அதிகமான் நெடுமான் அஞ்சி/முடிவு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

15. முடிவு


திகமான் புண்பட்டுக் கிடக்கிறான் என்ற செய்தியால் அவன் படையினருக்குச் சிறிது சோர்வு தட்டியது. ஆனால் பகைப் படைகளுக்கோ இரு மடங்கு வீறு உண்டாயிற்று. அத்தகைய சமயத்தில் பாண்டியனும் சோழனும் படைகளுடன் வந்து சேர்ந்தனர்; சேரன் படையைச் சூழ்ந்து கொண்டனர். அதற்கு முதல் நாள் பெருஞ்சேரல் இரும்பொறை, ‘இனி இரண்டே நாளில் வெற்றி மகளை நாம் கைப் பிடிப்போம்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான். அதிகமான் போர்க்களத்தில் இரண்டு மூன்று நாட்கள் தோன்றாததால் தகடூர்ப் படையிலே தளர்ச்சி உண்டானதை அறிந்தே, அவ்வாறு எண்ணினான். ஆனால் இப்போது அந்த எண்ணம் சிதறியது. புதிய துணைப்படைகள் மதுரையிலிருந்தும் உறையூரிலிருந்தும் வந்து விட்டன. ‘இந்தப் போரிலே ஏன் தலையிட்டோம்!’ என்ற சலிப்புக்கூடச் சிறிது அவன் மனத்தில் நிழலாடியது.

அதைக் குறிப்பாக உணர்ந்த மலையமான் திருமுடிக்காரி அவனுக்குப் புது முறுக்கு ஏற்றவேண்டுமென்பதைத் தெளிந்தான். “மன்னர்பிரான் இப்போதுதான் தம்முடைய வீரத்தையும் மிடுக்கையும் காட்ட வேண்டும். அன்று அதிகமான் உயிரை என் வேல் குடித்திருக்கவேண்டும். மயிரிழை தப்பியது; புண்படுத்தியதோடு நின்றது. ஆனால் என்ன? இனி அவன் போர் முனைக்கு வந்து போர் செய்வான் என்று நான் நினைக்கவில்லை. கோட்டைக்குள் இருந்தபடியே போரை இப்படி இப்படி நடத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருப்பான். ஒருகால் மீண்டும் போர்க் களத்துக்கு வந்தாலும் பழையபடி போர் செய்ய இயலாது. ஓட்டைப் படகு ஆற்றைக் கடக்குமா?” என்று சொல்லி எழச் செய்தான்.

போர் இப்போது முழு வீறுடன் தொடர்ந்தது. அதிகமானும் புதிய ஊக்கத்தோடு புறப்பட்டான். இருபெரும் படைகள் தனக்குத் துணையாக வந்த பிறகு என்ன குறை? “இதோ இரண்டு மூன்று நாட்களில் சேரர் படையை முதுகிட்டு ஓடச் செய்கிறேன்” என்று கனன்று எழுந்தான். சிங்கக்குட்டி சோம்பு முரித்து எழுந்ததுபோல அவன் மீண்டும் போர்க்களத்தில் வந்து குதித்தான். துணைப் படையின் வரவும் அதிகமான் தோற்றமும் அவனுடைய படை வீரர்களுடைய தளர்வை இருந்த இடம் தெரியாமல் ஓட்டிவிட்டன. பழைபடி வீறு கொண்டு எழுந்தனர். அன்றைப் போரில் எதிர்க் கட்சியில் ஒரு தலைவன் மண்ணைக் கவ்வினான்.

அந்தச் செய்தி காரியின் உள்ளத்திலே வேதனையை உண்டாக்கியது. சுளீர் என்று சாட்டை கொண்டு அடித்தால் குதிரைக்கு வலிக்கத்தான் வலிக்கும். அப்படித்தான் அவன் உள்ளத்தில் வலித்தது. ஆனால் அந்த அடியைப் பெற்ற குதிரை நாலு கால் பாய்ச்சலிலே பாயத் தொடங்கும். காரியும் அப்படியே பாயத் தீர்மானித்தான். அன்று இரவு சேரமான் முன்னிலையில் படைத் தலைவர்களையெல்லாம் கூட்டி இன்ன இன்னபடி போர் செய்ய வேண்டும் என்று வரையறை செய்தான். “இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்தப் போருக்கு ஒரு முடிவு காணவேண்டும். சோழ பாண்டியர்களின் படையைக் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. வெறும் எண்ணிக்கையினால் வீரம் விளங்காது. ஆயிரம் எலிகள் வந்தாலும் ஒரு நாகத்தின் மூச்சுக்கு முன்னே நிற்க இயலாது. போர் நீண்டுகொண்டு போனால் இன்னும் யாராவது அவர்களுக்குத் துணை வந்துகொண்டே இருப்பார்கள். வெற்றி கிட்டாமல் செல்லும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றுகிறது எனக்கு” என்று அவன் யாவரையும் உணர்ச்சியும் துடிதுடிப்பும் கொள்ளும்படி தூண்டனான்; அவனுடைய பேச்சினால் நல்ல பயன் உண்டாயிற்று.

