உள்ளடக்கத்துக்குச் செல்

அபிதா/அத்தியாயம் 5

விக்கிமூலம் இலிருந்து

5

டாடா, எனக்கு இப்போத்தான் நினைப்பு வந்தது. சித்தி அவளாத்துக்குப் போயிட்டாளே! பக்கத்துக் கிராமத்தில் அவள் தம்பி 'டேரா' சினிமா நடத்தறார். படம் மாறும் போதெல்லாம், பையன் 'பாஸ்'

கொடுத்துட்டுப் போவான். சித்தி படம் பார்த்துட்டு நாளைக்குக் காலையிலேதான் வருவாள்.

அப்பா இன்னும் வரல்லேன்னா எப்போ வராரோ? ஒரொரு சமயம் வரவழியிலே திண்ணையில் சீட்டுக் கச்சேரி கண்டுட்டார்னா இப்படித்தான் - ராத்ரி பன்னிரண்டோ, மறுபகலோதான் .

ராச்சோறுக்கு அப்பாவின் கை நைவேத்ய மூட்டையை நம்பமுடியாது. அது வேளையில்லா வேளையில் ஜலம் விட்டு, சரியாகவும் ஊறாமல் மறுநாள் பழையதுக்குத் தான் சரி. சித்தியின் திட்டு, வெசவுக்கு கட்டுப்படற கட்டமெல்லாம் அப்பா எப்பவோ தாண்டியாச்சு. இத்தனைக்கும் தான் ஆடுவதாகவும் தெரியல்லே. பக்கத்துக் கையைப் பார்த்துண்டிருக்கிறதுலே என்ன அவ்வளவு சுவாரஸ்யமோ? எங்களுக்கென்ன தெரியும்? உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கும் தெரியாதா? சரி, உங்களை நிக்க வெச்சுட்டு நான் என்னத்தையோ பேசிண்டிருக்கேன். உக்காருங்கோ ஒரு பிடி களைஞ்சு வெச்சுடறேன். நிமிஷமா ஆயிடும்.”

கூடத்தில் குத்துவிளக்கு, கால் வெளிச்சமும் முக்கால் சாந்துமாக இழைத்த கலவையிலே அவள் நிறம் பளிச்சிடுகிறாள். நாகப்பழம் போல் விழிகள் கறுகறுவென உள்ளத்தைத் துருவுகின்றன.

பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு
வாலைச் சுழற்றிக்கொண்டு
தரையில் கால் பாவாமல்
பரபரத்துக் கொண்டு
மொழு மொழுவெனப் புத்தம்புதிது
கடிவாளம் இன்னும் விழாத கன்னிவாய்
வெள்ளைக் குதிரைக் குட்டி.

இன்று முழுதும் அதன் துள்ளல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“உங்களுக்கென்ன பிடிக்கும் சொல்லுங்கோ, பருப்புத் துவையலரைக்கட்டுமா? துவையலரைச்சு சீரக ரஸம்? ரஸம் எனக்கு நன்னாப் பண்ணவரும். இல்லை, கூடையில் நாலு கத்தரிக்காய் கிடக்கு. அப்படியே எண்ணெயில் வதக்கட்டுமா? சிவப்புக் கத்தரிக்காய். இல்லே இரண்டுமே பண்ணட்டுமா? என்ன, எல்லாத்துக்குமே சும்மா இருக்கேள்? மனசுக்குள்ளே சிரிப்பாயிருக்கா? அதென்னவோ வாஸ்தவந்தான். ராத்ரி அனேகமா மோருஞ்சாதம்தான். ஏதோ உங்கள் சாக்கில் எங்களுக்குந்தான் வெச்சுக்கோங்கோளேன். ஆனால் அது பெரிசு இல்லை. பண்ணிப் போடுவதில் எப்படியும் ஒரு சந்தோஷம் இருக்கே! அதுக்காகன்னு வெச்சுக்கோங்கோளேன். ஏது நீங்கள் எல்லாத்துக்குமே கம்முனு இருக்கறதைப் பார்த்தால் எதைப்போட்டாலும் சாப்பிடத் தயார் போலிருக்கே! அதற்காக நான் எதையேனும் போடமாட்டேன். அப்பாவே திட்டுவா. சரி எனக்குத் தோணினதைப் பண்ணறேன். நீங்கள் திண்ணையில் கொஞ்ச நேரம் காத்தாட உட்காந்திருங்கோ. இலையைப் போட்டு நான் கூப்பிடறேன்.”

