உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலி/பூரணி

விக்கிமூலம் இலிருந்து




பூ ர ணி

வெளியே தென்னை அசைந்தாடிற்று. சலசலக்கும் மட்டைகளினிடையே பதுங்கிய இளநீர் முடிச்சை நோக்கிக்கொண்டிருந்த பூரணி ஒரு முடிவுக்கு வந்தவள் போலும் பெருமூச்செறிந்து, அப்பொழுதுதான் அறைவாசல் வழி சென்ற தன் பேரனைக் கையைச் சொடுக்கி அழைத்தாள்.

“என்ன ஆத்தே” என்று இழுத்துக்கொண்டே பையன் உள்ளே வந்தான். அவனுக்குக் கன அவசரம். பம்பரத்தில் கயிற்றைச் சுற்றிக்கொண்டிருந்தான். பூரணி மௌனமாய்ச் சற்றுநேரம் சிந்தித்துவிட்டு, “உன் அப்பனை நான் வரச்சொன்னேன்னு சொல்லிட்டுப் போ. உன் அம்மாவை உன் மூக்கைக் கழுவி எண்ணெய் தடவச் சொன்னேன்னு சொல்லு, சளி ஒழுவி மூக்கு வெந்து போவுதே!”

“ஆவட்டும், ஆவட்டும்.”

பையன் பொறுமையில்லாது தலையை ஆட்டிக் கொண்டு மூக்கை உறிஞ்சினபடி கீழே விழுந்தடித்து ஓடினான்.

சற்றுநேரந்திற்கெலாம் அவள் மூத்தபிள்ளை மாடியேறி உள்ளே வந்தான்?

“என்னாம்மா?—”

“ஏன் சவுக்கத்தை அக்குள் ளே இடிக்கிடிருக்கே—”

“ஊத்துக்காட்டுக்குப் போறேன்.”

“ஏன்?”

“ஏம்மா மறந்துட்டியா? நேத்திக்கு அங்கே அறுப்பு இல்லே? அறுத்ததை இன்னிக்கி அடிச்சுக் கட்ட வேணாம்? இப்பவே நேரம் போச்சு.”

“இன்னிக்குப் போவேணாம்—” அவன் முகம் சுளித்தது.

“என்ன கிளம்பற வேளைக்குத் தடுத்தா?”

“இல்லே, இன்னிக்குப் போவாதே, உன் அண்னேன்கிட்டே சொல்லு, போட்டோக்காரனைக் கூட்டியாந்துடலாம்னு.”

“என்ன?”

அவன் கண்கள் அகல விரிந்தன. கீழே சவுக்கம் விழுந்தது.

“ஏம்மா ?”

“ஆமா, அப்படித்தான்.”

அவள் நாட்டம் தூரமாகி, தென்னையின் மட்டைகளினிடையில் பதுங்கிய இளநீர் முடிச்சைக் கவ்விக் கொண்டது.

“அய்யர் வீட்டுப் புள்ளைக்கும் கம்பிவிடச் சொல்லு, பூரணி ஆத்தா கூப்பிடுதுன்னு.”

அவள் பிள்ளை பயத்துடன் கீழேயிறங்க வாசற்பக்கம் திரும்பினான்

“துரை!”

அவசரமாய் ஓடிவந்தான்.

“நீ பாஞ்சாலியை சும்மா மொத்தாதே அது நல்ல பொண்ணு. எனக்கப்பறம் அவதான், தெரியுமல்ல?”

“இப்போ யார் இல்லேன்னாங்க?”

“நீ...”

“என்னையா?” எனும் வினாவில் அவன் கை மாரைத் தொட்டுக்கொண்டது.

“நீ இனிமே சும்மா சந்தைலிருந்து புடிச்சு ஓடிவந்த மாடாட்டம் வீட்ட விட்டு ஒடி ஒடிப்போவாதே; திரும்பி வரச்சே திருண்ணாமலைக்குப் போனேன், திருத்தணிக்குப் போனேன்னு விபூதி குங்குமம் கொண்ணாந்தாலும் நாங்க அதைத் தரிச்சாலும், சும்மா கோச்சிட்டு கோச்சிட்டுப் போவறத்துலே மதிப்புக் கொறைஞ்சு போவுது.”

“அப்புறம் குப்பனை நீ சும்மா கோவம் பண்ணாதே. இப்போ வயசுலே துள்ளுறான். அப்புறம் வயசுலே படிஞ்சு போவான்.”

“சரிம்மா—”

“ஆனால் காபாலி விசயமா— அவன் அவ்வளவு வெள்ளைன்னு சொல்லமாட்டேன். நீ அவன்கிட்டே எப்பவும் முளிப்பாயிருக்கணும். எல்லாம் உன் அண்ணன் இருக்கற வரைக்கும் சரியாயிருக்கும்; அப்புறம் அவன் பாகம் பிரிச்சுடுன்னா பாகம் கொடுத்துடு, உன்னுதே உனக்கு அப்போத்தான் மிஞ்சும்.”

அவள் மகன், மாலை வேளையில் மாரி கோவிலில் பலி பீடத்தண்டை தான் நிற்பதுபோல் கையைக் கூப்பிக்கொண்டு, ஆமோதனையில் தலையை ஆட்டினான்.

பூரணி தன் வயிற்றின்மேல் கோத்த கைகளைப் பார்த்துக்கொண்டாள்.

“காபாலியும் நான் பெத்த மவன்தான், ஆனால் இந்தப் பூமியிலே நாலுந்தான் விளையுது. நான் நட்ட விளையின் பக்கத்துலே விளைஞ்ச களையே நான் களையலாம். ஆனால் அவன் நட்டதைக் கிள்ள நான் யாரு?”

“என்னம்மா சொல்லுது?”

“ஒண்ணுமில்லே...” பூரணி அசதியுடன் கண் மூடினாள். “அண்ணன் கிட்டே நான் சொன்னதைச் சொல்லு. நேரம் போவுது.

“ஆமாம்; நேரம் போவுது. எப்படிப் போவுது! துள்ளுது, ஆவுது, நீளுது, நிக்குது நிக்கிறத்துலேயே ஓடுது: ஒடறத்துலேயே நிக்குது. ஆனால் அள்ளுது.

“நேரத்துக்கு உருவம்னு இருந்தா, அது ஒர் ஆளா மாறி ரெண்டு பக்கத்துலேயும் இறக்கை முளைச்சு, நாம் மழை பேஞ்ச நாளிலே சேத்துலே கால் படாமே நாலஞ்சு கல்லை நடைபாதையிலே போட்டு அது மேலே முழங்காலுக்கு மேலே சேலையைத் தூக்கிப் புடிச்சுக்கிட்டுக் கல்லுக்குக் கல்லு தாவி போவல்லே, அதுமாதிரி தத்தி வந்து எதிரே நிக்குது. நின்னு கேக்குது.”

“வந்தூட்டேன் பூரணி ஆத்தா!”

“தெரியுது”

“ஒ...ஹோ? தெரியுதா?”

“தெரியாம என்ன? போட்டோக்கு ஆளை அனுப்பச் சொல்லிட்டேனே...”

“ஆமா, என்ன சொல்றே? குண்டுகட்டா கட்டித் தோளிலே போட்டுக்கிட்டு நடக்கவா? கையைப் பிடிச்சுக்கிட்டு என்னோடே குணமா வாரியா? நீ ஒண்ணும் வெக்கம் வெச்சுக்காதே ஆத்தா, நான் உன் மவன்மாதிரி.”

பூரணி கண்ணிற்குள் சிரித்துக்கொண்டாள்.

“அப்டீன்னா உன் தம்பி என்ன செய்யறான்?”

அஞ்சாம் வருசம் என் வவுத்துப் புள்ளை குளிக்கப் போன இடத்துல ஆத்தோடே, சோடு தெரியாமே சவத்தோடே கொண்டுபோயிட்டியே, அவன்?

“ஓ, அவனா? ஆத்தா, கவலைப்படாதே. சவிக்கமாயிருக்கான். நல்ல இடத்துலேதான் தூங்கிட்டே வளர்றான். எல்லாம் உனக்குப் புடிச்ச இடம்தான். ஆத்தா உனக்கு நான் கஷ்டம் வெக்கமாட்டேன். உனக்குப் புடிச்ச வவுத்துலே வளந்திட்டிருக்கான். இன்னும் நாலு மாசத்துலே தூக்கம் கலைஞ்சு வீல்னு கத்திட்டு வெளியே வந்துடுவான், பாரு.”

“நான் எங்கே பாக்கப்போறேன்? நான்தான் போறேனே!”

“எங்கே ஆத்தா போவப்போறே?” அந்த ஆள் பொறுமையின்றிக் கையை உதறினான். ‘வரவங்க எல்லாரும் இந்தப் போறேன் போறேன் பாட்டுத்தான் பாடறாங்க. என்னத்துக்கோ, எல்லாங் கண்டவங்க மாதிரி! எங்கே யாத்தா போவறது? இடம் சொல்லேன், நானும் வந்துடறேன். நீ தாய் வீட்டுக்குத் தலைச்சன் பெக்கப்போனியே, அப்படியே தங்கிட்டியா? புருசன் நினைப்பெடுத்ததும் கந்தையிலே பையனைச் சுருட்டிக் கிட்டு ஒடியாந்துடல்லே?”

“அப்புறம் நான் போவவே இல்லியே, சாவு வாழ்வு ரெண்டுக்கும்! இத்தனைக்கும் என் தாய் வீடு தெருக்கோடிலே எதிர்சாரிதான்.”

“அட, அதுன்னா அதுவா? வாத்தியார் அய்யர் வீட்டுப் புழக்கடையிலே உங்க வீட்டு வைக்கப்போர் போட்டிருக்கீங்க, அதுலே நீ வைக்கல் பிடுங்கப் போறேன்னு வைச்சுக்க."

“ஆமாம்—” பெருமூச்செறிந்தாள்—“தினம் தினம் போவேன். அவங்க வீட்டுப்புள்ளையெ எடுத்துக் கொஞ்சுவேன். அப்பா, என்ன செவப்பு தெரியுமா? தொட்டா கையோடே வளிஞ்சு வந்துாடற மாதிரி. அந்த நாளெல்லாம் போச்சு. அந்த அம்மாவும் அய்யரும் ஊர் மாத்திப் போனாங்க, எங்களுக்கும் ஒரு கை ஒடிஞ்சது. நல்லது பொல்லாது சொல்லிக்கிறத்துக்கும் கேட்டுக்கிறத்துக்கும் எங்களுக்கு அப்புறம் யாரு? அவங்களுக்கும் இங்கே விட்டுப் போனப்பறம் விளங்கல்லே. அய்யர் போன விடத்துலே திடீர்னு பூட்டாரு...”

“அது இல்லே விசயம் இந்த இடத்துலே; அப்படி நீ வைக்கல் பிடுங்கவோ கொழந்தையைக் கொஞ்சவோ போன இடத்தில் நின்னுட்டியா? நீ அப்படியே நின்னுட்டா அய்யர் வீட்டு அம்மா நடையிலே உன்னைக் குந்தவெச்சு இலையிலே சோறு வெக்கமாட்டாங்களா என்ன, அவங்க எல்லாம் சாப்பிட்ட அப்புறமாவது?”

“ஏன் துரோகம் பேசனும்? எத்தனையோ நாளைக்கு அவங்க வீட்டு சோறு நாங்க எல்லோரும் தின்னிருக்கோம். எங்களுக்கு பெசலா புளுங்கரிசி வடிச்சே போடுவாங்க.”

“சரிதான் ஆத்தா, எப்போ சொல்லு?”

“எல்லாம் தட்டினால் முட்டினால், வீட்டுலே விசேடம் வந்தால், வேளாவேளையிலேதான்...நான் பேசப் போனவிடத்துலே தங்கிட்டேன்னா இவுரு சாப்பாட்டை ஆக்கறது. யாரு?”

“ஆ, வந்தியா வழிக்கு! ஏன் உன் மருமவமாரு ரெண்டுபேரு இப்போ இருக்காங்களே, அந்த நாளுலெ மாமியார் இருந்தாங்க—

“இருந்துாட்டா வீட்டைக்கட்டி மேக்கறது யாரு?”

அவன் உள்நாக்குத் தெரிய வாய்விட்டு உரக்கச் சிரித்தான்.

“மாலையிலே மாந்தோப்பிலே ஞானமணிசாமி சமாதிக்கு விளக்கு வைக்கப்போனால், போன இடத்துலே அப்படியே திரும்பி வராமே கலந்துட்டியா. இல்லையே? அடுப்பிலே குளம்பு தளைக்குதுன்னு குடுகுடுன்னு ஒடியே வந்துடல்லே? காலையிலே மேச்சலுக்குப் போற உங்க பசு வீட்டுக்குத் திரும்பாமலே, தன்னை மறந்துட்டுப் புல்லை மேஞ்சுகிட்டு நின்னுடுதா? நின்னா நீதான் சும்மா விட்டுடுவையா?”

“ஐயோ ஏண்டாப்பா ஆசை?”

அதைப் பவுண்டுலே அடைச்சாலும், உன் மூக்குத் திருவாணியை வெச்சாவது மீட்டு வந்துடமாட்டே?”

“கண்டிப்பா, யாரைக் கேட்டு!”

“அதனாலே போறது என்கறது ஏது? என்னா ஆத்தா, எல்லாந் தெரிஞ்ச நீயே இப்படிச் சொல்லிட்டா எல்லாம் நீங்க பதியம் போடறமாதிரி, நாத்து நடறமாதிரி தான். எல்லாம் சுத்திச் சுத்தி இங்கேதான்.”

“நான் என்னத்தைத் தெரிஞ்சவ?”

“அப்படிச் சொல்லாதே, ஆத்தா; தெரியாதவங்களுக்குத் தெரிஞ்ச அளவு, தெரிஞ்சவங்களுக்குத் தெரியாது. ஒண்ணு வச்சுக்க... இந்தப் பூமிலே...” அவன் குனிந்து தரையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டான். “இந்தப் பூமிலே இருக்கிறதுதான் உண்டு, போவறதே கிடையாது. வானத்துலே பறந்தாலும் பாதம் இங்கேதான் பதிஞ்சாவணும். நான் இங்கேயேதான் இருக்கறேன். நீ கல்லாட்டம் வீட்டைக் கட்டிக்கிட்டு அதைச் சுத்தி பூவும் காயும் மரமுமா தோட்டத்தையும் போட்டுக்கிட்டுப் போவறத்தைப் பத்திப் பேசினா நீஎனக்குத் தாய் மாதிரி ஆனாலும் நிசமா எரிச்சலாய்த்தான் வருது...”

“நீ என்ன, என்னன்னமோ பேசுறியே இல்லாத்தையும் பொல்லாத்தையும்?”

பூரணிக்குப் புரியாத திகில் பிடித்துக்கொண்டது.

“எங்க வீடு மண்வீடுதான். தோட்டம் எங்கே நட்டு இருக்குது?”

