அமுத இலக்கியக் கதைகள்/புலியை நாடிய வள்ளல்
"இப்படி, அடிக்கடி சிறுத்தைப் புலி மாட்டை அடிப்பதாக இருந்தால், நாம் எல்லாம் இங்கு வாழ்ந்து என்ன பயன்?" என்றார் ஒருவர்.
"சிறுத்தைப் புலியா, பெரிய புலியா என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. சிறுத்தைப் புலியாக இருக்கலாம்" என்பது ஊகமே அன்றி, நேரிலே கண்டவர் யாரும் இல்லை என்றார் மற்றொருவர்.
"எந்தப் புலியாக இருந்தாலும் அதை விட்டுவைக்கக் கூடாது. பெரிய புலியாக இருந்தால் இன்று மாட்டைக் கடிப்பது நாளைக்கு மனிதனையும் கடிக்கும். ஆகையால், உடனே அதைத் தொலைக்க வழி தேடவேண்டும்” என்றார் முன்னே பேசினவர்.
ஊருக்குச் சற்றுத் தொலைவில் பெருங் காடு ஒன்று இருந்தது; சிறு குன்றும் இருந்தது. அந்தப் பக்கங்களில் புலி ஒன்று உலவுவதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஓரிரண்டு மாடுகள், காட்டுக்குள் மேயப் போனவை திரும்பி வரவேயில்லை 'புலிதான் அடித்துத் தின்றிருக்க வேண்டும்' என்று உறுதியாக நம்பினர். ஆனால், துணிந்து யாரும் நுழைந்து அந்தக் காட்டுக்குள் சென்று. பார்க்கவில்லை.
கொங்கு நாட்டில் கோபிசெட்டி பாளையத்திற்கு அருகில் பாரியூர் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊர்க்காரர்களுக்குத்தான் புலியைப்பற்றிய அச்சம் உண்டாயிற்று. 'புலியை ஒழிக்க வேண்டும்' என்று யாவரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் ஒருவரும் புலியோடு சண்டையிட முன்வரவில்லை.
பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற ஓர் உபகாரி வாழ்ந்து வந்தான். அவன் கொங்கு வேளாளர் மரபில் தோன்றியவன். ஓரளவு செல்வனாக வாழ்ந்தான். 'ஈ' என்பார்க்கு 'இல்லை’ என்னாது வழங்கும் கொடையாளி. அவனிடம் ஏழைகளும் புலவர்களும் அடிக்கடி வந்து பொருள் பெற்றுச் செல்வார்கள். புலவர்கள் வந்தால் சிலகாலம் அவனுடன் தங்கித் தம் புலமையைக் காட்டி இன்புறுத்திப் பின்பு விடை பெற்றுக்கொண்டு செல்வார்க
அத்தகைய கொடையாளிக்கு வறுமை வந்தது. மழை பொய்த்தமையால் விளைவு குறைந்தது. ஆனலும் அவ்வுபகாரியின் கொடை குறையவில்லை. எத்தனை நாளைக்குத்தான் கொடுத்துக்கொண்டே இருக்க முடியும்? கையில் உள்ள பொருளையெல்லாம் கொடுத்தான். தான் கஞ்சி உண்டாலும் வருபவர்களுக்குச் சோற்றை ஊட்டினான்.
இத்தகைய நிலையில் யாரோ ஒரு புலவன் அவனைத் தேடிக்கொண்டு வந்தான். முன்னே செட்டி பிள்ளையப்பனைப் பற்றி அப்புலவன் கேள்வியுற்றிருந்தாலும், அவனால் வர முடியவில்லை. எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தான். இப்போதுதான் பாரியூருக்கு வர நேர்ந்தது. .
தன்னைத் தேடிவந்த புலவனிடம் தன் வறுமையைக் காட்டாமல் முகமலர்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தான் உபகாரி. புலவன் உணவு அருந்தினான். அவனுக்குப் பொருள் வேண்டியிருந்தது. குறிப்பறிந்து ஈயும் கொடையாளியாகிய செட்டி பிள்ளையப்பனிடம் அப்புலவன் வாய்விட்டே கேட்டுவிட்டான்.
இதுவரையில் இந்த அவல நிலை செட்டி பிள்ளையப்பனுக்கு வந்ததே இல்லை. புலவன் வெளிப்படையாய்க் கேட்டும் கொடுக்க இயலாமல் உடம்பில் உயிரை
வைத்துக்கொண்டு வாழ்வதில் பயன் ஒன்றும் இல்லை’ என்று அவனுக்குத் தோன்றியது. அந்தச் சமயத்துக்குப் புலவனிடம் ஏற்ற விடை கூறவேண்டும் அல்லவா? "இன்னும் இரண்டு நாள் கழித்து வாருங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தர முயல்கிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பினான். அப் புலவன் அங்குள்ள நிலையை ஒருவாறு உணர்ந்துகொண்டு புறப்பட்டு விட்டான்.
