உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பு வாழ்க்கை/வாழ்வில்...

விக்கிமூலம் இலிருந்து

வாழ்வில்...


றுமை எத்தகைய கோலத்தைத் தரமுடியும் என்பதை எடுத்துக் காட்டவே, அந்த மூதாட்டி விட்டு வைக்கப் பட்டிருக்கக் கூடும்! கால தேவன் எத்தனையோ வண்ண மலர்களை, அழகான அரும்புகளைக் கூட அழித்தொழித்து விட்டு, இந்த 'எலும்புக்கூடு' உழல அனுமதிப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்! வெறும் சருகு? அதற்குக் காலும், கையும், கண்ணும், அம்மட்டோ! பாழும் வயிறும்!!

அந்தக் காய்ந்த வயிறுக்கு யாராவது புண்யவதி புளித்த கஞ்சி தந்துவிட்டால், பெரிய விருந்துதான்! விருந்து இரண்டு நாளைக்கு ஒரு தடவை கிடைக்கும் புண்யவதியை அவள் புருஷன் கொடுமைப் படுத்தாதிருந்தால்!

மற்ற நாட்களில் தண்ணீர், காற்று அதிகமாக ஏற்றுக் கொள்ளவும் கிழவிக்குச் சக்தியில்லை. பட்டினியோடு நீண்ட காலமாப் பழகி விட்டதால் கிழவியின் கண்களிலே, நீர் வருவது நின்று நெடுநாட்களாகிவிட்டன!

இரண்டு குழிகள்! அவ்வளவுதான்! கண்களாகத் தான் அவை முன்பு இருந்தன!

மைகூடத் தீட்டி அழகுபார்த்ததுண்டு--ஆனால் அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு--'அவர்' இருந்த போது.

அவர் தந்த செல்வம் 'அக்கரை' சென்று ஆண்டு இருபதுக்கு மேலாகி விட்டன--அரும்பு மீசைக்காரனாகச் சென்றான்--அன்னை அப்போது அழ முடிந்தது--இப்போது? அதற்கும் சக்தி வேண்டுமே, இல்லை!

துக்கம்--ஏக்கம்!
நிலைத்துவிட்ட திகைப்பு!
தரித்திரத்தின் கடைசிக் கட்டம்

இவைகளின் 'நடமாடும் உருவம், அந்த மூதாட்டிக் கிழவியைக் கண்டால், "ஐயோ பாவம்!" என்று பரிதாபம் பேசியகாலம்கூட மடிந்து போய் விட்டது--எத்தனை நாளைக்குத்தான் பரிதாபச் சிந்து பாடியபடி இருக்க முடியும்!!

மலையின் கெம்பீரம்-- மதியின் அழகொளி--மேகக் கூட்டத்தின் மோகனம் இவைப்பற்றியே, பேசிக் கொண்டும் ரசித்துக் கொண்டும், சதா சர்வகாலமும் இருக்க முடிவதில்லையே, இந்தச் சஞ்சல மூட்டையைப் பற்றியா, சிந்தனையை எப்போதும் செலவிட்டபடி இருக்க முடியும்!

'பாட்டியம்மா பாட்டி ஆகி, பிறகு 'கிழவி'யாகி பிறகு ஏ! யாரது!' ஆகி, பிறகு போ, போ! போ!' என்றாகி, பிறகு 'இதேதடா தொல்லை' என்றாகி,பெரிய சனியன் என்றாகி, பிசின், இலேசில் விடாது" என்றாகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகி விட்ட நிலை!

சுவரிலே இருக்கும் சித்திரத்தோடு யார் பேசுகிறார்கள்!

ஆனால், கிழவியோ, யார் கிடைத்தாலும் விடுவதில்லை!

பசி--பட்டினி--இதைக் கூறவா? அல்ல. அல்ல யார் போவது. அப்பா ...அடி அம்மா... அலமேலா--ஆண்டியப்பனா--யாரடப்பா--

நான்தான்--என்ன, என்னா--வீட்டுக்குப் போ--வள்ளி இருக்கா தண்ணி கொடுப்பா--

ஆண்டியப்பன் தானா.....டே அப்பா! எனக்குத் தண்ணியும் வேணாம், சோறும் வேணாம், சொக்கி கூழ் கொடுத்தா; போதும். ஒரு கடுதாசி எழுதிக் கொடுடா அப்பா..கோடித்தெரு கோபாலன், 'அக்கரை' போறானாமே, அவனிடம் கொடுத்தனுப்பனும்...வாடா அப்பா-- புண்யாடா உனக்கு... ஒரு நாலு வரி எழுதிக் கொடு

ஆண்டியப்பனுக்குக் கிழவி கூறப்போவது தெரியும். அவன் சென்றுவிட்டான், வேகமாக--வேறே வேலை கிடையாது இந்தப் பைத்தியத்துக்கு என்று முணு முணுத்தபடி,

எதிரிலேயும் பக்கவாட்டங்களிலும் தடவிப் பார்த்துப் பார்த்து, ஒரு உருவமும் கையில் தட்டுபடாததால். கிழவிக்கு அவன் போய்விட்டான் என்பது தெரிந்தது, என்ன அவசரமான வேலையோ பாவம்!--என்ற எண்ணம் கிழவிக்கு... கோபமல்ல!

கோபம் குடிபுக, அந்த மூதாட்டியின் நெஞ்சிலே இடம் ஏது! சோகம் கப்பிக்கொண்டிருந்தது?

