அதிகமான் நெடுமான் அஞ்சி/போர் மூளுதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

14. போர் மூளுதல்


கடூர்க் கோட்டைக்குள்ளே இதுகாறும் இருந்த அமைதி இப்போது குலைந்தது.உண்மையான ஆபத்து இப்போதுதான் வந்து நிற்கிற தென்று அதிகமான் உணர்ந்தான். சுருங்கை வழியைப் பகைவர்கள் அடைத்தது தெரிந்து, அவர்களுக்கு அவ்வழிஎப்படித் தெரிந்தது என்று ஆய்ந்தான்.அதைப்பற்றிஇப்போது ஆராய்ந்து பயன் இல்லையென்று விட்டுவிட்டான். இனிமேல்தான் மெய்யான போருக்கு ஆயத்தம்செய்ய வேண்டும். இனியும் கோட்டைக்குள் நெடுநாள் தங்க முடியாது. பட்டினி கிடந்து வாடிக் கதவைத் திறப்பதற்கு முன்னாலே, உடம்பில் வலிமையும் போர்செய்யத் துடிக்கும் தோள்களும் உள்ளபோதே போரைத் தொடங்க வேண்டியதுதான். இந்தச் செய்தியை அதிகமான்படைத்தலைவர்களைக் கூட்டி அறிவித்தான். அவர்களின் வாயிலாகப் படை வீரர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சிதான். “நல்ல வேளை! இப்போதாவது நம் தினவு தீரும் சமயம் வந்ததே!” என்று பெருமிதம் கொண்டார்கள்.

இரண்டு நாட்களில் கோட்டைக் கதவைத்திறந்து கொண்டு அதிகமான் படை புறப்பட்டது. முரசுகள் முழங்கின. கொம்புகளை ஊதினார்கள். வீரர்கள் போர் முழக்கம்செய்தார்கள். பாலத்தின் வழியே வந்து சேரன் படையோடு கைகலக்கத் தொடங்கினார்கள். இதுவரையில் ஏதோ காவற்களம் போல இருந்த அந்த இடம் இப்போது முதல் தரமான போர்க்களமாகிவிட்டது. ஒரு பக்கம் பெரு வீரனாகிய அதிகமானுடைய படை; ஒரு பக்கத்தில் சேரமான் இரும்பொறையின் படை.

வீறுடன் போரைத் தொடங்கிவிட்டார்கள் இரு சாராரும். யானைகளும் யானைகளும் மோதின. குதிரைகளும் குதிரைகளும் முட்டின. தேர்ப் படையும் தேர்ப் படையும் பொருதன. வீரர்கள் வில்லும் வாளும் ஏந்திப் போர் செய்தனர். அதிகமானுடைய அணிவகுப்பும் சேரமானுடைய படை வகுப்பும் பார்வைக்கு ஒரே அளவை உடையனவாகவே தோன்றின. முழையிலிருந்து யானையின்மேல் தாவும் சிங்கத்தைப் போல அதிகமான் வீரர்கள் பாய்ந்தனர். அயல் நாட்டில் சென்று போர் செய்வதைக் காட்டிலும் தமக்குரிய இடத்திலிருந்து போர் புரிவது ஊக்கத்தை மிகுதியாக்கும்; எளிதாகவும் இருக்கும். அந்த நிலையில் இருந்தமையின் அதிகமான் படைக்குக் கிளர்ச்சி மிகுதியாக இருந்தது. இதுவரையிலும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களெல்லாம் விழித்தெழுந்து தோள்கொட்டி ஆர்த்தனர்.

மலைநாட்டுப் படையின் முன்னணியில் இருந்த பகுதிக்கு நெடுங்கேரளன் தலைமை தாங்கினான். அதிகமான் படையில் பெரும்பாக்கன் முன்படையை நடத்திப் பொருதான். பெரும்பாக்கன் பெரு வீரன்; அதிகமானால் சிறப்புப் பெற்றவன். அவனுக்குமுன் நிற்க நெடுங்கேரளனுக்குத் திறமை போதாது. முதல் நாள் போரில் யாரும் விழவில்லை. அடுத்த நாள் நெடுங்கேரளன் பெரும்பாக்கனுடைய அம்புக்கு இரையானான்.[1] முதல் வெற்றி அதிகமானுக்கே கிடைத்தது. அவன் கட்சியில் இருந்த படை வீரர்கள் பெரு முழக்கம் செய்து ஆரவாரித்தார்கள்.

