அனிச்ச மலர்/14

விக்கிமூலம் இலிருந்து

14

றுதிகள் மெலிந்து சந்தர்ப்பங்களுக்கு ஒத்துப் போவது என்னும் பலவீனமும், தளர்ச்சியும் தன்னிடம் எப்போது ஆரம்பமாயின என்பது சுமதிக்கே புரியாததாக இருந்தது. சினிமா ஆசை என்ற ஒரே கோணத்தில் உயரப் பறப்பதற்காக வேறு பல உயரங்களிலிருந்து தான் கீழே விழுந்து விட்டோமே என்பதாக உணர்ந்தாள் அவள். மானக்கேடான விஷயங்களைப் பொறுத்து ஏற்பட வேண்டிய கூச்சமோ, ரோஷமோ, ஆத்திரமோ இப்போ தெல்லாம் தன்னிடம் ஏற்படுவதே இல்லை என்பது அவளுக்கே புரிந்துதான் இருந்தது. மேரி படிப்படியாக தன்னை ஜெயித்து விட்டாள் என்பதைச் சுமதி உணர்ந்தாள்.

வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்புக்குப் போய் விட்டு வந்த மறுநாள் சுமதியிடம் ரொக்கமாக ஐநூறு ரூபாய் இருந்தது. பகல் இடைவேளையின் போது மேரியை வற்புறுத்தித் தன் அறைக்கு அழைத்து வந்து அவளிடம் கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் திருப்பிக் கொடுத்தாள் சுமதி. இப்ப ஒண்ணும் அவசரல் லேடீ...! ஸ்டார் ஆகியிருக்கே. உனக்கு நிறையச் செலவுகள் இருக்கும், வச்சுக்கோ” என்று அதை வாங்கிக் கொள்ளாமலே மேரி சுமதியிடம் மறுபடி திருப்பிக் கொடுத்துவிட்டாள்.

அதற்குப்பின் தரணி ஸ்டுடியோவில் ‘ரஷ்’களை போட்டுப் பார்த்த தினத்தன்று சுமதி மேரியோடுதான் அங்கே போயிருந்தாள். அன்றும் எப்படியாவது மேரியிடம் கடன் பட்டதை அடைத்துவிட முயன்றாள் சுமதி ,

“உனக்கு வேறு நினைவே இருக்காதா சுமதி? எப்பப் பார்த்தாலும் கடன் கடன்னே சும்மா அனத்திக்கிட்டிருக்கே. ஃபர்கெட் இட் அட் ஒன்ஸ். நான் உனக்குக் கடனே கொடுக்கலேன்னு வச்சுக்க, கிஃப்டாத்தான் கொடுத்திருக்கேன்” என்று அப்போதும் சுமதியின் வாயை அடைத்துவிட்டாள் மேரி.

வெளிப்புற காட்சியில் எடுத்த ரஷ்களைப் போட்டுப் பார்த்தபோது, முகமே தெரியாமல் முதுகு மட்டும் தெரியும் படியாக எடுத்தது தவிர, அதற்கு முன்னும் பின்னுமாகச் சில முக்கால் நிர்வாணப் படங்களை முகமும் தெரியும் படியாகவே அந்தக் காமிராமேன் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் எடுத்திருப்பது தெரிந்தது. காமிராமேன் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் எடுத்ததா, அல்லது தயாரிப்பாளரே சொல்லி எடுக்கச் செய்ததா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சுமதி அந்தப் படங்களைப் பற்றி மிகவும் பயந்தாள். எவ்வாறாவது அவர்களிடம் சொல்லி அந்த ‘நெகடிவ்’களை அழித்துவிடச் செய்ய வேண்டும் என்ற நினைத்தாள்

சுமதி தன் சந்தேகத்தையும், பயத்தையும் மேரியிடம் தெரிவித்தபோது “அப்படியெல்லாம் தப்பாக எதுவும் செய்து விடமாட்டார்கள். பயப்படாதே” என்றாள் அவள். மேரியிடம் அவள் கடனைக் கொடுத்துவிட்டுக் கணக்குத் தீர்த்து முடித்துவிடவேண்டும் என்றுதான் சுமதி வைராக்கியமாக இருந்தாள். ஆனால் அந்த வைராக்கியம் எடுபடவில்லை. மேரியை நேரில் பார்த்ததும் அவளுடைய உறுதிகள் எல்லாம் கரைந்தே போய்விட்டன.

