மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/020
17. புகழூர் பிராமி எழுத்து
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்கிறது. திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் புகழூர் ஒரு நிலையமாகவும் இருக்கிறது. புகழூரின் பழைய பெயர் புகழியூர். இவ்வூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுத பாளையம் என்னும் கிராமமும் அதன் அருகில் ஆறுநாட்டார் மலை என்னும் பெயருள்ள தாழ்வான குன்றுகளும் உள்ளன. இந்தக் குன்றுகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளும், குகைக்குள்ளே தரையில் கற்படுக்கைகளும், கற்படுக்கைகளின் ஓரத்தில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை கடைச்சங்க காலத்தவை என்பதில் ஐயமில்லை.
ஆறு நாட்டார் மலையிலுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் பார்ப்போம். முதலில், சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் 1927-28ஆம் ஆண்டின் 343ஆம் எண்ணாகப் பதிவு செய்துள்ள கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்துக்கள் இரண்டு வரிசையாக எழுதப்பட்டுள்ளன. முதல் வரியில் பத்து எழுத்துக்களும் இரண்டாம் வரியில் ஒன்பது எழுத்துக்களும் உள்ளன. இந்த எழுத்துக்களின் வரி வடிவம் இவை.
பாறையில் பொளிவுகளும் புரைசல்களும் இருப்பதனால் சில எழுத்துக்கள் உருத்தெரியாமல் இருக்கின்றன. அனாலும் கூர்ந்து பார்த்து இவற்றைப் படிக்க இயலும். முதல் வரியில் கருவூர் பொன் வாணிகன் என்றும் இரண்டாம் வரியில் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி மற்ற எழுத்துக்களை அதிட்டானம் என்றும் படிக்கலாம். இரண்டாவது வரியில் முதல் எழுத்து பொளிந்து சரியான உருவம் தெரியாமல் இருக்கிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துக்கள் த்தி என்பவை.
திரு. டி.வி. மகாலிங்கமும்2 திரு. ஐ. மகாதேவனும்3 இவற்றைப் படித்துள்ளனர். திரு. டி.வி. மகாலிங்கம் இரண்டாம் வரியில் முதல் நான்கு எழுத்துக்களை நேர்த்தி என்று படித்து, நேர்த்தி என்றால் நேர்ந்துகொள்ளுதல் (பிராத்தனை செய்து கொள்ளுதல்) என்று விளக்கங் கூறினார். கருவூர் பொன் வாணிகன் நேர்ந்துகொண்டு அமைத்த அதிஷ்டானம் என்று பொருள் கூறுகிறார்.
திரு. ஐ. மகாதேவன், இரண்டாவது வரியின் முதல் மூன்று எழுத்தை நத்தி என்று படித்துள்ளார். படித்து ‘கருவூர் பொன்வாணிகன் நத்தி அதிட்டானம்’ என்று வாக்கியத்தை அமைக்கிறார். பிறகு, வாணிகன்+நத்தி என்பதை வாணிகன்+அத்தி என்று பிரித்துக் கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய அதிட்டானம் (இடம்) என்று பொருள் கூறியுள்ளார். கல்வெட்டில் வாணிகன் என்றும் நத்தி (?) என்றும் சொற்கள் தனித்தனியே பிரிந்துள்ளன. பிரிந்துள்ள சொற்களை இவர் பிரித்துக் காட்டுவது பொருந்தவில்லை. இவர் தவறாகப் படித்துள்ள ‘நத்தி’ என்னும் பெயர் புதுமையாக இருப்பதனால் நத்தியை அத்தி யாக்க எண்ணி, வாணிகன்+நத்தி = வாணிகன் அத்தி என்று எங்கும் இல்லாத இலக்கணத்தைக் கூறி, நத்தியை அத்தி ஆக்குகிறார்.
மகாலிங்கமும் மகாதேவனும் இரண்டாம் வரியின் முதல் சொல்லை நேர்த்தி என்றும் நத்தி என்றும் படித்தார்கள். காரணம் முதல் எழுத்து பொளிந்துபோய்ச் சரியாக உருத்தெரியாமலிப்பதுதான். இரண்டு வாசகமும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பொளிந்துள்ள முதல் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால் அது பொ என்னும் எழுத்து என்று தோன்றுகிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் பொத்தி என்றாகிறது. ஆகவே கருவூர் பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி என்பது தெரிகிறது. இந்த வாக்கியத்தைக் ‘கருவூர்’ பொன் வாணிகன் பொத்தி அதிட்டானம்' என்று படிப்பது சரி என்று தோன்றுகிறது.
