அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/தளராத முயற்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(89) ளராத முயற்சிஅவனோ ஏழை; அதிலும் அனாதை. பள்ளியில் நான்கு ஆண்டுகள் மட்டுமே படித்தான். அதற்கு மேல் படிக்க வசதி இல்லை. ஆனால், கதை, கட்டுரை எழுதுவதிலே ஆர்வம் உண்டாயிற்று.

அவனை எழுத விட்டால்தானே! அவன் எழுத உட்கார்ந்தால், கிண்டல் செய்வோர், கேலி செய்வோர் பலர். 'கதை எழுதுகிறானாம் கதை என்று கை கொட்டிச் சிரித்தவர் சிலர்.

தெரு ஓரத்தில் மூலை முடுக்குகளைத் தேடிச் சென்று அவன் எழுத உட்கார்ந்தால் போதும் உடனே விரட்டி அடிப்பார்கள்.

அவர்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் அஞ்சி, இரவு நேரங்களிலே எழுதுவான். யாருக்கும் தெரியாமல், இரவு வேலைகளில் அவனுடைய கற்பனை வலுவடைந்தது.

அவ்வளவு பாடுபட்டு அவன் எழுதியும் பல ஆண்டுகள் எந்தப் பத்திரிகையும் அவனைச் சீந்தவில்லை.

அதற்காக அவன் தளர்ந்தானா? எழுதிக் குவித்துக் கொண்டிருந்தான். தபாலில் அனுப்பிக் கொண்டே இருந்தான். திரும்பி வந்து கொண்டே இருந்தது.

எப்படியோ, ஒரு பத்திரிகை ஆசிரியர் கருணை கூர்ந்து அவனுடைய படைப்பு ஒன்றைப் பிரசுரித்து விட்டார்.

அதன் பின்னர், அவனுடைய எழுத்தை உணர்ந்த பத்திரிகாசிரியர்கள் விரும்பிப் பிரசுரிக்கத் தொடங்கிவிட்டனர்.

அடித்தது யோகம்! அவனுடைய கதைகளுக்கு ஏகக் கிராக்கி. பிரசுரிக்காத பத்திரிகைகளே இல்லை.

பின்னர், வார்த்தைக்கு மூன்று பவுன் கொடுத்து, அவனுடைய கதைகளைப் பிரசுரிக்கும் உரிமை பெற்றனர் பலர்.

அந்த எழுத்தாளர் யார்?

ஆங்கில இலக்கிய வானிலே ஒளியாகத் திகழ்ந்தவர் சார்லஸ் டிக்கன்ஸ்!