'அக்கரை'யில் மூதாட்டியின் மணி!

இங்கு இந்த எலும்புக் கூடு!

இடையே, நாடு, காடு, மலை, வனம், வனாந்திரம், கடல்!

எண்ணம், விநாடியிலே எதையும் தாண்டும், எலும்புக்கூடு. எங்கே அந்தச் சக்தியைப் பெறுவது! புதைக்குழிக்குச் செல்லவே சக்தியில்லை!

யாராவது கிடைக்கமாட்டார்களா என்று தேடித் தேடி அலுத்துப்போய், தன் குடிசையில் போய்ச்சுருண்டு விழுந்துவிடுவது வாடிக்கை.

சொந்தக் குடிசைதான்!

அது வேறு யாருக்கு வேண்டும்?--அதனால் கிழவியிடமே இருந்தது!

சரிந்துபோன சுவர். பிய்ந்துபோன கூரை...அதன் நிலைமையும் கிழவியின் கோலமும் ஒரேவிதம்.

அக்கரையில், 'மணி' 'மார்க்' ஆகி; மாதா கோவில் தோட்டத்தில வேலை செய்து ஒடிந்துபோய், பிறகு உல்லாச உலகுக்கு'க் கயவன் ஒருவனால் இழுத்துச் செல்லப்பட்டு, கள்ளாகி, அடிபட்டு, உதைபட்டு, செத்தும் போய் விட்டான்.

மூதாட்டிக்கோ, 'மணி' மளிகைக் கடை வைத்திருக்கிறானோ, மலர்த்தோட்டத்திலே வேலை பார்க்கிறானோ, மாடு மனை மனைவியோடு சுகமாக இருக்கிறானோ...எவ்விதம் இருக்கிறானோ என்ற எண்ணம். நல்லவிதமாகத்தான் இருப்பான் என்ற எண்ணம்... நல்லவிதமாக இருக்கவேண்டும் என்றுதானே தாய் உள்ளம் எண்ண முடியும் அதனால்!

'பாவிப்பய, ஒரு காலணாக் கடுதாசி போடக்கூடாதா?' என்று எண்ணி எண்ணி கிழவி ஏக்கம்பிடித்து அலைவது கண்டு, முதலில் பலர் சமாதானம் கூறிப்பார்த்தனர் கார்டு விலை முக்காலணாக்கூட ஆகி விட்டது... பாவிப் பயமகன் காலணாக் கடுதாசி போட்ட பாடில்லை...சமாதானம் கூறுவதைக்கூட மற்றவர்கள் நிறுத்திக் கொண்டனர். கிழவியோ, 'அக்கரை' போகிறவர்களிடமெல்லாம் கடுதாசி,கொடுத்தனுப்புவதை நிறுத்த வில்லை. சிரஞ்சீவி மணிக்கு... என்று துவங்கி, முத்தயமா என்று முடியும் அந்தக் கடிதம் ஒவ்வொன்றும், எவ்வளவு கல்நெஞ்சத்தையும் கரைத்துவிடும், அவன்தான் கல்லரை சென்று விட்டானே... பலன் என்ன கிடைக்கும்!

ஓயாமல் கடிதங்கள்!

அந்தக் கிராமமும் அடிக்கடி, 'அக்கரைக்கு' அரும்பு மீசைகளை அனுப்பியபடி இருந்தது.

நஞ்சை இருந்தது.. புஞ்சையும் உண்டு! கரும்பு பயிராகும், கால்வாய்ப் பாசனமும் உண்டு. ஆனால் அவ்வளவும், நாலைந்து பெரிய புள்ளிகளுக்குச் சொந்தம், அவர்களோ நாடாளும் நாயகர்கள் வரிசையில் இருந்தவர்கள் எனவே தலை நகரில் வசித்து வந்தனர்.

அரும்பு மீசைகள், அக்கரை சென்று ஐந்தாறு ஆண்டு பாடுபட்டால் ஆயிரம் ஐந்நூறு மீதம் பிடித்து அரையோ காலோ ஏகர் வாங்கி, பிறகு ஏதோ கால் வயிற்றுக் கஞ்சிக்குக் குறைவில்லாமல் வாழலாம் என்று ஆசைப்பட்டுத்தான் சென்றனர்!

அவ்விதம் சென்றவர்களிலே ஒருவன்தான் மணி.

மணி என்பது செல்லப் பெயர்...முழுப் பெயர் சிவ சுப்பிரமணியம்!

'அவர்' இருந்தால் ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிக் கொடுத்தாலும் உன்னை 'அக்கரைக்கு' அனுப்பமாட்டார் என்று கூறிக் கதறி, பிறகு மணியின் நெற்றியிலே பிள்ளையார் கோவில் ஐயர் கொடுத்த (ஒரு அணாவுக்கு) விபூதியைத் தடவி, ஆயிரம் தெய்வங்களை வேண்டிக் கொண்டு விடை கொடுத்தனுப்பினாள் கிழவி.

எப்போதாவது கொஞ்சம் 'போடும்', வழக்கம் உண்டு மணிக்கு!

அக்கரை சென்றதும், அந்த ரகமானவர்களின் 'நேசம்' அதிகமாகி, 'போடுவதும்' வேகமாக வளர்ந்தது--அது அவனைப் படாதபாடு படுத்திவிட்டது... கல்லறை அவனை அழைத்துக்கொண்டது.

