அமுத இலக்கியக் கதைகள்/வாசலில் ஏடு

விக்கிமூலம் இலிருந்து



வாசலில் ஏடு


புலவர் நெடுந்தூரத்திலிருந்து வந்திருந்தார். வாணராயரைக் கண்டு அளவளாவ வேண்டுமென்றும், அவரால் தம்முடைய வறுமையைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்றும் எண்ணி வந்திருந்தார். அப்போது வாணராயர் எங்கோ வெளியூர் போயிருந்தார். வந்திருப்பவர் புலவர் என்பதை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் உபசரித்து வரவேற்றார்கள். வாணராயர் இன்னும் சில நாட்களில் வந்து விடுவாரென்றும், அதுவரையில் தங்கியிருக்கலாமென்றும் அவர்கள் சொன்னர்கள். புலவர் நாணம் உடையவராதலின், சும்மா பொழுது போக்கிக்கொண்டு முகம் அறியாதவர்களுக்கு இடையில் இருக்க விரும்பவில்லை. பின்பு வருகிறேன் என்று சொல்லிப் போய்விட்டார்.

வாணராயர் வெளியூருக்குப் போயிருந்தவர் திரும்பி வந்தார். புலவர் ஒருவர் வந்திருந்த செய்தியை உறவினர்கள் சொன்னார்கள்.

"அவர் எந்த ஊர்? என்ன பேர்?" என்று வினவினார் வாணராயர். அவர்கள் அவற்றைக் கேட்டுவைத்துக் கொள்ளவில்லை என்று சொன்னர்கள். அதனை அறிந்து மிக வருந்தினர் வாணராயர். 'வந்தவர் எவ்வளவு பெரிய புலவரோ! குறிப்பு அறிந்து ஈயும் கொடையாளிகளிடத் தான் தண்டமிழ்ப் புலவர்கள் செல்வார்கள். அவர் எப்படி மனம் வருந்திப் போபனாரோ?' என்று எண்ணி எண்ணி நைந்தார்.

"வந்தவர் புலவர் என்று அறிந்தும் நீ! சும்மா இருந்துவிட்டீர்களே" என்று வீட்டில் உள்ளவர்களைக் கடிந்துகொண்டார். அவர்கள் புலவரைத் தங்கியிருக்கும்படி சொன்னதைத் தெரிவித்தார்கள். 'நீங்கள் வற்புறுத்திச் சொன்னால் அவரை இருக்கும் படி செய்திருக்கலாம்” என்றார்.

இந்த நிகழ்ச்சி அவர் மனத்தைப் புண்படுத்தி விட்டது.

*

கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த செல்வர்களில் வாணராயர் ஒருவர். அவர் பவளகுலம் என்னும் மரபில் வந்தவர். கோயம்புத்துார் மாவட்டத்தில் சமத்துர் என்னும் ஊரில் உள்ள குறுநில மன்னர்களுக்கு வாணராயர் என்னும் சிறப்புப் பெயர் இன்றும் இருந்து வருகிறது.

புலவரைக் கண்டு இன்புற இயலவில்லையே என்று வருந்திய வரணராயர் தம்மை நாடி வரும் புலவர்களிடம் பேரன்பு பூணும் இயல்புள்ளவர். அவர்களால் புகழ் அடையவர். அவர்களுடைய குறை இன்னதென்று அறிந்து அதனைப் போக்கும் இயல்புடையவர்.

பின்னும் ஒரு நாள் இந்த வாணராயர் வெளியூர் சென்றிருந்தபோது வேறு ஒரு புலவர் வந்தார். அவருடைய ஊர், பேர் முதலியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள், வீட்டில் உள்ளவர்கள். அன்பாகப் பேசி, செல்வர் வந்துவிடுவார் என்று சொல்லி நிறுத்திவைத்தார்கள். புலவர் ஒரு நாள் தங்கினர். தம்முடைய தமிழ்ப் புலமைக்குப் பயனின்றி, யாருடனும் அளவளாவாமல் சோறு தின்று சும்மா இருப்பதை அவர் விரும்பவில்லை; "பின்பு ஒருமுறை வருகிறேன்" என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