புலவன் போன பிறகு செட்டி பிள்ளையப்பன் துயரில் மூழ்கியவனாய் உட்கார்ந்திருந்தான். தன் வாழ்க்கையில் இப்படி இழிவான நிலை வந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. உணர்விழந்து செயலிழந்து அவன் அமர்ந்திருந்தான். - *
அப்போது அவனுடைய நண்பன் ஒருவன் வந்தான். அங்கே நடந்தது ஒன்றையும் அவன் அறியான். அவன் விரைவாக வந்து, 'ஊரில் எல்லாரும் புலிக்குப் பயந்து சாகிறார்கள். இது வரையில் மாடுகளை அடித்து உண்டுவிட்டது. இனிமேல் மனிதர்மேல் பாய வேண் டியதுதான்” என்றான்.
செட்டி பிள்ளையப்பன் அவனைத் தலை நிமிர்ந்து பார்த்தான். நண்பன் மறுபடியும், "ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிருய்?'" என்று கேட்டான்.
"புலியைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்ருன் கொடைவள்ளல்.நண்பனுக்குத் தன் துயரைச் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று அவன் நினைத்தான்.
"இந்த ஊரில் யாரும் ஆண்பிள்ளை இல்லையா?” என்று கேட்டான் நண்பன்.
"இல்லாமலா போவார்கள்? பார்க்கலாம்!” என்று பராக்காகக் கூறினான் செட்டி பிள்ளையப்பன். நண்பன் போய்விட்டான். கொடையாளிக்குச் சற்றே முகம் மலர்ந்தது. நண்பன் தன் துயரத்தைப் போக்க வழி காட்டினான் என்று எண்ணினன். 'புலி வாழும் காட்டுக்குள் போய் அதற்கு இரையாகலாம். கொடுப்பதற்கு ஒன்றும் . இல்லாமல் இந்த உடம்பைச் சுமந்துகொண்டு வாழ்வதைவிட, இதுவே நலம்’ என்று அவன் நினைத்தான்.
மறுநாள் தன் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஊரவர்களுக்கும் அவன் ஒரு செய்தியைச் சொன்னன். "நான் காட்டுக்குள் சென்று புலியைக் குத்திவிட்டு வரப் போகிறேன்" என்றான். ஊரவர் அவனைக் கண்டு வியந்தனர். மனைவியும் பிற சுற்றத்தாரும் முதலில் தடுத்தனர். ஆனால், வீர மரபினராதலால் அவனுடைய மிடுக்கான வார்த்தைகளைக் கேட்டுச் சும்மா இருந்துவிட்டனர். அவன் வேலோடும் வாளோடும் புறப்பட்டான். "துணைக்கு யாரும் வரவேண்டா" என்று சொல்லி விட்டான். அவன் வெற்றியுடன் திரும்பி வரவேண்டுமென்று யாவரும் வாழ்த்தினர்.
செட்டி பிள்ளையப்பன் புறப்பட்டுக் காட்டுக்குச் சென்றான். புலியைக் குத்திக் கொல்லப் போகவில்லை; தன்னையே மாய்த்துக்கொள்ளத்தான் போனன். ஆகையால் சிறிதும் அச்சமின்றிக் காட்டுக்குள் நுழைந்தான். எங்கெங்கோ சுற்றியும் புலி கண்ணில் படவில்லை. பகல் நேரத்தில் புலி வெளியே வராதென்பது அவன் நினைவுக்கு வந்தது. 'காட்டின் நடுவேயுள்ள குன்றில் எங்கேனும் அது ஒளிந்திருக்கும்' என்று எண்ணிக் குன்றை நோக்கிச் சென்ருன். மரங்கள் அடர்ந்து இருண்டிருந்த அந்தப் பகுதியில் புலியின் உறுமலை எதிர்நோக்கிப் போனான். ஆனால், மனித அரவம் கேட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. தன் ஊர்க்காரர்கள் புகுவதற்கு அஞ்சும் இந்தக் காட்டில் யார் வந்திருக்கக்கூடும் என்று யோசித்தான். சற்றே மரத்தின் மறைவிலிருந்து உற்றுக் கேட்டான். மனிதக் குரல்தான்; ஐயமே இல்லை.
