குறுந்தொகை 01 முதல் 10 முடிய

விக்கிமூலம் இலிருந்து

பாடல் 01 (செங்களம்)[தொகு]

குறிஞ்சி - தோழி கூற்று
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

என்பது தோழி கையுறை மறுத்தது.

பாடியவர்
திப்புத்தோளார்

செய்தி[தொகு]

தலைவன் தலைவிக்காக அவளது தோழியிடம் பூ தருகிறான். அதனை அவள் வாங்க மறுத்துச் சொல்லும் சொற்கள் இவை.

தலைவியின் இருப்பிடம் குன்றம். அதில் குருதிநிறச் செங்காந்தள் மலர்கள் மிகுதியாக உள்ளன. நாங்கள் அதனைச் சூடிக்கொள்வோம். உன் பூ வேண்டாம் என்கிறாள். குன்றம் முருகன் இருக்கும் குன்றம். அவன் அவுணரைப் போர்க்களம் செங்களமாகும்படி கொன்று தேய்த்தவன். அவனது செங்கோல் மலையில் ஓடும் நீர். அது உயர்ந்த முகட்டினைக் கொண்ட ஆனைமலையில் ஓடுகிறது. அவன் கழலில் தொடி அணிந்துள்ளான்.

அம்பு = நீர், கழல் = கணுக்கால், ஆனைமலைக் குன்றுகளில் ஒன்று பழனிமலை. ஒப்புநோக்குக; 'அறுகோட்டு யானை பொதினி' (அகம் 1) செங்கோட்டு யானை எனபதற்கு யானை ஊர்தி கொண்டவன் என்பர்.

பாடல் 02 (கொங்குதேர்)[தொகு]

குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.
என்பது, இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு 'மெய்தொட்டுப் பயிறல்' முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது.
பாடியவர்
இறையனார்

செய்தி[தொகு]

அவனைப் பார்த்த அவள் நாணி ஒதுங்கினாள். அவன் அவளைத் தொடவேண்டும். அதற்கு ஒரு சாக்குபோக்காகச் சொல்வதாக அமைந்துள்ள பாடல் இது. தும்பியே! உனக்கு அழகிய சிறகுகள். உனது வாழ்க்கை தேனைத் தேடி எடுத்துக்கொள்வது. உனக்குத் தெரியும் எந்தப் பூ அதிக மணம் என்று. இவள் தலையில் சூடியுள்ள பூவை மொய்க்கும் ஆசையால் சொல்லிவிடாதே. இவள் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூ நீ அறிந்தது உண்டா?

இவன் அரிவை. செறிந்த எயிறுகளில் புன்னகை பூக்கிறாள். மயில் போல் மெல்லமெல்ல ஆடி அசைகிறாள். (விலக மனமில்லை) இவள் என்னிடம் ஏதோ பயின்றிருக்கிறாள். அது ஒட்டுறவு உள்ள நட்பாகத் தெரிகிறது. (அது உடலுறவாக மாறவேண்டும்)

பாடல் 03 (நிலத்தினும்)[தொகு]

குறிஞ்சி - தலைவி கூற்று

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.

என்பது தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.

பாடியவர்
தேவகுலத்தார்

செய்தி[தொகு]

அவன் அவளுக்காக வெளியில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொண்டு அவளை அடையவேண்டும் என்று விரும்பிய தோழி அவனது களவொழுக்கம் பற்றி இழிவாகப் பேசுகிறாள். தலைவி அவ்வாறு பேசக்கூடாது என்று கூறும் செய்தி இது; நாடனுக்கும் எனக்கும் உள்ள நட்பு நிலத்தைக் காட்டிலும் மிகுதியான நீளஅகலம் கொண்டது. வானைக் காட்டிலும் உயர்ந்தது. கடல் நீரைக் காட்டிலும் ஆழமானது. மலைநீரைக் காட்டிலும் தூய்மையானது. எனவே பழிக்காதே. மலைத் தேனீ குறிஞ்சிப் பூவில் தேனை எடுத்துக்கொண்டுபோய் என்ன செய்யும்? கூடுதானே கட்டும். (அதுபோல அவன் என்னைத் தன் இல்லத்துக்குக் கொண்டுசெல்வான்.

பாடல் 04 (நோமென்)[தொகு]

நெய்தல் - தலைமகள் கூற்று

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே.