அவன் திடீரென்று கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்றான். முகத்தில் ஒளி மிதந்தது.

“நான் சொல்றது இந்த வீடு இல்லை...”

“பின்னே எந்த வீடாம்?”

“நீயே காணப்போறே. நான் உன்னை அங்கேதானே அழைச்சுக்கிட்டுப் போவப்போறேன்!”

“தம்பி! நான் உன்னோடே வந்துடறேன். இடக்குப் பண்ணல்லே. ஆனால்...”

“என்ன இழுக்கறே? நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும்.”

“எனக்குச் சொல்லத் தெரியலியே!”

“நீ இருந்த இடம், பொறந்த இடம், வாழ்ந்த இடம் இந்தப் பூமியெல்லாம் ஒரு தடவை சுத்திப் பாக்கணுமில்லியா, நீ அந்த நாளுலே இருந்தமாதிரி, இல்லியா?—”

“ஆமாண்டா மவனே, நீ எப்படிக் கண்டே? எனக்கு என்ன வேணும்னுகூடச் சொல்லத் தெரியலே. நீ எப்படியோ என் வவுத்திலேருந்து பிடுங்கி சொல்றியே? அது முடியுமா இப்போ, அப்போ நடந்ததெல்லாம் நடந்த மாதிரியிப்போ...?”

“ஏன் முடியாது ஆத்தா? அதுவும் இந்த வேளையிலே தான் முடியும். அதுவும் இந்தப் பூமியிலே நடக்காத அதிசயமே கிடையாது. இது என்னா பிரமாதம்! எப்பவும் எல்லாருக்கும் இந்த வேளையிலே நடக்கறதுதானே இது! ஆனால் உன் போலேயே எல்லாருக்கும் இருக்காது அவங்க பாக்கற பழைய பாடம்.”

“ஏன்?”

வந்தவன் சிரித்தான்.

“ஆத்தா, உன் பேரு என்ன தெரியுமா?”

“பூரணி. என் வீட்டுலே பன்னெண்டாவதா பொறந்தேன். என் வீட்டுலே எனக்கு முன்னாலே என் தாய்க்கு வவுத்திலேயும் பூமியிலே விளுந்தும் வளர்ந்தும் சின்னதுமா செத்தது நாலு கணக்குலே சேர்க்கல்லே. எனக்குச் சம்பூர்ணம்னு பேர் வெச்சாங்களாம், அப்புறம் பொறக்கலை.”

“அது உனக்கு உன் வீட்டுலே வெச்ச பேர். ஆனால் தனித்தனியா உன்னை உன் வீட்டுலேயும் வெளிலேயும் உன்னை எப்படி எப்படி கூப்பிடறாங்க? அதுமாதிரி நாங்களும் உனக்கு ஒரு பேரு வெச்சிருப்போமில்ல?”

“நீ சொல்றது சரியா விளங்கல்லே.”

“இப்போ உன் எசமானர் உன்னை என்னன்னு கூப்பிடறாரு?”

“என்னை எங்கே அவரு பேர் சொல்லி அளைக்கறாரு? அவர் இதுவரைக்கும் என்னோடே பேசிட்டது என்ன தட்டுக் கெட்டுப் போயிட்டுது? நானும் இந்த வீடு வந்து பெத்து, இருந்து, இதோ பூடப்போறேன். ஏதாவது வேணும்னா கரடியாட்டம் ஒரு உறுமல். அவ்வளவுதான்; சமயம் பார்த்து அதுலேருந்து நான் கண்டுக்கணும். “அடுக்குலே நீராகாரத்துலே உப்புக்கல்லைப் போட்டுக் கலக்கிக் கொண்டு வா” “கலத்தை எடுத்துவை” குளிக் கறத்துக்கு சுடுதண்ணி விளாவு” “கொட்டாயிலே கன்னுக்குட்டி, தும்பையறுத்துக் கிட்டுது” “வாசல்லே சோத்துக்கு பண்டாரம் வந்து நிக்கிது...”

“நீ கண்டுக்காமே இல்லியே! இது என்ன, பேசினாத் தான் பேச்சா? அந்த உறுமல்தான் அவர் உன்னைக் கூப்பிடற பேரு. பேச்சுப் பேச்சுன்னு பேச்செல்லாம் வெறும் சத்தந்தானே ஆத்தா! எண்ணந்தான் பெரிசு... இரு இதோ வந்துட்டேன்...” அவன் இறக்கைகளை அகல விரித்து எழும்பிச் சென்றான்.

—உறுமல் சப்தம் கேட்டு பூரணி கண் விழித்துக் கொண்டாள். முதலியார் அவள்மேல் குனிந்துகொண்டிருந்தார்.

மூச்சு வாங்கிற்று. பெரிய சரீரம். கையில் கையளவு அகலத்திற்கு ஒரு சிறிய புத்தகத்துள் அடையாளமாய் ஒரு விரல்.

மறுபடியும் ஓர் உறுமல்.

“அந்த முக்காலியை இழுத்துப்போட்டு குந்து...?”

முதலியார் அப்படியே உட்கார்ந்தார். உடம்பை முக்காலித் தட்டில் இறக்குகையில் மூச்சு வாங்கிற்று.

“நான் இன்னி சாயங்காலத்துக்குள்ளே போயிடுவேன்...”

முதலியார் ஒன்றும் பேசவில்லை. இரைக்கும் மூச்சு ஒருமுறை தட்டி மறுபடியும் பாய்ந்தது.

“ஆனால் போவறதுன்னு இல்லியாமே! இந்தப் போறது வரது இதெல்லாம் வெறும் பேச்சுத்தானாமே! பேச்செல்லாம் வெறும் சத்தம்தானாமே!”

முதலியார் சுவாரஸ்யத்துடன் அவளை நோக்கினார்.

“இப்போதுதான் கண்ணை மூடிக்கிட்டிருக்கறத்துலே ஓர் ஆளோடே பேசிக்கிட்டு இருந்தேன். அவன் சொன்னான். ரெண்டு பக்கத்துலேயும் றக்கை முளைச்சிருக்குது. நல்லாயிருந்தான். நமக்கு மவனாயிருக்கலாம்.”

முதலியாரின் மௌனங்களுக்கெதிரில், ஒரு படையின் ஆரவாரம்கூட அர்த்தமற்றுப் போய்விடும்.

பூரணி புன்னகை புரிந்தாள்.

“அவன் இன்னொணு சொன்னான். அது இப்போ தான் புரியறாப்போல இருக்குது. ஒர் ஆளுக்கு ஒரு பேரு வெச்சா அந்த ஒரு பேரோடே நிக்கல்லே, ஒவ்வொருத்தர் அந்த ஆளுக்கு ஒவ்வொரு பேரு வெச்சுக்கறாங்க...” அவள் கொஞ்சம் தயங்கினாள். ஆனால் அவள் எசமானர் பதில் பேசுபவர் இல்லை. வீட்டில் வருடந்தோறும் திருமூல நட்சத்திரத்தில் நடக்கும் ஆராதனையில் பருப்புக் குழம்புக்கு அடுப்பின்மேல் வைத்த பெரிய அண்டாவைப் போல், மௌனம் அவள் பேசும் பேச்சுக்கள் அத்தனையையும் அவள் பேசப் பேசத் தன்னுள் வாங்கிக் கொண்டிருந்தது.

“என் ஆத்தா, என்னைச் ‘சம்பூர்ணம் சம்பூர்ணம்’னு அழைக்கும். அப்புறம் அதுவே அதுக்கு நீளமாப் போச்சு. ‘பூரணம், பூரணம்’ பூரணியா மாறிப்போச்சு என் ஆயா என்னைக் ‘கொயக்கட்டே’ன்னு கூப்பிடுவாங்க. நான் பளையதும் கூழும் குடிச்சுட்டு குண்டாயிருப்பேன். கூழு குடிச்சவன் குண்டு; சோறு தின்னவன் சொத்தை.”

முதலியார் முகத்தில் ஒரு முறுவலின் நிழலடித்துப் பயந்து மறைந்தது.

“எங்க அண்ணன் என்னைக் ‘கல்பகம்’னு கூப்பிடும். அவர் ஒரு பசு வெச்சிருந்தாரு. அதுக்குக் கல்பகம்னு பேரு. வெள்ளைப்பசு, கண் மைக்கண். அதே மாதிரி எனக்கும் கண்ணுக்கு அடிப்புறத்துலே பொறப்பிலேயே மைக்கோடு...”

அவளுடைய பழைய நினைவுகளை வாசிக்கையில், பூரணி தான் சொல்ல வந்ததை மறந்துவிட்டாள்.

“அண்ணனுக்கு மாட்டுப் பைத்தியம். கால்வாய்க்கு ஒட்டிக்கிட்டுப் போய்த் தன் கையாலேயே தேய்ச்சுக் குளிப்பாட்டும். எனக்கு நல்லா நினைப்பு வருது; ஒருநாள் இடையன் கறக்கறத்துலே அது வாலாலே கண்ணுலே அடிச்சுட்டுதுன்னு, முழங்கையாலே அதை வவுத்திலே இடிச்சான். அவ்வளவுதான்; அண்ண்ன் அதன் கழுத்தை சொரிஞ்சுட்டிருந்தது, அவனை அப்படியே இளத்துப் போட்டு, முதுவுலே குத்திக் கீழே தள்ளி, மேலே காலைப் போட்டு மெறிச்சிருக்குது பாரு, எங்களுக்கெல்லாம் ஒடம்பு வெலவெலத்துப் போச்சு. என் ஆத்தா, அண்ணாத்தைமார் ரேண்டுபேர் கட்டியணைச்சும் மாளல்லே. சோடுத்தவலை பாலும் கீழே கொட்டிப் போச்சு...

“ஹத்து பட்டிமவனே. இந்த வாசல்லே இனி தலை ஆாட்டாதே. பலி போட்டுடுவேன்’னு அண்ணன் கூச்சல் போட்டுது. செத்தேன் புளைச்சேன்னு ஒடியே பூட்டான். எங்களுக்குச் சிரிப்பா வந்தது.”

முதலியார் முகத்தில் நகையரும்பு கட்டிற்று.

“ஓரோருநாள் பவுர்ணமி இரவுலே, முழுநிலா தெருவுலே, தட்டோடுக் கூரைமேலே, ஓலைக் குடிசை மேலே, நடு வாசல்லே பால் ஒழுவற வேளையிலே, நடு நேரத்திலே, அண்ணன் வாசல் திண்ணைலேருந்து எழுந்திருக்கும். மேல்துண்டை உதறி மேலே போட்டுக்கிட்டு, கொட்டாயிலே போய் மாட்டை அவுத்துக்கிட்டுப் புழக்கடைக் கதவைத் திறந்து வயல்காட்டுக்குப் போயிடும். அப்புறம் நிலா சாயற வேளைக்குத்தான் திரும்பும். அவங்க ரெண்டுக்குமிடையில் ஏதோ ஒரு வகையிலே பேச்சுக்கூட இருக்கும்னு எனக்கு நினைப்பு. அவர் ஏதானும் ஊமைச்சிரிப்பு சிரிச்சுக்கிட்டே வருவாரு. அதுக்குக் கண் பளபளன்னும், நம்ம மனுச சாதியைப் பத்தி ரெண்டுபேரும் வம்பு வளர்த்தியிருப்பாங்கன்னு இப்போ எண்ணறேன்.

“மாடு கல்சட்டியாட்டம் குள்ளமா குறுக்குலே வளர்த்தி. கால்கூட, அதைக் கட்டற முளையாட்டமே குட்டையாயிருக்கும். முதாறு ஆவ ஆவ பாலு கள்ளிச் சொட்டாட்டம் விளுந்த இடத்தை விட்டு நவராமே, கல்கண்டு கட்டியாட்டம் தித்திச்ச நாக்குல தேனொழுவும்.”

பூரணி உள் நோக்கிய பார்வையுடன் தன்னுள் சிரித்துக்கொண்டாள். முதலியார் தன் சமுத்திர மௌனத்துள் காத்திருந்தார்.

ஒருநாள் நாங்க சின்ன பசங்க மண்ணுலே இட்டிலி, புட்டு சுட்டு தோட்டத்துலே விளையாடிட்டிருந்தோம். சடால்னு கப்பு, கீழே தலையைப் போட்டு காலை முறிச்சிட்டு மிரள மிரள முளிச்சிட்டு புஸ் புஸ்ஸுனு மூச்சு விட ஆரம்பிச்சுட்டுது. நான் அப்போ இம்மாத்தம்...” கையைத் தாழ்த்திக் காண்பித்து— “நான் அப்போ இம் மாத்தம் இருப்பேன். அண்ணன் பாத்தூட்டு, ஆத்தாவை அவசர அவசரமா அடுப்புலே சுடுதண்ணி வெக்கச்சொல்லி எங்களை வீட்டுள்ளே துரத்தினாரு. நான் மாத்திரம் ஏன் அவசரம்னு மயங்கி மயங்கி நின்னேன். நான் சுருக்க அடங்கமாட்டேன். அண்ணன் என்னைச் சப்பையிலே உதை கொடுத்து வண்டையா திட்டி உள்ளே விரட்டிச்சு. மத்தவங்கள்ளாம் அண்ணன் என்னைப் போட்ட இரைக் சல்லே பயந்து தெருவுக்கு ஓடிட்டாங்க. எனக்கு ரொம்ப ஆத்திரம். சமயல் வீட்டுலே நுழைஞ்சு அடுப்புமேல் ஏறி, அங்கே கொல்லைப்புறமா ஒரு ஜன்னல். எட்டிப் பிடிச்சுச் கிட்டுப் பார்த்தேன். ஆனால் சரியா விளங்கல்லே, நடுவுலே முருங்கை மரம் மரமாட்டம் நிக்குது.

“ஆத்தா கப்புவை முணுமுறை சுத்திவந்து கீழே விழுந்து கும்பிட்டாங்க. அண்ணன் கீழே குந்தி கப்புவை முதுகைத் தடவிக்கிட்டிருந்தது. கப்பு களுத்தை முறிச்சு அண்ணனையே பாக்குது. ஆளு என்ன நடக்குதுன்னு தெரியல்லே. நான் மெறிக்கிற மெறிலே அடுப்பு இடிஞ்சு நான் தொப்கடீர்னு விளுந்து எளுந்து வாரியடிச்கிக்கிட்டு ஒடினேன். மத்தியானம் சோத்துக்குத்தான் திரும்பி வந்தேன். ஆத்தாகிட்டே சக்கையா உதை தின்னேன். நல்ல வேளையா அண்ணன்வரைக்கும் போவல்லே. அண்ணனுக்கு நேரமில்லே. அண்ணன் கப்புவையும் கன்னுக்குட்டியையும்தான் சுத்திக்கிட்டிருந்தாரு.” .

ஆகாயத்தில் தங்க இலைகளைத் தூவினாற்போல் தென்னையின் பின்னிலிருந்து வெளிப்பட்டு ஒரு பட்சிக் கூட்டம் பளபளத்துக்கொண்டு பறந்து சென்றது.

