அபிதா/அத்தியாயம் 6
6
மாமி நன்றாகப் பேசுகிறாள். குரல்பெரிது. கூச்சமுமில்லை. நான் கூடத்திலிருக்கிறேன். சமையலறையிலிருந்து அவள் கர்ஜனை எட்டுகிறது. சிலபேருக்கு அவர்கள் குரலே அவர்கள் விளம்பரம், நாங்கள் இலவசத்துக்குத் தங்க மாடடோம் என்று அவளுக்குத் தெரியும். அந்த மகிழ்ச்சியை அவள் தெரிவிக்கும் முறை இப்படித்தான் போலும்!
“நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய மனுஷாள்! ஏதோ பழைய வாசனையை மாமா மாதிரி ஞாபகம் வெச்சுண்டு யார் இந்த மாதிரி வருவா?”
கேட்டுக்கொண்டே ஏதோ காரியமாக மாமி கூடத்துக்கு வருகிறாள். என்னைப் பார்த்ததும் அப்போத்தான் பார்த்ததுபோல் அடக்கம் பண்ணிக் கொள்கிறாள்.
வாய் அமுதம் பொழிகின்றது.
கண் கணக்கெடுக்கிறது.
சுவர்மேல் சூர்ய கிரணம் சிரிக்கிறது.
குருக்கள், நைவேத்திய மூட்டையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.
அபிதா வீட்டில் இல்லை.
நானும் வெளியே போகிறேன். கால் சென்ற இடம்.
குருக்கள் மாமி முகஸ்துதிக்குச் சொன்னாலும், கடைந்த உணமையைத்தான் சொல்கிறாள். வாசனைகளில்தான் உயிர் வாழ்கிறோம்.
உண்மை, தெய்வம், விடுதலை என்கிற பெயரில் ஏதோ மாயா சத்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் என்னும் சத்ய மாயையில்தான் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடித்தாலும் இருப்பதை மறுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிழல்களில் பரிதவித்து நிழல்களில் கனிந்து கனிந்து நிழல்களில் தெளிந்த, நிழல்தான் மனம், உணர்வு, புத்தி, ஞானம், தரிசனம், உண்மை, தெய்வம், முக்தி என்று இந்த அனுமான நிலைக்கு என்னென்ன பேர்கள் உண்டோ அவை அத்தனை யும். அப்பவும் அந்தத் தெளிந்த நிலையும் ஒரு தெளிந்த நிழலன்றி வேறில்லை என்று என்ன நிச்சயம்?
இந்தத் தர்க்க ரீதியில் அதோ வானளாவி நிற்கும் கரடிமலையும் ஒரு நிழல்தான்.
அன்று ஜன்னல் கண்ணாடியில் ஒழுகி வழிந்த மழை நீரை சகுந்தலையின் கண்ணீர் தாரையாகக் கண்டு நம்பி வந்ததும் ஒரு பிம்பம்தான்.
திரும்பத் திரும்பக் கரடி மலைக்கும் குருக்கள் வீட்டுக்கும் இடை தூரத்தை நடந்து நடந்து, அளந்து அளந்து, இங்கு நான் இருந்தவரை ஞாபகத்திலும், இங்கு விட்டுச் சென்ற பின் கற்பனையிலும் சகுந்தலையின் நடமாட்டங்களையும் சுவடுகளையும் தேடி அலைகிறேன்.
சகுந்தலை செத்துப் போனாள்.
செத்துப் போனவளைப் பொசுக்கிய சாம்பல்கூட கரைந்தும் காற்றில் பறந்தும் போயாச்சு. இத்தனை வருடங்களுக்குப்பின் இங்கு வந்த முட்டாளே, இன்னும் எதைத் தேடுகிறாய் அதைவிட முட்டாளே?
