சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/சகோதரர்கள்

விக்கிமூலம் இலிருந்து
39. சகோதரர்கள்


புலிகேசியும் புத்த பிக்ஷுவும் ஒரே மனிதர்கள்தான் என்று சிவகாமி எண்ணிக் கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை. சற்று முன்னால், புலிகேசிச் சக்கரவர்த்தியே மேற்படி உருவ ஒற்றுமை காரணமாகத் திகைக்கும்படி நேர்ந்தது. வாதாபிச் சக்கரவர்த்தி தம்முடைய கூடாரத்தில் தன்னந் தனியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மனத்தில் பெரும் சோர்வு குடிகொண்டிருந்தது. வாதாபியிலிருந்து அவர் புறப்பட்டபோது என்னென்ன உத்தேசங்களுடன் கிளம்பினாரோ அவை ஒன்றும் நிறைவேறவில்லை. எல்லாம் மகேந்திர ஜால பல்லவனுடைய தந்திரங்களினால் உருப்படாமற் போயின.

மகேந்திர பல்லவனுடைய தந்திரங்களுக்கு மாற்றுத் தந்திரங்கள் செய்து அவனைத் தோற்கடிக்கக்கூடிய சாமர்த்தியம் வாய்ந்தவரான நாகநந்தி பிக்ஷுவைப் பற்றித் தகவலே கிடைக்கவில்லை. இதனாலெல்லாம் புலிகேசி பெரிதும் உற்சாகம் குன்றியிருந்தார். அவருக்கிருந்த ஒரே ஓர் ஆறுதல் தளபதி சசாங்கன் மூலம் மகேந்திர பல்லவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்து விட்டு வந்ததுதான். ஆ! பல்லவ நரி தன்னுடைய பொந்தை விட்டு வெளியே வந்து பார்க்கும்போது, வாதாபிப் புலிகேசியை வஞ்சித்து ஏமாற்றுவது எவ்வளவு பிசகான காரியம் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வானல்லவா?

தளபதி சசாங்கன் தம்முடன் வந்து சேர்வதற்காகவே சக்கரவர்த்தி வடபெண்ணையின் வடகரையில் காத்துக் கொண்டிருந்தார். கட்டளையை நிறைவேற்றிவிட்டு வந்து சேரச் சசாங்கனுக்கு ஏன் இத்தனை நாள் பிடிக்கிறது என்று அவருக்குக் கோபம் வந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் தெற்கேயிருந்து படை வருகிறது என்று கேட்டதும் சசாங்கன்தான் வருகிறான் என்று எண்ணி, அவன் கொண்டு வரும் செய்தியைக் கேட்பதற்காக மிக்க ஆவலுடன் இருந்தார். கூடாரத்துக்கு வெளியே குதிரை ஒன்று வந்து நின்றதும், சசாங்கன் இவ்வளவு தாமதமாய் வருவதற்காக அவன் மேல் எரிந்து விழுவதற்கு ஆயத்தமானார். ஆனால், உள்ளே பிரவேசித்து வந்தது சசாங்கன் அல்ல. கிரீடமும், வாகுவலயமும், சக்கரவர்த்திக்குரிய மற்ற ஆபரணங்களும் தரித்த நெடிதுயர்ந்த கம்பீர உருவம் ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் புலிகேசிக்கு ஏற்பட்ட திகைப்புக்கும் குழப்பத்துக்கும் எல்லையேயில்லை. 'இது என்ன? எனக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டதா? அல்லது மாயக் கனவு காண்கிறேனா? பின், ஆசனத்தில் இதோ சாய்ந்து உட்கார்ந்திருக்கும் நானே கூடாரத்துக்கு வெளியிலிருந்து எப்படி உள்ளே வர முடியும்?' என்று திகைத்தார்.

புலிகேசியின் குழப்பத்தைப் பார்த்து விட்டு வெளியிலிருந்து வந்த உருவம் புன்னகை புரிந்து, "தம்பி! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? நான் என்ன பேயா, பிசாசா, பூதமா? உனக்கு என்னைத் தெரியவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே தலைக் கிரீடத்தை எடுத்ததும், பிக்ஷுவின் மொட்டைத் தலை காணப்பட்டது. உடனே புலிகேசி குதூகலத்துடன் துள்ளி எழுந்து, "அண்ணா நீயா?" என்று கட்டிக் கொள்ளப் போனவர், மறுபடியும் திகைத்து நின்று, "ஆஹா! இது என்ன வேஷம்? உன்னுடைய வாக்குறுதி...?" என்று வினவினார். அப்போது புலிகேசியின் கண்களின் ஓரங்களில் பொறாமையுடன் கூடிய குரோத ரேகை தென்பட்டது.