மறுநாள் போர் முனையிலே சேரன் படை புதிய முறைகளை மேற்கொண்டு போர் செய்தது. பிற படை தம்மை வளைக்காத வகையில் அணி வகுத்துக்கொண்டார்கள். அன்று நடந்த கடும் போரிலே பாண்டியர் படைத் தலைவன் பட்டான்; அதற்குமேல் அந்தப் படைக்குப் போரில் ஊக்கம் இல்லை; கடனுக்கே போர் செய்தது. இரண்டே நாளில் தகடூர் வீரர்கள் கலகலத்துப் போனார்கள். மூன்றாவது நாள் அதிகமான் படையின் முன்னிலையில் வந்து நின்றான். பாண்டியனும் சோழனும் இடையிலே நின்றார்கள். காரி அந்தப் படையின் பின்னிருந்து தாக்கும்படி ஒரு படையை அனுப்பினான். அதற்குத் தலைமை தாங்கினான் பிட்டங் கொற்றன். முன்னே தானே நின்று படையைச் செலுத்தினான். சேரமான் படையின் நடுவே நின்றான். அன்று எப்படியாவது போருக்கு ஒரு முடிவைக் கண்டுவிடுவதென்று உறுதி பூண்டு மேலே மேலே முன்னேறினான் மலையமான். சோழனைப் பின்னிருந்து வந்த படை தாக்கியது. அவன் முடி குலைந்தான். அதே சமயத்தில் மலையமான் கை வேலோடு அதிகமானுடைய பட்டத்துயானையைக் குத்தினான். அதனால் மானம் மிக்க அதிகமான் தன் வேலை ஓங்கிக்கொண்டு வந்தான். அந்தச் சமயம் பார்த்துச் சேரர் படையில் இருந்த ஒரு சிறிய தலைவன் தன் வேலை அவன் மார்பில் ஓச்சினான். அது அவன் மார்பிலே நன்றாக ஆழச் சென்றது. அதிகமான் வீழ்ந்தான்; அக்கணத்திலே உயிர் துறந்தான். தலை அற்ற பிறகு வால் துடிக்கும்; சிறிது நேரம் துடித்து ஓய்ந்துவிடும். அதிகமான் படையும் அப்படித்தான் வீராவேசத்தோடு எதிர்த்து ஓய்ந்தது. எஞ்சியவர்கள் சரணடைந்தார்கள். பாண்டியனும் சோழனும் பெற்றோம் பிழைத்தோமென்று தம் தம் நகரை நோக்கி ஓடிவிட்டார்கள்.

இங்கே போர்க்களத்தில் பட்டத்து யானைக்கு அருகில் அதிகமான் வீழ்ந்து கிடந்தான். அவனைச் சுற்றித் துயரே வடிவாகப் பலர் இருந்தனர். பெருஞ்சேரல் இரும்பொறை அங்கு வந்து பார்த்தான். வெற்றியேந்திய தடந்தோளும் வீரம் விரிந்த திருமார்பும் முறுவல் கோணா மலர் முகமும் முழந்தாளளவும் நீண்ட கைகளும் அசையாமல் கிடந்தன. அதிகமான் திருமேனியைக் கண்ட கண்களில் நீர் துளித்தது. "எவ்வளவு பெரிய வீரன்! என்ற வியப்புணர்ச்சி அவன் உள்ளே கிணுகிணுத்தது. உரிமை மாதர் புலம்பினர். வீரர்கள் கண் பொத்தி வாய் புதைத்து ஊதுலைக் கனல் போல் உயிர்த்தனர்.