சேரமான் இளமையையுடையஒருவீரத்தலைமகனை இழந்தது பற்றி மிகவும் வருந்தினான். “இனி நாம் சோர்வடையாமல் போரிட வேண்டும். இதுவரையில் போர் செய்ய வகையின்றிச் சும்மா கிடந்தோம். இப் போது அந்த வாய்ப்புக் கிட்டிவிட்டது. நம்முடைய விற்கொடியின் பெருமையையும் சேரர் மரபின் மானத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் படை வலிமையிற் பெரிது. நெடுங்கேரளனை நாம் களப்பலியாகக் கொடுத்துவிட்டோம். அதனால் இனி நம் பக்கந்தான் வெற்றி உண்டாகப் போகிறது” என்று அந்த வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் வீரர்களுக்கு ஊக்கம் மூட்டினான்.

போர் நடந்து கொண்டிருந்தது. அதிகமான் கை வலுத்திருந்தது. பிட்டங் கொற்றன் படைத் தலைமை பூண்டான். போரின் போக்கு மாறவே இல்லை. இரு மருங்கும்சோர்வின்றிப்பொருதனர்வீரர்கள். யானைகள் வீழ்ந்தன; குதிரைகள் குலைந்தன; வீரர் சிலர் வீழ்ந்தனர். மான உணர்ச்சியினால் உந்தப்பட்டு வீரர்கள் போரிட்டனர். இப்போது காரியே ஒரு பெரிய படைக்குத் தலைமை ஏற்றுப் புறப்பட்டு விட்டான். அப்போது சேரர் படையில் ஒரு புதிய மிடுக்கு உண்டாயிற்று. முன்பு தோற்று ஓடினவன்தானே என்று அதிகமான் படை காரியைக் கண்டு முதலில் இகழ்ந்தது. ஆனால் பிறகு அவனுடைய பேராற்றலைக் கண்டு அஞ்சியது. அதிகமான் படையில் இருந்த சில சிறிய படைத் தலைவர்கள் வீழ்ந்தனர்.

அப்போது துணைப் படை வந்தால் நலம் என்று தோன்றியது அதிகமானுக்கு. சோழனிடமும் பாண்டியனிடமும் ஆள் அனுப்பித் துணைப் படையுடன் வரவேண்டுமென்று ஓலை போக்கினான். அவர்கள் வந்தால் நிச்சயம் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அவன் நம்பினான்.

காரியின் வீரம் போர்க்களத்தில் மிகச் சிறப்பாக விளங்கியது. ‘நம்மால் விளைந்த போர் இது’ என்ற எண்ணம் அவன் உள்ளத்திலிருந்து அவனை உசுப்பிக் கொண்டே இருந்தது.அதனால் அவன்பெருவிறலுடன் தன் குதிரையாகிய காரியின்மீதுஏறிப் பம்பரம்போலச் சுழன்றனன். அதிகமானுடைய பட்டத்து யானையைத் தன்வேலைக்கொண்டுதாக்கி வீழ்த்தவேண்டும் என்பது அவன் ஆவல். அது உள்ள இடமறிந்து தாவினான்.

இது அதிகமான் படைத் தலைவனுக்குத் தெரிந்து விட்டது. “எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும். அதோ காரி யென்னும் குதிரையின்மேல் வருகிறான் காரி. அவன் அந்தக் குதிரையின் மேல் ஏறி நடத்துவதாகத் தோன்றவில்லை. குதிரையும் அவனும் ஒட்டியிருக்கின்றனர். அந்த அடற் பரியையும் அவனையும் பிரிக்க முடியாமல் கட்டி வைத்ததுபோலத் தோற்றம் தருகிறது, அந்தக் கோலம். அவன் காலில் வீரக் கழல் பளபளக்கிறது. கையில் வேல் சுடர் விடுகிறது. அவன் இலக்காகக் கொண்டிருப்பது இந்தப் பட்டத்து யானையை. நீங்கள் இந்தப் படை முழுவதையும் காக்க வேண்டும் என்பதில்லை. இந்த யானையைப் பாதுகாத்தால் போதும். அவன் வேறு ஒன்றையும் எறிய மாட்டான். இதைக் கொல்லும் குறிப்புடனே வருகிறான்” என்று வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

தகடூர்ப் போரை வருணித்துப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். ‘தகடூர் யாத்திரை’ என்று தனியே ஒரு காப்பியமாக அந்தப் பாடல்கள்உருவாயின.இப்போது அந்தக் காப்பியம் முழுவதும் கிடைக்கா விட்டாலும் புறத்திரட்டு என்னும் நூலில் அதிலிருந்து சில பாடல்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. மலையமான் திருமுடிக் காரி அதிகமானது பட்டத்து யானையை வேலினால் எறிய முந்திய போது, அதிகமானுடைய படைக்குத் தலைவனாக இருந்தவன் கூறியதைத் தகடூர் யாத்திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது.

