அத்தை மகள்/2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2

ரத்தினத்துக்கு இப்போது, வயது பதினெட்டு. அழகாக வளர்ந்திருந்தாள். 'மூக்கும் முழியுமா, நல்ல சிவப்பு ரெட்டாக் கிளிபோலே' என்று அம்மையார்கள் பலரும் கண்டு மகிழ்ந்து போகும்படி வளர்ந்திருந்தாள். அத்துடன் ஆளே மாறி போய்விட்டாள். -

பாவாடை கட்டி 'காதரை கூதரை மாதிரி'----இப்படித்தான் அவள் தாய் அடிக்கடி கத்துவாள். அதன் அர்த்தம் மகளுக்குத் தெரியாது. அம்மாளுக்கே தெரிந்திருக்குமோ என்னவோ, அது நமக்குத் தெரியாது! - ஊரைக் குட்டைப் புழுதி பண்ணித் திரிந்த 'சின்னப் புள்ளே' சேலை கட்டும் குமரியாக மாறியதும் ஆடை யிலும் உருவத்திலும் பெற்ற மாறுதல்களை குணத்திலும் பெற்று விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குவது போல் ஒலி எழுப்பிச் சிரித்த பெண்ணிடம் இப்போது மெல்லிய கிண்கிணிச் சிரிப்பு குடிபுகுந்திருந்தது. பேய்க் காற்று போலக் கதறிக் கூச்சலிட்டவளிடம் இனிய நீரோடைச் சலசலப்பு போன்ற பேச்சைத்தான் இன்று கேட்க முடிந்தது. 'அவுத்து விட்டதுதான் கன்றுக் குட்டி, எடுத்து விட்டதாம் ஓட்டம்' என்று ஊளையிட்டபடி குதித்துக்கொண்டு ஓடியவளிடம் இப்போது குதிப்பைபும் கூத்தாட்டத்தையும் காண முடியாது. அவள் நடையிலே ஒரு துள்ளல் இருந்தது. அசைவிலே ஒரு துடிப்பு உண்டு. நிற்கும் நிலையிலே ஒரு மிடுக்கு உண்டு. பார்க்கும் தினுசிலே ஒரு எடுப்பு இருந்தது. ஆனால் அனைத்திலும், இன் கவிதையில் காணப்படும் கட்டுக் கோப்பு இருந்தது. வெறித்தனம் இல்லை.

பழைய பாவாடை ரத்னம் எடுத்ததற்கெல்லாம் 'வவ்.....வவ்' உதிர்த்து வாழ்ந்தாள் என்றாள் பருவப் புதுமையில் மோகனமாய்த் திகழ்ந்த ரத்னத்தின் பழச்சுளை உதடுகள் அடிக்கடி ஹூஹூங்....ஹிஹூங்.....ஹி..ஹூங்' என்று மணிச் சிரிப்பைத்தான் சிந்தின.

ஆமாம், அவள் ரொம்பவும் மாறிப் போனாள். அத்தான் சுந்தரம் நினைத்தது மெத்தச் சரிதான் !

இல்லையெனில் அவள் மறைந்து நிற்பாளா? அவனை அவள் மறந்துவிடவில்லை. எப்படி மறக்க முடியும்? வேலையற்ற வேளைகளில் எல்லாம்---அந்த நேரம் அவளுக்கு மிக மிக அதிகமாகவே இருந்தது----அத்தானைப் பற்றி, சுந்தரம் சின்னப்பயலாகத் திரிந்தபோது நடத்திய 'லூட்டி'களைப் பற்றி, தன்னை அவன் அழ ஆழக் கேலி செய்ததைப்பற்றி யெல்லாம் எண்ணி எண்ணிக் களிப்பாள். உள்ளத்து முற்றத்திலே நினைவுக் கோலங்களிட்டு, அழித்து அழித்துப் புதிதாகத் தீட்டித் தீட்டி மகிழ்ந்து போவது அவளுக்கு இனிக்கும் பொழுது போக்கு. இளம் பிராய நினைவுகள் வர்ணம் காயாத புத்தம் புதிய ஓவியங்கள் போல் பளிச்சிடும் அவள் மனதிலே.

