ஒலியின் தன்மைகள்
27
அடைகின்றன. ஒலி அலைகள் காற்றில் பரவும் பொழுது வினாடியொன்றுக்கு 1100 அடி வீதமாகச் சென்று பரவுகின்றன என்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். இதை முன்னரும் குறிப்பிட்டோம்.
ஒரு பொருள் வேகமாக அதிருங்கால் அது முன்னும் பின்னுமாக வேகமாக அதிர்கின்றது. இங்த அதிர்ச்சி வினாடியொன்றுக்கு 600 அல்லது 700 தடவைகள் வீதம் இருக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது அது தன்னைச் சுற்றிலுமுள்ள காற்றினைத் தள்ளிச் சிறிய காற்றலைகளை அனுப்புகின்றது. நாம் ஒரு குளத்தில் கல்லை விட்டெறியுங்கால் கல் விழுந்த இடத்திலிருந்து அலைகள் நாலா பக்கங்களிலும் பரவுகின்றன அல்லவா? காற்றலைகளும் இந்த நீர் அலைகளைப் போன்றவையே.
முன்னும் பின்னும் மிக வேகமாக அதிர்ந்து கொண்டுள்ள கம்பிபோன்ற பொருள்களின் அதிர்வுகள் மிகச் சிறிய அலைகளை அனுப்பிய வண்ணமிருக்கும். இவ்வாறு வேகமாகவுள்ள அதிர்வுகளை நாம் கண்ணால் காணமுடியாது. நம்முடைய உடம்பின் உணர்வினாலும் கண்டு கொள்ளமுடியாது. நாம் அந்த அதிர்வுகளைக் கேட்பதால் அவை இருப்பதாக அறிகின்றோம்.