உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பு வாழ்க்கை/"அன்பு வாழ்க்கை"

விக்கிமூலம் இலிருந்து

அன்பு வாழ்க்கை


ப்போது தோழர் கிருஷ்ணன் அவர்களுக்கும் தோழியர் துளசிபாய் அம்மையாருக்கும் சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெற்றது. இப்படிப்பட்ட சீர்திருத்த முறையில் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் இப்போதெல்லாம் மக்களிடம் அதிக அக்கறை காணப்பட்டு வருகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட திருமணங்கள் நடைபெறுவதற்கு எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்தன. இன்று அப்படி பட்ட எதிர்ப்புகள் இல்லை. அப்போது எதிர்ப்புகளும் ஏராளம். இப்படிப்பட்ட திருமணங்களுக்கு இப்போது எதிர்ப்புகள் குறைந்துள்ளன. அதனால் ஏராளமான சீர்திருத்தத திருமணங்கள் மிகவும் தாராளமாக நடைபெறுகின்றன. என்றாலும், எதிர்ப்புகள் அடியோடு இல்லவே இல்லை என்று கூற முடியாதே!

எவ்வளவுதான் அதிகமான சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தபோதிலும், அவற்றைப்பற்றிய சந்தேகங்கள் மக்களுக்கு இன்னமும் அடியோடு நீங்கிவிட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? இல்லையே!

சீர்திருத்தத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும் என்பதிலும், சீர்திருத்த முறையிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதிலும் இன்றைக்கு பெரும்பாலான மக்கள் அக்கறை காட்டத்தான் செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியிலே உள்ள பகுத்தறிவுத் தோழரானாலும், கம்யூனிஸ்டு கட்சியிலே உள்ள சீர்திருத்த நண்பரானாலும் அல்லது வேறு எந்தக் கட்சிக்காரர் ஆனாலும் சீர்திருத்த முறையில் தான் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் எந்த விதமான மாறுபட்ட கருத்துக்களும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இதைப்போல எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பார்ப்பனருக்கு அடுத்த ஜாதி நாங்கள் தான் என்று பெருமை பேசிடும் முதலியார் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அல்லது செட்டியார், நாயுடு, க்ஷத்திரியர் என்று கூறிக்கொள்ளும் எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அந்த வகுப்பிலுள்ள பெரும்பாலான வாலிபத் தோழர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சீர்திருத்த திருமணங்கள் செய்து கொள்வதிலே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர்.

இன்று எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் உலக நிகழ்ச்சிகளைக்கொண்டு முன்னேற விரும்புகிறார்கள். தெளிந்த அறிவு காட்டும் நல்ல போக்கின்படி நடக்கத் துணிவு கொண்டுள்ளனர். எனவேதான் நாள்தோறும் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்று வரும் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் எவ்வளவு சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றாலும், இன்னமும் சாதாரண மக்களிடைய இப்படிப்பட்ட மணமுறைகளைப் பற்றிய தவறான கருத்துக்களும் பொருத்தமற்ற சந்தேகங்களும தோன்றாது அடியோடு மறைந்துவிடவில்லை. எதிர்ப்புகள் அன்றுபோல அதிக அளவில் இல்லாமலிருக்கிறதே தவிர எதிர்ப்பே இல்லையென்ற நிலை ஏற்பட்டுவிடவில்லையென்பதை நாம் உணரத்தான் வேண்டும்.

இன்று சீர்திருத்தத் திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. என்றாலும் எதிர்ப்புகள் அங்கங்கே இருக்கத்தான் செய்கின்றன. இப்போது இங்கு நடைபெருகின்ற திருமணத்திற்குக்கூட ஏதோ எதிர்ப்புகள் இருந்ததாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.

இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களைக் கண்டு சிலர் பயப்படுவதற்குக் காரணமே கிடையாது, நாங்கள் என்ன நடக்கக்கூடாதது எதையும் செய்யவில்லையே! என் றைக்கும்போல ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குந்தானே இங்கே திருமணம் நடத்தி வைககிறோம். அதிலும் ஆணின் கண்ணைக் கட்டிக்கொண்டுவந்து மணப்பந்தலில் நிறுத்தி விட்டு அதன் பின்னர் அதோ இருக்கும் அந்தப் பெண் தான் உனக்கு மனைவியாகப் போகிறவள் என்று கூற வில்லையே!

ஆணும் சரி, பெண்ணும் சரி, முன்னதாகவே ஒருவரைப்பற்றி மற்றவர் நன்றாக அறிந்து தெரிந்து கொண்ட பின்னர்தானே திருமணம் நடைபெற வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம், செய்கிறோம்,

ஒரு ஆணுக்கும், மற்றொரு ஆணுக்கும், அல்லது ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்குமா திருமணம் நடத்துகிறோம்? இல்லையே! அப்படி ஏதாவது அக்கிரமான காரியங்கள் செய்தால், செய்ய வேண்டுமென்று பேசினால், 'ஆகா அக்கிரமக்காரர்கள், ஆகாத காரியம் புரிகிறார்கள்' என்று எங்களைக் கண்டிப்பதற்கு இடமேற்படும் ஆனால் நாங்கள் அப்படி ஏதும் செய்யவில்லையே!

நாங்கள் இங்கே திருமணம் செய்துகொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணைவர்களாகிறோம். என்று இன்று எடுத்துக் கொள்ளும உறுதிக்குச் சாட்சிகளாகத்தான் வந்திருக்கிறோம். இங்கே கூடியுள்ள அத்தனை பேரும உற்றார் உறவினர் உட்படவும் அதற்காகத்தானே வந்துள்ளனர்.

மணம் செய்வதற்குச் சாட்சிகளாக இருக்கவும், மண மக்களை வாழ்த்தவும். புத்திமதிகளைக் கூறவுந்தான் நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம் இதைத்தான் நாம் செய்கிறோம். இதைக் கண்டு ஏன் சிலர் சந்தேகப்பட வேண்டும்? எதற்காக எதிர்ப்புக் காட்ட வேண்டும்?

சில பெரியவர்கள், வைதீகத்தில் பெரிதும் ஊறியவர்கள் வேண்டுமானால் சில காரணங்களைக் கூறுவார்கள். அதாவது இந்தத் திருமணத்திலே அவர்கள் எண்ணட்படியும் முறைப்படியும் காரியங்கள் நடைபெறவில்லை என்பது தான் அவர்களுக்கு ஏற்படும் குறைகள்!

அவர்கள் எண்ணப்படி, முறைப்படி நாம் இங்கே அய்யரை அழைத்து அக்கினி வளர்க்கவில்லை. அகல் விளக்கு ஏற்றி வைக்கத் தவறிவிட்டோம் அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கத்தை விட்டுவிட்டோம். அரசாணிக்கால் நட்டு அதைச்சுற்றி வரவில்லை, மணமக்கள் அய்யர் மந்திரம் ஓதித் தாலி கட்டவில்லை.

இப்படிப்பட்ட சில வழக்கமான பல சடங்குகளைச் செய்யவில்லை. இதுதான் இன்று எதிர்ப்புக்காட்டும் சிலரது குற்றச்சாட்டுகள், சீர்திருத்தத் திருமணங்களைப் பொருத்தமட்டில், இக் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கவில்லை. மறுக்கவும் மாட்டோம். அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

நாங்கள் சீர்திருத்தம் என்று கூறுவதே, இப்படிப்பட்ட சடங்குகளை நீக்கவேண்டும், அடியோடு விட்டுவிட வேண்டும் என்பதுதானே! அப்படியிருக்க சடங்குகள் இல்லையென்று கூறுவதைக்கேட்டு அவைகளை எப்படி எங்களால் மேற்கொள்ள முடியும்?

