உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/013

விக்கிமூலம் இலிருந்து

மதம் மாறிய மகனுக்கு
கண்ணீர்க் கடிதங்கள்!

காந்தி அடிகளது பெருமை உலகம் எல்லாம் பரவியது! இந்திய மக்கள் போற்றி வணங்கும் அற்புதத் தலைவராக அடிகள் வளர்ந்து வந்ததால். மகாத்மாவை, அவரது பெயர் அருமையை அறியாதார் எவருமில்லை எனலாம்.

காந்தியடிகள் இந்த அளவு வளர்ச்சியுறுவதற்கு அன்னை கஸ்தூரிபாய் தான்தலை சிறந்த காரணம் என்றால், அது ஏதோ சடங்குக்காக எழுதும் வாசகமல்ல; சத்தியத்துக்காக எழுதும் உண்மையாகும்.

இந்த இருவருக்கும் பிறந்த புதல்வர்தான் ஹீராலால் என்பவர். இவர் தனது தந்தையான மகாத்மா காந்தியடிகளுக்கு நேர் எதிரான குணங்களை உடையவராக இருந்தார். காந்தியடிகள் ஒழுக்க சீலர் என்றால் ஹீராலால் ஒழுக்கமற்றவர். தந்தை அமைதியானவர், இவர் ஆர்ப்பாட்டமுடைய அராஜகவாதி; காந்தி மதுபான விரோதி; இவர் மதுபானப் பிரியர்; காந்தி அகிம்சாவாதி; இவர் அகிம்சைக்கே பகையானவர்; காந்தி இந்துமதப் பேரறிவளார்; மகன் முகமதிய மதம் மாறியவர். இவ்வாறு எல்லா நிலைகளிலும் அவர் தனது தந்தையான காந்தி பெருமான் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவராக வாழ்ந்தவர்.

முகமதியராக மாறிவிட்ட தனது மகனுக்கு கஸ்தூரி பாய், ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடித விபரம் வருமாறு:

"எனது அன்புள்ள மகன் ஹீராலாலுக்கு,

சென்னை நகரில், நள்ளிரவில், நடுத்தெருவில், நீ குடி வெறியோடு பல தவறுகளைச் செய்ததற்காகப் போலீசார் உன்னைக் கைது செய்து, மறுநாள் ஒரு பெஞ்சு மாஜிஸ்திரேட் விசாரணையில், உனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு எளிய தண்டனையோடு உன்னை விடுதலை செய்து விட்டார்களே! இது தவறு என்றே எனக்குத் தோன்றுகிறது.

"உனது தந்தையாரின் பெருமையை மனத்தில் கொண்டுதான் அந்த மாஜிஸ்திரேட் உனக்கு இவ்வளவு சிறு தண்டனையை விதித்திருக்க வேண்டும். இந்த விவரத்தைக் கேட்டு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்றைய இரவு நீ தனியாக இருந்தாயா? அல்லது வேறு யாராவது நண்பர்கள் உன்னோடு இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. எப்படியானால் என்ன? நீ செய்தது பெருந்தவறு.

"உனக்கு என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. தன்னடக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் உனக்குக் கண்ணீருடன் கூறியிருக்கிறேன். ஆனால், நீயோ, மேலும் மேலும் வீழ்ச்சி அடைகிறாய். இப்போது நீ, என் உயிருக்கே அபாயமாக முடியும்படியான காரியங்களைச் செய்கிறாய். இறுதியை நெருங்குகிற பெற்றோருக்கு நீ அளிக்கும் துயரத்தைப் பற்றி எண்ணிப்பார்.