அபிதா, என்னைத் திண்ணைக்குப் போகச் சொல்லாதே. தசரதன் கெஞ்சின மாதிரி உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். அபிதா, அடியே கைகேசி, அது மாத்திரம் கேளாதடி. நான் அபிதாவைப் பார்த்துக் கொண்டேயிருக்கணும். திண்ணை வேண்டாம். நினைத்தாலே தொண்டை வரள்றது.

நினைத்ததை நினைந்ததும் தொண்டை உலர்ந்தது என்று உணர்ந்ததும் தொண்டை உலர்ந்தது.

“குடிக்கத் தீர்த்தம் கொடேன்.”

பூமியில் கிழித்த கோட்டினின்று தற்செயலில் எழுந்து பூக்கொட்டும் ஜலமத்தாப்புப் போல் அவள் உருவம், கூடத்தில் இறக்கிய குடத்தை நெருங்குகையில் அவள் எனக்குப் பதுமையாயிருக்கிறாள், வியப்பாயிருக்கிறாள். விக்ரஹம் உயிர்த்ததுபோல் பயம் தருகிறாள். மூச்சை மூச்சென்று உணர்ந்து மூச்சை மூச்சாக ஒரு கணம் சிந்தித்தாலே மூச்சு திணறுகிறது.

கண்ணைப்பெற்ற திருதராட்டிரன்போல் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன். பெற்ற பார்வையை இழக்க மனமில்லை. பட்ட தரிசனம் காணவும் திடமில்லை.

கண்களை மெதுவாய்த் திறக்கிறேன்.

எதிரே, தம்ளரை என்னிடம் நீட்டியவண்ணம், தன் புன்னகையின் திவ்யத்தில் ஒளி வீசிக்கொண்டு நிற்கிறாள்.

தம்ளரை வாங்கிக் கொள்கையில், என் விரல் அவள் மேல் படாதா?

No.

எண்ணத்தையும் செயலையும் இம்மியிலிருந்து எல்லை வரை, நம் அறிவுக்கெட்டாது தன் வழியில் ஆளும் ஆதிக்கத்தின் கட்டளையில், பாத்திரம் கைமாறும் தருணம், எங்கள் விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டாற்போல் எவ்வளவு நெருக்கமாய் தம்ளரைப் பற்றியும் -

தொட்டுக் கொள்ளவில்லை.

அவள் ஏந்தி வந்த ஜலமே, அவள் கன்னித் தூய்மையைத் தன் சத்தியத்தின் சக்தி கொண்டு, அவளுக்குக் காப்பாற்றித் தருவதாய் எனக்குத் தோன்றுகிறது.

கானலின் நலுங்கல் போல் என் ஏக்கம், கண்கூடாய் என்முன் எழுகிறது. பற்று ஒன்றின்மேல் விழுந்து விட்டால்-

பற்று, ஆசை, அன்பு, பாசம், பக்ஷம், காதல், காமம், வேகம், விரகம், ஏக்கம், இன்பம், வேதனை, சோகம், சுகம், சொர்க்கம், நரகம், உயிர், ஊசல், கூடல், பிரிதல் இன்னும் எத்தனை எத்தனையோ.

அத்தனையும் ஒரே சாயம் பிடித்துக்கொண்ட கெட்டியின் ரகங்களைக் காட்டும் பெயர்கள்தானே! பற்று ஒன்றின் மேல் விழுந்து விட்டால், தொடல் என்பது ஏன் அவ்வளவு அவசியமாகி விடுகிறது?

தொடல்.
உடைமையின் முத்திரை.
உறவின் வழித் துணை.

உணர்வின் பழி ரேகைக்கு ரேகை பாயும் மந்திர சக்தி என்ன?

அவள் கொடுத்த ஜலம் தொண்டை அடியில் உவர்த்தது. அந்தக் கிணற்று ஜலம் கற்கண்டாய்த் தித்திக்குமே இதற்கு இந்த உவர்ப்பு எப்படி வந்தது? ஒரு வேளை என் தாபம்தான் கொடுமையோ?

