உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/016

விக்கிமூலம் இலிருந்து

முதுமைத் துளிகள்

பூனாவிலே உள்ள ஆகாகான் அரண்மனையுள் காந்தியடிகள் சிறைவைக்கப்பட்டிருந்த போது! 'வெள்ளையனே வெளியேறு' போராட்டப் பொதுக் கூட்டத்திலே கஸ்தூரி பாய் பேசப் போகிறார் என்பதற்காக அவரை ஆங்கிலேயர் அரசு கைது செய்தது.

சிறை வைக்கப்பட்ட அறையிலுள்ள அவரது படுக்கைக் கட்டிலின் அருகில் 'ஹேராம்' படம் தொங்கவிடப்பட்டிருந்தது. உடல் நலம் குன்றி மாரடைப்பு நிமோனியா காய்ச்சல் என்று இப்படி பல நோய்களின் துன்பங்களால் அவதிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார் கஸ்தூரி பாய்.

அவருக்குத் துணையாக இருந்த சுசிலா நய்யாரும் கைது செய்யப்பட்டதால், அவரும் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்!

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் விடிந்தது. இரவெல்லாம் அன்னையுடன் கால்தூக்கம், அரைத் தூக்கம் என்று விழித்துக் கொண்டு இருந்த சுசிலா அன்னை முனகல் ஒலியைக் கேட்டு எழுந்தார்! உடனே 'சுசீலா என்னை வீட்டுக்கு அழைத்துப் போ' என்றார் கஸ்தூரிபாய்.

"அம்மா, நாம் இப்போது நமது வீட்டில் தானே இருக்கிறோம்; அதோ பாருங்கள் நீங்கள் வழக்கமாகத் தூங்கும் கட்டில். எதிரே 'ஹேராம் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுதானே உங்களுக்குரிய விருப்பமான படம்" என்று சுசீலா நேரத்துக்கேற்றவாறு கூறி, கவனத்தைத் திசை திருப்பினார்.

சிறிது நேரம் கழித்து சுசீலாவை அழைத்து தன்னை வீட்டிலுள்ள பாபுவின் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினார் கஸ்தூரிபாய்.

"நீங்கள் 'பாபு' அறையில் தானே இருக்கிறீர்கள் அம்மா" என்றார் சுசீலா ஒருவேளை தனது கணவரான காந்தியடிகளைப் பார்க்க விரும்புகிறாரோ என்னவோ என்று எண்ணிய அவர் பக்கத்து அறையிலே சிற்றுண்டி உண்டு கொண்டிருக்கும் காந்தியடிகளுக்கு ஆள் அனுப்பி, வருமாறு கூறினார்!

சுசீலாவின் மடியிலே சாய்ந்து கொண்டிருந்த கஸ்தூரி பாய், திடீரென்று, 'சுசீலா, எங்கே போவோம்? இறந்து விடுவோமா? என்றார்.

கஸ்தூரி பாய் உடல் நலம் சாதாரணமாகக் குன்றி இருந்த போதெல்லாம் இதே சொற்களைப் பலமுறை கூறி இருக்கிறார் அவர்.

அப்போதெல்லாம் சுசீலா அதற்குப் பதில் சொல்லும் போது "ஏனம்மா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் கற்பனையாகக் கூட இப்படியெல்லாம் சொற்கள் உங்களது வாயிலே இருந்து வரக் கூடாதம்மா! நாம் எங்கே போகிறோம், நாம் எல்லோரும் வீட்டுக்குத்தான் திரும்புவோம்' என்று கூறுவதும், தேற்றுவதும் முன்புள்ள வழக்கமாகும்.

ஆனால், 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாளன்று சுசிலாவுக்கு அப்படிச் சொல்லத் துணிவு வரவில்லை. அதனால் அவர் அன்று கூறியது என்ன தெரியுமா?

"நாம் எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தாம் தாயே! இதனால் என்ன?" என்றார் சுசீலா!

