அஞ்சலி/ஏகா
ஏகா
அன்றும் என்றும் போல்தான் பொழுது விடிந்தது. வழக்கமாய் ஏகாவுக்கு எப்படி விடியுமோ அப்படி.
“ஏகா, ஏகா, எழுந்திரேண்டி! ஏ ஏகா, ஏகா—ஐயோ திரும்பிப் படுத்துட்டாளே! ஏகா, கண்ணைத் திறவேண்டி—! ஐயோ, இவளை எழுப்பி எழுப்பி மானம் போறது, பிராணன் போமாட்டேன்கறதே! ஏ—கா!”
“கா—கா!” காகங்கள் கேலி செய்தன.
ஏகாவை எழுப்புகிறேன் என்றால் அர்த்தமில்லை. ஒவ்வொரு சமயமும் சதைபோல் அவளை உறக்கத்திலிருந்து பிய்த்தாக வேண்டும்.
ஆனால், ஏகா எழுந்தபின் அவள் உறங்குவதோ, அவளை உறங்க வைப்பதோ, அவளை எழுப்புவதைவிடக் கடினம். புகைவண்டி வேகமெடுப்பதுபோல்தான். வேக மெடுக்கும் வரைதான் மெது. எடுத்தபின்...!
“ஏகா, இன்னும் என்ன பண்றேடி, ராத்திரியைப் பகலாக்கிண்டு? துணி தைக்க இதான் நேரமா?”
“உங்களுக் கென்னவாம், திரும்பிப் படுத்துக்கோங்கோ!”
“விளக்கு வெள்ளை முழியில் ஆயிரம் ஊசி குத்தற தேடி!”
“முகத்தை இழுத்து மூடிக்கோங்கோ!”
“ஏகா! ஏகா !!”
“நீ ஏண்டா, வீணா அலட்டிக்கறே, வேதா! அவாளே அசுரக் கூட்டம்தானே! ராக்ஷஸாள் ராத்திரி பலக்காராள்!”
அவனுக்கு ரோசம் பொத்துக் கொள்ளும். ஆனால் ஏகா கிணுங்காள்.
அம்மாவின் வார்த்தைகள் சூத்திரங்கள். ஒன்றில், சமயத்துக்கேற்ப ஒன்பது கருக்கள், அமைப்புகள், வெறும் வர்ண விசிறல்களிலேயே, புரியாவிடினும், தனக்குள் ஒன்றுபட்டதோர் இழைவுபோன்று, சம்பந்தா சம்பந்த மற்றவை போன்ற வார்த்தைகளில் வெவ்வேறு ஒலியேற்றங்கள், அர்த்தக் கூடுகள். பாம்பின் கால் பாம்பறியும். வேதா வேதனைப்படுவான். வாக்குப்பட நாக்கில் துடிக்கும் பதிலை நறநறவெனமென்று விழுங்கிவிடுவான். அது அவன் சுபாவம்:
அவன் வேதமூர்த்தி.
அவள் ஏகா.
“உங்கள் கழுத்தில் இதென்ன பூமாதிரி நீள மறு. பிறவியா?” மணவறையில், சந்திப்பின் புதிதில், ஒன்றிய பரிவின் மழலையில், ஒருவரை யொருவர் ஆராயும் அதிசயிப்பில், மஞ்சத்தில் கொஞ்சலில், மச்சத்தைத் தொட்டு கேட்டாள்.
“ஒ இதுவா? இது, இதுவரை நான் விழுங்கியிருக்கும் கசப்புகள் கண்டத்தில் தோய்ந்த கறுப்பு. இதென்ன நகம்போல் உன் நெற்றியில் வடு?”
“ஒ இதுவா? இது நான் சுருக்க எழல்லேன்னு அம்மா தோசைத் திருப்பியால் நெற்றியில் நெத்தின நெத்தல்.”
பழைய காயத்தின் புதிய நினைவேகம் மூச்சு தேம்பிற்று.
அவன் உதடுகள் வடுமேல் ஒற்றின. அவளுக்குப் புல்லரித்தது. அவனைத் தழுவிக்கொண்டாள். அவனுக்கு மூச்சுத் திணறிற்று. அவள் விழிகள் ஒளி வீசின.
“காஞ்சியில் மாவடி சேர்வை நீங்கள் கண்டதுண்டோ?”
இல்லையென்ற பாவனையில் தலையை ஆட்டினான்.
“காஞ்சி ஸ்தல ஐதீகமே அதுதான்!”
“எது?”
“இது—”
அவள் தழுவலில் அவன் எலும்புகள் கழன்றன.
விளக்கில் சுடர் முறுக்கியது.
மேஜைமீது தட்டில், ஆப்பிள் முகம் சிவந்தது.
திராட்சை கொத்தாய் விழி பிதுங்கிற்று.
தும்பியின் சிறகுபோல் அவர்களிடையே திரைமடுத்த .வெட்கம் பிய்ந்து, ரேக்குகள் அவர்களைச் சூழ்ந்து, மிதந்து மிளிர்ந்தன.
“ஏகா, இதென்ன பேர்? ஆண்பிள்ளை மாதிரி!”
“நானே ஆண்பிள்ளை மாதிரிதானே யிருக்கேன்!”
ஏகா தன் தோள்களை வெற்றியுடன் பார்த்துக் கொண்டாள்.
“அம்மாவுக்கு என்னிடம் ஒரே பல்லவிதான்: “ஏகா, நீ பொம்மனாட்டீடீ, தலைகுனி! தலைகுனி!”
எரிச்சலாய் வரும்.
சிரிப்புந்நான் வரும்.
—நம் கல்யாணத்தில் நீங்கள் கவனித்தேளோ இல்லையோ? தோழிப் பெண்போல் அம்மா என் பின்னாலேயே நின்றுகொண்டு, ஜடைபில்லையை சரிபண்ணுகிற மாதிரி என் தலையை அழுத்திண்டிருந்தாள். “தலைகுனி தலைகுனி!!”
—‘பெண்ணாய்ப் பிறந்துட்டையேடி, நம் ஜன்மம் வாழ்நாள் முழுக்கத் தலைகுனிஞ்சாகனும்டி!’
“ஆமா, இந்த வீட்டில் பெண்ணைத் தவிர என்ன பிறக்கறது?’ன்னுட்டேன் ஒரு தடவை. பளார்! வாய்மேலேயே புறங்கையாலடி. ரத்தம் பீறிட்டிண்டது. அம்மாவுக்கும் எனக்கும் என்னிக்குமே ‘லடாய்’தான். மாற்றாந்தாய் தோற்றாள். மனம் திறந்து சொல்றேன் எனக்கே மனசுலே வெச்சுக்கத் தெரியாது. அத்தோடு நான் சங்கல்பமே பண்ணிண்டிருக்கேன்— எனக்குக் கணவனாய் வருபவரிடம், தப்போ சரியோ எதையும் மறைப்பதில்லே. மனம் திறந்து சொல்றேன்: நீங்கள் எனக்கு வாய்ச்சது என் பூர்வ ஜன்ம புண்யம்—என்ன உதட்டைப் பிதுக்கறேள், கேலியா? இல்லை, சத்யமா—”
“உஷ்!” அவள் வாயைப் பொத்தினான்.வானம் பசித்தாற் போன்று அதன் விளிம்பில் ஒரு இடி உருண்டது. அவனுக்கு அச்சமாயிருந்தது. என்ன இந்தப் பெண் அனாயாசமாய்ச் சத்தியம் வைக்கிறது! அவன் உள்ளங்கைக்கீழ் அவள் உதடுகள் துடித்தன.
உதடுகள் அல்ல.
இதயம்தானோ?
“என்னையேற்க என்னிடம் என்ன கண்டேளாே அறியேன். ஆனால் கேட்கமாட்டேன்.”
“ஏன்?”
“தெரிஞ்சுக்கப் பயம்.”
“என்ன பயம்?”
“நான் சொல்லிக் கொடுத்து என் சந்தேகம் உங்களுக்கே வந்துவிட்டால்? அதனால் நீங்களே மாறிவிட்டால்?”
தூலத்தில் பல்லி “டக் டக்”கென்றது.