அப் புலவர் தொண்டை நாட்டிலிருந்து வந்தவர். தமிழுலகத்தில் அவருடைய பெயரை அறியாதவர் அரியர். வாணராயர் தம் ஊர் வந்து சேர்ந்தவுடன் நிகழ்ந்தவற்றை அறிந்தார். வீட்டில் இருந்தவர்கள் தாம் செய்ய வேண்டியதைச் செய்தார்கள் என்பதையும் உணர்ந்துகொண்டார். புலவர் பெயரைக் கேட்டவுடன் செல்வருக்கு வருத்தம் மிகுதியாயிற்று. "அடடா! அவரைப் பார்க்க வேண்டுமென்று மிக்க ஆவலோடு இருந்தேனே! என்னை அவர் தேடிக்கொண்டு வந்தும் அவரைச் சந்திக்கும் பேறு எனக்குக் கிடைக்காமல் போயிற்றே!" என்று உள்ளம் வாடினார்.

*

வேறு ஒரு சமயத்தில் வாணராயர் அளவற்ற வருத்தத்தில் ஆழும் நிகழ்ச்சி ஒன்று நடந்துவிட்டது. அன்று அவர் ஊரிலேதான் இருந்தார். ஆயினும், வந்த புலவர் ஒருவரைச் சந்திக்க இயலாமற் போயிற்று. அதற்குத் தக்க காரணமும் இருந்தது.

அவருடைய நெருங்கிய உறவினர். ஒருவருக்கு உடல்நலம் சரியாக இல்லை. அவர் நோய்வாய்ப் பட்டார். வாணராயரோடு அவரது வீட்டில் வாழ்ந்து வந்தவர் அவர். வரவர அவருடைய நோய் கடுமை ஆயிற்று. தக்க மருத்துவர் வந்து பார்த்தார்; "இன்னும் இரண்டு நாட்கள் போகவேண்டும்” என்று சொன்னர். வீட்டில் உள்ளவர்கள் யாவரும் கவலையோடு இருந்தனர்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு புலவர் அந்தச் செல்வரை நாடி வந்தார். வீட்டு வாயிலில் உள்ளவர்களிடம், "வாணராயர் இருக்கிறாரா?” என்று விசாரித்தார். அவர்கள் இருக்கிறார் என்று சொன்னர்களேயன்றி, அவரை மலர்ந்த முகம் காட்டி வரவேற்கவில்லை. வாணராயருடைய நல்லியல்புகளைக் கேட்டிருந்த புலவர் அவர்களுடைய போக்கைக் கண்டு மனம் வாடினர். 'நல்ல இடத்தில் இப்படியும் அன்பற்றவர்கள் இருப்பது உலக இயல்புதான்' என்று ஒருவாறு சமாதானம் செய்துகொண்டார். அருகில் நின்றிருந்த வேறு ஒருவரிடம், "இப்போது அந்தப் பெருமானைக் காணலாமோ?: என்று கேட்டார்.

அவர் அயலூரிலிருந்து வந்திருந்தவர்; நோய்வாய்ப் பட்டிருந்தவருக்கு உறவினர். அவரது நோய்நிலை அறிந்து பார்க்க வந்தவர். அவர் புலவரை, "நீர் யார்? அவரை என்ன வேலையாகப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார்.

"நான் ஒரு புலவன்; வள்ளல் அவர்களைக் கண்டு பேசிப்போகலாம் என்று வந்தேன்" என்றார் புலவர்.

அங்கே நின்றிருந்தவர் புலவர்களின் பெருமையை உணராதவர்; இரவலர் வரிசையில் அவர்களைச் சேர்த்து எண்ணுபவர். அவர் உடனே, "ஒகோ! புலவரா? அவரிடம் பணம் வாங்க இது நேரம் அன்று. அவருடைய சொந்தக்காரர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அவரைப் பார்ப்பாரா? உம்மிடம் வந்து பேசுவாரா?" என்று கூறினார். அவர் பேச்சில் நயம் இல்லை; கடுமை இருந்தது. புலவர் தம் தலையெழுத்தை எண்ணி வருந்தி வந்த வழியே திரும்பிவிட்டார்.

