113
மு:– சரி! என் ஓட்டு காங்கிரசுக்குப் போடுவதாலே, என் சமதர்மக்கொள்கை, பகுத்தறிவுக்கொள்கை எதுவும் பறிமுதல் ஆகிவிடாது என்று சொல்வதாலே, காங்கிரசுக்கு வேலை செய்கிறேன். ஒரு சின்ன உதவி...
ம:– சொல்லுங்க செய்துவிடலாம்...
மு:– நான் எழுதியுள்ள கடவுள் ஒழிக! என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்குக் காமராஜரைத் தலைமைவகிக்க அழைத்துவர வேண்டும்...
ம:– அடுத்தவாரமே நடத்திவிடலாம்...
மு:– அடுத்த வாரமா...அச்சகத்தான் பழயபாக்கிக்காக நச்சரித்தபடி இருக்கிறான்; வேலையிலே சுணக்கம்...இரண்டு வாரம் ஆகும்...
ம:– அடுத்தவாரம் விழா! எப்படி என்ன என்று என்னை ஒன்றும் கேட்கவேண்டாம். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். காமராஜர் தலைவர்; அந்தக் கூட்டத்திலேயே, காங்கிரசை ஆதரித்து நீங்களும் ஒரு நாலுவார்த்தை பேசிவிட வேண்டும்; செலவு பற்றி உமக்கு ஒரு கவலையும் வேண்டாம்...
★
மண்டி மாரியப்பன்:– மண்டலமா! வாங்க, வாங்க இப்பத்தான் வழி தெரிஞ்சுதா, கண்திறந்துதா...அய்யோவ்! உன்னைப்போல ஆசாமிகளை நம்பினா, படுநாசம்தான்யா, யாருக்கும்...
மண்டலம்:– மளமளன்னு சொல்லவேண்டியது அவ்வளவையும் கொட்டிவிடுங்க சீக்கிரமா...
ம.மா:– ஆமாய்யா! கேலிதான் பேசுவே. தலைவரில்லையா... தெரியப்போகுதே பத்து நாளிலே. தீட்டிக்கிட்டுத்தான் இருக்கிறாங்க எல்லோரும்...
ம:– ஒழித்துக்கட்டத்தானே....செய்யட்டும்...நீங்களும் சேர்ந்து கொள்ளுங்க... தோற்கட்டும் காங்கிரசு, எனக்கு என்ன நஷ்டம்! ஆகிறபடி ஆகுது...
ம.மா:– என்ன மண்டலம்! முற்றுந் துறந்ததுபோலப் பேசி மிரட்டிப் பார்க்கறே.