அவன் கூர்ந்து கவனித்தபோது இரண்டு மூன்று குரல்கள் வேறு வேறாகக் கேட்டன. அவர்கள் யாரேனும் வீரர்களாக இருக்கக்கூடும் என்று எண்ணியபோது, அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. -
மெல்ல அடி எடுத்து வைத்து அவர்கள் இருந்த இடத்தை அணுகினான். என்ன ஆச்சரியம்! அவர்கள் ஒரு பாறையின்மேல் அணிகலன்களையும் பொற்காசுகளையும் பரப்பி வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். செட்டி பிள்ளையப்பன் வரும்போது காலின் கீழ்ச் சருகுகள் சலசலத்தன. அந்த ஒசை அங்கே இருந்தவர்கள் காதில் விழவே, அவர்கள் அவனைப் பார்த்தார்கள். நெடிய உருவம், கையில் வேல், வீரஞ் செறிந்த உடலமைப்பு - இவற்றுடன் செட்டி பிள்ளையப்பன் காட்சியளித்தான். அவனைக் கண்டவுடனே, அந்த மூவரும் பயந்து கையில் சில பொருள்களை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.
அப்போதுதான் அவனுக்கு, அவர்கள் திருடர்கள் என்பது தெரிய வந்தது. பல இடங்களில் திருடிய பொருள்களைக் கொண்டுவந்து அந்த இடத்தில் பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனுக்கு ஓர் உண்மை புலனாகியது. காட்டில் புலி இருப்பதாக யாவரும் அஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தால் அவர்களே மாட்டை அடித்துப் போட்டிருக்கலாம் அல்லவா?
அந்தக் காட்டில் புலி இருக்க வாயப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தான் செட்டி பிள்ளையப்பன். தன் நினைவு கைகூடவில்லையே என்று வருந்தியிருப்பான் அவன்; ஆனால் அப்படிச் செய்யவில்லை. திருடர்கள். தாம் திருடிய பொன்னையும் பொருளையும் பகுத்துக் கொண்டபோது, எதிர்பாராமல் அவன் வந்ததால் அஞ்சி ஓடிவிட்டார்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓட முடியவில்லை; பெரும் பகுதியை விட்டு விட்டுப் போனர்கள். அவை அங்கேயே கிடந்தன.
செட்டி பிள்ளையப்பன் அவற்றின்மேல் கண்ணை ஒட்டினான். உயிரை விட்டுவிட வந்த இடத்தில் பொன்னும் பொருளும் கிடைப்பதென்றால், இறைவன் திருவருள் என்பதையன்றி வேறு என்ன சொல்வது? அவன், 'புலவருக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே!' என்று துயருற்றே உயிரை நீக்க வந்தான். எது அவனிடம் இல்லையோ அது இப்போது கிடைத்து விட்டது. இனிமேல் உயிரை விடவேண்டிய அவசியம் இல்லையே!
அவன் தான் வழிபடும் கடவுளை மனமார இறைஞ்சினான். அவன் கண்களில் நீர் துளித்தது. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது என்பது அவன் திறத்தில் நல்ல முறையில் பலித்தது. அந்தப் பொருள்களை யெல்லாம் சேர்த்து எடுத்துக்கொண்டான்; நேரே தன் இல்லம் வந்து சேர்ந்தான்.
ஊர்க்காரர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம், "புலியைக் காண வில்லை” என்று சொன்னான். புலவன் மறுநாள் வருவான் என்று எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்தான். அவன் முன்பு செய்த கற்பனை வேறு; 'அவன் வருவான்; தன் மறைவைக் கேட்டுத் துயருற்றுப் போவான்’ என்று நினைத்திருந்தான். இப்போது அந்தக் கற்பனை மாறியது.
புலவன் வந்தான். முக மலர்ச்சியுடன் அவனை வரவேற்று உபசரித்தான் செட்டி பிள்ளையப்பன். அவனுக்குப் பொன்னும் பொருளும் வழங்கினன். அப்படி வழங்கியபோது, "நீங்கள் புலமை உடையவர்கள் என்பது மாத்திரம் அன்று; நீங்கள் நல்ல தவமும் செய்திருக்கிறீர்கள். நீங்கள் போன இடம் எல்லாம் நன்மையே விளையும்" என்று சொன்னான்.
புலவன், "உங்களை எதிர்ப்பட்டது என் முன்னைத் தவத்தின் பயன் என்பதை நான் நன்றாக உணர்கிறேன்" என்றான். பாவம்! செட்டி பிள்ளையப்பன் உள்ளத்தூடே என்ன கருத்து ஓடியது என்பதை அவன் எப்படி அறிவான்?