"தம்பி! அதற்குள்ளே அவசரமா? ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வேஷம் உன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்குப் பயன் பட்டதல்லவா? இப்போது என்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இது பயன்பட்டது. என் வாக்குறுதிக்கு ஒரு பங்கமும் நேரவில்லை. உன்னுடைய ராஜ்யத்தில் நான் இந்த வேஷம் போட்டுக் கொள்வதில்லையென்றுதானே வாக்குறுதி கொடுத்தேன்? இன்னும் உன்னுடைய சாம்ராஜ்யத்துக்குள் நாம் வந்துவிடவில்லையே?" என்று நாகநந்தி சொன்னதும் புலிகேசி கொதிப்புடன் கூறினார்: "ஆம்; ஆனால் இந்தப் பிரதேசம் இன்று நம்முடைய சாம்ராஜ்யத்துக்குள் வராதிருப்பது ஏன்? பல்லவ நாட்டில் இன்று வராகக் கொடி பறக்காதது ஏன்? அற்பத்திலும் அற்பமான மகேந்திர பல்லவனுடைய சைனியத்துக்கு முன்னால் வாதாபியின் மகா சைனியம் தோல்வியடைந்து திரும்பிப் போவது ஏன்? எல்லாம் உன்னால் வந்ததுதான்!"

"தம்பி! தோல்வி என்கிற வார்த்தையையே சொல்லாதே! யார் தோல்வியடைந்தது? வாதாபி சைனியம் தோல்வியடையவில்லை, நீயும் தோல்வியடையவில்லை. அந்தத் தோல்வி என்னால் நேரவும் இல்லை. எல்லாம் சாவகாசமாகப் பேசுவோம். முதலில் உடனே காவி வஸ்திரம் இரண்டு தருவித்துக் கொடு. நான் இந்த வேஷத்தில் இருந்தால் வீண் குழப்பத்துக்கு இடமாகும். ஏற்கெனவே, நான் வந்து கொண்டிருந்தபோது வெளியில் நிற்கும் வீரர்கள் என்னை வெறித்து வெறித்துப் பார்த்தார்கள்!" "ஆமாம்; அவர்கள் வெறித்துப் பார்ப்பதற்குக் காரணம் இருக்கிறதல்லவா? கூடாரத்திற்குள் இருந்த சக்கரவர்த்தி வெளியில் எப்போது, எப்படிப் போனார் என்று அவர்களுக்குத் திகைப்பாயிருந்திராதா? எனக்கே கொஞ்ச நேரம் குழப்பமாய்ப் போய்விட்டதே!" என்று புலிகேசி கூறிவிட்டு கூடாரத்தின் வாசலில் நின்ற காவலனிடம், "உடனே ஒற்றர் விடுதிக்குச் சென்று காவி வஸ்திரம் இரண்டு கொண்டு வா!" என்று கட்டளையிட்டார்.

காவி வஸ்திரம் வந்தவுடனே நாகநந்தி உடையை மாற்றிக் கொண்டார். சகோதரர்கள் இருவரும் ஒரே ஆசனத்தில் அருகருகே உட்கார்ந்தார்கள். "தம்பி! இப்போது சொல்லு! நீ வாதாபியை விட்டுப் புறப்பட்டதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லு!" என்று நாகநந்தி கேட்க, அவ்விதமே புலிகேசி கூறிவந்தார். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட பிறகு, பிக்ஷு கூறினார்; "ஆகா! மகேந்திர பல்லவன் நான் நினைத்ததைக் காட்டிலும் கெட்டிக்காரன். நெடுகிலும் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறான்!" "அண்ணா! இராஜ்ய தந்திரத்தில் உன்னை வெல்லக் கூடியவன் இந்த உலகில் எவனுமே இல்லையென்று நினைத்திருந்தேன்." "ஆரம்பத்தில் நான் ஒரே ஒரு தவறு செய்தேன். அதன் பலன் நெடுகிலும் விபரீதமாகவே போய்விட்டது!" "அடிகளே! அது என்ன தவறு?" "பரஞ்சோதி என்னும் பிள்ளையின் முகத்தைப் பார்த்து என் மனம் சிறிது இளகிற்று." "அந்தத் திருட்டுப் பயலை நம்பி ஓலை கொடுத்து அனுப்பினாய்!" "அதற்குக் காரணமானவன் நீதான், தம்பி!" "நானா? அது எப்படி?"