சக்கு, நீ சாகவில்லை. உன்னையே பலிகொடுத்து என்னை வாங்கும் பழியைக் கரடிமலைக் கருவேலநாதனிடம் வரமாக வாங்கிக் கொண்டாயா?

நீ வாங்கும் பழி இவ்வளவு பயங்கரமா?

சக்கு என்னால் தாங்க முடியல்லேடி சக்கு என்னை மன்னிச்சூடடி!

மன்னிப்பு.

இது ஒரு பெரும் பொய். மன்னித்ததால், தீங்கின் பங்கு குறைந்து விடுமா? வேதனையிலிருந்து விடுதலை கிடைத்துவிடுமா? நினைவால் இன்னும் கூடுதலேயன்றி குறைவு ஏது? மார் வெடிக்க அழுகை பீறிடுகிறது.

அபிதாவுக்குக் கேட்டு விட்டால்?

கேட்டு விட்டதா?

பயந்து சுற்றுமுற்றும் பார்க்கிறேன். திண்ணையில் உட்கார்ந்திருக்கிறேன். இங்கு எப்போ வந்தேன்? வந்ததும் நல்லதுதான். என் அழுகை அவளுக்குத் தெரியாது அல்லவா? கரையோரம் ஜலம் பருகிக் கொண்டிருக்கும் விலங்குக்குக் கால் சறுக்கிவிட்டாற்போல், வெட்க மற்ற அழுகையில் விழுந்து விடுகிறேன். மண்டையுள் நரம்புகள் தீய்கின்றன.

செவி, மூக்கு, கண்களில் ஆவி பறக்கிறது.
மன்னிப்பு கிடையாது.
உண்டு, உண்டு என்பது நம்பிக்கையானால்.
இல்லை, இல்லை என்பது உண்மை.
-ல்-
இ-நெற்றி-லை
யில்
இடது கையில் வலது கையில்
விண் விண்
மார்பில் ஆணி தெறித்தது.

சக்கு, என்னைச் சிலுவையில் ஏற்றிவிட்டாய்.

“சாப்பிட வரேளா?” -

உள்ளேயிருந்து அவள் குரல் கணீரென்று அழைத்தது.

பழைய நாள் திரும்பி வந்து விட்டது.

கூடத்தில் குத்துவிளக்கடியில் தையல் இலை போட்டிருக்கிறது.

அதில் ஈர்க்குத் தையல் பாதையாய் எவ்வளவு அழகாய் ஓடுகின்றது!

ரசம் புளித்தது.

சாதத்தைக் குழைத்து விட்டாள்.

கத்தரிக்காய் சரியாக வேகவில்லை.

“நன்னாயிருக்கா?”

நன்றாய்த்தானிருக்கிறது. நிஜமாவே, ரஸத்தைக் கையில் ஏந்தி சப்புகிறேன். அன்பிட்டவர்களின் குறைகளே, அவர்களிட்ட அன்பின் விசேஷ ருசி. எப்பவுமே பசிக் காகவா சாப்பிடுகிறோம்? சமைத்ததற்காகவா சாப்பிடுறோம்?

வாசற் கதவை யாரோ படபடவெனத் தட்டுகிறார்கள்.

அபிதா போய்க் கதவைத் திறக்கிறாள்.

“வாங்கோ மாமி...”

சாவித்ரி கூடத்துள் வருகிறாள். அவளுடன் வந்த துணை ரேழியிலேயே தயங்கி நிற்கிறான். என் மாமாவின் பல பேரன்களில் ஒருவன்.

சாவித்ரிக்குக் கோபத்தில் கண்கள் கடுக்கின்றன.

“எங்கே போறேள்னு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா? இங்கே வந்தேள்னு கண்டேனா? வயல் காட்டில் பாம்பு பூச்சி பிடுங்கியெடுத்து விழுந்து கிடக்கேள்னு கண்டேனா உங்கள் ஊருக்கு வந்ததுக்குக் கைமேல் பலனா? உங்களை எங்கேன்னு போய் தேடறது?”

