உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளியூரில்‌

81

“பாவிகளா!” என்று தன்னையும் மீறிக் கூச்சலிட்டு விட்டான், ராமப்பிரசாதன்.

‘மல்லிகா! மல்லிகா!’ என்று அலறினான் — ஓடினான் நிசப்தமாய் இருந்த வீதிகளின் வழியே அவன்.

நலந்தாவுக்குத் தீ வைக்கிறார்கள்!

நலந்தாவுக்கு நாசம் விளைவிக்கிறார்கள்!

நாளைய தினம் நலந்தாவில் படுகொலை!

வாசமல்லிகா!

நலந்தா!

நலந்தா!

கதறுகிறான் ராமப்பிரசாதன். மக்கள் நடுநிசிக் கூச்சல் கேட்டு பதைத்தெழுந்து வந்தனர்.

வாசமல்லிகா, மாளிகையில் இல்லை! தந்தையுடன், நலந்தா புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள் என்று காவலாளி சொன்னான். ஐயோ! என்று பயங்கரமாகக் கூச்சலுடன் ஓடினான், அவர்கள் சென்ற திக்கு நோக்கி.

விரட்டிக் கொண்டோடினர், பண்டிதரும் ஸ்வாமிகளும்!

“விடாதே, பிடி! விடாதே, பிடி!” என்று கூவினர்.

சிலர் பிடிக்க முயற்சித்தபோது, ராமப்பிரசாதன், பாதையில் கிடந்த பெருங் கற்களை அவர்கள் மீது வீசினான்—பற்களை நறநறவெனக் கடித்தான் “தொட்டால் பிணமாவீர்கள்! பாவிகளே! அங்கே அறிவாளர்கள், அறநெறி அறிந்தோர், புத்தனின் பொன்மொழியை உலகுக்கு அளிக்கும் உத்தமர்கள் படுகொலை செய்யப்படச் சதி நடந்துவிட்டது; நலந்தாவுக்குத் தீ மூட்டப் போகிறார்கள். உடனே தடுத்தாக வேண்டும்—தொடாதே—கிட்டே வராதே” என்று கூவியபடி ஓடினான். தடுக்க வந்தான் ஒரு குதிரை வீரன்—அவனைக் குப்புறக் கீழே தள்ளிவிட்டான்—குதிரை மீதமர்ந்தான்—சிட்டாகப் பறந்தது பரி.

நலந்தாவுக்குப் போகும் பாதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/81&oldid=1771351" இலிருந்து மீள்விக்கப்பட்டது