நோயாளி சில நாட்களில் குணம் பெற்றார். அவரிடம் அன்பு வைத்து உடனிருந்து ஆவனவற்றைக் கவனித்த வாணராயர் ஆறுதல் பெற்றார். புலவரைக் கடுஞ்சொல் கூறி அனுப்பியவர் வாணராயருடைய இயல்பைப் பாராட்டினார்.

"மாமனுக்கு வைத்தியர் கொடுத்த மருந்தில் பாதிக் குணம் உண்டாயிற்று. நீங்கள் அருகில் இருந்து கவனித்ததனால் பாதிக் குணம் ஏற்பட்டது" என்றார். நோய்வாய்ப்பட்டிருந்தவரையே அவர் மாமன் என்று. குறிப்பிட்டார்.

"நான் அருகில் இருந்து என்ன செய்தேன்? அவருடைய வேதனையை வாங்கிக்கொண்டேனா? அவருக்காக மருந்து உண்டேனா? அவருடைய துன்பத்தைக் கண்டபோது அதை வாங்கிக்கொள்ள முடிந்தால், நாமும் அவருடைய வருத்தத்தில் பங்கு பெறலாமே என்று எண்ணியதுண்டு. ஆனல் அது நடக்கிற காரியமா? நடந்தால் நாம் இப்படி எண்ணுவோம் என்பது என்ன உறுதி? நம் கடமையைச் செய்ய வேண்டும் அல்லவா? அதனால் அருகில் இருந்தேன்.”

"நீங்கள் வெளியிலே செல்லாமல் இரவும் பகலும் கட்டிக் காத்தீர்களே! அது பெரிய காரியம் அல்லவா? உள்ளூரிலும் வெளியூர்களிலும் உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. வேளாண்மையைக் கவனிக்க வேண்டும். நியாயம் பேசவேண்டும். ஒவ்வொரு நாளும் உங்களைப் பார்க்க எவ்வளவு பேர் வருகிறார்கள்! வேலை இருக்கிறதோ இல்லையோ, உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று பல சோம்பேறிகளும் வருகிறார்கள். யாரையும் பாராமல் எங்கும் போகாமல் நீங்கள் இப்படி இருந்தது மிகவும் வியப்பான செயல்" என்றார் அயலூர்க்காரர்.

"எப்போதும் செய்கிற காரியங்களைச் சிலநாள் நிறுத்தி வைப்பதனால் குறை ஒன்றும் இல்லை. பின்பு சேர்த்துச் செய்துவிடலாம். இதனிடையில் அவசியமான வேலைகளை நான் விட்டுவிடவில்லை. சாப்பிட மறக்கவில்லை; தூங்குவதற்கும் நேரம் இருந்தது. அப்படியே வேறு சில வேலைகளையும் செய் தேன். முக்கியமானவர்களைக் கண்டு பேசினேன்" என்றார் வாணராயர்.

'இந்தச் சமயத்திலும் நீங்கள் வந்தவர்களுடன் பேசியது வியப்புத்தான். வருகிறவர்களுக்கு உங்கள் அருமை பெருமை எங்கே தெரிகிறது? அவர்களுக்கு  அவர்கள் காரியமே குறி. இந்தச் சமயத்தில் நீங்கள் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்தேன்."

"என்ன அது?" என்று கொடைவள்ளல் கேட்டார்.

"வழியில் போகிறவர்களெல்லாம் உங்களைத் தொந்தரவுபடுத்தக் கூடாது என்பது என் கருத்து. நான்கு ஐந்து நாட்களுக்குமுன் ஒரு பேர்வழி வந்தான். உங்களைக் காணவேண்டும் என்று சொன்னான். என்ன காரியம் என்று கேட்டேன். 'ஒன்றும் இல்லை; சும்மா பேசுவதற்குத்தான்’ என்று சொன்னான். அதற்கு இது நேரம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.”

"அவர் யார் என்று தெரிந்ததோ?"