அவள் காட்டிய பயம் அவனைக் கவ்வுகையில், சுடர் காட்டும் நிழலில் அவன் கழுத்து மறு இன்னும் கறுத்தது. அவளை அணைத்துக் கொண்டான். கை நிறைந்திருக்கிறாள். இந்நிறைவே தான், கள்ளம் கபடமற்ற இந்த நெஞ்சு வெளிதான், என்னையு மறியாமல், இவளை வரிக்க என்னை இயக்கிற்றோ?
பெண் பார்க்கப் போனவிடத்தில் என்பிள்ளைக்கு ஏன் இப்படி வாயடைச்சுப் போச்சோ தெரியல்லியே! கொண்டு வந்து வெச்ச சொஜ்ஜி பஜ்ஜியிலேயே ஏதாவது வெச்சுட்டாளா? ஒரு பாட்டா, குரலா, படிப்பா, பிடிலா ஒண்ணு உண்டா? தோல் வழுக்கிட்டுதுன்னு சொல்லக்கூட வழியில்லையே, நம் வாசல் கூட்டி சின்னம்மாவே இன்னும் நிறம். இல்லை, இவன் கண்ணிலே பழியா? என்னதான் வேளைமேல் பழி போட்டாலும் இப்படி ஒரு கண்கட்டு வித்தை—இதென்னடியம்மா எல்லாம் அசுர மாயையா இருக்கே? வருஷம் எட்டானாலும் (அட, எட்டும் ஆயிடுத்தே ஆகட்டுமே!) மறக்கமாட்டேன். துரை யாட்டம் என் பிள்ளை, கோட்டையும் சூட்டையும் மாட்டிண்டு, மோட்டார் வண்டியில்லாமல் கோவிலிலிருந்து கால் நடையா நடந்து வந்த மாப்பிள்ளைக் கோலத்தை காந்தவிளக்குக்குச் சொல்லித்தான் வெச்சேன் சம்பந்தியம்மா, ஆனால் விளக்குத் திரி ஊரிலேயே இல்லேயே!’ ஏன், படுபாவி திரிக்காரன் பத்தியெரிஞ்சு போயிட்டானா? நடக்கிறது கலியாணம்னு தெரிய “பீப்பீ”ன்னு வெச்சானே பிராம்மணன், அந்த மட்டுக்கும் திரியோடு அம்பட்டனும் காணாமல் போகாமல் இருந்தானே! ஏகா, ஒண்னு நான் ஒப்புண்டுதான் ஆகனும், உங்கப்பாவின் கெட்டிக்காரக் கெட்டித் தனத்துக்கு அவர் ஒரு யுக புருஷன்தான்! உலகத்துக்கொரு மனுஷன். அவர் வெச்ச பேரும் அவர் மாதிரியே—ஏகாவாம் ஏகா!”
“ஏகா, இதென்ன பேர், ஆண்பிள்ளை மாதிரி!”
“ஒ அதுவா? அம்மா என்னை உண்டாயிருந்தப்போ அப்பாவுக்குக் காஞ்சிபுரத்துக்கு மாற்றலாகி இருந்தது. கழுதையானாலும் காஞ்சியில் பிறக்கணுமாமே? நான் காஞ்சியில் பிறந்தவள்—உங்களுக்குத் திரட்டுப்பால் பிடிக்காதா? அப் படி யே வெச்சுட்டேளே, நான் தின்னூட்டமா?”
எடுத்துக்கோயேன் என்னைக் கேக்கணுமா?” காஞ்சியில் பிறந்தாய்; பிறகு?”
“ஓ அதுவா?” ஏகா வாய் நிறையத் திணித்துக் கொண்டு வார்த்தைகள் கமமின. “அம்மா என்னை உண்டாயிருந்தப்போ, இந்தத் தடவை பிள்ளை தான்னு அப்பாவும் அம்மாவும் நிச்சயம் பண்ணிண்டுட்டா. ‘ஏகாம்பரம்’னு பேரையும் தீர்மானம் பண்ணியாச்சு, அமாவாசைக்கு மூணு நாளில் நடுநிசி. குழந்தை விழுந்து வீறிட்டதும், கூரையிலிருந்து காரை உதிர்ந்ததாம் என் பாட்டி சொல் இது.
‘என்னது? என்னது?’
அப்பா திண்ணையிலிருந்து ஓடி வந்தார்.
“ஏண்டா குடல் தெறிக்கறதே? லங்கிணி பெத்தது லங்கிணியேதான்” என்று பாட்டி என்னை ஏந்திவந்து காட்டினதும், அப்பா முகத்தைப் பாட்டி சொல்லிக் காட்டும் ஒரொரு தரமும் அப்பா உள்பட, அம்மா தவிர, நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.
“ஆனால் அப்பா: ‘நான் நினைத்தது நினைத்தபடி நடக்காவிட்டாலும் நான் சொன்னது சொன்னதுதான்; என் சொல் வீணாகக்கூடாது’ என்று எனக்கு ஏகாம்பரி என்றே பேரை வெச்சுட்டார். ஆண் ஆண் என்று எண்ணி எண்ணி ஆண் போலவே வாளிப்பாய் தலை நிமிர்ந்து ஒரு பெண். அம்மா சொன்னால் தலை குனிந்துவிடுமா?
“நான் பெண்ணாய்ப் பிறந்ததை அம்மாவால் மன்னிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்... ‘தலை குனி’ தலைகுனி யென்று அவள் என் முகத்தைத்தான் மெறித்துக்கொண்டிருந் தாள். ஆனால் என் நல்ல காலம், என் கழுத்தில் சரட்டைக் கட்டி உங்கள் சொத்தை இழுத்துக் கொண்டு வந்துவிட்டீர்கள்!”
சரடில் தொங்கிய தாலியைச் சட்டெனக் கையில் தாங்கி அவள் முத்தமிட்டுக்கொள்கையில், அவனுக்குத் தலை ‘கீர்’ரிட்டது. பயமாய்க் கூட இருந்தது.
இதுவரை இவள் யாரோ நான் யாரோ?
என்னை ஏன் நெருப்பா யெரிக்கிறாள்?
இவள் இப்படி என்னை எரிக்கலாமோ?
இவள் இப்படி இருக்கலாமோ?
“என் குற்றங்கள் எத்தனையோ. ஆனால் இனி எனக்குக் கவலையில்லை அத்தனையும் இனி உங்களுடையதே!”
“அப்படியென்ன உன் குற்றங்கள்?”
அவனுள் பீதி சலசலத்தது. இவள் பேச்சே பூதமாயிருக்கிறதே!
“எவ்வளவோ, என்ன இல்லை?
அமரிக்கையில்லை.
தலைநிமிர்ந்து இருக்கிறேன்.
வாயாடி!
பெருங்குரல்!
விடிந்து வெய்யிலடிக்கும் வரை தூங்குகிறேன். தூங்கினால் கட்டைமாதிரி ஆகிவிடுகிறேன். புகுந்த வீட்டில் என் தூக்கம் எவ்வளவு பொல்லாது என்று எனக்கே தெரியும், அதனால் நான் உங்களைக் கோரும் முதல் வரம் நீங்கள் தான் தினம் என்னை எழுப்பணும்!”
“ஏகா, நீ வந்து வருஷம் எட்டாச்சு. நீ படி மிதிச்ச வேளைக்குக் குத்தமில்லாதபடி, இதுவரை ஆகிற செலவு எப்படியெப்படியோ இருந்தாலும் அரிசிப் பானையிலிருந்து அள்ளி எடுக்கும்படித்தான் இருக்கு. சுரண்டல்லே: அப்படியிப்படி நீயும் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை. உன் உடம்போடு பிறந்து, பேச்சில் ஒரு படபடப்புத் தவிர, நெஞ்சில் தோணினதையெல்லாம் கொட்டறதில்லை. பூட்டிவைக்க வேண்டியதுமிருக்குன்னு தெரியாமல் இருக்கையே. அதுதவிர, இதைப் பெரிசு பண்ணிக்கறவா பண்ணிப்பா; ஆனால் நான் பண்ணிக்கல்லே. பண்ணிண்டு என்ன பண்றது?, கோவிச்சுண்டு போறத்துக்கு இன்னொரு பிள்ளையிருக்கானா? குடும்ப சக்திக்கு மீறி, தர்ம சிந்தனையும் நெஞ்சிளக்கமும் உனக்கு இருக்கு, நான் கவளத்தை வாயில் போட்டுக்கு முன்னாலேயே, பிச்சைக்காரனுக்குப் படியளந்தாயிடறது. ஆசாரத்துக்கும் உனக்கும் துருவ துாரம். ஒருவேளை சோறு. அதை ஜாதி மாறாமல் சாப்பிட எவ்வளவோ பிரயத்னம் செய்யறேன். ஆனால் அந்த சாதத்தை வடிச்சு இறக்கறத்துக்குள் ஒரு தரமாவது பக்கத்து வீட்டு நாயுடுக் குழந்தையைக் கையில் வாங்கிக் கொஞ்சாவிட்டால் உனக்கு மண்டை வெடிச்சுடறது. இத்தனையும் போகட்டும், நான் கேள்வியாத் தான் கேட்கிறேன். குத்தமாக் கூறல்லே—ஆமா, உன் வயிறு ஏன் இப்படிக் கல்லாயிருக்கு?”