"கயமையான வாழ்க்கை நடத்துகிற நீ, சமீபத்தில் பெருமை வாய்ந்த உனது தந்தையைக் குறை கூறி ஏளனம் செய்வதாய் அறிந்தேன். பகுத்தறிவு உள்ளவனுக்கு அடாத செய்கை இது. ஈன்ற தந்தையாரை இழிவு படுத்துவதால் நீ உன்னையே இழிவு செய்து கொள்கிறாய் என்பதை உணரவில்லையா? அவரோ, உனக்கு இன்றும் அன்பையே வழங்குகிறார். ஒழுக்கத் தூய்மைக்கு அவர் தருகிற மரியாதை என்ன என்று உனக்குத் தெரியும். ஆனால், அவருடைய அறிவுரைகளை எல்லாம் நீ அலட்சியம் செய்து விட்டாய். ஆயினும் அவர் உன்னைத் தம்மோடு வைத்துக் கொண்டார்; உணவும் உடையும் அளித்தார்; நீ, நோயுற்ற போது பணிவிடைகளும் புரிந்தார்.

"அவருக்கு இந்த உலகத்தில் தான் எத்தனை பொறுப்புக்கள்! அவர் உனக்குச் செய்தது அதிகம். அவர் விதியை எண்ணித்தான் வருந்த முடியும். பகவான் அவருக்கு மாபெரும் ஆன்ம சக்தி அளித்துள்ளார். அவர் இந்த உலகத்தில் நிறைவேற்றி வந்திருக்கும் கடமைகளைச் செய்து முடிக்க ஆண்டவன் தான் அவருக்கு ஆயுளும் உடல் வலிமையும் தரவேண்டும். நான் அபலை. உன்னுடைய அடாவடித் தனத்தை என்னால் தாங்க முடியவில்லை.

"உன்னுடைய தீய ஒழுக்கம் பற்றிப் பலர் உனது தந்தையாருக்குக் கடிதம் எழுதுகின்றனர். உன்னால் உண்டாகும் அவமானங்களை எல்லாம் அவர் ஏற்க வேண்டியுள்ளது. ஆனால், என் அவமான உணர்ச்சியை எங்கு மறைப்பது? நண்பர்களுக்கும் அறிமுகமில்லாதவர்களுக்கும் இடையில் நான் நிமிர முடியாதபடி செய்து விட்டாய் உனது செயல்கள் அவ்வளவு வெட்கக் கேடாக உள்ளன. உன் தந்தையார் உன்னை மன்னிப்பார்! கடவுள் உன்னை மன்னிக்கவே மாட்டார்.

"சென்னையில், ஒரு பிரமுகர் வீட்டில் விருந்தாளியாக இருந்து, அங்கு தவறான காரியங்கள் செய்து விட்டு, ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டாயாம்! உனது செயலைக் கண்டு அந்தப் பிரமுகர் திணறிப்போய் இருப்பார். ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் தினசரிகளில் உன்னைப் பற்றி என்ன செய்திகள் வருமோ என்ற அச்சத்தினால் எனது நெஞ்சு நடுங்குகின்றது.

"சில சமயம் நீ எங்கிருக்கிறாயோ, எங்கு தூங்குகிறாயோ, என்ன உண்ணுகிறாயோ என்று கவலைப் படுகின்றேன். ஒருவேளை நீ, அனாசாரமான உணவுகளையும் சாப்பிடத் தொடங்கி இருக்கலாம். இவ்வாறெல்லாம் எண்ணி இரவெல்லாம் தூக்கம் இழந்து துன்புறுகிறேன். ஆனால், உன்னை எங்கே பார்க்க முடியும் என்றும் தெரியவில்லை. நீ என்னுடைய மூத்த மகன், உனக்கு ஐம்பது வயதாகி விட்டது. உன்னை நேரில் பார்த்தால் என்னையும் அவமதித்து விடுவாயோ என்று எனக்கு அச்சமாகவும் இருக்கிறது.

"உன்னுடைய மூதாதையரின் மதத்தை நீ துறந்ததின் காரணம் எனக்குப் புரியவில்லை. அது உன் சொந்த விஷயம். ஆனால், ஒரு மாசும் அறியாத பாமர மக்களை ஏமாற்றி இச்சகம் பேசி உன்னைப் பின்பற்றும்படி தூண்டுகிறாய் என்று அறிகிறேன். உனக்கு மதத்தைப் பற்றி என்ன தெரியும்? உன்னுடைய மனநிலையில் மற்றவர்களுக்கு நியாயம் கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? உனது தகப்பனார் பற்றிப் பேச உனக்குச் சிறிதும் தகுதி கிடையாது. இவ்வாறு நீ ஒழுகினால், விரைவில் எல்லோரும் உன்னை வெறுத்து ஒதுக்கும் நிலையை அடைவாய். வழி தவறியுள்ள உன் மனத்தை நேர் வழியில் திருப்பு. இது எனது வேண்டுகோள்.