கிழவிக்குத் தன் 'மகன்' அக்கரையில் இருப்பதாக நினைப்பு.

'யாரிட்ட தீவினையோ, என்னை அவன் மறந்து விட்டான்' என்று எண்ணி வருந்தினாள்.

ஆயிரம் தெய்வங்களை மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொண்டாள். தெய்வங்களுக்கு அதுதானா வேலை! ஒரு திருவிழா முடிந்ததும் மற்றோர் திருவிழாவுக்குத் தங்களைத் தயாராக்கிக் கொள்வதற்கே காலம் போத வில்லை...அக்கரை சென்றவன் மனதிலே புகுந்து, இந்த 'ஐயோ பாவ'த்தின் மீது பாசம் ஏற்படச் செய்யவா நேரம் கிடைக்கும்! அதிலும் கடல்கடந்து செல்ல வேண்டும்!

அந்தக் கிராமத்துக்குப் பெரிய பட்டினங்களெல்லாம் பொறாமைப் படக்கூடிய பெயர் இருந்தது...

பொன்னூர்

ஜல்லடை போட்டுச் சலித்தெடுத்தால்கூட ஒரு குண்டுமணி பொன்னும் கிடைக்காத மட்டிக்காடு! அதாவது பிள்ளையார் கேரவில் சாமி வீடு தவிர, ஐயர் வீட்டிலே 'சோதனையிடத் துணிவுகொண்ட 'பாவிகள் உண்டா? மற்ற இடங்களிலே குண்டுமணி அளவு தங்கம் கூடக் கிடையாது... பெயர் மட்டும் பொன்னூர்!

பொன்னூருக்குப் பூர்வீகப் பெருமைகள் உண்டு!

சீதாபிராட்டியாரை மயக்கிய மாயமான் ஓடிவந்த போது கிளம்பிய, தூசி, அங்கு படிந்ததால் பொன்மயமாகி விட்டதாம் அந்த ஊர்!

மாரி கோவில் திருவிழாவின் போது ஆடு வெட்டி ஆண்டியப்பன் கதை படிப்பான். அப்படிப்பட்ட பொன்னூர் அக்கரைச் சீமைக்குக் கூலிகளை அனுப்பும் 'பாக்கியம்' பெற்றுவிட்டது. அந்தத் தொகுதியிலே வெற்றி பெற்ற எம். எல். ஏ. கூட, கடல கடந்த இந்தியர் பாதுகாப்புக் கமிட்டியில் ஓர் உறுப்பினர் கமிட்டி கூடும் போது நாளொன்றுக்குப் பதினெட்டு ரூபாய் 'படிச் செலவுகூடப் பெற்றுவந்தார். 'அக்கரைச்சீமைக்கு அரும்பு மீசை' கிளம்பும் போதெல்லாம்கண்ணீரும் கம்பலையுமாகக் கிழங்கள் கூடிக் கூடிப் பேசும்.

போனதும் கடுதாசி போடுகிறேன்!

வீணா, ஏன் மனதை அலட்டிக்கிறே!

மாசாமாசம் தவறாமப் படிக்குப் பணம் அனுப்பிவைக்கிறேன்.

மாடு, கண்ணு, ஜாக்கிரதை!

மாரியம்மன் பண்டிகைக்கு, கிடா பலிகொடுக்க மறந்து விடாதிங்க!

இவ்விதமெல்லாம் 'தைரியம்' கூறிவிட்டுதான் செல்கிறார்கள் அரும்பு மீசைக்காரர்கள்--"உன் மகனும் கிளம்பி விட்டானா...." என்று கேட்கும்போதே, கிழவிக்குத் தன் மகன் அக்கரைக்குப் புறப்பட்ட நாளின் நிகழ்ச்சிகள் கவனத்துக்கு வரும், இவனுக்காவது காளியாத்தா நல்ல புத்தி கொடுக்க வேணும் என்று வாழ்த்துவாள்--மனதுக்குள். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, தன் மகனை எப்படியாவது கண்டுபிடித்து கடுதாசியைக் கொடுத்து, ஒரு காலணாக் கடுதாசி போடச் சொல்லும்படி வேண்டிக் கொள்வாள். ஆகட்டும் பார்க்கலாம்--இந்தச் சீமையிலே அவன் எந்த மூலையிலே இருக்கிறோனோ. நான் எந்தக் கோடியிலே வேலை செய்யப் போறனோ, யார் கண்டாங்க, இருந்தாலும் கண்டா கட்டயமாகக் கடுதாசியைக் கொடுத்து, புத்திமதி சொல்றேன். என்று வாக்களிப்பான், கப்பலுக்குக் கிளம்புபவன், கண்ணுடா நீ தங்கமடா நீ--என்று கிழவி வாழ்த்துவாள். பணம், சில குடிசைகளுக்கு வந்தது! கடிதம் பலபேருக்கு வந்தது. சிலர், "நோய் நொடியுடன்' திருப்பிவிட்டனர்?

கிழவிக்கு மட்டும், காலணாக் கடுதாசி கிடைக்க வில்லை-- திரும்பியவர்களிடமிருந்து, மகனைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை.

அன்று கிழவிக்கு, வழக்கமான வேலை கிடைத்து விட்டது--வண்டியோட்டி வரதன், அந்தப் பக்கத்திலே 'பஸ்' ஏற்பட்டுவிட்டதால், நொடித்துப் போனான்--ஆகவேண்டி ஓட்டும் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு, அக்கரை போக தீர்மானித்து விட்டான்--அவனிடம் 'கடுதாசி' கொடுத்தனுப்பும் வேலை, கிழவிக்கு.