“சீக்கிரமே இன்னொரு அவுட்டோர் ஷுட்டிங்குக்காகக் காஷ்மீருக்கே உன்னைக் கூட்டிக்கிட்டுப் போகணும்னு கன்னையா சொல்றாரு. இங்கேருந்து டில்லிக்குப் ப்ளேன்ல போயி ஒருநாள் தங்கியபின் அங்கிருந்து அப்புறம் காஷ்மீருக்குப் பறக்கணும்; நானும் கூட வந்தாலும் வருவேன்.”

“ஏண்டி மேரீ! நாம ரெண்டு பேரும் காலேஜிலே படிக்கிறோம்கிறதே உனக்கு நினைவில்லையா? காஷ்மீர், கன்னியாகுமரின்னு இப்பிடியே போய்க்கிட்டிருந்தாப் படிப்பு என்னடி ஆகிறது ?”

"ஹாங்... பெரிய படிப்பு இது..? ஸ்டாராகி லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கப் போறவளுக்குப் படிப்பைப் பத்தி என்னடி கவலை? படிச்சவள்ளாம் ஸ்டாராயிட முடியுமா?” என்று மேரி அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டாள். சுமதியால் அப்போது அவளை மறுத்து ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் அவள் மனம் என்னவோ பதறத்தான் செய்தது.

காமிராவுக்குமுன் முகத்தைக் காட்டுகிற ஆசையும், ஸ்டாராகிற பித்துமாகச் சேர்ந்து சுமதியை அறவே படிப்பில் நாட்டமில்லாதவளாகச் செய்துவிட்டன. அந்த வார இறுதியில் அம்மா மதுரையிலிருந்து சுமதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். -

'என் பக்கத்திலிருந்து இங்கே உள்ளூரிலேயே படிக்க விட்டால் செல்லம் கொடுத்து நானே உன்னைக் கெட்டுப் போகச் செய்து விடுவேனோ என்று பயந்தேன். செலவானாலும் பரவாயில்லை என்று உன்னைச் சென்னைக்கு அனுப்பிய காரணமே அதுதான். இதை நீ நன்கு புரிந்து கொண்டு சிரத்தையாகப் பாடுபட்டுப் படிக்க வேண்டும். அடிக்கடி சினிமாவுக்குப் போகாதே. சினிமாப் பத்திரிகைகளைக் கூடப் படிக்காதே. கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்து. முதல் வகுப்பில் தேர்ச்சி பெறப் பார்?' என்று மாற்றி மாற்றி அறிவுரைகள் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருந்தன. புதிதாக ஒன்றுமில்லை. வழக்கமான உபதேசம்தான்.

ஆனால் அடுத்த வார இறுதியிலேயே சினிமாத் தயாரிப்பாளர் கன்னையா "வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்காக காஷ்மீர் போகலாமா?” என்று சுமதியைக் கேட்டபோது அவளால் மாட்டேன் என்ற சொல்ல முடியவில்லை. மேரிதான் வந்து கூப்பிட்டாள். சுமதிக்கு முழுச் சம்மதம் என்றாலும்,

"காலேஜிலே என்னடி சாக்குச் சொல்லி லீவு கேட்கிறது?" என்று மேரியிடம் பதிலுக்கு வினவினாள் அவள்.