இந்த நிகழ்ச்சியும் என் பகுத்தறிவு என்னைக் கேட்கும் இந்தக் கேள்வியும் உண்மையின் ஒரு முகமாயிருக்கலாம். ஆனால் சகுந்தலையைப் பற்றிய நினைவின் சரடு அதனால் அற மறுத்தது. அதன் உரம் சகுந்தலையின் சாவையும் தாண்டி நாண் தொடர்ந்து சகுந்தலையை இன்னும் இங்கேயே தேடுகிறது. இந்த இரக்கமற்ற, தவிர்க்க முடியாத தொடர்பு, தூண்டுதல், துரத்தல் என்ன? முற்றுப் புள்ளியை ஏற்றுக் கொள்ளாத தன்மைதான் என்ன?
என்னத்தையோ எழுதி, எழுதியதைப் படித்து, படித்ததை நினைத்து, படித்ததை வாழ்ந்து, வாழ்ந்ததைப் படித்து, அனுபவத்தை நினைத்து, நினைத்ததையே நினைந்து, நினைவை அவ்வப்போது காயப்படுத்தி, காயத்திலிருந்து சொரியும் ரத்தம் உணர்ந்து, அர்த்தங்கள்பிரயத்தனங்கள் கொள்கிறோம். நினைவின் ரணமே உயிரின் தைரியம், உயிரோவியத்தின் பல வர்ணங்கள்.
காலடியில் குறுகுறு-
உடல் கூசி கையில் எடுக்கிறேன்.
புஷ்ப சரம்.
ஆ நினைவு வந்தது. இது நேற்று மாலை அபிதாவின் கூந்தலில் இருந்ததல்லவா?
“மாலையில் கூந்தலில் செருக்குடன் மகிழ்ந்த மலரே.
காலையில் உன்னை மண்ணில் சிதறுண்டு கிடக்கக் காண்பதென்ன?”
கன்னத்தில் ஒற்றிக் கொள்கிறேன். காதோடு அது மெத்தென்று என்ன பேசுகிறது?
உன் குரல் எங்கிருந்து வந்தாலும் சரி அது என் பாக்கியமே.
விசனம் நிறைந்த வசனங்கள். நெஞ்சின் அடிவாரத்தின் சுனையிலிருந்து பொங்குகின்றன. ஏதோ எல்லைக் கோட்டில் மனம் தத்தளித்துத் தவிக்கின்றது. என்னத்தையோ தேடி, இருப்புக்கொள்ளாமல், நடந்து கொண்டேயிருக்கின்றேன்.
முகத்தில் கடவுள் ஏன் கண்ணை எழுதி, காட்சியைக் காட்டி, கூடவே கலவரத்தையும் கொடுத்தான்?”
பாதையின் திருப்பத்தில், தூரத்தில் இரு கரையின் கோடுகளுக்கிடையே, ஒரு வளைந்த தாழ்வில், வாய்க்காலின் ஜலவிளிம்பு காலை வெய்யிலை வாங்கிக் கொண்டு தகதகக்கின்றது நெருங்குகிறேன். எதிர்க் கரையில் தோய்க்கிற கல்லருகே குத்திட்டபடி அபிதா குடத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள்.
புடவையின் கோடி, ஜலத்தில் நனைந்து நீரோட்டத்தில் லேசாய் அலைந்தது. புடவையின் உடலும் அங்கங்கே நனைந்து, நனைந்த இடங்கள் உடலோடு ஒட்டித் கொண்டு அங்கங்கள் பிதுங்கின. சௌகரியத்திற்காக முழங்கால்களுக்கிடையே அள்ளிச் சொருகி, மடியில் அடைத்த சேலையின் நீலத்தையடுத்து தொடைச் சதை வெய்யில் படா தனி வெண்மையில் பளீரிட்டது.
அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் நின்ற இடத்தில் ஒரு வேளை கரைமேடு என்னை மறைத்ததோ என்னவோ? அல்ல, அவள் முழுக்கவனம் குடத்தைத் தேய்ப்பதில் முனைந்திருந்ததோ அல்ல, அவள் காணும் பகற்கனவிலிருந்து இன்னும் விழிக்கவில்லையோ?
