உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/வானதியின் பிரவேசம்

விக்கிமூலம் இலிருந்து

தியாக சிகரம் - அத்தியாயம் 26

[தொகு]

வானதியின் பிரவேசம்

கோட்டைக்குள்ளே சின்னப் பழுவேட்டரையர் பெரும் மனக்கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். வீர தீரங்களில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல. ஆனால் தமையனாருடைய யோசனையைக் கேட்டே எந்தக் காரியமும் செய்து பழக்கப்பட்டவராதலால் இந்த நெருக்கடியான நிலைமையில் சிறகு இழந்த பறவையைப் போல் தவித்தார். அன்று காலை முதல் ஒன்றன் பின் ஒன்றாக விபரீதமான செய்திகள் அவர் காதுக்கு எட்டிக் கொண்டிருந்தன.

பெரிய பழுவேட்டரையர் கடம்பூர் சம்புவரையர் மாளிகையிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டு இரண்டு தினங்களுக்கு மேலாயின என்று ஒரு செய்தி கிடைத்தது. புயல் அடித்த அன்று கொள்ளிட நதியைக் கடந்து கொண்டிருந்த படகுகள் பல முழுகிப் போயின என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் பெரிய பழுவேட்டரையரின் படகில் இருந்த ஒருவனே வந்து சேர்ந்தான். அவர் வந்த படகும் முழுகிப் போயிற்று என்றும், தான் திணறித் திண்டாடிக் கரை ஏறி வந்து சேர்ந்ததாகவும் கூறினான்.

இளவரசர் அருள்மொழிவர்மர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் மறைந்திருந்து வெளிப்பட்டார் என்றும் பெரும் ஜனத்திரளுடன் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்றும் இன்னொரு ஒற்றன் வந்து கூறினான். இரவு திருவாரூரில் அவர் தங்கியதாகவும், தான் இரவுக்கிரவே பிரயாணம் செய்து வெள்ளக் காடாயிருந்த பிரதேசங்களையெல்லாம் தாண்டி வந்ததாகவும் தெரிவித்தான்.

இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் சம்புவரையர் அனுப்பிய ஆள் ஒருவன் வந்து சேர்ந்தான். திருக்கோவலூர் மலையமான் பெரும்படை திரட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றும் ஆதித்த கரிகாலரின் வெறி அதிகமாகி வருகிறது என்றும், ஆகையால் பெரிய பழுவேட்டரையரை உடனே புறப்பட்டு வரும்படி சம்புவரையர் செய்தி அனுப்பியதாகவும் கூறினான்.

பெரிய பழுவேட்டரையரோ தஞ்சைக்கு இன்னும் வந்து சேரவே இல்லை. அவர் உடனே புறப்பட்டுச் செல்வது எப்படி? யமனும் அருகில் வருவதற்கு அஞ்சக்கூடிய அந்த வீரக் கிழவரை ஒருவேளை கொள்ளிடத்து வெள்ளம் கொள்ளை கொண்டிருக்குமோ? - என்று சின்னப் பழுவேட்டரையர் கலங்கினார்.

இதற்கு அடுத்தபடியாக எல்லாவற்றிலும் பெரிய இடி போன்ற செய்தியைத் தெற்கேயிருந்து ஒற்றர்கள் ஓடிவந்து தெரிவித்தார்கள். தென் திசையிலிருந்து தஞ்சைக்கு வந்த மூன்று பெரிய சாலைகளிலும் சேனா வீரர்கள் சாரிசாரியாக வந்து கொண்டிருப்பதாகவும், கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும் வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்டவுடனேதான் சின்னப் பழுவேட்டரையர் கோட்டைக் கதவுகளையெல்லாம் சாத்திவிடும்படி உத்தரவு போட்டார். உள்ளிருந்து யாரும் வெளியேறுவதையும், வெளியிலிருந்து உள்ளே வருவதையும் கண்டிப்பாகத் தடை செய்துவிட்டார்.

வழக்கம்போல அன்று கோட்டைக்குள் வந்து வேளக்காரப் படையினரைச் சக்கரவர்த்தியின் அரண்மனையைச் சுற்றிலும் காவலுக்கு அமைத்துவிட்டுத் தம்முடைய சொந்தப் படை வீரர்களைக் கோட்டைக் காவலுக்கு நியமித்தார். இந்த விவரங்களையெல்லாம் சக்கரவர்த்திக்கும் தெரிவித்து விட வேண்டும் என்று எண்ணினார். அதற்கு முன்னால், முதன் மந்திரி அநிருத்தரைக் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அநிருத்தரிடம் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாதுதான் என்றாலும், அச்சமயம் அவர் கோட்டைக்கு வெளியில் இல்லாமல் உள்ளேயிருப்பது நல்லது. தம்மை அறியாமல் அவர் எதுவும் செய்ய முடியாதல்லவா? அவரிடம் யோசனை கேட்டுக் கொண்டு காரியங்கள் செய்வதாகப் பாவனை பண்ணுவதும் நல்லது. பின்னால் ஏதாவது தவறாகப் போனால் தம்மீது மட்டும் குற்றம் என்று யாரும் பழி சுமத்த முடியாது.