"இங்கே உள்ளூர்லே யாருக்காவது உடம்பு சுகமில்லேன்னு சாக்குப் போக்குச் சொன்னால் பத்து நாள் லீவு வாங்க முடியாது. துணிஞ்சு மதுரையிலே உங்கம்மாவுக்கே உடம்பு செளகரியமில்லேன்னு ஒரு லீவு லெட்டர் எழுதி நீட்டு. வார்டனோ, பிரின்சிபால் அம்மாளோ தட்டிச் சொல்ல முடியாது” என்று மேரியே ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாள்.

மேரி சொல்லி கொடுத்தபடியே லீவு லெட்டர் எழுதி லீவும் கொடுத்துவிட்டார்கள். ஆனால் மாலதிசந்திரசேகரன் சுமதியைக் கூப்பிட்டு எச்சரித்தாள்;

"சுமதீ! நீ எப்போ தேடினாலும் ரூமிலேயே இருக்கிறதில்லே. சதா எங்கேயாவது சுத்திக்கிட்டிருக்கே படிப்பிலே நாட்டம் இருக்கிறதாவே தெரியலே. பத்து நாள் லீவு குடுத்திருக்கோம்கிறதுக்காகப் பத்து நாளுமே வராமல் இருக்கணும்னு அவசியம் இல்லே. அம்மாவுக்கு உடம்பு சரியானதும் உடனே புறப்பட்டு வந்துடணும் நீ, வேணும்னா நான்கூட, உங்கம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.”

”நீங்க ஒண்ணும் எழுத வேண்டாம் ! நானே அம்மாவுக்கு உடம்பு சரியானதும் அதிக நாள் தங்காமப் புறப்பட்டு வந்துடறேன்” என்று வார்டனிடம் உறுதி சொன்னாள் சுமதி.  காஷ்மீரில் எடுக்கப் போகிற படப்பிடிப்பில் தனக்கு என்ன வேலை இருக்கிறது என்ற தெரிந்து கொள்வதற்காகச் சுமதி மேரியை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தாள்.

“வேலை எல்லாம் அங்கே புறப்பட்டுப் போனால் தானே வரும். ஒரு யூனிட்டா எல்லாரும் புறப்பட்டுப் போறாங்க - கன்னையா நம்மையும் கூப்பிடறாரு. அலுங்காம ப்ளேன்ல போகப்போறோம்” என்று பதில் சொல்லி பூசி மெழுகிவிட்டாள் மேரி.

அம்மாவுக்கு உடல் நலமில்லை என்று பொய் சொல்லிவிட்டுக் காஷ்மீர் புறப்பட்டுப் போவது சுமதியின் மனத்தை உறுத்தினாலும் ஆசைதான் வென்றது. பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லாம் கூட வருகிறார்கள் என்பதால் அவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை வேறு தூண்டியது. சுமதி காஷ்மீர் போவதற்கு முன் பல மாலை வேளைகளில் ’டான்ஸ்’ கிளாஸுக்கு வேறு போய் வந்தாள். அவள் நடனம் கற்கும்போது தயாரிப்பாளர் கன்னையாவே கூட இருந்து அவளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்.

"மாஸ்டர்! இவளுக்கு எல்லா டான்ஸும் கத்துக் குடுத்துடுங்க. பரத நாட்டியம், மணிபுரி, கதக், காபரே எல்லாம் தெரிஞ்சாத்தான் சினிஃபீல்டிலே உபயோகமா இருக்கும்” என்று கன்னையா டான்ஸ் மாஸ்டரிடம் சொல்லி வைத்தார்.

"கொஞ்சங்கூடக் கவலைப்படாதீங்க புரொட்யூஸர் சார். இவளுக்கு எதைக் கத்துக் குடுத்தாலும் பிரமாதமா வரும் ஜமாய்ச்சுப்பிடலாம்” என்றார் மாஸ்டர்.