விளக்கம்: பொத்தன், பொத்தி என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்தன. பொத்த குட்டன் என்னும் தமிழன் இலங்கையிலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன் தான் விரும்பியவர்களை இலங்கையின் அரசராகச் சிம்மாசனம் ஏற்றினான் என்று குலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. சங்க காலத்தில் பொத்தியார் என்று புலவர் ஒருவர் இருந்தார். அவருடைய செய்யுள்கள் புறநானூற்றில் (புறநா. 217, 220, 221, 222, 223) தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வெட்டின் இரண்டாவது வரியில் உள்ள முதல் மூன்று எழுத்தையும் பொத்தி என்று படித்துப் பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி என்று தீர்மானிக்கலாம்.
புகழூர்ப் பிராமி எழுத்துக் கல்வெட்டு இன்னொன்றைப் பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவின் 1927-28 ஆம் ஆண்டுத் தொகுப்பில் 346ஆம் எண்ணுள்ளது.4 இதில் ஒரே வரியில் இருபத்திரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லில் புரைசல்களும் புள்ளிகளும் கலந்திருப்பதனால் சில எழுத்துக்களின் சரியான வடிவத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. ஆனாலும் படிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும் இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது. (இதில் புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள்)
ந ள ளி வ ஊா ப் பி ட ந தை ம க ன கீ ர ன கொ ற ற ன
இந்த எழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறு அமைகிறது:
‘ந ள் ளி வ் ஊ ர் ப் பி ட ந் தை ம க ன் கீ ர ன் கொ ற் ற ன்’
திரு. டி.வி. மகாலிங்கம் இதை இவ்வாறு படித்துள்ளார் :5
‘நாளாளப ஊர் பிடந்தை மகன் கீரன் கொற்றன்’, இவ்வாறு படித்த பிறகு இவர் ‘பிடந்தை’ என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: ஆதன்+தந்தை = ஆந்தை என்றாவது போலப் பிடன்+தந்தை = பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டாரன், தந்தை பெரியவன், மேலானவன், உயர்ந்தவன், புனிதமானவன்.
முதல் ஆறு எழுத்துக்களை ‘நளாளப ஊர்’ என்று இவர் படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிடந்தை என்பதை பிடன் தந்தை என்று பிரிப்பதும் தவறு என்று தோன்றுகிறது. பிடந்தை என்பது ஒரே சொல். அஃது ஓர் ஆளைக் குறிக்கிறது. பிடன் என்பதற்கும் தந்தை என்பதற்கும் இவர் கூறுகிற பொருள்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை. ‘மகன் கீரன் கொற்றன்’ என்று மற்ற எழுத்துக்களைப் படித்திருப்பது முழுவதும் சரி.
திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு படித்துள்ளார்:6
‘நல்லிய் ஊர’்அ பிடந்தை மகள் கீரன் கொற்ற.....’
நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன், கொற்ற(ன்)’
முதல் ஆறு எழுத்துக்களை இவர் ‘நல்லிய் ஊர’ என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிராமி எழுத்தில் லகரத்துக்கும் ளகரத்துக்கும் சிறு வேற்றுமைதான் உண்டு. லகரத்தின் வலப் பக்கத்தின் மத்தியில் வளைந்த கோடு இட்டால் அது ளகரமாகிறது. கோடு இடாவிட்டால் லகரமாகிறது. இந்தச் சாசன எழுத்தின் நிழற்படத்தை உற்று நோக்கினால் ளகர எழுத்தாகத் தோன்றுகிறது. ஆகவே நள்ளி ஊர் என்பதே சரியாகும். ‘பிடந்தை மகள்’ என்று இவர் படிப்பது தவறு. எழுத்தில் ‘பிடந்தை மகன்’ என்றுதான் இருக்கிறது. மகள் என்று தவறாகப் படித்த இவர், மகள் என்பதற்கு மக்கள் என்று பொருள் கூறுகிறார். கீரன் கொற்றன் என்னும் ஒரே பெயரைக் கீரன் என்றும் கொற்றன் என்றும் இரண்டு பெயர்களாகக் கூறுகிறார்.
இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்:
நள்ளிவ் ஊர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்றன்
என்பது இதன் வாசகம். நள்ளி ஊரில் வாழ்ந்த பிடந்தை என்பவருடைய மகனான கீரன் கொற்றன் (என்பவர் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தார்) என்பது இதன் பொருள்.