”நீ மதம் மாறியதை நான் விரும்பவில்லை. ஆயினும், 'நன்னெறி செல்லவே மதம் மாறினேன்' என்று நீ அறிவித்த போது, மத மாற்றங்கூட நல்லது தான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன். இனி நீ ஒழுக்கம் தவறாமல் வாழ்வாய் என்று நம்பினேன். ஆனால், அந்த நம்பிக்கையும் உடைந்து விட்டது.

"உன்னுடைய நடத்தையால் உன் பிள்ளை எவ்வளவு துயரப்படுகிறான் என்பதை நீ அறிவாயா? உன் நடத்தையால் ஏற்பட்ட சோகச் சுமையை உன் பெண்களும், மருமகளும் மிகவும் கஷ்டப்பட்டுச் சுமக்கிறார்கள்."

ஹீராலுக்கு இவ்வாறு கடிதம் எழுதிய அன்னை கஸ்தூரிபாய், ஹீராலாலின் முகமதிய நண்பர்களுக்கும் பத்திரிகை வாயிலாக ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை விவரம் வருமாறு:

"என்மகன் சமீபத்தில் செய்த காரியங்களுக்கு உதவி புரிந்தவர்களுக்குத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் செயலும், மனப்போக்கும் எனக்கு விளங்கவில்லை. சிந்தனையில் சிறந்த முஸ்லிம் பெரியோர்களும், எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு நண்பர்களாக இருந்த முஸ்லிம்களும், என் மகன் செய்ததைச் சற்றும் ஏற்கவில்லை என்பதைதான் அறிவேன். அதற்காக, நான் மகிழ்கிறேன். மத மாற்றத்தால் என் பிள்ளை உயரவில்லை. இன்னும் இழி செயல்களிலே ஆழ்ந்து விட்டான். ஆனால், உங்கள் மதத்தைச் சார்ந்த சிலர், அவனுக்கு 'மௌல்வி' என்று பட்டம் சூட்டவும் முனைந்துவிட்டார்கள். இது உங்களுக்கு நீதியா என்று கேட்கிறேன். என் மகனைப் போன்ற ஒழுக்கம் கெட்டவர்களுக்கு 'மௌல்வி' பட்டம் சூட்ட உங்கள் மதம் சம்மதிக்கிறதா?

"ஆணேறு என்று அவனைத் தட்டிக் கொடுத்து, நீங்கள் கண்ட ஆனந்தம் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவனுடைய நன்மைக்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்றும் என்னால் நம்ப முடியவில்லை. எங்களை இழிவு செய்ய வேண்டும் என்பதே உங்கள் நோக்கம் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.

"உங்களுக்குள் சிலருக்காவது மனச்சாட்சி இருக்காதா? நொந்து நலியும் ஒரு தாயின் சோகக் குரல் உங்களுடைய உள்ளத்தைத் தீண்டாதா? அதனால், அவர்கள் என் பிள்ளையை நேர் வழிக்குத் திருப்பிட முயற்சி செய்ய மாட்டார்களா? தெய்வ சந்நிதானத்தில் நியாயமான வேலைகளையே செய்ய வேண்டும் என்று எனது மகனுக்குக் கூறினேன். அதையே உங்களுக்கும் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்."

அன்னை கஸ்தூரிபாய், தன்னுடைய மகன் செய்கையால் எவ்வளவு நொந்து போயிருந்தார் என்பதையே மேலே உள்ள இரண்டு கடிதங்களும் உணர்த்துகின்றன.

இதற்குப் பிறகு தான் ஹீராலால் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பினார். அவர் தனது செயல்களுக்காக வருந்தினார். ஆனால் அவர், தனது பெற்றோர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

xxx