"பாண்டிய நாட்டுக்குப் போய் அங்கே வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டுக் காஞ்சிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஏரிக் கரையில் ஒரு பிள்ளை சோர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். உன்னை நான் முதன்முதலில் அதே நிலையில் பார்த்தது ஞாபகம் வந்தது. அதனால் என் மனம் இளகி அந்தப் பிள்ளையின் பேரிலும் விசுவாசம் உண்டாயிற்று. அவனுடைய முகக் களையிலிருந்து பெரிய பதவிக்கு வரப்போகிறவன் என்று தெரிந்து கொண்டேன். ஆகையால், அவனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சபலமும் உண்டாயிற்று. அவனிடம் உனக்கு ஓலை கொடுத்து அனுப்பினேன். அந்த ஓலை உன்னிடம் சேர்ந்து நீ நேரே வந்திருந்தாயானால், காஞ்சிக் கோட்டையை மூன்றே நாளில் கைப்பற்றியிருக்கலாம். மகேந்திர பல்லவன் உன்னுடைய காலடியில் விழுந்து கிடப்பான்." "ஆனால் உன்னுடைய ஓலைக்கு மாறாக மகேந்திர பல்லவன் எழுதி வைத்த ஓலை என்னிடம் கிடைத்தது. அதன் பயனாக வடபெண்ணைக் கரையில் எட்டு மாதம் வீணாக்க நேர்ந்தது. மகேந்திர பல்லவன் ஒரு சிறு குதிரைப் படையை வைத்துக் கொண்டு, யுத்தம் செய்யாமல் வெறும் பாய்ச்சல் காட்டியே ஏமாற்றிக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு நான் காஞ்சிக்கு வந்து கோட்டையை முற்றுகையிட்டும் பயன்படவில்லை. அண்ணா! நான் வாதாபிச் சிம்மாசனத்தில் ஏறிய பிறகு முதன்முதலாக அடைந்த தோல்வி இது தான்..."

"அப்பனே! அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதே! தோல்வி எது? யார் தோல்வி அடைந்தது? இராஜரீக சாஸ்திரத்தில் முதலாவது பாடம் என்னவென்பதை இன்னமும் நீ தெரிந்து கொள்ளவில்லையா? தோல்வியடைந்து விட்டதாக ஒரு நாளும் ஒப்புக்கொள்ளக் கூடாதென்பதுதான் அந்தப் பாடம். நீயே தோல்வியடைந்ததாகச் சொல்லிக் கொண்டால் ஊரார் அப்படிச் சொல்வார்கள்; உன் விரோதிகளும் அவ்விதமே சொல்வார்கள்; தேசமெங்கும் 'புலிகேசிச் சக்கரவர்த்தி தோல்வியடைந்தார்!' என்று செய்தி பரவும். ஹர்ஷவர்த்தனன் காதிலும் அது எட்டும். மகேந்திர பல்லவன் பொய்யாக எழுதியபடி ஒருவேளை உண்மையில் நடந்தாலும் நடக்கலாம். நர்மதையைக் கடந்து ஹர்ஷனுடைய சைனியம் உன் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கலாம். தோல்வி என்ற வார்த்தையை இனிமேல் சொல்லாதே, தம்பி!"

"நான் சொல்லாமலிருந்து விட்டால், தோல்வி வெற்றியாகி விடுமா, அண்ணா?" "மறுபடியும் தோல்வியைக் கட்டிக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்ன தோல்வியை நீ அடைந்தாய்? யோசித்துப் பார்! கடல் போன்ற சைனியத்துடன் திக்விஜயம் செய்யத் தென்னாட்டை நோக்கிப் புறப்பட்டாய், வைஜயந்தியை அழித்தாய். வடபெண்ணைக் கரையில் பல்லவ சைனியத்தை நிர்மூலம் செய்தாய், காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டாய், தெற்கே கொள்ளிடக் கரை வரையில் சென்றாய். பல்லவன் சிறைப்படுத்தியிருந்த துர்விநீதனை விடுதலை செய்தாய். காவேரிக் கரையில் தமிழகத்தின் மூவேந்தர்கள் - சேர, சோழ, பாண்டியர்கள் - வந்து உன் அடிபணிந்து காணிக்கை செலுத்தினார்கள்." "அண்ணா! சோழன் வரவில்லையே?"

