உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலி/காயத்ரீ

விக்கிமூலம் இலிருந்து


காயத்ரீ


திடீரெனப் புதுவிதமாய் எனக்குக் கண்கள் திறந்தாற் போலிருந்தது. விழிமேல் படர்ந்த மெல்லிய சதையைப் பிய்த்தெறிந்தாற்போல். இமையோரங்கள் உட்புறம் அவ்வளவு வலித்தன. தலையை உதறிக்கொண்டேன். ‘விர்’ரென மாலைக் காற்று விழியோரங்களின் உள்பாய்ந்து கண்கள் திடீரெனச் சில்லிட்டன.

கதிர்கள் காற்றில் அலைந்தன. தென்றலின் ஒவ்வொரு மோதலிலும் அவை நீண்ட பெருமூச்செறிந்தன. அவை ஏதோ எனக்கோ தமக்கோ சொல்ல முயன்றன. புரியாதவொரு இன்பக்கிலேசம் என் மார்புள் அமிழ ஆரம்பித்தது. பெருமூச்சுடன் புத்தகத்தைக் கீழே வைத்தேன். ஏடுகள் படபடவென அடித்துக்கொண்டன. அவையும் ஏதோ சொல்ல முயன்றன.

அதே வயல்கள் தாம். அதே பச்சைக் கதிர்கள்தாம். அதோ தூரத்தில் ஏற்றத்தை இறக்கிக் கட்டிய உறை கிணறுதான் இப்பவும். ஒருவரும் அதைத் தூக்கிக்கொண்டு போய்விடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோ முறையில் மாறியிருந்தன. திடீரென ஏதோ ஒரு மந்திரக்கோல் பட்டு, உயிர்பெற்று மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன.

இருந்தாற்போல் இருந்து கதிர்களின் பச்சைகளினிடையில் வெள்ளை அசைவுகள் ஒருமித்து ஒன்றே ஆகி அவ்வுயிரின் உரு தன்னிரு பக்கங்களிலும் இரு வளைவுகளைக் கற்பித்து விரித்துக்கொண்டு கிளம்புகையில், ஒரு பட்சியின் வடிவமாய் அந்தரத்தில் பிதுங்கியது. கீழே உதைத்துக்கொண்டு அது அப்படிக் கிளம்பிய வேகமும் அழகும் என்னுடல் புல்லரித்தது. அதை எதிர்த்துக் கொண்டு என் நெஞ்சம் நெஞ்சுக்குழிவரை எழும்பித் “தடால்” எனத் தன்னிடத்தில் வீழ்ந்தது.

ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே கழற்றி எறிவதுபோல் ஒரே வளைவில் அது எழும்பிய வேகத்தில், நீல மெத்தையில் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜ்வலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன.

“என்ன செய்யப் பாக்கறேள்?”

நட்சத்திரங்கள் சொரிந்தாற் போன்ற சிரிப்பு. திரும்பினேன். இரு தோள்களிலும் இரண்டு பின்னல்களைத் தொங்கவிட்டுக் கொண்டு யோக வேஷ்டிமாதிரி ஒரு பையை மாட்டிக்கொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் சிரிப்பில் அவள் மூக்குத்தண்டு புருவ மத்தியில் சுருங்கிற்று. அவளை யாரென்று நான் அறியேன். என் உடலின் பரபரப்பில் எனக்கு அப்பறவையின் லாகவம் தவிர வேறேதும் புரியவில்லை.

“பார் பார், அதோ பார், வானத்தில் வைரப்பிடி போட்ட கத்தி மின்னுகிறது பார்!”

ஒரு கையைப் புருவங்களுக்குமேல் நிழலுக்கு வைத்துக் கொண்டு அவள் அண்ணாந்து நோக்கினாள். மொக்கவிழ்ந்தாற்போல் அவள் வாய் சற்றுத் திறந்தது.

ஆனால், நாங்கள் அதைக்கண்டு அதிசயித்து கொண்டிருக்கையிலேயே திடீரென அது கதிகலைந்து நிலை தவறியது. அதன் இறக்கைகள் செயலிழந்தன. சட்டெனப் பூட்டு விட்டுத் தளர்ந்தன. அப்படியே கர்ணம் அடித்துக்கொண்டே வெகு வேகமாய்க் கீழிறங்கி மொத்தாகாரமாய்ப் ‘பொத்’தென என் மடியில் வீழ்ந்தது.

நான் “ஓ”வென அலறினேன். என் கைகள் வெட வெடத்தன. என் விரல்கள் தற்செயலாய் அதன் மார்பில் சற்று அழுந்தின. அவ்விதயத்தின் கடைசித் துடிப்பு அப்பொத்தான் அந்த உடலை விட்டுப் பிரிந்துகொண்டிருந்தது பிராணனின் கடைசிப் பிரயத்தளத்தில் அதன் பார்வை என்மேல் நிலைக்க முயன்றது. அக்கண்களில் தவித்த ஆச்சரியத்தையும், சோகத்தையும் வலியையும் நான் மறக்கவே முடியாது. அதன் உடல் ஒரு குலுங்கு குலுங்கிப் புரண்டது. உடனே கட்டையாகிவிட்டது. உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூய வெண்மை. அதன் துடிப்பிழந்து அந்த வெண்மையை வெறிச்சென்று என் மடியில் நான் உணர்ந்ததும் ஒரு பெருங்கேவல், பட்டையை உரிப்பதுபோல், என்னை ஊடுருவிற்று. அந்த உடலை அப்படியே என் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன். அதன் உடல் மெத்தென என் மார்பில் அழுந்திற்று.

அவள் என் தோளைத் தொட்டாள்.

“அம்—ம்—மா” என் துக்கம் உடைந்நது.

இருள் மடிகள் வயல்களிலும் வைக்கோல் போர்களிலும் என் மேலும் விழுந்தன.

அப்புறம் எனக்கு என் நினைவு இல்லை.

***

எனக்குப் படுக்கையில் இருப்புக் கொள்ளவில்லை.

நான் எழுந்து நடமாடலாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே டாக்டர் அனுமதித்துவிட்டார். ஆனால், அம்மாவுக்கு மனம் வரவில்லை. எனக்கும் உடல் பலஹீனமாாய்த்தான் இருந்தது. ஆனால், இருப்புக் கொள்ளவில்லை. துப்பட்டியைத் தள்ளிக்கொண்டு உட்கார்ந்தேன்.

என் நிலையே எனக்கு இன்னமும் சரியாய் விளங்கவில்லை. தூரத்து மேகம்போல் மறதிப்புழுதி படர்ந்து கொண்டே அழிந்துகொண்டிருக்கும் சில கோடுகளோடு ஞாபகங்கள் நினைவுத் திட்டில் எழும்ப முயன்றன.

பட்சி என் மடியில் வீழ்ந்து செத்து ஒரு மாதமாகி இருக்கும். அன்றிரவிலிருந்து எனக்குக் கடுஞ்சுரம். அப்பா தான் என்னை வயல் புறத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்ததாக அம்மா சொன்னாள். அன்றிலிருந்து கண்ணுந் திறவா கடுஞ்சுரம். இப்போத்தான் ஒரு வாரமாய்ச் சற்றுக் குணம்.

எனக்கு ஜூரம் வருவானேன்? புரியவில்லை. சற்று யோசனை செய்தாலும் யோசனையே அசதியாயிருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். இரு தோள்களிலும் பின்னல் வழிய, சற்றே தலையவிழ்ந்த மொக்குப் போன்று சற்றுத் திறந்த வாயுடன் ஒரு முகம் தோன்றிற்று. இப்பொழுதுதான் கவனித்தேன். அவள் மூக்கு எவ்வளவு கூர்மையாயிருந்தது!

“வால்மீகி, யாருடா அந்தப் பெண்? அதுதாண்டா வந்து சொல்லத்து, நீ வயல் மேட்டுலே மூர்ச்சையாய்க் கிடக்கேன்னு. இதுவரை மூணுதடவை உன் உடம்பை விசாரிக்க வந்தாள். மூணுதடவையும் நினைப்பில்லாமல் கிடந்தே, இல்லை தூங்கிண்டிருந்தே. அவள் எப்படிடா அப்படித் தினம் ஒரு தினுசா உடுத்திண்டு வராள்? அவாத்திலே அவ்வளவு துணிமணியிருக்குமா என்ன? ஆனால் எப்படி உடுத்துண்டாலும் அவளுக்குப் பாந்தமா இருக்கு, சிலபேர் உடல் வாகு அப்படி.”

ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். அந்தி வர்ணங்கள் தோட்டத்தில் தோய்ந்துகொண்டிருந்தன. கிணற்றடியில் சின்னான் கழுத்துக்குக் கீழ் குளித்துவிட்டு உடம்பைத் துடைத்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஜன்னலண்டை வந்தான்.

“என்னா சாமி ஒடம்பு எப்படி? எங்க வவுத்தே நல்லா ஒரு கலக்கு கலக்கிட்டையே! உன்னைக் கட்டையாட்டமான்னா தூக்கிட்டு வந்தோம்! நான் அப்பவே சொன்னேனே! ‘இந்தமாதிரியெல்லாம் சின்ன அய்யாவை இந்தமாரிதி வேளையிலே தனியா உலாத்தவிட்டா இந்த மாரிதிதான் முடியும்னு. நீங்கள்ளாம் ரொம்ப ரொம்ப படிச்சவங்களாயிருந்தாலும் இந்தமாதிரி விசயங்களுலே நாங்க சொல்றதே மிஞ்சக்கூடாது சாமீ’ இது ஒரு காத்து சம்மந்தம். இப்படித்தான் என்னப்பனை ராவெல்லாம் தேடிட்டு வெள்ளி வேளைக்கு ஒரு வயலுலே, அறுத்த முளைமேலே, குப்புற விழுந்திருச்சிக் கிடந்தாரு. வாயாலும் மூக்காலும் ரத்தத்தைக் கக்கிட்டு; நெஞ்சிலே மூச்சு முரடுது; மேல்மூச்சு வாங்கிட்டு அப்போ சொன்னாரு ‘சின்னான் டேய்! கருப்பஞ் சோலைக்கு வடவண்டை களத்துமேட்டுலே கையெழுத்து கலையற வேளையிலே தனியாப் போவாதேன்னு”

ஏதோ எனக்கு மாத்திரம் பக்கத்துச் சுவருக்குக்கூடத் தெரியாதபடி சொல்லும் முறையில் இன்னும் சற்று நெருங்கி வந்தான்.

“இதோபாரு சாமி, பாத்தியா என் கழுத்துலே இந்த கல்லுக் கட்டியிருக்கே இது ஒருத்தருக்கும் அகப்படாது; இதைக் கட்டிட்டு நீ வெளியிலே கிளம்பிட்டா, எந்தக் காத்து, மோகினிகூட உன்கிட்டே ஒண்னும் ஆட்டிக்க முடியாது.

அவன் ‘மோகினி’ யென்றதுமே கறுப்புடுத்தி ஒரு உருவம் என் கண்முன் எழுந்தது. கறுப்புப் புடவையோரத்தில் வெள்ளி ஜரிகை.

சட்டெனச் சின்னான் பேச்சில் எனக்கு அலுப்புத் தட்டிற்று. அவனைப் ‘போ’ என்றுகூடச் சொல்லாமல், தலையணையில் சாய்ந்தேன். குழந்தை மூச்சுப் போன்று மெலிந்த காற்று இமையோரங்களுள் புகுந்து விழிகள் குளிர்ந்தன.

அப்போது குழந்தையடிகளில் கொஞ்சும் சதங்கை போல், தந்தி நாதங்கள் திருட்டுத்தனமாய் அடிமேல் அடிவைத்து ஒன்றன்பின் ஒன்றாய் நயத்துடன் துளித்துக் கொண்டே செவிவழி புகுந்து என் உள்மார்பில் பாகாய் வழிந்தன. நான் கட்டிலிலிருந்து இறங்கினேன். நாதங்கள் அழைத்த வழியே பின்தொடர்ந்து சென்றேன்.

அறையில் அம்மா விளக்கைக்கூடப் போட்டுக் கொள்ளவில்லை. மங்கி மறையும் அந்தி வெளிச்சத்தில் அவள் உருவக் கோடுகள் மாத்திரம், மாலைக் காற்று தன்னில் தானே ஸன்னமாய் எழுதிக்கொண்ட சித்திரம் மாதிரித் தெரிந்தன. குனிந்த தலையுடன் தன் வாசிப்பில் லயித்திருந்தாள்.

அவள் வாசிப்பில் கீர்த்தனையின் அடையாளமோ, தீர்மானமாய் ராக ரூபமோ தெரியவில்லை. அவள் சிந்தனையின் அருவிதான் புறப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்திரமற்று வளைந்து வளைந்து, தங்கித் தயங்கித் தளர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. சிறு அரவத்திலும் காற்றிலே கரைந்துவிடுவாள் போன்று அம்மா உருவம், அந்த நிலையில் அவ்வளவு நளினமாயிருந்தது.

அம்மா என்னைப் பார்த்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகத்தின் மலர்ச்சியை இருட்டில் நான் காணமுடியவில்லை. ஆயினும் அவள் உள்ளுவகையின் மணம் என்மேல் அலை மோதிற்று.

உள்ளே வந்து உட்கார்ந்தேன். அம்மா பெருமூச் செறிந்தாள். மன நிறைவின் அசதியோ? ஏனோ தெரியவில்லை, வீணையைக் கீழே இறக்கினாள். ஆனால், அந்த வேளையின் சுருதி கலையவில்லை. அதைக் கலையாமல் காப்பதற்குத்தானோ, அவள் விரல்கள் மாத்திரம் தந்திகளைச் சுண்டிக் கொண்டிருந்தன. நாதலாகிரி எங்களைச் சூழ்ந்தது.

“அம்மா...”

“அம்மா, சப்தங்கள் மகரந்தப் பொடிகள், காற்றிலே மிதந்து வந்து என்னை இங்கே இழுத்தன” என்றேன்.

அவள் கண்கள் கீழே விழாத கண்ணீரில் பளபளத்தாற்போல் எனக்குத் தோன்றிற்று. இடக்கையால் என்னைத் தன்பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டாள். வலக்கை தந்தியை மீட்டியபடி இருந்தது. நான் ஒரே பிள்ளை. செல்லப்பிள்ளை. எப்பவும் அவள் குழந்தை.

“அம்மா நீ என்ன வாசிக்கிறாய்?”

“நான் என்னத்தைக் கண்டேன்?” கையை விரித்தாள். “வாசிக்கணும்போல் தோணித்து வாசிக்கிறேன். இன்னிக்குத்தான் கை ஒழிஞ்சுது.”

“அம்மா நீ வாசித்து ரொம்ப நாளாயிற்று.”

“அம்மா யோசனையாய், தந்திகளடியில் தங்கியிருப்பதாய் நினைத்துக்கொண்ட புழுதியை ஊதினாள். அந்த வீணையை அம்மா தன் கலியான வரிசைகளுடன் தன் பிறந்தகத்திலிருந்து கொண்டுவந்திருந்தாள். அவள் தகப்பனார் ஒரு சிறந்த வைணீகர். அந்தக் குடும்பமே சங்கீதப் பரம்பரை

“அம்மா நீ என்ன வாசிக்கிறாய்?”

அம்மா மறுபடியும் வீணையைத் தன்மேல் தாங்கிக் கொண்டாள். ஸ்வரக் கட்டுகளைச் செல்லமாய் தடவினாள். கன்றைக் கண்டதுமே தாயின் முலைக்காம்பில் துளிக்கும் பால்போல் ஒசைத்துளிகள் முத்து முத்தாய் மெத்து மெத்தென எழுந்தன.

“நான் என்னத்தையோ நினைச்சுண்டேன்.”

அவள் குரல் உள்ளடங்கிப் போயிற்று.

மாவிலைகள் சலசலத்தன.

“அம்மா நான் சிறந்த பாடகனாகப் போகிறேன்—”

மாமரத்தில் ஒரு பட்சி “கிள்கிள்” என்றது.

உள்வலியில் அவள் குரல் சுளித்தது.

“நீ பாடகனானால் எனக்கு ஒண்னும் அதிசயமில்லே.”

“ஏன்?”

“உனக்குக் குரல் இருக்கு, ஞானமும் இருக்கு. என் வழி வாசனையுமிருக்காதா? ஆனால், அப்பா உன்னை விட மாட்டார்.”

“ஏன் ?”

“அதில் பிழைப்பில்லை.”


“இல்லாவிட்டால் போகிறது. இஷ்டம் இருக்கே!”

“இஷ்டம் இருந்தால் மாத்திரம் போதுமா?”

“இந்தமாதிரி விஷயங்களில் இஷ்டம்தான் பெரிசு.”

“வால்மீகி, அப்பா சொல்றது சரிதான்.”

“என்னது அம்மா?”

“வால்மீகி, அப்பா உன்னை விடமாட்டார்.”

“ஏன்?”

“ஏன்னா, நீ என்னைக்கொண்டு பிறந்திருக்கே.”

அவள் மனம் நிம்மதியிலாது அலைந்துகொண்டிருந்தது, அவள் வாசிப்பிலேயே தெரிந்தது. விரல்களினடியில் இருந்து ஸ்வரங்கள் துரிதமாய்ப் புறப்பட்டன. கூட்டுக்குள் கூட்டமாய் அடைபட்டு அலையும் சிட்டுக்குருவிகள்போல் அவை தவித்தன.

“அம்மா நீ என்னத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”

“ம்—ம்—ம்?—”

“அம்மா நான் கேட்கிறேன், நீ என்னத்தை. நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”

“உன்னைத்தான்னு வெச்சுக்கோயேன்.”

என் கன்னத்தை விரல் நுனிகளால் தொட்டாள்.

“என்னைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”

“என்னடா கண்ணா இன்னிக்கு என்னை இப்படிப் படுத்தறே?”

“என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று நான் தெரிந்துகொள்ளக் கூடாதா?”

“நீ எனக்கு உண்டானதை நினைச்சுண்டேன்—”

அவள் அப்படிச் சொல்லும்பொழுதே, ஜன்னலுக்கு வெளியே மாமரத்தை உதைத்துக்கொண்டே அடி வானத்தில் ஒரு நட்சத்திரம் உதயமாயிற்று. ஒரு பெரிய கற்கண்டு கட்டியளவுக்கிருக்கும். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகையால் அவள் வார்த்தைகளின் சப்தங்களை மாத்திரம் வாங்கிக்கொண்டேனேயொழிய அவளைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவில்லை.

“உ—ம்—ம், என்னம்மா சொன்னாய் நான் கவனிக்கவில்லை—”

“நீ உள்ளே வந்ததும் என்னவோ சொன்னயே என்னது?”

“எனக்கு நினைவில்லையே—”

“சப்தங்கள் என்னவோ மகரந்தப் பொடிகள்னு—அது நன்னாயிருந்தது, நீ சொன்ன தினுசு—”

“எனக்கு வெட்கமாய், ஆனால், பெருமையாயிருந்தது, நான் வால்மீகியோன்னோ—”

“வால்மீகி நான் ஒரு அசடு—”

முன்பின் சம்பந்தமிலாது அம்மா அப்படித் தெரிவித்ததும் எனக்குக் ‘கிளுக்’கென்று சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் அவள் சிரிக்கவில்லை.

“எந்த அசடு சொல்லித்து அம்மா அசடுன்னு?”

“நான்தான் சொல்றேனே. நான் அசடுன்து அவள் குரல் நடுங்கிற்று. ஆனால் அதில் ஒரு தீவிரமான தெளிவு இருந்தது. அதைக் கேட்டதும் என் சிரிப்புப் பறந்தோடிப் போயிற்று.

“இல்லை அப்படியெல்லாம் சொல்லாதே அம்மா”—

“நான் அசடு அசடு அசடு அசடு அசடு”—

வெறி பிடித்தவள்போல் கத்தினாள். அவள் குரல் ஏறிக்கொண்டே போய் உச்ச ஸ்தாயியில் ஒன்பது சுக்கல்களாய் உடைந்தது. கோரமான அழுகையுடன் தடாலென்று வீணைமேல் விழுந்தாள். தந்திகள் வீறிட்டன.

