவலனைத் தவறாகக் கொன்றவன்) அறிவோம். அந் நெடுஞ்செழியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தவர்கள். ஆனால், இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற நெடுஞ்செழியன் அவர்கள் காலத்துக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவன். இது இந்தச் சாசன எழுத்தைக் கொண்டு யூகிக்கப்படுகிறது. எனவே இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியன் கடைச் சங்க காலத்தில் இருந்தவன் என்பது தெரிகின்றது.
இந்தச் சாசனம், குகையின் முன்புறத்தில் பெரிய எழுத்துகளால் ஒரே வரியாக எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினோம். ஒரே வரியாக எழுதப்பட்டுள்ள இந்த சாசனத்தை ஐந்து வரியில் அமைத்துக் கீழே காட்டியுள்ளோம்.
பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ள இந்தத் தமிழ் மொழிச் சாசனத்திலே தம்மம் (தர்மம்) என்னும் பிராகிருத மொழிச் சொல் காணப்படுகிறது. இச்சொல் பாலி என்னும் மாகதி மொழி அல்லது சூரசேனி என்னும் அர்த்த மாகதி மொழியிலிருந்து வந்திருக்க வேண்டும். ஏனென்றால் பௌத்தரும் ஜைனரும் இந்த மொழிகளைத் தங்கள் தெய்வ பாஷையாக அக்காலத்தில் வழங்கி வந்தார்கள். எனவே இந்தக் குகையில் வசித்த முனிவர் பௌத்த சமயத்தவராக வோ, ஜைன சமயத்தவராகவோ இருந்திருக்க வேண்டும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
இந்தச் சாசனத்திலிருந்து, கணியன் நந்தி என்னும் முனிவரின் பெயரும் அவருக்காக இக்குகையில் கற்படுக்கைகளை அமைத்த கடலன் வழுதி என்பவரின் பெயரும் இவர்கள் காலத்தில் பாண்டிய நாட்டையரசாண்ட நெடுஞ்செழியன் என்னும் அரசன் பெயரும் கூறப்படுகின்றன.
இந்தச் சாசனத்தின் வாசகம் இது:
கணிய் நந்தி அஸிரிய் ஈ
குவ்அ னிகெ தம்மம்
ஈ த்தஅ நெடுஞ்ச ழியன் ப
ணஅன் கடல்அன் வழுத்தி
ய் கொட்டுபித்தஅ பளிஈய்.
இந்தச் சாசனத்தின் கருத்தை விளக்கிக் கூறுவதற்கு முன்பு இவ்வெழுத்துக்களைப் பற்றிச் சில கூறவேண்டும். இப்பிராமி எழுத்துச் சாசனத்தில் உயிர்மெய் அகர எழுத்துகள் ஆகாரக் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளன. (முதல் வரியில் க, ந, இரண்டாம் வரியில் ம, மூன்றாம் வரியில் த, ச, ய ப, நான்காம் வரியில் ண, க, ட, வ, ஐந்தாம் வரியில் த, ப, ஆகிய இவ்வெழுத்துக்கள் ஆகாரக் குறி கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை உயிர்மெய் அகர வெழுத்துகளாகப் படிக்க வேண்டும். மேலும், முதல் வரியில் எட்டாவது எழுத்தாகிய ஸி என்பது வடமொழி அல்லது பிராகிருத மொழி எழுத்தாக எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது வரியில் உள்ள 6, 7, 8, 9-ஆம் எழுத்துகளும் தம்மம் என்று வடமொழி அல்லது பிராகிருத மொழி எழுத்துகளெல்லாம் தமிழ் பிராமி எழுத்துகளே.
மேலும் இச்சாசனத்தில் றன்னகரம் தந்நகரம்போல எழுதப்பட்டு முடி வளைந்து காணப்படுகின்றது. (இரண்டாம் வரி நான்காம் எழுத்தும், மூன்றாம் வரி பத்தாம் எழுத்தும், நான்காம் வரி மூன்றாம் எழுத்தும், எட்டாம் எழுத்தும், றன்னகர எழுத்துக்களே. இவை கோடு பெறாதபடியால் இவற்றை ன் என்று மெய்யெழுத்தாகவே வாசிக்க வேண்டும்.
