உள்ளடக்கத்துக்குச் செல்

அமுத இலக்கியக் கதைகள்/பகதூர் தொண்டைமான்

விக்கிமூலம் இலிருந்து

பகதூர் தொண்டைமான்


கொங்கு நாட்டில் அங்கங்கே குறுநில மன்னர்களாக வாழ்ந்த பலர் அவ்வப்போது மன்னர்களுக்கு உறுதுணையாகச் சென்று அவர்கள் செய்த போரில் உதவிசெய்து பகையை ஒழித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். அம்மன்னர்கள் தம்முடைய படைவீரர்களையும், துணையரசருடைய படைவீரர்களையும் கூட்டிப் போர் செய்வதோடு, தனியே வீரர்களாக வாழ்பவர்களையும் அழைத்துப் போரில் துணையாகும்படிச் செய்வார்கள். பழங்காலத்தில் வாழ்ந்திருந்த மலையமான் திருமுடிக்காரி முதலிய வீரர்கள் அவ்வண்ணம் துணையாகச் சென்று மன்னர்களுக்கு உதவி புரிந்தார்கள்.

ஒரு சமயம், சோழ அரசன் ஒருவனுக்கும் தொண்டைநாட்டை ஆண்டுகொண்டிருந்த தொண்டைமானுக்கும் போர் நிகழ்ந்தது. அப்போது, தொண்டைமானுடைய படைப் பலத்தைக் கண்ட சோழன், தன் படை அதற்கு எதிர் நில்லாதென்று உணர்ந்தான். ஆகவே, துணைப்படைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உண்டாயிற்று.

அக்காலத்தில், கொங்கு நாட்டில் இருந்த பெருவீரன் ஒருவன் தன் துணைவர்களாகிய பல வீரரோடு ஒரு பெரும் படையை வைத்திருந்தான். அதை அறிந்த சோழன் ஆள் விட்டு அவ்வீரனைத் தனக்குத் துணைவரும்படி வேண்டினான். அப்படியே அக்கொங்கு நாட்டு வீரன் தன் படையுடன் சென்று சோழனுக்குத் துணையாக நின்று தொண்டைமானை வென்றான். இந்த வெற்றிக்குக் கொங்கு வீரனுடைய வலிமையே காரணம் என்று அறிந்த சோழன் அவனை மிகப் பாராட்டிப் பரிசு வழங்கினான்; தொண்டைமான் என்னும் சிறப்புப் பெயரும் அளித்தான். அதுமுதல் அந்த வீரனை யாவரும் தொண்டைமான் என்றே வழங்கி வரலாயினர்.

அந்த வீரனுக்குப் பின் அவன் வழி வந்தவர்களையும் தொண்டைமான் என்றே மக்கள் அழைத்து வந்தனர். மூலனூர் என்ற ஊரில் தொண்டைமான் என்ற பெயரோடு ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனும் பெருவீரன். அக்காலத்தில் ஆர்க்காட்டில் நவாபு அரசாண்டு கொண்டிருந்தார். கொங்கு நாட்டில் சங்ககிரி என்னும் இடத்தில் உள்ள மலையின்மேல் ஒரு கோட்டை உண்டு. அதைச் சங்ககிரி துர்க்கம் என்பார்கள். அங்கே அரசர்கள் தம் பகைவர்களைச் சிறை வைக்கும் வழக்கம் இருந்தது.

நவாபு சில காலம் சங்ககிரிக்கு வந்து தங்குவது உண்டு. கொங்கு நாட்டிலும் பிற இடங்களிலும் உள்ள பாளையக்காரர்கள் அங்கே வந்து அவரைக் கண்டு செல்வார்கள்.

