உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்21

பெருமானைப் பணிந்தான். கோபுரங்கள், சிற்றம்பலம், பல பல மண்டபம், திருச்சுற்று மாளிகை, அம்மன் கோவில் இவற்றைப் பொன் மயமாக்கினான் பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான். நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெரு வீதிகளும் நாணுமாறு சிறப்பித்தான் மறையவர்க்குத் தானம் செய்தான் பட்டம் பெற்றவுடன், சிறைப்பட்டிருந்த பகை மன்னரை விடுதலை செய்தான் என்று குலோத்துங்கன் உலா, இராசராசன் உலா, தக்கயாகப் பரணி என்பன எடுத்தியம்புகின்றன. இவன், தந்தையான விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்று அரைகுறையாக விடப்பட்ட தில்லைத் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவுபெறச் செய்தான் என்னலாம்.

அமைதியான அரசியல்:இவனது ஆட்சிக்காலத்தில் போர்கள் இல்லை. சோழப் பெருநாட்டில் அமைதியே நிலவி இருந்தது. இவன் காலத்தில் சோழப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே பாண்டிய நாடுவரை பரவி இருந்தது. நாடு முழுவதும் அமைதியும் சமயத் திருப்பணிகளும் குடிகொண்டிருந்தன. கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறையில் இருந்த அரண்மனையிலும் அரசன் சென்று தங்குவது வழக்கம். தில்லையிலும் ஓர் அரண்மனை பொலிவுற்று. விளங்கினது.

குடும்பம்: அரசனது கோப்பெருந்தேவி தியாகவல்லி என்ற புவனம் முழுதுடையாள் மற்றொரு மனைவி கோவலூர் மலையமான் மரபினள். அவள் பெயர் முக்கோக்கிழாள் என்பது மகன் இரண்டாம் இராசராசன்.

‘அநபாயன்’- சிறப்புப் பெயர்: குலோத்துங்கன் பெற்றிருந்த பட்டப் பெயர்களுட் சிறந்தது. ‘அநபாயன்’