கட்டி அன்ன காரி மேலோன்
தொட்டது கழலே; கையது வேலே;

சுட்டி யதுவும் களிறே; ஒட்டிய
தானை முழுதுடன் விடுத்து, நம்
யானை காமின்; அவன் பிறிது எறி பலனே.[2]

[கட்டி அன்ன-சேர்த்துக் கட்டியமைத்தாற் போன்ற, காரி: மலையமானுடைய குதிரையின் பெயர். தொட்டது-அணிந்தது. சுட்டியதுவும்-இலக்காகக் குறித்ததும். தானை - சேனை. காமின் - காவல் செய்யுங்கள்.]

மீன் குத்திக் குருவி தண்ணீரின் மேலே பறந்து மீனை எவ்வாறு கொத்தலாம் என்று படபடப்புடன் இருப்பதுபோல, மலையமான் அந்தக் களிற்றை வேலால் எறியும் துடிப்புடன் செவ்வியை நோக்கி இருந்தான். காரிக் குதிரையின் உடம்பில் சில சிறு புள்ளிகள் அழகாக இருந்தன. அவனுடைய வேலைக் கண்டால் மறவர் நடுங்குவர். அதை நினைத்தாலே நடுங்குபவர்களும் இருந்தார்கள்.

புள்ளிக் காரி மேலோன்; தெள்ளிதின்
உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே;
குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும்
மணிநிறச் சிறுசிரல் போலநம்
அணிநல் யானைக்கு ஊறுஅளக் கும்மே.[3]

[காரி: மலையமான் குதிரை. உள்ளினும் பணிக்கும்.நினைத்தாலும் நடுங்குவதற்குக் காரணமான. குண்டு நீர்க் கிடங்கில் . ஆழமான நீரையுடைய அகழியில். மணி நிறம் - நீலமணியின் நிறத்தையுடைய. சிரல் - மீன் குத்திக் குருவி. ஊறு அளக்குமே . துன்பம் உண்டாக்கும் வழியை ஆராய்வான்.]

காரியே முன்வந்து போர்க்களத்தில் நிற்கிறான் என்பதை அறிந்து அதிகமான் தன்படையின் முன்னனிக்கு வந்து நின்றான். அவன் முகத்திலும் மார்பிலும் அம்புகளைச் சொரிந்தனர் பகைவர்கள். காரி வேலை அவன் மார்பிலே வீசி எறிந்தான். கவசம் இருந்ததனால் அது ஆழமாகப் பதியவில்லை. ஆயினும் அதிகமான் புண்பட்டான். மார்பிலே பட்ட புண்ணை விழுப்புண் என்று சொல்வார்கள். அதை வீரர் வரவேற்பர்.

புண்பட்ட அதிகமான் கோட்டைக்குள் சென்றான். பஞ்சும் நெய்யும் கொண்டு புண்ணுக்கு மருந்திட்டனர். இரண்டு நாட்கள் அதிகமான் போர் முனைக்குப் போகவில்லை. “இன்று நம்முடைய அரசர் புண்படாமல் இருந்தால் காரி தொலைந்திருப்பான்” என்று ஒரு வீரன் கூறினான். ஔவையார் அங்கே இருந்தார். அவர் காதில் அது விழுந்தது. அவர் அதிகமானுடன் உரையாடிக் கொண்டிருந்தார். வீரன் கூறிய செய்தி அவர் உள்ளத்தே தேங்கியது. “ஆம், காரி ஒருவன் தானா? இன்னும் எத்தனை பேரோ வீழ்ந்திருப்பார்கள். இவன் விழுப்புண் பட்டதனால் உயிர் பிழைத்தவர்கள் பலர் என்றே சொல்ல வேண்டும்”[4] என்றார்.

அதிகமான் விழுப்புண் பட்டுக் கிடந்தான் என்ற செய்தியைக் கோட்டையில் இருந்தவர்கள் அறிந்து வருந்தினார்கள். இளையவர்களும் முதியவர்களும் மகளிரும் அவனைக் காண வேண்டும், காண வேண்டும் என்று துடித்தனர். அவன் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். அவன் இருந்த இடம் யாருக்கும் தெரியவில்லை. சான்றோர் பலர் அவனை நாடி வந்தனர். ஆனால் அவர்களையும் காவல் காப்பவர்கள் விடவில்லை. “அவன், எல்லோரும் மகிழும்படி இன்னும் சில நாளில் பழையபடி வெளிப்படுவான்” என்று சொன்னர்கள், உடன் இருந்தவர்கள். இந்த நிகழ்ச்சியைத் தகடூர் யாத்திரையில் ஒரு பாடல் சொல்கிறது. அதிகமானைப் பார்க்க வந்த சான்றோரைப் பார்த்து, அவனுடன் இருந்து பாதுகாத்தவர்கள் சொன்னது போல அமைந்தது அந்தச் செய்யுள்.