"அவ குலுங்கி மினிக்கித் திரியும் போது எனக்குத் தெரியும், அவகெட்டுப் போவா என்பது" என்று கூறுவார்கள் தலை நரைத்தவர்கள், வள்ளியைப் பற்றி வள்ளி தவறியவள் !

ஆடு வெட்டி ஆண்டியப்பன் தாலி கட்டி வள்ளியைப் பெறவில்லை--தாலி கட்டிய தாண்டவன் காலமான பிறகு வள்ளி நெல் குத்தி ஜீவித்து வந்தாள். பக்கத்துக் கிராமத்திலே நெல் அரைக்குமியந்திரம் அமைந்த பிறகு அவளுக்கு பிழைப்புக்கு வழி அடைத்துப் போய் விட்டது. ஆண்டியப்பன் அவளை ஜாடையாகக் கவனிக்க ஆரம்பித்தான்--வள்ளி, "நாசமாகப் போவான் மாரி சரியான கூலிகொடுக்கப் போகிறா பார்" என்று சபித்தாள்--அவன் அஞ்சவில்லை--அவள், "அண்ணன்” என்று முறை கொண்டாடி, அரை கால் கடன் கேட்டுப் பெற்று வந்தாள். அவன வட்டி கேட்கவில்லை, அசலைப்பற்றியும் கவலைக் காட்டவில்லை--அவள் புரிந்து கொண்டாள்--வெறுப்பாக இருந்தது--ஆனால்--எவ்வளவு காலம் வறுமையுடன் போராட முடியும்--"ஐயயோ! வேணாமுங்கோ" என்று கொஞ்சும் குரலில் தொடங்கி' "எப்பவும் கைவிட மாட் டாயே!" என்று கொஞ்சும் குரலில் முடிந்தது அவளுடைய வீழ்ச்சி!

வள்ளிக்கு, நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரியும்.

அவளிடம் சென்று, ஆயிரம் கண்ணே! கற்கண்டே போட்டு, கிழவி எழுதச் சொன்னாள்.

காளியாயி காடாட்சத்தாலே நான் இன்னும் உசிரை வச்சிக்கிட்டுத்தான் இருக்கிறேன். நான் ஒருத்தி இருக்கிறேன் என்கிற நினைப்பே உனக்கு மறந்து போச்சா. உன்னைக் கண்ணாலே கண்டுச் செத்துத் தொலைக்கத்தான் நான் காத்துக்கிட்டு இருக்கிறேன். நாலு நாளைக்கு ஒரு தடவை கூடச் சோறுகிடையாது. நான் இப்பவோ பின்னையோன்னு இருக்கிற இந்தச் சமயத்திலேகூட நீ ஊர் திரும்பாமல் இருக்கிறது தர்மமா! ஒரே ஒருதடவை வந்து போ. உன்னைக் காணவேணும் என்ற ஆசை என்னைக் கொல்லுகிறது. நான் கண்ணை மூடறதுக்குள்ளே ஒருமுறை பார்த்தாகணும் இங்கே நான் அனுபவிக்கிற தரித்திரம் சொல்லி முடியாது ஒரு அஞ்சோ பத்தோ அனுப்பினா, நாலைந்து கோழி வாங்கி வளர்த்து முட்டை வித்து பிழைச்சிக்கலாம்--நான் சாப்பிட்டதுபோக மிச்சம் கூடக்கிடைக்கும்--பனிக்காலத்தில் உடல் வெட வெடன்னு ஆடிப் பிராணனே போயிடறமாதிரி ஆயிடுது ஒரு கம்பளிப் போர்வை அனுப்பினா நல்லது.

கிழவி சொல்லிக்கொண்டே வந்தாள்--வள்ளி எழுதிக் கொண்டே இருந்தாள்.

"இன்னும் என்ன எழுதணும்--பெரிய பாரதமே எழுதியாச்சி"--என்று சலித்துக்கொண்டாள் வள்ளி.

"கண்ணு! இன்னும் ஒரே ஒரு சங்கதி எழுதிடு" என்று கெஞ்சினாள் கிழவி.

"சொல்லித் தொலை" என்றாள் வள்ளி,

கிழவி சொல்லத் தொடங்கினாள். உன்னாலே பணம் காசு அனுப்ப முடியாவிட்டால் பரவாயில்லை. நீ இங்கே வந்து சேர்ந்தா போதும் உன்னைக் கண்ணாலே பார்த்தாலே என் கஷ்டம் அத்தனையும் தீர்ந்து போகும். அடுத்த கப்பலுக்கே பொறப்படு."

வள்ளி, கட்டாயப்படுத்திக் கிழவியை முடிக்கச் சொன்னாள்.

கடிதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் கிழவி வரதன் குடிசைக்கு,

இதுபோல எத்தனை முறை அனுப்பினோம்--எவ்வளவு உருக்கமான கடிதங்கள்--எத்தனை சாமி மீது ஆணையிட்டு எழுதினோம்--ஏனோ அவன் மனம் துளிகூட இரங்கவில்லை இந்தத் தள்ளாத வயதிலே என்னைத் தவிக்க விட்டு விட்டு அக்கரையிலே சுகமாக இருக்க, எப்படித்தான் அவனுக்கு மனம் வந்தததோ--என்றெல்லாம் எண்ணியபடி கிழவி சென்று கொண்டிருந்தாள்.