முதலியார் கழுத்தைக் குனிந்து அதைப் பார்த்தார். அவருக்கு அங்கேதான் நினைவோ, அல்லது வேறெங்கோ? புத்தகத்தில் அடையாளம் வைத்தபடியே கைகள் தொப்பைமேல் கூம்பின.

இந்தத் தென்னைமரம் இருக்குதே—இதுக்குன்னு இந்தப் பூமிலே விதையா தெளிச்ச எந்த மரமா செடியா இருந்தா என்ன?—எல்லாமே அது அதுங்களுக்கு ஏத்தபடி கையையும் காலையும் ஆட்டறாப்பிலே இலையும் மட்டையும் கிளையுமா விரிச்சு போட்டுக்கிட்டு என்னத்தையோ எட்டிப் பிடிக்கிறாப்போலே உயரமா வளருதுங்களே, என்னாத்தை, அப்படி எட்டிப் பாக்குதுங்க? கிளங்கு, வேர்க்கடலை முள்ளங்கி வகையாயிருந்தா கீழுக்கா துருவிக்கிட்டுப் போவுதுங்க. கொடியாயிருந்தா நெடுக்கப் படருதுங்க, வரிந்து இதுங்க எல்லாம் சேர்ந்து உயர, தாழ, நெடுக்க, குறுக்க இந்தப் பூமியை அளவெடுக்குதுங்களா தையல்காரன் மாதிரி? முடியுமா? முடியுதோ இல்லியோ, சும்மாமாத்திரம் இருக்கிறதில்லே பூமிலே விதையா தெளிச்ச எதுவும்...

“ஆனா கப்புவை தாயும் கன்னுமா, தானே, தான் உதை குடுத்த இடையன் கிட்டவே ஒட்டிக் கொடுக்கிற நாள் வந்துட்டுது. எல்லாருக்கும் ஒரே நாளாயிருக்குதா இந்த உலகத்துலே? எத்தனையோ மனக்கஷ்டம், பணக் கஷ்டம் எல்லாம் திடீர்னு வீட்டுலே வந்துட்டுது. அப்போ எனக்கென்ன விவரம் தெரியற வயசா? ஆத்தா, கட்டபறையாட்டம் போட்டிருந்த காசுமாலை, கச்சட்டிகை, கண்டசரம், கல்லைக்கட்டி விட்டாப்போலெ காதுமடலை இளுக்கும் சிவப்புக்கல்லுத் தோடு எல்லாம் எங்கேயோ ஒண்ணொண்ணா அண்ணன் கழட்டிக்கிட்டுப் போயிட்டுது. போனது திரும்பியே வல்லே. ஒரொரு நாளும் வீட்டுலே பழிசண்டை— ஆத்தா பூனையாட்டம் இருக்கும். இதுக்கு எங்கே வந்தது இத்தினி வாய்? எங்களுக்கே ஆச்சரியமாயிருக்கும். தொட்டத்துக்கெல்லாம் கொட்டிக்கிட்டேயிருக்கும் அண்ணனுக்குக் கொடுக்கு எங்கே போச்சு?

“அப்புறம் ஒரு நாள் சாயந்திரம் இடையன் படியேறி வந்தான். அண்ணன் கைக்கு நோட்டு ஒண்ணு ரெண்டு மாறிச்சு. மாட்டையும் கன்னையும் ஒட்டிக்கிட்டுப் பூட்டான். கப்பு தும்பைத் திமிறித் திமிறி, திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டே, கத்திக்கிட்டே போவுது. அண்ணன் வாசல்லே, கண்மேலே சவுக்கத்தைப் போட்டு நிக்குது. கப்புவையும் கன்னையும் ஊர் தாண்டின பேரத்துக்கு ஒட்டிக்கிட்டே போயிட்டான். அந்த நாள் மறக்க முடியாது.

“அண்ணன் அன்னி ராவுலே சாப்பாட்டுக்குக் குந்தறப்போ, என்னைப் பக்கத்துலே கையாலே தனக்குத் துணையாட்டம் அணைச்சுக்கிட்டு சொல்லிச்சு: “நான் இன்னிக்கு கொண்டைசேவல் கூவுற வேளைக்கு ஒரு கனவு கண்டேன். கப்பு வாசலுக்குக் குறுக்கே படுத்துக்கிட்டு குளம்பாலே என்னைத் தட்டித் தட்டி, போவமாட்டேன்னு தலையை ஆட்டுது. சனியன் கனவுலேகூட வந்து கஸ்டத்தைக் கொடுக்குது!-”

முதலியார் பெரிதாய் இரண்டு பெருமூச்சுக்கள் விட்டார். சேர்ந்தாற்போல் ஒரே நிலையில் கொஞ்ச் நேரம் உட்கார்ந்திருப்பதுகூட அவர் பருமனுக்கு சிரமந்தான்.

ஆனால் தேகந்தான் பருமனேயொழிய மூளை, மாத்திரம் சிட்டுக் குருவி.

பாம்பு மிட்டாய் பம்பாய் மிட்டாய்
தேளு மிட்டாய் பாலு மிட்டாய்
கூடை மிட்டாய் குண்டு மிட்டாய்
தம்பிடிக்கு ஒண்ணுதான் வாயிலே
போட்டா தண்ணிதான்......

என்று பாடிக்கொண்டு போகும் மிட்டாய்க்காரனைப் போல், எதிராளி பேசிக்கொண்டிருக்கையிலேயே, ஒரொரு வார்த்தையிலும், சில சமயங்களில் ஒசைகளிலிருந்துகூட சூட்சுமமான பாகுகளை இழுத்து விசித்திரமான வேலைப்பாடுகள் உடைய சிந்தனைக் கோலங்களை யும், கூடுகளையும் அவர் எண்ணம் முடைந்துவிடும்.

இந்த உலகத்துலே ஆதாரமில்லாதது எது? கனவுகளையும் கூட்டித்தான், சம்பந்தமில்லாமலா கனவு வரும்? கனவெல்லாம் கனவா? சிலந்தி தன் உடம்பிலே சரசரன்னு இழையைக் கறந்துகிட்டே கீழிறங்கி அந்தரத்துலே தொங்குது. ஓணானாட்டம் உயர ஏறுது, அசப்பிலே நூல் கண்ணுக்குப் படுதோ? அப்படித்தான் கனவையும் பிடிச்சுக்கிட்டு நாம் தொங்கறோம். நம்மிலிருந்துதான் கனவு உண்டாவுது, கனவுக் கூட்டைக் கட்டி நடுவுலே குந்தி வாழ்ந்து அகப்பட்ட இரையைத் தின்னு, அறுந்த இடத்தை முடிஞ்சா சரிப்படுத்தி, முடியாட்டா அழிச் சுட்டு, இன்னொண்னு இன்னொரு இடத்துலே, கட்டி, ஒயாமெ ஒழியாமே...

முதலியார் பெருமூச்செறிந்து புத்தகத்தைப் பிரித்தார்.

“ஆமாம்-” பூரணி அலுப்புடன் தலையைத் தலையணையில் முன்னும் பின்னுமாய் ஆட்டினாள்.

“போவற வேளைக்குப் புண்ணியத்துக்குப் படிக்க திருவாசகம் கொண்டு வந்தியாக்கும்!—”

முதலியார் புத்தகத்தை மூடினார். சம்புடம் போல அவர் கைக்குள்ளேயே மறையும் அவ்வளவு சிறிது.

“நான் எந்தத் திருவாசகத்தைக் கண்டேன்? எந்தத் தலத்தைத் தரிசனம் பண்ணினேன், நீயாவது என்னென்னமோ சாஸ்தரம் படிச்சிருக்கே, பாடங்கேட்டிருக்கே, எங்கெங்கோ போனே, மனம் போனபடி யெல்லாம் போய் மனம் திரும்பினப்போ திரும்பி வந்தே—

இந்த வூட்டிலே நான் நுழைஞ்சதிலிருந்து எந்தத்தேரு திருநாளுன்னு என்னைக் கூட்டிப் போயிருக்கே? எனக்கு அதனாலே அலுப்பில்லே; ஆனா நினைப்பில்லியா? ஆனா, வேலை அதிகமாயிருந்தா அதுவுமில்லை.

தேர்!

அடுக்கடுக்காய் மேலேருந்து அடி வரை குலுங்கி அசைஞ்சாடி அசைஞ்சாடி இத்தனைபேர் சேர்ந்து ஒரு பக்கம் இழுத்தா ஒருபக்கம் திரும்பி ‘டிச்’சிலே விழுந்து எழுந்து, ஆடி அசைஞ்சு எந்தத் திருப்பத்திலோ ஒரு பலியாவது வாங்கிக்கிட்டு நிலைதிரும்பற நாளு நிலையில்லே. இது இப்படியிருந்தால், இந்தப் பூமிக்கு எப்படியிருக்கும்? இதுவும் ஒரு தேர்தானே!

“மாலையிலே போய் மாரியம்மன் கோவிலுக்கு விளக்கு வெப்பேன். மாடு கன்னு போட்டால் எல்லம்மனுக்கு பொங்கலிடுவேன். எனக்குத் தெரிஞ்சது அதுதான், எனக்கு நல்லா நினைப்பு இருக்குது. நான் கண்ணாலம் ஆகி இந்த வீட்டுள்ளே நுளைஞ்சு என் மாமியாரைக் காலுலே விழுந்து கும்பிட்டப்போ என்னா சொன்னாங்க தெரியுமா?”

“சின்னப் பொண்னே!” பூரணி சிரித்துக்கொண்டாள். “அவங்க என்னைச் சின்னப் பொண்ணுன்னுதான். கூப்பிடுவாங்க. ‘சின்னப் பொண்னே இந்த வீட்டுலே மூணு மறக்காதே.”

“எந்த ஊர் கொள்ளை போனாலும் உன் கையாலேயே வெள்ளி முளைக்கிற வேளைக்குத் தெருவாசல்லே சாணி தெளி. தண்ணி தெளிக்கறதை யாரும் பார்க்கக்கூடாது. அப்புறம் உலைக்குக் கொட்டறத்துக்கு முன்னே பானையைச் சுத்தி அடுப்புலே நாலு மணி அரிசி எறிஞ்சிட்டு உலையில கொட்டு. மாலையிலே தெருமாடத்துலே சாணி மேலே அகல் விளக்கு வைக்க மறவாதே.”

அவ்வளவுதான் என் மாமியார் எனக்குச் சொன்னாங்க. நான் இன்னிவரைக்கும் செய்து வரேன், இன்னிக்கு உனக்கு சொல்லிவிட்டேன்.

“அப்புறம் கழுத்துலே மாலையோடே கையிலே கொண்டைக்கிளியோடே, என்னைக் கையைப் பிடிச்சு சமையல் வூட்டுள்ளே கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே இருட்டோரத்துலே ஒரு பானையைத் திறந்து என்னை அது உள்ளே கையை விட்டுப்பார்க்கச் சொன்னாங்க; உள்ளே புடவையிருந்திச்சு.

“சின்னப் பொண்னே, பூவாடையைத் தொட்டுக் கண்ணுலே ஒத்திக்கோ, இதுலே ரெண்டுபேர் இருக்காங்க. ஒண்னு பெரிய பொண்ணு, உனக்கு மூத்தாரு. இன்னொண்ணு எனக்கு ஒரு மகள் இருந்தது. கண்ணாலம் ஆவறத்துக்கு முன்னாலே பூட்டாள். அதுனாலே கன்னித் தெய்வம் ஒண்ணும் கல்லாட்டம் தாலி கட்டின தெய்வம் ஒண்னும், சேர்ந்து இந்த வீட்டைக் காக்கறாங்க. வருஷத்துக்கும் மறவாமே இவங்களை கும்பிட்டு வந்தா இந்த வீட்டுக்கு ஒரு குறைவுமில்லே. இவங்க ரெண்டுபேரும் இறந்துபோறப்போ, போற வயசில்லே. அதுனாலே இவங்க இறந்துட்ட மாதிரியே நான் நினைக்கல்லே. இங்கேயே இருந்துட்டுதான் இந்தக் குடும்பத்தைக் காத்து வராங்க. இவங்களை நீ மறக்காதே. பாரு நான் சொல்லுறேன், கவுளியடிக்குது.”

முதலியார் தன் மூத்த மனைவியை ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொண்டார். இத்தனை வருடங்கள் கழித்து அவள் உருவத்தை வருவித்துக் கொள்வதே சிரமமாய் இருந்தது. அவளைவிட மனதில் அழுத்தமாய்ப் பதிந்தது அந்தக் கலியாணத்தின் விமரிசைதான். தெருவையடைச்ச பந்தலும், அடுக்கடுக்காய் நவர்ந்த பச்சைராந்தல் விளக்கும், வண்டி வண்டியாய் உடைஞ்ச கலர் கோலி, சோடா புட்டியும், ஊர்வலத்துக்காக ‘பெஸலா’ உழக்குவாக்கத்திலேருந்து ஆள் வந்து ஜோடனை பண்ணின பூப்பல்லக்கும்......

எல்லாம் என்னத்துக்கு? யாருக்கு ஆச்சு?

சாந்திகூட கழியல்லே. கலியாணம் ஆகி ரெண்டு மாதத்தில் மூணுநாள் காயலில் இறந்துாட்டா.

ஏதோ அவள் இறந்து போனத்துக்கு புது மருமவப் புள்ளைதான் காரணம்போல், அந்த வீட்டு மனஸ்தாபமும், வீட்டுக்கு முதல் புள்ளேன்னு ஆசைமேல் அப்பன் செலவு செஞ்சு வைச்சுப்போன கடனும்தான் மிச்சம். இந்தக் கடனெல்லாம் அடைச்சு காலை ஊணித் தலை நிமிர்ந்து, இன்னொரு வீட்டுக்குப் போய் இன்னொரு பொண்ணைக் கேக்கறத்துக்குள்ளே நாலு வருசம் ஒடிப் போச்சு. அப்படியே பண்ணினாலும் இந்தக் கண்ணாலம் அந்தக் கண்ணாலம் மாதிரி செய்ய முடிஞ்சுதா? பாத்தியர் கண் மூடிக் கண் திறக்கறத்துக்குள்ளே, மூச்சுவிட்டு மூச்சு கூட்டுதுக்கு முன்னே, எத்தனை நாள், என்னென்னெல்லாம்! ஓடுது, ஓடுது, அது பாட்டுக்கு ஓடுது.

யாரோ மாடிப் படியேறி வாராங்க. மேல் மூச்சு வாங்குது.

யாரு? மூத்த மருமவதான் நிறைவயத்தைத் தூக்கிட்டு வரா, தூக்கமாட்டாமே. வந்து மாமியார் கையை எடுத்துத் தன் கண்ணுலே புதைச்சுக்கிட்டு விக்கி விக்கி அழுவறா!

