அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/உருப்பிணி திருக்கல்யாணம்

விக்கிமூலம் இலிருந்து
உருப்பிணி திருக்கல்யாணம்
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமா யுள்ள வாண நரபாலனனயும்
இம்முதலா யுள்ள ஏற்ற வரக்கரையும்
அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம்
சத்தபில முள்ள தத்துவத்தார் தங்களையும்
வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை
கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
அஞ்சல ருளிஆழிக்குள் வீற்றிருந்தார்
வாரிக்குள் கோட்டை வளைந்துமணீ மேடைவைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை
மாயன் துவரம்பதி வாழ்ந்து தானிருக்க
நாயனுக்கு வந்த நல்ல வுருப்பிணியை
விதியை அறியாமல் மேலுமொரு ராசனுக்கு
திருமாங் கிலியஞ் சேர்க்கத் துணிந்தனராம்
அப்போது நாரதரும் அரியோனடி பணிந்து
இப்போது வுந்தனக் கிசைந்த வுருப்பிணீயை
பாணீக் கிரணம் பண்ணப் பறையடித்தார்
நானிதையுங் கேட்டு நாடியுரைத்தே னென்றார்
அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
இம்முனிவன் போக இசைந்தார் காணம்மானை
மோகத் திருமால்தன்னை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தாலுண்டு பண்ணி விரைவாய்க் கொடுநடந்தார்
முழுத்திருமாலை தன்னை மொய்குழலாள் கன்னியுட
கழுத்திலே யிட்டுக் காமக்கண் நீட்டிடவே
மாயனுக்கு மோகம் மாதுக்கும் மும்மோகம்
தேசமெல்லாங் மோகஞ் சென்றது காணம்மானை
முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும்
அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து
உருப்பிணிக்குத் தேவரல்லாஞ் ஓலமிட மாலையிட்டு
விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி
மனோன் மணியையுங்கூட்டி மாயன் படையுடனே
வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து
கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம்
அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை
ஆயர்குடீயில் வளர்ந்து வெண்ணை அருந்தி முறைமா தரையணைந்து
தீயன் கொடிய கஞ்சனையும் திருக்கி யறுத்து யசுரரையும்
உபாய முடனே குலையடக்கி உருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
தேயம் புகழ மணமுகித்துத் துவரயம் பதியிலி ருந்தனரே