அந்தப் பாடல் தகடூர்க்கோட்டை, அகழி முதலியவற்றின் தோற்றத்தையும் சொல்கிறது. மதிலிலிருந்து எய்த அம்புகள் வீழ்ந்து அகழி தூர்ந்து விட்டதாம். அதனால் அது தரை மட்டமாகி அங்கே கன்று மேய்கிறதாம்.

பல்சான் றீரே, பல்சான் றீரே
வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயில்
கணையின் தூர்ந்த கன்றுமேய் கிடங்கின்
மல்லல் மூதூர்ப் பல்சான் றீரே! [5]


என்று முதலில் அவர்களை விளிப்பதாக அமைந்திருக்கிறது பாடல்.

அவனைக் காண முடியவில்லையே என்று பல நாள் வருந்தி இளைஞரும் முதியவர்களும் நல்ல நெற்றியையுடைய பெண்களும் இன்னும் கண்டு உவக்கும்படியாக அவன் சுகமே இருக்கிறான். நாழிகைக் கணக்கர்களைக்கூட நாங்கள் உள்ளே விடவில்லை. ஆகையால் நீங்கள் இப்போது பார்க்க இயலாது.

பலநாள் வருந்தி, இளையரும் முதியரும்
நன்னுதல் மகளிரும் இன்னும்கண்டு உவப்ப,
யாமங் கொள்வரும் ஒழிய.[6]

அன்று ஒருநாள் கொல்லுகிற ஆயுதம் குத்தியதாலே குன்று போன்ற மார்பிலே உண்டான விழுப்புண்ணில் நெய்யோடு பஞ்சைச் சேர்த்து வைத்து, பசுமையாக இருக்கிற கரிய கொத்தையுடைய நொச்சி மலரை மதில் காப்பதற்குரிய மலராக அணிந்து,


  1. 1. தகடூர் யாத்திரை (தொல். புறத் 24, உரை.)
  2. புறத்திரட்டு, 1372.
  3. புறத். 1376.
  4. புறநானூறு, 93,

  5. புறத்திரட்டு. 1341. வீழ்ந்த புரிசை - விரும்பிய மதிலில். ஞாயில் - மதிலின்மேல் உள்ள முடிகள். அங்கிருந்து விடும் அம்புகளால் தூர்ந்த கிடங்கு. கன்று மேய் கிடங்கு. கிடங்கு - அகழி. புரிசையையும் கிடங்கையும் உடைய ஊரில் உள்ள. மல்லல் - வளம்.
  6. யாமம் கொள்வர் - நாழிகைகளேயும் யாமத்தையும் கூறிக் காவல் புரிபவர்.
கோணாதவேலையுடைய வீரர் பெருமகன் பாதுகாப்பிலே இருக்கிறான். நீங்கள் இப்போது பார்க்க இயலாது.

...மேல்நாள்
கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண்
நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக்
கருங் குரல் நொச்சி மிலைந்த
திருந்துவேல் விடலை காப்புஅமைத் தனனே.[1]

ஔவையாரும் அந்த நிலை குறித்துப் பாடினார். புண்பட்டுக் கிடக்கும்போது தம்முடைய உரையாடலாலும் பாடலாலும் அந்தப் புலமைப் பெருமாட்டியார் அவனுக்குச் சோர்வு வாராமல் செய்து வந்தார். படைத் தலைவர்கள் அன்றன்று இரவு வந்து போர்க்களத்தில் நிகழ்ந்தனவற்றை யெல்லாம் சொல்லிச் சென்றார்கள்.

“நாம் பாண்டியனுக்கும் சோழனுக்கும் உதவி வேண்டுமென்று ஓலை அனுப்பினோமே! அவர்கள் வந்து சேரவில்லையே! நான் இங்கே கிடக்கிறேன். இந்தச் சமயத்தில் அவர்கள் துணை கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்!” என்று அதிகமான் கூறினான்.

“அவர்கள் படைகளை ஆயத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். ஓலை போன பிறகே ஆவன செய்கிறார்கள் போலும்!” என்றான் ஒரு படைத் தலைவன்.

மறுநாளே பாண்டியன் படை வந்து விட்டது. அதற்கும் மறுநாள் சோழன் படையும் வந்து சேர்ந்து கொண்டது.


  1. மொய்த்த - பதிந்த. குன்று - குன்று போன்ற மார்பு; உவம ஆகுபெயர். விழுப்புண் - மார்பிலும் முகத்திலும் பட்ட புண், பையென - பசுமையாக. குரல் - பூங்கொத்து. மதிலை முற்றுகையிடுபவர் உழிஞையையும், அதனை எதிர்த்துக் கோட்டையைக் காப்பவர் நொச்சி மலர் மாலையையும் அணிவது மரபு. காப்பு அமைந்தனன் - மேலும் தீங்கு நேராமல் பாதுகாக்கும் காவலில் பொருந்தியிருக்கிறான்.