“பாஞ்சாலி இதென்னாது?”

“அம்மா! அம்மா!” என்று கதறுவது தவிர பாஞ்சாலிக்கு வேறு வார்த்தைகள் எங்கே?

“என்ன அம்மே இது? சமாளி... ஆவாது.”

“அம்மா! அம்மா!”

ஆமா, பாஞ்சாலிக்கு அவதான் மாமியாரு, அவதான் ஆத்தாகூட. அப்பன் ஆத்தா ரெண்டு பேருமே பாஞ்சாலிக்கு இல்லை. எங்கேயோ மாமன் வீட்டில் வளர்ந்து வந்தா. மாமன் தருமத்துக்கு வளத்தேன்னு கூடவே காட்டி வந்தான். அது அத்தைக்கு ஆவல்லே புள்ளைக்குக் கட்டி, பொண்ணு ஆளாவறத்துக்குள்ளே அத்தை, வீட்டுக்குக் கூட்டி வந்தூட்டா.

பாஞ்சாலி இங்கே வந்துதான் வேலையெல்லாம் கத்துக்கிட்டா. இங்கேதான் ஆளானாள். இங்கேதான் தன் குட்டிங்களைப் பெத்தாள். தான் போனப்பறம் தன்னிடத்துலே பாஞ்சாலி இங்கேதான் இருக்கணும். இருக்கப்போறா. என்னைப்போலேயே தனக்கு வேளை வந்ததும் பாஞ்சாலி இங்கேதான் போவப்போறா. பாஞ்சாலி இந்த வீட்டுக்கு மருமவ. பாஞ்சாலி இந்த வூட்டுக்குப் பொண்ணு. பாஞ்சாலி நல்ல பொண்ணு...

“அளுவாதே பொண்ணே. குழந்தைக்கு ஆவாது. நான் சொல்லுறேன் கேளு இங்கே வா.”

பாஞ்சாலி குழந்தை மாதிரி அருகே வந்தாள். பூரணி, பாஞ்சாலியின் மேலாக்கின் கீழ் அடிவயிற்றில் கை வைத்தாள். கையடியில் உயிர்ப்பிண்டம் புரண்டது. ஸ்பரிசத்தின் அதிர்ச்சி, திடீரென அவளுடைய வெளி நினைவை மூர்ச்சையில் கொண்டுபோய்விட்டது. அவள் எங்கோ படிப்படியாய் அலை அலையாய்த் தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள். விழுந்தடித்து ஒடும் மாட்டின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குவதுபோல், உள் நினைவைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவள் மூர்ச்சை வழி இழுபட்டுச் செல்கையில் போகும் வழியெல்லாம் அவள் மேல்தோல் சட்டைகள் ஒவ்வொன்றாய் உரிவதுபோல், வருடங்கள் வயதுகள் கழன்று விழுந்து கொண்டு இளையவளாய் ஆகிக்கொண்டிருந்தாள். திடீரென அவளை இழுத்துச் செல்லும் மாட்டின் எதிரே யாரோ பூமியிலிருந்து முளைத்துத் தோன்றி அதன் இரு கொம்புகளையும் கையால் பிடித்து இழுத்து அதன் வேகத்தை நிறுத்தி அதைச் சட்டென அப்பால் பிடித்துத் தள்ளியது போன்றிருந்தது. பூரணி பிடி தளர்ந்து கீழே வீழ்ந்தாள். அவள் கைகள் இரு பாதங்களின்மேல் வீழ்ந்து இறுகப் பற்றின. கண்கள் அவள் கணவன் முகத்தில் விழித்தன.

ஆனா அவரு இப்போ இருக்கற மாதிரியில்லே. இப்போத்தான் ரெண்டுபேருமே, கோயில் உற்சவத்துலே முன்னாலே ஆடிக்கிட்டுப் போற பூதம்மாதிரி பெருத்துட்டோமே! அதுவும் அவரு, ஆனாலும் கைலாச வாகனம், மாதிரி குறுக்கே ஒரேயடியா அகண்டுட்டாரு. இப்போ ஆள் ஒக்கார ஒருநாழி, எழுந்திருக்க என்பாடு உன்பாடு. ஆனால், புடுங்கியெடுத்த மாதிரி மூஞ்சிலே ஒரு முரட்டுத் தனம் இன்னமும் இருக்குது. இந்தக் கண்ணாலே இப்படிப் பார்த்தாலும், இப்போ இந்த உள்பார்வையிலே இந்த வீட்டுள்ளே நான் நுழைஞ்சப்போ எப்படி இருந்தோமோ அப்படியேதான் இருக்கோம். இது ஒரு ஆச்சரியமில்லே?”

அவளைத் தூக்கி எதிரே அவள் புருசன் நிறுத்தினார். கண்ணை நிமிர்ந்து பார்க்கத் திகிலாயிருக்குது. அங்கே கோவம்னு இல்லே, ஆசைன்னு இல்லை. ஆனா ஒரு நெருப்பு. அதுக்கு உடம்பு பயங்கண்டு கூசினாலும் உள் நினைவு தைரியமா எதிர்முழிப்பு முழிக்குது பிடுங்கின வேராட்டம். முண்டும், முடிச்சுமாய், நரம்பு புடைச்ச மாரில் சுருட்டை சுருட்டையா மயிர் என்னை அவர் புடிச்சு இறுக்கறப்போ, அவர் தோளிலே நான் மாவாய் குழைஞ்சு பூட்டாப்போல் இருந்தது.

அந்த உடம்பிலே, அந்த முகத்திலே அழகில்லே, மெதுவில்லே, வெறும் பலந்தான். அதனாலே அதுக்குக் குறைவில்லே. எத்தனையோ நாள் ராவுலே, இருட்டுலே, ஆசை மூச்சிறைப்பில், அந்த உடம்பைத் தேடி உணர்றப்போ, அதில் ஒடத்தில் ஒடுங்கறமாதிரி ஒரு பத்திரம், தெம்பு, தைரியம், எல்லாம் இருக்குது. அதன்மேல் எனக்கு ஒரு அதிகாரம்கூட......தோணுது.

“ஆனால் இந்த பகல் வேளையிலே அவங்கவங்க வேலையிலே அவங்கவங்க முனையறப்போ, ஆளே மாறிப்பூடறாங்க. சில நேரங்களிலே வேத்தாள் மாதிரி, அடையாளங்கூடக் கண்டுக்காத வெத்துப் பார்வையை நினைக்கறப்போ—அட, இந்த உடம்பையா ராவுலே நான் இப்படி எனக்குச் சொந்தம் மாதிரித் தடவி இதுமேலே விழுந்தேன். இல்லே, இன்னிக்கு இனிமேலே இன்னிலிருந்து தொடக்கூடக் கூடாதுன்னு மனசை திடம் பண்ணிக்கிட்டு ராவுலே திரும்பிப்படுத்தாலும், செவுத்திலே பாம்பு வளிஞ்சு இறங்கற மாதிரி இருட்டிலே அந்தக் கை நீளமா தேடி வந்து, மேலே விழுந்து புடிச்சுத் தன் பக்கமா இழுக்கையிலே வைராக்கியம் எல்லாம் எங்கே பறந்தோடிப் போவுது?

“அந்த ஆளுடைய சுபாவமே அப்படின்னு நாளாவ ஆவ, கண்டுக்கறோம். ஆனால் கண்டுக்கற வரைக்கும் சொல்லு. ஆனா இந்தப் பூமிலே எல்லாமே நமக்குப் புரியுதா? ஆனா புரிஞ்சுதான் என்ன ஆவனும்? நமக்கு என்ன வேணும்? நம்மைத் தொட்டுத் தாலி கட்டின புருஷன் என் மானம் அவன் கையிலே, அவன் சுகம் என் கையிலே. மாலையிலே வந்தா அண்டாவிலே வெண்ணீரை விளாவி பகல் எல்லாம் உழைச்ச நோவு தீர உடம்புக்கு விட்டு, முதுவு தேச்சு, நடுவாசலில் கிண்ணியை வைச்சு ஆவி பறக்க முளிமுளியா சோறுவட்டி, அதுலே புளி மட்டா, காரம் மட்டா காச்சி ரசம் விட்டு கடிச்சுக்க கிச்சலித் துண்டைக் கிள்ளிப் போட்டு விசிறிக்கிட்டு நிக்கறத்தைவிட, நமக்கு வேறு என்னா தெரிஞ்சாவனும்? இந்த நினைப்பெல்லாம்கூட இப்போதான். அப்போ அதுக்குக்கூட பொழுது ஏது? .

“அப்பறம் ஒருநாள் வவுத்துலே வித்தை வாங்கிக் கிட்டோம்னு நிச்சயம் ஆன அப்புறம் அது நம்ம வவுத்துக் குள்ளேயே நமக்குப் புரியாமலே முளைச்சு முழுசு ஆகி வேளை வந்ததும் ஒருநாள் நம்மை விட்டுக் கழண்டு தானும் தனியா, ஒண்ணா, வீல்னு கத்திக்கிட்டு விளுந்தப் புறம் தொப்புள் கொடியையும் துண்டு போட்டப்பறம் கூட நம்ப எண்ணத்தைப் புரிஞ்சுக்கிட்டோம், என்ன புரியல்லே?

“கொழந்தையை மாரண்டை கொண்டு போவறத்துலேயே, பால் காம்புலே முத்திட்டு நிக்குது அவன் காம்புலே வாயை வெச்சுக் கடிச்சு இழுக்கறப்போ, இந்த உடம்புலே இரத்தம்தான் ஏன் ஓடுது? எனக்கு என்னாத்துக்கு இம்மாத்தம் ரத்தம், எல்லாமே பாலா மாறி, எல்லாத்தையும் இவனுக்குக் கொடுத்தாட மாட்டேனான்னு அவா உடல்லே துளும்பித் துடிக்குது. .

“ஒரோரு கொழந்தையும் பொறக்கறப்போ எல்லாம் இதே அவஸ்திதான். சந்தோஷம் தாங்க முடியாத ஒரு கஸ்டம். அப்பறம் ரெட்டைக் கொழந்தைங்க பிறந்திருச்சே, அப்பொத்தான் இந்த வேதனை சொல்லிக்க முடியல்லே. ரெண்டு முலையிலும் பாலை உறிஞ்சிட்டு ரெண்டும் தூங்கும். அதுங்களைப் பன்னிக்குட்டியாட்டம் அப்படியே ரெண்டு கையிலும் தாங்கிட்டே நாலு கையா வேலையை செஞ்சி வளைய வரணும். அதுங்க குடிச்சமாதிரி மத்ததுங்க குடிக்கல்லே. ஆனா தக்கல்லே; தவழ்ற வயசு வந்ததும் வாசல்லே போய் மண்ணைத் துன்னுடுங்க. என்ன பண்ணாலும் தடுக்க முடியல்லே. ரெண்டுக்கும் வவுத்துலே புத்து வைச்சுட்டுது; ரெண்டும் ஒரே நாளுலே பூட்டுது. மூணு நாளைக்கு மூலையிலே சுருண்டு படுத்து முந்தானையை மூஞ்சிலே போட்டுக்கிட்டு அழுது அழுது முழி வீங்கிப் போனாலும் மாரிலே பாலு கட்டி படுத்தின பாடு தாள முடியல்லே. கல்லாட்டம் கனத்துகிட்டு மார் வீங்கியே போச்சு. நல்ல வேளையா அன்னிக்கு எதிரிலே வாத்தியார் அய்யர் வீட்டு அம்மாவை முகமாத்தியாக் காணப் போனேனோ, புளைச்சேன். இதுவரைக்கும் எதிர்வீட்டுக்கு நான் போனதில்லே. அவங்க அப்போத்தான் வேறு ஊர்லேருந்து மாத்திவந்து பத்து நாளோ என்னவோ ஆவுது. ராவோடு ராவா அந்த அய்யர் வண்டியும் சாமானும் குடும்பமுமா இறங்கி யாரையோ சிபாரிசு கூட்டிக்கிட்டு நம் வீட்டுக் கதவையிடிச்சாரு.

“முதலியாரே, நான் இங்கே வாத்தியாரா வந்திருக்கேன். எதிர் வீடு உங்க வீடு காலின்னு கேள்விப்பட்டேன். தங்கறத்துக்கு இடங் கொடுக்கணும்”னு கேட்டாரு. வீட்டுக்கு விளக்கேத்தி வெக்க வந்தவங்களை வேணாம்னு, தள்ள எந்த நாக்கு எழும்பும் அது என்ன நாக்கு?

“இன்னியாட்டம் அய்யரு தாயார் தாழ்வாரத்துலே குந்திகிட்டு மருமவளை என்னவோ பேசிட்டிருந்தாங்க. மருமவள் தூணிலே சாஞ்சிட்டு கண்ணுலே தண்ணி விட்டிட்டிருந்தது.

“எல்லாத்துக்கும் பூர்வ ஜன்ம புண்ணியம் வேணும். ஆனால் நீயிருக்கிற மாதிரி இருக்கையே அதுக்கு எவ்வளவோ பாபம் பண்ணித்தான் இப்படி நேர்ந்திருக்கு” என்கிறாங்க அந்த அம்மா மருமவளை.

“ஏன் இந்த அம்மா இப்படிப் பேசறாங்கன்னு ஆத்திரமா வந்திருச்சு. இருந்தாலும் நம்ம சமயத்துலே வரல்லே. நழுவப் பார்த்தேன். ஆனா, என் தலையைக் கண்டுட்டாங்க. ‘இங்கே வாடி பொண்னே’ன்னு என்னைச் சாச்சிக்கு இழுத்துட்டாங்க.

“நீயா, யாரு, வீட்டுக்காரிதானே? வா, ஒக்காரு அங்கே பாத்திரத்து மேலே பட்டுக்காதே ”

“என்னம்மா, சின்னம்மா கண்ணாலே சிந்திக்கிட்டு நிக்குது?”

“ஆமா”— பெரியம்மா சலிச்சுக்கிட்டாங்க.

“இவாள் எல்லாம் ஏன் கொழந்தை குட்டிக்கு ஆசைப் படறாளோ தெரியல்லே!”

அப்படி அவங்க சொன்னதுதான் எனக்கு என்னன்னு தெரியல்லே. ஒரு அழுகை வந்திருச்சு பாரு... விக்கி, விக்கி உடம்பு அடக்க முடியல்லே, அப்படிக் குலுங்குது.

பெரியம்மாவுக்குத் திக்கினு ஆயிடுச்சு. ஆனால் சின்னம்மா என்ன கண்டுகிட்டாங்களோ தெரியல்லே, சரசரன்னு உள்ளே போய் ஒரு துணி மூட்டையை எடுத்து வந்து, என் மடியிலே வெச்சாங்க. அதிலே, ஒரு பிள்ளைப் புழு வாயை ‘ஆவ், ஆவ்’ணு திறந்திட்டு நெளியுது.