மூலனூரில் வாழ்ந்திருந்த தொண்டைமானுக்கு அந்த நவாபைக் காணவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நவாபினிடம் சிறப்பாகச் சொல்லிக்கொள்ள அவ்வீரனுக்கு ஒரு குறையும் இல்லை. தன்னுடைய உடல் வலிமையைக் காட்டவேண்டும் என்ற விருப்பம் மாத்திரம் இருந்தது. பழைய காலம்போல் ஏதேனும் போர் நேருமானால் படையில் தனக்கும் ஒரு பதவி கொடுத்தால் தன் தோள் தினவு தீரும் என்று சொல்லிக் கொள்ளும் எண்ணமும் இருந்திருக்கலாம்.

நவாபு சங்ககிரிக்கு வந்து தங்கியிருக்கிறார் என்ற செய்தி மூலனூர் வீரனுக்குத் தெரிந்தது. அவரைக் காணவேண்டும் என்று புறப்பட்டான். சங்ககிரிக்கு வந்து சேர்ந்தான். அவரைக் காணும்பொருட்டு வேறு வேறு இடங்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள்.

ஏதோ முக்கியமான அரசியல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடைபெறுவது போலத் தோன்றியது. பாளையக்காரர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அங்கங்கே நவாபின் பிரதிநிதிகளாக இருந்தவர்களும் வந்து சில நாட்கள் தங்கி, அவரைப் பார்த்துப் பேசி விட்டுச் சென்றார்கள்.

நவாபு குடும்பத்தோடு வந்து தங்கியிருந்தார். நீண்ட காலம் தங்கும் நோக்கத்தோடே வந்திருந்தார்.

மூலனூர் வீரனுக்கு நவாபைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மிகவும் முக்கியமான கருத்துக்களை அவரிடம் சொல்லி ஆலோசனை செய்ய வந்தவர்களில் சிலர் இன்னும் அவரைக் காண முடியாமல் அதற்குரிய செவ்வியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் தான் நவாபைக் காண முடியாதென்று எண்ணிய மூலனூர்த் தொண்டைமான் ஊருக்குச் சென்று பின்பு ஒரு முறை வரலாம் என்று எண்ணினான். ஆனாலும், அவனுக்கு இப்போதே பார்த்துவிட வேண்டும் என்று வேகம் உண்டாயிற்று. 'எடுத்த காரியம் சிறியது. இதில் வெற்றி பெருவிட்டால் வேறு எந்தக் காரியத்தைச் சாதிக்கப் போகிறோம்?' என்று அவனுக்குத் தோன்றியது. எப்படியாவது நவாபைப் பார்த்துவிட்டே செல்வதென்று முடிவு கட்டினான்.

நவாபுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மிடுக்குடையவன். கோழிப்போர் ஆட்டுக்கடாப் போர் இவற்றில் மிகவும் விருப்பம் உள்ளவன். அவனே ஓர் ஆட்டுக் கடாவை வளர்த்து வந்தான். அது கொழு கொழுவென்று வளர்ந்தது. நெடுந்துாரம் வரும்போதே அதன் நாற்றம் வீசும், அந்த ஆட்டை நவாபின் பிள்ளை சங்ககிரிக்கும் அழைத்து வந்திருந்தான்.

வளமான உணவைத் தின்று கொழுத்திருந்த ஆடு சங்ககிரி வீதியிலே உலா வரும். வேறு ஆட்டைக் கண்டால் எளிதில் விடாது. ஆடு என்ன?மாட்டைக்கூட அது எதிர்க்கும். நாயை முட்டும். தன்னுடைய வலிமையினால் அது எல்லாரையும் அஞ்சச் செய்தது. நவாபின் மகன் வளர்க்கும் ஆடல்லவா? அதனால் யாரும் அதை ஒன்றும் செய்வதில்லை; போகிற போக்கிலே விட்டுவிட்டார்கள்.