என்பது பிரிவிடை ஆற்றாளெனக்கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
காமஞ்சேர் குளத்தார்

செய்தி[தொகு]

அவன் பிரிவை உணர்த்துகிறான். பிரிவைத் தலைவி தாங்கமாட்டள் என்கிறாள் தோழி. நான் தாங்கிக்கொள்வேன். காதலர்தான் தாங்கமாட்டார். அவருக்காகத்தான் என் நெஞ்சு நோகிறது. என் கண்ணீர் சுட்டு என் இமைகளே தீய்ந்துவிடும் போல் இருக்கிறது. அதற்காகவே என் கண்கள் அமைந்திருக்கின்றன. நம் காதலர் கண்கள் அதற்காக அமையவில்லை - என்கிறாள் தலைவி.

அவர் அமைவிலர் என்பதற்கு அவர் கண்ணீர் வடியும் கண்கள் அமையப்பெறாதவர் என்றும், அமைவு என்னும் நிம்மதி இல்லாதவர் என்றும், இருவகையில் பொருள் கொள்ளவேண்டும்.

பாடல் 05 (அதுகொறோழி)[தொகு]

நெய்தல் - தலைவி கூற்று

அதுகொ றோழி காம நோயே
வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லித ழுண்கண் பாடொல் லாவே.

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
நரிவெரூஉத் தலையார்

செய்தி[தொகு]

அவன் பிரிந்திருக்கும் நிலை. தலைவி கவலைப்படுவாள் என்று தோழி கவலை கொள்கிறாள். நான் மட்டுமா உறங்காமல் இருக்கிறேன். கடலலைகளைப் பார். அவையும் கூட உறங்கவில்லை. புன்னைமர இனிய நிழலில் வாழும் குருகு உறங்குகிறது. அதன் அருகில் கடலலை புலம்பன் பிரிந்தான் என்று உடைந்துபோய்த் திவலைகளைத் தன் கண்ணீராகத் துளித்துக்கொண்டிருக்கிறது, என்கிறாள் தலைவி

பாடல் 06 (நள்ளென்)[தொகு]

நெய்தல் - தலைவி கூற்று

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே.

என்பது வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது.

பாடியவர்
பதுமனார்

செய்தி[தொகு]

திருமண நாளைத் தள்ளிப்போட்டுவிட்டு அவன் பிரிந்தான். தலைமகள் தன் கவலையைத் தோழியிடம் சொல்கிறாள்.

யாம வேளையாகிய நள்ளிரவு எந்த ஆரவாரமும் இல்லாமல் 'நள்' என்று இருக்கிறது. மக்கள் பேசாமல் அடங்கிக் கிடக்கிறார்கள்.உலகமும் சினம் இல்லாமல் தூங்குகிறது. இந்த அமைதி வேளையில் நான் மட்டும் தூக்கம் வராமல் இருக்கிறேன்.

பாடல் 07 (வில்லோன்)[தொகு]

பாலை - கண்டோர் கூற்று

வில்லோன் காலன் கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரே.

என்பது செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது.

பாடியவர்
பெரும்பதுமனார்

செய்தி[தொகு]

ஆருக்கும் தெரியாமல் அவளை அழைத்துக்கொண்டு அவன் தன் ஊருக்குச் செல்கிறான். அவர்களை வழியில் பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

அவன் காலில் கழல் உள்ளது. அவள் கைகளில் தொடியும், கால்களில் சிலம்பும் உள்ளன. மூங்கில் காட்டுக்குள்ளே இவர்கள் செல்கின்றனர். ஆரியர் கயிற்றின்மேல் ஏறி நடந்து ஆடும்போது அவர்கள் முழக்கும் முழவொலி கேட்கும். (ஊரில் இந்த ஒலியைக் கேட்டவர்கள் இவர்கள்) இங்கு அந்த ஒலி போல் காற்று மோதிச் சலசலக்கும் வாகை நெற்றுகளின் ஒலியைக் கேட்டுக்கொண்டே நடக்கிறார்கள். இவர்களில் அளியர் யார்?

அளி = கொடை நல்கு. அளிப்போர் = கொடை நல்குவோர். அளியர் = கொடை வாங்குவோர். யார் யாருக்குக் கொடுத்தார்? அவள் தன்னை அவனுக்குக் கொடுத்தாளா? அவன் தன்னை அவளுக்குக் கொடுத்து அழைத்துச் செல்கிறானா? அளியர் என்பதற்கு இரங்கத்தக்கவர் என்று பொருள் கூறுதலும் ஒன்று.

பாடல் 08 (கழனிமாஅ)[தொகு]

மருதம் - காதற் பரத்தை கூற்று

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியல் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.

என்பது கிழத்தி தன்னைப் புறனுரைத்தாளெனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

பாடியவர்
ஆலங்குடி வங்கனார்.

