அத்தை மகள்/3

விக்கிமூலம் இலிருந்து

3

சுந்தரம் உண்ட கிரக்கத்தினால் கண்மூடிக் கிடந்த போது கனவுக் குரல் போல் ஒலித்தது. 'இவர்தான். அத்தான். இவர் ரொம்ப நல்லவர். இவர் இன்றுதான் இங்கு வந்தார்’ என்ற பேச்சு.

மன ஆழத்திலே அமுங்கிக் கிடந்த பழங்கால நினைவின் கனவு விழிப்போ என்று நினைத்த சுந்தரம் கண்களைத் திறந்தான். 'களுக்'குச் சிரிப்பு உதிர்ந்தது அந்த அறையில், கைவளைகள் கட்டியம் கூறின, கன்னி ஒருத்தி அங்கு நிற்கிறாள் என்று.

அவன் கவனித்தான். ஏமாறவில்லை. அவள்தான் நின்றாள், எழில் நிறைந்த காவியமாய்; சிரிப்பு சிந்தும் உயிர் ஓவியமாய் !

அவன் எழுந்து உட்கார்ந்தான். சிரித்தபடி 'அழகுத் தெய்வம் மனமிரங்கி அருள்புரிய வந்துவிட்டது. போலிருக்கிறதே ! திவ்ய தரிசனம் தரலாகாதா என்று நான் பாடவேணுமோ என்று எண்ணினேன். எப்படிப் பாடுவது என்றுதான் தெரியவில்லை' என்றான்.

முகம் புதுமலர் போல் சோபிக்க, அவள் தலை குனிந்து நின்றாள். அவள் அழகை விழுங்கியவாறு அவன் சொன்னான்; சத்தம் கேட்டதும், சொப்பனமோ என்றுதான் நினைத்தேன். பிறகுதான் புரிந்தது நீ அதை மறக்கவேயில்லை போலிருக்கு?'

'எப்படி மறக்கமுடியும்? நீங்கள்தான் என்னை மறந்துவிட்டீர்கள்' என்றாள் அவள், கோணப்பார்வையை கண்களில் நோக்கி. அவள் கைவிரல்கள் வளையல்களோடு விளையாடிக்கொண்டிருந்தன.

'ஹஹ், மறக்கிறதாவது?'

'மறக்காமல் இருந்ததனால்தான்.இவ்வளவு சீக்கிரம் வந்தீர்களாக்கும் !' 

'பின்னே ! இல்லைன்னா இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ கழிச்சுத்தானே வருவேன். அநேகமா வராமலே போனுலும் போயிருப்பேனே !' என்றான் அவன் குறும்பாக.

'அடா அடா! என்ன கருணை ! எவ்வளவு அன்பு !’ என்று பரிகாசம் பேசினாள் அவள், அழகாகத் தலையசைத்து.

'அது சரி, ரத்னம், இப்ப இவர் ரொம்ப நல்லவர்னு பாடம் படித்தாயே ! முந்தி மாதிரி நான் முழிக்காமல் கண்ணை மூடிக்கிட்டே யிருந்தால் நீ முன்பு செய்தது போலவே,,....'

'போங்க! என்று கொஞ்சும் குரலில் குழறினாள் கோதை ரோஜாப் பூ மாதிரித் திகழ்ந்த அவள் கன்னங்கள் செம்பருத்திப்பூ ஆகிவிட்டன, வெட்க மிகுதி யினால். அவள் புன்னகை நெளிந்த உதடுகளைக் கடித்துக் கொண்டே, கள்ளவிழிப் பார்வை சிந்தி, வளைக் கலகலப்பு சிதறி, 'பாதரசம் சலிங்--ஜலிங்' என இசை பாடத் துள்ளி ஓடி மறைந்தாள் ரத்தினம்.

அவள் செல்லும் ஒயிலை ரசித்திருந்த சுந்தரம் * ஐயோ அவளைத் துரத்திவிட்டேனே! இன்னும் கொஞ்சநேரம் நின்று இனிமையாகப் பேசியிருப்பாளே” என்று வருந்தினான். 'அவள் அதை மறக்கவில்லை பார்த்தியா!.., ஆமாம். அவள் கேட்டது சரி. எப்படி மறக்கமுடியும்? ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் என் நினைவில் பசியதாய் பதிந்துள்ளதே. அவள் மனதில் இன்னும் அழுத்தமாகப் படிந்திருக்கும்’ என்று நினைத்தான்.