சீர்திருத்தத் திருமணம் தேவையென்பதற்காக நாங்கள் கூறும் காரணங்களை மறுத்தல்ல இன்று காணப்படும் எதிர்ப்புகள். எதிர்ப்புகள் எங்கு காணப்பட்டாலும் அது ஏதோ சில சடங்குகளை அழித்து விடுகிறோம் ஒழித்து விடுகிறோம் என்பதற்காகத்தான் காணப்படுகிறது.

சங்கராச்சாரியாரிலிருந்து சாதாரண அய்யரிலிருந்து சாதாரண சாமியார்வரை படித்த பார்ப்பனர்களிலிருந்து படிக்காத பாமரர்வரை, அவர்கள் யாராக இருப்பினும் இதுவரை சீர்திருத்த முறையில்தான் திருமணங்கள் நிகழ வேண்டும் நடத்தப்படவேண்டும் என்பதற்காக சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் கூறிவரும் காரணங்களை ஒருவரும் மறுத்துப் பேசியது கிடையாதே!

அவர்கள் நாங்கள் கூறும் காரணங்களை மறுத்துப் பேசுவதில்லை. பேசவும் முடிவதில்லை. ஆனால் அர்த்தமற்ற சடங்குகளை பொருத்தமற்ற காரணங்களைக் காட்டிக் கடைபிடிக்கவில்லை யென்றுதான் குற்றஞ் சாட்டுகிறார்கள்.

நாங்கள் மேற்கூறப்பட்ட எந்தவிதமான சடங்குகளையும் செய்வதில்லை, செய்யத்தேவை இல்லையென்றும் கூறுகிறோம். அத்தகைய சடங்குகளைச் செய்வதற்கு எந்தவிதமான அர்த்தமுமில்லை. அதற்குக் கூறப்படும் காரணங்களும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவைகளை நாங்கள் செய்வதில்லையென்பதுடன், செய்வதும் கூடாது எனவும் குறிப்பிடுகிறோம்.

இந்தச் சடங்குகளை நாம் ஏன் செய்யவேண்டும்? அவைகளை விட்டுவிட்டால் என்ன? என்ற கேள்விக்கு அவைகள் அந்தக் காலத்திலிருந்து இருந்துவரும் பழக்கங்களாயிற்றே! அவைகளை எப்படி விட்டுவிட முடியும்? என்ற முறையில்தானே பதில் கிடைக்கிறது. வேறு ஏதாவது தக்க காரணங்கள், பொருத்தமான பதில்கள், அர்த்தமுள்ள அறிவுக்குப் பொருத்தமான விளக்கங்கள் தரப்படுகின்றனவா? கிடையாதே!

ஏதோ சில காரியங்களைச் சடங்குகள் என்றும் சாஸ்திர முறைகள் என்றும் பழைய வழக்கங்கள் என்பதற்காக மட்டும், எந்தவிதமான காரணங்களுமின்றி நம்மையறியாமலேயே நாம் செய்து வருகிறோம். இவைகளைத்தான் நாம் சரியா? தேவைதானா? என்று சீர்தூக்கிப் பார்த்து முடிவு கட்டவேண்டும்!

மக்கள் தமது அன்றாட வாழ்வில் எத்தனையோ காரியங்களைச் செய்கிறார்கள். செய்கின்ற அத்தனை காரியங்களுக்குமா காரண காரியங்களையும் பொருத்தத்தையும் எண்ணிப் பார்த்துச் செய்து கொண்டிருக்கிறார்கள்! இல்லை அப்படிச் செய்வதில்லை.

எத்தனையோ காரியங்களை ஏன் செய்கிறோம்! என்ன அர்த்தம். எப்படிப் பொருத்தம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிராமலே ஏன்? ஒரு சிறிதும் எண்ணிப் பாராமலுங்கூடத் தங்களையறியாமல் பல காரியங்களை பலர் செய்து வருவதை நாம் காண்கிறோம்!

உதாரணத்திற்காக நான் சிலவற்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சிலருக்குத் தூக்கம் வருவதற்கு முன்னர் கொட்டாவி வரும். அப்படிக் கொட்டாவி விடும்போது விரல்களால் மூன்று சிட்டிகை போடுவதைப் பார்க்கிறோம், அப்படிப்பட்ட நண்பரைப் பார்த்து அவர் கொட்டாவி வரும்போதெல்லாம் மூன்று சிட்டிகை போடுகிறாரே அதற்கு என்ன காரணம் என்று கேளுங்கள்.

கொட்டாவி விடும் நண்பர் சிறிது கோபக்காரராக இருந்தால் முறைத்துப் பார்ப்பார். அல்லது சாந்தமானவராக இருந்தால் மெதுவாகச் சிரித்துக்கொண்டே அது ஏதோ பழக்கம். காரணம் ஒன்றுமில்லை என்று பதில் கூறுவார்.

இதைப்போலவே சூளையில் உள்ள ஒரு பெரியவர் புரசைவாக்கத்தில் நடந்த ஒரு சச்சரவில் பஞ்சாயத்து செய்யப் புறப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சூளையிலுள்ள பெரியவர் புரசைவாக்கம் போவதற்காகத் தன்னுடைய வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போகிறார்.

அவர் புறப்பட்டுத் தெருவில் சிறிது தூரம் செல்லும்போது அடுத்த வீட்டின் கூறையில் இருந்த பூனை எதிர்த்த வீட்டுத் திண்ணைப் பக்கமாக ஒரு எலியைப் பிடிக்கக் குறுக்கே ஒடுகிறது. இதைக் கண்டவுடனே, பஞ்சாயத்துக்காக வேகமாக நடந்து சென்ற பெரியவர் திடுக்கிட்டு திரும்பி வந்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்.

திரும்பி வந்தவர் திண்ணையில் உட்கார்ந்தபடியே 'அடியே காமாட்சி!' என்று தமது மனைவியை அழைப்பார். இப்படி அவர் அழைத்த உடனே அந்த அம்மையார் 'சகுணம் சரியில்லை போலிருக்கிறது அதுதான் திரும்பி வந்து விட்டார்" என்று தீர்மானித்து கையில் தண்ணீருடன் திண்ணைப் பக்கம் வருவார். பெரியவர் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டுச் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகேதான் மீணடும் எழுந்து புரசைவாக்கம் போவார்.

இந்தப் பெரியவர் போவதோ புரசைவாக்கம் சச்சரவைத் தீர்ப்பதற்காக, குறுக்கே பூனை ஓடியதோ எதிர்த்த வீட்டுப் பக்கம் ஓடிய எலியைத் துரத்திப் பிடிப்பதற்காக! குறுக்கே ஓடிய பூனையைக் கண்டு இவர் திடுக்கிடுவானேன்? திரும்பி வருவானேன்? திண்ணைணயில் உட்கார்ந்து தண்ணீர் சாப்பிடுவதும்தான் எதற்காக?

இவர் போகின்ற காரியத்திற்கும் பூனை குறுக்கே ஓடியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே! என்றாலும் பூனை குறுக்கே ஓடினால் அவர் மேலே போகமாட்டார். சகுணத் தடை யாகிவிடும் என்று அஞ்சுகிறார்.

'ஏன் இப்படி?! என்று அந்தப் பெரியவரைக் கேட்டால் பொருத்தமான காரணம் ஏதாவது கூறமுடிகிறதா என்றால் அதுதானே இல்லை. 'ஏதோ பழக்கம்' என்று தானே அனைவரும் இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பதில் கூறுகின்றனர்.

இதே போன்ற மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு தோழர்கள் உட்கார்ந்துகொண்டு காரசாரமாக அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். கையில் 'தினமணி' பத்திரிகை இருக்கிறது, அதில் உள்ள அகில உலகச் செய்திகளைப் படித்து ரசமான பேச்சு நடக்கிறது.

