பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இனிமையாகவும் இருக்கிறது என்பதால், தவளையை மாற்றி, தத்தும் தண்டால் என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

தொடக்க நிலை

நேர்த்தண்டால் எடுக்கின்ற நிலையில் முதலில் உட்கார வேண்டும். நேர்த்தண்டாலுக்குரிய தொடக்க முறைகள் அத்தனையையும் இதில் கடை பிடிக்க வேண்டும். (முதல் படம் பார்க்க)

பிறகு 2ம் படத்தில் காட்டியிருப்பது போல அமர்ந்த நிலையில் இருந்து இரண்டு கால்களையும் சீராகவும் நேராகவும் பின் புறம் விறைப்பாக நீட்டி விடவேண்டும்.

அதன்பிறகு ஊன்றியுள்ள கைகளை மெதுவாக மடக்கி, நெஞ்சுப் பகுதியானது (Chest) தரைக்கு இணையாக நேர்க்கோட்டில் வருவது போல, கீழே இறக்கிக் கொண்டு வந்து, தரையைத் தொட்டு விடாமல், சற்று மேலேயே இருத்தி வைக்க வேண்டும். முன் பாதங்களாலும், ஊன்றியுள்ள கைகளாலுமே இப்பொழுது உடல் தாங்கப்பட்டிருக்கிறது.

இதுதான், தத்தும் தண்டாலின் தொடக்க நிலையாகும்.

செய்முறை

ஊன்றியுள்ள கைகளை நன்கு உறுதியாகத் தரையில் பதித்தவாறு 6 அங்குல தூரம் முன்புறமாகத்தாவிக் குதித்து உள்ளங்கைகளால் ஊன்றியவாறு, முன்னர் தொடங்கிய நிலையிலேயே இருந்து கொண்டிருக்க வேண்டும். (எண்ணிக்கை 1)

பிறகு, மடக்கியிருந்த (Bend) கைகளை மீண்டும் உயர்த்தி நிமிர்த்திக் கொண்டு, அடுத்ததாக 6 அங்குல தூரம் உடலை முன்புறமாகத் தூக்கிக் குதித்து தாவிவிடவும். (எண்ணிக்கை 2)