அமுத இலக்கியக் கதைகள்/புதுத் தாலி

விக்கிமூலம் இலிருந்து

புதுத் தாலி

சிவகங்கையில் மருத பாண்டியர் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலம். குன்றக்குடிக் குமரனுக்கு அடிமைப்பட்ட அக்குறுநில மன்னர் அத்தலத்தில் பல வகையான திருப்பணிகளைச் செய்தார். அவருடன் இருந்த நண்பர்களும் முருகனிடம் மாறாத அன்பு பூண்டவர்கள். அடிக்கடி மருதபாண்டியர் அவர்களுடன் குன்றக்குடி சென்று முருகப் பெருமானைத் தரிசித்துக் கொண்டு வருவார்.

அவருக்குத் தமிழ்ப் புலவர்களிடத்தில் மிக்க அன்பு உண்டு. சர்க்கரைப் புலவருடைய வம்சத்தில் உதித்த குழந்தைக் கவிராயர் என்பவர் அவருடைய அவைக் களப் புலவராகவும் தோழராகவும் விளங்கினர். குன்றக் குடிக்கு மயூரகிரி என்று ஒரு பெயர் உண்டு. அந்தத் தலத்தைப்பற்றி ஒரு கோவை இயற்றி அரங்கேற்றினார் அக் கவிராயர். மயூரகிரிக் கோவை என்பது அந்த நூலின் பெயர்.

மருத பாண்டியருடைய அவைக் களத்தில் வீரர்களும் புலவர்களும் குழுமியிருப்பார்கள். அடிக்கடி வேற்று நாடுகளிலிருந்து தமிழ்ப் புலவர்கள் வந்து அவரோடு அளவளாவுவார்கள். அப்புலவர்களுடைய கவிச்சிறப்பை அறிந்து பாராட்டிப் பரிசு வழங்குவார் மருத பாண்டியர்.

ஒருநாள் புலவர் ஒருவர் தம் மனைவியுடன் புறப்பட்டுக் குன்றக்குடிக்குச் சென்றார். முருகப் பெருமானைத் தரிசித்து இன்புற்றார். புதிய திருப்பணிகள் பல அங்கே நடந்திருப்பதையும், பின்னும் நடந்துகொண்டிருப்பதையும் கண்டார். எல்லாம் மருத பாண்டியருடைய அறச் செயல்கள் என்பதைக் கேட்டார். இதற்கு

முன்னும் அவருடைய புகழை ஓரளவு கேட்டு உணர்ந்திருந்தாலும், இப்போது அவருடைய இயல்புகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டார். அவர் புலவர்களுக்கு மதிப்பளிப்பவர் என்பதை அறிந்தபோது புலவருக்கு ஒரு விருப்பம் எழுந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இப்படியே சிவகங்கைக்கும் போய் அந்த வள்ளலைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று எண்ணினர். அந்த ஊருக்குப் போகும் வழியை விசாரித்து வைத்துக்கொண்டார். சிவகங்கையிலிருந்து குன்றக்குடிக்கு அடிக்கடி வண்டிகள் வரும். மருத பாண்டியர் சில சமயங்களில் குதிரையில் ஏறி வருவார். அவ்வாறு வரும் வழி ஒன்று இருந்தது.

இவற்றையெல்லாம் அறிந்துகொண்ட புலவர் தம் மனைவியுடன் சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டார். இடையிலே சில ஊர்களில் தங்கிச் சென்றார். கடைசியில் சிவகங்கைக்கு அருகில் உள்ள ஓர் ஊரை அடைந்தார். அங்கே பகலில் உணவு கொண்டு இளைப்பாறினார். அன்றே சிவகங்கைக்குப் போய்விட வேண்டும் என்னும் ஆவல் அவருக்கு எழுந்தது.மெல்ல நடந்து போய்விடலாம் என்று நினைத்தார். அவர் தனியே இருந்தால் யோசனை செய்யாமல் புறப்பட்டிருப்பார். தம்முடன் தம் மனைவியையும் அழைத்துச் செல்வதனால் சிறிதே தயங்கினார்.