புலவர்கள் வந்து பார்த்தார்கள். ஔவையார் ஓடிவந்தார். “அந்தோ! என் தம்பி! என்னைத் தமக்கையென்று வாயாரச் சொல்லி மகிழும் உன் அன்புச் சொல்லை இனி நான் எப்போது கேட்பேன்! உண்டால் நீண்டநாள் வாழலாமென்பது தெரிந்தும் உனக்கு அந்த வாழ்வு வேண்டாமென்று நெல்லிக்கனியை என்னிடம் அளித்த உன் திருக்கையை யாரிடம் இனிப் பார்க்கப்போகிறேன். பிறந்த ஊரையும் பார்த்த ஊரையும் பழகிய நாட்டையும் மறந்து, உன்னோடே வாழ்நாள் முழுவதும் இங்கே இருந்துவிடலாம் என்றல்லவோ எண்ணியிருந்தேன்? அந்த எண்ணத்தில் மண் விழுந்ததே!” என்று புலம்பினர்.

சேரமானுக்கு வேண்டியவரும் அவனைப் பல பாடல்களால்புகழ்ந்தவருமாகியஅரிசில்கிழார்வந்தார். அதிகமான் புகழை நன்றாக அறிந்தவர் அவர். புலவர்களில் அவனைத் தெரியாதவர் யார்? பெரிய மன்னனை இத்தனை காலம் அலைக்கழித்து, போர் எப்படி முடியுமோ என்று அஞ்சச் செய்து எதிர்த்து நின்ற அவன் வீரத்தைப் பகைப் படைத் தலைவர்கள் நன்கு அறிந்தார்கள். அவர்கள் வாயிலாக அவனுடைய வீரத்தை அறிந்தவர் அரிசில்கிழார். அவர் இரங்கினார். பிறகு அவனைப்பற்றி ஒரு பாட்டுப் பாடினார். அவனைப்பற்றி அறிந்தவற்றையெல்லாம் அந்தப் பாடலில் அமைத்திருந்தார்.

“அதிகமானுடைய நாட்டில் யாருக்கும் எதனாலும் அச்சமே இல்லாமல் இருந்தது. காடுகளில் மாட்டு மந்தைகள் கன்றுகளோடு தங்கும். யாரும் அவற்றை அடித்துச் செல்லமாட்டார்கள். கவலையில்லாமல் அவை புல்லைத் தின்று இன்புறும். நெடு வழியிலே போகும் அயலூரார் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். வழிப்பறிக்காரர்கள் வருவார்களோ என்று சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. நெற்களங்களில் நெல் குவியல் குவியலாகக் காவலே இல்லாமல் போட்டது போட்ட படியே கிடக்கும் ; ஒரு துரும்புகூடக் களவு போகாது. மக்களுக்குப் பகைவரே யாரும் இல்லை. இப்படித் தன் நாட்டில் அமைதியும் நற்பண்பும் நிலவும்படி செங்கோலோச்சினான் அதிகமான். உலகமே அவனைப் புகழ்கிறது. வீரத்தில் குறைந்தவனா? அவன் வாள் தன் குறியிலே சிறிதும் தப்பாது. இத்தகைய குரிசில் இப்போது களத்தில் கிடக்கிறான். தாயைப் பிரிந்த குழந்தையைப்போலச் சுற்றத்தார் மூலைக்கு மூலை வருந்திப் புலம்ப, அவனைக் காணாமல் இனிப் பசி வந்து வருத்துமே என்று அஞ்சும் மக்கட் கூட்டம் புலம்பும். அப்படித் துன்புற்று வைகும் உலகம் இழந்ததைவிட, அறம் இல்லாத கூற்றுவனே, நீ இழந்தது தான் மிகப் பெரிது. விதைத்துப் பயிரிட்டு விளைவு செய்யும் வயலின் பெருமையை அறியாமல் வீழுங்குடியை உடைய உழவன் விதை நெல்லையே சமைத்து உண்டதுபோல நீ செய்து விட்டாயே! இந்த ஒருவனுடைய ஆருயிரை நீ உண்ணாமல் இருந்திருந்தாயானால் அவன் அமர் செய்யும் களத்தில் அவன் கொன்று குவிக்கும் பகைவர்களுடைய உயிரைப் பருகி நிறைவு பெற்றிருப்பாயே![1] என்ற பொருளை அப் பாட்டுப் புலப்படுத்தியது.

பிறர் துயர் கூர்ந்து இனைய இனைய ஔவையாரின் உள்ளம் அதிகமானோடு பழகிய நாட்களெல்லாம் அவருடைய நினைவுக்கு வநதன.