சக்கரவர்த்தியிடம் தாமே நேரில் சொல்வதைக் காட்டிலும் அநிருத்தரையும் அழைத்துக்கொண்டு போய்ச் சொல்வது சுலபமாயிருக்கும். இளவரசன் அருள்மொழிவர்மனும், அவனுக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்துகொள்ள விரும்பிய பூதி விக்கிரம கேசரியும் சேர்ந்து சதியாலோசனை செய்து தஞ்சாவூரைக் கைப்பற்றுவதற்காகவே, இரு பக்கமிருந்தும் வருவதாகச் சின்னப் பழுவேட்டரையர் நம்பினார். இதை பற்றித் தாம் தனிப்படக் கூறினால் சக்கரவர்த்தி நம்புவதுகூடக் கடினமாயிருக்கும். முதன் மந்திரி அநிருத்தரும் சேர்ந்து சொன்னால் நம்பியே தீரவேண்டும் அல்லவா?

முதன் மந்திரி அநிருத்தரும் ஓரளவு கலக்கம் அடைந்துதானிருந்தார். இளைய பிராட்டி குந்தவை அன்று காலை தஞ்சையை விட்டுப் போனதையே அவர் அவ்வளவாக விரும்பவில்லை. ஈழத்து ராணியும், பூங்குழலியும் காலையில் காணாமற் போனது அவருடைய உள்ளத்தின் அமைதியை ஓரளவு குலைத்திருந்தது. "எங்கே போயிருப்பார்கள்? எப்படிப் போயிருப்பார்கள்? எதற்காக?" என்றெல்லாம் எவ்வளவோ சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பூதி விக்கிரம கேசரி சைன்யத்துடன் வருகிறார் என்னும் செய்தி அவருக்குப் பெருங்கலக்கத்தையே உண்டு பண்ணிவிட்டது.

ஆனாலும் இதையெல்லாம் உடனே சக்கரவர்த்தியிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று சின்னப் பழுவேட்டரையருக்கு அவர் யோசனை சொன்னார்.

"சக்கரவர்த்தியின் மனக் குழப்பம் இன்று அதிகமாகியிருப்பதாகக் கேள்விப்படுகிறேன். மகாராணியின் அந்தரங்கச் சேடி வந்து தெரிவித்துவிட்டுப் போனாள். இந்த நிலையில் பூதி விக்கிரமகேசரியைப் பற்றிச் சொன்னால், சக்கரவர்த்தியின் மூளையிலுள்ள இரத்த நாளம் வெடித்து உயிருக்கே கூட ஒருவேளை ஆபத்து உண்டாகிவிடும். ஏற்கெனவே, தஞ்சை நகரத்தில் சக்கரவர்த்தி காலமாகிவிட்டார் என்ற வதந்தி பரவியிருக்கிறதாம். உண்மையாகவே அப்படி நேர்ந்துவிட்டால் எத்தனை விபரீதம் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். சக்கரவர்த்தியை நீங்களே கொன்று விட்டதாக வதந்தி உண்டாகிவிடும். உங்கள் விரோதிகளுக்கு மிகவும் சௌகரியமாகப் போய்விடும். ஆகையால், பொறுத்துப் பார்த்து முடிவு செய்யலாம். பூதிவிக்கிரம கேசரியின் உத்தேசம் இன்னதென்று முதலில் தெரிந்து கொள்ளலாம். பெரிய பழுவேட்டரையரைப் பற்றியும் பொன்னியின் செல்வரைப் பற்றியும் அதற்குள் ஏதேனும் நிச்சயமான செய்தி கிடைக்கக் கூடும். அதுவரையில் பொறுமையாக இருங்கள்" என்று முதன் மந்திரி அநிருத்தர் கூறியது காலாந்தக கண்டருக்கும் உசிதமாகவே தோன்றியது.

"அப்படியானால், சக்கரவர்த்தியிடம் சமயம் பார்த்துச் சொல்லவேண்டிய காரியத்தைத் தங்களிடமே விட்டு விடுகிறேன். கோட்டைப் பாதுகாப்புக் காரியங்களை நான் கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சின்னப் பழுவேட்டரையர் முதன் மந்திரியிடம் விடை பெற்றுக் கொண்டார்.