இந்த இரண்டு தோழர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், மற்றவர் பிரஜா சோசலிஸ்டுக் கட்சியில் பங்கு கொண்டவர். காங்கிரஸ் தோழரைப் பார்த்து, பிரஜா சோசலிஸ்ட் 'டாக்டர் லோகியாவை காங்கிரஸ் சர்க்கார் கைது செய்தது நியாயமா?' என்று கேட்பார். அதற்குக் காங்கிரஸ்காரர் உடனே 'உங்கள் பட்டம் தாணு பிள்ளை மட்டும் திருவாங்கூரில் குஞ்சன் நாடாரை கைது செய்தது மட்டும் என்ன நியாயம்' என திருப்பிக் கேட்பார். இதைத் தொடர்ந்து ரசமான விவாதம் தொடரும்.

இவர்கள் இப்படி விவாதம் செய்து கொண்டு இருக்கும் போது அந்த வீட்டுக் கூரையில் உள்ள பல்லி ஒன்று ஒரு பூச்சியைப் பிடிப்பதற்காக பாயும். அப்போது அது சிறிது சத்தமிடும்.

பூச்சிப் பிடிக்கப் பல்லியிடும் சத்தம் கேட்டதும், திண்ணையில் உட்கார்ந்து அருமையான அரசியல் விஷயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள், தாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு வாயில் சப்புக்கொட்டி தரையில் மூன்று தரம் விரலால் தட்டுவார்கள்.

பூச்சி பிடிக்கும் பல்லி சத்தமிட்டால் இவர்கள் ஏன் பேச்சை நிறுத்தவேண்டும் தரையை மூன்று தரம் தட்ட வேண்டும்!

அந்த நண்பர்களைக் கேட்டால் சாந்தமான நேரமாக இருந்தால் 'என்னமோ பழக்கம் சார் விடமாட்டேன்கிறது' என்று பதில் சொல்வார்! இன்னும் சிலர் நாம் இப்படிக் கேட்டால் உங்களுக்கு வேறு என்னதான் வேலை! சுயமரியாதைக் காரர்களுக்கு இப்படி எதையாவது கிளறிக்கொண்டு கேலி செய்து கொண்ருக்கத்தான் தெரியும் என்று சலித்துக்கொள்வார்கள்.

பூச்சி பிடிக்கச் செல்லும் பல்லியின் சத்தத்தைக் கேட்டதும் தாங்கள் பேசி அலசிக்கொண்ருந்த அகில உலகப் பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்திவிட்டுத் தரையில் மூன்று தரம் தட்டுவதற்குப் பொருத்தமான காரணம் எதையுமே கூறமுடியாது.

கொட்டாவி விடும்போது மூன்று தரம் சிட்டிகை போடுவதும், போகும்போது எதிரே பூனை குறுக்கே வந்தால் சகுணம் சரியில்லையென்று திரும்பிவிடுவதும் பல்லி சொல்லுக்குத் தரையைத் தட்டுவதும், அதற்கு பலன் பார்த்துப் பதைப்பதும் மக்களிடம் எப்படியோ ஏற்பட்டுவிட்ட பழக்கத்தினாலும், அறியாமையினாலுந்தான்.

இவைகளையெல்லாம காரணந் தெரியாமல், ஏன் செய்கிறோம். எதற்காகச் செய்கிறோம் என்பதைப்பற்றிய எண்ணம் ஒரு சிறிதுமின்றி, தங்களையறியாமலே பழக்கத்தினால் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட காரண காரியமற்ற செயல்கள் பழக்கத்தின் பேராலும், வழக்கத்தின் மூலமாகவும் பல நடைபெறுவதை நாம் காண முடியும்.

இவைகளைப் போலவேதான் திருமணக் காலங்களிலேயும் சில அர்த்தமற்ற காரியங்களைச் செய்துவருகிறார்கள் தேவையற்ற சாமான்களைச் சேகரித்து வைத்து வீணாக்குகிறார்கள்.

இப்படிப்பட்ட சடங்குகளைத்தான் நாங்கள் சடங்குகள் கூடாது என்று கூறி, அவைகளை அடியோடு நீக்கி விட்டுப் பல ஆண்டுகளாக எத்தனையோ சீர்திருத்தத் திருமணங்களை நடத்தித்தான் வருகின்றோம் அதனால் என்ன கெட்டுவிட்டது? ஏதும் இல்லையே!

எனவே மக்கள் சடங்குகளைத் தள்ளிவிடுவதைக் கண்டு சந்தேகப்படுவதும், பழைய பழக்கவழக்கங்களை விட்டு விட்டோமே என்பதற்காக பதைபதைப்பதும் அர்த்த மற்றதாகும்!

திருமணத்தின்போது தாலிகட்டும் பழக்கம் மக்களிடையே இருந்துவருகிறது. தாலிக்கயிற்றில் புலியின் நகத்தைப் போலும், பல்லினைப் போலும் பொன்னால் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

நம்முடைய பெரியவர்களும் இதற்கு ஒருவிதமான விளக்கங் கூறுகிறார்கள். அதாவது பழங்காலத்திலே காடுகள் அதிகம் நாடுகள் குறைவு, காட்டிலே புலிகளும் அதிகம் ஆதலால் ஒரு மங்கையை மணக்க விரும்பிடும் வாலிபன், காட்டிற்குச் சென்று புலியை வேட்டையாடிக் கொன்று அதனுடைய பல்லையும், நகத்தையும் கொண்டு வந்து, தான் காதலிக்கும் பெண்ணிடம் காட்டுவானாம்! இதோ பார்! நான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகம். இதுதான் அதனுடைய பல், என்று அந்த மங்கை நல்லாளிடம் தன் வீரத்தை அறிவிப்பான். இதைக்கண்ட மங்கையும் இப்படிப்பட்ட வீரனைத்தான் நான் மணப்பேன், என்று கூறி அந்த வீரனையே மனந்துகொள்வாள். தனது காதலனின் வீரத்தின் சின்னமாக அந்த புலி நகத்தையும், பல்லையும் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள். இதுதான் தாலிகட்டுவதன் பொருள் என்று கூறுகின்றனர். அன்று காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும் புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான் பெண்கள் மணக்கவேண்டும் என்ற ஏற்பாடு--தீர்மானம் இருந்தது பொருத்தமாக இருந்திருக்கலாம்.

இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்கவேண்டுமா? உண்மையில் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொள்வதற்காக, இத்தகைய புலிவேட்டைக்குப் போய்வரத தயாராக இருப்பர், இந்த நாளில் ஒருவரும் இருக்க மாட்டார்களே!

இன்று அத்தகைய ஏற்பாடும் பழக்கமும் ஒரு சிறிதும் இல்லையென்றாலும், தாலிக் கயிற்றில் மட்டும் பொன்னால் புலிநகமும் பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை, இது தேவைதானா?

இன்றைக்கு நாடுகள் அதிகமாகவும் காடுகள் குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப்படுவது குறைவு அந்த நாட்களைப் போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி, புலியைக் கொன்று அதன் பலனையும், நகத்தையும் எடுத்துச் சென்று என காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தாலியாகக் கட்டுவேன், என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்ப முடியுமா? அப்படிக் கிளம்பினால் காடுகள் அனைத்தும் சர்க்காரின் காட்டு ரிசர்வ் இலாகாவைச் சேர்ந்திருப்பதால் புலிவேட்டையாட விடமாட்டார்கள்!

பழைய காலத்தைப் போலவே இன்றும் புலிவேட்டையாடி காதலிக்குத் தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன், எப்படியோ ஒரு புலியைக் கண்டுபிடித்து அதனைக் கொன்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

தான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தையும் பல்லையும் காதலியிடம் காட்டி, "பெண்ணே" இதோபார். நானே வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா! இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில் கோர்த்துக் கழுத்தில் தாலியாகக் கட்டுகிறேன். என்று கூறுவதனால் எத்தனை பெண்கள் 'சரி' என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா? இல்லையே!