'அழ வைத்தால்தான் என்ன ? அவன் செய்த குறும்புத்தனங்கள் எனக்கு சங்தோஷம் தரப் போய்த் தானே அவன் கூட சண்டை போட்டுக்கொண்டே விளையாடித் திரிந்தேன். அவன் ஊருக்குப் போனதும் எனக்கு என்னவோ மாதிரிப் போய்விட்டது. பொழுது போகவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கேயும் இங்கேயும் திரிந்து, கடைசியில் அலுத்துப்போய் படுத்துத் துரங்கியிருக்கிறேன் எத்தனையோ நாட்கள். அவனுக்குக் குறும்புத்தனம் ஜாஸ்தி. அதனாலென்ன ? ரொம்ப நல்ல அத்தான்.... ....”

இவ்விதம் நினைக்கும் போதெல்லாம் ரத்தினத்தின் முகம் சிவந்து விடும். அதற்குக் காரணம் உண்டு. ஒரு சமயம் சுந்தரம் தனியாக உட்கார்ந்திருந்தான். ஏதோ படித்துக் கொண்டிருந்தான். ரத்தினம் வந்தாள். அவனைக் கவனித்தாள். என்ன நினைப்பு வெடித்ததோ! அவன் பக்கத்தில் போய் நின்றாள். அவனது முகத்தை, எடுப்பான மூக்கை, கறுக மணிக் கண்களை, சிரிப்பு பிறக்கலாமா வேண்டாமா என்ற துடிப்போடு காணப்பட்ட உதடுகளைப் பார்த்தாள். அவன் மௌனமாக அவளைப் பார்த்தான். ஏனோ கேலி செய்யவில்லை. என்ன வேணும் என்று கேட்கவில்லை. 'இவர் ஒரு அத்தான், இவர் நல்லவர், ரொம்பவும் நல்ல அத்தான்' என்றாள். பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் 'கண்ணன் தின்னும் பண்டம் என்ன? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய்' என்று நீட்டி இழுத்துப் பாடம் படிப்பதுபோல் சொன்னாள் அவள். சொல்லும்போதே அவனது மூக்கைத் தன் சின்னஞ் சிறு விரல்களால்---தங்கரளிப் பூ மொட்டுகள் போன்ற விரல்களினால்---அன்பாகப் பற்றினாள் அவன் விளையாட்டாகச் சிரித்தான். அன்று ஏனோ 'அவனுக்கு அவளது கன்னத்தில் ஓங்கியறைந்து பன் ரொட்டியாக்கி விடவேனும் என்ற எண்ணம் வரவில்லை. அவளது மென் கன்னத்தை 'பன்' போல் வீங்க வைக்கிற கலை கைவந்தவன் தான். ஆனால் அன்று கை வண்ணம் காட்டும் எழுச்சி அவனுக்குப் பிறக்கவில்லை ! 'இவர் ஒரு அத்தான். இவர் ரொம்ப நல்லவர்' என்று மீண்டும் பாடம் படித்த சிறுமி அவன் மீது சாய்ந்து 'பளிச்' என்று முத்தமிட்டாள்' அவன் கன்னத்திலே. அவன் அதை எதிர் பார்க்கவில்லை. திடுக்கிட்டவன் தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் சிரித்தபடி ஓடிப்போய் விட்டாள்.