இதற்கு கஸ்தூரிபாய், 'ஆமாம், உண்மை தான்' என்பது போல தனது தலையை மட்டுமே ஆட்டினார், பாவம்!

கொஞ்ச நேரம் கழிந்த பின்பு, சுசீலா சொல்லி அனுப்பியதற்கு ஏற்றவாறு காந்தியடிகள் வந்தார். சிறிது நேரம் மனைவி அருகே நின்று கொண்டிருந்தார். பின்பு, அவர், தனது மனைவியிடம் நான் உலாவப் போகட்டுமா பாய்? என்று கேட்டு விட்டு நின்று கொண்டே இருந்தார்.

வழக்கமாகக் காந்தியடிகள் கஸ்தூரி பாயிடம் எதுவும் கேட்கும் போது, கஸ்தூரிபாய், ஒரு நாளும் தடுக்கவோ, அல்லது மறுப்போ, மறுபதிலோ ஏதும் கூறமாட்டார். ஆனால், அன்று அவர் தடுத்தார்!

காந்தியடிகள் கட்டிலின் மேலே உட்கார்ந்தார். தனது கணவரின் தோள்மீது தலை வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டே இருந்தார். அப்போது கணவன் மனைவி இருவர் முகங்கள் இடையே ஏதோ ஓர் அதிர்ச்சியும். அன்பின் அமைதியும், அக நெகிழ்ச்சிகளும் அவர்களையே அறியாதவாறு நிகழ்ந்தன.

இந்த இருவரது உள்ள உருக்க உணர்வுகளை உணர்ந்து அந்த அறையில் இருந்தோர் அனைவரும், ஒலி எழாமல் அவரவர் பாதங்களில் இலவம் பஞ்சு கட்டிக் கொண்டு நடப்பதை போல, மெதுவாக நடந்து நகர்ந்தார்கள். அந்தக் காட்சி, அந்த நேரத்தில், ஏதோ முழு நிலா ஒளியிலே இரண்டு அன்னப் பறவைகள் தங்களது சிறகுகளால் மரண வருடல்களை நெருடுவது போன்ற கண்கொள்ளாக் கண்ணிர்க் காட்சியாக அந்த தேசபக்தப் பறவைகளுக்குத் தென்பட்டது.

இது இரவு சுமார் பத்து மணி நேரம் வரை நீடித்தது. இருவருமே ஏறக்குறைய 1906-ஆம் ஆண்டு முதல் இல்லறத் துறவறம் ஏற்றவர்கள். ஆனால் அந்த மரண மயக்கம் அவ்வளவு நேரம் நீடித்தபடியே நின்றது. இடையிடையே ஹேராம், ஹேராம் என்று அவர்களுடைய உதடுகள் ஒலித்தன.

திடீரென்று கஸ்தூரிபாய்க்கு இருமல் வந்து விட்டது. அப்போது பெருமான் காந்தி தனது கைகளால் மிருதுவாகத் தடவிக் கொடுத்தபடியே இருந்தார்:

இக்காட்சி தான் உலகக் கவிஞர்கள் எவரும் இன்று வரை எழுதாத, பாவேந்தர் பாரதிதாசனாரின், குடும்ப விளக்கில் வருகிறது.

கஸ்தூரி பாய், திருவள்ளுவர் கூறிய “வாழ்க்கைத் துணை நலம்" என்ற தத்துவ இலக்கணத்திற்கு இலக்கியமாக வாழ்ந்து காட்டி மறைந்த பெருமாட்டியாவார்!

அந்த இரு பெரும் ஞானிகளின் உடல்கள் நம்மிடையே நடமாடாவிட்டாலும், அவர்கள் வாழ்ந்து காட்டிய உயிரினும் மேலான ஒழுக்க விழுப்ப மேன்மைச் சீலங்கள், "நெருநெல் உளனொருவன் இன்றில்லை" என்னும் பெருமையை இந்த உலகிலே உலாவரச் செய்துள்ளார்கள்: வாழ்க கஸ்தூரிபாய் போன்ற வாழ்க்கைத் துணை நலங்கள்

xxx