“அம்மா அம்மா அம்மா...”

அவள் நெற்றிப் பொட்டு கொதித்தது. எனக்கு அவள் பதிலளிக்கவில்லை. வாத்தியத்தின்மேல் குப்புற விழுந்த படியே விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள்.

நான் வயலில் கரும்புக் கன்றுகளுக்கிடையில் நின்று கொண்டிருந்தேன். தலைக்குமேல் கருப்பந்தழைகள் முன்னும் பின்னும் அடர்ந்து ஓங்கி மறைத்தன. அங்கு ஒளிந்து என் மனச் சஞ்சலத்தை மறக்க முயன்றேன்.

அப்பொழுது குழலின் ஓசை என்னை அழைத்தது. பட்டுப் பூச்சியின் இறக்கைகள்போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக்கொண்டு என்னை அழைத்தது. கரும்புகளின் அடவியிலிருந்து வெளிவந்தேன்.

இன்று அவள் வானத்தின் நீலத்தையே உரித்து உடுத்தியிருந்தாள். நீல ரவிக்கை, நீலத்தாவணி, நீலப் பாவாடை. கையில் நீல வளையல்கள். நெங்றித்திலகம் கூட நீலம்.

“ஓ, வந்துவிட்டாயா? உடம்பு சௌக்கியமா?” அவள் பற்கள் பளீரென்றன. நான் அவளின் நீறக் கோலத்தில் லயித்து நின்றேன். ஆனால் அவள் ஒன்றும் லஜ்ஜைப்படவில்லை. அவள் மேலாக்கு மெல்லக் காற்றில் ஆடி அலைந்தது. அவள் கையில் பிடித்திருந்த புல்லாங்குழலின் நீலப்பட்டுக் குஞ்சம் குதித்தது.

“என்ன பேந்தப்பேந்த முழிக்கிறாய்?”

“உன்குழல் என்னை அழைத்தது”.

“ஒ இதுவா, நான் இப்படி அழைத்தால் நீ இப்படி வருவாய் என எனக்குத் தெரியும்.”

எனக்கு ஆச்சரியமாயிருத்தது.

“நான் இங்குத்தான் இருக்கிறேன் என உனக்கெப்படித் தெரியும்?”

அவள் பதில் பேசவில்லை, சிரித்தாள். அவள் கேலி பண்ணுகிறாளா, மெய்யாகவே அவன் சொல்வதை அவள் நம்புகிறாளா என்று புரியவில்லை.

நான் அவள் கைக் குழலைப் பார்த்துக் கொண்டே “உனக்கு நன்றாக வாசிக்க வருமா?” என்றேன்.

“எனக்கு எல்லா வாத்தியங்களும் வரும். எல்லாவற்றையும் வீட்டில் சொல்லி வைந்திருக்கிறார்கள். வாத்தி யத்துக்கு ஒரு வாத்தியார் “பீட்”, நான் ஒரு சகல கலா வல்லி—”

மறுபடியும் அந்தச் சிரிப்பு பணித்துளிகளை முகத்தில் வாரியிறைத்தாற்போல் குளுமையாய்ச் சொரிந்தது.

அவள் குழலை மெதுவாய் உதட்டில் வைத்துக் கொண்டாள். உள்ளிருந்து வெளிப்பட்ட காற்று கறும்பின் இனிமையை வில்லால் வளைத்தாற்போல் ஒலித்தது. நான் கையிலிருந்து குழலை வாங்கினேன். வழு வழுப்பான அதன் மேற்புறத்தைத் தடவினேன். அவள் என் கண்களையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் சிறு ஏளனத்தில் சிரித்தபடி இருந்தன.

இம்மூங்கிலில் காற்றை அடைத்து மறுபடி இழுக்கும் முறையில் இழுத்தால் இது ஒரு வாத்தியம். மூச்சென்று ஒரு பேரைச் சொல்லி, இந்த உடம்பில் ஒரு காற்றை அடைத்து இழுத்தால் அது ஒரு பேச்சு,. பிராணன், உயிர், உலகம், உழலல், நான் குழலை உதட்டின் கீழ் பிடித்துக்கொண்டேன். அவள் நாக்கின் ஈரம் இன்னும் காயவில்லை. நான் ஊத முயன்றேன்.

திடீரெனக் காற்று எங்களைச் சுற்றிச் சுழன்று எழுந்தது. முகத்திலும் வாயுள்ளும் மோதிற்று. அவள் ஆடைகள் உடலோடு ஒட்டிக்கொண்டு படபடவென அடித்துக்கொண்டன. அவளைத் தன் இஷ்ட உருவில் வழித்தெடுப்பது போல் அவளைத் தன்னில் ஸ்னானம் செய்வித்தது. அசரீரமான காற்றிலிருந்தே சரீரமாய் உதயமானதுபோல் அவள் உருவக்கோடுகளில் வளைவுகள் பிதுங்கின.

“என்ன இது? குழலை ஊதிப் புயலைக் கிளப்பி விட்டாய்?”

நான் புரியாத பரவசத்தில் ஆழ்ந்தேன்

மோஹினி.

***

நள்ளிரவில் நான் விழித்துக்கொண்டேன். மையிருட்டு மரத்தில் இலைகள் அசையவில்லை. அந்த சர்வ மௌனத்தாலேயே எனக்கு விழிப்பு வந்திருக்கும்.

எதிர் ஜன்னலிலிருந்து பேச்சின் அரவம் மிதந்து வந்தது. எழுந்து உட்கார்ந்தேன். வார்த்தைகள் சப்த சுத்தமாய் அர்த்த கனத்துடன், காற்றுவெளியில் கோலிகள் போல் உருண்டன.

“நான் இன்னிக்கு உங்களை விடப்போவதில்லை—உஷ்—விளக்கைப் போடாதேங்கோ—வால்மீகி முழிச்சுக்கப்போறான்—”

“Alright, விஷயம் என்ன?”

அம்மாவின் சிரிப்பு வேதனை பண்ணிற்று.

“அவ்வளவு சுருக்க என்னைத் தட்டிக் ‘கழிச்சுலாம்னு பார்க்கறேளா? இன்னிக்கு ரெண்டுலே ஒன்னு தெரியணும்—”

“உஷ் பாகீ உனக்கு உடம்பு சரியில்லே”

“எனத்கு நன்னாத் தெரியும். அதனாலேதானே எனக்கு இவ்வளவு தைரியம்! நான் இந்தப் பூட்டிலே இருந்து பிழைக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“அசட்டுப் பிசட்டுன்னு பேத்தாதே—”

“இல்லே, இப்போ பேத்தல்லே. காலையிலே பேத்தல் வந்துTடும். எனக்கே தெரியும். நான் பேச வேண்டியதைப் பேசித் தீர்த்துக்கறவரைக்கும் ஜன்னியை எட்டப் பிடிச்சு வெச்சிருக்கேன்—”

“பாகி, இதெல்லாம் என்ன?”

“நீங்கள் என்னை நம்பப்போறேளா இல்லையா?”

“எதற்கு?”

“நான் உங்களுக்குத் துரோகம் பண்ணல்லே. முகத்தைச் சுளிக்காதேங்கோ. உங்கள் முகம் எப்படிப் போறதுன்னு இருட்டிலேகூடத் தெரியும். நான் உங்களுக்குத் துரோகம் பண்ணல்லே.”

“ஆரம்பிச்சாச்சா? மறுபடியும்—”

“மறுபடியில்லை இனி மறுபடியே இல்லை. இந்த ஒரு தடவையுடன் ஒரே தடவைதான். அத்துடன் நானே சரி. விடியாத ஒரே இரவாய், இந்த இருவத்திமூணு வருஷங்களின் ஒவ்வொரு நாளின் இருப்பே போறும். எனக்கு நாளைக்கு விடிஞ்சுடும்.”

“இந்த இருபத்தி மூணு வருஷங்களாய் நான் உன்னை ஏதாவது கேட்டிருக்கிறேனா?”

“நீங்கள் கேக்காமல் இருந்துதானே அந்த இரவை, இந்த இருபத்திமூணு வருஷங்களாய் நீட்டி நீடிச்சு வேச்சிருக்கேள்! அந்தப் பெருமை உங்களுடையதுதான். ஆனால், அந்த நேஞ்சுக்கனம் எனக்கு வருமா? நான் உருகி உருகி உள்ளுக்கே உளுத்துப்போயாச்சு. ஏன்? ஏனென்று என்னை ஒரு வார்த்தை நீங்கள் கேட்காததால், நீங்கள் கேட்காமல் நான் என்னத்தை உங்களை நம்பச் செய்ய முடியும்?—”

அப்பா ஏதோ சொன்னார். ஆனால், அவர் சொன்னது காதில் விழவில்லை. ஓர் இலையின் அசைவில் அது கலந்துவிட்டது. அப்பா சாதாரணமாய்ப் பேசினால் உதடுகள் கூட அதிகமாய் அசையா. பேச்சே மனமிலாது அவரிடமிருந்து பிடுங்கும் ஒரு அவசியம். அவரைச் சுற்றி எப்பவும் ஆழ்ந்த மௌனத்தின் விறுவிறுப்பு இயங்கியது.

அப்பா ஒற்றைநாடியாய் வளையாத முதுகுடன் பின்னால் கை கட்டிக் கொண்டு நிற்பார். எனக்கு மணிக்கூண்டின் நினைப்பு வரும். அப்பா ஆயிரம் புயலிடையிலும் அணையா விளக்கு.

அப்பாவின் குரல் எப்பவுமே சற்றுத் தாழ்ந்து குமுறும் கனத்துடன் இனிப்பான அச்சம் நிரம்பியிருக்கும். அப்பாவிடம் எனக்குப் புரியாத பயம் எப்பவும் இருந்து கொண்டேயிருந்தது. இத்தனைக்கும் அவர் எனக்கு எதுவும் மறுத்ததில்லை. என்னை எதற்கு, ஏன் எங்கே, எப்போ என்று கேட்டதில்லை. நான் என்னைப் பெற்றவர்களின் ஒரே பிள்ளை மாத்திரம் இல்லை. ஒரே பேறு.

இவர்கள் எந்த ஏடுகளைப் புரட்டுகிறார்கள்? இருபத்திமூன்று வருஷத்து ஏடுகளையல்லவா புரட்டுகிறார்கள்? இருபத்திமூன்று வருஷங்களுக்கு முன் ஒரிரவை, எதற்குப் புரட்டுகிறார்கள்? எனக்கு இப்பொழுது இருபத்துமூன்று வயதாகிறது. எனக்குப் புரிந்ததும் புரியாததுமாய் என்னைப் பற்றிய ஏடுகளையா புரட்டுகிறார்கள்?

இத்தனை நாளாயில்லாமல் இன்றைக்கேன் புரட்டுகிறார்கள்?

அம்மாவின் குரல் அப்பொழுது சற்று உரத்து எழுந்தது.

“இல்லை இல்லை. நானே உங்களிடம் சொல்லத்தான் பார்த்தேன். உங்களுக்கு நினைவிருக்கோ! அன்னி ஒரு நாள் நீங்கள் ஜன்னலண்டை பின்னால் கைகோத்துண்டு நின்னுண்டிருந்தேளா! அப்போ நீங்கள் என்னோடே எட்டு மாசமாய்ப் பேசல்லே தெரியுமா? நீங்கள் ஏன் என்று கேக்கல்லே. ஆனால் எட்டு மாசமாய்ப் பேசல்லே—”

அம்மாவின் குரல் விம்மியபோது என் தொண்டையும் அடைத்தது.

—“அப்போ நானே வெக்கத்தை விட்டுட்டு, ஆனால் வாய்விட்டுப் பேச அஞ்சி, அந்தப் பத்து நாளைய பச்சைப் பிண்டத்தை அப்படியே ஏந்திண்டு வந்து உங்கள் காலடியிலே போட்டு உங்களை நமஸ்கரித்தேன். அப்பவாவது என்னை ஒருவார்த்தை நீங்கள் கேட்டிருக்கலாம்; என்னை நம்பியிருக்கலாம் குழந்தையைத் தூக்கியிருக்கலாம். நம் குழந்தைக்காகவாவது எனக்கு ஒரு மன்னிப்பு இல்லை. என்னைக் காலால் உதைச்சாவது இருக்கலாம். இல்லை. உங்களிடம் மன்னிப்பு இல்லை. மன்னிக்க இஷ்டமில்லை. நீங்கள் கேக்காத கேள்வியைப் பத்திரமாய் நீங்களே உங்களுள் பத்திரமாய்ப் பூட்டிவைச்சுண்டு அப்படியே திரும்பி வெளியிலே போயிட்—டே—ள்”—

அம்மா கதறிக் கதறி அழுதாள். காற்றில் அலையும் சருகுபோல் அவள் உடம்பு எப்படி அந்த உள் புயலில் குலுங்கியிருக்கும் எனக்குத் தெரியும். ஒரு சின்னக் கஷ்டம் கூட அம்மா காணச் சகியாள். எலி உபத்திரவம் பொறுக்காது எலிப்பொறி வைப்பாள். ஆனால் பொறியில் எலி விழுந்ததும், பொறியுள் கம்பிகளின் பின் எலியின் கண்களைக் கண்டதும் கண்ணிர் விட்டுவிடுவாள். அப்படிப்பட்டவள் எப்படி இவ்வளவு பெரிய, எத்தத் துக்கத்தைச் சகித்துக்கொண்டிருக்கிறாள்?

அப்பொழுது ஸன்னமாய்க் காற்று எழுந்து இலைகள் சலசலத்தன. அது கிளம்பும் தினுசிலேயே அது ஒரு புயலின் முன்னடியென்று தெரிந்தது. இதுவரை இலை கூட அசையாது முன் அமைதி, மேல் நோக்கினேன். கரு மேகங்கள் அவசர அவசரமாய் வானை அடைத்துக்கொண்டிருந்தன. நான் காத்துக்கொண்டிருந்தேன். குரூரமாய்ப் பேரிடியொன்று உடைந்தது. சவுக்காலடித்தாற்போல் மரக்கிளைகளிடையில் ஊளையிட்டுக் கொண்டு புயல் புகுந்தது. அம்மாவின் கூக்குரலிட்ட சிரிப்பு புயலையும் ஊடுருவிற்று. நான் துள்ளியெழுந்தேன்.

“பாருங்கோ பாருங்கோ நான் பேசல்லே. என் சத்தியம் பேசறது. அன்னிக்கு எப்படியோ அதேதான் இன்னிக்கு இப்போ. நேரங்கூட இதேதான் இதேமாதிரி தான். முதலில் இலை ஆடாமல் இருந்தது. நீங்கள் உங்கள் அறையில் ராந்தல் வெளிச்சத்தில் ஏதோ ப்ளானைப் போட்டிண்டிருந்தேள். உங்களுக்கு என்னிக்கும் உங்கள் உத்தியோகம், ப்ளான்தான் முக்கியமாக இருந்ததில்லையா?”

“என் உத்தியோகம் என் வயிற்றுப் பிழைப்பு. அது மாத்திரமில்லை. என் குடும்பத்தின் வயிற்றுப் பிழைப்பு. அதாவது குடும்பம், ஈனம் மானம் என்கிற உணர்ச்சி உள்ளவர்களுக்குத்தான் என் வார்த்தை பொருந்தும்—”

“என்னை ஒண்னும் சொல்லாதேங்கோ. அப்ப நான் ஒண்ணும் அறியாதவள்!”

“ஆ!”

“நீங்கள் என்னோடு பேசல்லே—” அம்மாவின் குரல் அசல் பச்சைக் குழந்தையினுடையது மாதிரி ஆகிவிட்டது. அதில் ஒரு மழலை, திகைப்புக்கூட இருந்தது. “நீங்கள் உங்கள் ப்ளானிலும் கணக்கிலும் முனைஞ்சூட்டா வாரக் கணக்கில் பேசமாட்டேள். எனக்கு ஒரு பொம்மனாட்டி துணையாவது இருந்தால் பொருள் படுத்தியிருக்க மாட்டேன். நாம் இருந்த இடம் நடுக்காடு. எதிரும் புதிரும் நீங்களும் நானும்தான். நீங்கள் ஊமையாகிவிட்ட பிறகு நான் என்ன பண்ணுவேன்?"

அம்மா பேசிக்கொண்டே போனாள். அவளுக்கு இனிக் கவனிக்க வேண்டியவர்கள் அவசியமேயில்லை.

“பகலாவது பரவாயில்லை. ராத்திரி ஏன் வரது? நான் நிஜமா கேக்கறேன். தூங்காதவர்களுக்கு ராத்திரி எதுக்கு? நடுராத்திரியில் திடுக்குனு முழிச்சுப்பேன். மரக் கிளைகளின் சந்திலே காற்று ஊளையிடும். உங்கள் அறையில் வெளிச்சம் தெரியும். ஆனால் எனக்குத் தைரிய முண்டோ? நான் சொல்றேன்; நீங்களுந்தான் என் தப்புக்குப் பொறுப்பு. ஒரு தடவையாவது நாற்காலியை நகத்திண்டு எழுந்து என்னண்டை வந்து என்னைத் தோட்டு “பாகீ தூங்கிட்டையா, பாகீ பயமாயிருக்கான்னு, கேட்டிருக்கேளோ? ஒரு தடவையாவது கேட்டிருந்தால் நான் துணிஞ்சிருக்க மாட்டேன். நடுக்காட்டில் என்னைக் கண்ணைக் கட்டி விட்டாச்சு. எனக்குக் கண் கெட்டுப்போச்சு. தனியாக் குருட்டு யோசனை பண்ணிப் பண்ணி எனக்குப் பிறந்த வீட்டுச் சபலமும்தான் வந்துடுத்து. நான் பிறந்த வீட்டிலிருந்து வந்த புதிசு. நான் முன்பின் யோசிக்கல்லே. உங்களை விட்டுப் பிரியத் துணிஞ்சூட்டேன். நான் வெறி பிடிச்சவளாயிட்டேன்.

“என்னை என் வீட்டிலே விட்டுடுங்கோன்னு உங்களை நான் ஏன் நேரில் கேட்டிருக்கக் கூடாது? எனக்கே தெரியல்லே. எனக்கு உங்களை அப்படிக் கேட்கப் பயமாயிருந்ததோ? என் மூளையேதான் கோணலாய் வேலை செய்ததோ? நான் போகத் துணிஞ்சுட்டேன். அப்பறம் போறது ஒன்றுதான் எனக்குக் குறியாயிருந்தது. பாக்கி எல்லாம் மறந்தேபோச்சு. மானம்—ஈனம்—”

“உன் பெண்மை—”

அப்பாவின் வார்த்தை ஒரே வார்த்தை. அதன் அரவம் தணல்மாதிரி ஜ்வலித்துக்கொண்டு ஜன்னலின் வெளியே உதிர்ந்தது.

“ஆமாம்; என் பெண்மையுந்தான் மறந்தது. நான் வெளியேறத் துணிஞ்சுட்டேன். ஒத்தையடிப்பாதை ஒண்னு ரயில் ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தூரம் போச்சுன்னு தெரியும். எந்தப் பாதைன்னு நிச்சயமாய்த் தெரியாது. என் ஊருக்கு ஒரு வண்டிதான் ஒடித்து. அதுவும் நடுராத்ரி. நாலு நிமிஷந்தான் அந்த ஸ்டேஷனில் நிக்கறதுன்னு தெரியும்; அவ்வளவுதான்.