கரைகளினிடையே வாய்க்கால் வளைந்து, தன் தலையைத் தேடும் பாம்பு போல் ஒடிற்று. கரை மேட்டுக்கப்பால், வயல்களில், கதிர்களிடையே காற்று சலசலத்து பாம்பின், சீறல்போல் ஒசை என்மேல் இறங்கிற்று. மையம் ஸஹிக்க முடியா ஸௌந்தரியம் கக்கிற்று.
விஷம்.
பொழுது, இடம், செயல் மூன்றும் ஒன்றாய் விழைந்து, உட்புலனுக்கு மட்டும் எட்டும் அர்த்தம் கொள்கின்றன.
கரைகள் என்ன குறுகினும்
நான் இக்கரை,
அவள் எதிர்க்கரை.
கரைகள் சொல்லும் பொருள் இதுதானோ? “நாங்கள் கரைகள் கரைகள் கரைகள்தாம்.” மௌனமாய் என் கரையோரம் மேலே நடக்கிறேன்.
பக்ஷிகள் உற்சாகமாய், மரங்களில், ஆகாயத்திலே, தலைக்குமேல், கண்பட்டு, கண்படாமல் சப்திக்கின்றன.
“ட்வீக் ட்வீக்- ”
“- கீக் கீச் கீச்- ”
“一 ட்ர்ர்ர்ரீ一” என்னைச் சூழ்ந்திருக்கும் அமைதியில், இவ்வமைதியே மோன கர்ப்பத்தின் தாது. சப்தங்கள் சலனத்தின் சதங்கைகள்.
கரையோரம் கத்தாழையையும் முட்களையும் கடந்ததும் இடம், தழைத்த இடை போன்று அகன்று என்னைத் தன் வயிற்றுள் வாங்கிக் கொள்வதுபோல் ஒரு மாந்தோப்புள்- (தோப்பா? தொப்புளா?)- அழைத்துச் செல்கிறது. ஏதோ ரஹஸ்ய ஜாலத்தில் இயற்கையின் சதியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு மரத்தின்பின் ஒருஆள் பதுங்குகிறான், ஏன்?
வில்லி. அவன் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.
மாங்காய் திருடப் போகிறானா? ஆனால் இப்போ மாங்காய்க் காலமில்லையே!
அவன் கையில் ஒரு கவண் தொங்குகிறது. அப்போதான் சுழல ஆரம்பித்திருக்கிறது.
ஓ! புரிந்தது. இவன் மாங்காய் அடிக்கவில்லை. ஏதோ பக்ஷியடிக்கப் போகிறான். வசியமுற்றவனாய்க் கவணையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். கவண் வேகமெடுத்துவிட்டது. மணிக்கட்டுக்கு மேல் கை ஆடவில்லை. கவண் ஒரு கணத்தில் சக்கரமாக மாறிவிட்டது. மரம் நிறைய இத்தனை பறவைகளில் இவன் குறி எதுவோ? எனக்கு உடல் பரபரத்தது. பொத்தென்று ஆகாயத்தி னின்று ஒன்று என் காலடியில் விழுந்து வெறும் மூக்கும், வெறித்த கண்ணும், சிறகும் இறகும் உரோமமுமாய் உயிரற்ற மொத்தையாய்க் கணத்தில் கண்ணெதிரே மாறுவதைக் காண எனக்குச் சக்தியிருக்குமோ? படம் பளிச்சென்று கண்ணைவெட்டி மறைவதற்கும் கவணிலிருந்து கல் புறப்படுவதற்கும் ‘வீல்’ என்று என்னின்று ஒரு அலறல் கிளம்புவதற்கும் சரியாயிருந்தது. ஒரு பக்ஷிக் கூட்டம் வைது கொண்டு மரத்தை விட்டுக் கிளம்பிச் சிதறுண்டது.
அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்னைக்கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனான். தோப்புக்குச் சொந்தக்காரனை அவனுக்குத் தெரியாதா என்ன? உடனே கோபம். உடனே அலக்ஷியம், உடனே சிரிப்பு அவன் கண்களில் சிந்தின. மேட்டு விழிகள், குத்து மீசைக்காரன். வாயினின்று வெடித்த சிரிப்பில் வாயெல்லாம் செக்கச் செவேல்,
“ஏன் சாமி? நீ பாவம் பார்த்து ஒரு உசிரைக் காப்பாத்திட்டதா நினைப்பா? இன்னிக்கு தப்பிச்சு, சரி. நாளைக்கு? நாளைக்கு என்ன பண்ணப் போறே? இதே நேரத்துக்கு அது இங்கே வந்து குந்தும்னு எண்ணிறியா? இல்லே இங்கே வந்தே நான் அதைக் காவு வாங்கப் போறேன்னு நெனக்கிறியா? நீ ஊருக்குப் புதிசு. நான் இங்கேயே பொறந்து, இதே புளைப்பா இங்கேயே வளந்தவன். இதுங்களை எனக்குத் தெரிஞ்ச மாதிரி உனக்குத் தெரியுமா? இதுலே எதுக்கேனும் மாரிலே மச்சம் இருந்தால், அந்த மச்சம் முதல் எனக்கு நல்லா தெரியும். இன்னிக்கில்லாட்டி நாளக்கி. நாளைக்கில்லே, அதுக்கு மறுநாள். எனக்கு இஷ்டமானதை கல்லாலோ வில்லாலோ அடிச்சுத் தள்ளிடுவேன். கையாலே கூட கழுத்தை முறிச்சுப் போட்டுடுவேன். ஹாஹ்ஹாஹா அன்னன்னிக்கு என்ன கிடைச்சுதோ- காடையோ, கவுதாரியோ, பாம்போ, ஒணானோ, பன்னிக்குட்டியோ, நரியோ, முசலோ- ஏதோ ஒண்ணு. உசிர் எல்லாம் ஒண்ணுதானே!”
இவன் என்ன மூச்சு விடாமல் ஆனால் விஷயம் விடாமல், ஸம்ஹாரமூர்த்தியின் பாஷை 'எல்லாம் என்னுடையது'- பேசுகிறான்! சக்கரம் அறுக்கிறது. கபாலம் ஏந்துகிறது என்கிறானே? இவன் வாழ்க்கை மட்டுமல்ல, இவன் வேட்டையாடும் உயிரின் நியதியில், இவனுக்கும் அதற்கும் இடையில் உள்ள உறவில், உரிமையில் நான் தலையிட்டேன் என்கிறான். அப்படித்தலையிட்டும் நான் சாதித்தது என்ன என்று கேலி பண்ணுகிறான். .
என்னைச் சுற்றி மரங்கள் அனைத்தும்கூட அவன் கக்ஷிபோல், அவன் சொல்லுக்கு சாக்ஷியாய் அவன் குற்றச்சாட்டுக்கு உடந்தையாய்ச் சலசலக்கின்றன. என்னை நெருக்குவதுபோல் எப்போது எப்படி திடீரென இவ்வளவு கிட்ட வந்தன? இவன் என்மேல் கைவைத்தால் நான் தாங்குவேனா? எனக்கு லேசாய் மூச்சுத் திணறுகிறது. சற்று வேகமாகவே நடக்கிறேன். அவன் எக்காளம் என்னைத் துரத்துகிறது நடையும் ஒட்டமுமாய் விரைகிறேன். மாந்தோப்பைத் தாண்டியதும்- அப்பா!மரங்களின் சிறையினின்று விடுபட்டாற்போல் ஒரு பெருமூச்சு என்னின்று எழுகின்றது!
மீண்டும் பரந்தவெளி.
அதோ கரடிமலை.