விளக்கம்:-
கணிய் = கணி. அஸிரிய்ஈ = ஆசிரியர். குவ் அனிகெ = குவவனிகெ (குவவனுக்கு). தம்மம் = தர்மம். ஈத்தஅ நெடுஞ் = ஈத்தவன் நெடுஞ். நெடுஞ்சழியன் = நெடுஞ்செழியன். பண அன் = பணவன் (பணயன்). வழுத்திய் = வழுதி. கொட்டு பித்தஅ கொத்து பித்த. (கொத்துவித்த), பளிஈய் = பள்ளி.
மிகை எழுத்துகளைத்தள்ளி, சந்திகளைப் புணர்த்தி, தவறுகளைச் சரிப்படுத்தினால் இச்சாசனத்தின் வாசகம் இவ்வாறு அமையும்:-
கணி நந்தி ஆசிரியர் குவவனுக்குத் தர்மம் ஈத்தவன் நெடுஞ்செழியன். பணயன் கடலன் வழுதி கொத்துவித்த பள்ளி.
திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்தச் சாசனத்துக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்:“உவ்விடம் (உவன்) வசிக்கிற முனிவன் (ஆசீரியன்) கணிய நந்திக்குத் தர்மம் நெடுஞ்செழியன் பண(வ)ன் (பஞ்சவன்) கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்”1
குவவன் என்பதை உவன் என்று திரு.ஐ. மகாதேவன் வாசிக்கிறார்.
ஆனால், இந்தச் சாசனத்தின் வாசகத்தைக் கீழ்க்கண்டபடி அமைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது:-
கணியனந்தி ஆசீரிய குவவனுக்கு (கொடுத்த) தருமம். (இதை) ஈத்தவன் நெடுஞ்செழியன். பணயன் (ஆகிய) கடலன் வழுதி கொட்டுபித்த (கொத்துவித்த) பள்ளி.
(கொட்டுவித்த என்பதன் கருத்து பாறையைக் கொத்திச் செப்பம் செய்து கற்படுக்கையை யமைத்த என்று இருக்கலாம்)
இந்தத் தருமத்தை யளித்தவன் அதாவது, முனிவர் வசிப்பதற்குக் குகையைத் தானமாகக் கொடுத்தவன் நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் என்பதும், அந்தக் குகையைச் செப்பஞ்செய்து முனிவர் வசிப்பதற்கு ஏற்றதாகப் பள்ளியாகச் செய்வித்தவன் அப்பாண்டியனுடைய பணயன் ஆகிய (தச்சனாகிய) கடலன் வழுதி என்பதும், இந்தப் பள்ளியைத் தானமாகப் பெற்ற முனிவன் கணியன் நந்தி குவவன் என்பதும் இச்சாசனத்திலிருந்து அறியப்படுகின்றன.
திரு. ஐ. மகாதேவன் அவர்கள், இந்தச் சாசனத்தை யளித்த பாண்டியனின் பெயர் நெடுஞ்செழியன் பஞ்சவன் கடலன் வழுதி என்று படிக்கிறார். இச்சாசனத்தில் வருகிற பணவன் என்னும் சொல் பிராகிருத மொழி என்றும், அது பஞ்சவன் என்று பொருள்படும் என்றும் அது பஞ்சவனாகிய பாண்டியனைக் குறிக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
அவர் கூற்று தவறு என்று தோன்றுகிறது. பணயன் என்பதே சரியான சொல். அது கற்றச்சன், கருமான் என்னும் பொருள் உள்ளது. அரசனுடைய தச்சனுக்குப் பணயன் என்று அக்காலத்தில் பெயர் வழங்கி வந்தது. பிற்காலத்தில், பணயன் என்னுஞ் சொல் பணயகாரன் என்று வழங்கப்பட்டதைச் சாசனங்களில் காணலாம். வேள்விக்குடி செப்பேடு, சின்னமனூர் செப்பேடு, சீவரமங்கலச் செப்பேடு முதலிய பிற்காலத்துப் பாண்டியரின் செப்பேட்டுச் சாசனங்களை எழுதியமைத்தவரின் பெயர்கள் அச் சாசனங்களில் கூறப்படுகின்றன. அவர்கள் அச்சாசனங்களில் பணயகாரன் என்றே கூறப்படுகின்றனர். எனவே, பணயன் அல்லது பணயகாரன் என்பது அரசரின் கீழ் பணிபுரிந்த தச்சர்களைக் குறிப்பனவாகும் என்பது ஐயமறத் தெரிகின்றது. இந்தச் சாசனத்தில் வருகிற பணயன் என்பதற்குக் கல்தச்சன் என்பதே பொருளாகும். அது பணவன் என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபு என்று கருதுவது தவறு ஆகும்.
