உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦

இராக்கெட்டுகள்

காணிர்' என்ற குறிக்கோளைப் பறையறைவித்தனர். தம் பார்வையின் கீழுள்ள திருக்கோயில்களைப் புதுக்கி அவற்றில் தமிழ் அருச்சனை வழிபாட்டைச் செயற்படுத்தினர்கள். இதனால் பாடிய வாய் தேனூறும் பால்வாய்ப் பசுந்தமிழ் ஏற்றம் பெற்றது. தமிழ் கூறு நல்லுலகமெல்லாம் அருள் நெறிக் கழகங்களைத் தோற்றுவித்துச் சமயப்பணி ஆற்றிவருகின்றார்கள். ஏனைய மடாதிபதிகள் போல் ‘மூலவராக’ இராமல், அடிகளார் ‘உற்சவராக’ எங்கும் சென்று தமிழ் முழக்கம் செய்து சமயநெறியையும் தமிழ்நெறியையும் பரப்பி வருகின்றார்கள். அடிகளாரின் திருவாயினின்றும் அருவிபோல் பொங்கிவரும் அமுத வெள்ளமாகிய பேச்சில் புலமை மணங்கமழும் ஆராய்ச்சித் திறன் ஒளிரும். சிந்தனைச் சுடர் தெறிக்கும். இவர்களுடைய கருத்துக்களில் ஆழ்கடலைப் போன்ற ஆழமும் உண்டு; அதனைப்போல் அவை அகன்றும் காணப்பெறும் அனைத்தையும் துறந்து தமிழைத் துறக்க முடியாத அடிகளார் ஆசிரியர்களின் தோன்றாத்துணையாக இருப்பவர்கள்; புலவர்களிடம் பெருமதிப்புக் கொண்டவர்கள். வருங்கால மானிடப் பயிர்கள்-மாணாக்கர்கள் உய்யவேண்டும் எனத் துடித்து நிற்பவர்கள். தம்மிடம் சுரக்கும் அருள் காரணமாக இங்ஙனம் பல்லாற்றானும் சேவை புரிந்துவரும் தவத்திரு அடிகளாரின்மீது அடியேன் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக இச்சிறுநூலை அவர்கள் திருவடிகளில் அன்புப் படையலாக்குகின்றேன். இவர்கள் ஆசியால் இந்நூல் தமிழ் கூறு நல்லுலகத்தில் பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை.

என்னிடம் இயல்பான குறைகளிருந்தும் என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு என்னுளே நின்று என்னை இயக்கி இந்நூலை எழுதி வெளியிடுவதற்கு யான் மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்றி வைத்த எல்லாம் வல்ல திருவருளை மனம்மொழி மெய்களால் நினைந்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

திருப்பதி,
ஆகஸ்ட் 10, 1964

அன்புடன்,
ந. சுப்புரெட்டியார்.