கல்லா? ஏகா தன் அடி வயிறைத் தடவிப் பார்த்துக் கொண்டாள் இலையிலே எழுதின தளிவடாம் மாதிரி முதுகோடு ஒட்டின்னா கிடக்கு மாடுதீனி தின்கிறேன், எனக்கே தெரியறது. ஆனால் என் பாம்புக் குடலுக்கு என்ன பண்ணுவேன்?
“எனக்கு ஏதும் வேண்டாம். காலமிருக்கிற இருப்புக்கு, என் ஒற்றைப்பிள்ளை கைக் கொள்ளியை வாங்கிண்டு, நான் மணத்தோடு போய்ச் சேர்ந்தால் போதாதா? என்னையே விட்டுவிடு, எனக்காக இல்லேடி, உனக்காகவே கேட்கிறேன்—உன் வயிறு ஏன் இப்படிக் கல்லாயிருக்கு?”
ஏகா விழிப்பாள். “என்ன அம்மா சொல்றேள்?”
பொங்க வழியற்று, தளைக்கும் கொதிப்பில் வேத மூர்த்தி சுண்டுவான். இந்த அம்மாவால் சும்மா இருக்கவே முடியாதா? தன் கள்ள எடையை மறைக்கத் தராசு முள்ளைச் சதா சுண்டிக்கொண்டிருக்கும் எடைக் கள்ளன் மாதிரி...!
ஏகாமேல் எரிச்சலாய் வரும். தலையில் அடித்துக் கொள்வான். காரணமில்லாமல் கரடியாய்க் கத்தறதே, இந்தச் சமயம் கோபமாய்க்கூடப் பதிலுக்கு ஒரு வார்த்தைக்கு வழியைக் காணோம்! முதலில் புரிந்தால்தானே! “மக்கு! மக்கு!”
“மக்காயிருந்தால் இருந்துட்டுப் போறேன் போங்கோ!”
“உன்னைச் சொல்லிக் குற்றமில்லே. மக்குகள் பங்கில் தானே கடவுள் இருக்கிறான்.”
“அதுவும் நியாயந்தானே! மக்காயிருந்து எனக்கென்ன குறைஞ்சு போச்சாம்! நீங்கள் எனக்குக் கிடைச்சிருக்கேளே அது ஒண்ணு போதாதா?”
நீட்டிய அவள் கைக்கு எட்டாது வேதா உடலை நெளித்துக்கொள்வான்.
“நமக்குக் கலியாணம் நேற்று நடக்கவில்லை ஏகா, வருஷம் எட்டு! ஞாபகமிருக்கட்டும்.”
அவள் பழியாய்த் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து அவனை அணைத்தாள்.
“எட்டென்ன, எண்பது ஆகட்டுமே! வேளைக்கும் காலத்துக்கும் ஏன் முடிச்சுப் போடறேள்? வேளை கலையாமல் இருந்தால், காலம் என்ன கடந்தும் என்ன செய்ய முடியும்?”
அவன் அவளை வியப்புடன் உற்று நோக்கினான். “ஏகா, ஏதேது! நீயா பேசறே?”
அவளுக்கு வார்த்தை தடைப்பட்டு ஊமையானாள்... முகம் மாறிற்று.
இது எது? நானா?
“எண்பதாம், ஆசையைப் பாரு! டேயப்பா! நான் எண்பது காணப்போறேனாக்கும்! இந்தக் குடும்பத்திலேயே ஆண்களுக்கு ஆயுசு கட்டை.”
அவள் வாயைப் பொத்தினாள். பொல பொலவென அவன்மேல் மலர்த் தளிர்கள் உதிர்ந்தன.
“விடு, விடு! ஏகா, மூச்சடைக்கிறது!”
அவள் வெறி அவனுக்குப் பயமாயிருந்தது. அவன் சுபாவம் உணர்ச்சிக்கு இலக்காகக் கூசிற்று. இத்தனை நாளாகியுமா, இவள் இப்படி—? இவள்மேல் எனக்கு இன்னும் இந்த வேகமிருக்கிறதோ?
பார்த்த முகமே பார்த்து, கேட்ட குரலே கேட்டு, குரலானே குரலே!
(எதிர்வீட்டில் ஒண்ணு புதுசா வந்திருக்கே, அது என்ன இங்கேயே இருக்கப்போகிறதா?
படிக்கிறதா, உத்தியோகம் பண்ணுகிறதா? பத்து நாளாய்க் கவனிக்கிறேன். நான் கிளம்பும் வேளைக்குக் காத்திருந்து என்னோடு படி இறங்கி, நான் ஏறும் வண்டியிலேயே ஏறுகிறது! நான் பின் தங்கினால் தானும் பின் தங்கறது. எனக்கு முன் ‘ஸ்டாப்’பில் இறங்கறது. வண்டு வட்டம்மாதிரி விழி மருட்சி. ஒரு சமயம்போல் இல்லை. நான் தலையை அசைத்தால் போதும், புறா மடியில் விழுந்துவிடும்—)
“என்ன வாயடைச்சுப் போச்சு?”
அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“என்ன முழிக்கிறேள்?”
அவன் முகம் வெளிறிட்டது. “ஒன்றுமில்லையே, என்ன செய்தேன்?”
அவன் காதைத் திருகினாள். “நீங்கள் என்ன செய்தாலும் என்னிடம் தப்ப முடியாது.”
முதுகுத்தண்டில் பாம்பு நெளிந்தது.
ஏகா உண்மையில் மக்கோ? எல்லாம் தெரிந்த பாஷையில் இப்படிப் பேசுகிறாளே!
அல்ல, மண்டையோட்டினுள் மின்னலா?
எப்படியிருந்தாலென்ன? விடிந்ததுகூடத் தெரியாமல் இந்தக் கரடித் தூக்கம் தூங்கும்வரை ஏகா மக்கு மக்கு தான்.
நல்ல பெண்,
மக்குப் பெண்!
“ஏகா! எழுந்திரேண்டி!”
“ஏ—கா!”
“கா—கா”
காகங்கள் கேலி செய்தன.
அன்றும் என்றும்போல்தான் பொழுது விடிந்தது.வழக்கமாய் ஏகாவுக்கு எப்படி விடியுமோ அப்படி. இல்லை நேரம் கூடவே,
ஏகா முனகியெழுந்து உட்கார்ந்து கண்ணைக் கசக்கினாள்.
“நான் தூங்கவேயில்லை.”
“பேஷ்! சொன்னயே, இதுதான் சிகரம்!”
“நிஜம்மா! எனக்குத் தூங்கின மாதிரியேயில்லை. என் கண்ணைப் பாருங்கள்.”
மிளகாயை வைத்து இழைத்தாற்போல் கண்கள் ஜெவ ஜெவென எரிந்தன.
“கன்னாபின்னான்னு என்னவோ கனா. எங்கேயோ கோவில் மணியோசை கேட்கிறாப்போல, கூடவே அழு குரலும் இழையறாப்போல, நீங்கள் ஏதேனும் தூக்கத்தில் அழுதேளா?”
“நானா? எதுக்கு, உன்னைக் கட்டிக்கொண்டதற்கா?”
“தெரியாது.”
“அழுதால் விடுதலை தந்துவிடுவையா?”