அதை அப்படியே வாரி மாரோடு அணைச்சுட்டேன், பாலு கொட்டுது. கொழந்தை வாயை வெச்சுக் கவ்விக் குடிக்கற சொகத்துலே நான் என்ன செய்தேன்னு எனக்கே தெரியாது. மார்த்துணி கயண்டு கீழே நழுவிட்டது நெனைக்கிறேன். ரவிக்கை முடிச்சை அவுத்துட்டேன், கட்டின பாலு கயண்டு ஓடுது அம்மாடி! அப்பாடி! சொகத்துலே எனக்குக் கண்னு சொருவிப்போச்சு. செவுத்துலே அப்படியே சாஞ்சிட்டேன். என் கண்ணுலே தண்ணி சில்லுன்னு ஓடிக்கிட்டேயிருக்குது. நான் வெக்கங் கெட்டுப் பூட்டேன். என் அலங்கோலத்தைச் சின்னம்மா பாத்து அவசர அவசரமா ஓடிப்போய் வாசக்கதவைச் சாத்தித் தாப்பாள் போட்டாங்க.

பையனுக்கு மழைத் தப்பளையாட்டம் வவுறு விடாய்ச்சிக்கிட்டாலும் புடி விடல்லே. குடிக்கிறான் அட்டையாட்டம் ஒட்டிகிட்டு. குடிக்கட்டும், குடிக்கட்டும், நல்லா குடிக்கட்டும், நான் பெத்தாத்தான் மவனா? நான் பேத்ததுங்கதான் குளியிலே ஒண்ணையொண்ணு கட்டிகிட்டு உறங்குதே எங்க பாலை இதுக்குக் கொடுன்னுதான் அப்படி உறங்குதோ என்னவோ. யார் பெத்தா, யார் வெச்சா என்ன? இதோ எதிரே காயா காச்சுத் தொங்குதே இந்த முருங்கை மரத்தை நானா வெச்சேன்? இல்லாட்டி என்னைக் கேட்டுத்தான் மொளைச்சுதா? ஆனால் அதன் காயை அறுத்துப் பொரியலும் குளம்புமா மாத்தி மாத்தி ஆக்கித் துன்னல்ல?

கொஞ்ச நேரமானப்புறம் அந்தப் பெரியம்மா கேட்டாங்க. எப்பவுமே கொஞ்சம் அதிகாரம்தான்.

“என்னடி உன் பேரு?”

“பூரணி.”

“அன்னபூரணியா?”

“இல்லேம்மா, சம்பூரணம்.”

அன்னி ராவுலே ஒரு கனா வந்தது. எங்கே பார்த்தாலும் சோத்தை வடிச்சு மலைமலையாக் குவிச்சிருக்குது. அதன் பால் வெள்ளை கண்ணைப் பறிக்குது! இம்மாத்தம் அரிசியை அவ்வளவு சுத்தமா குத்தி நோம்ப எத்தனை பேர் வேண்டியிருக்கும்! நான் அந்தச் சோத்துமலை ஒண்ணு மேலே முளங்காலாழத்துலே நின்னுகிட்டு, யார் யாரோ வராங்க ஆண் புள்ளையும் பொம்புள்ளையுமா தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாம். அவங்களுக்கு ரெண்டு கையாலேயும் அள்ளி அள்ளிப் போடறேன். மடியிலும் கையிலுமா ஏந்திட்டுப் போறாங்க. ஆனால் நான் மூணு நாள் பட்டினியிலே இருக்கேன் என் வவுத்திலே ஒரு பருக்கையில்லே, எனக்குத் தெரியுது. ஆனா எனக்குப் பசியேயில்லை. இவங்க வவுறு நிறையுது என்கிற எண்ணத்துலேயே என் பசியாறிப் போயிட்டுது.

சாரி சாரியா வாங்கிட்டுப் போறாங்க. அப்படியும் ஒண்ணும் ஏழை பாழையில்லே. ஆனா என்கிட்டே வாங்கிட்டுப் போவணுன்ற எண்ணத்துலேயே வாங்கிட்டுப் போறாங்க.

அப்போ சட்டுனு அவங்களுலே ஒரு ஆள் ஒதுங்கி நிக்கறான். நான் கையிலே சோத்தை ஏந்திட்டு நிக்கறேன். ஆனா அந்த ஆள் கை நீட்டி வாங்கல்லே. என்னையே கண் கொட்டாமல் பாத்துட்டு நிக்கறான், அவன் மொவத்தைப் பார்த்ததும் எனக்கு...”

“அம்மா! அம்மா!!”

காதண்டை பாஞ்சாலி கூப்பிட்டதும் பூரணி விழித்துக்கொண்டாள்.

“ஓ! நான் தூங்கிட்டேன் திடீர்னு—”

“அம்மா போட்டோக்காரு வந்திருக்காங்க.”

“வேணாம்னு சொல்லி அனுப்பிச்சிடு,”

“ஏம்மா! நீ சொல்லித்தானே வந்தாங்க—”

“ஆமா, அப்போ அப்படி நெனைச்சேன். இப்போ வேணாம்னு இருக்குது.”

“எங்க நினைப்புக்கு அம்மா ஒரு போட்டோ—”

“என்னைப் போட்டோ இருந்தாத்தான் நினைப்பீங்களா...அதுவும் போட்டோலே இருந்திச்சப் பிரகாரம் தான் நினைக்கணும். இப்படி என்னை ஒரு நாக்காலிலே சாத்தி வைச்சு சீக்காளியா சிங்காரிச்சு...! நான் நல்ல படியா உலாத்திட்டிருந்தபடி நெனைப்பிலே நினையுங்க போதும். எனக்குப் போட்டோ வேணாம். வந்தவங்களைப் போவச்சொல்லிடு.”

பாஞ்சாலி பெருமூச்சு விட்டுக்கொண்டு மெதுவாய்க் கீழே அடிமேல் அடிவைத்து இறங்கிச் சென்றாள்.

முதலியார் குன்றுமாதிரி அசைவற்று உட்கார்ந்தார். அவர்மேல் கொடிகூடக் கட்டிப் பறக்கவிடலாம்.

“அந்த ஆளை எங்க பார்த்திருக்கோம்?” பூரணி கண்னை மூடிக்கொண்டு, மங்கிக்கொண்டிருக்கும் நினைவைக் கூட்ட முயன்றாள்.

“ஆ..இப்போ நெனப்பு வருது.

“அன்னிக்குக் காவாய் தாண்டி, காத்தடிச்சு ஒரு மரம் விளுந்திச்சுன்னு, அதுலே கப்பும் கிளையுமா அடுப்புக்கு எல்லாரும் ஒடிச்சிட்டுப் போனாங்களேன்னு நானும் போனேனே. ஆனா, நாம் போன வேளைக்கு எல்லாரும் மரத்தை மொட்டையடிச்சுட்டாங்க. கிளங்காட்டம் அடி. மரம்தான் மிச்சம். கோடாலி போட்டுத்தான் வெட்டணும்.

“அந்த மரத்துமேலே, கீளே காத்தடிச்சா விளுந்துடற மாதிரி, தட்டுக்கேடா குந்திட்டு பொய்ஸ்தவத்தை, மொவத்துக்கு நெருக்கமா புடிச்சிட்டு இந்த ஆளு தன் நெனைப்பு மறந்து படிச்சுட்டிருந்தான்.”

“வெளியூராளு. இந்த ஊர் மொவம் இல்லே. நம்ம ஜாதிகூட இல்லே. வெய்யில்லே மூஞ்சித் தோல் வயளும் போல, ரத்தம் அப்படி நெத்தியிலும் கன்னத்துலேயும் கன்னிப்போச்சு, மயிர் செம்மண்ணாட்டம் ஜெவப்பா ஜொலிக்குது. அவன் வார்ததையே வாயிலே மென்னு ருசிகூட்டி முழுங்கறது. ரொம்ப ரொம்ப வேடிக்கையா இருந்திச்சு. என்னையறியாமே வாய்விட்டு சிரிச்சுட்டேன்.”

“சிரிச்சா என்ன?” நான் நாணங்கெட்டுப் பூட்டேன்னு சொல்ல என்னைவிடப் பெரிய ஆம்புள்ளையா? நிச்சயமா எனக்கு ஏளு எட்டு வருசம் பிந்தித்தான் பொறந்திருப்பான். நான் மூணு பெத்தப்புறமும் இன்னும் சமைஞ்ச பொண்ணாட்டம் நடுவூட்டுலே குந்திட்டிருக்க முடியுமா? வீட்டு வேலை ஆவறது எப்படி?

“இல்லே, முன்னுது பின்னுதெல்லாம் யோசனை பண்ணுட்டுதான் சிரிப்பு வருதா? என்னமோ வந்தது சிரிப்பு! சிரிச்சேன். அட போயேன்!......”

“அவன் நிமிந்து பாத்தான். எழுந்திருச்சு நின்னான். அவன் மொவம் ஒரு மாதிரியா மாறிப்போச்சு, காத்தடிச்சா செவுத்து வெளக்குச் சுடரை கை மறைச்சா உள் விரல்லே ‘டால்’ அடிக்கல்லே. அதுமாதிரி அந்த மொவம் சாயம் தொஞ்சிப் போச்சி. அப்புறம் கடைசி வரைக்கும் அந்த முவம் அப்படியேதான் இருந்திச்சுன்னு என்னெண்ணம்.

“எனக்கு வெக்கமாப் போச்சு. அந்த இடத்தை விட்டு நவந்து, காவா தாண்டி நாலடி வந்துட்டேன். நடுவழியிலேயே தான் அவனை மறந்துகூடப் போயாச்சு. வூட்டுலே கழுத்து நிமிர நிக்குற ஒரு வண்டி வேலை மேலே நெனப்புபூட்டுது.

“வெள்ளி முளைக்கிற முன்னாலே வண்டிநெல் புளுக்கியாவணும். வேகமா நடையைக் கட்டினேன்.

“பின்னாலே ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினா அந்த ஆளைப் பார்த்தேன். நான் நின்னா அவனும் நின்னான்.நான் நவந்தா அவனும் நவந்தான். எனக்குத் திகிலாயிட்டுது. ஒட்டமா வீட்டுக்கு வந்து ட்டேன்;

“ஆனா அன்னிக்கு நடுராவுலே அடுப்புலே அண்டாவுலே கட்டையாலே நெல்லை நான் கிளர்றச்சே திடீர்னு ஆவிலேருந்து பிரிந்து ஜெவஜெவன்னு அந்த முகம் எழுந்திருச்சதும் எனக்குத் திக்குனு ஆயிட்டுது. செவுத்துலே அறைஞ்சு சாணியாட்டம் அப்படியே நின்னுட்டேன். நெல்லு புழுங்கின நாத்தம் திடீர்னு சாம்பிராணிப் புகையாட்டம் வாசனை தூக்குது. எனக்கு என்னான்னே புரியல்லே. இந்த நெனப்பு எங்கே இப்படி திடீர்னு வந்தது? அந்த நினனப்புக்கு ஒரு வாசனைகூட எப்படி வந்திச்சு? சட்டுனு அந்த உருவம் மறைஞ்சுட்டுது. மேல்காரியம் ஒடல்லே. எப்படியோ முடிச்சுட்டுது. வாசலுக்குச் சாணியைத் தெளிச்சுட்டு, தலைப்பை விரிச்சுத் தரையிலே விழுந்தேன்.

“ராவெல்லாம் தாக்கம் முழிச்சு கண்ணு திகுதிகுன்னு நெருப்பு கக்குது. ஒடம்பு பூட்டுக்குப் பூட்டு விட்டுப் போவுது. இன்னும் வேலை தலைக்குமேலே கிடக்குது.

“புளுக்கின நெல்லைக் களத்து மேட்டுமேலே காயப்போட வண்டியைக் கட்டிக்கிட்டு ஆளு வந்திடுவான். சோறாக்கியாவணும். பெரிய பையனுக்கு மாரியாத்தா வந்து இறங்கியிருந்தாள். மத்தியானம் அண்டா நிறைய கூழு காச்சி, ஏழைங்களுக்கு ஊத்தியாவணும். நம்ம பின் தங்கிட்டோமுன்னு அதை ஒடிப்போய்ப் புடிக்கிற வரைக்கும் எந்தக் காரியம் நமக்காகக் காத்துட்டு நிக்குது?”

“எல்லாத்துக்கும் ஒடற தண்ணிலே அமுந்து குளிச்சாதான் உடம்பு ஒரு நிதானத்துக்கு வரும்னு காவாய்க்குக் கிளம்பினேன்.

“தண்ணிலே இறங்கினேன். வானத்துலே கிஷ்டான்னு கருடன் கத்திச்சு. கன்னத்துல போட்டுக்கிட்டே மொவம் நிமிந்தா,கரைமேட்டுப் பின்னாலே கையைக் கட்டிக்கிட்டு, அந்த ஆளு என்னை முறைச்சபடி நின்னுட்டிருந்தான். அவனுக்குக் கண் இமைகூடக் கொட்டல்லே. ராவெல்லாம் இவன் எங்கேயிருந்தான்? என் மாதிரியே தூக்கம் முளிச்சுக்கிட்டாயிருந்தான்?”

“எனக்கு ஆத்திரத்துலே தைரியம்கூட வந்துட்டுது. ‘பொம்புள்ளங்க குளிக்கற எடத்துலே ஆம்புள்ளேங்களுக்கு என்ன வேலை? அவங்களுக்குத் துறை தனியாயிருந்தாலும் இங்கேதான் கண்ணா என்ன’ன்னு பொதுவுலே கத்தினேன்.”

“அவனுக்கு மெதுவா தலையிறங்கிட்டுது. கண்ணுலேயிருந்து ரெண்டு சொட்டு கன்னத்துலே வழிஞ்சு இறங்கிக் கீழே விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்குத் தொண்டையிலே துக்கம் பிரண்டுது. பூட்டான் அவன். நான் தண்ணிலேயே குந்திப்டிருந்தேன். இப்போ என்ன இப்படி எனக்கு ஏன் இருக்குது? நெனைப்பு இருப்புக் கொள்ளமாட்டேங்குதே!

வீட்டுக்கு வந்தேன். விரல் நுனியிலே குங்குமத்தை ஏந்திட்டு சமையல் வீட்டிலே செவுத்துலே பதிச்ச கண்ணாடிலே மொவத்தை நீட்டினேன். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என் மூஞ்சியும் அவன் மூஞ்சியும், ஒரேவெட்டா என்ன? அவன் செவப்பு. நான் கறுப்பு. அது தவிர, நெத்தி சரிவு, மூக்கெடுப்பு எல்லாம் ஒரு அச்சா, இருந்தது. இது என்ன நெசமா வெறும் நெனப்பா?

சோறு உண்டையா தொண்டையிலே சிக்குது. கலத்தோடே எடுத்துப் போய்க் கழுநீர்த் தொட்டிலே, கொட்டிட்டேன். (நெனைப்பு விண்விண்ணுன்னு புண்ணாட்டம் தெறிக்குது). ஏணையிலே தூங்கிட்டிருந்த கொழந்தையை எடுத்து மடியிலே விட்டுக்கிட்டேன். என்ன செய்யறது, செய்யுதென்னன்னு புரியதில்லே.