கையும் களவுமாய்ப் பிடிபட்ட மாதிரி நான் ஈரம் காயும் கையுடன் இலையெதிரில் உட்கார்ந்திருக்கிறேன். இலையில் சாதம் குவிந்து சத்தியமாய் வெண்மை துலங்குகிறது.

அபிதா மிரண்டு நிற்கிறாள். சாவித்ரியின் கோபம் அவளுக்குப் பயமாயிருக்கிறது.

சாவித்ரியின் கோபம் எனக்குப் புரிகிறது. அவள் சொல்லும் நியாயம் புரிகிறது. ஆனால் சாவித்ரியைத்தான் புரியவில்லை. சக்கு எழுதிவிட்டுப் போயிருக்கும் சித்திரத்தின் பக்கத்தில் அதன் கேலிபோல் நிற்கும் இந்தத் தடித்த உருவம் யார்?

விளக்குச் சுடர் கூடத்துச் சுவர்களில் வீசிய எங்கள் நிழல்கள் பெரிதாய், ஒன்றையொன்று ஊமைப் பயமுறுத் தலில் சிலிர்த்துக் கொண்டு, எங்களுக்குப் புரியாது,தங்களுக்கே புரிந்த சடங்குக் கூத்தில் ஆடுகின்றன.

என்றும் எங்களுக்கு விடுதலையில்லாமல் எங்களைத் தங்களுடன் கவ்விக்கொண்ட எங்கள் நிழல்கள்.

மறுநாள் காலை, அபிதாவின் சித்தி வந்தாள். உடன் அவள் தம்பி- Tent சினிமா முதலாளி- வந்திருந்தான். அவனே 'ஸ்டார்’ மாதிரிதான் இருக்கிறான். பார்த்ததும் மனதை ஜிவ்வுவது அந்த எடுப்பான மூக்கும், கண்ணை மறைத்துக் கொண்டு முன் சரிந்த முரட்டு மயிரும், ஒழுங்காய் ஒதுக்கிய துளிர் மீசையின் செம்பட்டையும்தான்.

‘அபிதா, நீ ஏன் வரல்லே? உனக்குப் படம் பிடிச்சிருக்கும்’

சிலும்பலேயிலாது சுபாவத்திலேயே கனத்த வெண்கலக்குரல்.

“ஆமாம் உன் படத்தை நீதான் மெச்சிக்கணும். ஒரு பாட்டா, டான்ஸா, சண்டையா? உட்கார்ந்தது தெரியல்லே உடனே எழுந்துட்டமாதிரிதான் இருந்தது. படம் அவ்வளவு சுருக்க முடிஞ்சுடுத்து. கூட்டமேயில்லை. நாற்காலியில் ஈ ஙொய்ஞ்ஞ்”.........ராத்திரியே விட்ட சுருக்குக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குத்தான் எப்பவும் திரும்பிண்டு இருக்கோமே!”

“திரும்பறதுன்னாலே பின்னே என்ன அர்த்தம்? ஒரொரு சமயமும் ஒரு ஒரு இடம் திரும்பிண்டிருக்க முடியுமா? உங்களுக்கெல்லாம் ரயிலேறிப் போற மாதிரி விடிகாலை ஊர் சேரமாதிரி கணிசமா நாலுமணி நேரம் இருக்கணும். முனகினால் பாட்டு; தடுக்கி விழுந்தால் கும்கும், இடறிவிழுந்தால் அதுவே ஒரு டான்ஸ்- இதுவும் தான் எப்பவுமிருக்கே! கொஞ்சம் High class picture ஸார்- Cheap rentக்கு வந்தது இன்னிக்குப் பார்த்துண்டு நாளைக்குத் தூக்கிட வேண்டியதுதான். அபிதா, கேக்கறேனே நீ ஏன் வர்லே?”