(மாலை வேளை கடலோரம் விளக்குகள் ஏற்றிக் கொள்வதுபோல் என்ன விழி ஜாலக்! கழுத்தில் சரடு காணோம். கட்டவே யில்லையோ, கழற்றிவிட்டாளோ! ஒருநாள் ஒரே அலங்காரம்—பந்துப் பூ, கழுத்து நிறைய சரம் சரமா, கை நிறைய அடுக்கடுக்காய், அயனும் பகட்டும் தெரியாமல் தடபுடல். மறுநாள் நெற்றித் திலகம்கூட இல்லை. மொழு மொழுகிவன்று அந்த வெறிச்சில்கூட ஒரு பாணி, ஒரு கவர்ச்சி, ஒரு அழைப்பு இல்லை? ஏய், நேற்று நீ இறங்கிப்போகையில் உன் முதுகின் வாய்க்காலில் உன் ரவிக்கையின் பிடிப்பை நான் கண்டு கலங்கணும்னுதானே, முதுகைக் காட்டித் தோளில் தலைப்பை சரிய விட்டுக்கொண்டு போனே, எனக்குத் தெரியாதோ?)
“என்ன சொல்றேள்? புரியும்படித்தான் சொல்லுங்களேன்!”
“உன்னை எழுப்பி எழுப்பி இப்பத்தான் அழுகை வருகிறது.”
ஏகா எழுந்து ஜன்னலண்டை போய் நின்றாள்.
“வானம் இருண்டிருக்கு”
“இந்தமட்டுக்கும் எழுந்தையோன்னா, அதான்!?”
“எனக்கு இரண்டு கண்ணும் துடிக்கிறது.”
“பஞ்சாங்கத்தில் ஒரு சமயம் ஒரு sideக்குத்தான் பலன் போட்டிருக்கிறது. இந்தக் கேஸில் நல்லதும் பொல்லாதும் ஒன்றுக்கொன்று ரத்து. Draw.”
“இல்லை, இரண்டுமேவா?”
அவனுக்குத் திக்கென்றது; எழுந்து உட்கார்ந்தான். நல்லதுடன் சேர்ந்துகூடக் கெடுதலை ஏற்க அவன் தயாராயில்லை.
“என்ன சொல்கிறாய்?” அவன் குரல் சற்றுத் தடித்தே ஒலித்தது.
“எனக்கே தெரிந்தால்தானே?”
“மக்கு! மக்கு!!” திரும்பிப் படுத்துக்கொண்டான். ஏகா கீழே இறங்கினாள்.
அதிசயத்திலும் அதிசயம் அம்மா இன்னும் ஊஞ்சலில் காலை நீட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். லேசாய்க் குறட்டைகூட.
கிணற்றடிக்குச் சென்று அவசரமாய்ப் பல் விளக்கினாள். நாக்கு வழிக்கையில் நாக்கில் தேன் தித்தித்தது. இவ்வளவு பித்தமா? இன்று எனக்கு உடம்பு வசத்தில்தான் இல்லை. நான் இதுவரை உடம்பு என்று படுத்தறியேன். படுத்தால் எப்படியிருக்குமோ? இன்றைக்கென்று வேலை தலைக்குமேல் நிற்கிறது. ஏதோ கல்யாணம் என்று வேலைக்காரி நேற்றே பாக்கு வெச்சுட்டா. அவர் அழுக்கு மண்டிக்கிடக்கு. வண்ணான்துறை திறந்தாதனும், ஆடி வெள்ளிக்கிழமை வேறே மாவிளக்கோடு கொழுக் கட்டையாம். திகைப்பாயிருக்கு. இதுவரை காரியத்தைக் கணக்குப் பண்ணத் தோணியதேயில்லை. வலதுகண் அதிகமாய்ப் படபடக்கிறதோ? என்ன காத்திண்டிருக்கோ தெரியவில்லையே?
முகத்தை அலம்பியும் தூக்க மயக்கம் தெளியவில்லை. தூக்கம்கூட இல்லை. ஒரு தினுசான அழுத்தல்; அதே சமயத்தில் கால் பூமியில் பதியாதொரு மிதப்பு. குஞ்சு, தான் பொரியுந்தருணம் தன்மேல் உணரும் முட்டை ஒட்டின் நெருக்கம். சீட்டின் கலைப்பு. கிணற்றில் தாம்பில் தோண்டி தொங்கும் அந்தரம்.
எங்கு இருக்கிறோம், போகிறோம்?
உடல் தள்ளிற்று.
கும்மட்டியில் கறுப்புப் பூனைக்குட்டி படுத்திருக்கா? “சூ—!” சே, கரிக்கட்டிதான். நேற்றே போட்டு வெச்சது—போட்டு வெச்சேனா? போட்டு வெச்ச ஞாபகமில்லையே! என்னவோ—அதென்ன கரியின் கறுப்பு உயிரோடு மூச்சு விடறமாதிரி அப்படியிருக்கு?
(ஈரம் படாதிருக்க) தகர டப்பியிலிருந்து தீப்பெட்டியை
எடுத்து—
திறந்து
கிழிக்க—
ஓங்கி—
சுடர் சீறிக் குதித்தது.கிழித்தேனோ?
இப்போது சீறினது
என் மண்டையா?
வத்தியின் மருந்துத் தலையா?
எப்படி நான் நெருப்பு வைக்காமலே கும்மட்டி பற்றிக் கொண்டது? சீ! இதென்ன பித்துக்கொள்ளித்தனம்? பற்ற வைக்காமலே பற்றிக்கொள்ளுமா? நான் என்ன, தூக்கத்திலேயே வேலை செய்கிறேனோ? அப்படி ஒரு கோளாறு இருக்காமே!”
—ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தடவையும் இவ்வளவு கணக்குப் பண்ணியா காரியங்கள் செய்கிறோம்? செய்தால் இவ்வளவு காரியங்களா கணக்காகின்றன? டேயம்மாடி? இப்படிக் கணக்கானால், இந்தக் கணக்கு எல்லை யுண்டோ? எல்லைப் படுத்தத்தானே கணக்கே ஏற்பட்டிருக்கிறது! எல்லையில்லாதுக்கும் எல்லை நாட்டும் கணக்கு.
ஒன்றின்மேல் ஒன்று
அடுக்கடுக்காய்
ஒன்பது
தொண்ணுாறு
தொள்ளாயிரம்
90 ஆயிரம்
90,000000
0000000000000000000000000 ஏற்றிக் கோட்டை கட்டி அடுக்க அடுக்க, பாரம் ஏறி, கட்டிடம் தலையாட, அப்பவும் விடாது இன்னும் ஒன்று இன்னும் ஒன்று என்று பாரம் ஏற ஏற மூச்சுப்பட்ட சாக்கில்—
இல்லை, மூச்சுக்கூடப் படாமலே
கட்டிடம் அடியோடு (அடிவயிற்றில் சில் சுறீல்’) கவிழ்ந்தமாதிரி—
கும்மட்டியுள் உற்று நோக்கினாள். கணகணப்பில் முகம் செந்திட்டிட்டது. கும்மட்டியிலிருந்து தீ நாக்குகள் எழுந்து நாய் நாக்குகள்போல் தாவித் தாவி அவள் முகத்தை நக்க முயன்றன. அவைகளுள் ஒரு கொழுந்து மற்றவையினும் சிற்றதாலோ, வேகமும் வெற்றியும் கொண்டதாலோ, குருவிபோல் தோளில் தொத்திக் கொண்டது.
அவள் போதை இன்னும் தெளியவில்லை. தன் தோள் மேல் குந்திய தழல்பந்தை வியப்புடன் நோக்கினாள். ‘கிர்’ ரென்று அவள் உச்சிக்கேறி, அங்கிருந்து பின் மண்டைக்குச் சறுகி, ப்ரபையாய்ச் சுழித்து விரிந்து மலர்ந்தது.
“வே—வே—வேதா!”
அம்மா போட்ட கத்தலில் கூடம் கிடுகிடுத்தது. காலடியில் பூமி அதிர்ந்தது. அந்த அதிர்ச்சிதான் அவளைச் சுயஉணர்விற்குத் தெளிவித்தது. திடீரென ஆயிரம் ஆலய மணிகள் செவியில் அலறின. கோபுரம் ஒன்று சினத்துச் சாய்ந்து உள் கேவி, அவள்மேல் சரிந்து, அதன் தங்கக் கலசம் மாத்திரம். உள்பெருக்கின் அலைச் சிகரம் உடைந்த நுரைச்சரிவில், மல்லாந்த பம்பரம் போன்று சுழன்று தலையாடித் திளைத்தது. மூடிய இமையில், வாயிலுள் வாயில் எண்ணற்ற வாயில்கள் திறந்துகொண்டே,உள் கடந்துகொண்டே சென்றன.