நவாபின் ஆடு வருகிறதென்றால் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் குடர் குழம்பும். இன்று அவனை முட்டித் தள்ளிவிட்டது; 'இன்று அந்தக் கடைக்குள்ளே புகுந்தது; இன்று அந்தக் கீரைக்காரியை முட்டித் தள்ளிக் கீரை முழுவதையும் தின்று விட்டது' என்பன போன்ற செய்திகள் நாள்தோறும் பரவலாயின. மதம் பிடித்த யானையைக் கண்டு அஞ்சுவதுபோல் மக்கள் வெருவினர். பத்துப் பேராகச் சேர்ந்து அதை அடக்குவது பெரிய காரியம் அன்று. ஆனால் நவாபின் ஆடு அல்லவா அது? அதன் பக்கத்தில் போக முடியுமா? ஆட்டின் பலத்தைவிட அதிகார பலத்துக்குத்தான் அவர்கள் மிகுதியாக அஞ்சினார்கள்.

வாபைக் காண வந்தும் செவ்வி நேராமல் கொங்குநாட்டு வீரன் சங்ககிரி வீதியில் உலாவினான். நவாபின் அதிகார மிடுக்காலும் உணவுச் செருக்காலும் ஆட்டுக்கடா அடக்குவார் இன்றி, அதே வீதியில் நடை போட்டுக்கொண்டிருந்தது.

ஒரு நாள் மூலனூர்த் தொண்டைமான் வீதியிலே நடந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் புலம்பிக்கொண்டு ஓடி வந்தாள். அவள் கையில் பல பலவகைக் காய்கறிகள் இருந்தன. "ஆடு, ஆடு!" என்று கதறிக்கொண்டே ஓடினாள். பின்னாலே நவாபின் ஆடு துரத்திக்கொண்டு வந்தது. தொண்டைமானுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சட்டென்று ஆட்டுக்கு முன் போய் நின்றான். அது பிரமித்து நின்றது. அவனை முட்ட வந்தது. அவன் தன் ஊரில் மாட்டையும் ஆட்டையும் அடக்கிய திறலாளன். ஆதலால் நெளிவு அறிந்து அதை மடக்கிவிட்டான். அந்த ஆடு அவனை ஒன்றும் செய்ய முடியாமல் வந்த வழியே போய்விட்டது. காய்கறி வைத்திருந்த பெண்மணி பெற்றேன் பிழைத்தேன் என ஓடிப்போனாள்.

தொண்டைமான் அந்த முரட்டுக் கடாவை அடக்கியதைக் கண்ட ஊர் மக்கள் வியந்தார்கள். அவனுடைய வீரத்தைப் பாராட்டினார்கள். சிலர், 'நவாபின் காதில் விழுந்தால் இவனை என்ன செய்வாரோ?' என்று அஞ்சினார்கள். தொண்டைமான் அவர்கள் வார்த்தை ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளாவிட்டாலும், அந்த ஆடு நவாபின் மகன் வளர்க்கும் செல்ல ஆடு என்ற செய்தியைத் தெரிந்து கொண்டான். அப்போது அவனுக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றியது.

மறு நாள் அந்த ஆடு வரும் வழியையே பார்த்துக் கொண்டு தெருவில் நின்றிருந்தான் தொண்டைமான். ஆடு வந்தது. அதை வீரன் பற்றினான். அது திமிறியது. அதனை அடக்கியதோடு தன் கையில் இருந்த கூரிய அரிவாளால் அதன் காதுகள் இரண்டின் நுனியையும் அறுத்துவிட்டான். இதுவரையில் எதிர்ப்பின்றி மனம் போலத் திரிந்த அந்த ஆட்டுக்குச் சினம் பொங்கியது. ஆனாலும், தொண்டைமான் இடம் தெரிந்து தட்டிய தட்டுகளால் அது சோர்வடைந்து போய்விட்டது. 

கடாவின் காதை அறுத்த இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது. "ஐயோ, பாவம்! இவனுக்கு என்ன போதாத காலமோ, இந்தக் காரியத்தைச் செய்து விட்டான்!” என்றே யாவரும் இரங்கினார்கள். நிச்சயம் தொண்டைமானுக்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்றே அஞ்சனார்கள். ஆனால் அதே சமயத்தில், "இப்படி ஒரு வல்லாள கண்டன் வந்தால்தாள் அந்த முரட்டு ஆடு அடங்கும்” என்றும் பேசிக்கொண்டார்கள்.