தோப்புகளினிடையே அங்கங்கே வீடுகளின் கூரைகள், ஒலைமுடையில்கள், ஒடுகள், ஒன்றிரண்டு மாடிகள் கூட. ஒரு தென்னையின் அடிமரத்துடன் பிணைத்து அறைந்த தபால்பெட்டியின் சிவப்பு, வெகு தூரத்தில் கண்ணில் பட்டுப் பட்டு மறையும் சாலைக் கோட்டின்மேல் ஒரு பஸ் இங்கிருந்து பார்க்க எறும்புபோல் ஊர்ந்தது. நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு மைலுக்குப் பஞ்சமில்லை. இன்னொரு மூலையில், கண்ணுக்கெட்டிய தூரத்துப் புள்ளியாய் ரயில்வே ஸ்டேஷனின் சிவப்புக் கூரை.
வயல்களில், தொடுவானத்தில் ஏதேதோ புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. பிரிகின்றன. திரும்பவும் கூடுகின்றன.
கண்ணுக்குப் பத்தடி உயர வானத்தில் ஒரு புள்ளி புறப்பட்டது; வண்டு. அதன் ரீங்காரத்தின் சுழலிலேயே மாட்டிக்கொண்டு, அது கிர்ரிட்டுக் கொண்டே வந்து என்மேல் மோதுவதுபோல் என்னைச் சுற்றிச் சுற்றி முங்கி முங்கி எழுந்தது.
ஓயாத ஒரே முச்சு ரீங்காரம் இது எப்படி சாதிக்கிறது? அடுத்தடுத்து என்னை மோதுகின்றது. முகத்தைக் கைகளால் மறைத்துக் கொள்கிறேன். அது அப்பவும் விடவில்லை. குரல்வளையைத் தேடி வளைந்த விரல்கள் போல் கொடூரமான கொடுக்குகள், வடித்த விஷத்தைக் குடுக்கையில் அடைந்தாற்போன்று சக்குவின் கோபமா? தன் சினத்தைச் சிதற இந்த ரூபத்தில் எனக்காகக் காத்துக் கிடந்தாளா?
ஏய், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல்கூட எப்படிப் போனாய்?
போனாலும் எப்படி இத்தனை நாள் திரும்பாமல் இருந்தாய்?
இருந்தாலும்தான் இருந்தாய், ஆறாத புண்ணைக் கிளறி விட ஏன் இப்போது திரும்பி வந்தாய்.
சக்கு அடியே! நீ நெஞ்சின் எதிரொலியாகிவிட்டாய். எதிரொலிக்கு என்ன பதில் சொல்லி மீள்வேன்?
எங்கிருந்தோ யாருடைய சிரிப்போ எதிரொலிக்கிறது.
வாழ்க்கையின் ஏடுகளைத் திரும்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப் பத்திரிகையாகவே படிக்கின்றன. கோட்டைவிட்ட சந்தர்ப்பங்கள், அவசரப் பட்டுவிட்ட ஆத்திரங்கள், மீள முடியாத பாதைகள், அசலுக்கும் போலிக்கும் இனம் தெரியாது ஏமாந்து லேவாதேவிகள், இனாமுக்கு ஆசைப்பட்டு முதலே பறிபோன இழப்புகள், கண் கெட்டபின் விழுந்து விழுந்து சூர்ய நமஸ்காரங்கள்- ஏற்றலும் தாழ்த்தலுமாய் ஒயாத, பழங்கணக்கு, அத்தனையும் தப்புக் கணக்கு. ஆத்திரத்தில் ஸ்லேட்டைக் கீழே போட்டு உடைத்தால் அவ்வளவுதான்; உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா. எங்கிருக்கிறேன்? சொறிநாய் சுருண்டு படுத்துக் கொண்டாற்போல் ஒரு வளையத்தில் ஒரு கரைமேடு; இது கன்னிக்குளமல்லவா? என் யோசனை வழியில் ரொம்ப தூரம் வந்திருக்கிறேன். இந்த ஜலத்தின் தெளிவு பளிங்கு தோற்றது. கரையிலும் குளத்திலும் பூரா சின்னதும் பெரிதுமாய் ஒரே கூழாங்கற்கள், கடுங்கோடையிலும் இந்தக் குளம் வற்றுவதில்லை. ராக்ஷஸத் தோடு பதித்தாற்போன்று நூற்றுக்கணக்கான வருடங்களில் அடுக்கடுக்காய்ப் புதைந்து போன கற்களின் திட்டுக்களினடியில் எங்கோ ரகஸ்ய ஊற்றிலிருந்து ஜலம் கசிகின்றது.