'இப்பொழுது அவள் முகம் செக்கச் சிவந்து செவ்வரளிப்பூ மாதிரி ஆச்சுதே. அதே மாதிரித்தான் முன்பும் ஒரு சமயம் அவள் முகம் சிவந்தது. ஆனால் முன்பு  இவ்வளவு அழகாகச் சோபித்திருக்கவில்லை அத் தோற்றம்,....உம், அதை அவளும் மறந்திருக்க முடியாதுதான்' என்று எண்ணம் அசைந்து உருண்டது.

அதை அவளும் எண்ணிப் பார்த்தது உண்டு.

அப்போது அவளுக்குப் பதினான்கு வயது. அவனுக்குப் பதினேழோ என்னவோ, பள்ளிப்படிப்பை முடித்துக் கட்டிவிட்டு வேலையற்றிருந்த இடைக்காலம் அது. அவர்கள் வீட்டுத் தோட்டம்தான் காட்சி நிகழ்ந்த இடம். பல பெண்களும் இரண்டு மூன்று சிறுவர்களும் விளையாடிக்கொண்டிருக்தார்கள். அவன் சுவர் ஒரத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தான். விளையாடிக்கொண்டிருந்த ரத்தினம் ஆட்டத்திலிருந்து விலக நேர்ந்தது விலகிய அவள் தனியாக நின்றிருக்கலாம். அல்லது வேறு எங்காவது உட்கார்ந்திருக்கலாம். ஆனால் அவள் என்ன செய்தாள்? அவன் அருகில் காலியாகக் கிடந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தாள். சுகமாகச் சாய்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவன் தவறாக எதுவும் நினைக்கவில்லை. அவளும் விபரீதமாக எதுவும் எண்ணவில்லை. ஆயினும், ஆடிக்கொண்டிருக்த பெண்களில் ஒரு பெண் விளையாட்டாகக் கத்தினாள்: 'ஒஹோ, பொண்ணு மாப்பிளே!; பொண்ணும் மாப்பிள்ளையும் உட்கார்ந்தாச்சு. பாலும் பழமும் எடுத்து வாங்கோ. பாலும் பழமும் கொடுங்கோ பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் !' மற்றப் பிள்ளைகளும் கைகொட்டிச் சிரித்து ஆரவாரித்தன. அவன் அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் 'குப்'பென்று ரத்தம் கட்டிவிட்டது. வெட்கம். எனினும் அவள் எழுந்து ஓடவில்லே. நகரவேயில்லை. ஆமா, அப்படித்தான். என்ன செய்யணுமுங்கே ?' என்றாள்--- நிதானமான குரலில், 'அஞ்சும் மூணும் எட்டு' என்றான் ஒரு பயல், 'அத்தை மகளைக் கட்டு” என்றது வேறொரு குரல். 'பொண்ணு---மாப்பிள்ளை' என்று கேலியைத்  துவக்கி வைத்தவள்; 'அத்தை மகனைக் கட்டு, நீ அத்தை மகனைக் கட்டிக்கோ என்று கத்தினாள். அவள் முகம் அதிகம் சிவந்தது. சிவந்த முகத்திலே வெட்கம் தீட்டிய சிவப்பு நன்றாகப் பளிச்சிட்டது. அப்பொழுது கூட அவள் எழுந்திருக்கவில்லை. அவனைப் பார்த்தாள். அவனுக்கோ மிகுந்த சங்கடம். 'போங்கடி மூதேவிகளா!' என்று சீறியபடி எழுந்தான். அவன் அடிக்க வருகிறான் என்று எண்ணிய பெண்கள் சிதறி ஓடினார்கள். அவனோ மெளனமாக வெளியேறினான்....

அதை அவன் மறக்கமுடியாது.

அவளும் மறக்கவில்லை. 'பொண்ணும் மாப்பிள்ளையும்தான். அதற்கென்ன ?' என்றுதான் அவள் உள்ளம் கேட்கும். வாழ்வில் அவனும் அவளும் கணவனும் மனைவியுமாக வேண்டியவர்கள்---ஆகப் போகிறவர்கள் என்று உறுதிப்படுத்த 'நிச்சயதார்த்தம்' நடந்த சுபவேளையிலே அவன் முந்திய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டான். அவன் மன அரங்கிலும் அந்நினைவு நிழலாடியது. அவள் வெற்றிச்சிரிப்புடன் அவனை நோக்கினாள். அவன் கண்கள் அவளை ரசித்தன. அவன் சிரித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அத்தை_மகள்/3&oldid=1068648" இலிருந்து மீள்விக்கப்பட்டது