என் பெட்டியைத் திறந்தேன். கலியாணப் புடவை பளீரெனக் கண்ணைப் பறிச்சுண்டு மேலாகக் கிடந்தது. அதை ஒரு பையுள் அடைச்சுண்டேன். ஒரு வெள்ளி மைச் சிமிழ் இருந்தது. அதன்மேல் சபலந்தட்டித்து. அதையும் எடுத்துண்டேன். உங்கள் சட்டை ஆணியில் தொங்கித்து. அதிலிருந்து ரயில் சார்ஜ் மாத்திரம் திருடினேன். ஒரு கால் ரூபாய் உருண்டு ஒடித்து. அதைக் குனிஞ்சு தேடிப் பொறுக்கி எடுத்துண்டேன். அதுகூட எனக்கு நினைவு இன்னம் மறக்கல்லே. அந்தச் சப்தம் உங்களைக் கலைச் சுடுமோ என்கிற திகில். எனக்கு நாய்மாதிரி இறைச்சுது.

அதோ உங்கள் அறையில் ஒரு ராந்தல் வெளிச்சத்தில் மேஜைமேல் ஒரு ப்ளானை விரிச்சுப் போட்டுண்டு எதையோ குறிச்சுண்டிருக்கேள். அந்தமாதிரி நிலையில் உங்களை நான் பார்த்தபோது, உங்கள்மேல் கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கைகூட நூல்மாதிரி பட்டென அறுந்துபோச்சு. நீங்கள் எப்பவும் அப்படித் தானிருப்பேள். நான் இங்கேயிருந்தாலும் உங்களுக்கு ஒண்ணு தான். அப்புறம் எனக்கு இங்கே என்ன வேலை? எனக்கு எப்படித்தான் அத்தத் தைரியம் வந்ததோ? சட்டென வாசல் கதவைச் சத்தம் போடாமல் என் பின்னால் இழுத்து மூடிண்டு நாலடி முன்னாலே எடுத்தும் வெச்சுட்டேன்.

ஒரே கும்மிருட்டு. ஒத்தையடிப்பாதை எதிரே பத்தடிக்கு நாடாமாதிரி ஒடித்து. அப்புறம் அதுவும் அடையாளம் தெரியல்லே. கோரைப்புல் ஒவ்வொண்ணும் காத்தில் ஆடிப் புஸ் புஸ்ஸுனு சீறித்து. வீட்டை விட்டுப் பத்தடி நடக்காவிட்டாலும் எனக்கு வழி தப்பிப் போயிடுத்துன்னு மனஸாலே ஒரு எண்ணம் பட்டுப் போச்சு. இந்த வழி மாத்திரமில்லே, இன்னும் எந்தெந்த வழியெல்லாமோ, ஊரிலே உலகத்திலே எனக்கிருக்கற வழியெல்லாமே தப்பிப்போச்சு—”

அம்மா புனையும் பழைய நினைவுகளின் கோர்வை, புலியின் கழுத்தில் அசைந்தாடும் பூமாலைபோல், சோக பயங்கரத்துடன் காவிய அழகுடன் மிளிர்ந்தது

“நீங்கள் எவ்வளவு கல்லாலடிச்ச மாதிரியிருந்தாலும் நான் செஞ்ச காரியம் சரியில்லேன்னு பட்டுப் போச்சு. அவ்வளவுதான் அழுகை வந்துடுத்து.

“அப்போ பாருங்கோ—திடீர்னு ஒரு காத்து கிளம்பித்து—”

அம்மா அப்படிச் சொன்னதும் அவள் சொல்லுக்குக் காத்திருந்த மாதிரி காற்று எங்கிருந்தோ புயலாய்ச் சுழித்துக்கொண்டு கிளம்பிற்று—

அம்மாவின் குரல் உயர்ந்தது.

“ஆயிரங் கைகள் சேர்ந்தாற்போல் எழுத்து தடுக்கறாப்போலே என்னைப் பின்னுக்குத் தள்ளிண்டே போச்ச—”

அம்மாவின் வார்த்தைகள் எனக்குச் சரியாய்க் கேட்கவில்லை. நானே என் வசமில்லை. எழுந்து அவசர அவசரமாய் அப்பாவின் அறைப்பக்கம் ஒடினேன். ஜன்னலின் கதவுகள் காற்றில் படபடவென அடித்துக் கொண்டன.

அம்மாவின் வார்த்தைகள் இப்பொழுது தீவிரமாய் அறையிலிருந்து வெளிவந்தன. நான் வெளியில் நின்று கேட்டேன்.

உள்ளே போகவில்லை.

“—நீங்கள் நம்புவேளா? நீங்கள் நம்ப வேண்டாம். காற்றினுடைய ரூபத்தைக் கண்ணாலே நான் பார்த்தேன். அந்தப் புயலின் சுழிப்பிலிருந்து முதன் முதலில் எனக்கு ஒரு முழிதான் தெரிஞ்சுது. பிரம்மாண்டமான ஒரே முழி அதன் நடுவிலே வண்டிச் சக்கரம் மாதிரி ஒரு கறுப்பு முழி என்னையே பார்த்தது. நான் எந்தப் பக்கம் திரும்பி னாலும் எங்கே ஒடப் பார்த்தாலும் என்னையே உறுத்துப் பார்த்துண்டிருந்தது. புருவ வளைவில் கோரைப்புதர்கள் காடாய் அடர்ந்து சிலிர்த்தது. கூர் வளைஞ்ச கத்தியை வரிசையாய் நட்டாற்போல் ரப்பை மயிர்கள்; அந்தக் கறுப்பு முழி என்னைப் பார்க்கப் பார்க்க அதனுள்ளே கோபக் கனல் குழம்பாய்க் கொதிச்சு நுரை கக்கறது. அதிலேருந்து ஒரு உருவம் உண்டாகிக் கிளம்பித்து.

அது யாருன்னு தெரியல்லே. நான் முன்பின் பார்த்ததில்லை. முகத்தைத் திரை போட்டு மறைச்சாப்போல் ஒண்ணும் தெரியல்லே. திறந்த கட்டுமஸ்தான உடம்பு, இடுப்பில் ஒரு முழம் தோல். ஆணா பெண்ணா என்றுகூட நிச்சயமாய்த் தெரியல்லே. அதன் கையில் ஒரு வில். அதை அது வளைச்சு அதில் இறக்கை கட்டின அம்பு ஒண்ணைத் தொடுத்து, அந்த உருவம் என்னைக் குறி பார்த்தது. நான் எந்தப் பக்கம் ஒடினாலும் அந்தப் பார்வையும் அந்த வில்லும் என்னையே நோக்கி வளைஞ்சது. அப்படி என்னைப் பார்க்கும் குறியிலேயே என் மூச்சையே தனக்கு இழுத்துக்கற மாதிரி எனக்குத் திடீர்னு மூச்சுத் திணறி, என் உடம்புள்ளே காத்து இல்லாமல் எனக்கு மூஞ்சியும் முழியும் வெளியே பிதுங்கிடற மாதிரி ஆயிடுத்து. அந்தப் பார்வையில் கொடூரமில்லை. ஆனால் இரக்கமேயில்லை. அந்தக் குறியை நான் தப்ப முடியாதுன்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு. அந்த எண்ணம் எனக்கு எப்போ பட்டதோ அந்த கணமே அம்பு வில்லை விட்டுப் புறப்பட்டுடுத்து. அது அம்பு இல்லை. என்னிடமிருந்து கிரஹிச்சுண்ட என் மூச்சேதான் கூர்மையாகி, அம்பு போல ஒரு உருவமாகி அந்த முழியிலிருந்து கிளம்பி ஒரே சீறலாய் வந்து—ஐயோ!”

அம்பு அப்போத்தான் தைத்தாற்போல் அம்மா வாய்விட்டு ‘க்றீச்’ சென்று கத்தினாள். அலறிக்கொண்டு நான் உள்ளே ஒடினேன். உள்ளே இருட்டு, தடுக்கி விழுந்தேன்.

அறையில் சட்டென வெளிச்சம் உதயமாயிற்று. அப்பா உயரமாய் நின்றார். அவர் காலடியில் அடி வயிற்றை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு அம்மா துடித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் முழுதும் வேர்வை ஸ்னானமாய்க் கொட்டியிருந்தது. மூச்சும் பேச்சும் திணறின. ஆனால் அவள் பேசிக்கொண்டேயிருந்தாள். அவளால் பேச்சை நிறுத்த முடியவில்லை.

“நான் கத்தினதுதான் எனக்குத் தெரியும். எனக்கு நினைப்பு வந்தபோது நான் கட்டிலில் படுத்துண்டிருந்தேன். நீங்கள் பின்னாலே கையைக் கட்டிண்டு நின்னுண்டு என்னையும் என் தலைமாட்டில் உக்காத்தி வெச்சிருந்த மூட்டையையும் மாத்திமாத்தி பாத்திண்டிருந்ததுதான் நினைவு இருக்கு. உங்களுக்குப் புரியல்லே. வாஸ்தவந்தான்; நீங்கள் என்னைக் கேக்கல்லே. ஏன் என்று என்னை இன்னமும் நீங்கள் கேக்கல்லே; ஏன்? என் கத்தல் கேட்டு ஓடி வந்தேளா? என்னைக் காணாேமேன்னு தேடிண்டு வந்தேளா? அல்லது வெளியிலே காற்று வாங்க வந்த இடத்தில் காலடியில் கையில் பைமூட்டையுடன் நான் விழுந்து கிடந்ததைக் கண்டேளா? கண்டதும் உங்கள் நெஞ்சில் என்னென்ன எண்ணம் ஒடித்தோ? சொல்லாமல் என்ன தவிப்பு தவிச்சேளோ? ஆனால் நீங்கள் வெளிக் காண்பிச்சுக்கல்லே. நீங்கள் வெளிக் காண்பிச்சுக்கமாட்டேள். நானும் என்னென்னவோ சொல்ல வந்தேன், ஆனால் நான் என்னென்னு சொல்ல முடியும்? நான் என்னத்தைச் சொல்லி என்ன, நீங்கள் இடங்கொடுக்காமல்!

“அன்னிக்கு என் வயித்தில் வெச்ச பூச்சிதானோ என்னவோ, வாழ்மீகி பத்து மாதம் பொறுத்துப் பிறந்தான். என்னை மன்னிக்காட்டாலும் என் பிள்ளைக்காகவாவது என்னை மன்னியுங்கள் என்னை மன்னிக் காட்டாலும் பரவாயில்லே. என்னை நம்புங்கள். வாழ்மீகி தலைமேல் கைவைச்சு ஆணையிட்டுச் சொல்றேன். நான் உங்களுக்குத் துரோகம் பண்ணல்லே, வாழ்மீகி வாழ்மீகி—உங்கப்பா என்னை நம்பமாட்டேங்கறாடா! காற்றிலே மிதந்து வந்து என் கருவில் புகுந்தாய், நான் சொன்னால் யாருடா நம்பப்போறா?”

“வாழ்—மீகி—வாழ்மீகி...”

“அம்மா! அம்மா!!”

“வாழ்மீகீ—வாழ்மீகி!” அவள் வாய் குழறிற்று. அவள் கைகள் காற்றைத் துழாவின.

என் குழந்தே, என் குழந்தே! எங்கேடா நீ?”

“அம்மா! அம்மா!!” விக்கி விக்கி அழுதுகொண்டே அவள் கைகளைப் பிடித்து என் கழுத்தைச் சுற்றி வைத்துக் கொண்டேன். அம்மாவின் பார்வை என் பக்கமிருந்தது தவிர கண்களில் பார்வையில்லை.

“அம்மா! அம்மா!! அப்பா, அப்பா, அம்மா ஏன் அப்பா இப்படி இருக்கா?”

அப்பா முகத்தில் இரத்தக் குழாய்கள் விம்மி வெடித்து விடும்போல், முகம் அவ்வளவு “டால்” அடித்தது. என் தலைமேல் கையை வைத்தார். இறுகிய தாடைகளில் இரு எரி நீர்கள் வழிந்தன.

“அம்மா! அம்மா!”

***

வயற்புறத்தில் ஒரமாய் ஒரு மரத்தடியில், அம்மாவின் சாம்பல் குவியல் எதிரே நின்று கொண்டிருந்தேன். அழுத கண்ணின் சிவப்புடன் அந்திவானம் கவிந்தது. நான் அழவேயில்லை.

நான் இன்னமும் அழவில்லை. அம்மாவை எரிக்கையில் நானும் என்னுள் எரிந்துபோனேன்

காற்று வாக்கில் சிதையில் என் புறமாய்ச் சாய்ந்த அனல் நாக்குகள் என்னையும் சேர்த்து நக்கிவிட்டன.

நானும் சேர்ந்து சுட்டெரிந்து நீறாய்ப்போன சாம்பலையே வெகுநேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

இன்று காலைதான் அம்மாவின் அஸ்தியை பானையில் ஊருக்கு அருகே ஒடும் வாய்க்காவின் நடுமணலில் முறைப்படி புதைத்துவிட்டேன். ஆனால் இன்று மாலையே, அவளைச் சுட்டெரித்த இடம் இழுத்தது. மரத்தடியில், அவள் தன் அந்திப் படுக்கையில் கிடந்த இடத்தை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நிலைமையில் எவ்வளவு நேரம் கழிந்ததென அறியேன்.

குன்றி வரும் வெளிச்சத்தில், சாம்பலில் ஏதோ “பளிச் பளிச்” சென்றது. குனிந்து அந்த இடத்தைச் சாம்பலோடு அள்ளினேன்.

திடீரென ஒரு காற்று, சுழலாய்க் கிளம்பி என்மேல் மோதி, என் கைச் சாம்பலை ஊதித் தன் வழியோடு இறைத்துக்கொண்டு போயிற்று. அத்தோடு அம்மாவும் போகிறாள். பச்சைப்பட்டுப் புதுப் புடவையின் சலசலப்பு இனிப்புடன் ஒலித்தது. கை நிறைய அடுக்கிய வளையல் கள் கிலுகிலுத்தன. மூக்கில் அணிந்த வைர முக்குத்தி விட்டுவிட்டு மின்னிற்று. அவள் முகத்தின் இளமுறுவல், காற்றில் ஆடும் அகல் சுடர்போலும் என்னை விளித்தது.

“வா—ல்—மீ—கீ!!-”

“அம்மா!” அலறிக்கொண்டே இரு கைகளையும் விரித்துக்கொண்டு அந்தத் தோற்றத்தை நோக்கி ஓடினேன். -

“வால்மீகி!”—என்னெதிர் ஒர் உருவம் ஓடிவந்து தடுத்து அணைத்துக் கொண்டது.

“அம்மா—அம்மா!” அதன் மார்பில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். என் சிரத்தைத் தன் தோளில் தாங்கியபடி தாயைப்போல் என் தலையைக் கோதித் தடவினாள். அவள் கண்ணிர் என்முகத்தை நனைத்து என் கண்ணீருடன் கலந்தது

இன்று அவள் மருந்துக்குக்கூட ஒரு நகை அணியவில்லை தலையில் பூக்கூட இல்லை. கண்ணைக் கூசும் வெள்ளை ஆடையின் கரையோரங்கள் சிற்றலைகள்போல் காற்றில் அலைந்து துவண்டன. கைகளில் வளையல் கூட இல்லை. ஆனால், இந்த வெறிச்சான வெள்ளைக்கோலம் கூட எப்படியோ அவளுக்கு ஏர்வையாத் தானிருந்தது. இறுக வாரி, எடுப்பாய் இழுத்து இட்ட கொண்டையுடன், பாலட்சூபிணிபோல் அவள் துலங்கினாள். என் துயரம் தாளாது யாவும் துறந்துவிட்ட ராஜகுமாரி

“எனக்கு அங்கு வரவே பயமாயிருந்தது. வால்மீகி—எனக்கு நினைவு தெரிஞ்சதே முதல் என் வீட்டில் இதுவரை சாவு நேர்ந்ததில்லை. அதனாலேயே எனக்கு அங்கே வரப் பயமாயிருந்தது. வால்மீகி கஷ்டம்னா என்னென்னே தெரியாமல் நான் இதுவரை வளந்துட்டேன். உன்னோடு என்னத்தைப் பேசறதுன்னுகூட எனக்குத் தெரியல்லே. ஆனால், நீ இப்போ சாம்பலைக் கையிலெடுத்துப் பார்த்தப்போ எனக்குப் புரியாமல் ஏதோ திகிலாயிடுத்து—”

அவள் என்னைக் குழந்தைபோல் சட்டெனக் கட்டிக் கொண்டாள். என் கைகளின் அணைப்புள் அவள் உடல் வெட வெடவென்று உதறிற்று.

“உன் பேர் என்ன?” என்றேன்.

“காயத்ரீ”

ஆழ்ந்த துயரத்தின் எல்லைக் கரைகளின் தொலைவிலிருந்து இன்ப அசதி மூச்சுகாற்றில் மிதந்து வந்தது. மாலையில் மலர்ந்த புஷ்பத்தின் மணம் எங்களைச் சுற்றிக் கமழ்ந்தது.

“ஏ—ஹோய்—ய்—”!

யாரோ பண்ணையாள் இன்னொரு ஆளுக்கு ஏதோ சமிக்கையாய் கூவுகிறான். அந்தக் குரலின் வெண்கல நாதம் வீங்கி ஆகாய வெளியில் விறுவிறுத்துக்கொண்டே போய்ப் படிப்படியாய் ஒய்ந்தது.

மரங்களிலிருந்து இலைகளின் ஒசைகள் ஆசி அட்சதையைத் தூவினாற்போல் உதிர்ந்தன. தூரத்தில் வில்லிக் குடிசைகளிலிருந்து அவர்களின் கேளிக்கைக் கூத்தின் டமார ஒலி மிடுக்குடன் எழுந்தது. என் இதயத்துள் தந்திகள் மீட்டி முனகின.

என் கண்னெதிரில் சூரியனின் ஏழு வர்ணங்களும் ஒன்றிலிருந்து ஒன்று நுரை கக்கிக்கொண்டு புறப்பட்டு ஒரே வர்ண வெள்ளத்தின் பல சாயங்கள் பல சாயல்களில் குழம்பின. ஈரத்தை உறிஞ்சும் துணிபோல், என் உடல், அதன் சல்லடைக் கண்கள் அத்தனைமூலம், இத்தனைக் காட்சிதியை அதன் அத்தனை பேதங்களுடன் உறிஞ்சி, விசுவ தரிசனத்தில் இழைவதுபோல் இருந்தது.

எல்லாம்,

“உன் பேர் காயத்ரீ

என்பேர் வால்மீகி”

எனும் உறவின் ஆதாரத்தில் கொக்கி மாட்டிக் கொண்டு ஊஞ்சலாடின.

“ஓ—ஹோ—ய்!”

இரவு நான் ஒரு கனவு கண்டேன்.

என்மேல் ஒரு ப்ரம்மாண்டமான பட்சி உட்கார்ந்திருந்தது. அதன் முகம் அவள் முகம். மூக்கு மாத்திரம் நீண்டு கூரிய வாளாய் என் மார்பைக் இடைந்து தோண்டித் கொண்டிருந்தது. அவளுடைய சந்தனக் கன்னங்களை, வியந்த என் ஆசை, என் பிராணாவஸ்தையையும் மீறியது. என் இதயத்தைத் தோண்டுகையில் அது வெளியே விசிறும் குருதி என் கண்ணிலேயே தெறித்தது. ஆனால் அந்தப் பட்சி இன்னமும் தோண்டிக்கொண்டுடேயிருந்தது.

அந்தப் பள்ளத்திலிருந்து இனியதோர் குரல் கிளம்பிற்று. தட்டுத்தடுமாறியபடி ஒரு பொன்குருவி பள்ளத்திலிருந்து வெளி ஏறிற்று. மார் முகட்டில் நின்று தன்னைச் சுற்றி ஒருமுறை நோக்கியது. அதன் தலைக் கொண்டை தகதகத்தது. பொன்னுடவில் அழகிய புள்ளிகள், பொற்கதிர்களைக் கொத்தாய்ப் பிடித்தாற்போல் நீண்ட வால். இத்தனை நாள் என் இதயத்துள் இது எங்கே பயிராகியிருந்தது? தன் தங்கச் சிறகுகளை விரித்து, மார்த் தட்டிலிருந்து எழும்பி அறையைச் சுற்றிப் பறந்தது. அதன் பொன் கதியை, மங்கிக்கொண்டேயிருக்கும் என் கண்கள் பின்தொடர்ந்தன, செவிகளில் ரீங்காரம் நிரம்பிற்று. இரண்டு வட்டங்களுக்கு மேல் அதற்குச் சக்தியில்லை. சிறகுகள் மடிந்தன. என் மார்மேல் காத்துக் கொண்டிருந்த பெரிய பட்சி “க்றீச்” சென்று கத்திக் கொண்டு, அதைத் தன் அலகில் கவ்விற்று. அதன் அகன்ற சிறகுகளின் விரிப்பின் அந்தகாரத்தில் நான் மூழ்கிப்போனேன்.

