அந்தமான் கைதி/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchகாட்சி 10.

இடம் : நடராஜன் வீடு.
காலம் : பகல்
 

பாத்திரங்கள் : நடராஜன், காமாட்சி, முனியாண்டி.

[நடராஜன் காமாட்சி இருவரும் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; முனியாண்டி பேசிக் கோண்டே வருகிறான்.]

முனி : என்ன அநியாயம் என்ன அக்ரமம் உம், யாரையும் சொல்கிறத்துக்கில்லே, ஊரு அப்படிக் கெட்டுப் போச்சி. என்னமா வாழ்ந்த குடும்பம்! எத்தினி கப்பல் ஓடிச்சி எல்லாம் போராத காலம். அந்த அய்யா இருந்த காலத்திலே, இந்த சேர்வைக்கு எவ்வளவு உபகாரம் செய்திருப்பாரு; எவ்வளவு பணங் குடுத்திருப்பாரு. அதையெல்லாம் நெனச்சுப் பாக்காமே, அந்தப் படுபாவி திடீருன்னு இப்படி வீட்டே ஏலத்துக்குக் கொண்டாந்துட்டானே; அவன் உருப்புடுவானா?

காமா : அதை யெல்லாம் சொல்லி இப்ப என்ன பிரயோசனம்? விடிஞ்சா அமீனா போடு போடுன்னு வந்து வீட்டே ஏலம் போடப் போறான். ஏம்பா முனியாண்டி! இதுக்கு யோவது ஏதாவது ஒருவழி செய்யப்படாது? புள்ளேதான் எனக்கு அணிப் புள்ளையாப் பொறந்திருக்கு. இதுலே சொல்லப் போன...வீராப்பு வேறே; இந்தச் சமயத்திலே எங்க அண்ணனேப் பகைச்சுக்காமே இருந்தாலும் (முகத்தில் முந்தானையை வைத்து அழுகிறாள்.)  நட : அவனும் ஒன்றும் சும்மா கொடுத்துவிட மாட்டான். இந்தப் பிரமாத வீட்டுக்காக ஒரு பெண்னுடைய வாழ்க்கையைக் கெடுத்து விடுவதா என்ன? இந்த வீடு போனலும் சரி! அத்துடன் நீயும் போய் விட்டாலும் சரி, அதற்காக நான் கவலைப் படப் போவதில்லை.

முனி : தம்பி! நீங்க என்ன இப்படிக் கோவிச்சிக்கிறீங்க? என்னமோ அவுங்க வயித்தெரிச்சல் தோணினதைச் சொல்றாங்க, எல்லாம் போயி இந்த வீடு ஒன்னு தானே!

நட : ஓய்! உன்னை ஒன்றும் கேட்கவில்லை. இது எங்கள் குடும்ப விஷயம், நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ.

முனி : பாத்தியா! பாத்தியா கொஞ்சங்கூடப் பொறுமையில்லையே! நீ உன் மேலேயே குத்தத்தே வச்சிக்கிட்டு இப்படி சொல்றவங்க கிட்டே எல்லாங் கோவிச்சிக்கலாமா?

நட : என்மேலே என்னைய்யா குற்றம்? குற்றமாம் குற்றம்!

முனி : ஆமாம், நீ ஒரு வேலை வெட்டியைப் பார்த்துக்கிட்டு இருந்தா இந்தக் கடங்காரப்பய, கிட்டே வருவானா?

நட : வேலை கிடைத்தால் நான் வேண்டாமென்றா சொல்லுகிறேன்? அப்படி நான் சோம்பேறியாக இருக்க விரும்பவில்லையே!

முனி : என்னமோப்பா சரீன்னா எனக்குத் தெரிஞ்ச யாருக்கிட்டேயாச்சும் சொல்லிக்கூட ஏதாவது ஏற்பாடு செய்யலாம். ஆன அந்த வேலை யெல்லாமா உனக்குப் பிடிக்கும். நட: அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை. என் குடும்ப நலத்துக்காக நியாயமான எந்த வேலையும் செய்யத் தயார்.

முனி: எனக்குத் தெரிஞ்ச செட்டியார் ஒத்தர் நேத்துக் கூட ஏங்கிட்டே அவரு கடைக்கு ஒரு கணக்கப் பிள்ளை வேணும் இன்னு சொன்னாரு. அடுத்தவாரம் கப்பல்லே தான் ரெங்கோனுக்குப் போறேன்னு சொன்னாரு. ஒரு தரம் போயிட்டு வந்துட்டா, அப்புறங் கேக்க வேண்டாம். ஆனல் தூரந்தொலையா இருக்குமேன்னுதான் தம்பிக்கு யோசனையா இருக்கும்.

நட: அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்படி இருந்தால் கொஞ்சம், தயவுசெய்து அவரிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்களேன்.

காமா: நாளைக்கு நடக்கவேண்டிய காரியத்துக்கு ஒன்னேயுங் காணுமே. அதெ விட்டுட்டு என்னென்னமோ மேலேக்கு நடக்கிறதெப் பத்திப் பேசுறீங்களே.

முனி: அதென்னங்க பிரமாதம். செட்டியாரு நல்ல மனுஷன், அதுலேயும், நான் சொன்னத் தட்டமாட்டாரு மொதல்லே 100, 200 முன் பணமா வாங்கி இப்பக் கட்டி விட்டுப் பாக்கியை மாசா மாசம் கொஞ்சங் கொஞ்சமாகக் கட்றேன்னு சொன்ன சேர்வை கேக்காமேயா போயிடுவான்? அப்படி நான் சொல்லியும் அவன் கேக்கலேன்னா அவன் இந்த ஊருலேருந்து பொளேச்சிடுவானா, என்ன?

காமா: என்னமோப்பா, நீயாவது எங்க விஷயத்திலே இவ்வளவு தூரம் எரக்கங்காட்டி ஒத்தாசை செய்யறேங்கிறியே, நீயும் உன் பிள்ளெகுட்டியும் ஜென்ம ஜென்மத்துக்கும் நல்லா இருக்கணும்.

நட : நீங்க இந்தச் சமயத்திலேயே இந்த உதவியைச் செய்தால் இதை நான் எப்பொழுதும் மறக்க முடியாது.

முனி : அடடே இது என்னங்கப் பிரமாதம். சரி, நான் போய் செட்டியாரைப் பார்த்துக் காரியத்தை முடிச்சிக்கிட்டு விளக்கு வைக்கிறத்துக்குள்ளே வந்திடுறேன். ஆன நானும் பிள்ளெக் குட்டிக்காரன். நமக்கு எங்கேயும் குடுக்கிற மாதிரி ரூபாய்க்கு கால் ரூவா கமிசன் உண்டு. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன...அப்ப...நான் வரட்டுங்களா?

நட : ஆகா! அதெல்லாம் உங்கள் மனம்போல் செய்வோம். நீங்கள் மட்டும் எப்படியாவது காரியத்தை......

முனி : அடாடா இந்த முனியாண்டிக்குச் சொல்லவா வேணும். நான் வர்ரேனுங்க, ம்............ ஏதாவது சில்லரை...

நட : எல்லாம் காரியம் முடியட்டும்; பிறகு......

முனி : மகமாயி...... (போகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/10&oldid=1073496" இருந்து மீள்விக்கப்பட்டது