கடிதங்களைப் படிப்பதேயில்லையா--படித்துப் பார்த்தால், பகையாளியாக இருந்தால்கூடப் பரிதாபம் பிறக்குமே.

சரியாகப் படித்திருக்கமாட்டான்--ஒரு கணம் உருகுவான், மறு கணமே மறந்துவிடுவான்--விளையாட்டுச் சுபாவம்--அல்லது வேலை அவ்வளவு கடினமோ, கடிதம் போடக்கூட கிடைக்காதோ--என்ன மாயமோ, என்று எண்ணிக்கொண்டே சென்றாள்.

"பாட்டியம்மா பாதை ஓரமாகப் போ...எதிரே காளைமாடு வருது--" என்று அன்புடன் கூறினான். கிராமத்துக்குப் புதிதாக வந்து குடியேறிய பாதிரியப்பன்.

கிராமத்தில் வைத்தியசாலை நடத்திக்கொண்டு, பச்சிலைகளைச் சேகரித்து ஏதோ ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்தான் பாதிரியப்பன். கிராமத்தில் நல்ல மதிப்பு, கிழவியைப் 'பாட்டியம்மா' என்று அழைக்கும் ஒரே ஆசாமி, பாதிரியப்பன் தான்.

'டாக்டரய்யாவா' என்று கேட்டுக்கொண்டே, அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் கிழவி, அவளுக்கு ஒரு எண்ணம் உதித்தது. கடிதத்தை மகன் சரியாகப் படிக்கிறானோ இல்லையோ என்ற சந்தேகம் போய்விட்டது. எழுதிக்கொடுக்கிறார்களோ இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது எனவே கடிதத்தை எடுத்து டாக்டரிடம் கொடுத்து, அக்கரையிலே இருக்கிற என் மகனுக்கு அனுப்ப இந்தக் கடுதாசி--படித்துச் சொல்லுங்கோ டாக்டர் அந்தச் சிறுக்கி கிறுக்கினா; சரியா இருக்குதான்னு பார்க்கலாம் என்று சொன்னாள். டாக்டர் கடிதத்தைப் பிரித்தார்--சிரிப்பு வந்து விட்டது?

'என்ன டாக்டரு! சிரிக்கறிங்க.'

'யார் பாட்டியம்மா கடுதாசி எழுதி கொடுத்தது'

அதுதான்--வள்ளி--ஒருமாதிரியானவள்னு ஊர்லே பேசுவாங்களே, அந்தக்குட்டி அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும்.

'போக்கிரிப் பொண்ணு' பாட்டியம்மா அந்த வள்ளி கடுதாசியிலே எழுத்தே கிடையாது கோலம் போட்டு வைத்திருக்கிறா...!

'என்னாது... கோலம் போட்டிருக்கிறாளா...பாவி நான் சொல்லிக்கொண்டே இருந்தேன் அவ எழுதிக்கிட்டே இருந்தா....'

'உன்னை அந்தப் பொண்ணு ஏமாற்றிவிட்டிருக்கா இருக்கட்டும் பாடடியம்மா, நான் பார்த்து கண்டிக்கிறேன்'.

இப்பத்தானே எனக்கு சூட்மம் புரிந்தது. என் மகன் பேரிலே கோபித்துக் கொண்டேன்.நானு இந்தச் சூட்மம் தெரியாததாலே, இந்தப் படுபாவிங்க ஒவ்வொருத்தரும் நான் கடுதாசி எழுதிக் கொடுக்கச் சொன்னபோதெல்லாம் இந்த வள்ளி செய்ததுபோலச் செய்துதான் என்னை ஏமாத்தியிருக்காங்க. என் ஆசை மகனுக்கு ஒரு கடுதாசியும் போய்ச் சேர்ந்திருக்காது. அந்தக் கோபம் என் மகனுக்கு அதனாலேதான் காலணா காடுதாசி கூட அவன் போடலே டாக்டரய்யா இப்படி ஒரு கிழவியை ஏமாத்திடலாமா. நீங்களே சொல்லுங்க இது தர்மமா

வருத்தப்படாதீங்க பாட்டியம்மா--சாய்ந்தரமா வீட்டுக்கு வாங்க, நான் கடிதம் எழுதித் தருகிறேன்.

டாக்டரை வாழ்த்திக்கொண்ட கிழவி தன் குடிசைப் பக்கம் சென்றாள்.

வள்ளி வீட்டுக்குப் பாதிரியப்பன் சென்று, சற்றுக் கோபமாகவே கண்டித்தான்.

'அது ஒரு பைத்தியம் டாக்டரய்யா! நான் மட்டுமில்லை. நம்ம கிராமத்திலே யாருமே, கிழவி கடுதாசி எழுதச் சொன்னா, ஏதாவது கிறுக்கித்தருவாங்க அதுக்கு மூளை சரியில்லை; அதனாலே, இப்படி ஓயாம, கடுதாசி எழுதிக் கொடு கொடுன்னு, உசிரை வாங்கும் அதனாலேதான் நான் கோலம் போட்டேன். தப்பாஎண்ணிடாதீங்க அக்கரையில் அதுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை. அவன் எப்பவோ செத்துப்போயிருப்பான் உயிரோடு இருந்தா இத்தனை காலமுமா ஒரு காலணா கடுதாசி போடாதிருப்பான். இங்கே இது பைத்தியம் பிடித்துப்போயி, இப்படித் தலைவிரி கோலமா இருக்குது, டாக்டரய்யா. நீங்க ஒண்ணும் வித்யாசமா எண்ணிராதீங்க. அது பைத்தியம் என்று வள்ளி சமாதானம் கூறினாள். டாக்டருக்கு திருப்தி ஏற்படவில்லை.