“காயத்ரீ!—”

அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன்.

ஜன்னலுக்கு வெளியே புலர்ச்சியில் வான்முகடு பாளம்பாளமாய் வெடித்திருந்தது. கண்ணிரின் ஸ்படிகம் போன்று ஓரிரண்டு நட்சத்திரங்கள் உருத்தேய்ந்து கொண்டிருந்தன. காலைக் காற்று சில்லென்று புரியாத அறிகுறியில் மார்பைக் கவ்வியது. உள் குளிரில் என் உடல் நடுங்கிற்று. மார்பு இன்னும் புண்ணாய் வலத்தது,

“வால்மீகி!”

திடுக்கிட்டுத் திரும்பினேன்.

அப்பா பின்னால் கைகட்டியபடி நின்றார்.

“அவள் உனக்கு ஏற்றவள் அல்ல.”

நான் எழுந்து உட்கார்ந்தேன்.

அப்பா எப்பவுமே ஒரு விதம். விஷயங்களை எப்படி, எவ்வளவு தூரம் அறிந்துகொண்டிருக்கிறார் என்று நான் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீண்தாம். அப்பா பேசவே விருப்பமில்லாதவர். பேசினால் அவர் தொனியில் அதிகாரம் தெரியாவிட்டாலும், பேசும் விஷயத்தில் அதிகாரம் இருக்கும். அத்தோடு இல்லை. முன்பின் பீடிகையிலாது. நடுப்புற, எந்தக் கட்டத்திலிருந்து அவர் அந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசப்போகும் பேச்சுக்குச் சம்பந்தமும் முக்கியமும் உண்டோ, அங்கிருந்தே ஆரம்பித்துவிடுவார். அதில் இன்னொரு விந்தையென்னவென்றால் எதிராளிக்கும் எப்படியோ அவர் எதைப்பற்றிப் பேசுகிறார் என்று புரிந்துவிடும்.

ஆனால் நான் அசட்டுத்தனமாய் முன்பின் புரியாயாததுபோல் சமாளிக்கப் பார்த்தேன்.

“என்ன சொல்கிறீர்கள் அப்பா?”

நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குத் தெரியும். வீண் வார்த்தை வளர்த்த வேண்டாம். அவள் உனக்கு ஏற்றவள் அல்ல.

அப்பா ஜன்னலண்டை பாேய் நின்றார். அப்பாவுக்கு இப்போது ஐம்பது வயதாவது இருக்கும். ஆனால் ஜம்பது மதிக்க முடியாது. அவரிடம் மாறாத இளமை இயங்கிக்கொண்டிருந்தது. இத்தனைக்கும் வேகமும் விறு விறுப்பான பாவனைகள் அவரிடமில்லை. தலைமயிர் ஒன்றுகூட நரைக்கவில்லை. அவர் உடை எப்பவும் ஒரே மாதிரித்தான். தும்பை போன்று துல்லியமான வெள்ளை ஜிப்பா. பூமியில் புரளும் தூய வெள்ளை வேஷ்டி. வேஷ்டி விளிம்பில் ஒரு இம்மி அழுக்குக்கூட ஏறாது. அவர் நடக்கையில் பூமியில் பாதம் பதிவது தெரியாது. கழுத்து வளைவிலிருந்து விரியும் அகன்ற தோள்கள். அப்பாவும் நானும் சேர்ந்து போனால் பார்ப்பவர் அண்ணன் தம்பி யென்றே மதிப்பார்கள். ஆனால் அப்பாவும் நானும் இதுவரை சேர்ந்து போனதேயில்லை

இந்த சமயத்தில் சம்பந்தமேயிலாத சிறு விவரங்கள் ஏன் கவனத்துக்கு வெளிப்படுகின்றன என்றுதான் புரியவில்லை.

“என்ன நான் சொல்வது காது கேட்கிறதா?” அப்பா முகந் திரும்பாமலே ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு கேட்டார்.

அப்பாவிடம் இன்னொரு சுபாவம். யாரையும் நேர் முகம் பார்த்துப் பேசமாட்டார். சங்கோசத்தாலல்ல. அலட்சிய பாவமுமல்ல அது. காற்றையோ வெளியையோ நோக்கியபடி அவர் வார்த்தைகள் புலப்படும். பிறன், தன் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாது எனும் எண்ணத்தினால்தான் அவர் அப்படி முகங் கொடுக்காமல் இருக்கிறாரோ என்னவோ? மொத்தத்தில் அப்பா பீதியைக் கொடுப்பவர்.

கால புருஷன்.

“வால்மீகி!”—

“அப்பா நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். விடுபட முடியாது போலிருக்கிறதே!”

“இப்பொழுது விடுபடாவிட்டால் அப்புறம் விடுபடவே முடியாது. அதனால்தான் இப்பவே சொல்கிறேன்—”

என் கன்னத்தை பீங்கான் போன்று வழுவழுத்த இன்னொரு கன்னம் அழுத்திற்று. பாம்புபோலும் இரு கைகள் என் கழுத்தைச் சுற்றிப் பின்னி, பஞ்சினும் மிருதுவான மார்மேல் அழுத்திக்கொண்டன. மல்லிகையின் மணத்தில் என் மூளை கிறுகிறுத்தது.

“அப்பா நான் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன். அப்பா எனக்கு வரங் கொடுங்கள்.”

“வால்மீகி! அவள் நல்லவள் அல்ல.”

“அப்பா-”

“வால்மீகி! நான் உன் அப்பா—”

திடீரென என்னை மீறிய கோபாவேசம் அடிவயிற்றிலிருந்து எழுந்தது.

“அப்பா உங்களுக்குத் .தெரியாததே ஒன்று மில்லையோ!—”

“வால்மீகி—”

என் கைகள் முஷ்டித்தன. என் உடலே என் ஆத்திரத்தில் கிடுகிடென ஆடிற்று.

“அப்பா நீங்கள் வாழச் சகிக்காதவர். உங்களுக்கு உங்கள் அதிகாரந்தான் முக்கியம். அம்மாவைக் கொன்றதே நீங்கள் தான். நீங்கள் அவளைக் கொல்லாமலிருந்தால் அம்மா இப்போ உயிரோடிருப்பாள் தெரியுமா?—”

அப்பா மெதுவாய் சிலை திரும்புவதுபோல் திரும்பினார். அவர் முகம் என் கண்ணைக் கூசிற்று. கையை ஓங்கினார்.

“நீங்கள் கொலைகாரர் கொலைகாரர் கொலைகாரர்!”—என் தொண்டை க்றீச்சிட்டது. நான் என் வசத்திலில்லை. வாயில் நுரை தளும்பிற்று. எனக்குக் களை போட்டுவிட்டது. படுக்கையில் அப்படியே சாய்ந்தேன்.

அப்பா ஒன்றுமே பேசவில்லை. ஒங்கியகை மெதுவாய்க் கீழே இறங்கிற்று. ஏற இறங்க, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அவர் பார்வை என்மேல் ஒடிற்று. பார்வைக்குப் பார்வை நானும் ஈடு கொடுத்தேன். எங்கிருந்து எனக்கு இவ்வளவு அசட்டு, முரட்டு தைரியம் வந்தது?

ஜன்னலுக்கு வெளியே மாமரத்திலிருந்து ஒரு கொக்கு எழும்பிப் பறந்து சென்றது. காலையின் பொன் வெயிலில் அதன் வெள்ளைக் கழுத்தும் கால்களும் ப்ரகாசித்தன. அப்படியே திரும்பி அப்பா அறையை விட்டுச் சென்றார்.

நான் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். அப்பா வீட்டைவிட்டு வெளியே போய்க் கொண்டிருந்தார்.

“அப்பா! அப்பா!!—” துக்கம் தொண்டையை அடைத்தது.

அப்பா திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. முற்றிய மூங்கில்போல் வளையாது பனி வெள்ளை போர்த்த அவர் நெட்டை உருவம் தோட்டத்தின் எல்லையைக் கடந்து கொண்டிருந்தது.

நான் ஏன் இப்படி ஆகிவிட்டேன்?

அம்மா இறந்து இன்றுதான் மூன்றாம் நாள்.

***

நான் புத்தகத்தில் கவனத்தை ஊன்ற முயன்றேன். ஆனால் அறையில் காயத்ரியும் இருக்கையில் அது சாத்திய மான காரியமல்ல. நான் அவளைத்தான் ஒரப்பார்வையில் கவனித்துக் கொண்டிருந்தேன். ஜன்னல் கட்டைமேல் உட்கார்ந்துகொண்டு அங்கு தலையை ஆட்டிக்கொண்டிருந்த பூங்கொடியைச் சீண்டிக் கொண்டிருந்தாள்.

என்னைத் தன்னிடம் வரும்படி ஒற்றை விரலால் விளித்தாள். நான் போகவில்லை. நான் என்னைப் பரீட்சை பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவுநேரம் என்னைத் தடுத்துக்கொள்ள முடியும்? ஒரு கணம்கூட என்னால் அவளைப் பிரிந்திருக்க முடியவில்லை. காலையில் கண் விழித்ததும் எழும் முதல் எண்ணமாய்த் துவங்கி இரவு கண் மூடுகையில் என்னோடு என் கனவுகளுக்கு அழைத்துச் செல்லும் கடைசி எண்ணமாய் என்னுள் என்னை வியாபித்தாள். நாளாக ஆக இந்த ஆட்சியின் மும்முரம் அதிகரித்ததே யொழிய தணிந்தபாடில்லை. எனக்கு உணவுகூடச் சில சமயங்களில் உட்செல்லவில்லை. இந்த நிலைமை புரியவில்லை. எப்பவும் இன்பமாயுமில்லை. கத்தி கூர்மையில் தடவிய நெய்யை நக்குவதுபோல் பயங்கரமாய் இருந்தது.

அவள் என்னோடுதாணிருந்தாள். ஆனால் எவ்வளவு இருந்தாலும் எனக்குப் போதவில்லை. இது எந்த நியாயத்திலும் சேரவில்லை. ஆனால் இதிலிருந்து மீளவும் முடியவில்லை.  இதுதான் என் தவிப்பு. இது மோகமுமல்ல. ஆசையுமல்ல. உள்ளத்திலே புழுத்த புழு, அவள்மேல் ஆசை, பாசம், மோகம் எல்லாம் ஓருருவாய் என் வயிற்றுள் பாம்புபோல் சுருண்டு உட்கார்ந்து என் தெம்பு, என் வலிமை, என் நினைவு, என்னையே தனக்கு ஆகாரமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தது. இந்த ஸ்மரிப்பிலிருந்து, எவ்வளவு முயன்றும் என்னால் உதறிக்கொள்ள முடியவில்லை. இறக்கைகளில் கல்லைக் கட்டிக்கொண்டு ஆகாயத்தில் பறக்கப் பார்ப்பதுபோல் என் ப்ரயத்தனங்கள் பயனற்றனவாய், அவலக்ஷணமாய், அவமானத்தில் முடிந்தன.

தாயின் மார்பில் கட்டிவிட்ட பால்போல், என் நெஞ்சில் கனமாய் அழுத்திக் கொண்டிருக்கும் பாசத்தைத் தணித்துக்கொள்ள செய்கைகளும் பேச்சுக்களும் மனதில் எழுந்தன. பிறர்க்கு ஒருவேளை அவை விரஸமாயுமிருக்கலாம். எனக்கு அவை சர்வ இயற்கையாயும் தவிர்க்க முடியாதனவாய்க்கூட இருந்தன. என் நெஞ்சின் நிலையில் எனக்கு அப்படி இருந்தாலும் அவளுக்கும் அப்படியிருக்க வேண்டாமா? அந்தப் பயத்தில், வெட்கத்தில், என்னை நான் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருத்தேன். இது ஸகித்துக் கொள்ளும் கஷ்டமாயில்லை.

காயத்ரீ—

ஓம்பூ: ஒம் புவ: ஓம்ஸுவ:—

என் மூச்சு.

அவள் எங்குச் சென்றாலும் என்ன செய்தாலும் என் பார்வை அவளையே பின்தொடர்ந்தது. இது என்னையே அறியாது படிந்துவிட்ட பழக்கமாயும் போய்விட்டது. ஒரு சமயம் அறையின் ஒரு மூலையில் குனிந்தபடி ஏதோ காரியமாயிருந்தவள் சட்டெனத் திரும்பி, நேரே என்னை நோக்கி வந்தாள். அவன் கன்னங்களில் சிவப்பு திட்டாய்ப் பூத்திருந்தது.

“வால்மீகி—Don’t do that—”

“நான் என்ன செய்துவிட்டேன்?” நிஜமாய் எனக்கே தெரியவில்லை. அவள் மனம் புண்படும்படி என்னை அறியாமல்கூட நான் ஏதோ செய்துவிட்டேனே எனும் எண்ணத்தைத் தாங்கக்கூட எனக்குச் சக்தியில்லை. பயமாயிருந்தது.

“என்னையே அப்படிக் கவனிக்காதே.”

“ஓ! நான் என்ன செய்வேன்? என்னால் உன்னைப் பார்த்துக்கொண்டு இராமல் முடியவில்லையே!”

“இல்லை, எனக்கு ஒரு சமயம்போல் இல்லை; இம்சையாயிருக்கு, பயமாயிருக்கு, என்னவோ CID மாதிரி—”

“காயத்ரீ என்னை மன்னித்துவிடு.” என் தொண்டை கம்மிற்று.

சட்டென அவள் முகம் மாறிற்று. சிரித்துவிட்டாள். என் மடிமேல் செல்லமாய் உட்கார்ந்து என்மேல் சாய்த்தாள்.

“வால்மீகி, உனக்கு என்மேல் ரொம்ப ஆசையா?”—

“கதவு திறந்திருக்கிறது, யாராவது வரப்போகிறார்கள்—”

“வந்தால் வரட்டும். எனக்கு ஒண்னும் வெட்கமில்லை—” கையை அலட்சியமாய் உதறினாள். அந்தச் சைகையில் குழந்தை போலும் கவர்ச்சியாயிருந்தாள்.

“உனக்கு என்மேல் ரொம்ப ரொம்ப ரொ—ம்—ம்—ப ஆசையா?”

“ஆம்; உன்மேல் ஏதாவது வாசனை பூசிக் கொண்டிருக்கிறாயா?”

“இல்லையே ஸென்டே எனக்குப் பிடிக்காது."

“பின் உன்மேல் எப்பவும் ஒரு பரிமளம் வீசிக்கொண்டே இருக்கிறதே?”

“என் வயசின் வாசனையாயிருக்கும். அல்லது என் மேல் உன் ஆசையின் வாசனையா இருக்கும். உனக்கு என் மேல் எவ்வளவு ஆசையிருக்கும்?”

“எவ்வளவோ?” திடீரென்று என் கண்கள் மங்கின. நெற்றிப் .பாெட்டுள் சாவி முடுக்கிவிட்டாற்போல் சக்கரங்கள் சுழன்றன:

“ஓம்பு: ஓம்புவ: ஓம்ஸுவ: ஓம்தப!”

மூச்சுத் திணறிற்று. என் மடியில் மூன்று காயத்ரீகள் உட்கார்ந்திருப்பதுபோல் பார்வை நிலை தடுமாறிற்று.

“என்ன ஒரு பசுங்காளைக் கன்றுக் குட்டியளவு உயரம் இருக்குமா?” தன் கையால் அந்தக் கன்றுக்குட்டியின் உயரத்தைத் திட்டம் பிடித்துக் காண்பித்தாள்.

“வால்மீகி, நான் வந்ததே முதல் நீ ரொம்பவும் இளைத்துவிட்டாய். நான்தான் குண்டாயிருக்கிறேன்.”

“நீ நன்றாயிருக்கிறாய்.”

“அதாவது குண்டாயிருக்கிறேன் என்று சொல்லு.”

“சொல்லமாட்டேன்.”

“சொல்லமாட்டாய். ஆனால் அப்படித்தானே!”

“.......”

“சொல்லு. அப்படித்தானே!”

“காயத்ரீ, தர்க்கம் பண்ணாதே.”

“சண்டைக்கிழுக்கிறேன் என்கிறாய் அல்லவா?”

“நான் ஒன்றுமே சொல்லவில்லையே!”

“என்ன சொல்லல்லையாம்? சின்னக் குழந்தைமாதிரி கோபத்தில் உதடுகள் பிதுங்கின. “நான்தான் குண்டு காயத்ரீ வாயாடி காயத்ரீ.”

எனக்கு அசதிமேலிட்டது. இதயத்தில் ஏதோ நெருப்பு குழம்பாய் உருகி வழிந்தது. ஜூரம் கண்டால்போல் உடம்பு கணகணவென்றது.

“ஹும்—” பெருமூச்செறிந்தான்.

“காயத்ரீ, கோபம் பண்ணாதே. நீ கோபித்தால் எனக்குத் தாங்கவில்லை—”

தன்னிரக்கத்தில் “த்ஸோ” கொட்டிக்கொண்டு எழுந்தாள். என்னைவிட்டு ஒதுங்கின மாதிரியில்லை எனக்கு. என்னைவிட்டுப் பிரிந்த மாதிரியே இருந்தது. இந்த வேதனைகூட என்னால் பொறுக்க முடியவில்லை.

ஒரு காரியமுமில்லாமல் தங்கித்தங்கி அறையைச் சுற்றி நடந்தாள். சுவரோரமாய் உறை போட்டு சாத்தியிருந்த வீணைமேல் அவள் கண்கள் விழுந்தன. உடனே அதை எடுக்க ஆரம்பித்தாள்.

“வேண்டாம்—” என்று கூவினேன்.

ஒரு வெட்டு வெட்டி அவள் முகம் என்பக்கம் திரும்பிற்று. கோபம் கலந்த வியப்பில் புருவங்கள் நெறிந்தன.

“காயத்ரீ—”

நான் எழுந்து மெதுவாய் அவளை நோக்கிச் சென்றேன். என்னைவிட்டு எவ்வளவு தூரம் நடந்து விட்டாள்! என் செவிகளில் “ஙாெய்ய்...” என்று வண்டுகள் கூவின. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டேன். அவள் என் பிடியிலிருந்து தன் கைகளை மெதுவாய் விடுவித்துக்கொண்டாள்.

“காயத்ரீ! இது அம்மாவின் வீணை. அவள் இறந்து போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இந்த வீணையை வாசித்தாள். அவள் கைரேகைகள் இதன்மேல் படிந்திருக்கின்றன. அவை கலையாமல் நான் காப்பாற்றி வருகிறேன்.

“ஓ!—”

இரு கைகளையும் பிசைந்துகொண்டு நின்றாள். அற்புதமான அழகு பொருந்திய முத்திரைகளில் எப்படி அவளால் நிற்க முடிகிறது? அவள் அங்கங்களிலும் அங்கங்களின் நிலைகளிலும் சொல்லிய அழகுகளுடன் சொல்லாத அழகுகளும் எப்படி கற்பனை ஸ்வரங்கள் போல் வெளிப்படுகின்றன?

அவள் விழி ஒரங்கள் திடீரென சிவந்தன. மளமளவென கண்ணீர் உதிர்ந்தது. பீங்கான்போல் வழுவழுத்த கன்னங்களில் வழிந்துகொண்டேயிருந்தது. என் நெஞ்சையடைத்தது. என் தாயின் நினைவுக்கா கண்ணிர் விடுகிறாள்?