கும்மட்டிமேல் தடாலென முகம் குப்புற விழுந்துவிட்டாள்.
“...........!”
என்னை என் அமைதியில் அழைத்தது யார்?
“...........”
“ஏகா!”
அவள் இமைகள் திறவாது தவித்தன. அவன் கையுள் அவள் விரல்கள் மூழ்கும் பிடியில் கொக்கிபோல் வளைந்து விறைத்தன. கன்னங்களில் ரத்தம் புழுங்கிற்று.
“கண்ணைத் திற!”
“என்னால் முழிக்க முடியவில்லை...”
“இல்லை ஏகா, கண்ணைத் திற; முடியும். உன் கண் நெருப்புப் படவில்லை. ஏகா, நீ கும்மட்டியில் விழுந்தும், மருந்துக்குக்கூட சூடு இல்லை. அதிசயத்தை என்னென்று சொல்ல?”
“நான் என்னுள் என் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன்.”
அவள் குரல் மாறிற்று த்வனியில் அதிகாரம்.
“கண்ணைத் திறவாமல், நீ என்னவோ பேசுவது எங்கிருந்தோ யாரோ பேசுவதுபோல் இருக்கிறது.”
“ஆம், என்னையே எனக்கு அழித்துவிட்ட தூய இருளில் நான் இழைந்துபோனேன். நான் எனக்கே அற்றுப்போன இக்கலவையின் பன்மணத்தில் நானும் ஒரு மணம்.”
சொல் அவள் வாயினின்று எழுகையிலேயே அவளிடமிருந்து ‘கம்’மென்று சந்தனம் கமழ்ந்தது.
“என்னடா சொல்றா? என்னவோ மாதிரி பேசறாளேடா?”
“நான் பாஷையில் தோய்ந்துபோனேன். வாயின் வரம்பு தோற்ற மோனத்தில் தித்தித்த சொல்லில் தோய்ந்துபோனேன்.”
“ஏகா ஏகா!!” அவனைப் பீதி பற்றிக்கொண்டது. அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.
“கண் திறந்தால் ஒளி
மூடினால் இருள்
மூடியும் திறந்தும் உழன்றால் உயிர்
என நானே எனக்குப் பெயர் வைத்துக்கொண்டு செயல் வகுத்த நிலை முந்திய கர்ப்ப வெளியில் நானற்று நிறைந்திருக்கிறேன்.”
“ஏகா!”
“நான் ஏகம்.”
“My God!”
“நான் உன் தெய்வமல்ல. உன் தெய்வம், என் தெய்வம், நான், தான், எனக்கென்று அவரவர்க்கு அவரவர் தெய்வமாய், எத்தெய்வமும் அடியூன்றிய ஆகாச கோசம் நான்.”
“ஏகா, என்னென்னவோ பேசாதே. கண்ணைத் திற.”
“என்னை ஏகத்திலிருந்து பிரிக்க என் இமைகளைப் பிரி. என்னால் கண் திறக்க முடியவில்லை. நான் ஏகமான பின்பு, நானாய்த் தனிப்பட முடியவில்லை.”
அவனைப் பயங்கரம் சூழ்ந்தது. இவை இமைகள் அல்ல. இவை அடைத்த கதவுகள். உள்ளே ஏகா மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறதோ?
அடைத்த கதவையிடிப்பதுபோல், இமைகளைப் பல வந்தமாய்ப் பிரித்தான்.
அவை சுளுவாவே பிரிந்தன. வீணா பயமுறுத்தினாளே என்று அவள்மேல் கோபம்கூட வந்தது. இமைகள் முழுக்கத் திறந்ததும், வேதா அலறினான்.
கண்களில் வெள்ளை விழி வெறிச்சிட்டிருந்தது; கரு விழி காணோம்.
“விழிமேல் மெதுவாய் ஊது. புருவ நடுவை அமிழ்த்தி வருடு—ஆ, அப்படித்தான்!”
“அம்மாடி! ஏகா ஒரு நிமிஷத்தில் கெடுபிடி பண்ணி விட்டையே!”
அவள் கண்களில் ஆயிரம் அடையாளங்கள் தவித்தன. அவனுக்குத் திடீரென்று அர்த்தமற்ற விபரீதமான சந்தேகம், குளத்தில் காலைக் குத்தும் மீன்போல், நினைவைப் பிராண்டிற்று.
இது ஏகாதானா? எப்படியென்று தெரியாமலே, கணத்திற்கும் யுகத்திற்கும் இடைவேளையைக் கால் வாரி விட்டாற்போல்—இது யார்?
அவன் கண்கள் அவள் முகத்தாடும் நிழல்களைத் தொடர்ந்தன. அவள் பார்வை கும்மட்டியைச் சிந்தித்திருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டான், இந்த அனல் நிறமே நெருப்பு மாதிரியில்லை. ஆனால் எப்படி மாறியிருந்தது என்று சொல்லத் தெரியவில்லை. இது என்னைச் சுடும், இவளைச் சுடாது! இதென்ன விந்தை? என்ன பிதற்றல்!
“இதை நான் பற்றவைக்கவில்லை” என்றாள். “இது தானே பற்றிக்கொண்ட நெருப்பு. என் உடலிலிருந்து வந்த நெருப்பு.”
அவனுக்கு வாயடைத்து விட்டது.
“நான் எரிந்துகொண்டேயிருக்கிறேன்.”
அப்படிச் சொல்கையிலேயே, திடீரெனத் தகதகத்தாள். அவனுக்குக் கண்கள் கூசின. அவன்மேல் அனல் வீசிற்று.
“இதோ இது என் ப்ரளயம்!” ஜன்னலுக்கு வெளியே சுட்டிய அவள் விரல் நுனிகளினின்று மின்னல்கள் நீலத்தில் திகுதிகுத்தன. அக்கணமே தாழ்வாரத்தில் மழை இறங்கிற்று. நிமிடத்தில் முற்றம் வழிந்து சொம்பும் தவலையும், முதலிரவு தேய்க்கப் போட்ட பற்றுப் பாத்திரங்களும் தெப்பலாடின.
“நான் என்னுள் புரண்டேன்.”
அவன் கீழ் பூமியதிர்ந்தது.
திடீரென்று அவள் எறிந்த பெருமூச்சினின்று எழுந்த காற்றின் வேகத்தில் ஜன்னல் கதவுகள் இறக்கையடித்துக் கொண்டன. கொல்லையில் தென்னை முறிந்தது. செவிக்கு எட்டிற்று.
“உன் புயல்” என்றான்.
அவள் விழிகளில் கண்ட பயம் தன்னையும் தொற்றிக் கொண்டதும் மாடாய் மிரண்டான். அவள் கன்னத்தில் அவன் அறைந்த அறை, கூடம் அதிர்ந்தது.
“என்னடா?”
அவன் முகம் திரும்பிற்று. யாரோ, ஏதோ மறந்த முகத்தை அடையாளம் கூட்டுவது போன்ற திகைப்பில் கண் புழுங்கிற்று. அம்மா இங்கே இருக்கிறாளா என்ன? என் கட்டிடம் ஏன் இப்படிக் கிடுகிடுத்துப் போச்சு?
ஏகாவுக்கு உடல் ஆடிற்று. அவன் அவளைத் தாங்கி, அவள் தலையைத் தாழ்த்தி, மடியில் வைத்துக்கொண்டான். அவன் விழி பெருகிற்று.
“அம்மா, டாக்டரை அழைத்து வா!”
“ஏகா!”
செவி தூரத்தில் அவள் இப்போது இல்லை.
வெளிப்புலன் எதன் அருகிலும் அவள் இப்போது இல்லை.
தூரங்களை, தூரங்களின் எல்லைகளை அவள் இப்போது கடந்துகொண்டிருந்தாள்.
“——!”
“இப்போது அழைத்தது யார்?”
பேரிட்டு அழைக்கவில்லை. குரல்கூடக் கொடுக்கவில்லை.
