அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/பாரத போர்
Appearance
←←துரியோதனன் சூழ்ச்சி | பாரத போர் | கர்ணனுக்கு மோட்சம்→→ |
- மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்கு
- தீய துரியோதனனுந் திருமாலைப் பாராமல்
- தாள்போற புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு
- வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே
- எள்போலிடங் காண் ஈயேனென்று ரைத்தான்
- மாயனையும் பாவி வாபோவெனப் பேசி
- ஈயே னெனவுரைத்த இயல்புகேட்டு எம்பெருமாள்
- கர்ணன் பிலமுங் கடியவிதுரன் பிலமும்
- மன்னன் ஶ்ரீ பீஷ்மர் வாழுந் துரோணர்பிலமும்
- தென்னன் துரியோதனன் பிலமுந்தானழித்து
- வன்ன விசயனுக்கு வாளிபல கொடுத்து
- வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்து
- தாமன் சகாதேவனுக்குச் சக்திசூலங் கொடுத்து
- நகுலனுக் காயுதமும் நல்லபரியும் கொடுத்து
- புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து
- மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்து
- செங்கையில் பாரதத்தைச் சேவித்தார் மாயவரும்
- மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
- ஓசையிட வொன்றாய் ஒத்துதே பாரதப்போர்
- ஐபேருட படையும் அரவக்கொடியோன் படையும்
- கைப்போரும் வில்போரும் கணையோடு வாள்ப்போரும்
- அம்புப் போருங்கருவி அச்சுப்போரும் பொருது
- கர்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும்
- மன்னன் ஶ்ரீ பீஷ்மர் வாய்த்த துரோணர்முதல்
- சராசந்தன் வரையும் சத்தியக் கீசகனும்
- பூராச வீமன் பெலியிட்டா னம்மானை
- இத்தனைபேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
- அத்தனை பேரை அறுத்தா னருச்சுனனும்
- துரியோதனன் படைகள் சேரமடிந்த பின்பு
- விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி
- தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல்
- வம்பி லிறந்தாச்சே வாழ்வதே னென்றுசொல்லி
- எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம்
- வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால்
- இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவெ
- விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்சுனனை
- இன்றுகொல்ல வேணுமென்று எழுந்தான் படைக்கெனவெ
- அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்தார்
- இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ
- அதினா லுன்மேல் அரவக் கொடியோனும்
- வாரான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து
- உந்தனக்கு நல்ல உறுவேட்டை யின்றிடவா
- எந்தனக் கின்றுமுதல் இளைப்பாற லாமடவா
- வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா
- எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்ற்டவா
- என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு
- வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து
- வீமனுட தண்டத்துக்கு விசைமால் விசைகொடுத்து
- போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
- விசையன் பரிநகுலன் வெற்றிச் சகாதேவனையும்
- இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லுமென்று
- வீமனை யுங்கூட்டி வெளியில் அரிவந்திடவே
- காமக்கனல் மீறிக் கரியோ னெழுந்ததுபோல்
- வந்தானே பாவி வணங்கா முடியோனும்
- சநதான மான தழிழ்வீமன் தான்அறிந்து
- எதிர்த்தார் இருவர் எனக்கெனக் கென்றேதான்
- செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை
- மண்விண் ணதிரும் வானமது தானதிரும்
- திண்திண் ணெனப்பூமி தெய்தொ மெனவதிரும்
- மலைக ளசைந்து மடமடென ஓசையிடும்
- கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
- அலைகள் சிதறி அங்குமிங் கோடிடவே
- இலைகளு திர்ந்து இடிந்துவிழும் மாமரங்கள்
- தூளெழும்பிச் சுரியனைத் தோன்றாமலே மறைக்க
- வேளெழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே
- தவமுனிவர் நெட்டை தானழிந்து தட்டழிந்து
- திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினனே
- வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற
- நாதாந்த மோதும் நல்மறையோன் தான்பதற
- துரியோதனன் போரும் சுத்தவீமன் போரும்
- எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல்
- ஒண்ணுக்கு வொண்ணு விலகிப்புறஞ் சாயாமல்
- மண்ணும் விண்ணுமதிர மண்டியுத்த மிட்டார்கள்
- துரியோதனன் அடிக்கத் துடிவீமன் சாயாமல்
- மரியாதை வீமன் மாறிய வனடிக்க
- அடிக்கயிவன் பிடிப்பான் அப்படியே சண்டையிட்டு
- சாயா விதத்தைத் தானறிந் திருபேரும்
- வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று
- கட்டான் கள்ளன் கசடன் வெகுகெடும்பன்
- துட்டாள னான துரியோதன னுரைப்பான்
- இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டு
- புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பதினால்
- உன்பலமு முன்னுடைய உயிர்ப்ப்பலமும் நியுரைத்தால்
- என்பலமு முன்னோடு இயம்புகிறே னென்றுரைத்தான்
- அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும்
- தப்பாமலே யுரைத்தான் சகலோ ரறிந்திடவே
- கேட்டுத் துரியோதனனும் கேளுநீ யென்பெலங்கள்
- தீட்டுகிறேன் என்னிடது செய்யபுற மென்றுரைத்தான்
- கள்ளன் கவுசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம்
- எள்ளளவு போலே இசையாத வீமனுக்கு
- மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன்
- கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
- அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும்
- திடக்க முடனே சென்றவ்வீமன் பேரில்
- மாறி யவனடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
- தேறியே மாயவரைச் சிந்தைதனில் நினைக்க
- திலர்தமுள்ள மாயன் செயவீமனை நோக்கி
- வலது துடைதனிலே மாயன் கண்காட்டிடவே
- அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே
- துடித்தான் கிடாய்போலத் துரியோதனன் விழுந்து
- மூடத்த மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான்
- கூடத்த உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே
- அப்போது மாயன் அரவக் கொடியோனிடத்தில்
- தப்பாமல் வார்த்தையொன்று தான்கேள்க்கப் போயினரே
- முன்னே பிறப்பில் முடியிலங்கை யாண்டிருந்தாய்
- தென்னனி ராவணனாய்ச் சிரசு பத்தாயிருந்தாய்
- அப்போது நீதான் அநியாயஞ் செய்ததினால்
- செப்போடு வொத்த ஶ்ரீ ராமனாய் நான்தோன்றி
- பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி
- உத்து ஒருவசனம் உரைத்தேனா னுன்னிடத்தில்
- தம்பியா லென்னை சரமறுத்தா யல்லாது
- எம்பிராணன் வதைக்க ஏலாது வென்ற்னையே
- தம்பியொரு நூறோடே தான்படைத்து உன்னையுந்தான்
- கொம்பிலொ ராளைவிட்டுக் கொன்றேனே வுன்னையென்றார்
- என்றுரைக்கப் பாவி இகழ்த்துவா னப்போது
- தண்டுகொண்டே யடித்த தழிழ் வீமனல்லாது
- இன்றுன்னா லேலாது இடையாபோ வென்றனனே
- அப்போது மாலும் அதிகக்கோபம் வெகுண்டு
- துப்புரைகள்தான் கேட்ட தீயனுக்கங் கேதுரைப்பார்
- உன்னையின்ன மிந்த உலகில் ஒருபிறவி
- சின்ன வன்னமாகச் சிரசொன்றதாய் படைத்து
- அறிவு புத்தியோடும் ஆணுபங்கள் தன்னோடும்
- செறியுங் கலையோடுங் சிற்ப்போடுந் தான்படைத்து
- என்பே ரிலன்பு இருக்கவெகு சாஸ்திரமும்
- தன்போத மறியத் தான்படைப்பேன் கண்டாயே
- முன்னே யுனக்கு உற்ற பிறப்பாறதிலும்
- என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை
- ஏழாம் பிற்ப்பில் என்னை நினையாதிருந்தால்
- பாழாவாய் மேலும் பகையில்லை யெந்தனக்கு
- என்று திருமால் இயம்பித் துரியோதனனை
- அன்றவனைக் கொன்று அய்வரையுந்தான் வருத்தி
- கர்மச்சடங்கு கழிக்க விடை கொடுத்தார்
- தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்திலுள்ள முறை
- எல்லாச் சடங்கும் இருவருக்கும் நூற்றுவர்க்கும்
- உல்லாசமுள்ள தர்மர் ஒக்கமுறை செய்தனராம்
- முறைசெய்து கர்ணனுக்கு மோட்சம் கொடுக்க
- மறைதேர்ந்த மாயன் வந்தா ரவனருகே
- அப்போது வேத வியாகரவ ரங்குவந்து
- செப்பொடு வொத்த திருமாலோடே துரைப்பார்