“ராச் சோறும் தொண்டை வரைக்கும் கசந்தது. கையிலே இலையை ஏந்திட்டு நாயைக் கூப்பிட வாசலுக்குப் போனேன். பக்கத்து சந்து இருட்டிலேருந்து அந்த ஆளு பிரிஞ்சு வந்து இரண்டு கையையும் நீட்டினான். எனக்கு உடம்பு பரபரன்னுது.

“ஐயா இது எச்சில், உள்ளே வந்து குந்து, இலை போட்டு சாப்பாடு வெக்கறேன்.”

அவன் ஒண்னும் பதில் பேசல்லே. புன்சிரிப்போடு என் கையிலேருந்து எலையை இழுத்தாப்போலே பிடுங்கிட்டு, சாமி கும்பிடறாப்போலே எனக்குத் தலை வணங்கிட்டுப் போனான். கைகூடக் கழுவாமே நான் நடைத் திண்ணைலே கொஞ்ச நேரம் குந்தியிருந்தேன்.

அன்னி ராவுலே அவன் கனவுலே வந்தான். நான் காவா மேட்டுலே மரத்தடிலே நிக்கற மாதிரியிருக்குது. அவன் எதிர்க் கரையிலே நிக்கறான், பால் மறக்கடிச்ச குழந்தையாட்டம் மொவத்துலே சொல்ல முடியாத வெசனம் தேங்கி நிக்குது.

“பூரணி”—தண்ணி ரொப்பி வெச்சத் தவலையைத் தட்டினாற்போல அவன் குரல் அழுகையோடு என்மேலே பாஞ்சுது.

“பூரணி, ஏன் எச்சில் என்கிறே? நீ சோறு துண்ணச்சே உன் கொழந்தைங்க ஆடி அசைஞ்சு நடந்து வந்து கைய நீட்டினால், நீ உன் கலத்துலேருந்து உண்டை சோறு உருட்டி அவங்க கையிலே சிரிச்சுட்டே கொடுக்கல்லே? நான் உன் எச்சிலைத் தின்னா அது ஒரு அடையாளமாத்துன்னேன். அன்னிக்கு உன்னை நான் கண்டபோது இன்னிக்குத்தான் உன்னைக் கண்டாலும் மூவாயிரம் வருசங்களாகத் தெரியும் ஒண்னு நெஞ்சிலே உறைச்சுப் போச்சு. பூரணி, உன் எச்சிலை நான் தின்னல்லே. இந்த மூவாயிரம் வருசமா உனக்கும் எனக்குமா விதவிதமா வந்த உறவைத்தான் ருசி பார்த்தேன். இத்தனை வருசங்களிலே இந்தப் பூமியிலே எத்தனை பிறப்பு நீயும் நானும் எடுத்திருப்போம்? ஒண்ணுலே நீ எனக்குத் தாயாயிருந்திருப்பே. உனக்கு நான் புள்ளையாய்ப் பொறந்து உன் மடிலே கொஞ்சியிருப்பேன். இன்னொண்ணுலே உடன்பிறப்பாயிருந்திருப்போம். என் தங்கையாயிருந்தா உன்னை நான் தோளிலே தூக்கி வெச்சிட்டு ஊரெல்லாம் சுத்தியிருப்பேன். எனக்கு அக்காவா இன்னொனுலே நீ வாச்சிருந்தா என்னைத் தூக்கிட்டு நீ சுத்தியிருப்பே. எனக்குப் பாட்டியாயிருந்திருப்பே. உனக்கு நான் பேரனாயிருந்திருப்பேன். ஒரு புறம் புலே சும்மா வேண்டியவங்களா யிருந்திருப்போம். இன்னொன்னுலே வேண்டாதவங்களாவே யிருந்திருப்போம். நடுவுலே பிறப்புக்குப் பிறப்புப் பிரிஞ்சு இருந்திருப்போம். மறுபடியும் கூடியிருப்போம். எப்படியும் நம்ம ஒத்தருக்கொத்தரு தெரிஞ்சவங்கதான். அதுலே சந்தேகமேயில்லே. ஒருசமயம் உனக்குப் புருசனாய் இருந்திருப்பேன். நீ எனக்குப் பெண்சாதியா—”

“ஐயா—இந்தப் பேச்ச என் புருசன் காதுலே விழுந்தா உன் எலும்பைப் பொறுக்கிடுவான். அவன் பூன்னு ஊதினா நீ நிக்கமாட்டே—”

“அவன் மொவத்துலே பயம் தெரியல்லே.”

“பூரணி நீ இந்த ஜன்மத்தை மாத்திரம் நினைக்கிறே. இந்த ஜென்மத்துல உனக்குப் புருசன் போன ஜென்மத்துலே என்னவோ அப்படித்தான் அவன். என் எலும்பைப் பொறுக்கட்டுமே. முழுவிப்போயிடுமா? அதனாலே இந்த மூவாயிரம் வருசத்தையும் இனிமே வரப்போற ஆறாயிரம் வருசத்தையும் அவனோ, நானோ, நீயோ, யாரோ அழிச்சு எழுத முடியுமா?”

“ஐயா ஒரு சமயம் நீ பேசறத்தைக் கேட்டா எனக்குச் சிரிப்புக்கூட வருது. நான் மூணு நாலு பெத்தாச்சு, இப்பவே நான் உனக்கு மூத்தவ. நான் கழவி, பழகிப் போனவ, பழசாப் போனவ. காலையிலே பூத்து மாலையிலே கட்டி, மாலைவரைக்கும் கொண்டையிலே வெச்சு, ஒவ்வொரு இதழா நாரிலேருந்து உதிந்து பாேறவ. இப்பொத்தான் கிள்ளின பூவாட்டம் நான் இன்னும் வாசனையடிக்க முடியுமா?”

“அவன் கண்ணுலே தண்ணி மாலை மாலையா ஒழுவுது பேச்சுத் தொண்டையை அடைக்குது. என்னை அணைக்கிறமாதிரி ரெண்டு கையை நீட்டிக்கிட்டு அந்தண்டைக் கரையிலே நிக்கறான்.

“பூரணி! உன் மணம் உனக்குத் தெரியல்லே. மூவாயிரம் வருசந் தாண்டி இப்பவும் என்னைத் தொடுதே. தெருவுலே போற மத்தவங்களைப் பாத்து இந்த எண்ணம் எனக்கு ஏற்படறதுதானே? இல்லியே! எல்லாருக்கும் இந்த விசேஷம் இருக்காது. சில பேர்தான்... அவங்க மொத மொதல் பொறந்த காரணத்தின் அடையாளத்தைக் கூடவே தாங்கிட்டு வராங்க. பூவும் அவங்கதான். நாறும் அவங்கதான். இரண்டுலேயும் வீசற வாசனையும் அவங்களே. பூவுலே பிறந்த வாசனையாயிருந்து அப்புறம் வாசனையிலே பூத்த பூவாயிடறாங்க. அம்மாதிரியிலே நீ ஒருத்தி. பூரணி! பூரணி, என்னை விட்டுடாதே! நீயில்லாமே நான் இருக்க முடியாது... கரை தாண்டி இந்தப் பக்கம் வந்தூடேன்... வந்தூடூ— உன்னை நான் ஒண்ணுஞ் செய்யல்லே. ஒண்ணுங் கேக்கல்லே. உன் மடிலே தலைவெச்சு ஒரு தடவை படுக்கணும். அவ்வளவதான், பூரணி பூரணி!;...”

“நான் காதைப் பொத்திட்டு ஓடினேன். அவன் தொண்டையைக் கிளிச்சுட்டு கத்தினது என் மாரைக் கிழிக்குது.”

“பூரணி! பூரணி!!...”

“நான் முழிச்சிட்டேன். என் எசமானர் என்னண்டை நின்னுகிட்டு என்னையே பாத்துட்டிருந்தார். எனக்கு வேர்வையாக் கொட்டிப்போச்சு. நான் அவர் காலைக் கட்டிட்டு அழுதேன். அவர் ஏன்னு கேக்கல்லே. அந்த மனுசன்கிட்ட அதான் தொந்தரவு. எதுக்குமே ஏன்னு கேக்கமாட்டான். எல்லாந் தெரிஞ்சவன் மாதிரி!

“நானும் சொல்லிக்கல்லே. என்னாத்தை என்னான்னு சோல்றது?”

“மறுநாள் காலையிலே குளிக்கப்போன இடத்துலே அந்த ஆள் மறுபடியும் பின்னாலே கையைக் கட்டிக்கிட்டு, பூமியின் துயரம் அத்தனையும் மொவத்துலே தூக்கிக்கிட்டு நிக்கறான். எனக்குப் பயமாப் போச்சு. இதென்ன வழக்கமாப் போச்சு. வாயைத் திறவாமலே, கையைப் பிடிக்காமலே மொவத்துலே விஜனத்தைக் காட்டியே அவன் என்னைத் தன் பக்கம் இழுக்கறப்போ எனக்குப் பயம் பொறந்து வெடவெடன்னு முட்டிக் கால் உதறிச்சு. நான் தடால்னு குப்புற விழுந்து பூமியைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன்.

“நீ போ... நீ போ... மரியாதையா போயிடு. இங்கே நிக்காதே... ஓடியே பூடு...”

“அவன் என்னைப் பார்த்தபடியே மெதுவாகத் திரும்பினான். மெதுவாக நடந்து அப்புறம் விர்ர்ருனு வேகமா நடந்து போயே போயிட்டான். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டு, விழுந்த இடத்துலேருந்து மெதுவா எழுந்தேன்.

அன்னி சாயந்திரம் தெருவுலே ஒரு சமாசாரம் பொறி கிளம்பி சீறிக்கிட்டு ஊரெல்லாம் பத்திக்கிச்சு.

காவா மேட்டு மரத்துலே ஒரு பிணம் தொங்குது. ஊரு பிரண்டுது; பார்த்தது தேரு திருவிழாவாட்டம். ஆனால் நான் போவல்லே.

“அந்த ஆள் எனக்காகத்தான் உயிர் விட்டான்னு நெனக்கிறப்போ என்னுள்ளே என்னவோ ஒண்ணு புண்டு விழுந்தது. நின்ன இடத்துலே நின்னுட்டு சோறு கொதி தெரியாமே மூணு நாளைக்கு யோசனை பண்ணிட்டிருந்தேன். புரியாத துக்கம் அடைச்சு அடைச்சுத் தொண்டை வெடிக்குது. அவன் யாரு, நான் யாரு? இது மாதிரிகூட உண்டா? இப்படி என்னாத்துக்கு நடக்கணும்? அவன் கனவிலே வந்தது மெய்தானா? அவன் சொன்னதெல்லாம் மெய்தானா? அதுவே கனவுதானா? இந்தக் கேள்விக்கெல்லாம் யாரைப் போய்ப் பதில் கேக்கறது? பதிலே உண்டா? இந்தக் கேள்விங்களை எனக்கு வெச்சுட்டு இவன் ஏன் பாேய்டான்?

“ஒத்தருக்காக ஒத்தரு செத்துப் போறதுன்னு இருந்தா, செத்தவன் பாடு சொகம், யாருக்குச் செத்தானோ, அவங்க தலையிலே அவன் சுமை. அப்புறம் அப்படி மிஞ்சிப் போனவங்க பாடுதான் கொடுமை.

“ரொம்ப நாளைக்கு நான் கஷ்டப்பட்டேன். ஒரு மாதம் நோவாக்கூடப் படுத்துட்டேன். காவா மேட்டுக் கரையிலே போய் புரியாமே நின்னுட்டு நின்னுட்டு திரும்புவேன். மாரியம்மன் கோயிலுக்குப் போய் வணங்கறப்போ அவனுக்கும் சேர்த்து வணங்குவேன்.

“ஆத்தா அவன் எனக்காகக் கொடுஞ்சாவு செத்துட்டான். அப்படிச் செத்தவங்கல்லாம் இங்கேயே நிம்மதியில்லாமே சுத்துவாங்களாமே. அவனுக்கு நிம்மதியைக் கொடு...”

கிணத்தடிக்குப் போனா, ஜகடையிலே தோண்டியைப் போட்டுட்டு இழுக்க மறந்துட்டு அப்படியே நிப்பேன். இதென்ன நானும் பால் மறந்த கொழந்தை ஆயிட்டேனா? எனக்கு எந்தப் பால் மறந்துபோச்சு? இல்லாட்டி நெனைப்பு வந்திருச்சி?

“பூரணிக்கு என்னமோ புடிச்சுடுத்து”ன்னு ஊரெல்லாம் பேச்சாப் போச்சு, மந்திரக்காரனைக்கூட வரவழைச்சாங்க. அவன் ஏதாவது மந்திரத்துலே மனசைக் கண்டுட்டா என்ன செய்யறதுன்னு திகிலாப் போச்சு. ஆனா, அவன் ஒண்ணும் காணாமலே வேப்பெலையடிச்சுட்டுப் போயிட்டான். இதுக்குன்னு அவருதான் எத்தையும் கண்டுக்கல்லே. என் புருசன், இரும்புத் தலையன், வான்னு சொல்லமாட்டான். போன்னு சொல்லமாட்டான், ஏன்னு கேக்கமாட்டான்.

“ஆனா, நாளாவாவ, எதுதான் நிக்குது? நல்லவேளை அதுதான் இந்தப் பூமியிலே தெம்பு. எப்பவும் வேலை. மீளாத வேலை. கொழந்தையும் குட்டியும் சம்சாரமும் பெருத்துட்டா, எப்போப் படுக்கறோம். எப்போ நிக்கறோம், என்ன செய்யறோம், அது, இது, எது எல்லாமே கொழம்பி ஒரே சுத்துத்தான் பம்பரமாட்டம்.

ஆனால் சில சமயம் நினைப்பேன்: அன்னிக்கு நான் கீழே நாலு கால் உயிராட்டம் விழுந்து கையையும் காலையும் மண்ணுலே புதைச்சுட்டு, பூமியைக் கெட்டியா கவ்வாமே இருந்தா என்பாடு என்னவாயிருக்கும்? இப்பொத்தான் தெரியுது, இந்த மண்ணும் நம்மை உயிரோடுதான் தாங்குது. குளிருக்குக் கொழந்தையை அணைக்கறாப்பிலே, சமயத்துலே கெட்டியாப் புடிச்சுக்குது.

அன்னிக்கு ஒருநாள் வாளி நிறையா தண்ணி யேந்தி வரப்போ கல்லு தடுக்கிக் கால்லே போட்டுக்கிட்டேன். கட்டை விரல்லேருந்து இரத்தம் பீச்சியடிக்குது. அதைத் தரை மண்னு ஜிவ்வுன்னு உறிஞ்சிக் குடிக்குது. அதைப் பார்த்துட்டு என் வலிசகூட மறத்து நின்னேன். ஆமா, இதுக்குக் கண்டிப்பாய் உயிரிருக்குது. என் ரத்தம் உயிர்தானே! அதை எப்படி இது குடிக்குது பாரு இப்படித் தான் அதுக்கு உயிர் இருக்குது...