அப்போது நிலாக் காலம். ஒரு கால் சூரியன் மறைந்தாலும் நிலா ஒளியில் வழி கண்டு, போய் விடலாம் என்ற தைரியம் அவருக்கு இருந்தது. 'வழியில் யாரேனும் திருடரால் பயம் உண்டானால் என்ன செய்வது?' என்ற அச்சம் அவர் மனைவிக்கு வந்தது. மருத பாண்டியர் பெருவீரர் என்றும், பொல்லாதவர்கள், அவருக்கு அஞ்சி நடுங்குவார்கள் என்றும் புலவர் கேள்வியுற்றிருந்தார். ஆதலின் அப்படி ஒன்றும் நேராது என்று தம் மனைவிக்குச் சமாதானம் கூறினர். ஒரு வழியாகத் துணிந்து இருவரும் சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடந்து வந்தவர்களாதலின் வேகமாக நடக்க முடியவில்லை. அன்றியும் மெல்லியலாகிய புலவர் மனைவி மெல்லவே நடந்தாள். சற்று விரைவாக நடந்திருந்தால் சூரியன் மலைவாயில் விழுந்த சிறிது நேரத்துக்குள் சிவகங்கையை அடைந்திருக்கலாம். அவர்களால் அப்படிச் செய்ய இயலவில்லை.

முக்காற்பங்கு வழி கடந்தபோது கதிரவன் மறைந்தான். நிலாப் புறப்பட்டது. அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். உடன் யாரேனும் துணையாக வந்திருந்தால் அவர்கள் ஊக்கத்தோடு நடப்பார்கள். முன் பழக்கம் இல்லாத இடத்தில் இரவில் துணையின்றி நடந்தமையின் இருவருக்கும் மனத்துக்குள் அச்சம் உண்டாயிற்று.

அப்போது ஆளரவம் கேட்டது. "முருகா, எங்களுக்குத் துணையாக யாரேனும் வந்தால் நல்லது" என்று புலவர் வேண்டிக்கொண்டார். யாரோ இரண்டு மூன்று பேர்கள் வந்தார்கள். "யார் அது?" என்று கடுமையான குரலில் கேட்டார்கள். அந்தக் குரலே அவர்கள் பொல்லாதவர்கள் என்பதைப் புலப் படுத்தியது.

புலவர் மனைவி அவரோடு ஒட்டிக்கொண்டாள். அவர், "நான் புலவன். மருத பாண்டியரைப் பார்க்கப் போகிறேன்" என்றார்.

"புலவனா? அப்படியானுல் உன்னிடம் பரிசுப் பொருள் இருக்குமே; அவற்றை எடுத்து வை” என்று மிரட்டினார்கள். .  "நான் குன்றக்குடியில் முருகனைத் தரிசனம் செய்துகொண்டு வெறுங்கையோடு வருகிறேன். மருத பாண்டியரிடம் போனால் ஏதாவது கிடைக்கும் என்று அவரை நோக்கிப் போகிறேன்.”

"இந்தப் பெண்பிள்ளையிடம் ஏதாவது இருக்கிறதா?" என்று திருடர்கள் புலவருடைய மனைவியைச் சுட்டிக்காட்டிக் கேட்டார்கள்.

"இவளிடம் ஒன்றும் இல்லை.”

"ஏதாவது நகை இருந்தால் கழற்றி வைக்கச் சொல்.”

"நகையா? நாங்கள் ஏழைகள். எங்களிடம் ஏது நகை?'

அதற்குள் ஒருவன், 'மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடுமா?' என்று கூறிப் புலவரை அடிக்கக் கை ஓங்கினான்.

அதுகண்ட புவவர் மனைவி, "அண்ணே, இவரை ஒன்றும் செய்யாதீர்கள். உண்மையில் எங்களிடம் ஒன்றும் இல்லை. முருகன்மேல் ஆணையாகச் சொல்கிறேன். என்னிடம் இந்தத் தாலி ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை" என்று சொல்லித் தாலிக் கயிற்றை எடுத்துக் காட்டினள்.

அப்போது ஏதோ விலங்கு அருகிலே ஓடியதால் அரவம் கேட்டது. யாரோ வருகிறார் என்ற எண்ணத்தால் திருடர்கள் சட்டென்று அந்தத் தாலிக் கயிற்றை வெடுக்கென்று அறுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.

"அட பாவிகளா!' என்று கதறிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள் அந்தப் பெண்மணி. புலவருக்குச் சிறிது நேரம் ஒன்றும் தோன்றவில்லை. பிறகு மெல்லத் தம் மனைவியைத் தூக்கி நிற்கச் செய்தார். 