சட்டென மனதைத் திடப்படுத்திக் கொண்டவள் போல் வீணைமேல் போர்த்திய உறையைக் கழற்றி எறிந்தாள். கீழே உட்கார்ந்து வாத்தியத்தைத் தன்மேல் சார்த்திக் கொண்டாள். ஸ்வரஸ்தானங்களிலிருந்து கோர்வையற்று ஸ்ருதிகலைந்த சப்தங்கள் எழுந்தன; அவள் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. அவைகளில் சிரிப்பு இல்லை; எனக்கு அவள்மேல் இருக்கும் அதிகாரத்தை ஆழம் சோதிக்கும் இரக்கமற்ற கபடுதான் இருந்தது.

எனக்கு என்ன அதிகாரம் இருந்தது? ஒரு வருஷமாய் நான் காப்பாற்றி வந்த அடையாளங்களை ஒரே நொடியில் இதோ அழித்துக் கொண்டேயிருக்கிறாள். இவளை நான் என்ன செய்ய முடிகிறது? அதுவும் என்ன, எனக்கு இந்த அடையாளங்கள் அருமை என்றதற்காகவே அவைகளை அழித்துக்கொணடிருக்கிறாள். இவளை நான் என்ன பண்ண முடிகிறது? இவள்மேல் எனக்கு இருக்கும் ஆசை ஆரோக்கியமானதில்லை. எனக்கே நன்றாய்த் தெரிகிறது; எல்லாவற்றையும் நாஸ்தியாக்கும் ஒரு விபரீத வெறி.

அவளுக்கு வாசிக்கவும் தெரியவில்லை. தனக்கு வாசிக்கத் தெரியவில்லை என்பது அவளுக்குத் தெரியவில்லை, அல்லது தெரிந்துதானிருந்ததோ? என்னவோ கண்ணால் கண்டேன். கண்டதைக் கையிலெடுத்தேன்—கையிலெடுத்துக் கலைத்தேன் என்கிறரீதி—

“அதோ பார்!” அவள் கவனம் மாறிவிட்டது. வீணையைப் பொத்தெனக் கீழே வைத்துவிட்டு ஜன்னலண்டை ஓடினாள்.

நான் வீணைமேல் உறையையிட்டு மூடினேன். குழந்தைகளைக் கோபித்துக்கொள்ள முடியுமோ? என்று என்னையே சமாதானம் பண்ணிக்கொண்டேன். அவளிடம் ஒரு விபரீதமான குழந்தைத்தனமிருந்தது. விளையாட்டாகவே வீட்டுக்கு நேருப்புவைக்கும் விபரீதக் குழந்தைத்தனம். அந்தக் குழந்தைத்தனத்தால், தனக்கோ பிறர்க்கோ நேரக்கூடிய தீங்கை அவள் அறியாள், அவளுக்கு அதைப் பற்றி அக்கறையுமில்லை.

“இங்கோ வான்னா!—”

வீணையை அதனிடத்தில் வைத்துவிட்டுப் பணிவாய்ப் போய் அவள் பின் நின்றேன்.

இரு காற்றாடிகள். ஒன்று சிவப்பு ஒன்று வெள்ளை. ஆகாயத்தில் ஒன்றையொன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தன.

“இவையிரண்டும் சண்டையிடப் போகிறது—” என்றாள்.

“இதில் உனக்கென்ன சிரத்தை? இது ஆண்கள் விளையாட்டு” என்றேன்.

“விளையாட்டில் ஆண் வியைாட்டு பெண் விளையாட்டாவது? எனக்கு நன்றாய்க் காற்றாடி விடத் தெரியும். நான் சொல்றேன் பார். இந்த சிவப்புக் காற்றாடிதான் ஜெயிக்கப்போகிறது.”

எட்டிப் பார்த்தேன். “சிவப்புக்காற்றாடி சின்னதாயிருக்கிறதே!”

“பெரிது சின்னது கணக்கில்லை. காற்றாடி விடுபவனைப் பொறுத்திருக்கிறது. வேணுமானால் அஞ்சுரூபா பந்தயம். சிவப்புக் காற்றாடிதான் ஜெயிக்கப் போகிறது."—அவள் கவனம் முழுதும் காற்றடிமேல்தான் இருந்தது.

திடீரென என் அடிவயிற்றில் ஏதோ புரண்டாற்போலிருந்தது. நான் பூமியிலில்லை, ஒரு கயிற்றின் நுனியில் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தேன். பூமியில் காயத்ரீ நின்றுகொண்டு கயிற்றைப்பிடித்தபடி ஆகாயத்தில் என் கதியை அடக்கி ஆண்டுகொண்டிருந்தாள். காற்றைக் கிழித்துக்கொண்டு வெள்ளைக் காற்றாடியை நோக்கி விரைந்தேன். காற்றின் கூர்மை கத்திபோல் என் உடலை நார்நாறாய் உள்ளே அறுத்தது. என் சதைக்கடியில் என் உடல் இரத்தவிளாறாயிற்று.

“அப்பா நீங்கள் கொலைகாரர் கொலைகாரர் கொலைகாரர்!”

தலை சுற்றிற்று. நெற்றியைக் கெட்டியாய் இரு கைகளிலும் பிடித்துக்கொண்டேன். உள்ளே சக்கரங்கள் சுழன்றன. காதண்டை கலகலவென நகைப்பு.

“நான் என்ன சொன்னேன் பார்த்தையா? எடு பந்தயப் பணத்தை!”—

நான் அசதியுடன் எட்டிப் பார்த்தேன். வெள்ளைக் காற்றாடி நிலையறுந்து பூமியை நோக்கி அந்தரடித்துக் கொண்டிருந்தது.

கண்ணெதிரில் மங்கலாய் ஒரு வெள்ளையுருவம் எழுந்தது. தோட்டத்தின் எல்லைகளை வேகமாய்க் கடந்துகொண்டிருந்தது.

“வால்மீகி! ! What is the matter?” அவள் கண்கள் பய வெறியில் சுழன்றன. சட்டென என்னைத் தாங்கிக் கொண்டாள்.

“வால்மீகீ, ஏன் அழுகிறாய்?”

“அழறேனா என்ன?” எனக்கே ஆச்சரியமாயிருந்தது. என் இமைகளைத் தொட்டபோது அவைகள் நனைந்திருந்தன.

“வால்மீகி, நீ அவசியம் டாக்டரைப் பார்க்க வேண்டும்.”

“Oh, it is nothing. காயத்ரீ—”

“என்ன?” மெய்யெனவே அவள் குரல் பரிவில் குழைந்தது.

“ஒன்றுமில்லை,”

இப்படித்தான், ஒன்றுமில்லை ஒன்றுமில்லை யென்று சொல்லவும் முடியாமல் சொல்லவும் தெரியாது. என்னது தான் என அறியவும் முடியாமல், ஆனால் அவஸ்தை மாத்திரம் பாட்டுக்கொண்டே ஒருநாள் பின் ஒருநாள்.

காற்றேயில்லாமல் மூச்சுத்திணறி, வேர்வை ஸ்னானமாய்க் கொட்டும் புழுக்க நாட்கள்.

நெஞ்சைச் சில்லெனக் கவ்வும் குளிர் காற்று வீசும் குளிர் நாட்கள்.

அல்லது காற்றிலே கனலைக் கக்கும் வெப்பநாட்கள்.

அல்லது பாலைவனத்தில் ஊற்றுப்போலும், நீண்ட வரண்ட இடைவெளிகளுக்கிடையே, நிழல் காற்று வீசும் இன்ப வேளைகள்.

மிச்ச நாட்கள் கானலை மெய்யென நினைத்துத் தேடியலைந்து இளைத்துத் தேயும் கானல் நீர் நாட்கள்.

ஆனால் எப்பொழுதும் காயத்ரியை மூச்சாய் விடும் மூச்சு வேலைகள்.

***

இப்பொழுது அவள் என்னை விளித்தபோது உடனே போகாது நான் என்னையே பார்த்துக்கொள்ளும் பரீட்சை—வீண் பரீட்சை என்று எனக்கே தெரியும்.

சட்டென அவள் விரலை உதறினாள். அவள் முகம் வலியில் சுளித்தது. அவசரமாய் அவளிடம் ஒடினேன். விரல் நுனியில் இரத்தம் துளித்து நின்றது. அவள் விரலை வாயில் வைத்து உறிஞ்சினேன். அதில் ஒரு இன்பம். அல்லது ஆறுதல். அல்லது நம்பிக்கை. இப்படியாவது அவள் நானாவோ, நான் அவளாவோ ஆகிவிட முடியாதா?

“நம் கோட்டக்காரன் உபயோகமில்லை” என்றாள் கோபத்துடன்.

“நீதானே செடியைச் சீண்டிக் கொண்டிருந்தாய்! நீ முள்ளைக் குத்திக் கொண்டால், அது தோட்டக்காரன் பாவமா?”

“அதெல்லாய் எனக்குத் தெரியாது. அப்பா, எப்படிக் கடுக்கிறது! நாளைக்கு இந்தச் செடி என் ஜன்னலண்டை வேண்டாம். தோட்டம் தோட்டமாவா இருக்கிறது: காடான்னா இருக்கு!

“சின்னான் தோட்டத்தை இப்படியா வைத்திருந்தான்? இதென்ன இலைகூட அசையவில்லையே! அடேயப்பா, எப்படி புழுங்கறது! நான் குளிக்கப் போறேன்—”

ஒரு மெட்டை சீட்டியடித்துக்சொண்டு வெளியே சென்றாள்.

நான் ஜன்னலண்டை நின்று கொண்டிருந்தேன். நேரம் போவது தெரியவில்லை.

சின்னான் இறந்து நாலைந்து மாதங்களாகிவிட்டன. அவன் முடிவும் அவன் மனைவியின் முடிவும் என் கண் முன் நின்றது. சின்னானுக்கும் பொன்னிக்கும் மணமாகி ஒரு வருடமாகவில்லை. பொன்னி நிறைகர்ப்பிணி, அடுப்புக்குச் செத்தை பெருக்கப்போனவள், ஒரு பாழுங்கிணறில் தவறி விழுந்துவிட்டாள். கிணற்றில் ஜலங்கூட அவ்வளவு இல்லை.

அவளுடைய அபயக்குரல் கேட்டுத்தானோ, அல்லது அந்த விபரீதத்தின் உணர்ச்சி கன வேகத்தில் காற்று வழி பறந்து வந்து வயிற்றில் சுறிலென வைக்கும் நெருப்பின் பொறிதானோ— இன்னமும் நிச்சயப்படவிலலை. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன் அப்படியே செம்மட்டியைப் போட்டுவிட்டு “பொன்னீ பொன்னீ” என்று கத்திக்கொண்டு ஓடினான். பார்த்தவர்களும் கேட்டவர்களும் சொன்னது இதுதான்.

இரண்டு பிணங்களையும் கிணற்றிலிருந்து ரொம்பவும் சிரமப்பட்டுத்தான் எடுக்க முடிந்தது. கிணற்றில் ஜலத்தின் ஆழம்கூட அதிகமில்லை. விஷக்காற்று இருவரையும் அமுக்கிவிட்டது.

இரு உடல்களையும் பிரிக்க முடியவில்லை. ஒன்றோடு ஒன்று பிண்ணிய தழுவலில் விறைத்துவிட்டன. ஒரே தடுக்கில் இரண்டையும் மயானத்துக்கு எடுத்துச் சென்றார்களாம். வழி பூரா வீதி பிதுங்கும் கூட்டமாம். பல நாட்களுக்கு இதே பேச்சு.

பத்து நாட்கள் கழித்து, கின்னானின் தாயார் தன் பிள்ளைக்குச் சேர வேண்டிய சம்பளத்தை வாங்க வீட்டு வாசலில் நின்றாள். வயது ரொம்பவும் ஆகாவிட்டாலும், சருகாய் வற்றிச் சுருங்கிக் குன்றிப்போன உடல், அவளைப் பார்க்க ஸஹிக்கவில்லை. எழுந்து வந்து கட்டிக் கொண்டேன்.

“இந்தக் கட்டையைத் தீண்டாதே சாமீ—” அவள் குரலில் துக்கம்கூடத் தெரியவில்லை. ஜன்ம அந்தியின் அசதிதான் வெளிப்பட்டது. ‘கண்ணால் பார்த்தால் கூட விடியாது. எனக்கு மாத்திரம் இன்னமும் வேளை வராமல் காத்துக்கிட்டு நிக்கிறேன். காயும் பூவும் கொத்துமா அவங்க போய் சேர்ந்துட்டாங்க. பொன்னி நல்ல பொண்ணு சாமி. என்னை நல்லா கவனிச்சிட்டிருந்தா. என் மவன் வேறு அவள் வேறுன்னு சொல்லல்லே. பொன்னி நல்ல போண்ணு சாமீ. அவங்க நினைப்பிலே நீ எனக்கு ஒரு உபகாரம் பண்ணனும். அந்தக் கிணத்தைப் பொறுப்பா, நீ செலவு பண்ணி மூடியாவணும், இந்தப் பலியோடு அதன் வவத்துப் பசியாறட்டும். வேறே பலி வாங்க வேணாம்—”

ஒரு ஆண் ஒரு பெண், அவர்களின் முழு வித்து, மூன்றும் யாருக்குப் பலி? திடீரென ஒன்றுமே புரியாத ஒரு பயங்கரமான ஏக்கம் என்னைக் கவ்வியது: என்னைச் சுற்றி யாவும், தோட்டம், வீடு, சுவர்கள் அறையிலிருக்கும் சாமான்கள் எல்லாமே சர்வநாசப் புயலில் விண்டு, இடிந்து பொடிந்து என்னையும் தம்முடன் இழுத்துச் செல்வது போலிருந்தது.

“காயத்ரீ! காயத்ரீ!” என்று கூவிக்கொண்டே ஸ்னான அறைக்கு ஒடினேன். கதவைப் படபடவென்று தட்டினேன்.

“யாரது?”

“நான்தான், கதவைத் திற.”

“நான் இன்னும் குளித்து முடியல்லையே, என்ன அவசரம்?”

“பரவாயில்லை திறவேன்—”

கதவுத் தாழ்ப்பாள் விலகிற்று. கதவு மெதுவாய்த் திறந்தது.

“என்ன வால்மீகி?”

அவள் அவசரமாய்த் தன் மேல் ஆடையை சுற்றிக் கொண்டிருந்தாள். கூந்தல் சிங்கத்தின் பிடரிபோல் கனத்து, முரண்டு, விசிறிக்கொண்டு பின்னோக்கி எழுந்தது. தோள்களில் நீர்த்துளிகள் ஸ்படிகம் போல் நின்றன. சந்தன சோப்பின் மணம் கப்மென அவளிடமிருந்து எழுந்தது.

“காயத்ரீ!” அவளைத் தழுவிக்கொள்ள முயன்றேன்.

“என்னைவிடு—விட்டுடு—விடுன்னு” தன்னை விடு வித்துக்கொள்ள முயன்றாள். ஆயினும் அவள் இடையைச் சுற்றி என் கை இறுகிற்று. அவள் கண்கள் கடுங்கோபத்தில் சிவந்தன. தப்ப வழியின்றி மடக்கப்பட்ட மிருகம் போல் கோபாவேசமாகி விட்டாள். ஒரு நெட்டு நெட்டி என்னைத் தள்ளினாள். நான் பின்னுக்கு விழுந்து கொண்டே போய், என் மண்டையின் பின்புறம் ‘மடே’ரென மோதிற்று. கால்கள் முழங்காலுக்குக் கீழ் ஆடிப்போயின, நான் குப்புற விழுந்திருப்பேன்.

“வால்மீகி!”

அலறிக்கொண்டே அவள் என்னை நோக்கி வருவது தான் தெரிந்தது. அப்புறம் நினைவு இல்லை.

எனக்குப் பிரக்ஞை தெளிந்தபோது, கட்டிலில் கிடந்தேன். அவள் முகம் கவலையோடு என்மேல் கவிந்தது. என் கண் திறந்ததும் என்மேல் விழுந்து என்னைக் கட்டிக்கொண்டாள்.

“ஆ!” வலியில் முனகினேன். மண்டையின் பின்புறம் ‘விண் விண்’னெனத் தெறித்தது.

“நீ செத்துப் போயிட்டையோன்னு பயந்துாட்டேன்” அவள் கண்ணீரும் எச்சிலும் கன்னத்தை நினைத்தன.

நான் எழுந்திருக்க முயன்றேன். “உஷ்—” அவள் என்னை மெதுவாய் மறுபடியும் படுக்கையில் தள்ளினாள்.

“காப்பி சுடச் சுடக் கொண்டு வந்திருக்கிறேன், ஒரு வாய் குடி. சும்மா படுத்துக்கோ; இப்போ எழுந்திருக்க வேண்டாம்.”

படபடவென மும்முரமாய் மழைச்சாரல் இறங்கிக் கொண்டிருந்தது. கோடை மழை. ஜன்னல் கதவுகள் படபடவென புத்தகத்தின் ஏடுகள் போல் அடித்துக் கொண்டன.

“ஒரு நிமிஷம் இதோ வந்தூட்டேன்.”

எல்லா ஜன்னல்களையும் இழுத்து முடிக் கொக்கிகளைப் போட்டாள். அறையில் இருள் சூழ்ந்தது. நான் அவளைச் சரியாய்ப் பார்க்க முடியவில்லை. மெதுவாய் என் முகத்தைத் தொட்டாள்.

“என்மேல் கோவமா?” பூவினாற் அடித்தாற்போல் அவள் குரல் என்மேல் மெத்தென இறங்கிற்று.

“No my dear...... ” நிஜமாகவே எனக்கு ஏன் கோபம் வரவில்லை?

“விண்—விண்” மண்டையுள் யாரோ சுத்தியால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“வால்மீகி, நீ ஏன் சில சமயங்களில் புரியாதபடி நடந்துகொள்கிறாய்?”

எனக்கும்தான் தெரியவில்லை.

“காயத்ரீ!”

“—ம்—ம்?”

“உனக்கு என்னைப் பிடிக்கிறதோ?”

இருளில் அவள் புன்னகை புரிகிறாள். என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் எனக்குத் தெரியும்

“ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“எனக்குத் தெரியனும்.”

“பிடிக்காமல் என்ன?”

“உண்டோ என்றால் இல்லாமல் என்ன என்பது பதில் அல்ல.”

“பின் என்னவாம் பதில்?”

“ஒன்று உண்டு அல்லது இல்லை என்பதுதான் பதில்?”

“.........”

“என்ன சும்மாயிருக்கிறாய்?”

“பிடிக்கிறது—” என்று இழுத்தாள்.

“இல்லை.”

“இருக்கிறது என்றால் இல்லை என்கிறாய்,நான் என்ன சொல்ல?” அவள் திகைப்பு பரிதாபமாயிருந்தது.

“பிடிக்கிறது என்றால் போதாது”— என் நெஞ்சில் கிலேசம் புகுந்தது.

“நீ அதானே கேட்டாய்?”

“ஆமாம். ஆனால் பிடிக்கிறது என்கிறதே போதாத வார்த்தை. நான் வேண்டுவதைத் தெரிவிக்க வேகம் போதாத வார்த்தை. பிச்சைக்கார வார்த்தை. புஷ்டியில்லாத தரித்திர வார்த்தை அந்த வார்த்தைமேல் எனக்குக் கோபம் முறுக்கேறிக்கொண்டே போயிற்று.

அவள் ஏதோ முனகினாள். சரியாய்க் காதில் விழவில்லை. “நீ சொல்வது உனக்குத்தான் புரியும்” என்கிற தினுசில் ஒரு முனகல்.

வெளியில் அடைமழையாய்ப் பெய்துகொண்டிருந்தது.