'யாரோ புலவனாம். புலவனுக்கு இப்போது என்ன வேலை? நல்ல சாப்பாடு போட்டுப் பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கலாம். பல்லை இளித்துக்கொண்டு இந்திரனே சந்திரனே என்று பாடுவான்.”

அவர் பேசிக்கொண்டிருக்கையிலே இடைமறித்து வாணராயர், "புலவரையா போகச் சொன்னீர்கள்?" என்று கேட்டார்.

"ஆமாம், யாரோ சோம்பேறி!” என்று அலட்சியமாகச் சொன்னார் அந்த மனிதர்.

"அடடா! என்ன காரியம் செய்தீர்கள்? புலவர் வந்திருந்தால் என்னிடம் அழைத்துக்கொண்டு வந்திருக்கக் கூடாதோ?" என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கேட்டார்.

"அந்தச் சமயத்தில் அவனை வேறு அழைத்து. வந்தால், அவன் எதையாவது சமயம் அறியாமல், அளக்க ஆரம்பித்து விடுவானே!"

"உங்களுக்குப் புலவர்களின் பெருமை நன்றாகத் தெரியாது என்று நினைக்கிறேன். இந்த வீட்டில் யாருக்கு நுழைய உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் புலவர்களுக்கு முதல் உரிமை உண்டு. நீங்கள் கண்ட புலவர் எவ்வளவு பெரியவரோ! அவர் உள்ளம் எப்படி வருந்தியதோ?”

வாணராயர் சற்றே பேசாமல் இருந்தார். அவர் தம்முடைய செயலால் மகிழ்ச்சி அடையவில்லை என்பதை உடன் இருந்தவர் உணர்ந்துகொண்டார். மெல்லப் பேச்சை முடித்துக்கொண்டு நழுவிவிட்டார்.

*

ம்மை நாடிவந்த புலவர்கள் தம்மைக் காண இயலாமல் போவதை வாணராயர் விரும்பவில்லை. முன்னாலே சொன்ன இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் அவருக்கு மிக்க வருத்தத்தை உண்டாக்கின. இவ்வாறே வேறு சில சமயங்களில் வேறு காரணங்களால் புலவர்களைக் காண முடியாமல் போயிற்று.

ஒரு முறை ஒரு புலவர் வந்திருந்தார். அவரைக் கண்டு வாணராயர் வரவேற்றார். புலவர் ஒருநாள் தங்கினார். விரைவில் ஊர் செல்ல வேண்டும் என்றார். அவருக்குச் செல்வர் பரிசளித்தார். புலவரோ தயங்கித் தயங்கி நின்றார். தமக்கு இன்னது வேண்டுமென்று சொல்லுவதற்கு நாணினர்; "உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?" என்றார் வள்ளல். புலவர் ஒன்றும் சொல்லவில்லை. பின்னும் சிறிது பொருள் கொடுத்து. அனுப்பினார். பிறரிடம் இன்னது வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்பதற்கு யாவருக்கும் துணிவு உண்டாகாது என்ற உண்மையை வாணராயர் உணர்ந்தார். புலவர்களுக்கு வேண்டியதை வேண்டுவதற்கு முன் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும் என்றும், தாம் ஊரில் இல்லாதபொழுது அவர்கள் வந்தால் தம் விருப்பத்தை உணர்த்த முடியாமல் திரும்புவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் எண்ணினார். அதற்கு  என்ன வழி என்று அவர் பல நாட்கள் ஆராய்ந்தார். இறுதியில் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