விளக்கம்: நள்ளியூர் என்று எழுத வேண்டிய சொல்லை வகர ஒற்றுச் சேர்த்து எழுதியிருக்கிறது. இஃது எழுதினவரின் பிழையாகும். நள்ளி என்பவர் பெயரால் நள்ளியூர் இருந்தது என்பது தெரிகிறது. நள்ளி என்னும் பெயருள்ள கடையெழு வள்ளல்களில் ஒருவர் கூறப்படுகிறார். ‘நளிமலை நாடன் நள்ளி’7 ‘கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி’8 ‘திண்தேர் நள்ளி’ ‘வல்வில் இளையர் பெருமகன் நள்ளி’8 ‘கொள்ளார் ஓட்டிய நள்ளி’ கண்டிரம் என்னும் ஊரின் தலைவனான கண்டீரக்கோப்பெருநள்ளியைச் சங்கச் செய்யுள் கூறுகிறது. நள்ளியூரை இந்தப் பிராமி எழுத்துக் கூறுகிறபடியால் நள்ளி என்பவர் பெயரால் நள்ளியூர் ஒன்று இருந்தது என்பதை யறிகிறோம்.
பிடந்தை என்பது ஒருவன் பெயர். சங்கச் செய்யுள்களில் பிட்டங்கொற்றன் கூறப்படுகிறான். இவன் வானவன் (சேரனுடைய) மறவன் (சேனைத் தலைவன்) என்று கூறப்படுகிறான்.12 பிட்டங் கொற்றனைப் ‘பிட்டன்’ என்றும் கூறுவர்.13 அவனைக் கொற்றன் என்றும் கூறுவர்.14 பிட்டன் என்றும் கொற்றன் என்றும் கூறப்பட்ட பிட்டங்கொற்றனுக்கு எந்தை என்னும் சிறப்புப் பெயரும் இருந்தது. பிட்டங்கொற்றனைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறநானூறு 171இல் பாடியுள்ளார். அதன் அடிக்குறிப்பு ‘பிட்டங் கொற்றனைப் பாடியது’ என்று கூறுகிறது. அச் செய்யுளில் அவர் அவனை கொற்றன் (அடி 7) என்றும் எந்தை (அடி 12) என்றும் கூறுகிறார். ஆகவே அவனுக்குப் பிட்டெந்தை என்னும் பெயர் இருந்தது தெரிகிறது.
இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் பிடந்தை என்பவன் கூறப்படுகிறான். பிடந்தை என்பது பிட்டெந்தை என்பதன் திரிபு. நள்ளியூர்ப் பிடந்தை, சங்கச் செய்யுள்களில் கூறப்பட்ட ‘பிட்டெந்தையாக ’இருக்கலாம்.
கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர். இவன் பிடந்தையின் மகன்.
நள்ளியூரில் இருந்த பிடந்தை (பிட்டனெந்தையின்) மகனான கீரன் கொற்றன் இந்தக் கற்படுக்கைகளைச் செய்து கொடுத்தான் என்பது இக் கல்வெட்டின் பொருள்.
மேலே கூறப்பட்ட கீரன் கொற்றனுடைய தங்கையும் இந்தக் குகையில் கற்படுக்கையை யமைத்துத் தானம் செய்திருக்கிறார். அவருடைய பெயர் கீரன் கொற்றி என்பது. இவருடைய பெயரையும் இந்தக் கல்வெட்டு கூறுகிறது. இது 1963-64ஆம் ஆண்டின் கல்வெட்டுத் தொகுப்பில் 296ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.15 1927-28ஆம் ஆண்டின் 346ஆம் எண்ணுள்ள கல்வெட்டும் 1963-64 ஆம் ஆண்டின் 296ஆம் எண் கல்வெட்டும் தமயன் தங்கைமாரைக் குறிக்கின்றன என்பதைச் சாசன இலாகா அலுவலகர் ஒருவரும் தெரிந்துகொள்ளவில்லை. இக் கல்வெட்டைப் படித்த திரு.ஐ. மகாதேவனும், இதை அறியவில்லை. இந்த இரண்டு கல்வெட்டுக்களும் தமயன் தங்கையாரைக் காட்டுகின்றன என்பது எம் ஆராய்ச்சியினால் காணப்பட்டது. இந்தக் கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்தின் வரி வடிவத்தைத் திரு. ஐ. மகாதேவன் வெளியிட்டுள்ளார். இதை இவர் நேரில் கண்டு எழுதியதாகத் தோன்றுகிறது. எழுதிய போதுசில கோடுகளை விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. இந்த எழுத்துக்களை இவர் காட்டியபடி இங்கே தருகிறோம். (இதில் மூன்றாவது எழுத்து இடப் புறமாகத் திரும்பியிருக்க வேண்டியது வலப் புறமாகத் திரும்பி இருக்கிறது.)
திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இந்தக் கல்வெட்டுக்களை இவ்வாறு படித்துள்ளார்:16
நல்லி ஊர் அ பிடன் குறும் மகள்
கீரன் நொற்றி செயிபித பளி
நல்லியூர் பிடனுடைய இளைய மகன்களான கீரனும் ஓரியும் செய்வித்த பள்ளி.
இவர் படித்துப் பொருள் கூறுவதில் சில தவறுகள் உள்ளதை எடுத்துக்காட்டுவோம். நல்லி ஊர் என்பது மேலே முன் சாசனத்தில் கூறப்பட்ட நள்ளியூர், நல்லி என்பது தவறு என்றும் நள்ளி என்பதே சரி என்றும் முன்னே கூறினோம். குறும்மகன் என்பதை இளைய இரண்டு மகன்கள் என்று பொருள் கூறுகிறார். இது தவறு. குறும் மகன் என்பது இரண்டு இளைய மகன்களைக் குறிக்கவில்லை. அதன் பொருள் சிறிய மகன் என்பது. கீரன் ஒற்றி என்பவை இரண்டு மகன்களின் பெயர் என்று கூறுகிறார். இஃது ஒரே ஆளின் பெயரைக் குறிக்கிறது. கீரனும் ஓரியும் என்னும் இரண்டு மகன்கள் என்று எழுதிய இவர், பிறகு கோலாலம்பூர் மாநாட்டில், கீரன் ஓரி என்பது ஒரு மகனின் பெயர் என்று கூறியுள்ளார்.
இக் கல்வெட்டின் சரியான வாசகத்தையும் கருத்தையும் கூறுவோம்:
நள்ளி ஊர் பிடன் குறும் மகள்
கீரன் கொற்றி செய்பித பளி
‘நள்ளியூர் பிட்டனுடைய சிறிய மகளான கீரன் கொற்றி செய்வித்த பள்ளி’ என்பது இதன் கருத்து.
விளக்கம் : நல்லி ஊர் என்றிருப்பது நள்ளி ஊர் என்றிருக்க வேண்டும். நிழற்படத்தையாவது மை யொற்றுப் படியையாவது பார்த்து இதை முடிவு செய்ய வேண்டும்.
இந்த இரண்டு சாசனங்களில் நள்ளியூர் பி(ட்)டன் கூறப்படுகிறான். ‘நள்ளியூர் பிடந்தையின் மகன் கீரன் கொற்றனும் மகள் கீரன் கொற்றியும் கூறப்படுகின்றனர். இந்தத் தமயனும் தங்கையும் இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்து முனிவர்களுக்குத் தானஞ் செய்தனர்.’ இவர்களுடைய உறவு முறை இது:
முன் கல்வெட்டில் நள்ளி ஊர் என்று படித்தோம். ஆகவே இதுவும் நள்ளி ஊராகத்தான் இருக்க வேண்டும். பிராமி எழுத்து ல கரத்துக்கும் ள கரத்துக்கும் மிகச் சிறு வேறுபாடுகள் உண்டு என்பதை முன்னமே விளக்கிக் கூறினோம். ல்லி என்னும் எழுத்துக்களின் வலப்பக்கத்தில் தாழச் சிறு வளைவுக்கோடு விடுபட்டிருக்கிறது; அல்லது மறைந்திருக்கிறது. மையொற்றுப் படியைக் கொண்டு அறிய வேண்டும்.
‘ஊர்அ’ என்று அடுத்த எழுத்துக்கள் உள்ளன. அ என்பது ‘உடைய’ அது, என்னும் பொருள் உடைய வேற்றுமையுருபு எழுத்து. ஊர்+அ என்பதை ஊர என்று படித்து, ஊரைச் சேர்ந்த, ஊரினுடைய என்று பொருள் கொள்ளலாம்.
பிடன் என்பது பிட்டன் என்பதே. டகர ஒற்று விடுபட்டிருக்கிறது. பிடன் என்பது முன் சாசனத்தில் கூறப்பட்ட பிடந்தை (பிட்டனெந்தை)யைக் குறிக்கிறது.