காதறுந்த ஆடு நவாபின் மகன்முன் போய் நின்றது. அவன் மூக்கறுந்தவன் போல ஆனான். "எந்தப் பயல் இந்தக் காரியத்தைச் செய்தான்?" என்று குதித்தான். நவாபுக்குச் செய்தி போயிற்று. -

"இந்தக் காரியத்தைத் துணிந்து செய்தவனை உடனே என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள்" என்று நவாபின் உத்தரவு பிறந்தது.

மூலனூர்த் தொண்டைமான் தான் செய்த காரியத்திற்காக இரங்கவில்லை. தண்டனை கிடைக்குமே என்று அஞ்சவும் இல்லை. தலை மறைவாக இருக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை. அவன் அதை வேண்டுமென்றே செய்திருக்கிறான். ஆதலால் மேல் விளைவுக்கும் அவன் ஆயத்தமாக இருந்தான்.

நவாபின் ஏவலர்கள் தொண்டைமானை அழைத்துக் கொண்டு நவாபின்முன் நிறுத்தினார்கள். வீரன் நவாபுக்குப் பணிவுடன் ஒரு சலாம் போட்டு நின்றான். நவாபு அவனை ஏற இறங்கப் பார்த்தார். ஆள் வாட்ட சாட்டமாக இருந்தான். அவன் திண்ணிய தோள்களும் பரந்த மார்பும் அவருக்கு வியப்பை உண்டாக்கின.

"நீ தானே கடாவின் காதை அறுத்தவன்?" என்று கேட்டார்.

"ஆம்" என்றான் தொண்டைமான். 

"ஏன் அப்படிச் செய்தாய்?" என்று சினக் குறிப்புடன் கேட்டார் நவாபு.

"நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்க வேண்டும். இரண்டு காரணங்கள் உண்டு. சொல்லட்டுமா? -

"சொல்."

"முதல் காரணம்: நவாபு அவர்களைக் காண வேண்டும் என்று நான் இங்கே வந்து பல நாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். பேட்டி கிடைக்கவில்லை. எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. நவாபு சிறந்த வீரர்களைப் பாராட்டும் பெரு வீரர் என்று கேள்வியுற்றிருக்கிறேன். கோழைகளைப் போல் அஞ்சாமல் வீரச் செயல் செய்கிறவர்களிடம் நவாபு வமிசத்தாருக்கு அன்பு அதிகம் உண்டென்பதை எல்லாரும் சொன்னார்கள். அதனால் சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பொங்கி எழுத்தது. அதனால் இப்படிச் செய்தேன்."

"இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?”

“சமூகத்தின் கவனம் இந்த ஏழையின்மேல் பட வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. நான் எந்தப் பாளையத்துக்கும் சொந்தக்காரன் அல்ல. அரசாங்க அதிகாரியும் அல்ல."

"ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?"

"நல்ல அரசரென்றும் வீரத்தைப் பாராட்டுகிறவரென்றும் சொன்னார்கள். அதனால் பார்க்க எண்ணினேன். வீரம் ஒன்றுதான் நான் பெற்றிருப்பது. அதைச் சமூகத்துக்குப் பயன்படும்படி செய்யவேண்டும் என்பது என் ஆசை. இதைத் தெரிவிக்க வேறு வழி. இல்லை. அதனால்தான் இந்தக் காரியத்தைச் செய்தேன். சமூகத்தின் முன்னே வலிய இழுத்துச் சென்று நிறுத்தி வைப்பார்கள் என்று தெரிந்தே இதைச் செய்தேன். சமூகத்தின் முன் நின்று பேசவேண்டும் என்பதற்காகவே இது செய்தேன்.”

