பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருளடைந்த பங்களா


1

ஊரின் ஒரு கோடியிலிருந்த பெரிய பங்களாவில் நிரந்தரமாகக் குடியிருந்த இருளை விரட்டிவிட்டுத் திடீரென்று ஒளி சிரிக்கத் தொடங்கியது ஊராரின் பேச்சுக்குரிய பொருளாயிற்று.

அந்தப் பெரிய வீட்டில் வசிக்க வந்தது யாராக யிருக்கும் என்ற கவலை எல்லோருக்கும் ஏற்பட்டது ஆச்சர்யமல்ல. பலரது கவனத்தையும் கவர்ந்த கட்டிடம் அது.

நகரமுமல்லாத பட்டிக்காடு மில்லாத ஒரு ஊர் அது. பெயர் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே! ஏதோ ஒரு 'ரெண்டும் கெட்டான் புரம்'! அங்கு தண்ணீர் ஓடாத பெரு நதி ஒன்று உண்டு. மணல் பரந்து கிடக்கும் ஆற்றையடுத்து நாணல் புதர்.

நாணல் என்றால் வெறும் குச்சி குச்சியாக நிற்பதல்ல காடாக மண்டிக் கிடக்கும். ஒரு ஆள் உயரத்திற்கு - சில சமயம் ஏழு ஏழரை அடி உயரம் கூட - வளர்ந்து வெளிப் பஞ்சுத் தொகுதிகள் போல் பூ முடிகள் நிமிர்த்திக் காற்றிலே சரசரத்து நிற்கும். எவனையாவது அடித்துக் கொன்று உள்ளே எறிந்து விட்டால், ஊறுகாய்ப் பானையில் போட்ட மாங்காய்மாதிரி, அந்த உடல் அலுப்பற்றுக் கிடக்கும் என்று நம்பலாம்.