அதுமுதல் கோட்டை மதிள் ஓரமாகச் சுற்றி வந்து கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய முன் ஏற்பாடுகளைச் செய்துவந்தார். பல நாள் முற்றுகைக்கும் கோட்டையை ஆயத்தமாகச் செய்ய வேண்டும். கொடும்பாளூர்ப் படைகள் கோட்டைக் கதவைத் தகர்த்தும், மதிள் மேல் ஏறிக் குதித்தும் கைப்பற்ற முயன்றால், அந்த முயற்சியைத் தோற்கடிக்கவும் சித்தமாயிருக்கவேண்டும், இதன் பொருட்டு அவருக்கு நம்பிக்கையான வீரர்களை அங்கங்கே நிறுத்தி வைக்கவேண்டும். கோட்டை மதிள் எங்கேயாவது பலவீனப்பட்டிருந்தால், அதைச் செப்பனிட்டுப் பலப்படுத்த வேண்டும்.

இந்த ஏற்பாடுகளில் சின்னப் பழுவேட்டரையர் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோதே, வெளியில் இருந்து செய்திகள் அறிவதற்கு வழி என்ன என்பது பற்றியும் அவருடைய உள்ளம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தஞ்சைக் கோட்டைக்கு இரகசியச் சுரங்க வழிகள் இரண்டுதான் உண்டு. ஒன்று பெரிய பழுவேட்டரையரின் மாளிகையிலிருந்து பொக்கிஷ நிலவறை வழியாக வெளியே சென்றது. இந்த வழியைச் சிலநாள் யாரும் உபயோகிக்க முடியாது. ஏனென்றால், அந்த வழி வெளியே திறக்கவேண்டிய இடத்தில் வடவாற்றின் வெள்ளம் அலை மோதிக்கொண்டு சென்றது. அந்த வழியை அப்போது திறந்தால் வெள்ளம் நிலவறைக்குள்ளேயே புகுந்துவிடும்.

இன்னொரு, சுரங்க வழி முதன் மந்திரி அநிருத்தரின் அரண்மனைக்குள்ளே இருந்து புறப்பட்டது. ஆனால் அதன் வழியாகச் சின்னப் பழுவேட்டரையர் அறியாமல் யாரும் வெளியே போகவோ, உள்ளே வரவோ முடியாது. அந்த வழி கோட்டைச் சுவரைக் கடந்து செல்லும் இடத்தில் சின்னப் பழுவேட்டரையரின் காவல் இருந்தது. இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேலே அந்தச் சுரங்க வழியாக வெளியே அந்தரங்கமான ஆட்களை அனுப்ப வேணுமென்று சின்னப் பழுவேட்டரையர் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். கடம்பூருக்கும், பழையாறைக்கும் ஆட்களை அனுப்பி பெரிய பழுவேட்டரையரைப் பற்றியும் பொன்னியின் செல்வரைப் பற்றியும் நிச்சயமான தகவல் அறிந்து வரச் செய்யவேண்டும்.

இம்மாதிரி காலாந்த கண்டர் முடிவு செய்திருந்த சமயத்திலேதான் ஒரு வீரன் விரைந்து வந்து, வடக்கு வாசலில் ஒரு யானையின் மேல் இரு பெண்கள் வந்திருப்பதைப் பற்றியும், அவர்களுக்காகக் கதவைத் திறக்கும்படி யானைப்பாகன் கூவுவதைப் பற்றியும் தெரிவித்தான். வந்திருக்கும் பெண்களில் ஒருத்தி வானதி என்று தெரிந்ததும் சின்னப் பழுவேட்டரையர் பெரிதும் ஆச்சரியம் அடைந்தார். வானதியின் பெரியப்பன் சைன்யத்துடன் வந்து கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டிருக்கும் போது, அந்தப் பெண் கோட்டைக்குள் தன்னைவிடும்படி கேட்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? முதலில், "கண்டிப்பாகக் கதவைத் திறக்க முடியாது" என்று சொல்லிவிட வேண்டுமென்றே எண்ணினார். வடக்குக் கோட்டை வாசலுக்குப் போய்ச் சேருவதற்குள் அவருடைய எண்ணம் மாறிவிட்டது.

"கேவலம் ஒரு சிறு பெண்ணுக்குப் பயந்து கோட்டைக் கதவைத் திறக்க மறுப்பதா? இது என் வீரதீரத்துக்கு இழுக்கு ஆகாதா?" என்று எண்ணினார். அப்படி எதற்காகத்தான் அந்தப் பெண் கோட்டைக்குள் வர விரும்புகிறாள் என்பதை அறிந்து கொள்ளவும் அவருக்கு ஆவல் உண்டாயிற்று.