புலியைக் கொன்றேன். இதோ அதன் பல்! அதன் அளவைப் பார்! நகததின் கூர்மையைக் கண்டாயா? என்று கேட்கும் காதலனின் வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப்பட முடியும்?

காதலனிடம் சிக்கிய காட்டுப் புலிக்கே இந்த கதி ஏற்பட்டு விட்டதே! இப்படிப்பட்டவனிடம் நாம் சிக்கிவிட்டால் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுநடுங்குவாள்.

இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு உள்ள வீரத்தை எதிர் பார்க்கவில்லை. எந்தக் கணவனும் 'புலி' என்றவுடனே கிலி கொண்டிடும் நிலையில்தானே இருக்கிறார்கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார்களின் கட்டற்ற வீரத்தை மட்டுமே பெரிதாகக் கருதவில்லை.

அவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்கவேண்டும் அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். நல்ல நாகரீகமுடையவனாக விளங்க வேண்டும். குடும்பத்தில் அக்கறையுடையவனாகத் திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்

எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த்திடும் கட்டான உடலும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு நடுங்கிடும் மனிதனாகத் தங்கள் கணவன்மார் இருக்கவேண்டும் என்பதைப் பெண்கள் விரும்பிய காலம் போய்விட்டது.

எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் அர்த்தமுள்ளதா? அறிவுக்குப் பொருத்தமானது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

அய்யரை அழைத்து மந்திரம் ஓதாமல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய்யாமல் நடைபெற்று வரும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன்பெல்லாம் நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.

நான் கேட்கிறேன், யாருக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் தானே! நமக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு நமது சொத்து பற்றிய உரிமை ஏற்பட வேண்டும் என்பதற்குத்தானே சட்டம் தேவைப்படுகிறது.

ஏராளமான பணத்தைத் தேடி வைத்துள்ள பணக்காரர்கள் தானே இதைப்பற்றி கவலைப்பட வேண்டும்!

மக்களுக்கு இனி அத்தகைய அச்சமும், ஆயாசமும், பரிதவிப்பும், பயமும் ஏற்படுவதற்குக்கூட காரணமில்லாமற் போய்விட்டது. ஏராளமான சீர்திருத்தத் திருமணங்கள் நாட்டில் நடைபெற்று வருகின்ற காரணத்தால், இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களும் இனி சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சூழ்நிலை இப்போது உருவாகி வருகிறது.

ஆச்சாரியார் மந்திரி சபையில் சட்ட மந்திரியாக இருந்த குட்டி கிருஷ்ண நாயர் காலத்தில் சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றிய கேள்வி நீதிமன்றங்களில் எழுந்தது. இதன் காரணமாக அவர் ஏற்கெனவே நடந்துவிட்ட சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரு சட்டம் கொண்டு வநிதார்.

ஆனால் இன்று காமராசர் ஆட்சியில் இதனை ஏற்கனவே நடந்த திருமணங்கள் மட்டுமல்லாமல், இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படியாகும் என்ற முறையில் மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பேசி வந்த நிலைமை அடியோடு மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டத்தின் பாதுகாப்பும் ஏற்பட்டு விட்டது.

இதுவரையில் நாம் சட்டம் ஒப்புகிறதா? இல்லையா என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. சமூகம் ஒப்புகிறதா? மக்கள் மனம் திருந்துகிறார்களா? என்பதை மட்டுந்தான் கவனித்துச் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வந்தோம். நாம் எதற்கும் அஞ்சாது தொடர்ந்து இத்தகைய பணியினைச் செய்து வந்ததன் பயன் தான் இப்பொழுது சட்டம் நம்மைத் தேடி வந்து நமக்குப் பாதுகாப்புத் தரும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதே முறையில் நம் நாடு முழுவதும் பேசியும், எழுதியும் பிரசாரம் செய்து வந்த மற்றொரு காரியமும் இன்று சட்டமாகியிருக்கிறது. நாம்தான் கேட்டோம் முதன்முதலில் ஒரு ஆண் பல மனைவிகளை மணந்து கொள்வது நியாயமா? என்று.

அவனுக்கென்ன ஆண் மகன்! ஒன்றென்ன ஒன்பது மனைவிகளைக்கூடக் கட்டி ஆளலாம்! என்று பெருமை பேசி வந்த காலமும் இருக்கத்தான் இருந்தது? சமூகத்திலும் இப்படிப்பட்ட பலதார திருமணத்திற்குச் சம்மதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆசைக்கு ஒரு மனைவி, சொத்துக்கு ஒரு மனைவி, சுகத்திற்கு வேறொருத்தி, போகிற இடத்தில் வேறொருத்தி, பெருமைக்கு மற்றொருத்தி என்ற முறையிலே ஒரே ஆண் பல மனைவியரை மணந்து வந்த முறையினை நாம்தான் தகாது எனக் கூறினோம், முறையல்ல என்று கண்டித்தோம்.

பல பெண்களை ஒரு ஆண் மணந்து கொள்வதினால் எவ்வளவு கேடுகள் விளைந்தன! எத்தனை பெண்கள் கணவனைக் கட்டிய பிறகு, கணவன் முகத்தைக்கூட பார்க்கமுடியாத பயங்கர நிலையில் தத்தளித்தனர்? எத்தனை குடும்பங்களில் கணணீர் வெள்ளம் புரண்டோடியது?

இந்தக் கொடுமையைக் களைய வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமே தவிர இஷ்டம் போல் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணப்பேன் என்று நடப்பது அநாகரீகம் என்று நாம் கண்டித் அதன் பலனை இன்று காண்கிறோம்!

இன்று சட்டப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணந்துகொள்ள முடியும். ஒரு மனைவி உள்ளபோது மற்றொரு பெண்ணை மணந்துகொள்வது சட்டபடி செல்லுபடியாகாது. இதோடு இரண்டாவது மனைவியை மணந்து கொள்ளும் ஆணுக்கும் அவருக்கு பெண் தரும் பெண்வீட்டாருக்கும் சட்டப்படி பல வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பல மனைவியரை நான் மணப்பேன். என்னைத் தடுப்பவர் யார், என்று ஆண்மகன பேசி வந்த காலம் போய் விட்டது.

'ஆணுக்கு என்ன, எத்தனை பெண் வேண்டுமானாலும் மணக்கலாம். ஆண்டவனே பல மனைவியை மணந்துள்ளாரே' என்று பேசி வந்த வைதீகர்களின் போக்கும் இன்று சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே ஒரு மனைவியிருக்கும்போது மற்றொரு பெண்ணை மணப்பது இன்று கிரிமினல் சட்டபடி குற்றமாகும்.



இந்த நிலைமை ஏற்படக் காரணமானவர்கள் யார் நாம்தானே! கல்லடிகளையும், அதைவிட எதிர்த்தவர்களின் படுமோசமான சொல்லடிகளையும், பிறர் ஏளனத்தையும் ஏசலையும் பொருட்படுத்தாது, தாங்கி செய்துவந்த சயமரியாதைப் பணியில் பிரச்சாரத்தின் விளைவாக மக்களிடையே ஏற்பட விழிப்புணர்ச்சிதான், சர்க்கார், இப்படிப்பட்ட சட்டமியற்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதற்கு காரணமாகும்.

முன்பெல்லாம் தனது மனைவியைப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தள்ளி வைத்து விட்டுத் தன்னிஷ்டமாக வேறு மனைவியைத் தேடிக்கொண்டது போலச் செய்யமுடியாது. தனது மனைவியை அர்ததமற்ற காரணங்களுக்காக எவரும் ஒதுக்கிவிட்டு புது மனைவியைத் தேடவும் முடியாது.

இருக்கும் மனைவியைத் தள்ளிவிட்டு வேறு மனைவியை மணம் புரிந்துகொள்ள வேண்டுமானால் கணவன் முதலில் நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். பிறகு தன் மனைவி கருத்தரிக்கவே முடியாது என்றோ, அவள் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கே இல்லையென்பதையோ, தக்க டாக்டர்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.