‘குறும்மகள்’ என்பது சிறு மகள் என்னும் பொருள் உள்ளது. பிட்டனுடைய மகள் என்பது பொருள். இதில் மகர ஒற்று மிகையாக எழுதப்பட்டிருக்கிறது. குறுமகள் என்றிருக்க வேண்டும். குறுமகள் என்பதை ஐ. மகாதேவன் மகன்கள் என்று படித்திருப்பது தவறு. மகள் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அவர் குறுமகள் என்பதை இளைய மகள் என்று படித்திருப்பதும் தவறாகும். தமிழில் குறுமகள் என்பதற்கும் குறுமகன் என்பதற்கும் பொருள் வேறுபாடு உண்டு. '‘குறுமகள்’' என்றால் இளம்பெண் என்று பொருள். குறுமகன் என்பது குறுமகளின் ஆண்பாற் பெயர் அன்று. குறுமகன் என்றால் கீழ்மகன் என்று பொருள்.19 பிராமி எழுத்தில் கூறப்படுகிற ‘பிடன் குறுமகள்’ என்பதைப் ‘பிடன் குறுமகன்’ என்று படித்தால் பிட்டனுடைய கீழ்மகன் என்று பொருளாகிறது. கல்வெட்டில் ‘குறுமகள்’ என்னும் சொல் தெளிவாகக் காணப்படுகிறது.
‘குறுமகள்’ என்றால் இளம் பெண். சிறு வயதுள்ள மகள் என்பது பொருள். சங்கச் செய்யுள்களில் குறுமகள் என்னுஞ் சொல்லை நெடுகக் காண்கிறோம்.20
இரண்டாவது வரியில் கீரன் கொற்றி என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கீரன் ஓரி என்று மகாதேவன் படிப்பது தவறு. கீரன் கொற்றி என்பதே சரியானது. கொற்றன் என்று ஆண்மகனுக்கும் கொற்றி என்று பெண்மகளுக்கும் சங்க காலத்தில் பெயர்கள் வழங்கி வந்தன. கீரன் கொற்றி என்பவள் முன்பு கல்வெட்டில் கண்ட கீரன் கொற்றனுடைய தங்கை. இரண்டு கல்வெட்டுக்களும் அடுத்தடுத்து இருப்பதும் இதனைத் தெளிவாக்குகிறது.
செயிபித என்பது செய்ப்பித்த என்று இருக்க வேண்டும். செய்வித்த என்னும் பொருள் உள்ளது.
பளி என்பது பள்ளி என்றிருக்க வேண்டும். ளகர ஒற்று இடாமல் எழுதப்பட்டிருக்கிறது.
அடிக்குறிப்புகள்
1. Madras Epigraphic Collection, 343 of 1927-28.
2. Early South Indian Palaeography, 1967, p. 281 - 282.
3. No. 66. Seminar on Inscriptions 1966, p. 67.
4. Madras Epigraphy Collection, 346 of 1927-28
5. Early South Indian Palaeography, 1967, p. 283-84.
6. No. 58, p. 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil Brahmi Inscriptions.
Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Seminar held at Kulalumpur, 1966.
7. சிறுபாண். 107.
8. அகநா. 238 : 14.
9. குறுந். 210 : 1.
10. அகநா. 152:15.
11. புறநா. 158:16.
12. அகநா. 143 : 10-13
13. புறநா. 170 : 8, அகநா. 77 : 15-16, புறநா. 172:8.
14. புறநா. 168 : 17, 171 : 7.
15. Madras Epigraphy Collection, 296 of 1933-34.
16. No. 59, p. 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil Brahmi Inscriptions. Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Seminar held at Kulalumpur, 1966.
17. 346 of 1927-28.
18. 296 of 1963-64.
19. ‘குறுமகன் தன்னால்’ (சிலம்பு. 15:95), ‘குறுமகனாற் கொலையுண்ண’ (சிலம்பு. 29 உரைப்பாட்டுமடை.) ‘கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்ப’ (சிலம்பு. 29, காவற்பெண்டரற்று) குறுமகன் என்பதற்கு ‘கீழ்மகன்’ என்று அரும்பதவுரைகாரர் கூறுகிறார்.
20. ‘ஒள்ளிழைக் குறுமகள்’ (நற். 253:5), ‘மேதையங் குறுமகள்’ (அகநா. 7:6), ‘பொலந்தொடிக் குறுமகள்’ (அகநா.219:9) ‘வாணுதற் குறுமகள்’ (அகநா. 230:5), ‘பெருந்தோட் குறுமகள்’ (நற். 221:11), ‘மெல்லியற் குறு மகள்’ (அகநா. 93:8), ‘மடமிகு குறுமகள்’ (நற். 319:8), ‘எல்வளைக் குறு மகள்’ (நற். 167:10), ‘அணியியற் குறுமகள்’ (நற். 184:8) முதலியன காண்க.