அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/துரியோதனன் சூழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
துரியோதனன் சூழ்ச்சி
இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
வணங்கா முடியுடைய மன்னன் துரியோதனனும்
இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தா னம்மானை
தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்தான்
நிலைபரிந்து விட்டோமே நினைவு சற்று மில்லாமல்
இனியவன் புமிதனை யாம்பறித்து அய்வரையும்
தனியே வனத்தில் தானனுப்பி ராச்சியத்தை
அடக்கியர சாள்வேனென்று அவன்நினைத்து மாபாவி
உடக்கிச்சூது பொருதோட்டி வைத்தான் ஐவரையும்
பாவிதுரியோ தனனும் பஞ்சவரையும் விரட்டி
சோவிதமாய் நாட்டைச் சுற்றியர சாண்டிருந்தான்
வனவா சந்தனில் வந்திருந்த ஐபேரும்
இனமானது போல் இருந்தார் குகையதிலே
அப்போது வேத வியாக வரவறிந்து
செப்போடு வொத்தத் திருமா லருகேகி
மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து
தீய துரியோதனனைச் செயிக்கவந்த பெம்மானே
பஞ்சவரை மாபாவி பழுது சூதாடிவென்று
வஞ்சகமாய்ப் பாவி வனத்தில் துரத்திவிட்டான்
அய்பேரும் பத்தினியும் அந்த வனந்தனிலே
பைப்போலலறி பசித்திருந்து வாடுகிறார்
அன்று மகாமேர்பில் அடியேன் உரைத்தபடி
இன்றுபாரதமும் முடிக்க எழுந்தருளும் நாளாச்சு
என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும்
அன்று திருமால் ஐபேரிடமேகி
வேத வியாகரரும் வேயூதும் வாயானும்
சீதக்குணத் தர்மர்முன்னே சென்றனர் காணம்மானை
நாராயணர் வரவே நல்ல தர்மாதிகளும்
பாரானதை யாண்போன் பதம்பூண்டா ரம்மானை
கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே
மால்பிடித்துத் தர்மரையும் மார்போடு அரவணைத்து
பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே
கதறாதே ஐவரையும் காத்தருள்வோ மென்றுரைத்தார்
அப்போது தர்மர் அச்சுதரையும் போற்றி
இப்போது எங்களுக்கு ஏற்ற பசிதீர
சூரிய பாண்டந்த்னை யழைத்துச் சுத்தமனே
ஆரிய மான அன்ன மருளுமென்றார்
அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து
மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி வோரரியும்
கையா லெடுத்துக் கனத்ததர்மர் கைக்கொடுக்க
அய்யாயிரங் கோடி ஆள்கள் மிகவந்தாலும்
என்பே ரரிதான் எனைநினைந்து பாண்டமதில்
அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன்
என்பே ரரியை எடுத்ததிலிட்ட துண்டால்
அன்பாக யெல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார்
இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரே யன்பருக்கு
சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தா ரம்மானை
மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயினபின்
தூய வியாகரருஞ் சொல்லுவார் தர்மருடன்
பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமா லின்றுமுதல்
தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும்
மாமுனியும் போக வனத்தில் ஐந்துபேரும்
ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை
பாவி துரியோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று
ஆவியவன் செய்த அநியாய மத்தனையும்
ஒக்க வொருமிக்க உரைக்கக்கேள் வொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே
நஞ்சைக் கலந்து நல்லதயிர் என்றீந்தான்
அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை
பாதாளம் வெட்டிப் பார்வீமனை யோட்டி
நீதாள மான நெடியோனது காத்தார்
கன்னிதனில்ப் பாவி கழுநாட்டி ஐவரையும்
கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தார்
அரவதையும் விட்டு அருள்வீமனையும் வதைத்தான்
விரைவுனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே
தண்ணீரிலே நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும்
மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார்
பூதமதை யேவிப் பொன்றவைத்தான் மாபாவி
நீதத் திருமால் நிலைநிறுத்தி காத்தனரே
இப்படியே பாவி இடறுசெய்த ஞாயமெல்லாம்
அப்படியே மாயன்காத்து ஆண்டனரே அய்வரையும்
பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும்
சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை
பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி
பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்த்பின்பு