“அவனுடைய ஈகையை என்னவென்று சொல்வேன்! சிறிதளவு பானம் பெற்றால், தான் அருந்தாமல் எங்களுக்குக் கொடுத்துவிடுவான். நிறையக் கிடைத்தால் யாம் பாடும்படி எல்லாரோடும் அருந்தி இன்புறுவான். சிற்றுண்டி உண்டாலும் உடன் இருக்கும் பலருக்கும் இலை போட்டு அவர்களோடு உண்பான். பெரிய விருந்தானாலும் எல்லோரையும் உண்பித்துத் தான் உண்பான். சுவையான உணவு கிடைக்கும் இடங்களிலெல்லாம் எங்களை இருக்கச் செய்வான். அம்பும் வேலும் நுழையும் இடங்களிலெல்லாம் தான் வந்து முன்னே நிற்பான். எவ்வளவு அன்பாக எங்கள் தலையைக்கோதி மகிழ்வான்! அவனுடைய மார்பிலே புகுந்து தங்கிய வேல் அவன் மார்பையா துளைத்தது? அருமையான சிறப்பைப் பெற்ற பெரிய பாணருடைய கைப் பாத்திரங்களைத் துளைத்தது; இரப்பவர் கைகளைத் துளைத்துவிட்டது; அவனால் காப்பாற்றப்பட்டவர்களுடைய கண் ஒளியை மழுங்கச் செய்தது; கடைசியில், அழகிய சொற்களையும் நுட்பமான ஆராய்ச்சியையும் உடைய புலவர்களுடைய நாவிலே போய்க் குத்தி விழுந்தது. என் அப்பன் இப்போது எங்கே


  1. 1. புறநானூறு, 230.
போய்விட்டானோ ? இனிமேல் பாடுபவர்களும்இல்லை; பாடுபவர்களுக்கு ஒன்றைக் கொடுப்பவர்களும் இல்லை. குளிர்ந்த நீர்த துறையில் படர்ந்திருக்கும் பகன்றைக் கொடியின் பெரிய பூ யாராலும் அணியப்படாமல் வீணே கழிவதைப்போல, பிறருக்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து அழியும் உயிர்களே அதிகமாக உள்ளன[1] என்று பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டுப் பலர் கண்ணீர் உகுத்தனர்.

அதிகமானுடைய மைந்தன் வந்தான். உறவினர் வந்தனர். அவ்வள்ளலுக்குரிய ஈமக் கடனைச் செய்யத் தொடங்கினர். விறகுகளை அடுக்கி அதிகமானுடைய பொன் மேனியை அவ்வீமப் படுக்கையில் இட்டு அவன் மைந்தன் எரியூட்டினான். நெய் விட்டு மூட்டிய ஈம அழல் வானுற ஓங்கி எரிந்தது.

“ஐயோ, இந்த அருமையுடல் நீறாகின்றதே!” என்று ஒருவர் இரங்கினார்.

ஔவையார் தம் கண்ணைத் துடைத்துக் கொண்டார். “அவன் உடல் ஈம எரியிலே நீறானால் என்ன? வானுற நீண்டு வளர்ந்தால் என்ன? இனி அந்த உடம்பைப் பற்றிய கவலை நமக்கு வேண்டியதில்லை. திங்களைப்போன்ற வெண் குடையின் கீழ்க் கதிரவனைப் போல ஒளிவிட்டு வாழ்ந்த அவன் புகழுடம்பு என்றும் மாயாது; அதை யாராலும் அழிக்க முடியாது”[2] என்று பாடினார்.

பிறகு பழங்கால வழக்கப்படி அவனை எரித்த இடத்தில் அவன் பெயரும் பீடும் எழுதிய கல்லை நட்டார்கள். அதற்கு மயிற்பீலியைச் சூட்டினார்கள். வடிகட்டிய கள்ளைச் சிறிய கலத்தால் உகுத்து வழி பட்டார்கள். அதைப் பார்த்த ஔவையாருக்குக் கங்கு கரையில்லாத துயரம் பெருக்கெடுத்தது. “அதிகமானுக்கா இது? இதை அவன் பெற்றுக் கொள்கிறானா?


  1. 1. புறநானூறு, 235.
  2. 2. புறநானூறு, 231.
உயர்ந்த கொடுமுடிகளையுடைய மலை பொருந்திய நாட்டை நீ கொள்க என்று கொடுத்தாலும் வாங்க இசையாத அந்தப் பெருவள்ளல் இந்தச் சிறிய கலத்தில் உகுக்கும் கள்ளைக் கொள்வானா? இதைப்பார்க்கும் படியாக நேர்ந்த எனக்குக் காலையும் மாலையும் இல்லையாகட்டும்; வாழும் நாளும் இல்லாமற் போகட்டும்![1] என்று விம்மினார்.