அப்பொழுது அவள் ' அறியாச் சிறுமி ' என்று சொல்ல முடியாது. இந்தக் காலத்துப் பெண்கள் இரண்டு மூன்று கூடிவிட்டால் என்ன எழவைப் பற்றிப் பேசிச் சிரித்து விளையாடி மகிழ்ந்து போகின்றன, தெரியாதா! சுந்தரம் அதை நன்கறிவான். 'மூதி! கண்ட புள்ளேகளோ டெல்லாம் சேர்ந்து........ அவனுக்கு எரிந்து விழுந்து ஏச வேணும் என்ற ஆசை பிறந்தது. ஆனால் பாதியிலேயே மக்கி விட்டது. அவள் போக்கு அவனுக்கு இனிமையும் மகிழ்வும் கொடுத்தது. அவளை அவன் குறை கூறவில்லை. அதைப்பற்றி யாரிடமும் சொல்லவுமில்லை.

இச்சம்பவம் என்றுமே குமரி ரத்தினத்தின் இன்பக் கனவுக்கு எண்ண ஊற்று. அதை நினைத்ததுமே அவள் கன்னங்கள் ரத்தச் சிவப்பு கொள்ளும். செவ்விய இதழ்களில் சிறு நகை பூக்கும். கண்களில் ஒளி துள்ளும், தன்னையாரும் கவனிக்கவில்லேயே என்று அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்துக் கொள்வாள். தனியாக இருந்தாலும்கூட, தன்னை எவரேனும் பார்த்து விட் டார்களோ என்ற தவிப்பு எழும் அவளுக்கு. சிலசமயம் அவள் அகப்பட்டுக் கொண்டாள். அதனால்தான். தன்னிலே தானேயாகி, தன் நினைவில் மகிழ்ந்து போன போது அவள் சூழ்நிலை மறப்பது இயல்பு. அவளேயே கவனித்திருந்த அன்னை கேட்டு விட்டாள். 'என்னட்டீ ? என்ன நீயே சிரிச்சுக்கிடுதியே?' அவள் என்னத்தைச் சொல்வது? ' ஒண்ணுமில்லே ' என்றாள். 'ஒண்ணுமில்லாமலா சிரிச்சே? ஒண்ணுமில்லாமச் சிரிக்கதுக்கு உனக்கென்ன பைத்தியம் புடிக்க ஆரம்பிச்சுட்டுதா?' என்று கேட்டாள். நல்ல வேளையாக அவள் படித்த கதை கைகொடுத்தது. 'ஒரு கதை அம்மா காலேயிலே படிச்சது. இப்ப நினைப்பு வந்தது. சிரிச்சிட்டேன்’ என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டாள். அன்றிருந்து ஜாக்கிரதை எனும் பண்பு அவளை விட்டுப் பிரியாத நல்ல துணையாகப் பற்றிக்கொண்டது !

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு--சின்னஞ்சிறு வயதினிலே தன் கன்னஞ் சிவக்க அவன் முத்தமிட வேண்டுமென எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்ததினலோ என்னவோ, தானே உளங்கனிந்து அவன் கன்னத்தில் முத்தம் பறித்த சம்பவத்திற்குப் பிறகு---ரத்தினம் 

அவனைப் பிரிய நேர்ந்தது. அவன் 'மேல் படிப்பு'க்காக டவுனுக்குப் போனான் படித்துப் பாஸ் பண்ணியதும் உத்தியோக வேட்டையில் ஈடுபட்டு, ஏதோ ஒரு வேலை பெற்று எங்கோ ஒரு இடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அதன் பின் அவன் அடிக்கடி ஊர் வருவதில்லை. எப்பவாவது வந்தாலும் ரொம்ப நாட்கள் தங்க முடிவதில்லை. தங்கியிருந்த சமயங்களில் ரத்தினத்தை அவன் கவனித்தது உண்டு. என்ன ரத்னம்? செளக்கியம்தானா? என்று தான் கேட்க முடிந்தது. அவளைக் கேலி செய்து அழவைத்த காலம் போய்விட்டது என்றே தோன்றியது. வாழ்க்கை வெயில் அவன் உள்ளத்தை வதங்கச் செய்து கொண்டிருந்தது.