தன் மனைவிக்கு தீராத நோய் இருந்தால் நீக்கலாம், அதைக் கோர்ட்டில் டாக்டர்களை மூலம் உறுதிப் படுத்திக் காட்டவேண்டும். மனைவிக்குக் குட்டம் என்பதையோ கோர்ட்டாரின் அனுமதி பெற்ற பின்னர் ஷான் எந்த மனிதனும் இன்னும் வேறொருத்தியை மீண்டும் மணக்க முடியும்!

இதைப் போலவே இன்றைக்கு சட்டத்தின்மூலம் மணமக்களுக்கு விவாகரத்து உரிமை தரப் போகிறார்கள். இதற்கான சட்டம் டில்லியில் தயாராகி வருகிறது. இதற்கும் நமது பிரச்சாரம்தான் முக்கிய காரணமாகும்

மணவாழ்க்கையில் இருவரும் ஒன்றுபட்டு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலைமையில் அவர்கள் விவாக விடுதலை பெறும் உரிமை இருக்கவேண்டும் என்று நாம் கூறிவந்தோம்.

நாம் இப்படிக்கூறிய நேரத்தில் பலரும் ஏளனம் செய்தனர். எதிர்க்கவும் எதிர்த்தனர். ஆகாத வேலை தகாத காரியம் எனறு கூடக் கூறினர். கட்டிய மனைவிக்கு விடுதலை உரிமை தருவதா என்றெல்லாம் ஆர்ப்பறித்தனர்.

இவைகள் அத்தனையும் தாங்கி, நாம் தொடர்ந்து செய்து வந்த பணி இன்று பலன்தர ஆரம்பித்துவிட்டது.

எத்தனையோ குடும்பங்களில் நாம், கணவனால் கவனிக்கப்படாத மனைவியரைக் காண்கிறோம். குடிகாரக் கணவனின் அடிக்கும் உதைக்கும் தினம் தினம் ஆளாகி அவதியுறும் மனைவிமாரின் கண்ணீரைக் காண்கிறோம். கட்டிய மனைவியைக் கண்ணெடுத்தும் பாராது, விலைமாதரிடமே திரிந்துவரும் வீணர்களால் மனம் வெதும்பித் துடித்திடும் பெண்களையும் நாம் பார்க்கிறோம்.

ஆகவே தான் கணவனால் கொடுமைப்படும் மனைவியும் சரி, அல்லது மனைவியினால் தொல்லைக்கு ஆளாகும் கணவனும் சரி, தஙகளுக்குள் பிடித்தமில்லாதபோது விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை பெற்றாக வேண்டுமென்று நாம் வலியுறுத்தி வந்தோம்

விவாகரத்துரிமை இருந்தால், பொறுத்தமற்ற திருமணங்கள் தவறுதலாக நடந்து விட்டாலும் பின்னர் அதனைத் திருத்திக்கொள்ள வழிவகை பிறக்க முடியும். பிடித்தமற்றவர்கள், காலமெல்லாம் கூடிவாழ்வதென்பது நடவாத காரியந்தானே. எனவே பிடித்தமற்றவர்கள் விவாகரத்து கோரி விடுதலைபெறும் உரிமையைப் பெறுவது நன்மைதானே!

விவாகரத்து உரிமை வழங்கும் சட்டம் அமுலாக்கப்பட்டு விட்டால், கண்டபடி திரியும் கணவனை மனைவி தட்டிக் கேட்டு, திருந்தாவிடின், விவாக விடுதலை பெற்றுக்கொள்ள முடியும். குடிகாரக் கணவனின் கொடுமைக்கு நாளெல்லாம் ஆளாகி அவதியுறும் மனைவி அவனிடமிருந்து விடுதலை பெற வழி பிறக்கும்.

மனைவியைக் கவனியாது பிறபெண்கள் மீது நாட்டம் செலுத்தும் கணவனிடமிருந்து விடுதலைபெற மனைவி கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும். என் கணவன் வீட்டுக்கு இரவில் வெகுநேரம் கழித்தே வருகிறார் வந்தாலும் என்னிடம் பேசுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தையும் செலவுக்குக் கூட தருவதில்லை. தூக்கத்தில் காந்தா, சந்தா என்றும் கனவுகண்டு வாய் பிதற்றுகிறார். இவருக்கு என் மீது பிரியமில்லை. வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. (ஆகவே தான் இவரிடமிருந்து விவாகரத்துக் கோருகிறேன் என்று மனைவி கோர்ட்டில் கூற முடியும்.

கோர்ட்டாரும் இதைத் தீர விசாரித்து, கேள்விகட்கு மேல் கேள்விகள் போட்டு, ஒழுங்கான வாழ்க்கை நடத்த கணவன் இலாயக்குள்ளவன் தானா என்பதை ஆராய்ந்து பார்த்து, அவசியமாயின் அந்த மனைவிக்கு விவாகரத்து உரிமையைத் தருவர்.

இதைப் போலவே குடும்பத்திற்கு சிறிதும் பொருத்தமற்ற மனைவியையும் ஒழுங்கீனமான பெண்ணையும் விலக்க ஆண்களும் உரிமை கோரலாம். ஒத்த கருத்தின்மை ஏற்படும் போது விலகி வாழ உரிமை பெறுவது இருவருக்கும் நல்லது தானே. இதனால் சமூகத்திற்கும் நன்மை உண்டு.

விவாகரத்து உரிமைக்கான சட்டம் வருவதைப் போலவே, நாம் நெடுநாட்களாகத் தேவையென்று பாடுபட்டு வரும் மற்றொரு பிரச்சனைக்ககாவும் சட்டமியற்றப் படுகிறது டில்லியில்.

நாம் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறோம். பெண்களுக்கும் ஆண்களைப் போலவே தகப்பன் சொததுக்களில் உரிமை இருக்கவேண்டும் என்று.

நாம் இப்படிக் கூறிய போதும் பெரும்பாலோர் எதிர்த்தனர். ஏளனம் செய்து தூற்றவும் தூற்றினர். பெண்ணுக்குச் சொத்துரிமையா? பெண்ணிடம் பணம் இருந்தால் ஆணை அவள் எப்படி மதிப்பாள் என்று கூக்குரலிட்டனர் நாம் எதற்கும் அஞ்சாது இதனை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்து வந்தோம்.

அதன் பலன் இன்று பெண்களுக்குச் சொத்துரிமை தரும் மசோதா விரைவில் டெல்லிப் பாராளுமன்றத்தில் சட்டமாகக்கப்படுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாம் எந்தக் காரணங்களுக்காகப் போராடி வந்தோமோ அவைகள் எல்லாம் இன்று சட்டமாகி வருகின்றன என்பதைக் காணும் போது நாம் செய்துவரும் பணி எவ்வளவு மகத்தானது என்பது மட்டுமல்ல, நாட்டுக்குத் தேவையான நல்லபணியைச் செய்து வந்தோம் என்பது தெரிகிறது.

இந்த நிலையைக் கண்டுநாம் பெரிதும் மகிழ்கிறோம் பெருமைப்படுகிறோம்.

இந்த முறையில்தான். நாம் சீர்திருத்தத் திருமணங்கள் செய்து வருவதிலும் வெற்றி கண்டோம்! மேலும் மகத்தான வெற்றிகளைக் காண்போம் என்பதும் உறுதி.

சீர்திருத்த முறையில் திருமணங்களை நடத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூறும் காரணங்களை ஒருவராலும் மறுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டேன் இப்படி மறுக்க முடியாமற் போனாலும் சிலர் அந்தக்கால முதல் இருந்துவரும் பழக்கங்களையா தள்ளி விடுவது என்று கேட்கிறார்கள்.