எழுச்சி எண்ணமாகி, எண்ணம் வார்த்தைப் படும் இடைவேளையின் தடங்கள் கூட இலாது, தடங்கலின் சிதைவிலாது தோன்றியது தோன்றியபடி தோன்றிய தருணமே தனக்கும் தன்னையழைத்ததற்கு மிடையே பாய்ந்து முறுக்கிய தந்தியே பாஷையாய்—
—தன்னை இப்போது அழைத்தது யார்?
“யாரது?”
அந்த முறுக்கின் உச்சத்தில் அவள் அலறல் அவளுக்கே கேட்கவில்லை.
“யாரது?”
திகில்.
திகிலின் அலைகள் மதில் மதிலாய் எழுந்து அவன் மேல் சரிந்தன.
திகிலின் சுழிப்பு தன் மையத்துள் அவளை உறிஞ்சுகையில், தன் முழுப் பலத்துடன் திமிறினாள்
“ஐயனாரே, கமலசாஸ்தா! என் புகுந்த வீட்டுக் குல தெய்வங்களா!! என்னைக் காப்பாற்றுங்கோ, காப்பாற்—”
—!
“யாரது?”
நான்தான்.
“நான்தான்னா யார்?”
மணிநாக்கு ஒன்று எங்கோ ஓசையில் துடித்து வீழ்ந்தது. தட்டிலாது சுடர் ஒன்று அஞ்சலியில் அவளை வட்டமிட்டு அந்தரத்தில் நீந்திற்று. கம்மென்று அகில் மணம் புகையின்றிக் கமழ்ந்தது.
“நீ யார்?”
புரியவில்லையா?
“புரியவில்லை. எனக்குப் புரிய வேண்டாம். என்னை எங்கு அழைத்து வந்திருக்கிறாய்” என்னிடத்தில் கொண்டு போய் விட்டுவிடு.”
ஏகா, உன்னை நான் அபகரிக்கவில்லை. நீ உன்னிடத்தில்தான் இருக்கிறாய். நான்தான் உன்னிடம் தேடி வந்திருக்கிறேன்.
“இல்லை, என்னை என்னிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடு.”
ஏகா, முட்டையுடைந்து குஞ்சு பொரிந்தபின் உடைந்த முட்டையை என்னால் மறுபடி ஒட்ட வைக்க முடியாது.
ஏகா, நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டே அந்தரம் புகுந்துவிட்டாய்.
“பாபி, உன் எண்ணத்துக்கு நான் மசியமாட்டேன்."
ஏகா, மசிந்தவன் நானே.
“உன் எண்ணத்தில் நீ அழிஞ்சுபோயிடுவே. அழிஞ்சே போயிடுவே, ஆமா, சொல்லிட்டேன்.”
ஏகா, நான் அழியும் பாக்கியம் எனக்கில்லையே!
அவ்வார்த்தையில் தோய்ந்த ஏக்கம், அதன் பிம்பம் எல்லையற்ற துக்கம் அவள் நெஞ்சு கேவிற்று.
“ஏன் அழியமாட்டாய்? நீ கடவுளா?”
கும்மட்டியில் ஜ்வாலைகள் சீறி எழுந்தன.
ஒன்றுடன் ஒன்று நெய்து ஒன்றிக் குவிந்தன.
“ஏன் வாயடைச்சுப் போச்சு? நீ கடவுளா?”
மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விடமாட்டேன்.
“பின் நீ யார்?”
என்னைப்பற்றி என்னென்று சொல்ல?
நான் எண்ணங்களின் அஸ்து.
மனிதன் பிறக்கவும், பிறந்தபின் இறக்கவும் பயந்து, தனக்குத் துணை நிற்க, தன் எண்ணத்தை ஜபித்து, ஜபத்தில் எனக்கு உருவேற்றித்தான் அண்ணாந்த அந்தரத்தில் என்னை ஏற்றிவிட்டான். தன் மரண பயத்தில் எனக்கு நித்தியத்தைத் தந்தான். தன் பத்திரத்திற்கு அவன் நியமித்தபடி, எங்கும் நிறைந்து எல்லையற்று, அப்படியும் அவன் தம்ப முடியா அவன் குறைவின் வடிப்பாய், எங்கும் நிறைந்தும், எல்லை கடந்தும் என் தனிமையில், எனக்கென்று உரிய என் தன்மையில், உயிர்ப்பிண்டமாய் எப்பவும் துடித்தபடி இயங்குகிறேன். உன்னையடைந்ததில் என் விதியின் நிவர்த்தியை உணர்கிறேன்.
“என்ன உளறுகிறாய்? உன்னை நான் கண்ணால் கூடக் கண்டது இல்லை. இப்பக்கூட பயங்கொள்ளியாய் என்னோடு ஒளிந்துதான் பேசுகிறாய். உன் மறைவிலிருந்து வர உனக்குத் தைரியமில்லை. பேச்சென்ன உனக்கு?”
நான் பேசவில்லை. விளங்குகிறேன். மனிதன் என்னை அரூபமாய்ப் படைத்து அதுவே என் தன்மையாகவும் ஆக்கிவிட்டான். ஏகா, நான் உன் ரூப அடைக்கலத்துள் வந்துவிட்டேன். ஏகா, உன்னில் என் அரூபம் அதன் சாபம் களைகிறது. ஏகா என்னைக் காப்பாற்று, என்னை உதறாதே, நீ தந்த இடத்தைப் பிடுங்கிக் கொள்ளாதே! ஏகா நீயே என் கதி ஏகா, ஏகா—!
அவள் நெஞ்சத் தந்திகள் அழுதன. இது அழுதால் நான் ஏன் அழறேன்? புரியாமல் அழுதுகொண்டே, “என்மீது ஏன் வீணா அபவாதம் சுமத்துகிறாய்? உனக்கு எப்போ நான் இடம் தந்தேன்?” என்றாள்.
உங்கள் பாஷையில் நேற்றிரவு.
“உன் பாஷையில் எப்படி நான் தந்த இடம் நேர்ந்தது?”
நேற்று இரவு, ஒரு பிச்சைக்காரன் உன் வாசலில் வந்து நின்றான். ஞாபகம் வந்ததா? அவன் மூணு நாள் பசியில் அவன் கண்ணுக்கு வந்துவிட்ட உசிரில் நான் இருந்தேன். நான் எங்கும் நிறைந்தவன். அப்போத்தான் நீ பானையில் இருந்ததை இலையில் கவிழ்த்துக்கொண்டு—சாதம் குறைஞ்சுபோச்சு. உனக்கே போதாது, நல்ல உடம்பின் நல்ல பசி—உட்கார்ந்தாய். பிச்சைக் குரல் கேட்டதும் அப்படியே இலையோடு ஏந்திவந்து அவன் மடியில் போட்டுவிட்டாய். உன் மாமியார் கூட உன்னை வைதாள்.
“இல்லேம்மா அவன் பசிக்க எனக்கு இரங்காது. அதனால் இது அவன் சோறுதான்; பாருங்கோ அவன் சாப்பிட்டால் என் பசியாறும்” என்றாய்.
ஏகா நீ எனக்கு தரிசனம் ஆனாய். உன் தரிசனம் உனக்குத் தெரி யாது. ஆனால் என் கண்கள் எண்ணற்றவை. என் பார்வை எல்லை கடந்தது. ஏகா, அவன் பசி உன் பசியாய் எப்போ நீ உன்னை மறந்தாயோ, உன்னை இழந்தாய். உன்னை இழந்ததும் உன் தகுதியில் எல்லையற்றுப் பெருகிப்போனாய். அதனாலேயே, உன் விதியாகவே என்னையேந்தப் பாத்திரமானாய். ஏகா, கோபுரத்தைப் பொம்மைதான் தாங்குகிறது.
ஏகா சரணம்
- சரணம் சரணம்
ஏகா சரணம்......
- நீயும் நானும் சேர்ந்தே ஏகம்
நீயிலாது நானில்லை
- நானில்லை...நானில்லை......நானில்லை......
“என்னம்மா நானில்லே நாணில்லே? எந்தத் தப்பை மறைக்கிறீங்க? மாமியாருக்குத் தெரியாமல் பால் ஏடை வழிச்சு முளுங்கிட்டீங்களா?—கொஞ்சம் திரும்பறீங்களா? முதுகைத் தட்டிப் பார்க்கலாம்!”