'என்ன காரணம் சொன்னாலும், நீ செய்தது தப்பு வள்ளி ஒரு தள்ளாத கிழவியை இப்படி ஏமாத்துவது பாபம் என்றார்.

'ஐயோ, ஐயோ... நீங்க உலகம் தெரியாதவரு அந்தக் கிழத்துக்குப் புத்திப் பேதலிச்சுப் போயிருக்குதுங்க. அதுக்கு மூளை சரியா இருந்தா ஏன் அக்கரை போனவனை நினைச்சுக்கிட்டே கிடக்கேணும் இப்படி ஐயா? அம்போன்னு பிச்சை எடுத்துப் பிழைக்க வேணும் மலையாட்டமா இருக்கிறானே, மற்றொரு மகன் அவனோடு போய் இருந்துகிட்டு வயிறாரச் சாப்பிடக் கூடாதா நிம்மதியா கிடக்கலாமே' என்றாள்.

'மற்றொரு மகனா? கிழவிக்கா? என்று ஆச்சரியத்துடன் கேட்டான பாதிரியப்பன.

நீஙக கிராமத்துக்கு புதுசுதானே தெரிந்திருக்காது கிழவிக்கு இனனொரு மகன் இருக்கிறான் பெரிய அந்தஸ்து இல்லைன்னாலும் வயிறார கஞ்சி ஊத்தக் கூடியவன் தான் சமுசாரி அடுத்த கிராமத்திலே இருக்கிறான் சன்னாசின்னு பேரு என்று விவரம கூறிக்கொண்டே இருக்கும்போது தொலைவிலே ஆண்டியப்பன் வருவதைக் கண்டு அதோ அது வருது, மூக்கு மேலே கோபம் அதுக்கு நாம்ப களங்கமத்து பேசிக்கிட்டு இருந்தாக்கூட, என்னமோ ஏதேன்னு சந்தேகப்பட்டுக்கிட்டு சண்டைக்கு வந்துவிடும். நீங்க போய்வாங்க டாக்டரய்யா--பக்கத்துக் கிராமம்--சன்னாசி அவனையே கேட்டுப்பாருங்க, கிழவியோட சமாசாரம் புரிந்துபோகும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

000

சன்னாசி பெரிய குடும்பஸ்தன்--நாணயமானவன்.

பெரிய வைக்கோற்போரை சரிப்படுத்திக் கொண்டிருந்தான். டாக்டர் அவனைப் பார்க்கச் சென்றபோது!

"ஆமாங்க! என் மானத்தை வாங்கவே அந்தக் கிழம் அப்படிச் செய்வது, தலை இறக்கமாகத்தான் எனக்குயிருக்குது. தடியாட்டமா நான் இருக்கிறேன். சோத்துக்கு துணிக்கு குறைச்சல் கிடையாதுங்க இங்கே வந்து விழுந்து கிடன்னு ஆயிரம் தடவை வந்து செஞ்சிக் கேட்டாச்சிங்க ஒரே பிடிவாதமா வரமாட்டேங்குது--அங்கே பட்டினி கிடக்குது--பிச்சை எடுக்குது--எனக்கு அவமானம் தாங்க முடியலிங்க,"

"என்ன விரோதம் உன்னிடம் உன் சொந்த தாயார் தானே?"

"என்னைப் பெத்தவங்கதான். குழந்தையிலேயே என்னை இங்கே கொடுத்துவிட்டாங்க இங்கேன்னா இதுவும அன்னியரில்லே, அசலாரில்லே - எங்க சின்னம்மா வீடுதான்.

"உங்க சின்னம்மாவிடம் விரோதமா?"

"ஒரு இழவும் கிடையாதுங்க. ஆனா இங்கே நான் வந்ததிலே இருந்து, எங்க அம்மா காலடி எடுத்து வைக்கிறதில்லே, அது என்ன வைராக்கியமோ போங்க. என் கல்யாணத்துக்கூட பத்துபேர் வர்ரதுபோல வந்துவிட்டு ஒரு வேளை கையை நனைச்சிகிட்டுப் போனதுதான். கான் காலிலே விழுந்து கும்பிட்டுக் கூப்பிட்டாக்கூட வரமாட்டேங்குது--காரணம சொல்றதில்லே. எனக்குச் சில சமயம் வருகிற கோபம், அதை வெட்டிப்போட்டுவிடலான்னு கூட தோணுது போங்க. 'உங்க அம்மா அங்கே பிச்சை எடுத்துக் கிட்டு இருக்கிறாடப்பா ஏன் அப்படி அலையவிடறேன்னு யாராவது கேட்டா, என் மனசு என்ன பதறிப்போகும் நீங்களே சொல்லுங்க. இப்படி என்மனசை எறியச் செய்து கிட்டு, அங்கே கிடக்குது. நான் என்ன செய்ய?"

"சன்னாசி, கோபிக்காதே! உன் சம்சாரத்தோடே ஏதாச்சும்..