கல்வடித்த கண்ணீர்.
இங்கு அல்லியும் பூத்ததில்லை. ஆம்பலும் தலை நீட்டியதில்லை, உச்சிவெயில் குளத்தில் அடிவயிறு பளீரென்று தெரியும். அடிவயிற்றின் தொப்புள் குழிகூட இஷ்டப்பட்டால் தெரியும். நடுப்பகலின் வெட்ட வெளிச்சத்தில், வெறிச்சிட்டு, தனிப்பட்ட குளம். தண்ணீர் கற்கண்டாயினும் யார் இவ்வளவு தூரம், பானையையோ குடத்தையோ தூக்கிக் கொண்டு வருவது? ஆகையால் இதன் தண்ணீர் செலவாவதில்லை. அதனாலேயே பேரும் கன்னிக்குளம்.
வெய்யிலின் வெம்மை, தோல்மேல் ஏறுகிறது. குனிந்து காலடியில் ஒரு வெள்ளைக் கூழாங்கல்லைப் பொறுக்குகிறேன். பூஜையில் வைக்கலாம், அவ்வளவு உருண்டை, மழமழ. ஒன்றைப்போல் பல குட்டிக் கருவேல நாதர்கள், கெட்டிக் கருவேல நாதர்கள். கீழே போட்டு உடைத்தாலும் உடைந்தாலும் பளார் எனப் பிளந்துபோமே யன்றி குட்டு உடையாது. அவைகளின் ரகஸ்யம் காலத்துக்கும் பத்ரம்.
பார்வைக்கு இது என் கையில் அடங்குகிறது; ஆனால் வயதில் என்னைப்போல் எத்தனை பேரை இது விழுங்கியிருக்கும்! “என்ன முணுமுணுக்கிறாய்? வயதா? அதென்ன வயது? ஒண்ணு, ரெண்டு, மூணு என்று உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உங்கள் அழுக்கை உருட்டி உருட்டி நீங்கள் மணியாய் ஜபிக்கும் அழுக்குருண்டைதான்.”
ஜலத்தைக் கையில் அள்ளுகிறேன். எல்லாம் விரலிடுக்கில் வழிந்து போகிறது: உள்ளங்கையில் மட்டும் ஆசமன அளவிற்கு ஒரு மணி உருண்டு வெய்யிலில் சுடர் விடுகிறது. என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
அபிதா.
உன் உள்ளங்கையில் நான் குந்து மணி.
புலிக் கோடுகள்போல் மின்னல், கண்டசதையை, தொடைகளை, விலாவில், நெற்றிக்குள், புருவமத்தியில், பளிச், பளிச் வெய்யில் பிடரியில் தேளாய்க் கொட்ட ஆரம்பித்துவிட்டது. நேரமாகிவிட்டது.
இவ்வளவு தூரம் வந்ததற்கு இங்குக் குளித்துவிட்டுப் போகலாம். வீட்டுக்குப் போனால், அந்த வேலையும் நேரமும் மிச்சமாகும். நேரே இலையில் உட்கார்ந்து விடலாம்.
ஆனால் ஜலத்தின் அமைதியைக் கலைக்க மனம் வரவில்லை. காற்றில் அதன் விளிம்பில் அதிரும் லேசான விதிர் விதிர்ப்புகூட ஏதோ தூக்கத்தில் மூச்சுப்போல்தான் தோன்றிற்று. கலைக்க மனமில்லை. தூங்குவதைத் தட்டியெழுப்ப தைரியமில்லை. திரும்புகிறேன்.