அதிசயப் பெண்/உயர்ந்த பரிசு

விக்கிமூலம் இலிருந்து
உயர்ந்த பரிசு

ரு வித்தையாடி ஓர் அரசனுடைய முன்னிலையில் தன் வித்தைகளைக் காட்ட ஆரம்பித்தான். தன் உடம்பைப் பலவகையாக வளைத்தும், நிமிர்த்தியும், ஒரு பாகத்தை மாத்திரம் அசையச் செய்தும் தன் சாமர்த்தியத்தைக் காட்டினான், அவன் பல வருஷங்களாகச் செய்த அப்பியாசத்தினால் அவ்வாறு தன் உடம்பை இஷ்டம் போல் வளைக்க முடிந்தது.

கஜகர்ணம், கோகர்ணம் என்ற வித்தைகளையும் அவன் காட்டுவதாகச் சொன்னான். யானையானது நின்றபடியே தன் காதை மாத்திரம் ஆட்டும் சக்தி உடையது. பசுவும் அப்படியே செய்யும். இந்தமாதிரி ஆட்டும் வித்தையில் அவன் வல்லவனாக இருந்தான். பசுவைப்போலவே, இரண்டு கைகளையும் கீழே ஊன்றி: கொண்டு காதுகளை மட்டும் ஆட்டினான்.

பசுவைப் போலவே அவன் நடித்துக் காட்டியதோடு அங்கே இருப்பவர்கள் தன்னை எப்படி வேண்டுமானாலும் பரீட்சை செய்து பார்க்கலாமென்றும் சொன்னான், அரசன் தன் மந்திரிகளை அவ்வாறு பரீட்சை செய்யச் சொன்னான். அவர்கள் தங்கள் தங்களுக்குத் தெரிந்த படி பரிட்சை செய்து பார்த்து, “இவன் மிகவும் சாமர்த்தியசாலியே” என்று சொல்லி வியந்தார்கள். ஒவ்வொரு வித்தைக்கும் ஒவ்வொரு பரிசை அரசன் அந்த வித்தையாடிக்குத் தந்தான். அவன் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டான்.

கோகர்ண வித்தை செய்து காட்டியபோது அங்கே கூடியிருந்த ஜனங்களுக்குள் இடையன் ஒருவன் இருந்தான். அவன் வித்தையாடிக்குப் பக்கத்தில் வந்தான். ஒரு சிறு கல்லே எடுத்து வித்தையாடியின்மேல் போட்டு அவனைக் கவனித்தான்; உடனே அவ்விடையன் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று. மிகவும் சந்தோஷத்துடன் தன் மேலே போட்டிருந்த பழைய கம்பளி ஒன்றை வித்தையாடியின்மேல் எறிந்துவிட்டுச் சென்றான்.

வித்தையாடி அந்தப் பழைய கம்பளியை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டான்; உடனே அதைத் தன் பெட்டியில் வைத்தான். மற்றப் பரிசுகளைல்லாவற்றை யும்விட அதை மிகவும் உயர்ந்ததாக அவன் எண்ணினான்.

அவன் அவ்வாறு செய்ததைக் கண்டு அரசனுக்கு அதிகமான கோபம் உண்டாயிற்று; “நாம் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகளை இவன் சாதாரணமாக வாங்கிக் கொண்டான். அந்த இடையன் கொடுத்த பழைய கம்பளியை அவ்வளவு சிரத்தையோடு வாங்கிவைத்துக் கொண்டானே! நமக்கு இதனால் அவமதிப்பன்றோ உண்டாகிவிட்டது?” என்று யோசித்தான். அவன் கண்கள் சிவந்தன.

வித்தைகள் செய்து முடிந்த பிறகு கூட்டம் கலைந்தது. அரசன் வித்தையாடியைத் தனியே அழைத்து வரச் செய்தான்; “நீ நாம் கொடுத்த பரிசுகளை அலட்சியமாக வைத்துவிட்டு அந்த இடையன் கொடுத்த பொத்தல் கம்பளியை அவ்வளவு மரியாதையோடு வாங்கிக்கொண்டாயே; நம்மை இப்படி அவமதித்த குற்றத்திற்காக உனக்குத் தக்க தண்டனை அளிக்க உத்தரவிடப் போகிறோம்” என்றான்.

வித்தையாடி : மகாராஜா, தாங்கள் இந்த ஏழையின் மீது அவ்வளவு கோபம் கொள்ளக்கூடாது. நான் செய்த அபசாரத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நான் அவ்வாறு செய்ததற்கு என்ன காரணமென்பதை மாத்திரம் மகாராஜாவுக்கு விண்ணப்பம் செய்துகொள்கிறேன்

அரசன் : என்ன காரணம்?

வித்தையாடி : நான் கோகர்ண வித்தை செய்து காட்டினபோது பலர் என்னைப் பரீட்சை செய்தார்கள். அந்த இடையனும் என்னைப் பரீட்சித்தான். என்மேல் ஒரு சிறு கல்லைப் போட்டான். நானும் அந்தக் கல் விழுந்த இடத்தை மாத்திரம் சுழித்துக்கொண்டேன். பசு வின் சுபாவம் இது. இதை நன்றாக அறிந்த இடையன் என் சாமர்த்தியத்தைத் தெரிந்துகொண்டான். அவன் செய்த பரீட்சை உயர்ந்தது. அவன் மனம் மகிழ்ந்து தந்த பரிசு எப்படி யிருந்தாலும் விஷயத்தை அறிந்து கொடுத்தது; ஆகையால் விஷயம் அறியாமல் தந்த பரிசுகளைக் காட்டிலும் அதன்பால் அச்சமயத்தில் எனக்கு அதிக மதிப்பு உண்டாயிற்று. ‘இது ராஜசபை’ என்ற ஞாபகம் எனக்கு அந்த நிமிஷத்தில் மறந்து போயிற்று.

அரசன் உண்மையை உணர்ந்தான். அவன் நல்ல அறிவாளி யாகையால் வித்தையாடி சொன்னது நியாயமே என்று தெரிந்துகொண்டான். அவனுக்குப் பின்னும் சில பரிசுகளைத் தந்தான். அவனைப் பரீட்சித்த, இடையனை வருவித்துத் தன் அரண்மனைப் பசுக்களைப் பாதுகாக்கும் உத்தியோகத்தை அளித்தான்.