இலங்கையில் இறங்கினேன்
19
இந்தத் தொல்லையே இல்லை. விமானம் வேகமாகப் பறந்தாலும் நாம் உள்ளே அமைதியாக எழுதிக் கொண்டிருக்கலாம். அங்கே நம்மைக் கவனித்துக் கொள்வதற்காகவே இருக்கும் பணிப்பெண் (Air Hostess) அடிக்கடி வந்து புன்சிரிப்புடன் என்ன வேண்டுமென்று கேட்கிறாள். பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்கிறாள். காபி, டீ. ரொட்டி, பிஸ்கத் வேண்டுமானால் தருகிறாள்.
ஆனால் விமானம் விரைவிலே குறித்த இடத்துக்குப் போகத்தான் உதவும். பிரயான இன்பத்தை அதில் அநுபவிக்க முடியாது. உல்லாசப் பிரயாணம் செய்ய வேண்டுமானால் நம்முடைய தென்னாட்டு ரெயில் வண்டியில்தான் போகவேண்டும். எவ்வளவு நிதானமாக இருமருங்கும் தோன்றும் காட்சிகளைப் பார்க்க வேண்டுமோ அவ்வளவு நிதானமாகக் காணலாம். விமானத்தில் உட்கார்ந்தபடியே வெளியிலே பார்க்கச் சாளரங்கள் இருக்கின்றன. அதன் வழியாகப் புற உலகைப் பார்க்கலாம். ஆனால் வானத்தில் விமானம் பறக்கும்போது கீழே உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரிவதில்லை. நிலப்பரப்பிலே உள்ள சோலைகளையும் அழகிய கட்டிடங்களையும் மனிதக் கூட்டங்களையும் ஆடுமாடுகளையும் தரையில் செல்லும் பிரயாணத்திலே கண்டு கண்டு மகிழலாம். விமானத்திலிருந்து பார்த்தால் காடுகளில் உள்ள மரங்கள்கூட வெறும் புல் பூண்டாகத் தோன்றுகின்றன. மனித உருவமே புலப்படுவதில்லை. ஆறுகள் மாத்திரம் வளைந்து வளைந்து வருவதைப் பார்க்கலாம். பெரிய ஏரிகள் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்தி போலத் தோன்றும். கடல் நன்றாகத் தெரியும். கடல்