பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பல்லவர் வரலாறு



எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ ‘பல்லவர் பஹ்லவர் மரபினர்’ என்றோ, வேற்று நாட்டவர் என்றோ, ‘திரையர் மரபினர் என்றோ, ‘மணி பல்லவத் தீவினர்’ என்றோ குறிக்கவில்லை சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி. இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ் கந்தவர்மன், ‘புத்தவர்மன்’ வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத்தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலான வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின் - இளந்திரையன் வழிவந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ?[1] கி.பி 9ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட சோழரோ, பாண்டியரோ வளர்க்காத முறையில் தமிழைப் புறக்கணித்து, வடமொழியைத் தமது ஆட்சியில் வளர்த்திருப்பரோ? பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது என்பது மிகையாகாது. பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார் என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; குடிவழி அறிந்தவர்கள்; தமிழர்க்கு இருடிகள் கோத்திரம் எது?[2] இன்ன பிற காரணங்களால். பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம். ஆயின், பல்லவர் யாவர்?


  1. இப் பல்லவரைப் பார்த்தே கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் பாண்யரும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் பிற்காலச் சோழரும் சில வடமொழிப் பட்டயங்களை வெளியிட்டனர்; பெரும்பாலான தமிழ்ப் பட்டயங்களே ஆகும். சங்ககாலத்தமிழ் அரசர் வடமொழியிலோ பிராக்ருத மொழியிலோ பட்டயங்களை விடுத்தமைக்குச் சான்றில்லை.
  2. சங்க காலத் தமிழரசர் ‘இன்னவர் மருமானே’ மருமகனே எனப் புலவரால் விளிக்கப்பட்டனரே அன்றிப் ‘பாரத்வாசர்’ போன்ற முனிவர் மரபினராக யாண்டும் குறிக்கப் பெற்றிலர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/48&oldid=583576" இலிருந்து மீள்விக்கப்பட்டது