அந்தக் காலம். அந்தக்காலம்! என்று பேசிவரும் தோழர்களையும், பெரியவர்களையும் நான் கேட்கிறேன் நிர்ணயமாக அந்தக்காலம், எந்தக்காலம் என்பதை? சென்னையில் ஒரு பகுதிக்கு 'சூளை' என்று பெயரிடப் படுகிறது இங்கிருந்து இதுவரை சூளை என்பதற்குக் குறிப்பிட்ட நிர்ணயம் இருக்கிறது. புரைசைவாக்கம் என்பது அங்கேயிருந்து அதுவரையுள்ள பகுதிகள் என்பதற்கு அத்தாட்சியான வரம்பு கூறப்படுகிறது! ஒரு ரூபாய் என்றால் 16 அணா என்று ஒரு திட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வீசை என்பது 40 பலம் கொண்டது என்று ஒரு நிர்ணயம் உண்டு. ஒரு கஜம் என்றால் இத்தனை அடி அல்லது இத்தனை முழம் என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.

இதைப் போலவே அந்தக் காலம், அந்தக் காலம் என்று பேசிவரும் பெரியவர்கள் 'அந்தக்காலம்' எதிலிருந்து எதுவரை அந்தக்காலம்? அவர்கள் எடுத்துக் காட்டிக் கூறும் காலம்? என்பதற்கு ஒரு நிர்ணயம் கூறட்டுமே! கூற முடியுமா அவர்களால்?

என்னுடைய மகன் இன்று பத்தாவது வகுப்பில் படிக்கிறான். அவன் படிப்பில் ஏதாவது தவறுகள் செய்யும்போது நான் கூறுகிறேன் 'இதெல்லாம் என்ன படிப்படா? இதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அந்தக் காலத்தில் நான் படித்தபோது--?' என்று பேசுகிறேன்.

நான் குறிப்பிடும் 'அந்தக் காலத்தை'யா இந்த வைதீகப் பெரியவர்கள் அந்தக்காலம் என்று பேசுகிறார்கள்?

நான் சிறுவனாக இருந்தபோது நான் என்னுடைய மகனைப் பார்த்து கேட்டதைப் போலவே என்னுடைய தகப்பனார் என்னைப் பார்த்துக் கேட்டார். நீ படிப்பது என்னடா படிப்பு. அந்தக் காலத்தில் நாங்கள் படித்த படிப்பு என்ன அருமையானது தெரியுமா? என்று இதைப்போலவே எனது தகப்பனாரைய பார்த்து அவருடைய தகப்பனார், அதாவது எனது பாட்டனார் இதே முறையிலதான் கேட்டார். நீங்கள் படிப்பதற்கு இப்படி அழுகிறீர்களே! அந்தக் காலத்தில் நாங்கள் எல்லாம் மணலைக் கொட்டி அதில் ஹரிநமோத்து சிந்தம் என்று கைவிரலால் எழுதி முடிவதற்குள், கைவிரலிலுள்ள இரத்தம் எல்லாம் சுண்டியே விடும் என்று.

இவர்களில் யார் குறிப்பிடும் அந்தக் காலத்தை வைதீகர்கள் அந்தக் காலம் என்று கூறுகிறார்கள் நான் குறிப்பிடுகிற அந்தக் காலத்தையா? எனது அல்லது எனது பாட்டனார் சொன்னாரே அந்தக் காலமா? அதைவிட அவரது தகப்பனார் கூறினாரே அந்தக் காலமா? எந்தக் காலத்தை இவர்கள் அந்தக் காலம் என்று கூறுகிறார்கள்? அந்தக் காலம் எது என் பதற்கு ஒரு நிர்ணயம் ஏற்படுத்திவிட்டுப் பிறகு கூறட்டும் அந்தக்கால பழக்கங்கள் என்று. அதற்குப் பிறகு நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி பேசுவோம். அந்தக்காலம் எந்தக்காலம் என்பதைக் குறிப்பிட்டுக் கூறிவிடாமல் வெறும் அடிமூச்சுக் குரலால் அந்தக்காலம் அழிவதா? அந்தக்கால ஏற்பாடுகள் தொலைவதா? என்று உரத்திப் பேசுவதால் என்ன பயன்?

இன்று வெள்ளைக்காரன் கூடத்தான் பேசுகிறான். 'நாங்கள் அந்தக் காலத்தில் இந்தியாவை ஆண்டபோது என்ன செய்தோம் தெரியுமா? என்று. இதைப்போலவே முஸ்லீம்களுந்தான் சொல்கிறார்கள் 'அந்தக் காலத்தில் டெல்லியில் ஔரங்கசீப் ஆண்டபோது முஸ்லீம்களுக்கு இருந்த செல்வாக்கே செல்வாக்கு' என்று முஸ்லீம்கள் பேசுகிறார்கள். அந்தக் காலத்தில் ஆண்ட விக்கிரமாதித்ய ராஜாவின் காலமே காலம்' என்று இந்துக்களும் பெருமையோடு பேசுகின்றனர். பௌத்தர்கள் அந்தக்காலத்தில் ஆண்ட அசோகனை நினைக்கிறார்கள். இப்படிப் பலரும் அந்தக் காலத்தைப்பற்றி பலவிதமாகப் பேசுகிறார்களே! பெருமைப்படுகிறார்களே! இதில் எதை அந்தக்காலம் என்று திட்டவட்டமாக ஏற்பது? பின்பற்றுவது.

அந்தக்காலம் எது என்பதற்கு யாராலும் திட்டமான முடிவு கூறமுடியாது. நிர்ணயத்தையும் காட்டமுடியாது. அந்தக்காலம் என்பது முடிவற்றது, அளவிட்டுக் கூற முடியாதது, அளக்க அளக்க நீண்டு கொண்டே போகிற கஜகோல் அது!

ஆகவே அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்கால ஏற்பாடுகள் என்று கூறுவதும், பழக்கங்கள் என்று சுட்டிக் காட்டுவதும் நிச்சயமற்றவைகளாகும். பொருத்தமானதாகவும் இலலாதவைகளாகும்.

வைதீக நண்பர்களையே கேட்கிறேன். அவர்கள் புராணப்படி பார்த்தாலும் அந்தக்காலம் என்பதைக் கூற முடியுமா? ஹரிச்சந்திரன் ஆண்ட காலமா? இராமன் ஆண்டான் என்று கூறப்படும் காலமா? அவருக்கு முன்னர் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாகப் பேசப்படும் தசரதன் காலமா? அதற்கு முன்னால் இருந்ததாகக் கூறப்படும் இட்சுவாகு பரம்பரையின் சாலமா? அது எந்தக்காலம்? கூறுங்கள்?

உலகம் தோன்றியது எனக் கூறப்படும் காலமா? அல்லது உலகம் தோன்றாத அநாதிகாலமா? மகாவிஷ்ணு ஆலிலைமீது திருப்பாற் கடலில் பள்ளிக்கொண்டிருந்தார் என்று கூறும் புராண காலமா? அப்படிப் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் உந்திக்கமலத்திலிருந்து முளைத்த தாமரைமீது பிர்மா வீற்றிருந்த காலமா? பிரமாவின் நாவில் இருந்து சரஸ்வதி வேதங்களை ஓதிய காலமா? எது அந்தக்காலம்? புராணங்களின்படி பார்த்தாலும் அந்தக் காலம் இதுதான் என்றோ, அதுதான் என்பதாகவோ உறுதியாகக் கூறமுடியுமா? முடியாதே! முடியவில்லையே!

எந்தக் காலத்தையாவது குறிப்பிட்டு அதுகான் அந்தக்காலம் என்று, நாங்கள் கூறும் காலம் என்று சொல்லிவிடட்டும், அந்தக் காலத்தில் உள்ள பழக்க வழக்கங்களை மட்டுந்தான் பின்பற்ற வேண்டும், என்றாவது நிர்ணயம் செய்யட்டும்.