காஷ்மீர் புறப்படுவதற்கு முந்தியதினம் பட்டுப் புடவைகள் செலக்க்ஷனுக்காகத் தயாரிப்பாளர் ஜவுளிக்கடைக்கு போகப் போவதாகவும், சுமதியும் வரவேண்டும் என்றும் மேரி வந்து கூப்பிட்டாள். சுமதியால் மறுக்கமுடியவில்லை. பாண்டிபஜாரில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக்கடையில் போய் பட்டுப்புடவை  வாங்கினார்கள் அவர்கள். வேறு யாரும் வரவில்லை. மேரி, தயாரிப்பாளர் கன்னையா, சுமதி மூவரும் மட்டுமே போயிருந்தனர். சுமதிக்காக அரை டஜன் பட்டுப் புடவைகள் வேறுவேறு நிறங்களில் வேறுவேறு டிசைன்களில் எடுத்தார் தயாரிப்பாளர்.

கடையில் எல்லாம் முடிந்து வெளியே வரும்போது ஒர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. இவர்கள் வெளியே வருகிற நேரத்துக்கு வார்டன் மாலதி சந்திரசேகரன் புடவை வாங்குவதற்காகவோ, என்னவோ அதே கடைக்குள் நுழைந்தாள். சுமதி அவளைப் பார்த்தது போலவே அவளும் சுமதியை பார்த்துவிட்டாள். ஆனால் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாதது மட்டுமில்லை. முகமலர்ச்சி கூடப் பரஸ்பரம் காட்டிக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் சில சினிமாப் பத்திரிகைகளில் அவள் பயந்தது போலவே படங்களும், செய்தியும் பிரசுரமாகிவிட்டன.

'தயாரிப்பாளர் கன்னையா கண்டுபிடித்த புதுமுகம்’ என்ற தலைப்பில் முந்திய வெளிப்புறக் காட்சியில் எடுக்கப்பட்ட ’ஸ்டில்ஸ்’ எல்லாம் மாற்றி மாற்றி ஒவ்வொரு பத்திரிகையிலும் பிரசுரமாகிவிடவே, எதையும் இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது என்பது சுமதிக்குப் புரிந்துவிட்டது. அவள் பயந்த மாதிரியே அரை நிர்வாண, முக்கால் நிர்வாணப் படங்களே கூடச் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிவிட்டன. பத்திரிகைக்காரர்களுக்கு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்பதைப்பற்றி என்ன கவலை? உடனே இல்லாவிட்டாலும் நாளடைவில் ஊரில் அம்மாவின் கவனத்திற்கும் இங்கே வார்டனின் கவனத்திற்கும் அவை தப்பமாட்டா என்பது அவளுக்குப் புரிந்தது.

காஷ்மீர் போவதற்காக டெல்லிக்கு விமானம் ஏறிய தினத்தன்று இந்தப் பயமே அவள் மனத்தில் நிறைந்திருந்தது. முதலில் வரவில்லை என்ற சொல்லிக் கொண்டிருந்த மேரியும் அவர்களோடு புறப்பட்டிருந்தாள். வரிசைக்கு மூன்று ஸீட்கள் வீதம் இருந்த ’ஜெட்’ விமானத்தில் நடுவாகச் சுமதியை உட்காரச் செய்து இருபுறங்களில் மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும் அமர்ந்து கொண்டார்கள். தயாரிப்பாளரும், மேரியும் மிக உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் சுமதி எவ்வளவோ முயன்றும் அவளால் அவ்வளவு உற்சாகமாக இருக்க முடியவில்லை. விமானம் மேலே மேலே பறப்பதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி கூட அவளை மாற்றிவிட வில்லை. தான் பொய் சொல்லி வார்டனையும், அம்மாவையும் ஏமாற்றிவிட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே சுமதிக்குக் குடைந்தது. பக்கத்தில் இருந்தவர்களோடு அவள் சகஜமாகப் பேசவும் கூட முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/14&oldid=1146922" இலிருந்து மீள்விக்கப்பட்டது