பவள குலத்தில் பிறந்த ஒரு வள்ளல் தம்முடைய வீட்டு வாயிலில் தனி ஒலைகளையும் எழுத்தாணியையும் தொங்கவிடச் செய்தார். எந்தப் புலவர் வந்தாலும் தம்மைப்பற்றியும் தமக்கு வேண்டியதைப் பற்றியும் அதில் எழுத வேண்டும். வாயில் காவலர்கள் பணிந்து மரியாதையோடு ஒலையையும், எழுத்தாணியையும் புலவர்களிடம் கொடுக்க வேண்டும். புலவர்கள் எழுதியதை உடனே ஏவலாளர்கள் உள்ளே கொண்டுவந்து கொடுக்கவேண்டும். வாணராயர் அதைக் கண்டு முதலில் புலவருக்கு வேண்டிய பொருள்களை அளிக்கச் செய்து, அவர் உவகையோடு இருக்கும்போது, தாம் அவரை நேரில் கண்டு பேசுவார். அவர் வெளியூருக்குப் போன காலமாக இருந்தாலும், தம்மை நாடிவந்த புலவருடைய ஊர் பேர் முதலியனவும், அவர் விரும்பியது இன்னதென்பதும் ஓலையில் இருக்கும். ஊரிலிருந்து வந்தவுடன் புலவர் இருக்கும் இடத்துக்கு அவர் விரும்பிய பொருள்களோடு ஆளை அனுப்பி, மறுபடியும் வரவேண்டும் ன்ன்று சொல்லி அனுப்புவார்.

இந்த ஏற்பாடு எங்கும் காணாததாக இருந்தது. சில புலவர்கள் தமக்கு இன்னது வேண்டும் என்று செல்வர்களுக்குச் சீட்டுக்கவி எழுதி அனுப்புவதுண்டு. ஆனால், எல்லாரும் எப்போதும் அப்படிச் செய்வதில்லை. எல்லாப் புலவர்களுமே தைரியமாக நேர்நின்று தமக்கு இன்னது வேண்டுமென்று சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு இந்தப் புதிய முறை மிகவும் துணையாக இருந்தது.

புலவர்கள் வர்ணராயரைப் பார்ப்பதற்கு முன்பே பரிசு கிடைத்தது. அதனால் அவர்கள் உளம் கனிந்து அந்தச் செல்வரைப் பாடினர்கள். தம்மிடம் வருபவர் வேண்டும் பொருளை இந்த முறையில் அறிந்து,  உதவுவது தமிழுலகுக்கே புதுமையாக இருந்தது; இதை யாவரும் பாராட்டினார்கள். புலவர்களுக்கோ பலவகையில் நலம் உண்டாயிற்று. வாணராயர் ஊரில் இல்லாமல் இருந்தாலும் அவரை நாடிச் சென்ற புலவர்களுடைய விருப்பம் நிறைவேறியது.

பிறருக்குக் கொடுப்பதில் பல பல நுட்பமான முறைகள் உண்டு. குறிப்பறிந்து ஈதலும், புலவர் வந்து சென்ற பிறகு அவரை அறியாமல் பரிசுகளைத் தருவதும், அவர் ஒன்று கேட்டால் பன்மடங்கு வழங்குதலும் முதலிய பல வகையில் புரவலர்கள் தம் அன்பைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், புலவர்கள் நேரிலே தம் வேட்கையைச் சொல்வதற்கு நாணவேண்டிய அவசியம் இல்லாமல், நேரில் காண முடியாமல் போயிற்றே என்று. வருந்த இடம் இன்றி, வாணராயர் தம் வீட்டின் வாயிலில் கட்டியிருந்த ஒலையும் எழுத்தாணியும் செய்து விட்டன.

பிறரால் ஓர் உபகாரம் வேண்டுகிறவர்கள், அந்த உபகாரியிடம் பணிவாக இருந்து அதனைப் பெறுவது உலக இயல்பு. இங்கேயோ, எனக்கு இது வேண்டும் என்று கட்டளை விடுப்பதுபோலப் புலவர்கள் தம் கருத்தைத் தெரிவிக்கலாம். பரிசு பெற்ற பிறகு உபகாரியைக் கண்டு பேசி அளவளாவி விருந்து நுகர்ந்து தங்கலாம்.

*
வாணராயர் கவிஞர்கள் அனுப்பும் ஒலையைக் கண்டு வெளியே வந்து அவர்களை வரவேற்றார். வேண்டியதை வழங்கினார். பின்பு அவர்களுடைய தமிழ்க் கவி இன்பத்தை நுகர்ந்தார். பல புலவர்கள் தம்மைப்பற்றி எழுதிய ஓலைகள் அவர் வீட்டில் குவிந்தன. புலவர்களுடைய அன்புச் செல்வத்தை அவர் பெற்று வாழ்ந்தார்.