சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/யானைப் பாலம்

விக்கிமூலம் இலிருந்து
2. யானைப் பாலம்


அந்த வருஷத்திலே ஆனி மாதக் கடைசியிலேயே காவேரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் வந்துவிட்டது. வாதாபிச் சக்கரவர்த்தியும் அவருடைய சைனியமும் இரண்டு வாரம் பிரயாணம் செய்து கொள்ளிடக் கரைக்கு வந்து சேர்ந்த போது, அந்த நதியில் இரு கரையையும் தொட்டுக் கொண்டு தண்ணீர்ப் பிரவாகம் போய்க் கொண்டிருந்தது. கொள்ளிடத்துக்கு அக்கரையில் சேந்தன் ஜயந்தவர்ம பாண்டியன் தன்னுடைய சைனியத்துடன் தங்கிப் பாசறை அமைத்திருந்தான். அவனோடு கொடும்பாளூர் மாதவக் களப்பாளனும் சேர நாட்டுச் சிற்றரசன் இளஞ்சேரலாதனும் தங்கியிருந்தார்கள். பாண்டியன், தன் சகோதரியை மாமல்லர் கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததன் காரணமாகப் பல்லவர் மீது பெரிதும் கோபம் கொண்டிருந்தான். காஞ்சி முற்றுகை ஆரம்பித்த சில தினங்களுக்கெல்லாம் பாண்டிய சைனியம் காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவிலிருந்த பகுதியை அடைந்து விட்டது. பாண்டியனுக்கு அக்காலத்தில் கப்பம் கட்டிக் கொண்டிருந்த கொடும்பாளூர் மாதவக் களப்பாளனும் சேரன் இளஞ்சேரலாதனும் ஜயந்தவர்மன் விருப்பத்தின்படி தாங்களும் தங்கள் சிறு சைனியங்களுடன் வந்திருந்தார்கள். அக்காலத்தில் கொள்ளிடத்திற்குத் தெற்கேயிருந்த தமிழ் மன்னர்கள் அனைவரும் பல்லவர்களிடம் விரோதம் கொண்டிருந்தார்கள். எனவே, ஜயந்தவர்மனும் மற்ற இரு குறுநில மன்னர்களும் இச்சமயம் வாதாபிச் சக்கரவர்த்தியுடன் சேர்ந்து கொண்டு, பல்லவ வம்சத்தாரிடம் தங்களுக்கிருந்த வர்மத்தைத் தீர்த்துக் கொள்ளச் சித்தமாயிருந்தார்கள். இவர்களுடன், சமீபத்திலேதான் உறையூர் சிம்மாசனம் ஏறியிருந்த பார்த்திப சோழன் மாத்திரம் சேர்ந்து கொள்ளவில்லை. பார்த்திப சோழனும் பல்லவர் ஆதிக்கத்தை வெறுத்தானாயினும் வடநாட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்களுடன் சேர்ந்து கொள்வதற்கோ, அவர்களுடைய தயவை நாடுவதற்கோ அவனுக்கு மனம் வரவில்லை.

மகேந்திர பல்லவரின் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்திலிருந்து கீழைச் சோழ நாடு பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை முன்னமே தெரிந்து கொண்டோமல்லவா? மற்றபடி எது எப்படிப் போனாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் கீழைச் சோழ நாட்டை, தான் கைப்பற்றிப் பாண்டிய இராஜ்யத்துடன் சேர்த்துக் கொள்ளுவதென்று ஜயந்தவர்மன் தீர்மானித்திருந்தான். ஆனால், கீழைச் சோழ நாட்டு மக்கள் இதைச் சிறிதும் விரும்பவில்லை. அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சைவ சமயப் பற்று உள்ளவர்கள். சமீப காலத்தில் திருநாவுக்கரசருடைய மகிமையினால் மகேந்திர பல்லவர் சைவ சமயத்தைத் தழுவியது முதல், சோழ நாட்டு மக்கள் பல்லவ சக்கரவர்த்தியிடம் விசேஷ பக்தி கொண்டிருந்தார்கள். எனவே, ஜயந்தவர்ம பாண்டியன் எதிர்பார்த்தபடி சோழ நாட்டார் அவனை உற்சாகமாக வரவேற்கவில்லை. இதனாலும் பல மாத காலம் கொள்ளிடக் கரையிலேயே காத்துக் கொண்டிருக்க நேர்ந்ததாலும், ஜயந்தவர்மன் எரிச்சல் கொண்டிருந்தான். காஞ்சி நகர் முற்றுகை நெடுங்காலம் நீடித்ததில் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் அவனுக்கு முன்னமிருந்த மரியாதை குறைந்து போயிருந்தது. எனவே, கொள்ளிடத்துக்கு அக்கரையில் புலிகேசி வந்து விட்டது தெரிந்த பிறகும் அவனைப் போய்ப் பார்க்கப் பாண்டியன் எவ்விதப் பிரயத்தனமும் செய்யவில்லை. கொள்ளிடத்தில் பிரவாகம் அதிகமாயிருந்ததைச் சாக்காக வைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் அக்கரை வருவதற்குத் தன்னிடம் போதிய படகுகள் இல்லையென்று செய்தியனுப்பினான்.