"சோழன் வராவிட்டால் களப்பாளன் வந்தான். இதையெல்லாம் யார் விசாரிக்கப் போகிறார்கள், தம்பி? நீ திரும்பிக் காஞ்சிக் கோட்டைக்கு வந்தபோது, மகேந்திர பல்லவனும் உன்னைச் சரணாகதி அடைந்தான். மகாபலியின் தலையில் மகாவிஷ்ணு பாதத்தை வைத்ததுபோல், நீயும் மகேந்திர பல்லவனுடைய சிரசில் உன் பாதத்தை வைத்து, 'பிழைத்துப் போ' என்று உயிர்ப் பிச்சை கொடுத்தாய். அவன் கொடுத்த காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டாய்..." "காணிக்கை ஒன்றும் நான் கொண்டு வரவில்லையே, அண்ணா!" "நீ கொண்டு வராவிட்டால், நான் கொண்டு வந்திருக்கிறேன்." "என்ன அது?" "இன்று இரவு காட்டுகிறேன், மேற்படி விவரம் எல்லாம் உத்தர பாரத தேசத்திலே பரவும்போது, நீ திக்கு விஜயம் செய்து வெற்றி முழக்கத்துடன் திரும்பினாய் என்று சொல்வார்களா? 'தோல்வி' யுற்று ஓடி வந்தாய் என்பார்களா?"

"அண்ணா! உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்! தோல்வியைக் கூட நீ வெற்றியாக மாற்றக் கூடியவன். உன் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கே நான் அடைந்தது வெற்றி என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த வெற்றிச் செய்தி வடநாட்டிலே எப்படிப் பரவும்?" "ஆ! புத்த பிக்ஷுக்களின் சங்கங்களும் சமணர்களின் மடங்களும் பின் எதற்காக இருக்கின்றன? நாகார்ஜுன பர்வதத்துக்கு உடனே ஆள் அனுப்பவேண்டும்." "அண்ணா! நீயே போவது நல்லது; உனக்கு வேங்கியிலும் வேலை இருக்கிறது." "என்ன வேலை?" "விஷ்ணுவர்த்தனன் காயம்பட்டுக் கிடக்கிறான். சென்ற வருஷம் அவன் வெற்றி கொண்ட வேங்கி இராஜ்யத்தில் இப்போது எங்கே பார்த்தாலும் கலகமாம்." "அதற்கு நான் போய் என்ன செய்யட்டும்?" "நீ போய்த்தான் அவனுக்கு யோசனை சொல்லி உதவ வேண்டும். உன்னால் முடியாத காரியம் ஒன்றுமில்லை அண்ணா! தோல்வியையும் நீ வெற்றியாக்கி விடுவாய்." "என்னால் இப்போது வேங்கிக்குப் போக முடியாது." "ஏன்?" "காரணம் இருக்கிறது." "அதைச் சொல்லேன்." "இராத்திரி சொல்கிறேன்; தம்பி! சூரியன் அஸ்தமித்து நாற்புறமும் இருள் சூழ்ந்துவிட்டது. பூரண சந்திரன் உதயமாகப் போகிறது. இந்தக் கூடாரத்திற்குள்ளேயே அடைந்து கிடப்பானேன்? வா வெளியே போகலாம்!"

"ஆமாம், ஆமாம்! பிரகிருதியின் சௌந்தரியங்கள் அநியாயமாய் வீணாய்ப் போகின்றன!" என்று பரிகாசக் குரலில் சொல்லிக் கொண்டு புலிகேசிச் சக்கரவர்த்தி எழுந்தார். "உனக்கு எவ்வளவோ பாக்கியங்கள் இருந்தாலும் என்ன பயன்? சௌந்தரியத்தை அநுபவிக்கும் பாக்கியம் மட்டும் இல்லை" என்று சொல்லிக் கொண்டு நாகநந்தி எழுந்தார். சகோதரர்கள் இருவரும் ஒத்த வயதுடைய ஆத்ம சிநேகிதர்களைப் போலக் கைகோத்துக் கொண்டு வெளியே சென்றார்கள்.