பக்கம்:இருட்டு ராஜா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்43

 வயசிருக்கும். தன்னையொத்த பெண்களைச் சேர்த்துக் கொண்டு குதியாட்டம் போடுவதில் அவள் கெட்டி.

அவள் வீடு அடுத்த தெருவில் இருந்த போதிலும், தங்கராசு வீட்டில் வந்து குழுமிக் கொட்டமடிப்பதில் திரிபுரம் ஒவ்வொரு நாளின் பெரும் பகுதியையும் செலவிட்டு வந்தாள். தங்கராசுவின் சகோதரி ஒருத்தி வீட்டோடு இருந்தாள். அவள் ஊர்ப்பெண்களை எல்லாம் விளையாடக் கூட்டிக்கொள்வாள்.தாயக்கட்டம், பல்லாங்குழி, ஊஞ்சல் விளையாட்டு என்று வீடு எப்ப பார்த்தாலும் கலகலப்பாக இருக்கும்.

திரிபுரம் பையன்களைக் கேலி செய்யவும் தயங்க மட்டாள். தங்கராசு என்றாலும் சரி, முத்துமாலை ஆனாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அவள் துணிச்சலாகப் பரிகாசம் பண்ணுவாள். வம்புக்கிழுத்து வாயடி அடிப்பாள்.

பையன்களும் அவளையும் அவள் தோழிகளையும் ‘கோட்டா பண்ணி’க் களிப்பதில் உற்சாகம் காட்டினார்கள்.

ஒரு சமயம், திரிபுரமும் சிநேகிதிகளும் தங்கராசு வீட்டு முன்னே தொட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். “கண்ணாம் பூச்சி ஆட்டம்” திரிபுரம் தான் கண்ணைக் கட்டியவாறு, கைகளை நீட்டிக் கொண்டு, தொடுவதற்கு ஆளைத் தேடி அலைந்து வந்தாள். சுற்றிலும் பெண்கள் கூச்சலிட்டும் குரவையிட்டும் துள்ளிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது முத்துமாலையும் தங்கராசும் இன்னொருவனும் அங்கே வந்தார்கள். “இப்ப ஒரு தமாஷ் பண்ணலாம்” என்று சொல்லி, முத்துமாலை விளையாட்டு வட்டத்துக்குள் புகுந்து விட்டான். குரல் கொடுக்காமல், திரிபுரத்தின் அருகில் போய் மெது மெதுவாக நகர்ந்தும் நடந்தும் காலடி ஓசை எழுப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/45&oldid=1139006" இலிருந்து மீள்விக்கப்பட்டது