"அவ 'அப்பிராணீங்க--மாமியார் காலிலே விழுந்து கும்பிட்டா புண்ணியமனு எண்ணுகிறவ. அவளும் அவளாலே ஆனமட்டும் கூப்பிட்டுப் பாத்தாச்சி. நம்ம 'கொழந்தை'கள் கூப்பிட்டே வரலே, போங்களேன்."

"என்னப்பா இது அதிசயமா இருக்கு."

"அதிசயமா? அக்கிரமம்னு சொல்லுங்க டாக்டரய்யா! வர்ர பழி வரட்டும்னு அதை அடிச்சுக் கொண்ணுபோட லாம்னுகூட ஆத்திரம் வருது தெரியுங்களா?"

டாக்டர் பாதிரியப்பனுக்குப் பச்சிலை ஆராய்ச்சியிலே கூட மனம் செல்லவில்லை. இந்தக் கிழவியின் விசித்திரம் போக்கு அவருக்கு மனக்குழப்பமே உண்டாக்கிவிட்டது. கிழவியைக் கண்டே கேட்பது என்று தீர்மானித்தார்.

000

'அவன் பேச்சை மட்டும் எடுக்காதீங்க...'

'அவன் நல்லவனா இருக்கானே பாட்டி.'

தங்கமானவன்...அவன் சம்சாரமும் குணசாலி... எவ்வளவோ அன்பாத்தான் என்னை கூப்பிடறாங்க...ஆனா ...

'என்ன அ னாவும் ஆவன்னாவும்'

'அவன் என் மகனில்லிங்க...'

'உன் மகனில்லையா.. உனக்கென்ன வள்ளி சொன்னதுபோல, மூளை குழம்பி இருக்குதா..... உன் மகன் இல்லையா...'

'நான் பெத்தற்றவள்தான். ஆனா...டாக்டரய்யா இதை மனசோடே போட்டுவையுங்கோ. முக்கியமா அவனுக்குத் தெரியப்படாது. தெரிந்தா குடும்பத்துக்கே ஆபத்து. நான்தான் பெத்தேன். ஆனா, அவன் பேய் மகன்'

"பைத்தியமேதான் உனக்கு. பேய் மகனாவது பூதத்தின் மகனாவது... என்ன கிழவி உளறிக் கொட்டறே."

"உங்களுக்கெல்லாம என்ன தெரியும்? இந்தக்காலத்துப் பிள்ளைங்க. சன்னாசி, பேய்க்குப் பொறந்தவன். அவனுக்கும் தெரியாது. கிராமத்திலே யாருக்கும் தெரியாது. இப்ப உங்ககிட்டே சொல்கிறேன் பேய்க்குப் பொறந்தவன் சன்னாசி. அதனாலேதான், பொறந்த மூணா மாசமே அவனை என் தங்கச்சிக்குத் 'தத்து' கொடுத்து விட்டேன்."

"பாட்டி! உனக்கு மூத்தமகன் அக்கரை போயிட்டதுக்குத்தானே மூளை குழம்பியிருக்கு...

கேள் டாக்டரய்யா--மூளையாவது குழம்பறதாவது... மணி பொறந்து ஐந்து வருஷத்துக்குப் பிறகு, இவன், பொறந்தான். இவன் என் வயித்திலே கருதரிக்கிறதுக்கு முந்தி என்னை திருக்குளத்துப் பேய் பிடிச்சிடுச்சி, பேயை ஓட்ட அவரு படாதபாடு பட்டாரு--செலவு கண்மண் தெரியாமச் செய்தாரு--அந்தப் பாழாய்ப்போன பேய்ஒழிய மாட்டேன்னு சொல்லிடுச்சு. சூடு வைச்சிப் பார்த்தாங்க, தலைமுழுக்கு. வேப்பஞ்சேலைகட்டி மாரியம்மன் கோயிலிலே சுற்றிவர்ரது, ஒண்ணு பாக்கி இல்லை, திருக்குளத்துப் பேய் எதுக்கும் மசியிலே, எனக்குப் பேய் பிடிச்சிருந்தபோது தான் கருதரிச்சிது. இத்தப்பய பொறந்தான்-- அவனைத் தான் நீங்க பார்த்தீங்களே--இலட்சணமாயிருப்பான்-- அவன் பொறந்ததும், ஊர்க்கோடியிலே இருந்த ஒரு பிரம்மாண்டமான புளியமரம் வேரோடச் சாய்ந்து கீழே விழுந்தது...இடி இடிச்சி, மாரியம்மன் கோவில் கோபுரத்திலே விழுந்து அதை இடிச்சுத் தள்ளிவிட்டுது. எங்க வீட்டிலே இரண்டு படிகறக்கும் அருமையான பசு மாடு அது 'காவ் காவ்'னு கத்திகிட்டே கீழேதொபீல்னு விழுந்து செத்துப்போச்சு அப்பப்பா, அவன் பொறந்ததும் ஊருக்கே பெரிய ஆபத்துன்னு வையுங்களேன், அப்படியெல்லாம் நேரிட்டது.

