பக்கம்:இருட்டு ராஜா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16இருட்டு ராஜா

 அனுபவமும் பெற்றவன் போல் பேசுவான். அப்படிப்பட்ட பெரிய ஆட்கள் நிறைந்த சூழலில் அவன் வாழ்ந்து வந்தான். அவன் மூளையும் குறுக்கு வழியில் தீவிரமாக வேலை செய்யும் சக்தி பெற்றிருந்ததாகத் தோன்றியது.

காசி அடிக்கடி சொல்லி வந்தான். “ஏய் ஒரு நாள் பாரு. நான் இந்த வட்டாரத்து ஹீரோவாக மாறுகிறேனா இல்லையா, பார்! ரொம்ப வருசங்களுக்கு முன்னாலே ஜம்புலிங்கம்னு ஒருத்தன் இந்தப் பக்கத்திலே பேரு பெற்றுத் திரிஞ்சான். அவனைக் கொள்ளைக்காரன் என்பாங்க. அது இல்லே. இருட்டு வேளையிலே நீதி பரிபாலனம் புரிஞ்ச ஏழை ராஜா அவன். இருக்கிறவங்க கிட்டெ கொள்ளையடிச்சு இல்லாதவங்களுக்கு உதவி பண்ணின துணிச்சல்காரன். இங்கிலாந்திலே, ராபின் ஹுட்னு ஒருத்தன் இருந்தானே. நாம பாடங்களிலே கூட அவன் பெருமையைப் படிச்சிருக்கோமே? அநியாயக் காரங்களிடம் கொள்ளையடிச்சு ஏழை எளியவங்களுக்கு உதவி பண்ணுவான்னு. அது மாதிரி நானும் ஒரு ராபின் ஹுட் ஆகணும்னு ஆசைப்படுகிறேன். ஜம்புலிங்கம் மாதிரி இந்தப் பக்கத்து ஆசாமிகளை அஞ்சி நடுங்கும்படி செய்யனும்னு விரும்புறேன்...”

முடிவில் அவன் அப்படித்தான் மாறினான். நாட்டுப் புறத்து ஆசாரி எவனோ செய்து கொடுத்த துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு அந்த மாவட்டத்தையே கதி கலங்க அடித்தான். நாலைந்து வருடங்கள் எங்கே பார்த்தாலும், காசி, காசி என்ற நாம ஜபந்தான். போலீசார் பெரும் முயற்சியின் பேரில் அவனைப் பிடித்து விட்டார்கள். உரிய தண்டனையும் கொடுத்தார்கள்.

அது வேறு விஷயம். என்றாலும், முத்துமாலைக்கு அவன் பெரிய ஹீரோவாக, ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/18&oldid=1138948" இலிருந்து மீள்விக்கப்பட்டது