“ஆமாண்டா, உன் அத்திம்பேரை நம்பி வாசற் கதவையும் திறந்து போட்டுட்டு, நான் இவளையும் உன் அவிசல் படத்துக்கு அழைச்சுண்டு வந்துடறேன். திரும்பி வர வேளைக்கு இருக்கற வாசல் கதவையும் எவனாவது அடுப்புக்குப் பிடுங்கிண்டு போயிடட்டும். அந்தப் பிராம்மணன் இன்னமும் வரல்லியே? எனக்குத் தெரியும். அங்கேயே குளத்துல குளிச்சுட்டு, நேத்து சோத்தையே சாமிக்குக் காட்டிப்பிட்டு ஒரு நடை மிச்சம் பண்ணிண்டு வந்துடுவார்-”

......கேட்டுக் கொண்டே குருக்கள் உள்ளே வருகிறார். அவர் தோளில் தொங்கும் நைவேத்ய மூட்டையும், கபடும் அசடும் கலந்த அந்த இளிப்பும்- அவரைப் பார்த்தால் சர்க்கஸ் கோமாளிபோல் தானிருக்கிறது. அவர் வராததைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கூட அவர் வந்ததைச் சட்டை செய்வதாய்த் தெரியவில்லை. அவர் மைத்துனன் அவர் வீட்டில் அவர் இருப்பதாக ஏற்றுக் கொண்ட தாகவே தெரியவில்லை. அவன் என்னோடுதான் பேசிக் கொண்டிருக்கிறான். என்ன பேசுகிறான் என்று அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே எனக்கு மறந்து போய்க் கொண்டே வருகிறது. பலகையில் வலது கை எழுத, பின்னாலேயே இடது கை அழித்துக் கொண்டு வருவது போல்.

ஆனால் அவன் கதையை அவன் சொல்லி நான் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. அவன் உடையும், ஒழுங்காக ஒதுக்கிவிட்ட அரும்பு மீசையுமே அவன் வெற்றிக் கதைக்கு சாட்சியாய் அலறுகின்றன. என்னையறியாமலே ஒரு காதைக்கூடப் பொத்திக்கொண்டு, பிறகு பொத்தினது தெரியாமலிருக்கும் பொருட்டு காதின்பின் சொறிந்து கொள்கிறேன்.  A Selfmade Man. அவன் சூழ்நிலைக்கு ஒவ்வாது உயர்ந்த ரகத் துணி கண்ணைப் பறிக்கும் சலவை. உருளைக்கிழங்கு வறுவல் பில்லைபோல் பெரிய Wrist Watch. புதிதாகக் கண்ட சுகம். ஆத்திரத்துடன் அனுபவிக்கிறான். அனுபவ ஞானத்தைத் தவிர வயிற்றைக் கீறினால் அக்ஷரம் தேறுமோ சந்தேகம். இவனுக்கு, இப்போ சொந்தமாகியிருக்கும் இந்த Tent சினிமாவிலேயே இவனே “வெற்றிலை பாக்கு பீடி சிகரெட்டு” கணீரென்று சிலும்பலற்ற குரலில் விற்றிருப்பான் என்றால் எனக்கு ஆச்சர்யமில்லை.

ஆனால் என் வாழ்வும் அப்படித்தானே! அதனாலேயே நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் விளக்கமில்லாமலே ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். கோதாவில் மல்லர்கள்போல், ஒருவனையொருவன் கட்டிப் பிடித்துப் புரளுமுன் ஒருவனையொருவன் ஆழம் பார்த்துக்கொண்டு ஒருவரையொருவர் வளைய வருகிறோம். என்னைப் போல் அவனைக் காண எனக்கு ஏன் ஆகவில்லை: அவனைப்போல் நான் இல்லை என்கிற ஆத்திரம்தானே? குழந்தையின் முகத்தெதிரே கயிற்று நுனியில் பொம்மையைத் தொங்கவிட்டு ஆட்டுவதுபோல் அபிதாவுக்கு சினிமா ஆசை காட்டுகிறான். அபிதாவின் கண்கள் விரிகின்றன. புன்னகை உதட்டோரத்தில் ஆரம்பித்து அதன் உள்ளொலி மறு ஓரத்திற்கு பரவிச் செல்வது எனக்கு நன்றாய்த் தெரிகிறது. அவள் சித்திக்கு சினிமா ஆசை விடவில்லை. அவளுக்கிருக்காதா? வீட்டை விட்டுக், கரடிமலையை விட்டு வெளியே போக அவளுக்குத்தான் வேறே வாய்ப்பு என்ன இருக்கிறது?