அப்படி ஏதாவது ஒரு காலத்தை அந்தக்காலம். என்று தீர்மானித்து விட்டாலும், அதன்படி நடக்க, வாழயாராலும் முடியாதே!

அந்தக்காலம் போலவே இந்தக்காலத்திலும் நடக்கத்தான் வேண்டுமென்றால், காஞ்சிபுரத்திலுள்ள நான் இந்தத் திருமணத்திற்கு வரவேண்டுமானால், நான்கு நாள் முன்னதாகவல்லவா புறப்பட்டு இருக்கவேண்டும். கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கட்டை வண்டியில் பிரயாணம் செய்யவேண்டும். அல்லது கால்நடையாக காடு மேடு சுற்றித்தானே வந்தாகவேண்டும். ஆனால் இன்று அப்படி நடக்க முடியுமா? அல்லது நடப்பதுதான் நல்லதா?

இராமன் காலந்தான் அந்தக்காலம் என்று முடிவு கட்டினால் அந்த நாளைப் போலவே இந்த நாளிலும் வாழ முடியுமா? வாழத்தான் வேண்டுமென்றாலும் முடியுமா? இராமர் காலத்தை நல்லகாலம் என்று போற்றிப் புகழ்பவர்களால்கூட அப்படி வாழ முடியாதே!

இராமர் காலத்தில் இரயிலும் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிடமுடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள். இருக்க முடியும்! இராமர் காலத்தில் இல்லாத ரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப்போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாயவிமானம் இல்லையென்று ஆகாயவிமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராஜா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா இன்று தள்ளி விடுகிறார்கள், கிடையாதே!

எனவே அந்தக்காலம் அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்கால பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று பிடிவாதம் செய்வதும் பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.

எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப் பின்பற்றவேண்டுமே தவிர அந்தக் காலத்துப் பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும், பொருத்தமில்லாமலும் பின்பற்றக்கூடாது.

உலகத்தில் மற்ற நாடுகள் எவ்வளவோ முன்னேற்றமடைந்தன, இந்த நாடு மட்டுமேதான் எல்லாத் துறைகளிலும் பழம் பெருமை பேசிக்கொண்டும், அந்தக்காலம் என்று கூறிக்கொண்டும் முன்னேறாமல் பின்தங்கிக் கிடக்கிறது. நாமும் மற்ற நாடுகளைப்போலவே எல்லாத் துறைகளிலும் முன்னேறியாக வேண்டும். நாம் அறிவுத் துறையில் முன்னேறியாக வேண்டும்.

நாம் அறிவுத்துறையில் முன்னேற்றமடைந்தால்தான் நம்மிடமுள்ள பழமைக் கருத்துக்கள் அகலும், பாசி பிடித்துப்போன கண்முடி பழக்கங்களும் தொலையும். மடமூட நம்பிக்கைகள் முறியடிக்கப்படும் என்பதை நாம் உணர வேண்டும்.

இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொள்வதுப, சீர்திருத்தத் திருமணங்களைப் பரப்புவதும் அறிவுத்துறையில் நாம் முன்னேறுவதற்கான அடிப்படைகளில் முக்கியமானதாகும், சீர்திருத்தம் திருமணத்திலிருந்து துவங்குவது. வாழ்வில் நல்லதொரு நிகழ்ச்சியாகும். எனவே இதைக்கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லையென்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

உலகம் அறிவுத்துறையில் எவ்வளவோ முன்னேறி இருந்துங்கூட இந்த நாடு மட்டும் உலக முன்னேற்றத்துடன் ஒட்ட முன்னேறாது பழமையிலே பெருமை கண்டு பின்தங்கிக் கிடக்கிறது என்று குறிப்பிட்டேன்.

இதனை நாம் நாட்டில் தினமும காணும் காட்சிகளிலிருந்தே காணலாம். அண்மையில் வடநாட்டில் கடந்த கும்பமேளா என்ற விழா எதைக் குறிக்கிறது? அதில் நடந்த நிர்வாண ஊர்வலம் எதைக் காட்டுகிறது? அல்லது இன்னமும் இந்த நாட்டில் காட்டுமிராண்டித்தனம் மக்களிடம் இருக்கிறது என்பதைத்தானே காட்டும்! இத்தகைய காட்சியைக் காணும் எந்த வெளி நாட்டானும் நம்மைப்பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணுவான்!

இதைப்போலவே, நான் அடிக்கடி குறிப்பிட்டுவரும் கோவைக்கு அடுத்துள்ள காத்தாமடை என்கிற ஊரில் நடக்கும் அர்த்தமற்ற ஆபாசத் திருவிழாவும் இருக்கிறது! அங்கே அனுமார் ஆவேசமாடும் ஒரு சாமியார் வாயிலிட்டு மென்று கீழே துப்பும் எச்சில் வாழைப் பழத்தைப் புசிப்பதால் பிள்ளைப்பேறு கிடைக்குமென்று நம்பி, எத்தனையோ பெண்கள் எடுத்துப் புசித்துவருகிறார்களே! இதெல்லாம் சரியா? இந்தக் காலத்திற்கும் தேவைதானா?

அண்மையில் எங்கோ ஒரு இடத்தில் பாரதப் பிரசங்கம் நடந்ததாம். அதன் கடைசி நாளன்று பீமன் வேஷம் போடுபவன் துரியோதனைக் கொல்வதற்காகப் படுகளம் நடந்தது. அன்று 6 அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் மண்ணினால் செய்யப்பட்டிருந்தது. இதனை பீம்வேடதாரி வெட்டி வீழ்த்தினான். இதனை சுதேசமித்திரன் பத்திரிகை படம்பிடித்து பெரிதாகப் போட்டுக் காட்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட கேவலமான பழக்கங்களையும், அர்த்தமற்ற திருவிழாக்களையும் பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும். ஆகவேதான் சீர்திருத்தத் திருமணங்கள் நடப்பதின் மூலம் அறிவுப் பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம்.

சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக்கிடக்கும் மூடக்கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்துகொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துகிறேன்.

இந்த திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக்கூடதா என்றும் சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கன். இப்படிப் பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான் மாட்டோம், பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துவிடுகிறேன்.

அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும், ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோர தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பாரத்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயகன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்?

மக்கள் வாழவேண்டும் உலகம் உருப்படவேண்டும். வறுமை ஒழிய வேண்டும், உலகத்தில் உண்மை. தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது. எந்தப் பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காக் கடவுளை வரம் கேட்ட பக்தர்கள் யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.

எல்லோரும் தங்கள் சுயநலத்தைத்தானே பெரியதாகக் கருதியிருக்கிறார்கள். எனக்கு இந்திர பதவியைக் கொடு' என்றொரு முனிவர் கேட்பார். எனக்குக் காமதேனு வேண்டும், கற்பக விருட்சம் தேவை என்று மற்றொரு தவசி கேட்டிருக்கிறார். மேனகை, ரம்பை, திலோர்த்தனை ஊர்வசி போன்ற தேவலோகத்து நடன மாதர்களின் சுகத்தையனுபவிக்க சொர்க்க வாசகம் தேவையென்று ஒரு நாயன்மார் கேட்பார்.

வைகுந்த பதவியும் சிவலோக வாசத்தையும் தங்ககளுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும், அவர்கள் பாடியபாடல்களையும் இந்தத் திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றதுதானே. இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்குத்தான் எதையாவது கேட்பார்களே தவிர; நமக்காக ஒன்றும் பேச மாட்டார்கள் கேட்க மாட்டார்களே! ஆகவேதான் இங்கே எந்தப் பக்தரையும் சரி, அய்யரையும் சரி நாங்கள் அழைக்கவில்லை, அழைப்பதுமில்லை. அதைப்போலவே நமக்காக எழுதப்படாத பாடப்படாத எந்தப்பாடலையும் பாடுவதில்லை, பாடவும் விடுவதில்லை.

நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படும், அக்கறை காட்டும் நண்பர்களைத்தான் நாம் அழைக்கிறோம், அப்படிப்பட்டவர்களால் தானே நாம் முன்னேற வழிவகைகளை காட்ட முடியும், கூற முடியும்!

ஆகவே தேவாரம் பாடவில்லை, திருவாசகம் படிக்கவில்லை, அய்யரைக் கூப்பிட்டு மந்திரம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை என்பதை மறுமுறையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

கடைசியாக சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி காட்டவில்லை. அக்கினி வளர்க்கவில்லை, ஆண்டவனைப் போற்றவில்லை என்று குறைபடுவதற்கும் அர்த்தமில்லை யென்று சொல்லிவிடுகிறேன்.

திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக? திருமணத்திற்கு அக்கினிதேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத்தானே ? அந்த அக்கினி பகவான் யோக்கியதை என்ன ? அருந்ததி என்று ஒரு சினிமாக் கூட வந்ததே. அதைப்பார்த்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், நான் கூறப்போவது.

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் ஒரு யாகம் செய்தனராம் அந்த யாகத்திற்குச் சென்று அவிர்ப்பாகம் வாங்கிச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டுத் தன் மனைவியிடமே கூறினானாம் இந்தக் காலத்தில் எப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதனுங்கூட தான் கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின் மீது ஆசை வைத்திருப்பதாகக் கூறமாட்டான். ஆனால் ஆண்டவனான அக்கினி தன் மனைவியிடம் தான் ரிஷி பத்தினியிடம் காமுற்று இருப்பதை கூறியவுடன் தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படிக் கேட்டானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியரைப் போலவே உருவமெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம் ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவம் எடுக்க முடியவில்லை என்றும், அதற்குக் காரணம், அருந்ததி ஆதிதிராவிட பெண்மணி என்றும் புராணம் மேலும் தொடருகிறது.

பிறர் மனைவியைக் காமுறும் தீயகுணம் படைத்த அக்கினியையா நம்முடைய திருமணக் காலங்களிலே சாட்சிக்கு அழைப்பது? கூடாது, கூடவே கூடாது ஆகவேதான் அக்கினி வளர்ப்பதில்லை.

இப்படித்தானே மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள்! புராணங்கள் சொல்லுகிறபடியே பார்த்தாலும் எந்தக் கடவுளும் யோக்கியமான கடவுளாகத் தெரியவில்லையே! பிரமன் திலோர்த்தமையை கெடுத்தான். சிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் காமுற்றான். இந்திரன் அகலிகையையும், சந்திரன் குருபத்தினி தாரகையையும் மகா விஷ்ணு சத்திரன் மனைவியையும் கெடுத்தனர் இப்படித்தான் புராணங்கள் சொல்லுகின்றன.

இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான கடவுளரையா நாம் நமது வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்வது?

காமக் குரோதம் மிகுந்த அக்கினி பகவானை அழைத்து அவனைச் சாட்சியாக வைத்துத் திருமணம் நடத்துவது அறிவுக்குப் பொருத்தமானது தானா? அதைப்போலவே கண்மூடித்தனமாக நடந்து, காமக்களியாட்டங்களில் ஈடுபட்ட மற்ற கடவுளையும் திருமணக் காலங்களிலே எண்ணுவதும் கூடாதே! இவைகளை நாம் கூறும்போது சில ஆத்திக நண்பர்களுக்குக் கோபம் ஏற்படலாம்! கோபம் ஏற்பட்டு என்ன பலன்? நாங்களாகக் கதைகட்டி எதையும் கூறவில்லையே!

நாங்கள் எடுதுக்காட்டி விளக்குவதும் ஆபாசங்கள் என்று கூறிக் கண்டிக்கும் ஆண்டவன் திருவிளையாடல்களும் எங்கள் கற்பனைகள் அல்லவே அல்ல! அவைகள் அத்தனையும் பக்தர்கள் பக்தியோடு படித்துப் பாராயணம் செய்து வரும் புராணங்களில் காணப்படுபவைகள் தான என்பதை ஆத்தீக நண்பர்கள் உணர்ந்து திருத்தவேண்டுகிறேன்.

கடவுள் என்றும், மதம் என்றும், சாஸ்திர சடங்குகள் என்றும், மக்கள் தங்கள் காலத்தையும் கருத்தையும், நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும், ஊக்கத்தையும், பணத்தையும், பகுத்தறிவையும் சிறிதும் பயன்படுத்தாது பாழாக்குவதைத் தடுத்தாகவேண்டும்!

பழைய காலத்தைப்போல நாம் நடக்க முடியாது நடக்கத் தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.

மக்களைப் பழமைப் பிடியிலிருந்து மீட்டு, பகுத்தறிவுப் பாதையில் நடத்திச் செல்ல திராவிட முன்னேற்றக் கழகம் பெரிதும் பாடுபட்டு வருகின்றது.

பழமைக் கருத்துக்களையும், மத மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்குகளையும், கண்மூடி வழக்கங்களையும் மக்கள் அடியோடு விட்டொழிக்க வேண்டுமென்று தி. மு. க. பல காலமாகவே வற்புறுத்தி வருகின்றது.

சுயமரியாதைப் பிரச்சாரந்தான், சமுதாய சீர்திருத்தமும் முன்னேற்றமும்தான் தி.மு. கழகத்தின் அடிப்படை வேலையாகக் கருதப்பட்டு வருகிறது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடன் வாழ்ந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மக்கள் உணர்ந்து, இனத்தால் ஒன்றுபட்டு வாழும் முறையை மக்களிடையே எங்கள் கழகம் ஏற்படுத்தி வருகின்றகின்றன.

நாம் திராவிடர், நமது இனம் திராவிடம், நமது கலை கலாச்சாரம் இவையிவை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும். அப்போதுதான் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனப்பான்மை வேரோடு அழியும், மத மூட நம்பிக்கைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும், கருத்தற்ற கண்மூடிப் பழக்கவழக்கங்களும் மாய்ந்தொழியும்.

ஆகவே நாமெல்லாம் திராவிடர், நமது இனம் திராவிடம் என்ற உணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டுப் பெருகி திராவிட சமுதாயம் நல்வாழ்வு வாழ வழி வகுப்போம்.

நாம் எந்தெந்தக் கொள்கைகளை வலியுறுத்தி பாடு பட்டு வருகிறோமோ அவைகளில் சில இன்று சட்டமாகி வருகின்றன என்று குறிப்பிட்டேன். இதனால் நமது பணி நாட்டு மக்களுக்கு மிகவும் தேவையானது--அவசியமானது என்பதை நாம் அறிகிறோம். நமது எண்ணம் ஈடேறியதைக் கண்டு மகிழ்கிறோம்.

இந்த மகிழ்ச்சியால் வெறும் ஊக்கத்தையும் உணர்ச்சியையும் சமுதாயத்துறையில் உள்ள சீர்கேடுகளைப் போக்கவும், மக்களிடையே மேலும் தீவிரமான முறையில் அறிவுப் பணி புரியவும் பயன்படுத்தி பாடுபடவேண்டும்.

சமுதாயம் சீர்திருந்த இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நல்லதொரு அடிப்படை என்று குறிப்பிட்டேன்.

எந்தக் காரணங்களைக்கொண்டு பார்த்தாலும் நாம் இந்த சீர்திருத்தத் திருமணம் நடத்தும் முறை தவறு என்று எடுத்துக் காட்டவோ அல்லது பழைய முறைதான் சரி என்று வாதிடவோ ஒருவராலும் முடியாது.

இந்நிலையில் நாம் அறிவுத் துறையில் முன்னேறவும் சமுதாயம் சீர்திருந்தவும் அடிப்படையான இத்தகைய சீர்திருத்தத் திருமணங்களைத் தொடர்ந்து செய்துவர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.