தொண்டைமானுடைய பேச்சும் மிடுக்கும் உருவமும் நவாபின் உள்ளத்தை ஈர்த்தன. அவன் தமக்குப் பயன்பட வேண்டும் என்ற விருப்பமுடையவன் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவர் சினம் தணிந்தது.

"இரண்டு காரணம் என்றாயே; மற்றொன்று என்ன?" என்று கேட்டார் நவாபு.

"அது சாமானியமான காரணம். இந்தக் கடா ஊரில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தது. இது வீதியில் வரும்போது பெண்கள் நடமாட முடிவதில்லை. இதன் மிடுக்கைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நினைத்தேன்.".

"அது நம்முடைய கடா என்று தெரியாதா?”

"தெரியும். சமூகத்தில் மக்களுக்கு எது நன்மை என்று அறிந்து அதைச் செய்யும் பண்பு நிறைந்திருக்கிறதென்று அறிந்திருக்கிறேன். அந்தக் கடாவினால் உண்டாகும் அபாயத்தை யாரும் இங்கே தெரிவித்திருக்க மாட்டார்கள். அதைக் கண்டு யாவரும் பயப்படுவதோடு, அதனால் விளையும் தீங்குகளினல் மக்கள் தங்களுக்குள் நவாபு அவர்களைப் பழி கூறி வருகிறார்கள். அறிவில்லாத ஓர் ஆட்டின்பொருட்டு, சமூகத்திற்குக் கெட்ட பெயர் வரக்கூடாதல்லவா? ஆகையால், அதை அடக்கி மக்களுடைய பயத்தைப் போக்கினால் சமூகத்துக்கு வந்த பழியைப் போக்கினவன் ஆவேன் என்று எண்ணினேன்."

இப்போது நவாபு தொண்டைமானுடைய பேச்சுச் சாதுரியத்தையும் வியந்தார்; 'இப்படி ஒரு வீரனை நம் கையில் வைத்திருந்தால் நமக்குச் சமயத்தில் பயன்படுவான்' என்ற எண்ணம் அவருக்கு உண்டாகிவிட்டது. 

"ஆட்டை நீ கொன்றிருக்கலாமே?” என்ற கேள்வி நவாபிடமிருந்து பிறந்தது.

“என்னுடைய நோக்கம் என் வலிமையைச் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். அந்த வாயில்லாப் பிராணியைக் கொன்று என்ன பயன்? அதை நாம் அடக்கினால் அடங்கிவிடுகிறது; அடக்கா விட்டால் துள்ளுகிறது."

நவாபு சிறிது யோசனையில் ஆழ்ந்தார். அருகில் இருப்பவர்கள், அவர் என்ன தண்டனை விதிக்கப் போகிறாரோ என்று கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

நவாபு பேசலானார்: "நீ சிறந்த வீரன்; உன்னை. நான் மெச்சுகிறேன்.”

தொண்டைமான் நிமிர்ந்து நோக்கினான்.

"நீ பெரிய வீரன் மட்டும் அல்லன்; பேச்சிலும் வல்லவன். உன் உடற் பலத்தையும் அறிவுப் பலத்தையும் பாராட்டுகிறேன். நமக்குத் தேவையானபோது உனக்கு ஆள் விடுகிறேன். நீ இனி நம்முடைய சேவகன். உன் பெயர் இனி வெறும் தொண்டைமான் அல்ல. "வளர் கடாவைக் காதறுத்த பகதூர் தொண்டைமான் நீ" என்று நவாபு சொன்னபோது யாவரும் அவனையே பார்த்தார்கள். -

அவன் நன்றியறிவோடு சலாம் வைத்தான். அன்றுமுதல் அவன் பின்னும் செருக்கோடு தன் வலிமையைப் பாதுகாத்து வந்தாள். வளர்கடாவைக் காதறுத்த பகதூர் தொண்டைமான் என்ற பெயர் எங்கும் வழங்கலாயிற்று.