உள்ளடக்கத்துக்குச் செல்

அதிசயப் பெண்/இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்

விக்கிமூலம் இலிருந்து
இட்டிலியும்

மிளகாய்ப் பொடியும்

ரு காக்கை வீதி வழியே பறந்து வந்துகொண்டிருந்தது. வீதியின் ஒரத்தில், ஒரு கிழவி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தாள். கூடைக்குள்ளே சில இட்டிலிகளும், மேலே இருந்த தட்டில் ஐந்தாறு இட்டிலிகளும் இருந்தன. காக்கை அந்த இட்டிலிகளைப் பார்த்தது. அதன் வாயில் நீர் ஊறியது.

கிழவி எங்கேயோ கவனம் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து அந்தக் காக்கை ஓர் இட்டிலியைக் கவ்வியது; உடனே வேகமாகப் பறந்து போயிற்று. பாவம்! கிழவி உரக்கக் கத்தினாள் எந்த பயனும் இல்லை.

இட்டிலியைக் கவ்விக்கொண்டு வந்த காக்கை, ஊருக்கு வெளியே ஒரு மரத்தின்மேல் போய் உட்கார்ந்தது. அது வாயில் ஒர் இட்டிலியுடன் வருவதை நரி கவனித்துப் பார்த்தது. எப்படியாவது அந்த இட்டிலியை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதற்கும் உண்டாயிற்று.

அந்த மரத்தடிக்கு நரி விரைவாக வந்தது. மேலே உள்ள காக்கையைப் பார்த்து,"தம்பி, இந்த இட்டிலியை நீ எப்படி எடுத்துக்கொண்டு வந்தாய்? உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்!” என்று புகழ்ந்து பேசியது. காக்கை வாயில் கவ்விய இட்டிலியுடன் மரத்தின் மேலேயே இருந்தது.

நரி, இனிமேல் நேரே கெஞ்சிக் கேட்டுத்தான் இட்டிலியில் கொஞ்சம் வாங்கவேண்டும் என்று தெரிந்து கொண்டது. ஆகவே, “தம்பி, எனக்கு வெகு நாட்களாக இட்டிலி தின்னவேண்டும் என்று ஆசையாக இருந்தது. நான் ஊருக்குள்ளே போய் ஒன்றும் திருட முடியாதே. நண்டையும் தவளையையும் தின்று தின்று சலித்துப் போய்விட்டது. நீதான் பாக்கியசாலி. மனிதர் தின்னும் தின்பண்டங்களெல்லாம் உனக்குக் கிடைக்கின்றன” என்று நயமாகச் சொல்லத் தொடங்கியது.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த காக்கை தன் வாயிலிருந்த இட்டிலியை மரத்தில் இருந்த சிறிய பொந்தில் வைத்துவிட்டு, "கா கா" என்று கூவியது. நரி மறுபடியும் காக்கையைப் பார்த்து, "தம்பி, நீ பிறருக்குக் கொடுக்காமல் எதையும் உண்ணாதவன். இந்த இட்டிலியைத் தின்ன உன் உறவினர்களைக் ‘கா கா’ என்று அழைக்கிறாயே, நான் இருக்கிறேன்."என்னையும் உன் சொந்தக்காரனாக எண்ணி எனக்கு ஒரு துண்டாவது கொடு” என்று கெஞ்சிக் கேட்டது.

காக்கைக்குக் கொஞ்சம் மனசு இரங்கியது. அந்த இட்டிலியை மறுபடியும் கவ்விக்கொண்டு கீழே இருந்த ஒரு கல்லின்மேல் உட்கார்ந்துகொண்டது.

அதற்குள் நரி என்னவோ நினைத்துக்கொண்டது; "தம்பி, ஒரு விஷயம் சொல்கிறேன்; கேட்கிறாயா? இந்த இட்டிலி, வெறும் இட்டிலியாக இருக்கிறது. மனிதர்கள், மிளகாய்ப் பொடி என்றும், சட்டினி என்றும் சில பதார்த்தங்களை இதற்கு உபயோகிப்பார்களாம். நாமும் அந்தமாதிரி ஒன்றோடு இட்டிலியைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது. உனக்குச் சம்மதமாக இருந்தால் அப்படிச் செய்யலாம்" என்றது.

காக்கை, “இப்போது மிளகாய்ப்பொடிக்கு எங்கே போவது?” என்று கேட்டது.