டாக்டர் குஷிப் பேர்வழி...சின்ன வயதுதான். ஆனால் குடும்ப டாக்டர், தமாஷ் பண்ண அவருக்கு உரிமையுண்டு.
“என்னம்மா முளிக்கிறீங்க? உண்மையைச் சொல்லிட்டேனா?”
“டாக்டர், எனக்கு வைத்யம் பண்ண வந்திருக் கேளா?”
“அப்படித்தான் சொல்லிக்கிறாங்க. இல்லை, முதலில் உடம்பில் கோளாறு கண்டுபிடிக்க வந்திருக்கிறேன். அப்புறம் கண்டு பிடிச்ச நோய்க்கு வைத்யம். நீங்க ஒண்னும் பயப்படாதீங்க, பத்தியம் வைக்கமாட்டேன். என் சிகிச்சையில் பழையது கட்டித்தயிரோடு சாப்பிடலாம்—”
“டாக்டர், என் நோய் உங்கள் சிகிச்சைக்கு மீறினது—”
“அட, உங்கள் சமையல் அவ்வளவு மோசமா என்ன? நான் உங்களுக்கு மாமியாரில்லை. நான் ஒப்ப மாட்டேன். அன்னி ஒருநாள் தித்திப்புச் சேவை தந்தீங்களே, நினைச்சா இன்னும் நாக்கிலே தண்ணி ஊறுது.”
“டாக்டர், முதலில் உங்களை சொஸ்தப்படுத்திக் கொள்ளுங்கள்.”
“ஏது, மாமிகிட்ட விஷயம் ரொம்ப இருக்கும்போல இருக்குதே!—நாக்கை நீட்டுங்க—”
“டாக்டர், உங்கள் மனைவி நிரபராதி!”
டாக்டர் உடல் குலுங்கிற்று. விழி தெறித்துவிடும் போல் பிதுங்கிற்று. -
“டாக்டர். நான் சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் மனைவி நிரபராதி. அவளை அழைத்துவந்து குடித்தனம் நடத்துங்கள். அவள் வெள்ளை.”
“நான்—நான—”
“நீங்கள் சொல்ல வருவது எனக்குத் தெரியும். யாருக்குமே தெரியாது. நீங்கள் பூட்டி வைத்திருந்த உங்கள் பத்துவருஷ ரகஸ்யம் எனக்கு எப்படித் தெரிந்தது? டாக்டர், நான் பந்தமறுந்த அந்தரத்தில் தொங்குகிறேன். பூமியின் வளைவு மட்டுமல்ல, கோளம் அந்தரத்தில், அதன் அச்சில் திரும்புவதே எனக்குத் தெரிகிறது. காலமெனும் உரை என்னின்று கழன்று விழுந்தது. உங்களுக்குத்தான் வருடம், வயது, முன், பின், இரண்டின் நிழல் தட்டிய இப்போ எல்லாம், எதுவும் எனக்கு நிமிஷம் என்ற நியமனத்தின் உப்பல்தான். ‘புஸ்’ஸென்று ஊதின பலூன் —டப்! உங்கள் நெஞ்சின் ஏடுகள் என் கண்ணெதிரே புரள்கின்றன. ஆகையால் டாக்டர், முதலில் உங்களை சொஸ்தப்படுத்திக் கொள்ளுங்கள்.”
அவர் விழிகள் துளும்பின. “நான்—நான்—”
“டாக்டர்! விளக்கம் ஏதும் எனக்கு வேண்டாம். உங்கள் மனைவி வெள்ளை, உங்களுக்கே அது தெரியும். ஆனால் வரட்டுக் கௌரவத்தில் வருடங்களை அளந்து கொண்டு நீங்கள் குவிக்கும் சுமையில் நசுங்கிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அளக்கும் படியில் ஒரு தரமேனும் அட்சதையிருக்கட்டும்; பிடி நெல்தான் வயலாய் விருத்தியாகிறது. வெறுங்கையின் வீச்சில் விதை விழுந்துவிடாது. ஆகையால் யார் யாரை மன்னிக்கிறீர்களோ, ஒன்று சேருங்கள். அதுதான் நியாயம், நியதி, முக்கியம்.”
“Oh, My God!”
“டாக்டர், உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவர்க்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள். என் கணவரை எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்த்த வீட்டு விநோதாவுடன் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். பாவம்! அவர் முகம் குங்குமமாய்க் கொதிக்கிறது பாருங்கள். ஒருவரை யொருவர் ஏமாற்றி, ஒருவரை யொருவர் மீன் பிடிக்கிறார்கள்—”
You have given your wife a shock. என்ன நடந்தது?”
“டாக்டர், நானே சொல்கிறேன், செயலளவில் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை, எண்ணமும் செயலே என்பது தவிர. ஆண்டவனின் புன்னகை இன்னதென்று புரியவைக்க உதாரணம் காட்டினேன், அவ்வளவுதான்.”
அவள் கண்கள் மூடின. நெற்றியில் வேர்வை முத்திட்டது.
“டாக்டர், என் மனைவிக்கு உடம்பு என்ன?” அவன் குரல் நடுங்கிற்று.
ஏகாவின் முகத்தின்மேல் டாக்டர் வைத்த விழி மாறவில்லை. எழுதினாற்போன்று முகம் அசைவற்று அமைதியில் பிதுங்கிற்று.
“I don't know. இவங்க இதயத்தையும் சுவாசப் பையையும் இரும்பால் அடிச்சுப் போட்டிருக்குது. உடல் ஆரோக்யம் அதுவே ஒரு அதிசயம்போல் Plusஇல்தான் இருக்குது. ஆனால் அவங்களே சொன்னமாதிரி, என்ன தான் கண்டுபிடித்தாலும் நமக்குத் தெரியாது இன்னும் எத்தினி எத்தினியோ!”
“டாக்டர், என்ன செய்யலாம்?”
“வேணுமானால் தூக்கத்திற்கு ஊசி போடறேன். எழுந்தால் எப்படியிருக்காங்க பார்க்கலாம்.”
கும்மட்டியில்
செந்தாமரை விரிந்தது.
ஆயிரம் தழல்கள்
ஆயிரம் இதழ்கள்
மலர் நடுவே தணல் கனிவு
நிர்மல நீராய்
தேங்கி நின்றது.
“பா! பா!! பா!!!”
மேயப்போயோ, அறுத்துக்கொண்டோ, கொட்டிலில் வந்து சேராத மாட்டையோ, கன்றையோ தேடிக் கொண்டு, தெருவில் எவனோ குரல் கொடுத்துக்கொண்டு செல்கிறான்.
அறையில் சூழ்ந்த அந்தியிருளில், அக்கூவல் அவளை எட்டுகையில், அதன் அந்தரங்கம் ததும்பும் கொஞ்சல், கடலோரம் நடுநடுங்கும் அலைநுரையில் மிளிரும் சோகம், ஜனிப்பின் திகப்ரமையினின்றே இழுத்த பாகு போன்ற தாபம், உள் நினைவில் தோய்ந்ததும், திரவம் தன்னை யேந்தும் ஏனத்தின் வடிவையடைவதுபோல், இத்தனை வேதனைகளும் ஒருங்கே சேர்ந்து உருப்பெற்றதோர் அலை வீங்கிய திடீர் வேகத்தில், உடல் அதிரப் பெருங்கேவல் தொண்டையிலிருந்து கிளம்பி, ஏகா திடுக்கென விழித்துக் கொண்டாள்.
—!
“ஐயோ, நீயா?”.
ஏகா, நான் எங்கும் போகவில்லை.
“ஏன்? ஏன்?? ஏன்?? உனக்கு வேறு இடம் இல்லையா? என் தலையில்தான் உன் சீட்டு விழணுமா?”
ஏகா, சீட்டேது? குலுக்கல் ஏது? இது விதி, இது உன் வேளை. இவ்வேளையை, இந்த ஜன்மத்தின் பிறப்பு இறப்பின் இடைவேளை கொண்டே அளவிடுதல் அல்ல. இது நேர, அந்தரத்தின் அடைகாப்பில் எத்தனை ஆயிரம் ஆயிரம் வருடங்கள் இருந்தாயோ? நானே அறியேன், நானும் அவ்வழிதான்.