அந்தப் பணயனாகிய கற்றச்சனின் பெயர் கடலன் வழுதி என்று சாசனம் கூறுகிறது. கடலன் என்பது தச்சனுடைய சிறப்புப் பெயர். வழுதி என்பது பாண்டி மன்னரின் சிறப்புப் பெயர். அரசரின் கீழ் அலுவல்புரியும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் அரசரின் பெயரையே தாங்களும் சூட்டிக்கொள்வது அக்காலத்து மரபு. இதனைப் பழைய சாசனங்களில் காணலாம். அந்த வழக்கப்படி இந்தக் கல்தச்சனாகிய பணயனும் வழுதி என்னும் பாண்டியன் பெயரைச் பயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறான்.
இந்தச் சாசனத்துக்கு இதுவே சரியான பொருள் என்பது தெரிகின்றது. ஈத்தவன் நெடுஞ்செழியன். கொட்டுபித்தவன் (கொத்துவித்தவன் என்று இருக்க வேண்டும். எழுதுவோர் பிழையால் கொட்டுபித்தவன் என்று எழுதப்பட்டிருக்கிறது) பெயர் பணயன் கடலன் வழுதி. வழுதி என்பது வழுத்தி என்று தவறாக எழுதப்பட்டிருக்கிறது.
கொட்டுபித்த என்பதைக் கொடுப்பித்த என்று திரு.ஐ. மகாதேவன் கருதுகிறார். அப்படியானால் ஈத்தவன், கொடுப்பித்தவன் என்று இரண்டு சொற்கள் மிகையாக உள்ளன காண்க.
சங்க காலத்துப் பிராமி எழுத்துச் தமிழ்ச் சாசனங்களில் தமிழ் அரசரின் பெயர் காணப்படவில்லை என்றும் அக்காலத்தில் அரசர்கள் இருந்திருந்தால் அவர்களுடைய பெயர்கள் சாசனங்களில் கூறப்படாமல் இருக்குமா? என்றும் ஆகவே, சங்ககாலம் என்பது பொய்க் கதை என்றும் சில போலி ஆராய்ச்சிக்காரர் விதண்டாவாதம் செய்து வந்தனர். அவர்களுக்கு இந்தச் சாசனமும் முன் இதழில் வெளியிட்ட சாசனமும் தகுந்த விடையளிக்கின்றன. இனியேனும் அவர்கள் சங்க காலத்தைப் பற்றி ஐயப்படமாட்டார்கள் என்று கருதுகிறோம்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சாசனத்தைச் சாசன இலாகா படித்து வெளியிடாமல் மறைத்து வைத்திருந்த இரகசியம் புரியவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான சாசனங்களை வெளியிடாமல் இருட்டில் வைத்திருக்கும் காரணம் என்ன? வெளியிடாத சாசனங்களை இனியேனும் வெளியிட்டுத் தமிழ்நாட்டு வரலாறு எழுதுவதற்குத் துணைபுரிவார்களா? இதுகாறும் தூங்கிக்கொண்டிருந்ததுபோலத் தூங்கப் போகிறார்களா?
இந்தச் சாசனத்தை முதன் முதலாக வெளியிட்ட திரு. ஐ. மகாதேவன் அவர்களுக்கு எமது நன்றி.
அடிக் குறிப்புகள்
1. Pagel, Corpus of the Tamil - Brahmi Inscriptions by Iravathem Mahadevan 1966.
- ↑ கல்வி - இதழ். டிசம்பர். 1966.