இதோடு போச்சா: அவரு, அவங்க அப்பாரு, நல்லா இருந்தா மனுஷனுக்குக் காச்சல் கண்டு, வாயிலே 'நொப்பும் நொரையும் தள்ளி, கைகால் இழுப்பு வந்திடுச்சி, எனக்கும் பயம் சந்தேகம். துக்கம். பூசாரியைக் கூப்பிட்டு, என்னய்யா இதுன்னு கேட்டேன். "எல்லாம் திருகுளத்துப் பேய் செய்கிற வேலை"ன்னு சொல்லிவிட்டு, அவன் சொன்னான். "உன் குடும்பமும் இந்தக் கிராமமும் நாசமாகவே இருக்கவேணும்னா, முத்தம்மா? இந்தச் சிசுவை நீ வளர்க்கக் கூடாது. இது பேய்க்குப் பொறந்தது. அத னாலே தான் இவ்வளவு ஆபத்து. இதை நீ உன் வீட்டிலே வளரச் செய்தே, ஒரே வருஷத்திலே அப்பனை முழுங்கிவிடும்; பிறகு நீ, உன் மூத்தவன், இப்படி 'காவு வாங்கிக் கொண்டே இருக்கும். அதனாலே இதை வேறெயாருக்காவது தத்து கொடுத்துவிடு. உன்பிள்ளை என்கிற எண்ணமே கூடாது. நீயும் "இதுவும்' ஒரே கூரையிலே இருந்தாலே ஆபத்துத்தான் ஒரு ஐந்து நிமிஷத்துக்கு மேலே, நீ இதைப் பார்த்தாக்கூட ஆபத்து ஏற்படும், இது பேய்க்கிப் பொறந்தது என்று சொன்னான். மூணாமாசம் என் தங்கச்சி தூக்கிட்டுப் போனா. அதிலே இருந்து அங்கேயே அவன் இருந்துகிட்டான். ஆனதாலே தான் டாக்டரய்யா, நான் அவனோட போய் இருக்க முடியறதில்லை. இதை அவனுக்குச் சொல்லவும் கூடாதுன்னு பூசாரி சொல்லியிருக்கிறான். மகன் என்கிற பாசத்தாலோ, இந்தத் தள்ளாத வயதிலே நிம்மதியா இருக்கலாமே என்ற எண்ணத்தாலேயே, நான் அவனோட போய் இருக்கிறதுன்னா, என்னாலே, ஊருக்கே நாசம வந்துடுமே, அந்தப்பாவத்தைச் சுமக்கச் சொல்றிங்களா. அவனும் குழந்தை குட்டிகளோட இப்ப சுகமா இருக்கிறான் -- நானும் அவனும் ஒரே கூறையின் கீழே இருக்க ஆரம்பிச்சா. அந்தப் பேய் அவன் குழந்தை குட்டிகளையும் காவு கேட்டுவிடும். அதனாலேதான், 'அக்கரை போயிருக்கிற என் மகன் வருகிற வரையிலே என்ன வேதனையானாலும் அனுபவிச்சுகிட்டு இருக்கிறதுன்னு ஏற்பட்டுப் போச்சு" என்று கூறினாள். டாக்டருக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை. 'எங்கே அந்தப் பூசாரி? என்று கோபமாகக் கேட்டார்--"அவன் செத்து வருஷம் ஆறு ஆவுதே" என்றாள் கிழவி.

என்ன செய்வான் பாதிரியப்பன், பேயாவது பூதமாவது, சாபமாவது என்று சொன்னால், கிழவியால் நம்ப முடியுமா! பல கலை வல்லவர்களே அந்த மயக்கத்திலிருந்து விடு பட முடியாமல் தவிக்கிறார்கள் --இந்த கிழவிக்கு 'பகுத்தறிவு' வாதம் செய்து காட்டி பேய் பூதம் பிசாசு என்பதெல்லாம் கட்டுக்கதை, பூசாரி ஒரு புரட்டன், அவன் சொன்னது அத்தனையும் அர்த்த மற்றது என்று ஒப்புக் கொள்ளும்படி எப்படிச் செய்ய முடியும். ஆக்ஸ் போர்டும் கேம்ப்ரிஜூம் படித்து விட்டு மனைவிமார்களை அரசமரம் சுற்றிவரச் செல்வதற்கு அமெரிக்கன் மாடல் மோட்டாரில் அனுப்பி வைக்கிறார்கள். இந்த கிழவிக்குப் 'பகுத்தறிவு' புகட்டவா முடியும்!

'பாட்டி! எவனோ ஒரு மூடன் சொன்னதை நம்பி நாசமாகித் தொலைக்காதே" என்று கூறினார்.

'மூடனா? யாரைச் சொல்கிறாயப்பா பூசாரியையா! சேச்சே! அவனுக்கு, ராமாயணம், பாரதம். கந்தபுராணம் எல்லாம் மனப்பாடம். ஜோதிடம் தெரியும் இந்தப் பக்கத்திலேயே, ரொம்பக்கியாதி அவனுக்கு" என்று கிழவி கூறிவிட்டு. ஏன் இந்தக் காலத்திலே, இதை எல்லாம் மறுக்கிறார்கள் என்று எண்ணி வருத்தப் பட்டுக் கொண்டாள்.

என்ன செய்வதுதென்று தெரியாமல் சிலைபோலனார் டாக்டர்.

"டாக்டரய்யா? என் வினை அது, அதுக்கு யார் என்ன செய்ய முடியும். வுட்டுத்தள்ளுங்க. நீங்கள் வீண் பொழுதை ஓட்டாமபடிக்கு. ஒரு கடுதாசி எழுதிக் கொடுங்க என்று கெஞ்சினாள்.

டாக்டரின் கண்களிலே நீர் கசிந்தது--கோபமும் கொப்பளித்துக் கொண்டு வந்தது.

ஆனால் யார் மீது கோபித்துக் கொள்வது?.......