“ஆனா இந்த யோசனையெல்லாம் எனக்கென்னாத்துக்கு......”

பூரணி விழித்துக்கொண்டாள். ஜன்னலுக்கு வெளியே இருள் கவிந்துகொண்டிருந்நது.

“ஏன், ஒத்தரும் ஞானமணி சாமி கோவிலுக்குப் போய் விளக்கு வெக்கல்லே...?”

பழக்கங் காரணமாகவே அக்கேள்வி அவளிடமிருந்து வெளிப்பட்டது.

“வேலையைக் கவனிங்க! துரை நீ பாே...”

ஞானமணி சாமியார் இந்தக் குகும்பத்துலே மொளைச்சது இன்னிக்கும் இப்பவாட்டம் இருக்குது.

மளுங்க மொட்டையடிச்சு, நெட்டியாட்டம், நெட்டையா. தலைகாணி யுரையாட்டம் காஸாயத் துணி போர்த்து மனுசன் ராசநடை போட்டு அன்னி ராவுலே தெருவழியா வரவனை வாசக் கொறட்டிலிருந்தே பார்த்து, இவரு மேல்துண்டை எடுத்து இடுப்புலெ வரிஞ்சு கட்டி, எதிர்போய் அளைச்சு வந்து, நாங்க ரெண்டுபேரும் அவர் காலிலே விழுந்து சேவிச்சது மறந்து போவுமா?

இதருக்கே சாமியார், சாஸ்திரம் படிச்சவங்க பிரசங்கம் பண்றவங்க இலங்களைக் கண்டா தனியா விசை முடுக்கிக்கும், அவங்க வாயிலேருந்து எந்த முத்து விழுதுன்னு வாயைப் பிளந்துட்டு கைகட்டி கேட்டுட்டே இருப்பாரு, வந்தா, வந்தவங்க தானாவோ, நான் விரட்டியடிச்சோ கிளம்பினாத்தான் உண்டு. மாதக் கணக்கிலே குந்தியிருந்தாலும் மனுசனுக்குத் தெரியாது.

“ஆனா, இந்தச் சாமியார், சோத்துச் சாமியாரில்லே. வந்து மூணு நாள்தான் நம்ம வீட்டுலேயே தங்கி இருந்தது. பேச்சுக்கூட ரொம்ப இல்லே. பேசறது ஒண்ணு ரெண்டு ஆனாலும் எல்லாம் தூக்கிவாரிப் போடற பேச்சுத்தான். கங்காளம் தயிரையும் கடைஞ்சு உள்ளங்கையிலேயே உண்டையா வெண்ணெயை ஏந்திட்டாப் போலே, இந்த உலகமே தனக்குச் சொந்த மாக்கிட்ட தனி யானை நடை; கழுத்தை வெட்டி வெட்டி மொறைப்பா பார்வை. அப்பா! ஆம்பளைகூடத் தைரியமா தலைநிமிந்து பாக்கமாட்டான். முவத்துல அப்படி ஒரு தகதகப்பு. நடுக்காட்டுலே, நடு இடத்திலே தீவட்டி ரெண்டு சொருவி வெச்சாப்போலே நமக்கே இல்லாமே தனக்கு மாத்திரம் தனியா பத்திட்டு எரியும் கண் எதிரே வந்தவங்க நெஞ்சு மாம்பழத்தெப் பிழிஞ்சாப் போலே சக்கையும் சாறுமா ஆயிடும்.

“மொத நாளுலேயே மனுசனை கண்டுகிட்டேன். இது மத்தப் பண்டாரங்க மாதிரியில்லேன்னு இவரும் அவரும் சேர்ந்து குந்திட்டு சாப்பிடறாங்க. வீட்டுலே விருந்தாளின்னு கூட நாலு பதார்த்தம் ஆக்கியிருந்தேன். உருளைக்கிழங்கு புட்டு செய்து, கீரையைக் கடைஞ்சு, பூசனிக்காயும் காராமணியும் கூட்டிக் காச்சியிருந்தேன், கத்தரிக்காசாம்பாரு, ரசம், மோருகூட.

இலையிலே பதார்த்தத்தை ரெண்டுதரம் வெச்சிட்டு மறுபடியும் விருந்தாளி வெக்கத்துலே தன் லவுத்துக்கு வஞ்சகம் செய்யக்கூடாதுன்னு ‘இன்னும் என்னா வேணும்’னு கேட்டேன்.

அதுக்கு என்னை நெருப்பாட்டம் முளிச்சுப் பாத்து, “என்ன வேணும்னு கேக்கறயே அம்மா! நான் கேக்கறதை யெல்லாம் நீ கொடுத்துட முடியுமா? நீ கொடுக்கறதெல்லாம் நான் கேக்க முடியுமா?” என்று கேட்டாரு. எனக்கு என்னவோ மூஞ்சிலே அடிச்சாப் போலே ஆயிடுச்சு, பயமாப்போச்சு. அப்புறம் சாப்பாட்டு வேளைவிட்டு மத்த வேளை அவர் எதிரேகூட வரதில்லை.

நடைத் திண்ணைலே, காலை முறுக்கி சப்பளங் கொட்டி மணிக்கணக்குலே நெட்டா இமைகொட்டாமே குந்தியிருப்பார். இவரு அவருக்குக் காவலா மாரிலே கை கட்டி வாசல்லே நின்னுட்டு இருப்பாரு, இவங்க ரெண்டு பேரும் இப்படி யிருக்கறத்தைப் பார்த்து என்னவோ பயமெடுத்துப் போச்சு.

இதே மாதிரி ரெண்டு நாளாச்சு. மூணாம் நாள் வந்தது. இன்னிக்கு நான் பட்டினத்தாள் போனவழி தான் பாேவபோறேன். ஆனா, போன இடத்திலும் அன்னிக்கு நான் மறக்கமாட்டேன்.

அன்னிக்கு வெள்ளிக்கிழமை காலையிலே பத்து வீடு தாண்டி பட்டணத்தாள் இறந்துட்டா. அவ புருசன் மூணு நாளைக்கு முன்னாலேயே, தேங்காய் ஒடைச்சு கற்பூரத்தைக் கொளுத்திட்டான். ஆனால், நெஞ்சுலே உசிரைப் புடிச்சுகிட்டு, நல்ல நாளைக்கு நல்ல வேளைக்குக் காத்திட்டு இருந்தா.

காலையிலிருந்தே பல்லக்கு ஜோடனை ஆவுது. எல்லாரும் அவங்க வீட்டுலே பூந்து பூந்து புறப்படறாங்க. பட்டினத்தாள் பச்சைப் பொண்ணு; எப்பவும் சிரிச்ச மொவம். கஷ்டமே கண்டுக்க மாட்டா. கொடுத்துவெச்ச மனுசி, குளிகுளிச்சு, சுல்லாட்டம் புள்ளையெ பெத்து புருசன் கையிலே கொடுத்துட்டு தான் வந்த வழிக்குப் போறா.

சாயங்காலம் ஆய்ப்போச்சு. பல்லாக்கு சாமியாட்டம் புறப்படுது, பாண்டும் தாரையும் தப்பட்டை விளக்குமா.

பட்டினத்தாள் புதுசு உடுத்தி பூமெத்தை மேலே சிரிச்ச மொவத்திலே பத்தின மஞ்சளோடே வாயிலே அடைச்ச வெத்தலை உதட்டுலே ஒழுவ, தூக்கிவரா. முன்னாலே அவ புருசன் துட்டை வாரியிறைச்சுட்டே போறான். பின்னாலே அவள் அம்மா கதறிக்கிட்டே பசு வாட்டம் துரத்திக்கிட்டே வரா. அவளை நாலு ஆம்புள்ளே கட்டிப்பிடிச்சும் மாளல்லே. பெத்த வயிறு இல்லியா? அந்தந்த வீட்டுத் திண்ணைலே பேச்சுப் பராக்கிலே குந்தியிருந்தவங்க எல்லாம் அவசர அவசரமா எழுந்து நிக்கிறாங்க.

ஆனா இந்தச் சாமியார் நம் வீட்டுத் திண்ணையிலே கால்மேலே காலைப் போட்டு ஒக்காந்திருக்கிற அதிகாரத்துலே கடுவுகூட கலையல்லே.

“ஐயோ என் கப்பல் கவுந்துபோச்சே! ஐயோ என் கப்பல் கவுந்துபோச்சே”ன்னு பெத்தவ கத்தீட்டே வரா.

அப்போ திடீர்னு சாமியாரு வெடிப்பா ஒரு சிரிப்பு சிரிச்சாரு பாரு! நான் என்னாத்தைச் சொல்ல? தெரு முளுக்க அது கேட்டுது. என்னவோ தெருக் கூத்திலே ‘டார்ரா’ திரையைக் கிளிச்ச மாதிரி, அந்தச் சத்தம். கொழந்தையை அமுக்கினமாதிரி செத்தவ ஆத்தாளுக்கு அழுகை அடங்கிப்போச்சு. எல்லாருக்குமே என்னவோ ஒரு மாதிரி கிலி, சாமியார் எழுந்து உள்ளே போயிட்டிாரு.

மறுநாள் சாணி தெளிக்கற வேளைக்கு ஆளைக் காணோம். ஆனா அவர் போனால் எனக்கென்ன? போன வரைக்கும் சேமந்தானே? ஆனா, கூடவே என் புருசனையும் கானோம்.

திடீரென பூரணிமேல், இருள்கள் இழைந்து குழைந்து திரிந்து செறிந்து சரிந்து படர்ந்து நிறைந்து கவிந்தன.

இருளோன்னு இருளு! கொஞ்சங் கொஞ்சமா கலக்கம் தெளியுது. அது மத்தியிலே அவலச்சணமா, மொத்தையா ஒரு உருவம் எழும்புது, அட, இது என்ன. நம்ப நடு வீட்டுக்கு குதிருன்னா?

“என்ன பூரணி உனக்கு விந்தையாயிருக்குதா? வேடிக்கையாயிருக்குதா? பயமாயிருக்குதா? நான்கூட உன்னோட பேச வந்தூட்டேன்னு? ஏன், நான் வரக் கூடாதா? என்னைப் பார்த்தா உனக்கு ஆளா, கணக்காயில்லியா? பூரணி, ஒன்னுவெச்சுக்க. இந்த உலகத்துலே உயிரில்லாததேயில்லே. எப்பவுமே என்னினைப்பு உனக்கு இல்லாட்டியும் உன் நெனைப்பு எனக்கு உண்டு. ஏன் என்னிடத்திலே நீ கொட்டிவெச்ச பச்சை நெல்லை நான் பழய நெல்லா ஆக்கித்தரல்லியா? நாளு கிழமை சின்னப் பொங்கல் பெரிய பொங்கலுக்கு எனக்கு நீ மஞ்சா பூசி சிவப்பு இட்டுக் கொண்டாடல்லியா? ஊம்... ஊம். அப்புறம்...அப்புறம்...?"

“அப்புறம் என்ன? ஏது அப்படி மூச்சு வாங்குது உனக்கு?”

“உடம்பு பெரிசு பாரு, என்ன சொல்ல வந்தேன்னா என்னை நம்பி உன் கஷ்டத்தைக்கூட என்னண்டை நீ சொல்லிக்கல்லியா?”

“உன்கிட்டே என்னாத்தை நான் சொல்லிக்கிட்டேன்?”

“இதென்ன, போசினாத்தான் நீ சொன்னாப் போலேயா? நீ சொன்னதைக் கேட்டுக்கிட்டிருந்தால் நீ சொன்னாப்போல இல்லியா? முதுவைத் திருப்பி உனக்குக் காட்டறேன்னு கோவம் பண்ணாதே, ‘தோ பார், பாத்தியா?”

பூரணி பார்த்தாள். கைக்கெட்டிய வரை அடுக்கடுக்காய் அதன்மேல் அடிவரை, சாணிப் பொட்டுக்கள் நின்று கொண்டிருந்தன.

ஞாபகம் வந்துவிட்டது. அவளுக்குக் கண்களில் ஜலம் துளும்பியது. அவள் கணவன் வீட்டை விட்டு ஞானமணி சாமியாரைத் தொடர்ந்து போன நாட்களை, அவள் அப்படித்தான் நாளுக்கு நாள் எண்ணியிருந்தாள்.

இத்தனை நாளுலே எப்பவுமே என் வீட்டுக்காரை ஒரே மாதிரி எண்ணியிருப்பேனோ? எப்படி சொல்றது? மஞ்சாவும் குங்குமமுமிட்டு இன்னும் வவுத்திலே அரிசியை வெச்சிருக்கும் நடுவூட்டுக் குதிரை எதிரே வெச்சுக்கிட்டு...

ஒரு ஒரு நாளைக்கு ஒரு ஒரு நினைப்பு. இல்லாட்டி ஒரெ நினைப்பு. ஆனா ஒவ்வொரு நாளுக்கும் மறவாமே ஒரு பொட்டு.

என்னிக்கு வருவாரு? என்னிக்கு வருவாருன்னு பொட்டு, பொட்டு, பொட்டு...

எப்போ நீ வருவே? எப்போ நீ வருவே? பொட்டு பொட்டு பொட்டு.

மாரியாத்தா! எப்படியானும் அவரைக் கொண்டு வந்து வீட்டோடு சேத்தூடு!

வீட்டுக்கு வீட்டுக்குப் படியேறி மடிலே பிச்சை வாங்கி, அந்தப் பிச்சரிசியைக் கஞ்சி காச்சி ஆயிரம் பேருக்குக் கரைச்சு ஊத்தறேன். ஆனா நீ மாத்திரம் என்னாண்டை அவரைக் கொணாந்து சேர்த்தூடு.

வீட்டை விட்டுப் போயிட்டியே. நான் என்னாத்தை உனக்கு அப்படி மனம் வெறுக்கும்படி சேஞ்சுட்டேன்? உன் சாப்பாட்டை ஒரு கொட்டைப்புளி தூக்கலா ஒரு உப்புக்கல் கொறைவா, ஒரு மணியரிசி வேவாமே ஆக்கிப் போட்டேனா? உனக்கில்லாமே எனக்கு ஏதாச்சும் மறைச்சு வெச்சுக்கிட்டேனா? என்னா துரோகத்தை என்னிடத்துலே கண்டுட்டு நீ ஓடிப்போயிட்டே? என் கனவுலயாவது வந்து சொல்லு. ஆமா, நமக்குப் பொறந்த மக்கள் தலைமேலே கையை வெச்ச ஆணையா நீ கணவுலியாவது வந்து சொல்லித்தான் ஆவணும்.