கோட்டை வாசலின் மேல் மாடியில் ஏறி நின்று பார்த்தார். யானைமீது யானைப்பாகனைத் தவிர இரு பெண்கள்தான் இருந்தார்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவர்களில் ஒருத்தி வானதிதான் என்பதையும் தெரிந்து கொண்டார். அச்சமயம் கொடும்பாளூர்ப் பெரிய வேளார் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்தச் சம்பாஷணையில் ஒரு பகுதியும் அவர் காதில் விழுந்தது. பெரிய வேளார் வானதியைக் கோட்டைக்குள் போக வேண்டாம் என்று சொல்வதையும், வானதி அதை மறுத்து உள்ளே போவேன் என்று பிடிவாதம் பிடிப்பதையும் அறிந்து கொண்டார். எனவே, வானதிக்குக் கதவைத் திறந்து விடலாம் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.

பெரிய வேளார் அப்பால் அகன்று சென்றதும், யானை மேலும், சில அடிகள் எடுத்து வைத்து அகழி ஓரத்தில் வந்து நிற்பதைக் கண்டார். யானைப்பாகன் கொம்பை எடுத்து ஊதிவிட்டு முன் போலவே "கொடும்பாளூர் இளவரசிக்குக் கோட்டைக் கதவை திறந்துவிடுங்கள்! பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கும், இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்கும் செய்தி கொண்டுவரும் வானதிதேவிக்கும் உடனே வழி விடுங்கள்!" என்று கூவினான்.

இதைக் கேட்டதும் சின்னப் பழுவேட்டரையரின் மனதில் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும், தயக்கமும் நீங்கி விட்டன. பெரிய பழுவேட்டரையர் வானதியின் மூலமாகத் தமக்குச் செய்தி அனுப்புவது விசித்திரமானதுதான். இதில் ஏதாவது சூழ்ச்சியோ, தந்திரமோ இருக்கக்கூடும். இருந்தால் அதைத் தம்மால் கண்டுபிடிக்க முடியாதா? இந்தச் சிறு பெண் தம்மை ஏமாற்றிவிட்டுத் தப்பிப் பிழைக்க முடியுமா? பார்த்துக் கொள்ளலாம்!

யானைப்பாகன் ஊதிய கொம்பின் முழக்கத்துக்குப் பதில் முழக்கம் கோட்டை வாசல் மேல் மாடியிலிருந்து கேட்டது, தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் வேல்களின் முனைகள் ஒளி வீசித் திகழ்ந்தன. வளைத்து நாணேற்றப்பட்டிருந்த வில்களில் அம்புகள் பூட்டப்பட்டுப் புறப்படச் சித்தமாயிருந்தன. அவற்றுக்கு மத்தியில் ஒரு மனித உருவம் வெளிப்பட்டு வந்தது.

"கொடும்பாளூர் இளவரசியாருக்குக் கோட்டைக் கதவு திறந்து விடப்படும். யானையையும், யானைமீது உள்ளவர்களையும் தவிர வேறு யாரேனும் பின் தொடர முயன்றால் உடனே யமனுலகம் சேர்வார்கள்!" என்று அந்த மனித உருவம் இடி முழக்கம் போன்ற குரலில் கர்ஜனை செய்தது.

இதைக் கேட்டதும் பூதிவிக்கிரம கேசரியும் அவருடன் வந்த ஆட்களும் இன்னும் சிறிது அப்பால் சென்றார்கள். கோட்டைக் கதவுகள் திறப்பட்டன. அகழியின் பாலம் இறக்கப்பட்டது. யானை, பாலத்தின் மேல் நடந்து சென்றபோது, பாலம் அதிர்ந்தது. வானதிக்குச் சிறிது அச்சம் உண்டாயிற்று. ஆனால் ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. யானை அகழியின் அக்கரையை அடைந்தது. திறந்திருந்த கதவுகளின் வழியாகக் கோட்டைக்குள் பிரவேசித்தது. மறுநிமிடமே பாலம் மறுபடியும் தூக்கப்பட்டது. கோட்டை வாசற் கதவுகளும் சாத்தப்பட்டன.

வானதி ஏறியிருந்த யானைக்கு அருகில் சின்னப் பழுவேட்டரையரின் யானை வந்து நின்றது. "இளவரசி! வரவேண்டும்! வரவேண்டும்! தங்கள் பெரிய தந்தை தடுத்தும் கேளாமல் தாங்கள் என் விருந்தாளியாக வர இசைந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்! தங்களுக்கு இங்கே எந்த விதமான தீங்கேனும் நேருமோ என்று அஞ்ச வேண்டாம்!" என்று சின்னப் பழுவேட்டரையர் கம்பீரமான குரலில் கூறினார்.

"ஐயா! எனக்கு அத்தகைய அச்சம் சிறிதும் இல்லை. நான் சொல்ல வந்த செய்திகளைச் சொன்ன பிறகு என்னைத் தாங்கள் பாதாளச் சிறையிலே அடைத்தாலும் கவலையில்லை!" என்றாள் வானதி.