"இந்த அக்கிரமம் எங்காவது நடக்குமா?" என்று புலம்பினாள் அவள்; "இந்தக் குன்றக்குடி முருகன் கண் இல்லாமல் போய்விட்டானா?" என்று கூவினாள்.

புலவர் அவளுக்கு ஆறுதல் கூறினார். "நல்ல வேளை, நம்முடைய உயிருக்கு ஆபத்து நேராமல் இருந்ததே; அதுவே ஆண்டவன் திருவருள்தான்" என்று சொல்லித் தேற்றினர். "இந்த நடுவழியில் நின்றுகொண்டு இனி என் செய்வது? திரும்பிப் போகவும் இடம் இல்லை. வந்தது வந்துவிட்டோம். பல்லைக் கடித்துக்கொண்டு சிவகங்கைக்கே போய்விடுவோம்" என்றார்.

அவர்கள் மறுபடியும் நடக்கத் தொடங்கினர்கள். நள்ளிரவில் சிவகங்கையை அடைந்து அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் தங்கினார்கள். இரவு முழுவதும் தூங்கவே இல்லை. புலவருடைய மனைவி அழுது கொண்டே இருந்தாள்.

விடிந்தது. தன்னுடைய கணவன் அருகில் இருக்கும்போதே தாலியை இழந்த வேதனையைச் சகிக்க முடியாமல் புலவர் மனைவி திண்ணையோரத்தில் ஒன்றிக் கொண்டிருந்தாள். புலவர் மெல்ல அவளை எழுப்பி அங்கே உள்ள சத்திரம் ஒன்றை அடைந்தார். அவளை அங்கே இருக்கச் செய்துவிட்டுப் பாண்டியரைப் பார்த்து வரப் புறப்பட்டார்.

வேறு சமயமாக இருந்தால் அவர் மருத பாண்டியரைப்பற்றிப் பல பாடல்களைப் பாடிக்கொண்டு போயிருப்பார்; ஒரு பிரபந்தமே எழுதிக்கொண்டு போயிருப்பார். இப்போது அவ்வாறு செய்ய அவர் மன நிலை இடம் கொடுக்கவில்லை. இரவில் தமக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தபோது அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த அக்கிரமத்தை  முறையிட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணந்தான் முந்தியது.

நேரே அரண்மனையை அடைந்தார். நல்ல வேளையாக மருத பாண்டியர் வெளியூருக்குப் போகவில்லை. தாம் புலவரென்றும், மருத பாண்டியரை மிக அவசரமாகப் பார்க்க வேண்டுமென்றும் சொல்லியனுப்பினார். வரலாம் என்ற செய்தி கிடைத்தவுடன் உள்ளே போய் மருத பாண்டியர் முன் நின்றார். அவர், நீங்கள் யார்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டார்.

புலவர் பேசவில்லை. அவர் மனத்தில் உருவாக்கி வைத்திருந்த ஒரு பாடலைச் சொன்னர். முதல்நாள் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் பாடல் அது.

மருவிருக்கும் கூந்தல் மடவார் கணவன்
அருகிருக்கத் தாலி அறுமா?-இரவினுக்குன்
செங்கோல்செல் லாதா? இத் தேசம் திருடருக்குப்
பங்கா மருதபூ பா,
[மரு-மணம், மடவார்-பெண்கள்.]

இந்தப் பாட்டைப் புலவர் சொல்லும்போது முதலில் ஆத்திரத்தோடுதான் தொடங்கினர். ஆனல் அவர் என்ன அடக்கினாலும் அடங்காமல் அழுகையும் உடன் வந்துவிட்டது.

பாட்டைக் கேட்ட பாண்டியருக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உட்காருங்கள் புலவரே! என்ன நடந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்" என்றார். ஏதோ கற்பனைப் பாட்டு அது என்ற எண்ணம் அவருக்கு உண்டாக வில்லை. புலவரிடம் பீரிட்ட துயரமும் அவருடைய மெய்ப்பாடுகளும் உண்மையை ஊகிப்பதற்கு உதவியாக இருந்தன.

புலவர் அப்படியே தொப்பென்று ஓர் ஆசனத்தில் விழுந்தார். அருகில் நின்றவர்கள் அவரைப் போய்ப் பற்றிக் கொண்டார்கள். மருத பாண்டியரே தம் இருக் கையை விட்டு எழுந்து வந்து புலவரைத் தடவிக் கொடுத்தார். "நீங்கள் வருந்த வேண்டா. என்ன நடந்ததென்று சொல்லுங்கள். உங்கள் குறையை முதலில் தீர்த்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்" என்றார்.