புலிகேசி அதற்கு மறுமொழியாக, கொள்ளிடத்துக்குப் பாலம் கட்டிக் கடந்து நதியின் தென்கரைக்கு வந்து, தானே பாண்டியனைச் சந்திப்பதாகச் சொல்லி அனுப்பினான். இதைக் கேட்ட போது, பாண்டியனுக்கு முதலில் வேடிக்கையாகத் தோன்றியது. "கொள்ளிடத்துக்காவது, பாலம் கட்டவாவது! -இதென்ன பைத்தியம்!" என்று சொல்லிச் சிரித்தான். ஆனால், மறுநாள் பாண்டியன் தான் தண்டு இறங்கிய இடத்திலிருந்து கொள்ளிட நதியை நோக்கிய போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டான். கொள்ளிடத்துக்கு உண்மையாகவே பாலம் போட்டிருந்தது. சாதாரணப் பாலம் அல்ல; நதியில் யானைகளை வரிசையாக நிறுத்தி வைத்து, அவற்றின் முதுகின் மேல் பலகைகளைக் கோத்து அதிசயமான பாலம் அமைத்திருந்தார்கள்! இந்த அபூர்வமான காட்சியானது பாண்டிய மன்னனுக்கு வாதாபிச் சக்கரவர்த்தியின் மேல் மறுபடியும் மரியாதையை உண்டாக்கிற்று. அந்த யானைப் பாலத்தின் வழியாகப் புலிகேசி தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் ஆற்றைக் கடந்து வரவே, பாண்டியனும் மற்ற இரு குறுநில மன்னர்களும் அவனுக்குத் தக்க மரியாதை செய்து இராஜோபசாரத்துடன் வரவேற்றார்கள்.

பேரரசர்கள் இருவரும் மூன்று தினங்கள் பரஸ்பரம் அளவளாவி மகிழ்ந்தார்கள். பல்லவர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் பூரண மன ஒற்றுமை இருந்தது. எனவே, பல்லவ வம்சத்தை அடியோடு அழித்து விட வேண்டும் என்றும், காஞ்சி நகரம் வரையில் பாண்டிய ராஜ்யத்துடன் சேர்த்து விடவேண்டுமென்றும், காஞ்சிக்கு வடக்கேயுள்ள பகுதியைச் சளுக்க சாம்ராஜ்யத்துடன் சேர்த்து விடவேண்டுமென்றும் அவர்கள் ஏகமனதாக முடிவு செய்தார்கள். ஜயவந்தர்ம பாண்டியன் தானும் தன் சைனியத்துடன் காஞ்சிக்கு அப்போதே புறப்பட்டு வருவதாகச் சொன்னபோது, காஞ்சியைக் கைப்பற்றும் கௌரவத்தைத் தனக்கே விட்டு விட வேண்டுமென்று புலிகேசி வற்புறுத்தினான். காஞ்சிக் கோட்டை பணிந்ததாகக் கேள்விப்பட்டவுடனே பாண்டியன் அங்கிருந்து கிளம்பிக் காஞ்சிக்கு வரலாமென்றும், இப்போதைக்கு வாதாபிச் சைனியத்துக்கு உணவுப் பொருள் மாத்திரம் கொடுத்து உதவும்படியாகவும் புலிகேசி கூற, பாண்டியனும் அதற்கிணங்கி, தன் சைனியத்துக்காகச் சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருள் அவ்வளவையும் சளுக்கப் படைக்குக் கொடுத்துதவ ஒப்புக் கொண்டான்.