செய்தி[தொகு]

அவன் பரத்தையோடு வாழ்ந்தான். பரத்தையைப் பற்றிப் பெருமையாகப் பேசினான். பின் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். அவன் மனைவி புதல்வனைப் பெற்றெடுத்த தாய். அங்கே அவன் தன் மனைவி ஆட்டிவைக்கும் பொம்மையாய் ஆடுகிறான். அவள் சொன்னதையெல்லாம் கேட்கிறான். அவன் ஊரன்.

(கழனி = பயிர் விளையும் நன்செய் வயல், பழனம் = குளத்துநீர் பாய்ந்து பழஞ்சேறு பட்ட நிலம்.) கழனி ஓரத்திலிருந்த மரத்தில் விளைந்து முதிருந்த மாம்பழம் விழும். பழனத்திலிருந்த வாளைமீன் அதனைக் கௌவிக்கொள்ளும். இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் அவன்.

இறைச்சிப் பொருள்; கழனி - புதல்வனைப் பெற்ற தாய், பழன வாளை - பரத்தை, மாம்பழம் - கிழவன்

பாடல்: 09 நெய்தல் (யாயா கியளே மாஅ)[தொகு]

தோழி கூற்று

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பிற் றமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.

என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

பாடியவர்
கயமனார்.

செய்தி[தொகு]

தலைவி தாயானாள் என்பதைத் தோழி தலைவனுக்குச் சொல்லும் பாடல் இது.

மாயோள் தாயாகிவிட்டாள். அன்று இருந்த மாந்தளிர் போன்ற அவளது மேனி இன்று வெளுத்துவிட்டது. (அவள் முல்லைப் பூவைத் தலையில் வைத்துக்கொள்வாள். அவள் தொடுக்க மறந்த பூமொட்டு ஒன்று அவள் பறித்து வைத்த செப்புப் பாத்திரத்திலேயே தவறிக் கிடந்துவிட்டது) அந்தப் பூ மலர்ந்திருப்பது போன்ற நிறம் அவள் மேனியில் சாய்ந்திருக்கிறது.

அதை அவள் நாணத்தால் நம்முன் சொல்லாமல் மறைக்கிறாள். மீன்கள் விளையாடும் கடலோர நீர்த்தேக்கங்களில் அலை வரும்போதெல்லாம் மூழ்கி மூழ்கித் தலைதூக்கும் நெய்தல் பூவைப் போல அவள் கண்கள் நாணத்தால் அவ்வப்போது மூடித் திறக்கின்றன. குளத்தில் மூழ்கி நீராடும் மகளிரின் கண்கள் போலவும் காணப்படுகின்றன. அத்துடன் அந்தப் பூவின் செந்நிறம் போலவும், குளத்தில் நீராடும் பெண்களின் கண்கள் சிவந்திருப்பது போலவும் அவளது கண்களும் சிவந்து உள்ளன. இது தண்ணந் துறைவன் செய்த கொடுமை என்று பொய் சொல்லுகிறாள். (புணர்ச்சியில் நேர்ந்த சிவப்பு என்கிறாள்)

பாடல்: 10 மருதம் (யாயாகியளேவிழவு)[தொகு]

தோழி கூற்று.

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே.

என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

பாடியவர்
ஓரம்போகியார்.

செய்தி[தொகு]

அவன் பரத்தையிடம் இருந்துவிட்டு இல்லம் மீண்டான். தோழி அவனது மனைவி தாயான செய்தியைக் கூறி வீட்டுக்குள் நுழைய விடுகிறாள்.

நீ காஞ்சிமரம் அடரந்த ஊரின் தலைவன். நீ விழாக் கொண்டாடி முதலில் திருமணம் செய்துகொண்டாயே அவள் தாயாகிவிட்டாள். நீ செய்த கொடுமையை இவள் மனத்துக்குள் போட்டுப் புதைத்துவிட்டாள். காஞ்சிமரம் பயறுகள் போலப் பூ பூக்கும். அந்தப் பூக்களின் தாதுகள் அங்குள்ள உழவர் வளைக்கும்போது அவர்கள் தலையில் கொட்டும். (அதுபோல அவன் இனி மனைவிமாட்டு அன்பைக் கொட்டவேண்டும் என்பது உள்ளுறை)அத்தகைய காஞ்சி மரங்களை உடைய ஊரனின் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தலைவி மறைத்தாள். இப்பொழுது, அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள அவள் வருகிறாள்.தலைவி தன் தலைவனை ஏற்றுக்கொண்ட மாண்பினால் அவள் தாயினை நிகர்த்த தன்மையை பெற்றாள் என்பதாம்