இந்தச் சமயம் அவன் வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. அவன் அங்கு வந்து இரண்டு வருஷங்களுக்கு அதிகமாகவே ஆகியிருக்கும். வேலைத் தொல்லை. ஒய்வு கிடைப்பதில்லை. இதனாலெல்லாம் அவன் அடிக்கடி வந்து போக முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். -

'பிள்ளைகளுக்கென்ன வயசு வருதா, போகுதா? அததைச் செய்யவேண்டிய காலத்திலே முடிச்சு வச்சிர வேண்டியது நம்ம கடமை. அப்புறம் அவுக பாடு. ரத்தினத்துக்கும் வயசு பதினெட்டாச்சு, அவனுக்கும் வயசாச்சு. மாப்பிள்ளை கை வசமே இருக்கும்போது காலா காலத்திலே கல்யாணத்தைப் பண்ணாம இருந்தா என்ன அர்த்தம் ?'--- இப்படிக் கேட்டார்கள் ஊர்க்காரர்கள். ரத்தினத்தின் அம்மா இருக்கிறாளே---அவனுடைய அத்தை அவள் அந்தராத்மாவும் திமிஷத்துக்கு நிமிஷம் இதையே கேட்கத் தொடங்கியது. இனியும் காத்திருப் பது தப்பு என்ற ஞானோதயம் பிறந்ததனால், இந்த வருஷம் எப்படியும் கல்யாணத்தை முடித்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள் அவள். 

அவனுக்கு அவள் தீர்மானத்தை அறிவித்தபோது வழக்கமான 'இப்ப என்ன அவசரம்?' என்கிற பதிலை அனுப்பி வைத்தான். செல்லுபடியாகவில்லை. 'அடுத்த வருஷம் அவசியம் கல்யாணம் செய்து கொள்கிறேன். இப்பொழுது பொருளாதார நிலை சரியாக இல்லை' என்ற காரணம் கூறி அவன் வழ வழ யென நாலைந்து பக்கம் எழுதினான். அவனுடைய பொருளாதார மாந்தத்துக்கு ஒரு விளக்கெண்ணெய் சிகிச்சையை பலமாகச் சிபாரிசு செய்தாள் அத்தை. -

உன் இஷ்டம்போல் கல்யாணத்தை அடுத்த வருஷமே வைத்துக் கொள்ளலாம். ரத்னத்தின் ஜாதகத்தைப் பார்த்ததில் இப்பொழுது நிச்சயதார்த்தமாவது செய்து விடவேணுமென்று சொல்லுது ஊர்க்காரர்களும் சொல்லுகிறார்கள். நாளைக்கு நாலு பேரு நாலைச் சொல்லும்படி ஆகிவிடப்படாது. அதனாலே அவசியம் உடனே புறப்பட்டு வரவேண்டியது. மற்றவை நேரில்'-இந்த விஷயத்தை தனக்கே உரிய 'வழவழா கொழ கொழா’ப் பாணியில் மூன்றரைப் பக்கக் கடிதமாக எழுதச் செய்து அனுப்பி விட்டாள்,

'அத்தை சொல்வதும் சரிதான். இந்த வருஷம் நிச்சயம் செய்து விட்டு, பிறகு கல்யாணத்தை முடித்துக் கொள்ளலாம். ஊருக்குப்போயிட்டு வந்ததும் நாளாச்சுல்லா. 'போவமே' என்று புறப்பட்டு விட்டான்.

வழியெல்லாம் அத்தை மகள் ரத்தினத்தைத் தவிர வேறு யாரைப்பற்றி, அல்லது எதைப்பற்றி, அவனால் எண்ண முடியும்?

இங்கு வந்தால் அவள் 'கண்ணாமூச்சி' விளையாடுகிறாள் பாருமேன் என்று அலுத்துக் கொண்டது மனம். 

"https://ta.wikisource.org/w/index.php?title=அத்தை_மகள்/2&oldid=1068646" இருந்து மீள்விக்கப்பட்டது