அந்தமான் கைதி/முகவுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

முகவுரை


முத்தமிழ்க் கலா வித்வ ரத்னம்.

ஒளவை. டி. கெ. ஷண்முகம்

“அவ்வையகம்”

139, பி. லாயிட்ஸ் சாலே

சென்னை-6.


கவிஞர் திரு. கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘அந்தமான் கைதி’ மீண்டும் புதிய பதிப்பாக வெளிவருவதை அறிந்து மகிழ்கிறேன்.

'அந்தமான் கைதி’ 1945-இல் எங்களால் அரங்கேற்றப் பெற்ற நாடகம், தமிழ் நாடக உலகில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த நாடகமென்று பேரறிஞர்கள் பலரும் இதனைப் பாராட்டியுள்ளனர். சமூக நாடக முன்னேற்றத்திற்கு நாடகக் குழுவினரை ஊக்குவித்த பெருமை அந்தமான் கைதிக்கே உரியது.

தமிழகத்திலும், பாரதத்தின் பிற மாநிலங்களிலும், தமிழர்கள் வாழும் பிற மொழி வழங்கும் நாடுகள் பலவற்றிலும் இந்நாடகம் நடிக்கப் பெற்றுள்ளது.

நாடகத்தைக் காண வந்த மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் ஒரே நாளில் தொடர்ந்து இரண்டுமுறை நாங்கள் நடித்த நாடகம் ஒன்று உண்டென்றால் ‘அந்தமான் கைதிக்கே’ அத் தனிச்சிறப்பு உரியது.

1952-இல் முதன் முதலாகத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் நாடக நூலுக்கென்று பரிசு வழங்க முன் வந்தபோது அப்பெருமையும் பெற்றது ‘அந்தமான் கைதி’ தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் சிறந்த நாடக ஆசிரியருக்குரிய விருதை இதன் ஆசிரியர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தனை பெருமைகளுக்கும் உரிய அந்தமான் கைதி நாடகம். இதுவரையில் ஆயிரக்கணக்கான முறை மேடைகளில் நடிக்கப் பெற்றதோடு திரைப்படமாகவும் வெளிவந்து இலட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்துள்ளது என்பது பாராட்டத்தக்கதாகும்.

ஆசிரியர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல்லாண்டுகள் நடிகராக இருந்து நாடக நுணுக்கங்களை நன்கறிந்தவர். அவர் மீண்டும் பல புதிய நாடகங்களைத் தமிழகத்திற்கு ஆக்கித் தரவேண்டும் என்ற என் வேண்டுகோளையும் தெரிவித்துக் கொண்டு அவருக்கு நல்வாழ்த்துக் கூறுகிறேன்.

அன்பன்

தி. க. ஷண்முகம்

26—5–67.