பக்கம்:இருட்டு ராஜா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்65

 கொடை நாட்களில், சில வருடங்கள் அவன் காளி வேடம் தரித்து ஆடிப்பாடி அமர்க்களப்படுத்தினான். பிறகு அவனாகவே அதை விட்டுவிட்டான்.

என்றாலும் கூட்டத்தில் அங்குமிங்கும் அலைந்து கார்வார் பண்ணி தான் இருப்பதைக் காட்டிக் கொள்ளுவது அவன் சுபாவமாக இருந்தது. அவனும் அவனைப் போன்ற சிலரும் சேர்ந்து கொண்டு விழாக்காலத்தில் வியாபாரம் பண்ண வருகிற மிட்டாய்க்கடைக்காரர்கள், டி பலகாரக் கடைக்காரர்கள், தேங்காய் பழம் விற்பனையாளர்கள், மற்றும் பல தரப்பட்ட சில்லறை வியாபாரிகள் அனைவரிடமும் காசு வசூலிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். மிட்டாய், பழம், இதர பொருட்களையும் இலவசமாகப் பெற்றார்கள். “எங்களுக்குக் கொடுக்கலேன்னு சொன்னால், ஏதாவது கலாட்டா ஏற்பட்டால், பொருள்கள் களவு போனால், அப்புறம் வருத்தப்படக் கூடாது, நாங்கள் கவனிக்க மாட்டோம். இப்ப நாங்க கண்காணித்து வர்றதனாலேதான் திருட்டுப் போகாமல் இருக்கு. இப்ப எட்டிணா, ஒரு ரூபா கொடுக்கிறதுக்கு மூக்காலே அழுதா, அப்புறம் இருபது முப்பது நஷ்டமாகி. லபோ லபோன்னு வாயிலும் வயித்திலும் அடிச்சிக் கிட்டுப் போவீங்க. ஆமா” என்று ஆலோசனை போலவும் மிரட்டல் போலவும் எடுத்துச் சொல்வார்கள்.

அவர்களையும், அவர்கள் பேச்சையும், போக்கையும் பார்க்கிற வியாபாரிகள், “இந்த அண்ணன்களுக்கு வாய்க் கரிசி போடலேன்னா இந்தத் தடிமாடன்களே கலாட்டா பண்ணவும், கடைகளைச் சூறையிடவும் ஆட்களை ஏவி விடுவாங்க போலிருக்கு, சிறுசிறு திருட்டுக்களையும் நடத்துவிப்பாங்க, இவங்கபேசுற தோரணையைப் பார்த்தாலே தெரியுதே” என்று பயந்து போய், பணமும் பொருள்களும் கொடுப்பார்கள், கொடுத்து விட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/67&oldid=1139125" இலிருந்து மீள்விக்கப்பட்டது