வீரத்தாலும் ஈகையாலும் பண்பினாலும் ஓங்கி உயர்ந்த ஒரு பெரிய வள்ளலின் வாழ்க்கை, ஒரு சிறந்த வீரனின் நாள், ஓர் இணையற்ற கருணையாளனது கதை முடிந்தது. அவனுடைய புகழைத் தமிழுலகம் மறக்கவில்லை; ஏழு வள்ளல்களில் ஒருவனாக வைத்துப் பாராட்டுகிறது.

அதிகமானுக்குப் பிறகு ஆவன் மகன் பொகுட்டெழினி தகடூரை ஆண்டான். கொல்லிக் கூற்றத்தைச் சேரமான் தகடூர்ப் போரில் பெருவிறலோடு நின்று போரிட்ட பிட்டங் கொற்றனுக்கு உரிமையாக்கினான். திருக்கோவலூரை மீண்டும் காரிக்கே வழங்கினான்.

சில காலம் ஔவையார் பொகுட்டெழினியுடன் இருந்து, பிறகு புறப்பட்டு விட்டார். அதிகமான் இல்லாத இடத்தில் தங்கி வாழ அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.

அதிகமானுடைய பரம்பரையில் வந்தவர்கள் பிற்காலத்தில் சில திருக்கோயில்களில் திருப்பணி செய்ததாகத் தெரிகிறது. கொங்கு நாட்டில் உள்ள நாமக்கல் என்னும் ஊரில் ஒரு சிறு குன்றம் இருக்கிறது. அங்கே உள்ள திருமால் கோயிலுக்கு அதியரைய விண்ணகரம் என்று பெயர். அதை அதியேந்திர விஷ்ணுக்கிருகம் என்று வடமொழியில் வழங்குவர். அதனை நிறுவியவர் அதிகமான் பரம்பரையில் வந்தவரென்றே தெரிகிறது. அப்பர் அடிகள் திருவருள் பெற்ற திருத்தலம் திருவதிகை என்பது. அதிகை என்பது அதியரைய மங்கை என்பதன் மரூஉ. தஞ்சாவூர் தஞ்சை என்று வருவது போன்றது அது. அந்தத் தலமும் அதிகமான் வழிவந்த மன்னர் ஒருவரால் அமைக்கப் பெற்றது போலும். பதின்மூன்றாவது நூற்றாண்டில் அதிகமான் மரபில் வந்த விடுகாதழகிய பெருமாள் என்பவன் ஒரு மலையின்மேல் அருகக் கடவுள் திருவுருவை நிறுவினானென்று ஒரு கல் வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

இன்று தகடூராகிய தருமபுரி தன் பெயரை இழந்து நின்றாலும் அதிகமான் கோட்டை இருந்த இடம் மேடாக இருக்கிறது. அங்கே அதிகமான் கோட்டை என்ற பெயரோடு ஓர் ஊர் உள்ளது. அங்கே ஓரிடத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு சிலையுருவம் நிற்கிறது. அதைக் கோட்டைக்குள்ளே புகும் கருங்கையைச் சேரமானுக்குக் காட்டிக் கொடுத்த வஞ்ச மகளுடைய உருவம் என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.

அதிகமான் ஔவையாரிடம் கொண்ட அன்பு பாசமாக மாறியது. அவ்விருவரும் தம்பி தமக்கைகளைப் போலப் பழகினர். அதனால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு தாய் வயிற்றிலே பிறந்தவர்கள் என்று கூடச் சிலர் பாடி விட்டார்கள்.

அதிகமான் வரலாறு ஒரு வீர காவியம்; புலவர்கள் போற்றும் புனிதக் கதை.


  1. 1. புறநானூறு, 232.கட்டுரைப் பயிற்சி

கீழ்க்காணும் பொருள்கள் பற்றி ஒன்றரைப் பக்க அளவில் கட்டுரைகள் வரைக.

1. அதியர் குல முன்னோர்கள்.

2. அதிகமான் ஆண்மையும் ஆட்சியும். 3. அதிகமான் ஔவையார் நட்பு.

4. அதிகமானும் பெருஞ்சித்திரனாரும்.

5. அதிகமான் பெற்ற அமுதக் கனி.

6. அதிகமான் புகழும் ஔவையார் பாடலும்.

7. அதிகமானும் தொண்டைமானும்.

8. கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்.

9. பெருஞ்சேரல் இரும்பொறையும் தகடூர் முற்றுகையும்.

10. அந்தப்புர நிகழ்ச்சியும் வஞ்சமகள் செயலும்.

11. போரும் முடிவும்.

12. அதிகமானைப் பாடிய அருந்தமிழ்ப்புலவர்கள்.