“காயத்ரீ. உன்னைப் பிரிந்து ஒரு கணம்கூட என்னால் இருக்க முடிவதில்லை. நீ என்னை விட்டுப் போனதும் எனக்கு ஒரு திகில் பிடித்துக்கொண்டது. அதனால்தான் அப்படி உன்னிடம் ஆவலுடன் ஒடி வந்தேன்.”

“ஒ! அதுமாதிரியா? இப்போ கொஞ்சம் புரிகிறது—” மறுபடியும் அவள் விரல்கள் என் முகத்தைத் தொட்டன. “உன் முகத்துக்கு உன் மூக்குக் கொஞ்சம் பெரிதுதான்—”

அவள் கையை என் முகத்திலிருந்து தள்ளினேன் இப்போ புரிந்துகொண்டேன் என்றாயே!”

பெருமூச்செறிந்தாள். “நிஜம்மா சொல்லித்தான் ஆகணுமா?”

“ஆம்” என் தொண்டை ஏன் இப்படி வரள்கிறதோ?

“சொல்லித்தான் ஆகனுமோ?”

“ஆம் ஆம் ஆம்” நான் பொறுமையிழக்க ஆரம்பித்து விட்டேன்.

“வால்மீகி” — அவள் வார்த்தைகள் தயங்கித் தயங்கிப் புறப்பட்டன. நான் அவளிடம் வேண்டுவதை அவளும் சேர்ந்து தேடுவதேபோல், “வால்மீகி நான் தீர ஆலோசணை பண்ணி என் மனசை நன்றாய் அலசி அலசிப் பார்த்துச் சொல்லப்போனால்— சொல்லப் போனால்—”—நான் காத்துக்கொண்டிருந்தேன்.

“சொல்லப்போனால்—”

“டாண், டாண், டாண்!!!—”

கடிகாரத்தின் மணி அடித்தது. அதன் சப்தம் என் மார்பில் ஓங்கி அறைந்தது. திடுக்கென மௌனம் சூழ்ந்தது. நான் களைப்புடன் படுக்கையில் சாய்ந்தேன். ஊ—ஹூம். இனி நான் தேடுவதற்கு உண்மையான பதில் கிடைக்காது. நானும் அவளும் லயித்துக்கொண்டிருந்த அந்த நுட்பமான சுருதி கலைந்துவிட்டது. மறுபடியும் அந்த சுருதி கிட்டாது. அந்தரத்தில் வடிவமாகி, அந்தரத்திற்குச் செல்லும் நூலேணியில் பாதி ஏறியும் விட்டபின், அந்தச் சதிகாரச் சப்தம் வாள்போல் ஏணியையே அறுத்தாகிவிட்டது. அந்தக் கடிகாரத்திற்கு எப்பவுமே ஏளனம் தான். மணி ஒன்றென்றால் பன்னிரண்டு அடிக்கும். பன்னிரெண்டானால் மூன்று அடிக்கும்.

“காயத்ரீ.”

“என்ன?”

“நான் விரும்பிய அளவில் கிஞ்சித்தேனும் இருக்கும் அல்லவா? இன்றைக்கில்லாவிட்டாலும் என்றேனும்.”

“இதென்ன இந்தப்பேச்சு? எனக்கு அலுத்துப்போச்சு வால்மீகி. என்னவோ பூனை தன் வாலையே தான் சுற்றிச் சுற்றி வருகிறாப்போல—”

வாஸ்தவந்தான். நான் ஏன் இவளைப் பிச்சை கேட்கிறேன்?

கிளுக்கென்று சிரிப்பு அவள் திக்கிலிருந்து ஒலித்தது.

“இல்லை எனக்கு ஒன்று நினைப்பு வந்தது. உன்னை நான் ‘வாங்கோ போங்கோ’ன்னு மரியாதை வைத்துப் பேசவில்லையேன்னு உனக்கு வருத்தம் உண்டா?”

“எனக்கு உன் மரியாதை வேண்டாம்.”

எனக்குச் சற்றுக் கோபம்தான் வந்தது. அவள் என்னைக் கேலி செய்வது போலும் தோன்றிற்று.

“வால்மீகி”

“...........”

“வால்மீகி!!”

“...........”

“தூக்கமா?”

“இல்லை. என்ன?”

“நான் கர்ப்பமாயிருக்கிறேன்.”

அவள் குரல் நிதானமாய்ப் பூரண வடிவுடன் இருளிலிருந்து பிரிந்து வந்தது.

கடிகாரத்தின் வினாடிகள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தம்மைச் சொடுக்கிக்கொண்டு சுவரிலிருந்து புறப்பட்டு இருளோடு கலந்தன.

“வால்மீகி நீ ஏதாவது சொன்னாயா?”

“இல்லை. ஆனால் நீ சொல்லியது நல்ல விஷயம்” என்றேன்.

“எனக்குப் பிடிக்கல்லே” என்று சிணுங்கினாள்.

“எல்லோருக்கும் இப்போ அப்படித்தான் இருக்குமோ என்னவோ?” என்றேன்.

“அப்படியில்லை. எனக்கு நிஜமாவே, எப்பவுமே பிடிக்கல்லே. பார் இன்னும் கொஞ்சநாளில் வயிறு அசிங்கமாய் வீங்கிவிடும்—பார்க்க சகிக்காது.”

“இப்படிப் பேசிக்கொண்டு போனால் அதற்கு எல்லையே இல்லை. உலகத்தில் எந்த உயிர் பிறந்தாலும் இந்த நிலைமைகளையும் கட்டங்களையும் அடைந்த பின் தான் வெளிப்பட்டுத்தான் தனியாகிறது. என் தாயும் அப்படித்தானிருந்திருப்பாள். நீ பிறக்கு முன் உன் தாயும் அப்படித்தானிருந்திருப்பாள். நானாவது என் வீட்டுக்கு ஒரே பயிர். உன் வீட்டிலோ உனக்கு இரண்டு வளர்ந்த தங்கைகள், இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். இத்தோடு உன் தாய் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டிருக்கிறாள்.”

“நீ என் தாயாரைக் கேலி பண்ணவேண்டாம்—” என்றாள், சீற்றத்துடன்.

“நான் ஒருவரையுமே கேலி பண்ணவில்லை. நீ தாய்மையையே வெறுக்கும்போது, நீ வளர்ந்திருக்கும் கோளாறை நினைத்துத்தான் வருந்துகிறேன்.”

கொஞ்சநாழி இருவரும் மௌனமாயிருந்தோம். அவரவர் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தோம்.

காயத்ரியின் தாயரைப்பற்றி மனமில்லாமல் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். மாதத்தில் இரண்டு மூன்று முறை பெண்ணைப் பார்க்கவருவாள். அதனால் மாத்திரம் ஒன்றும் மோசமாகிவிடாது. ஆனால் வரும் போதெல்லாம் அவள் பேசும் மாதிரியும் நடந்துகொள்ளும் ரீதியையும் பார்த்தால் அவள் பெண்ணை நான் உயிரோடு வைத்திருக்கிறேனா அல்லது கொன்றுவிட்டேனா என்று அவ்வப்போது உளவு கண்டுபோக வருவதுபோல் தோன்றும்.

தாயாரும் பெண்ணும் எப்போதும் ரகசியம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குள் அவ்வளவு பொத்திவைக்கும் விஷயங்கள் என்ன இருக்குமோ? என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திக்கொண்டு முகத்தைக்கூட சிரமப்பட்டு மாற்றிவைத்துக்கொள்வார்கள். முதல் இரண்டு மூன்றுமுறை எனக்கு வேடிக்கையாயிருந்தாலும், போகப் போக வெறுப்பைத்தான் விளைவித்தது. அவள் வந்தால் காயத்ரீகூட பச்சோந்தி மாதிரி நிறம்கூட மாறிவிடுவதுபோல் எனக்குத் தோன்றும்.

பல சமயங்களில் காயத்ரியின் தாயார் மெய்யாகவே காயத்ரிக்குத் தாயார் தானா, என்று நான் வியப்புறுவதுண்டு. குள்ளஜாதி மாடுபோல் பருத்துக் கட்டை குட்டையான உடல். முகத்துச் சதையில் புதைந்து இடுங்கிப்போன கண்களில் ஒருதரமேனும் நான் கனிவு கண்டதில்லை. சுமுகத்தையே கொன்றுவிட்டு சூன்யக்காரி போல் கடுகடுவென்றிருப்பாள். ஒருவேளை அப்படியிருந்தால்தான் தோரணையென்று பாவித்தாளோ என்னவோ? கம்மிப்போய் எப்பவும் இரட்டைக் குரல் பேசும் தோரணையையும், நடந்துகொள்ளும் பாவனையையும் பார்த்தால், கடவுளிடம் உலகத்தையே விலைபேசி வாங்கி விட்டதாகத் தோன்றும். ஆனால் காயத்ரியின் தகப்பனார் கடனிலேயே மூழ்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. “ஸீஸ"னுக்கு ஸீஸன் தவறாமல் குதிரைப் பந்தயத்தில் சுளை சுளையாய்ப் பணத்தைத் தோற்பதாகக் கேள்வி. அவர் செலவுகளும், சிரமப்பட்டு காப்பாற்ற முயலும் அந்தஸ்துமே கட்டுக்கடங்காத குதிரையாய் அவர்கள் குடும்பத்தைச் சரிவில் இழுத்துக்கொண்டு போயிருந்தன. ஆனால் அவரோ அவர் மனைவியோ அவர்களுடைய பொறுப்புக்களில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. காற்றில் கட்டிய கோட்டை...திரிசங்கு சுவர்க்கம்...”

பிடிக்காதவர்களைப் பற்றி எண்ணினால் பிடிக்காதன தான் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய வெறுப்பான சிந்தனையை அவள் குரல் இடைமறித்து வெட்டியது.

“என்ன வேணுமானாலும் சொல்லு. எனக்குப் பிடிக்கவில்லை.”

“Alright. பிடிக்க வேண்டாம். என்ன செய்யப் போகிறாய்?”

என்னவோ முனகினாள்.

“ஏதாவது சொல்ல வேணுமென்றிருந்தால், பளிச்சென வெளிச்சமாய்ச் சொல்லு. மொண மொணக்காதே” கோபம் குறுகுறுவென்று என் நெஞ்சில் எங்கோ எலி பிராண்டிற்று. அதனால் நெஞ்சுகூட வலித்தது.

“ஆமாம், ஏற்கெனவே சொல்ல வேண்டாம். இங்கே வந்தது முதல் நான் எங்கே போயிருக்கிறேன்? என் வீட்டில் இப்படித்தான் இருப்பேனா? நானும் என் தங்கைகளும் ஊரைக் கொட்டை பரப்பியிருப்போமே! வாரம் ஒரு சினிமா தவறமாட்டோம். என்ன குஷியாய் பொழுது போகும் தெரியுமா? அக்கம்பக்கத்தில் இங்கே பேசக்கூட ஒருவருமில்லை. நீதான் என்னைத் தங்கச்சங்கிலிபோட்டுக் கட்டி வைத்திருக்கிறாயே! வால்மீகி, நான் என்னமோ நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால் நிஜமா எனக்கு இங்கே bore அடிக்கிறது...”

எனக்கு அப்பொழுது திடீரென ஒரு விநோதமான எண்ணம் உதித்தது. ஓடிக் கொண்டிருக்கும் காற்றை நான் இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டு, அத்துடன், “நீ என் மூச்சு—நீ இல்லாமல் நான் இருக்க முடியாது. உனக்கும் என்மேல் அதேமாதிரி இருக்கிறதா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உன்னுடைய அரூபத்தில் என்னுடைய வித்து ரூபமாயிருக்கிறது” என்று என்னென்னவோ பேரம் பேசிக்கொண்டு, கண்ணும் காதும் நெஞ்சும் இலாது, உயிருக்கு உயிராய்த் தான் இயங்கினாலும் தனக்கென்று ஒரு உயிர்த்தன்மை இலாத காற்றோடு ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கிறேன். கண்ணுக்கும் புலனாயும் புலனாகாததுமாய் எண்ணிலா ஜீவராசிகளும் அணுக்கோசங்களும் சதாசர்வகாலம் காற்றில் நீந்தியபடி தான் இருக்கின்றன. ஆனால் காற்றுமாத்திரம் தனிமலடு.

ஓடும் காற்றை இழுத்துப் பிடித்துக்கொண்டால் அது விஷமாய்த்தான் மாறிவிடுகிறது. எனக்குக் குப்பென்று வேர்த்தது. மூச்சு திணறிற்று.

“காயத்ரீ, தயவுசெய்து ஜன்னல்களைத் திற.”

“மழையடிக்கிறது காது கேட்கிறதா?”

“பரவாயில்லை.”

“அறையில் தெப்பல் உத்ஸவம் கொண்டாட வேண்டியதுதான்.”

‘பரவாயில்லை.”

அவள் ஒரு கதவைத் திறந்ததுமே சாரல் ‘விர்’ரென்று வீசிக்கொண்டு என் முகத்தில் அறைந்தது.

“இப்போ திருப்தியாகி விட்டதா?”

“இல்லை, எல்லாக் கதவுகளையும் திறந்து விடு.”

காற்றும் மழையும் சீறிக்கொண்டு உள்ளே மோதின. என் நெஞ்சு...என் நெஞ்சு...சொக்காயை மார்ப்புறம் திறந்துகொண்டு கட்டிலில் கிடந்தேன்.

கீழுதடைத் திருகிக்கொண்டு ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

***

ஆஸ்பத்திரியின் கட்டிடம் உயர்ந்த மேட்டில் கம்பீரமாய் நிற்கிறது. ஆனால், அதன் தோற்றம் நெஞ்சில் தைரியத்தை ஊட்டுவதற்குப் பதிலாகச் சில்லிடத்தான் செய்கிறது.

காரின் பின் ஸீட்டில் காயத்ரி, மூடிய கண்களுடன் அவள் தாயின்மேல் சாய்ந்துகொண்டிருக்கிறாள். முகம் சுண்ணாம்பாய் வெளிரிட்டுவிட்டது. அவள் முகத்தின் பக்கத்தில், அவள் தாயின் முகம், திருஷ்டி கழிக்க வைத்த பொம்மைபோல் அருவருப்பாய் காட்சியளிக்கின்றது. பின்வரும் விபத்தின் முன் அறிகுறிபோல் அவள் முகபாவம் எப்பவும் என்னை அச்சுறுத்துகிறது.

“ஆ மிஸ்டர் வால்மீகி. வந்துவிட்டீர்களா? வாருங்கள் வாருங்கள்!—” டாக்டர் எங்களை வரவேற்கிறார். “நர்ஸ்! இந்த அம்மாவை உள்ளே கூட்டிக்கொண்டு போ! உட்காருங்கள் மிஸ்டர் வால்மீகி, என்ன நீங்கள் நாளுக்கு நாள் உள்ளுக்கு வாங்கிக்கொண்டு போகிறீர்கள்? உங்கள் முகம் நன்றாயில்லையே!”

“எல்லாம் கவலைதான்” என்கிறேன். அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு, “No, No, No!” டாக்டர் அடித்துப் பேசுகிறார்.

“இதென்ன எல்லோருக்கும் நேருகிறதுதானே! இதைப் பற்றி கவலைப்பட்டு சாத்தியப்படுமா? என்ன உங்கள் கண்களில் ரத்தமில்லை. நாடி பதட்டமாய் பேசுகிறது.ஜூரம் இருக்கிறதா? I must examine you”

“எனக்கென்ன அவசரம் டாக்டர்?” என்றேன் அலுப்புடன். “நான் அப்புறம் வந்து உடம்பைக் காண் பித்துக் கொள்கிறேன்.” என் கவனம் கலைய ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து அவள் முக்கல்களும் முனகல்களும் கேட்கையில் என் மனம் சஞ்சலிக்க ஆரம்பித்துவிட்டது.

“நீங்கள் மனசை வாட்டிப்பதில் பிரயோசனமில்லை. அது அது அதனதன் வேளையில்தான் வரும். இன்னும் நிஜவலிக்கு எவ்வளவோ நேரமிருக்கிறது. இதுதான் முதல் பிரசவம், சிரமமாய்த்தானிருக்கும்—”

காயத்ரீயின் தாயார் உள்ளிருந்து வந்தாள். அவள் முகம் கல்லாலடித்தாற்போல கடினமாய், உக்கிரமாயிருந்தது. குற்றம் சாட்டும் கண்களுடன் என்னைப் பார்த்தபடியே, “என் பெண் ரொம்பக் கஷ்டப்படுகிறாள்” என்றாள். கம்மிப்போய்க் கர்ண கடுரமாய் இரட்டைக் குரல் பேசும் கட்டை ஆண் குரல்.

“டாக்டர், என் பெண் ரொம்பவும் துடிக்கிறாள்.”

“துடிக்கட்டும்.”

அவள் பார்வை அவர் மேல் திரும்பிற்று. முகம் இறுகிற்று. கண்கள் ஊசிமுனைகளாய்ச் சிறுத்தன.

“துடிக்கட்டும்; துடித்தால் ஒன்றும் மோசமில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னால் நீங்கள் வந்தபோதே சொன்னேன். ‘உங்கள் பெண் நன்றாய்க் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும். உடம்பு வணங்கி தேகத்தை உழைக்க வேண்டும். அப்போத்தான் பிரசவ வேளைக்குச் சௌகரியமாயிருக்கும்’ என்று கேட்டேளோ?”

காயத்ரியின் தாயார் நிமிர்ந்து கம்பீரமாய் நின்றாள். உலகத்தை விலை பேசுகையில் கடவுள் முன்னிலையில் அப்படித்தான் நின்றிருப்பாள்.

“வீட்டில் சமையல்காரி இருக்கையில் என் பெண் ஏன் வேலை செய்யனும்?”

“Very good உங்கள் பெண்ணின் குழந்தையை உங்கள் சமையல்காரி பெறுவதற்கு நாங்கள் இன்னும் புது வழி கண்டுபிடிக்கவில்லை.”

அவள் தலையை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்.

டாக்டர் சிகரெட்டைப் புறங்கையில் தட்டிக் கொண்டார்.

“இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் மந்திரவாதியா, டாக்டரா? மிஸ்டர் வால்மீகி, எனக்கு வரவர ஒன்றுமே பிடிக்க வில்லை. இந்தக் காலத்து சந்ததியே No good. இந்த சந்ததிக்குப் பொறுப்பு இல்லை. ஒத்துழைப்பு இல்லை. லட்சியங்களில்லை. மனமில்லை. நான் என்ன செய்ய முடியும்? இயற்கை அதன் வழியில் வேலை செய்ய, அத்தோடு ஒத்து உதவியாயிருக்க வழி காண்பிக்கத்தான் முடியும். ஆனால் இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இவர்களுக்கும் இவர்கள் பெற இருக்கும் குழந்தைகளுக்கும் சம்பந்தமேயில்லைபோல் பேசுகிறார்கள். அதெல்லாம் டாக்டர் வேலை என்கிறார்கள். இது வேடிக்கையா யில்லை?”

அவசரமாய்ப் புகையை இரண்டு இழுப்புக்கள் வெளியே விட்டார். அவர் என்னத்தையோ நினைத்துக் கோண்டு முறுக்கேறிக் கொண்டிருந்தார்.