“ஆமாம் இது கண்டிப்பு; வெள்ளிக்கிழமை அபிதா நீ', வந்தே ஆகணும். புதுப்படம்.”

சித்தி எரிந்து விழுகிறாள். “ஆமாம், அவளும் வந்துட்டா வீட்டுக்கு யார் காவல்”

“நீ” ஒரே எழுத்து. ஒரே சொல். ஒரே கத்தி. ஒரே குத்து.

மாமிக்கு கன்னங்கள் வெடித்துவிடும்போல் உப்புகின்றன. வாயடைச்சுப் போச்சு. விழி பிதுங்கறது.

ஆனால் அவள் தம்பிக்கு இரக்கமில்லை. அவள் பக்கம் கூட அவன் முகம் திரும்பவில்லை. அக்காவுக்காகவா அவன் இங்கு வருகிறான்?

“நீங்களும் வரணும் சார். மாமியையும் அழைச்சுண்டு. வாங்கோ உங்களுக்கெல்லாம் Air conditioned தியேட்டரில் உட்கார்ந்து பழக்கம் இல்லையா?” சிரிக்கிறான். Kolymos சிரிப்பு உரமான இறுகிய தாடைகள். நன்றாய்த்தானிருக்கிறான். “இதுவும் உங்களுக்கு ஒரு புது அனுபவமாயிருக்கட்டுமே! நாளடைவில் நானும் ஒரு Air conditioned தியேட்டர் கட்ட எனக்கு வசதி வரட்டும்னு, பெரியவாள் ஆசிர்வாதம் பண்ணுங்களேன்!”

பேச்சும் நன்றாய்த்தான் பேசுகிறான்.

“பேச்சுக்கு நாளடைவில்னு சொல்றேன். இந்த பிஸினெஸ் அடிச்சால் நாளைக்கே வாரிக் கொடுக்கும். போச்சுன்னா அன்னிக்கே காலை வாரிவிடும். சரி, நான் கிளம்பறேன். எனக்கு வேலை காத்துக்கிடக்கு. அபிதா மறக்காதே.”

ஆள் வந்து போனதே புயல் வந்து கடந்தாற்போல் அவன் சென்ற வழி நோக்கி அபிதா நின்றாள். இவன் ஒரு திக் விஜயன். இங்கத்திய நினைவு அவளுக்கில்லை. நினைப்பில் வெள்ளிக்கிழமை சினிமாவை இப்பவே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அப்படிக் காண்கையில் என் மார்பை மின்னல் வெட்டுகிறது.

- “நின்ன இடத்தில் கல்லாலடிச்சாப்போல் நின்னுட்டால் பறிச்ச பழம் மாதிரி கலத்தில் சோறு விழுந்துடுமா? விழுந்துடுமான்னு கேக்கறேன்!” அபிதா ஒன்றும் பேசவில்லை. குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு கிளம்புகிறாள். அவள் கனவு இன்னும் கலையவில்லை. புன்னகை கன்னக்குழியில் தேங்கி விட்டது.

மௌனம் எவ்வளவு அற்புதமான அங்கி! நளினத்தில் டாக்கா மஸ்லின் அதனெதிர் என் செய்யும்? அதன் மடிகள் அவள் தோளினின்று விழுந்து, அவள் பின்னால் அவளைச் சூழ்ந்து, பூமியில் மௌனமாய்ப் புரள்கின்றன.

“பறிக்கும் வரை பழத்தை மரத்தில் யார் விட்டுவைக்றா? இந்த நாளில் பழத்தை மரத்தில் எவன் பார்த்தது? -எல்லாம் பிஞ்சுலே பழுத்த வெம்பல். இல்லை. தடியால் அடிச்சுக் கனிய வெச்ச பழுக்கல்கள். பழங்களே ஏது?” இங்கு வந்து இத்தனை நாழிக்குப்பின், இப்போத்தான் குருக்கள் இப்படி வாய் திறக்கிறார். .பரவாயில்லை. பேச்சில், நொண்டி குருக்கள் வாடை கொஞ்சம் இவரிடமும் அடிக்கும் போலிருக்கிறதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=அபிதா/அத்தியாயம்_5&oldid=1663188" இலிருந்து மீள்விக்கப்பட்டது