"இதுதானா பிரமாதம்? இட்டிலி எப்படிக் கிடைத்ததோ, அது மாதிரி மிளகாய்ப் பொடியும் கிடைக்கும். நீ மனசு வைத்தால் எதுதான் கிடைக்காது? நீ இப்போதே ஊருக்குள் போய் மிளகாய்ப்பொடியையும் சம்பாதித்துக்கொண்டு வந்துவிடு. அதுவரையில் நான் இதைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன்" என்று தந்திரமாகச் சொல்லியது. 

இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்

29

காக்கை அந்த வார்த்தைகளை உண்மையாக நம்பி, மறுபடியும் ஊரை நோக்கிப் புறப்பட்டது.

நரி சிறிது நேரம் சும்மா இருந்தது. அதனுடைய துஷ்ட குணம் அதைச் சும்மா இருக்க விடவில்லே. அந்த இட்டிலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்த நரி அதைத் தொட்டுக்கொண்டே இருக்க ஆரம்பித்தது. பின்னும் கொஞ்ச நேரம் ஆயிற்று. நரியினால் ஆசையை அடக்க முடியவில்லை. இட்டிலியைக் கையிலேயே எடுத்து வைத்துக் கொண்டது. 'இதை இப்படியே வாயில் போட்டுக் கொண்டு ஓடிவிடலாமே!’ என்று எண்ணம் உண்டாயிற்று. ஆனாலும் அதற்குத் தைரியம் ஏற்படவில்லை.

‘இதைக் கொஞ்சம் நாக்கில் வைத்துப் பார்க்கலாம்’ என்ற எண்ணம் அடுத்தபடியாகத் தோன்றியது. மெதுவாக நாக்கினல் அதை நக்கிப் பார்த்தது. அப்போது நரிக்கு இட்டிலியை ஒரே விழுங்காக விழுங்கிவிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. 'காக்கை வந்தால்...?' என்று எண்ணியது. 'வந்தால் என்ன செய்யும்? நாம் ஒடிப் போய்விடலாம்' என்று அடுத்தபடி ஓர் எண்ணம் வந்தது.

உடனே, துணிந்து இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துத் தின்றது. அந்தச் சமயத்தில், காக்கை திரும்பி வந்துவிட்டது. வாயில் ஒரு சிறு கிண்ணத்தோடு பறந்து வந்தது. அந்தக் கிண்ணம் நிறைய மிளகாய்ப்பொடி இருந்தது. வரும்போதே அந்தக் காக்கை நரியைப் பார்த்தது. நரி இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துக் கொண்டிருந்தது. நரி முழுவதையும் விழுங்கி விடப்போகிறது என்றே அது எண்ணியது. உடனே இரைந்த குரலில், “நரி அண்ணா, அவசரப்படாதே. அந்த இட்டிலியை நீயே தின்னலாம்; இந்த மிளகாய்ப்பொடியையும் போட்டுக்கொண்டு தின்னலாம். எனக்கு வேண்டாம். பாவம்! இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தாயே. எனக்கு வேறு இட்டிலி கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்தது.

நரிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இட்டிலி முழுவதையும் தானே சாப்பிட வேண்டும் என்ற பேராசை அதற்கு இருந்தது. ஆனாலும், காக்கை இப்படிச் சொல்லும் என்று அது எதிர்பார்க்கவில்லை. “என்ன தம்பி சொல்கிறாய்?” என்று சொல்லிக் கையில் இருந்த இட்டிலியை நரி கீழே வைத்தது. வைத்ததுதான் தாமதம்; மறு கணத்தில் காக்கை தன் வாயில் பிடித்திருந்த கிண்ணத்திலிருந்த மிளகாய்ப்பொடியை அப்படியே நரியின் கண்மேல் கொட்டிவிட்டு, அது கண்ணைத் துடைப்பதற்குள் இட்டிலியைக் கவ்விக்கொண்டு பழைய மரத்தின்மேல் உட்கார்ந்துகொண்டது.

நரியோ மிளகாய்ப்பொடி விழுந்ததனால் கண்ணைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டது; எரிச்சல் தாங்க முடியவில்லை “ஐயோ! ஐயோ!” என்று கதறியது.

காக்கை, “நரியண்ணா, மிளகாய்ப்பொடி எப்படி இருக்கிறது? இட்டிலியினால் உன்னுடைய நாக்கில் நீர் சுரந்தது. இப்போது மிளகாய்ப்பொடியினால் கண்ணிலே நீர் சுரக்கிறது. நல்ல வேளை! இவ்வளவு நேரத்தில் இட்டிலியை விழுங்காமல் இருந்தாயே! உனக்கு வந்தனம்” என்று சொல்லிவிட்டு, இட்டிலியைத் தின்றது.