“இதோ பாருங்கள், இவ்வுலகத்தில் ஒரு உயிரின் பிறப்பைவிட, அழகான, அற்புதமான ஆச்சரியம் எது இருக்கிறது? பூமியெனும் இவ்வளவு பெரிய கிரஹத்தை மூச்சென்ற பேரில், நூலிழையளவில் ஒரு ஸ்ன்னக் காற்றுத் தானே ஏந்திக் கொண்டிருக்கிறது? இதைவிட உங்களுக்கு விந்தை என்ன வேண்டும்? இந்த ஸ்ன்னமான காற்று இல்லாவிட்டால் உயிரேது? உயிரில்லாவிட்டால் உங்கள் உடலுக்கு யோக்யதை ஏது, உலகமே ஏது? உலகின் உடல்கள் அத்தனைகளிலும் இந்த உயிர் நூல் கோர்த்துக் கொண்டு இந்த உலகம் இயங்குகிறது. அதனால் ஒரு குழந்தைப்பேறு, சிருஷ்டியே, எவ்வளவு பெரிய பொறுப்பு? இந்தப் பிராண நூலைப் பின்னமாகாது காப்பாற்றுவது எவ்வளவு மகத்தான, லட்சியமான, பெருந்தன்மையான காரியம்? ஆனால் யார் இப்படி நினைக்கிறார்கள்? பெண்கள் பெரியவர்களாகிறார்கள். ஸ்திரீகளாகிறார்கள். ஆனால், புத்தியின் வளர்ச்சி மாத்திரம் முழங்கால் மட்டோடு நின்றுவிடுகிறது. சிட்டுக் குருவி மாதிரி படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு தத்தித் தத்தித் தரையோடு தவிப்பார்களே தவிர, காரிய பாகத்தில் ஒன்றுமில்லை. பெரிய குழந்தைக்குச் சின்னக் குழந்தை பிறக்கிறது. இந்த சந்ததி எப்படி சரியாயிருக்கும், சரியாயிருக்க நியாயமேது? No இது ஒரு சபிக்கப்பட்ட சந்ததி. தாய்மைக்கு லாயக்கற்றவர்கள். தாயார்களாவது ஒரு சாபம். அவர்களுக்குக் குழந்தையைக் கொடுப்பவர்களும் குற்றவாளிகளே. சமூக சத்ருக்கள், That is it, a doomed generation.”

கைச் சிகரெட்டை நசுக்கிவிட்டு, இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தார். அவர் என்னோடு பேசவில்லை. வாய்விட்டுச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

“வெறும் குளோரோபாரம், மாத்திரை, மருந்துப் புட்டிகள், ஊசி இவைகளால் மாத்திரமே எல்லாம் ஆகிவிடுமா? மனமும் வேண்டும். கர்ப்பந்தரித்தால் மட்டும் போதுமா? அந்தப் பிள்ளையைப் பெற்று எடுத்து, வளர்த்து, மனிதனாக்க மனம் வேண்டும். ஆசை வேண்டும். பொறுப்பு வேண்டும். தைரியம் வேண்டும். ஆத்ம பலம் வேண்டும். இந்த லட்சியங்களில்தான் இந்த உயிர் நூல் வளர்கிறது. என் டாக்டர் பட்டத்தால் அல்ல. பிள்ளையா, சாணியா? என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இந்த விஷயத்தில் மனிதன் மிருகங்களிடம் பிச்சையெடுக்க வேண்டும், மிஸ்டர் வால்மீகி—”

அவர் கண்கள் கொதித்தன.

“என் தாயார் என்னைப் பெற்றபோது இந்தக் கத்தி கவடா எல்லாம் இருந்ததா என்ன? மிஸ்டர் வால்மீகி, இன்னும் நேரமிருக்கிறது. உங்களுக்கு நான் ஒரு சின்னக் கதை சொல்லப்போகிறேன், நான் பிறந்த கதை.

சிகரெட்டை எறிந்துவிட்டுக் கையைக் கோர்த்துக் கொண்டு அவர் நாற்காலியில் சாய்ந்தார்.

“நான் கிராமத்தில் பிறந்தேன். என் தகப்பனார்தான் வீட்டுக்கு மூத்தவர். கூடப்பிறந்த தம்பிகள் நாலைந்து பேர்கள். அவரவர்களுக்கு காலா காலத்தில கலியாணமாகி, வேண்டிய குழந்தைகுட்டிகள் பிறந்தன. எல்லாம் ஒரே கூட்டுக் குடும்பம். பாட்டிதான் குடும்பத்துக்கு அதிகாரி.

“என் பெற்றோர்களுக்கு மாத்திரம் சந்ததி ஏற்படவேயில்லை. வேண்டிக்கொள்ளாத தெய்வம் இல்லை. செய்யாத பூஜை, தருமங்கள், செலுத்தாத பிரார்த்தனைகள் இல்லை. அந்தக் காலத்தில் கால்வயிற்றுக் கஞ்சிக்கு லாட்டரி அடித்தாலும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஒரு குழந்தையில்லாவிட்டால் அது ஒரு பெரிய ஈனம். நிறைய குழந்தை குட்டிகளோடு வாழும் நாலைந்து ஓரகத்தியர் களுக்கிடையில், கூட்டுக் குடும்பத்தில், வீட்டுக்கு மூத்த மருமகள் மலடாக வளைய வந்தால் இடி சொல்லுக்கும். மறைவான கேலிக்கும் கேட்கணுமா? ஆனால் என் அம்மா அதிகமாய்ப் பேசமாட்டாளாம். சில சுபாவங்கள் அப்படி; எல்லாவற்றிற்கும் மௌனமான புன்னகை. அவரவர்களுக்கு இஷ்டமான பதிலையும் அர்த்தங்களையும் அவரவர்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். மக்கு என்றும் நினைத்துக் கொள்ளலாம்.

“ஆனால் ஒருநாள் என் தாயும் கருத்தரித்தாள் என்று நிச்சயமாயிற்று. இதைப்பற்றி என் தாயாரைவிட வேறு யாரும் ஆனந்தப்பட்டிருக்க முடியாது. நிறை கர்ப்பத்தில் என் தாய் விளிம்புகட்டிய குடம்போல், சமாதியை யொத்த பரவச நிலையில் வளைய வந்தாள் என்று சொல்லக் கேள்வி. யாருடனும் பேசாமல், முகத்தில் தேங்கிப் போன புன்னகையுடன், தனக்குள் தானே தன் உதய ராகத்தை மெதுவாய்ப் பாடிக்கொண்டு, தன் உள் கண்களால் தன் கர்ப்பத்திலிருப்பதைத் தான் தரிசித்துக்கொண்டு, தன்னில்தான் லயித்து.........

“பிரசவ வேளையும் வந்துவிட்டது. இடுப்பு வலியும் எடுத்துவிட்டது. அம்பட்டனின் தாயார் வந்துவிட்டாள். அவள்தானே ஊருக்கெல்லாம் மருத்துவச்சி! வேறு நேரங்களில் வாசற்படி தாண்டி உள்ளே வர அனுமதியில்லா விட்டாலும், இப்போ அவள் இட்டதுதான் சட்டம். ரேழியறையை ஒழித்துக் கொடுத்தாகிவிட்டது. பிரசவக் காரியையும் அவளையும் தவிர அறையில் ஒருவரும் இருக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துவிட்டாள். பிரசவமும் ஆயிற்று. ஆனால் கடைசி சமயத்தில் எக்கச் சக்கமாய் ஏதோ நேர்ந்துவிட்டது. மருத்துவச்சி வெளியே வந்து ஒரு நிமிஷம் மிரள மிரள விழித்தாளாம். பிறகு உள்ளே போனாளாம். உடனே ஒரு பெரிய அலறல் கேட்டது. குழந்தை கத்திக்கொண்டு விழுந்துவிட்டது. ஆனால் அம்மா மூடிய கண் திறக்கவேயில்லை.

“அதனால் எது நிற்கிறது? நாட்களாயின. பத்து வருஷங்கள். என் தகப்பனார் மறு கலியாணம் பண்ணிக் கொண்டுவிட்டார். எனக்கு மாற்றாந் தம்பிகளும் தங்கைகளும் பிறந்துகொண்டேயிருந்தனர்.

“நான் ஒருநாள் மாலை இடுப்புமுண்டைத் தலையில் கட்டிக்கொண்டு, கோவணமும் அரையுமாய், எங்கள் வீட்டுத் தெருக்கோடியில் ரோஷத்துடன் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தேன். எதிர் வீட்டுத் திண்ணையில் அம்பட்டனின் தாயார் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவளுக்குக் கண் தெரியவில்லை. வயது மரங்களுக்கு ஆகிறமாதிரி ஆகிவிட்டது. முகம் பூரா, வருடங்களின் பாளங்கள்.

என் குரலைக் கேட்டதும் என்னைக் கூப்பிட்டாள்.

“யாரு என்னையா கூப்பிட்டே?”

“ஆமாம், நீ என்ன அரசமரத்து அய்யர் வீட்டுப் பிள்ளைதானே?”

“ஆமா!” (எங்கள் வீட்டில் அரசமரம் ஒன்றும் காணோம். ஆனால் பேர் என்னவோ அப்படித்தான்.)

“இங்கே வா.”

“இப்படிக் குந்து; உங்கிட்டே ஒண்ணு சொல்லணும். உன் ஆத்தாள் குரலாட்டம் இருந்தது. அதனால்தான் அடையாளம் கண்டுகிட்டேன். இன்னுங் கிட்டே வா, அப்புறம் தலை முழுவிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே, என் உடலை ஒரு முறை அடையாளம் கண்டு கொள்வதுபோல் தடவினாள். கொடி கொடியாய் சுருங்கிப்போன அந்த விரல்கள் என்மேல் பட்டுத் தேடு கையில் எனக்கு வெறுப்பாய்க் குறுகுறுத்தது.

“உன் ஆத்தாளுக்கு நான்தான் பிரசவம் பண்ணினேன். அவள் உடம்பிலிருந்து உன்னை நான்தான் எடுத்தேன்.” -

“ஒ!” ஏதோ புரிந்துவிட்டமாதிரி தலையை ஆட்டினேன்.

“எனக்கு நொம்ப நொம்ப வயசாய்ப்போச்சு, இன்னிக்கோ நாளைக்கோ என்னிக்குன்னு தெரியாது. ஆனால் உங்கிட்டே நான் ஒண்னு சொல்லிட்டுப் போவணும்.”

இவள் எனக்கு சொல்ல என்ன இருக்கிறது?

“உன் ஆத்தாளுக்குக் கடைசிலே கெடுபிடியாய்ப் போச்சு. நீ வர வழியா வரல்லே. மார்மேலே ஏற ஆரம்பிச்சுட்டே, வேதனை பட்டுக்கிட்டிருந்தாலும் என் நெஞ்சிலே இருக்கிற கவலையை எப்படியோ கண்டுட்டுது.

“என்னடி ஆண்டாளு?”ன்னு என் கை மேலே தன் கையை வெச்சுக் கேட்டது.

“ஒண்னுமில்லே அம்மா”ன்னு ஏதோ மளுப்பினேன்.

“தைரியமா சொல்லு ஆண்டாளு எனக்குத் தெரிஞ்சுக்கணும்.”

“அம்மா உன் குழந்தை—உசிரோடே வெளிலே வராதுபோல் இருக்குது.”

“ஆ! என்ன?”... உன ஆத்தா துடிச்சுப்பூட்டா.

“அம்மா, நீ வருத்தப்படறதுலே பிரயோசனமில்லே. ஆண்டவன் எப்போ ஒரு தடவை கொடுத்தானோ இன்னொண்ணு கொடுக்காம இருக்கமாட்டான்” என்னு தைரியம் சொன்னேன்.

“ஐயோ எனக்கு என் குழந்தை வேணுமே! எனக்கு என் குழந்தை வேணுமே!!”

“உன் ஆத்தாள் முகத்தை இப்போகூடப் பார்க்கறேன். உடனே என்னத்தையோ நினைச்சுக்கிட்டாப்போல அவசர அவசரமா கையிலிருக்கிற தங்க வளையலைக் கயட்டி, என் கையிலே வெச்சுப் பொத்தினாங்க.

“என்னாம்மா இது?” எனக்கு ஒண்ணும் புரியல்லே.

“ஆண்டாளு, என் குழந்தையை நீ உசிரோடு காப்பாத்திக் கொடுக்கணும். ஆண்டாளு இவனுக்கு நான் எப்படிக் காத்திருந்தேன் தெரியுமா? என் பேரைக் காப்பாத்தக் கடைசிலே வந்துாட்டான். அவனை நான் விட மாட்டேன்—”

“சின்ன உசிரு பெரிய உசிரு நான் பார்க்க வேணாமாம்மா?”

“என்னைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை” என்னாங்க உன் ஆத்தாள். “ஆண்டாளு, நீ என்னைப் பத்தி நினைக்காதே. என் குழந்தைக்கு உயிரைக் கொடு, ஆண்டாளு, உன்னை என் குலதெய்வமாக நினைப்பேன்” என்னு கையைக் கூப்பினாங்க. எனக்கு அழுகை வந்திருச்சு. “அதுமாதிரியெல்லாம் செய்யாதேம்மா”ன்னு கையைப் பிரிச்சுவிட்டேன்.

“பரவாயில்லே ஆண்டாளு”— உன் ஆத்தா கண்ணை மூடிக்கிட்டே சிரிச்சாங்க. கண்ணிலேருந்து மாலை மாலையாப் பெருகுது. “என் பிள்ளைய எப்படியும் நான் என் உசிரோடு பார்க்கமாட்டேன். ஆனால்”—என் கையைக் கெட்டியாய் பிடிச்சுக்கிட்டுது. “நீ என் குழந்தையை உசிரோடு எடுத்து என் வீட்டிலே கொடுத்தப்புறம், அவனும் உசிரோடு இருந்தால், அவன் உயிரோடிருப்பான் —அவனுக்கு புத்தி வரவரைக்கும் நீயும் உசிரோடிருந்தால், அது பத்து வருஷமானாலும் சரி, பதினஞ்சு வருஷ மானாலும் சரி—நீ அவனைத் தனியாகக் கண்டு நிஜம்மா நடந்ததைச் சொல்லணும். தெரிஞ்சுதா? அவன்மேல் நான் எவ்வளவு ஆசையாயிருந்தேன்னு நீ அவன்கிட்டே சொல்லனும். நான் அவன்கிட்டே போயிட்டு வரேன்னு சொல்லிட்டேன்னு சொல்லு அவனை நான் சமத்தா இருக்கணும்னு சொன்னேன்னு சொல்லு—”

“அப்புறம் உன் ஆத்தா பேசவுமில்லே. கண் திறக்கவுமில்லே. ஆனால் உன் ஆத்தாளைத் தெய்வம்னுதான் சாெல்லணும். இல்லாட்டி அது சொல்லச் சொன்னதை இத்தனை நாளாயும் உன்னிடம் சேர்த்துடறவரைக்கும் நான் உசிரோடிருக்க முடியுமா?—”

“வெகுநேரம் நான் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை. அன்று நான் புதிதாய்ப் பிறந்தேன். அன்று நான் ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக்கொண்டேன். “நான் சமத்தாயிருப்பேன். பெரியவனானால் டாக்டருக்குத்தான் படிப்பேன். எத்தனையோ தாய்மார்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் என்னிடம் சிகிச்சைக்கு வருகையில், அவர்களிடம் என் தாயின் உயிரையும் பேரையும் திரும்பத் திரும்பக் காப்பாற்றுவேன்—”

“ஆனால் நான் காண்பது என்ன? ஒருவருக்கும் வாழ்க்கையில் மரியாதையில்லை. மறுப்புத் தானிருக்கிறது. பெற்று எறிந்துவிட்டால் மாத்திரம் ஆகிவிட்டதா?—”

“ஹா—ஹா—ஹா ஆஆஆஆ!” உள்ளிருந்து ஒரு பெறும் அலறல் கிளம்பிற்று. நான் துடித்து எழுந்தேன்.

“This is it—” என்று சொல்லிக்கொண்டே டாக்டர் உள்ளே சென்றார்.

நான் உட்கார்ந்துகொண்டேயிருந்தேன். கண்ணைக் கரித்தது. அரைத் தூக்கமா, மயக்கமா, மூர்ச்சையா, எதிலிருந்தேன் என்றே புரியவில்லை. ஏனோ திடீரென்று வீட்டில் என் அறையில் சுவரோரத்தில் சாத்தியிருக்கும் அம்மாவின் வீணைமேல் நினைவு போயிற்று. என்னுடைய ப்ரமையில் அதிலிருந்து தானே “டிங் டிங்” என்று சப்தங்கள் கிளம்பி ஒன்றுடன் ஒன்று கொக்கி மாட்டிக்கொண்டு மாலையாகி, காற்றில் ஆடி அலைந்து மிதந்து வந்தது. யார் கழுத்தில் விழப்போகிறது? என் கழுத்திலா?”— சட்டென விழித்துக்கொண்டேன். டாக்டர் மெதுவாய்த் தோளை ஆட்டிக்கொண்டிருந்தார். “என்ன?” அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன்.

“ஒன்றுமில்லை, உங்கள் குழந்தை இறந்துவிட்டது. சிரமமான கேஸ். உயிரோடுதான் வெளிவந்தது. ஆனால் பத்து நிமிஷங்கூடத் தக்கவில்லை.”

“காயத்ரீ காயத்ரீ?"— என்னை அறியாமலே வார்த்தைகள் புறப்பட்டன.

“தாயார் சௌக்யந்தான். வேனுமானால் நீங்கள் போய்ப் பார்க்கலாம்—”

குழந்தையைப் பற்றிய நினைவே எழவில்லை. அதைப் பற்றி டாக்டர் என்ன சொன்னார் என்பதுகூட மறந்து விட்டது. அடிமேல் அடிவைத்து உள்ளே சென்றேன்.

காயத்ரீ கண்ணை மூடியபடி படுத்திருந்தாள். பனீரெனும் வெண்மையுடன் சுத்தமான துப்பட்டிக் கழுத்து வரை போர்த்தியிருந்தது அவ்வளவு பலஹீனமாய் அவளை நான் காண்கையில் நெஞ்சை அடைத்தது.

“காயத்ரீ?”—

மெதுவாய்க் கூப்பிட்டேன்.

மூடிய கண்களை அவள் திறக்கவில்லை.

“I hate you!”

கடித்த பற்களிடையிலிருந்து வார்த்தைகள் சிறிக் கொண்டு வந்தன.

“என்னை மன்னித்துவிடு—”

எனக்குக் களை மேலிட்டது; தள்ளாடிக்கொண்டே வெளியே சென்றேன்.

நான் நாற்காலியில் சாய்ந்துகொண்டிருக்கிறேன். ஜன்னலுக்கு வெளியே வேறு உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பல வர்ணங்கள் தோய்ந்த பட்டுப் படுதாப்போல் மாலை, தோட்டத்தில் இறங்குகிறது. நலுங்கும் திரையின் மடிகள் போலுமே காற்றில் அந்தி மிளிர்கிறது.

காயத்ரீ மெதுவாய் மாடிப்படிகளிலிறங்கி வருகிறாள். அவள் அப்படி வருகையில், மரத்திலிருந்து புஷ்பம் நேரே உதிர்வதை நினைவூட்டுகிறாள். அறையுள் மெதுவாய் வந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி ஜன்னலுக்கு வெளியே காட்சியைச் சிந்தித்து நிற்கிறாள். மௌனம் அழகிய பூக்கிண்ணம்போல் எங்கள் இரு வரையும் ஏந்திக்கொண்டு நிற்கிறது.

அவள் விழியோரங்களில் கண்ணிர் புறப்படுகிறது. துளிகள் கன்னங்களில் வழிகின்றன. நான் சும்மாயிருக்கிறேன். ஓடிவந்து என் காலடியில் மண்டியிட்டு வீழ்ந்து, என்மடியில் முகத்தைப் புதைத்துக்கொள்கிறாள். வழு வழுத்த அவள் கூந்தலில் என் விரல்கள் புதைகின்றன.

“என்னை மன்னிச்சுடு, வால்மீகி உன்னை நான் ரொம்பவும் கடுமையாய்ப் பேசிவிட்டேன்!”

வான வீதியில் வெண் மேகங்களுக்கிடையில் ஒரு நீலப்பாதை பிளந்து முன்னேறுகிறது.

எனக்கென்னவோ இன்று ரொம்பவும் அசதியாயிருக்கிறது. .

மூக்கை உறிஞ்சினாள். ஒதுங்கி எட்ட உட்கார்ந்தாள். எனக்கு அவளைத் தொட வேண்டுமென ஆசை.

சற்று நேரம் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு ரொம்ப அலுப்பாயிருக்கிறது” என்றாள்.

