உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருட்டு ராஜா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்37

 அவனுக்கே வியப்பாகத்தானிருந்தது. அவன் திண்ணையில் விழித்திருந்த சமயங்களில் முத்துமாலை அந்தக் கோட்டைத் தெரு வழியாக நடப்பதில்லை. அப்புறம் அந்த வழியே போனாலும் சத்தம் போடுவதில்லை; சீட்டி அடிப்பதுமில்லை.

இதை அவன் தனக்கு அளிக்கும் கெளரவமாகவே தங்கராசு மதித்தான். “பரவாயில்லே அவனும்,சில பாலிசிகளை கடைப்பிடிக்கிறான்!” என்று எண்ணி மனசுக் குள் சிரித்துக் கொண்டான்.

ஒரு ராத்திரி இரண்டு பேரும் பேசிக்கொண்ட பிறகு நான்கு நாட்கள் ஓடியிருந்தன. அன்று தங்கராசுக்கு படிப்பு ஒடவில்லை. கொசுக்கடி மிக அதிகமாக இருந்தது. அதனால் விளக்கை அணைத்து விட்டு ஈஸிசேரிலேயே சாய்ந்திருந்தான்.

வெளியே நிலவு நன்றாக இருந்தது. அதனால் வசீகரிக்கப்பட்டு அவன் முன்னே வந்து வாசல் படியில் நின்றான்.

அப்போது அந்த வழியாக முத்துமாலை வந்தான். திண்ணையில் விளக்கு வெளிச்சம் காணப்படாததனால், தங்கராசு வீட்டுக்குள் போயிருக்கலாம் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும்.

தங்கராசு வெளியே வந்து நடையில் நின்றதும். முத்துமாலை பேசாமல் போக விரும்பவில்லை. “என்ன ராசு விளக்கில்லாமல் இருக்கிறே?” என்று கேட்டான்.

“கொசுத் தொல்லை ஜாஸ்தியாப் போச்சு. அதனாலே விளக்கை அணைச்சிட்டேன்...” என்றான் தங்கராசு.

“ஆமா. இந்த ஊரிலே கொசுக்கள் ரொம்ப நிறையத்தான் இருக்கு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/39&oldid=1138988" இலிருந்து மீள்விக்கப்பட்டது