அந்த மொட்டைப் பண்டாரம் வந்தான், கண்ணை உருட்டிக்கிட்டு. மெறிகட்டையை என்னிக்கு என் வாசல்லே மெறிச்சானோ அன்னிக்கே என் குடும்பத்தையும் மெறிச்சூட்டான்.

பாவி! நஞ்சானுங் குஞ்சானுமா நடுவூட்டுலே விட்டுட்டுப் போயிட்டியே, எப்படி உனக்கு மனசு துணிஞ்சுது? சாமியைத் தேடிக்கிட்டு, சாமியார் பின்னாலே பூட்டான். நீ வாழ்வியாடா நீ? மனுசனா நீ?

இனிமே உன்னைப்பத்தி நான் நெனைக்கப் போறதில்லே. நீ வரவே தேவையில்லே...என் பாவத்தைக் கட்டிக்கிட்டு போ, போ, போ...!

அம்மாடி தாங்க முடியல்லியே!

நடுவூட்டுத் தெய்வங்களா, பூவாடைத் தெய்வங்களா , எங்கே போயிட்டீங்க நீங்க...? அத்தை! நீ என்னைக் கோவம் பண்ணாதே. இனி எனக்குத் தாங்கல்லே. இந்த ஒண்ணரை வருசம் பொறுத்தது போதும். ஊரெல்லாம் கேக்குது. பத்தாமே என் கொழந்தைங்க கேக்க ஆரம்பிச்சுட்டுது. என் வூட்டுக்குப் படியேறி வந்து நீ பொண்ணு கேட்டு என்னைக் கூட்டி வந்தே. நீ செத்துாட்டா அத்தோடே உன் பொறுப்பு போச்சுன்னு எண்ணாதே. இந்தக் குடும்பத்துக்கு என்ன வந்தாலும் அது உன் வினைதான். அதனாலே உன்கிட்டே சொல்லறேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கொழந்தைங்க தூங்குறாங்க நடுராவுலே எழுந்திருச்சு சுரைக் குடுக்கைலிருந்து திருநீறைத் தரிச்சுக்கிட்டு, நடுவூட்டுலே கல்பூரத்தை ஏத்திவைச்சி வெறும் வவுத்தோடு தலைப்பை இடுப்புலே சொருவிகிட்டு இந்த வார்த்தையைச் சொல்லுறேன். இன்னி எட்டா நாளைக்குள்ளே எனக்கு ஏதாச்சும் விடியாட்டி—சரி, அப்பறம் அவ்வளவுதான். என்னை ஒண்னும் குத்தம் சொல்லாதே, வீட்டுக்குக் கெட்டபேரை வெச்சுட்டுப் பூட்டான்னு. ஆமா சொல்லிட்டேன். இன்னிக்கு குறியைக் குங்குமத்துலே வெக்கறேன், ஆமா.

எட்டா நாள் வெள்ளிக்கிளமை விடிஞ்சத்தை இப்போ நெனச்சா—மனசு என்னவோ தோச்சு உலர்த்தி அழுக்கு விட்டு துல்லியமா காத்துலே ஆடி அசையற சல்லாத் துணியாட்டமா—அவ்வளவு லேசா, நினைப்புலகஷ்டம் இஸ்டம் ரெண்டும் இல்லாமே எனக்குச் சொல்லத் தெரியல்லே. மனசுக்குத்தான் அந்த நிலவரம் தெரியுது. நேரம் ஆவ ஆவ அன்னிக் காரியம் எல்லாமே எனக்கு அப்படித்தான் இருந்திச்சு. நான் ஒண்ணுமே நடத்தல்லே தானே எல்லாம் நடந்துட்டுப் போவுது. ஒரு சாமான் வீட்டிலே குறைவில்லே. அதெப்படித்தான் அப்படியோ? அரிசி பானை நிறைய நிக்குது. கிள்ளிப்போடற கொத்தமல்லிக்குகூட கூடைக்காரியைக் கூப்பிடத் தேவையில்லே. கறிகாய்த்தட்டு பொங்கிவழியுது.

எல்லாச் சாமானும் நல்லா அமுக்கி மூடி வெச்சாச்சு. சோத்துப் பானையிலே தண்ணி ஊத்தியாச்சு. மத்தியானமே, பெட்டியிலே புடவைத் துணியெல்லாம் ஒழுங்கா அடுக்கிட்டேன். கொடியிலே ஈரத்தைச் சுருக்கம் இல்லாம தட்டி உலத்திட்டேன். நாளைக்கு என்னை ஒத்தரு ஒரு குத்தம் சொல்லக்கூடாது. கண்ட சாமானைக் கண்ட இடத்துலே போட்டுட்டு பூட்டான்னு. என் கொழந்தைங்க பாயிலே உறங்குதுங்க. அதுங்களை முத்தமிட்டு மேலே போர்த்திட்டேன். பாசம் புடிச்சு இளுக்கும் என்கறாங்களே, ஆனா துணிஞ்ச கட்டைக்குத் துக்கமேதுன்னு என் விசயத்துலே எவ்வளவு மெய்யாப் போச்சுன்னு நெனைச்சா என் தொண்டைக்குள்ளே கள்ளச்சிரிப்பு எனக்கு காது கேக்குது! எல்லாத்துக் கிட்டேயும் என் மனசிலே செலவு பெத்தாச்சு. ஆமா நீ சொல்றது வாஸ்த்தவமாத்தான் போச்சு. எல்லாத்துக்குந்தான் உசிரிருக்குது. பாலைப் பிறை குத்திப் பானையை வெச்சேனே, அந்த உறிகூட இப்போ தனி உசிரோடுதான் ஆடுது. அடுப்பு, குத்து விளக்கு, விளக்குமாறு, உரல் உலக்கை, நான் இன்னி வரைக்கும் எடுத்து ஆண்ட சட்டிப்பானை மொதக்கொண்டு எல்லாத்துக்கும் போயிட்டு வாரேன். இந்த வீட்டை இனி நீங்கதான் பாத்துக்கணும். இனிமே கொல்லைப்புறம் போய் மாட்டுக் கொட்டாயிலே மாட்டின் பின்புறத்தைத் தொட்டுக் கண்ணுலே ஒத்திக்கிட்டு அப்புறம்,

“சி வோ ஹம்!—”

வாசல்லே சத்தம், ராப்பிச்சை இல்லேன்னு சொல்லுவானே! போறது போறேன் போட்டுட்டுதான் போறேனே!

சோத்தைப் பிழிஞ்சு ரெண்டு கையிலும் ஏந்தி கிட்டு வாசலுக்கு வந்தேன். தாடியும் மீசையும் கந்தலும் அளுக்குமா ஆளு நிக்குது, வவுறு முதுவுலே குழிஞ்சு. என்னைக் கண்டதுதான், என்னாத்தையோ சொல்ல உதடு துடிக்குது. ஆனா பேச்சு பிரளல்லே. தொண்டையிலே கை போய் போய் தவிக்குது. நான் குனிஞ்சு முவத்தைக் கவனிச்சேன். கைசோறு கீழே சிதறிப்போச்சு. தோச்சு உலத்தினாப்போலே லேசாயிருந்த மனசு ஒரேயடியா ஒரே வெள்ளத்துலே அடிச்சூட்டு போயே பூட்டுது. அதுக்குள்ளேயும் அதுக்குத் தலையாடிப் போச்சு. நான் என் கொழந்தையை அப்படியே வாரியணைச்சு தூக்கினாப்போலே உள்ளே கொண்டு போயிட்டேன்.

இப்பவுந்தான் எண்ணுறேன். தாம் எந்தக் கோவிலுக்குத் தனியாப் போவனும்? எந்தக் கடவுளைத் தனியாத் தேடணும்? எந்தப் பூசையைத் தனியா செய்யணும்? ரோசனை பண்ணு. நான் இத்தனை நாளா இட்ட பொட்டெல்லாம் புஷ்பமில்லியா? திட்டின திட்டும் வேண்டி வேண்டி உருகினதெல்லாம் தோத்திரமில்லியா? தெய்வமா பெரிசு? தேடறதுதானே முக்கியம்? எனக்கு ஏன் இப்படித் தோணுதோ தெரியல்லே. இப்படி ஆனா இதை நெனைக்கற கர்வம் எனக்கு இருந்தால், இருந்துட்டுப் போவட்டும். அது இந்தப்பூமிலே பொறப்பாப் பொறந்த கர்வம்தான். மத்தபடி கெட்டது ஒண்னுமில்லே, அதுவும் தேரியுது.

இதோ பெரிய அடுப்புலே சுடுதண்ணி வெக்கறேன். வெச்சு என் புருசனுக்கு என் கையாலேயே தலைக்கு விட்டு முதுவை சுரண்டித் தேச்சுக் குளிப்பாட்டறேன், கோவில்லே சாமிக்கு அபிசேகம் செய்யறத்துக்குக் குறைஞ்சுபோச்சா? மண்டையிலே ஈரம் உராயாமே, அவசரமா நெருப்புலே சாம்பிராணியைக் கொட்டி அது மேலே கூடையைக் கவுத்து மூடி அதுமேலே என் புருசன் தலையைப் பிடிக்கறேன். புகை சமாளிச்சுக்கிட்டு என் மனசு வரைக்கும் புகுந்து மணக்குது. இது கோவில்லே தூபம் காட்டற மாரிதியில்லியா? கேக்கறேன். இதோ சமயலுக்கு அடுப்பு பத்தவெக்கறேன். இது ஓமம் வளத்து மாதியில்லே? சுருக்கா சோறு கொதிக்குது கொடியிலே, ரஜம் காயுது. இது நிவேதனம் இல்லியா தெய்வத்துக்கும் படைச்சாத்தான் படைப்பா? பிசைஞ்சு இவர் கையிலே உண்டை உண்டையா கொடுத்து உள்ளே செலுத்துறேனே இது நிவேதனம் இல்லியா? கோவில்லேயிருக்கற சாமியுந்தான் பேசல்லே! இவரும்தான் பேசல்லே. இவருக்குக் கை களுவ சொம்புலே தண்ணி கொடுத்திட்டு கொல்லைப்புறம் கிணத்தைச் சுத்திவந்து விழுந்து கும்பிட்டேன். இதுவுந்தான் என்னைக் காப்பாத்திச்சு. இது என்ன தோண்டின பூமிதானே? இந்த நிமிசம் எனக்கு யாருமேலேயும் கோவமில்லே. எனக்கு எல்லாரும் நல்லவங்கதான்.

அதுக்கப்புறம் நல்லது பொல்லாது எல்லாம் ஆயிரம் நடந்தது. எத்தனையோ வருசமாச்சு, நாங்க ரெண்டு பேருமே உருவே மாறிட்டோம். பசங்க பெரிசாப் போயி பொண்ணு கட்டி என் குழந்தைகளுக்கு குழந்தைங்க பெருகுது. ஒண்ணொண்னு ஒரு ஒரு மாதிரியா தலை பெருக்குது. ஒரு பையன் குளிக்கப்போன இடத்தில் தண்ணியோடேயே பூட்டான். அடையாளத்துக்கு உடல் கூட கிடைக்கல்லே. அது சாக்கா நான் சீக்காவும் படுத்தாச்சி. அதெல்லாம் விவரமா நினைக்க இப்போ நேரமுமில்லே. நெனக்கறத்துக்கு ஒண்னுமில்லேன்னும் வெச்சுக்கோ. ஆனா இந்த நிமிசத்தை நினை! அன்னிக்கு என் புருசன் அசந்து படுத்து வாயை லேசாத் திறந்துட்டு துரங்கறப்போ, அந்த முவத்தை நானா விளக்கைப் புடிச்சு பாக்கறப்போ, மனசு நிறைஞ்சு நிக்கி.

மெய்யா சொல்றேன். நீ நாளை காலைல எழுந்திருச்சா, நீ எங்கே போனே எங்கேயிருந்தே, என்ன பண்ணே ஒண்ணு கேக்கமாட்டேன். நீயும் நீயா சொல்லமாட்டே. எனக்குத் தெரியும், உன் நெஞ்சுக்கணம். ஆனால், நான் கேக்கமாட்டேன்; எனக்கு கேக்கத் தேவையில்லே. என் புருசன் எனக்குக் கொழந்தையானப்பறம் அவன் எங்கே போனான்னு எனக்கு கேட்டு அறியத் தேவையில்லே. எனக்குத் தெரிஞ்சு போச்சு, உனக்குத் தெரியாட்டியும் நீ, எங்கேயும் போவல்லேன்னு. உன் மாதிரி நான் அறியனும்னு ஆசைப்படல்லே. ஆனா எனக்குத் தெரிஞ்சது ஒனக்குத் தெரியாது. நீயும் எங்கேயும் போவல்லே. உன் குரு ஞானமணி சாமியும் எங்கேயும் போவல்லே. அதானோ என்னவோ அஞ்சு வருசம் களிச்சு அவரு இங்கேயே வந்து சமாதியானாரு. எனக்குத் தெரியும்னு அவருக்குத் தெரிஞ்சு போச்சோ என்னவோ? எது எப்படியிருந்தா என்ன? அந்ந நிமிசத்தைச் சொல்லு. தராசுகட்டி மனம் முள்ளு முனையிலே நின்னுபோச்சு, இப்போ எனக்கு ஒத்தருமே தேவையில்லே. என் புருசன் கூடத் தேவையில்ல. நானே எனக்குத் தேவையில்லே. இது ஒரு ஆச்சரியமாத்தான் இருக்குது. எல்லாமே நிறைஞ்சு எனக்கு ஒண்னுந் தேவையில்லாமே...”

அவள் கை மெதுவாய் அவள் புருஷனைத் தேடி நகர்ந்து விழுந்தது. முதலியார் எழுந்து அவள் மார்மேல் மற்றக் கையுடன் சேர்த்து வைத்தார். மாடியேறி அவசர அவசரமாய் யாரோ வந்தார்.

அப்பா அப்பா, பாஞ்சாலிக்கு இடுப்பு நோவு, நடு வீட்டிலே.”... வந்தவன் கட்டிலில் கிடந்த பூரணியைக் கண்டு, “அம்மா அம்மா, போயிட்டியா” என ஓலமிட ஆரம்பித்தான். முதலியார் அவன் அழுகையை அடக்கிக் கையமர்த்தினார்.

கீழிருந்து ‘வீல்’ என்று ஒரு புதுக் குரல் தொண்டையைக் கிழித்துக்கொண்டு எழும்பிற்று.

பேரப்பையன் குடுகுடுவென ஏறி உள்ளே ஓடி வந்தான். “ஆயா—ஆயா—” அவனுக்கு மூச்சு இறைத்தது. “எனக்குத் தங்கச்சி பொறந்திடுச்சி...”

முதலியார் முகத்தில் ரகசிய ஒளி வீசிற்று. அவர் மாடிச்சுவர்மேல் தாங்கியபடி சாவதானமாய், படிப்படியாய் கீழே இறங்கிச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அஞ்சலி/பூரணி&oldid=1026626" இலிருந்து மீள்விக்கப்பட்டது