“எனக்குந்தான் அலுப்பாயிருக்கிறது.”

“நான் போய்விடப் போகிறேன்.”

இந்தக் கட்டம் ஒருநாள் வரும் எனும் திகிலில் குன்றிப் போய்க் கொண்டிருந்தேன். இந்த ரூபத்தில்தான் வரும் என்று தெரியாது. ஆனால் இதுதான் என் திகில்...ஆனால் வந்தும் விட்டபின், அவள் வார்த்தைகள் சரியாய் விளங்கவில்லை.

“நீ என்ன சொல்கிறாய்? புரியவில்லை.”

“நான் போய்விடப் போகிறேன்—”

“எங்கு?”

ஏன் என்று உடனே நான் ஏன் கேட்கவில்லை? என் நெஞ்சுக்குத்தான் தெரிகிறதே! எங்கு என்கிறேன். அதுவும் அர்த்தமற்ற கேள்விதான். எங்கு போவாள்? தாய் வீட்டுக்குத்தான்.

வெளியே மரங்கள் அசைந்தன. அவள் எனக்கு இன்னும் நேர்முகம் கொடுக்கவில்லை.

“காயத்ரீ நீ சொல்வதன் விபரீதம் உனக்கு விளங்குகிறதா?”

“விளங்காமல் என்ன?”

“காயத்ரீ, இங்கு உனக்கு என்ன பிடிக்கவில்லை?”

அவள் முகம் மரக்கட்டைபோல், உணர்ச்சிகளின் பொலிவு இலாமல், மாறிவிட்டது.

“நான் என்னவோ நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால் நான் நினைத்தபடியில்லை.”

“நீ என்ன நினைத்துக்கொண்டு வந்தாய்? நீ நினைத்தபடி என்ன இல்லை?”

“எனக்கு சொல்லத் தெரியவில்லை. விரல்களைச் சொடுக்கினாள். “நீ என்னைக் கெட்டியாய் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நான் எந்தக் கட்டுப்பாடு மின்றி எதேச்சையாய் வளர்ந்தவள். எந்தக் கட்டுக்கும் என்னால் கட்டுப்பட முடியவில்லை; என்னை மன்னித்து விடு.”

“நீதியே யிலாது நீ வளர்ந்துவிட்டபடியால், உன்மேல் உனக்குக் கட்டில்லாமல், உனக்கும் பிறர்க்கும் எவ்வளவு ஹானி நீ இழைக்கிறாய் என்று தெரியுமா? அவள் ஒன்றும் பேசவில்லை. சுவர் மேல் ஒரு முகத்தின் படம் தோன்றி அழிந்தது. முகத்துச் சதையில் சீயக்காய் விதைகள் புதைந்து, சுமுகத்தையே கொன்றுவிட்டு, கடு கடுத்துக்கொண்டு சூனியத்தைச் சிந்தும் கண்கள் அந்த உருவை மனத்திலிருந்து அழிக்கக் கண்களைக் கசக்கிக் கொண்டேன்:

“காயத்ரி. ஏன் சும்மாயிருக்கிறாய்? ஏதாவது பதில் சொல்லேன்!—”

“பதில் சொல்ல என்ன இருக்கிறது?” அலுத்துக் கொண்டாள். “நம் இருவருக்கும் சரிப்படவில்லை. அவ்வளவுதான்!”

“அப்படி என்ன நேர்ந்துவிட்டது?”

“பிரித்துப் பிரித்துக் கேட்டால் நான் என்ன சொல்ல?” அவள் திகைப்பு பரிதாபமாயிருந்தது. குழந்தைத்தனமாய், விபரீதமாயிருத்தாலும், உண்மையாயிருந்தது.

“காயத்ரீ, வாழ்க்கையில் உனக்கு என்னதான் வேண்டும்?”

“தெரியாது.”

“எதைத்தான் நீ தேடுகிறாய்?”

“தெரியாது.”

“இப்பிடிவாதம் எங்குதான் உன்னைக் கொண்டு போய் விடும்?”

“தெரியாது.”

“ஆனால் நீ போக வேண்டும் அல்லவா?”

“ஆமாம்.”

“அப்படியானால் போ போ—” இத்தனை நாள் அடக்கிக் கொண்டிருந்த ஆத்திரம், சீற்றம், ஆசாபங்கம் எல்லாம் ஒருங்கே சேர்ந்து என்னைத் தாக்கின. நான் நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தேன். “போ போய்விடு ஒடிப் போய்விடு—”

விலங்கு பதுங்குவதுபோல் ரத்னக்கம்பளத்தின்மேல் அவள் பதுங்கினாள். அப்பவும் அவள் சிற்பம்போல் அழகாய்த் தானிருந்தாள். அவள் முகபாவம் எதுவாயிருப்பினும் அது பயமில்லை. எனக்குக்கூட இவ்வளவு கோபம் வருமா எனும் வியப்புத்தான் தெரிந்தது.

“போய்விடு நிற்காதே. போனால் திரும்பி வராதே—உனக்காகவே இல்லாத மானம் வெட்கத்தை நான் எத்தனை நாள் காவல் காக்க முடியும்? உன் மானத்தை நீ விட்டபின், உன்னை எதுதான் தடுக்க முடியும்? Get out!”

வீட்டை விட்டுத் தலைகால் புரியாமல் ஓடினேன். சாலையோரத்தில் ஒரு மாந்தோப்பு. அங்கு போய் ஒரு மரத்தடியில் குப்புற விழுந்தேன். நேரம் சென்றது. எனக்குத் தெரியாது. அப்படியே மூர்ச்சையாய்த்தான் ஆனேனோ, தூங்கிவிட்டேனோ? மண்டைக் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்க ஆரம்பித்தது. மல்லாந்து புரண்டேன். குளிர்ந்த காற்று புருவங்களை ஒற்றியது

என் பக்கத்தில் ஒரு அணில், உலர்ந்த சருகுகளின்மேல் வாலைத் தூக்கிக்கொண்டு ஓடியது. இரு குருவிகள் ஜோடியாய் அருகே தத்திவந்து என்னை வியப்புடன் பார்த்தபடி வளவள வென்றன. புயலின் வேகம் தணிந்து எண்ணங்கள் தெளிய ஆரம்பித்தன.

காயத்ரி என்ன கவலைப்படுகிறாளோ? சே, என்ன இப்படி மிஞ்சிக் கத்திவிட்டேன்! இரண்டுபேருமே அசட்டுத் தனமாய் நடந்துகொண்டு விட்டோம். அவளுக்கும் இப்போ அவசரம் தணிந்திருக்கும். ஒருவேளை அவளிடம் நியாயம் இருக்கிறதோ, என்னவோ? இருக்கிற இடத்திலேயே இருந்துகொண்டு பார்க்கிற முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதும் அலுப்புத்தான். இடமாற்றமாய் வெளிப்பிரயாணம் செய்து திரும்பினால் நிலைமை சரியாகிவிடும். குழந்தை உயிரோடு தங்கியிருந்தால் இவ்வளவு கசப்பு இருக்காதோ என்னவோ? ஆமாம், அதுதான். முடிந்தால் இன்றிரவே வண்டியேறுவோம். எங்கே? எங்கேயாவது போகிறது. எங்கே போனால் என்ன?

என்னைச் சுற்றி நன்றாய் இருட்டிவிட்டதை உணர்ந்தேன். அட, இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா என்ன? உடம்பைத் தட்டிக்கொண்டு அவசரமாய் எழுந்தேன்.

வீடு இருண்டு, ஒரு விளக்குகூடப் போடாமல், மொத்தாகாரமாய் என்முன் எழுந்தது.

“காயத்ரீ!”

என் குரல் எனக்கே வேற்றுமையாய், தனிமையாய் ஒலித்தது.

“காயத்ரீ! காயத்ரீ!!” அறைக்கு ஓடினேன். அறைக்கு, அறை.

“காயத்ரீ! காயத்ரீ!! காயத்ரீ ஈ ஈ!!!”

பாம்புப் படம்போல் என்குரல் மீண்டும் மீண்டும் தலைதுாக்கி எழுந்து என்மேலேயே மோதிற்று. என்னுள் ஏதோ உடைந்தது. மூச்சுத் திணறிற்று. மூச்சுக்குத் தவித்துக்கொண்டு, கைகளை அகல விரித்தபடி, ஜன்னலண்டை ஓடினேன்.

வார்த்தைகள் என் அடிவயிற்றிலிருந்து புறப்பட்டன. அவைகளின் ஒசையும் அர்த்தமும் எனக்கே புதிதாயிருந்தன. முதலில் எண்ணங்களாக உருவெடுக்கும் இடைவெளியிலாது. நேரேவாக்காக மாறிவிட்ட உணர்ச்சிகளின் வேகம், என்னுள் சுருட்டிய எஃகுச் சுருள் விடுதலைக்கு முயல்வதுபோல் என்னை விசிறியடித்தது.

“காயத்ரீ—” ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு கத்தினேன். என் கத்தல் வெளியே மையிருளில் நீந்திக் கொண்டிருக்கும் அணுக் கோசங்களுடன் கலந்தது.

“காயத்ரீ! உன்பேர் காயத்ரீ, சரஸ்வதி, சாம்பவி. ஹைமவதி, எதுவாயிருந்தாலும் சரி இப்பவே திரும்பிவிடு. காயத்ரீ, நீ இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. காயத்ரீ, திரும்பு உன்நெஞ்சு கல்லாயிருந்தாலும் சரி, உன் வயிறு கல்லில்லை. உன் வயிற்றில் என் வித்து முளைத்து மூச்சு விட்டு வளர்ந்து வெளிவந்திருக்கிறது. அதற்காக, வேனும் திரும்பி வந்துவிடு. காயத்ரீ, நம் உள்ளம் உடல் அந்தரங்கங்களை ஒருவருக்கொருவர் அறிந்தபின், உனக்கு என்னை விட்டுப் பிரியவும் மனந் துணிந்ததா? என்னைக் கொன்றுவிட்டாய். என்னோடு வாழும் இஷ்டத்தைவிட என்னைக் கொன்றுவிட்ட பெருமை உனக்குப் பெரிதாயிருந்தால் அதையே கொண்டாடிக் கொள். ஆனால் உன்னைக் கொன்றுகொண்டபின் என்னைக் கொன்றாய். ஆனால், இந்த நாளை நினைத்து ஒருநாள் நீ தவிப்பாய். ஒருநாள்—”

இருமல் என்னை முறித்தது. வாயிலிருந்து சிவப்பாய் ஒரு சொட்டு ஜன்னல் சட்டத்தின்மேல் விழுந்தது. என் பார்வை இருண்டது. தலை சுற்றி அப்படியே கீழே விழுந்துவிட்டேன்.

வர வர நேரத்தின் வரைகளும் மாறுதல்களும் தெரிவதில்லை. இந்த நிமிஷம் இப்படியேதான் நின்றுவிடுமா? அல்லது அசைந்தாடி இன்னொன்றில் புகுந்துவிடுமா? படுக்கையில் படுத்தபடியே கிடக்கிறேன். என்ன யோசனை செய்கிறேன்? அறியேன். அதற்குள் காலை பகலாய் வளர்ந்துவிடுகிறது. எப்பொழுது வேளை இவ்வளவு முற்றிற்று எனத் திகைக்கையிலேயே பகல் மாலையில் சாய்கிறது. மாலை அந்தியில் மறைகிறது. அந்தி இரவில் கரைந்துவிடுகிறது.

இரவு ஒரு ப்ரம்மாண்டமான பட்சி. அதன் கால் நகங்கள் என் மார்பில் பதிகின்றன. விடிந்ததும் நகக் குறிகள் சிவப்பாய் மார்பில் தென்படுவது போலும் எனக்குத் தோன்றுகிறது. இரவு ஒரு ப்ரம்மாண்டமான பட்சியாய் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பகல் குறுக்கிட்டதும், இரவு தன் சிறகுகளை விரித்து மறைந்துவிடுகிறது. நாளுக்கு நாள் நான் லேசாகிக் கொண்டு வருகிறேன், வரவர என்னுடலில் சதை, தசை, ரத்தம் எதுவுமே இல்லைபோல் தோன்றுகிறது. நான் பட்சியாய் மாறிக்கொண்டிருக்கிறேன். பகல்கள் குறுகி இரவு எப்பொழுது வரும்? இரவு என்னை பட்சியாக்கிக் கொண்டிருக்கிறது. பகலின் இடைமறிப்பிலாத இரவு ஒன்று என்று வருமோ அன்று நான் பரிபூரணமான பட்சி யாகிவிடுவேன்.

“மிஸ்டர் வால்மீகி, உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்” என்கிறாள் நர்ஸ். கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.”

“யார்?” என்கிறேன். கண்ணைத் திறக்க எனக்கு சக்தியில்லை. இப்பொழுது விருப்பமும் இல்லை. என் குரலே எனக்கு எங்கிருந்தோ கேட்கிறது.

“நான்தான். வால்மீகி—”

“அப்பா!”

கண்ணைத் திறக்க முயல்கிறேன். ஆனால் இமைகளைத் தூக்கக்கூட எண்ணத்தில் வலிமையில்லை.

“அப்பா, எனக்கு ரொம்பக் களைப்பாயிருக்கிறது.”

“எனக்குத் தெரிகிறது.” அப்பாவின் குரல்தான் கேட்கிறது. அவருடைய பிரசன்னத்தைத்தான் உணர முடிகிறது. அவரைப் பார்க்க முடியவில்லை.

அப்பா நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்காருகிறார்.

“அப்பா, உங்களிடம் பேச எவ்வளவோ இருக்கிறது; ஆனால் சக்தியில்லை. அவசியமுமில்லை. நேரமும்தான் இல்லை.”

“எனக்குத் தெரியும்.”

“அப்பா இருமினால் ரத்தம் வருகிறது. ஆயிரம் ஊசிகள் குத்தினாற்போல் மார் வலிக்கிறது. ஜலங்கூட விழுங்க முடிவதில்லை. மூச்சு சிரமமாயிருக்கிறது.”

“எனக்குத் தெரியும். உன்னிடம் நான் ஒளிக்கப் போவதில்லை. உனக்கும் இங்கும் இனி அதிக சம்பந்த மில்லை. நீ சீக்கிரமே காற்றோடு காற்றாய்க் கலந்துவிடப் போகிறாய்.”

“அப்பா, Thank you. இந்த சரீரம் எவ்வளவு பெரிய சிறை என்று எனக்குத் தெரிகிறது.”

“வால்மீகி! உனக்கு ஏதாவது வேண்டுமா? இந்த சமயத்தில் நான் செய்யக்கூடியது ஏதாவது உண்டா? உன் விருப்பம் எதுவாயிருந்தாலும் தெரிவி”

“எனக்கு இனி என்ன வேண்டும்? ஒன்றும் தெரியவில்லை. அப்பா, ஒன்று செய்வீர்களா?”

“என்ன?”

“உங்களுக்கப்புறம் சொத்துக்களை காயத்ரீக்கு வைத்துவிடுங்கள்” அவர் முகத்தை நான் பார்க்க முடியவில்லை. சற்று நேரம் பொறுத்து “சரி” என்று அவர் பதில் வந்தது. “நான் நாளைக்கே மாற்றிவிடுகிறேன். நீயே போய்விடும்போது, எனக்குச் சொத்துக்களால் என்ன பயன்?”

“அம்மாவின் வீணையை மாத்திரம் அவளிடம் கொடுக்கவேண்டாம். அது உங்களோடேயே இருக்கட்டும். உங்களுக்குப்பின் கோவிலிலோ பஜனை மடத்திலோ சேர்த்துவிடுங்கள்.”

“சரி.”

“அப்பா, அவள் அப்புறம் ஒரு நாள் தவிப்பாளே என்பதை நினைக்கக்கூட எனக்குப் பயமாயிருக்கிறது. அவள் ஒன்றும் அறியாதவள்.”

அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

“அப்பா அவள்மேல் நான் உயிரையே வைத்திருந்தேன்.”

“அதனாலேயே நீ உன் உயிரை இழந்துவிட்டாய். நீ துப்பும் ஒவ்வொரு ரத்தச் சொட்டிலும் உன் பிராணன் உன்னிடம் குறைந்துகொண்டிருக்கிறது. வால்மீகீ, உன் உயிர் உன்னுடையதுமில்லை; என்னுடையதுமில்லை; யாருடையதுமில்லை. ஆண்டவனுடையது. நீ பிறந்து இறக்கும்வரை நீ விடும் மூச்சுக்களைக்கூட எண்ணித்தான் உன்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறது. இப்பொழுது உனக்குத் தெரிந்திருக்கும். உனக்கு இறக்கத்தான் உரிமையுண்டு. உன்னிடம் ஒப்படைத்த உயிரை இழக்க உனக்கு உரிமையேயில்லை. யார் உயிரை யாருக்குக் கொடுக்க, நீ யார்? உன் உயிரை அவளுக்கு இழந்தபடியால், உன் வாழ்வை நீ வாழவில்லை.”

“நான் படுத்துவிட்டேன் என்று அவளுக்குத் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே ஊசலாடிக்கொண்டிருக்கும் என் உயிரை இன்னும் ஆட்டிவிட்டுப் போவாள் எனும் பயத்தாலேயே அவளைப் பார்க்க எனக்குத் துணிவில்லை.”

“நீ இறந்தால் அவள் அழுவாள். உடைத்த பொம்மைக்குக் குழந்தை அழுவதுபோல்.”

“அப்பா, நான் மறுபடியும் என் வாழ்வை வாழ முடியுமா?”

“முடியும். மறுபடியும் பிறந்தால், மறுபடியும் உன் உயிரை இழக்காமல் இருந்தால், வாழ்வாய்.”

“அப்பா, மறுபடியும் நான் பிறக்க விரும்புகிறேன்.”

“நீ பிறப்பாய். பிறக்காமல் இருக்க முடியாது. மறுபடியும் பிறக்கத்தான் இறப்பு இருக்கிறது.”

“அப்பா, உங்களை நான் பார்க்க முடியவில்லை. உங்கள் கையைப் பிடித்துக்கொள்கிறேன். அப்பா, இந்த சமயத்தில் நீங்கள் வந்தது எனக்கு எவ்வளவு ஆறுதலா யிருக்கிறது தெரியுமா?”

 “தெரியும்.”

“அப்பா என்னை விட்டுப் போகாதேயுங்கள்.”

“வால்மீகி, போகமாட்டேன். நீ இறக்கும்போது உன் உக்கத்தில் துணையாயிருக்கவே வந்திருக்கிறேன். உன் காரியம் ஆனதும் உன் விருப்பத்தை நிறைவேற்றி விட்டு நான் போய்விடுவேன். என் ஒரே பிள்ளை என்னை முந்திக்கொள்ளும் சோகத்திற்கு அழவே நான் வந்திருக்கிறேன். ஏனென்றால் ஆவியின் பிரிவிற்கு சிந்தும் கண்ணீர் ஆத்மாவின் வளர்ச்சிக்கு ஊற்றும் தண்ணீர்.”

என் இமைத்திரையில் திடீரென அம்மா தோன்றினாள். வீணையை தன்மேல் சார்த்திக்கொண்டிருந்தாள். அவள் மார்த்துணி கழன்று விழுந்திருந்தது.

“வால்மீகி!” என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே தந்தியை ஒரு தட்டு தட்டினாள். வீணையிலிருந்து ஒரு ஜோதிப் பந்து குதித்து ஜ்வலித்துக்கொண்டே என்னை நாேக்கி வந்தது. அதில் நான் தாவியேறிக் கொண்டேன்.

அம்மாவின் ரவிக்கையவிழ்ந்தது. மார்பிலிருந்து பால் கடகடவெனச் சொரிந்து என்னைக் கடலாய்ச் சூழ்ந்தது. பாற்கடலில் மிதந்தபடி நான் அம்மாவை நோக்கி விரைந்துகொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அஞ்சலி/காயத்ரீ&oldid=1026628" இலிருந்து மீள்விக்கப்பட்டது