“நான் ஒரு பாவத்தையறியேன், என் பாட்டுக்கு இருந்தேன். கடவுள் என்று நின்று நினைக்க என் வேலையும் ஜோலியும் எனக்கு நேரமுமில்லை ஹேதுவுமில்லை. காலையும் மாலையும் விளக்கை யேற்றி, நெற்றியை ஒரு தரம் தரையில் முட்டிக்கும்போதுகூட:
‘அடுப்பில் சாதம் மிளிந்து வரதே!
பால் பொங்கிடுத்தோ?
குழம்புத்தான் வெந்ததோ?
அவருக்கு டிபன் சூடாயிருக்கோ?’
இதுதான் கவலை. உன்னை நினைத்தேனா? ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறாய்?"
ஏகா, உன் பெருமையை நீ அறியாய். அதுவேதான் உன் தகுதி. உன் நினைப்பே அற்றுப்போனாய், உன்னில் நீ நிறைந்தாய். நானும் உன்னுள் அடங்கினேன். ஏகா, பூக்கள் மணப்பதற்காகப் பூக்கவில்லை. தம் இயல்பில் பூக்கின்றன. அதனால் மணக்கின்றன. நீ என்னை நினைத்தால்தான் நான் இல்லை. இருந்துகொண்டேயிருக்கிறேன். வேளை வந்ததும் வெளிப்படுகிறேன். இது என் விதி.
“வேண்டாம், வேண்டாம்!” எனக்கு தலை சுத்தறது.
“ஏகா தூங்கறையா?”
“யாரது? ஒ நீங்களா—ஊ—ஹு—ம் விளக்கைப் போடாதேங்கோ, இங்கே வாங்கோ.”
“ஏகா, காலையிலிருந்து ஒரு பருக்கைக்கூட நீ முகர வில்லையே!”
“எனக்கு ஒன்றும் வேண்டாம், எனக்குப் பசியேயில்லை. உங்கள் பசிதான் எனக்கு இப்போ. கிட்ட வாங்கோளேன். என்னை அனைச்சுக்கோங்கோளேன் இறுக—இன்னும்—ஊஹும் நீங்கள் என்மேல் படவில்லை.”
“ஏகா, உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?”
“நாம் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவருக்கொருவர் எட்டாயிரம் மைல் எட்டியிருக்கிறோம்.”
அவளிடமிருந்து சிரிப்பு பீறிட்டது. க்றீச்சிட்டு அலை பாய்ந்த அதன் உருட்டு, கண்ணாடிவிரியன் போன்ற நெளிவு, இருளில் பளபளத்தது.
“ஏகா, ஏன் சிரிக்கிறாய்?”
அவள் சிரிப்பு சட்டென அடங்கிற்று.
“ஏகா, உன்னைக் கடவுள்தான் காப்பாற்றணும்.”
“சரியாப்போச்சு. அவன் என்னிடம் அடைக்கலம் கேட்கிறான்; நான் அவனுக்கே தாய் ஆகிவிட்டேன். தாய் என்று சொன்னதுமே என் மார்பு சமுத்திரமா பொங்கிப் போச்சு. தொட்டுப்பாருங்கோ. என் ரவிக்கை தெப்பமா போச்சு. அம்மா என்னடான்னா என் வயிறு ஏன் கல்லாயிருக்குன்னு கேக்கறா வேடிக்கையாயில்லே? எனக்கு சோல் தாங்கல்லே சொல்லைச் சொன்னதுமே அதுவாயிடறேன். தாய் என்றாலே தாயாகிவிடுகிறேன். அந்தரத்தின் தாதுக்கள் அத்தனையும் என்னில் நீந்து கையில் என் தாது என்று எது தனியாய், டாக்டருக்குப் பிடிபடும்? என் அடைப்பு உடைஞ்சுப் போச்சு. தெரியறதா? எனக்கு நானில்லை. உங்களை ‘உன்னை’ யென்கிறேன். இந்த ஜன்மத்தில் நீ என் கணவன். ஆனால் இதற்கு முன் எத்தனையோ பிறவிகள் உங்களை, நான் பெற்ற வாசனைகள், காலம் கடந்து என்மேல் வீசுகையில், எதிர் பொங்கும் தாய்மையில் மரியாதைகள் கவிழ்ந்து போகின்றன. ஏன் கையை இழுத்துக்கறேள்?”
“ஏகா, உன்னைப் பார்த்தால் பயமாயிருக்கிறது.”
“பயப்படாதே பாப்பா, அம்மா இதோ இருக்கேனே, என்ன பயம்? பெண்ணாய்ப் பிறந்தாலே தாய்தான்.”
சற்றுநேரம் இருவரும் மௌனமாயிருந்தனர்.
“ஏகா! தூக்கமா?”
“எனக்குத் தூக்கமேது?” அவள் பதில் அவள் உள் எங்கிருந்தோ வந்தது. “சதா விழித்துக்கொண்டிருக்கிறேன். என் விழிப்பில் இமைப்புகூட இல்லை.”
“ஏகா, எனக்கு என்னென்னவோ தோன்றுகிறது. உன் கண் குஹை விழுந்திருக்கிறது; குஹையில் பாம்பு படுத்திருக்கிறது.”
“வாழும் பாம்பு.”
“வாலும் தலையாய், இரு விழிகளிலும் இருதலைகள் எட்டிப் பார்க்கின்றன.”
“காலைச் சுற்றின பாம்பு.”
என்னைக் கடித்த பாம்பு.
கடித்து என்னை விழுங்கிவிட்ட பாம்பு
“ஏகா நீ இன்று கும்மட்டியில் ஏற்றிய நெருப்பு இன்னும் எரிந்துகொண்டேயிருக்கிறது.”
“என் நெருப்பு.”
“அம்மா என்ன அனைத்துப் பார்த்தும் முடியவில்லை. ஜ்வாலைகள் சீறுகின்றன!”
“என் நெருப்பு.”
“ஏகா! நாம் இனியும் பழையபடி இருக்கமுடியுமோ! அந்தரங்கம் அழிஞ்சுபோச்சே!—”
பதில் இல்லை.
“ஏகா? ஏகா?”
“யாரது?”
“.........”
இறுக மூடிக்கொண்ட விழிமுகட்டின் வளைவின்மேல் ஒரு பம்பரம் பெரிதாகிக்கொண்டே தோன்றிற்று. அது சுழன்ற வேகத்தில் அது தூங்கிற்று. அதைச் சுற்றி இருள் மின்னல்கள் கடைந்தன.
“போய்விடு! என்னை விட்டுப் போய்விடு!—”
மோனாகாரம் அவள்மேல் இடிந்தது.
என்னை எங்கே போகச் சொல்கிறாய்? நான் இல்லாத இடத்தைக் காட்டு, நான் போக!
“உன் தனிமைக்காக என் தனித்தனத்தை நான் இழக்கவே மாட்டேன்.”
இனி உனது என்பதேயில்லை. எல்லாம் என்னதுதான்.
பம்பரத்தின் விசுவரூபம் பார்வை முற்றிலும் அடைத்து பம்பரத்தின் உரு அதில் மறைந்தது. அவள் இப்போது உணர்ந்தது அதன் வேகம்தான். அவள் கெட்டியாய் பற்றிக்கொண்டிருக்கும் தனியுணர்வைத் தன்னோடு அடித்துச் செல்லும் அம்பர வேகம்.
“மாட்டேன் மாட்டேன் மாட்—”
கும்மட்டியில் நெருப்பு படபடவென வெடித்தது. கூடம் முழுதும் பொறிகள் சிதறின. கணத்தில் தணல் கருகிற்று. -
அம்மா மாடிக்கு ஓடி வந்தாள். விளக்கைப் போட்டாள்.
ஏகாவை அணைத்த அணைப்பினின்று அவன் முகம் நிமிர்ந்தது. அவன் விழிகள் பெருகின.
“ஏகா போயிட்டாம்மா.”
“அவளைக் கீழே விடு.”
ஏகாவின் கண்களில் தேங்கிய துயரம் ஸகிக்க முடியவில்லை. அம்மா, கண்களை மூடினாள்.
“வேதா, ஏகா போகவில்லை. ஏகத்தில் கலந்துவிட்டாள். அவள் இப்படி இருப்பதைவிடப் போனதே மேல். அவளுக்கே நன்மை வேதா, நம் குறைகள்தாம் நமக்கு ஆதாரம், நம் துணை.”