புலவர் மெல்லத் தம் நிலைக்கு வந்தார். இடையிடையே துயரம் தடுத்தாலும் தட்டுத் தடுமாறி நடந்ததைச் சொன்னர். "துரையவர்கள் வீரம் மிக்கவர்கள் என்றும், இந்த நாட்டில் கட்டுக் காவல் அதிகம் என்றும், பொல்லாதவர்கள் வாலாட்ட மாட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். அந்தத் துணிவினால்தான் புறப்பட்டேன். என்னைத் திருடர்கள் அடித்திருந்தாலும் கவலைப்பட மாட்டேன். ஒரு பெண்மணி தன் மங்கலியத்தை இழப்பதென்றால்-"

"புலவரே, நடந்தது நடந்துவிட்டது. அந்தப் பாவச் செயலுக்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாளி தான். உங்கள் மனைவி எங்கே இருக்கிறாள்? அந்த அம்மாளை உடனே அரண்மனைக்கு அழைத்து வாருங்கள். பிறகு மற்றக் காரியங்களைப் பார்த்துக் கொள்ளலாம்" என்றார் மருதபாண்டியர்.

அதிகாரி ஒருவருடன் வண்டியில் புலவர் தாம் தங்கியிருந்த சத்திரத்துக்குச் சென்றார். தம் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்தார்.

அதற்குள் அறிவிற் சிறந்த மருத பாண்டியர் அவ்வூரில் இருந்த பொன் வாணிகர் வீடுகளுக்கெல்லாம். ஆட்களை அனுப்பினார். யாரிடத்தில் புதுத் தாலி இருந்தாலும் உடனே வாங்கிவர வேண்டும் என்று கட்டளையிட்டனுப்பினார். ஒன்றுக்கு இரண்டாகத் தாலிகள் வந்தன.

புலவரும் அவர் மனைவியும் நீராடினர்கள். பூ, பழம், புதுப்புடைவை, புதுவேட்டி, திருமங்கலியம் ஆகியவற்றை வைத்து, "புலவரே, என் நாட்டில் நடந்த அக்கிரமத்தைக் கேட்டு நான் அடைந்த வருத்தம் பெரிது. ஆனல் அந்த அக்கிரமத்தினால் ஒரு நன்மை உண்டாயிற்று. இரண்டாம் முறை உம்முடைய திருக்கையால் இந்த மங்கலியத்தைக் கட்டுங்கள். உங்கள் திருமணம் நடந்தது எங்களுக்குத் தெரியாது. இப்போது அந்தக் காட்சியைக் கண்டு களிக்கிறேன்" என்று கூறித் தாம்பாளத்தை நீட்டினார்.

புலவர் மனைவி புதுப்புடைவை அணிந்து புது மங்கலியத்தை அணிந்தாள். புலவரும் புத்தாடை புனைந்து புது மாப்பிள்ளையாக விளங்கினார். அன்று விருந்துணவு உண்டு களித்தனர் இருவரும். புலவர் மனைவிக்கு வேறு அணிகலன்களும் வழங்கினர் சிவகங்கைத் தலைவர்.

சில நாட்கள் புலவரும் அவர் மனைவியும் அரண்மனை விருந்தினர்களாகவே இருந்தார்கள். அதற்குள் மருத பாண்டியர் தக்க ஆட்களின் மூலம் திருடர்களைக் கண்டு பிடித்துத் தண்டித்தார்.

மருத பாண்டியர் புகழைப் பாட்டால் உரைத்தார் புலவர். பிறகு பலவகைப் பரிசில்கள் பெற்று விடை கொண்டார்.

"இனிமேல் நீங்கள் வருவதை ஆள்மூலம் தெரிவியுங்கள். நான் வண்டி அனுப்புகிறேன். வழி நடந்து துன்புற வேண்டா" என்று கூறிப் புன்னகை பூத்தார் பாண்டியர். புதிய அலங்காரங்களோடு உவகையில் மிதந்த தம் மனைவி தம்மைத் தொடர்ந்து வரப் புலவர் புது மாப்பிள்ளையைப் போலப் புறப்பட்டார்.