அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/010-383

விக்கிமூலம் இலிருந்து


6. திரானஸ்வால் ஞானசம்பன்னன்

இம்மாதம் 26உ, புதவாரம் வெளிவந்த “சுதேசமித்திரன்” பத்திரிகையில் ஞானசம்பன்னன் என்னும் கையொப்பம் இட்டு ‘ஐயோ, அநியாயம், அநியாயம்’ என்னும் ஓர்கடிதம் எழுதியிருக்கின்றார், இவரையே தராசுகோலாந் துலாலக்கினாதிபதியென்றும் திரிச்சங்கு மைந்தன் அரிச்சந்திரனுக் கேற்ற சத்திய கீர்த்தியென்றும் கூறலாம் போலும்.

அந்தோ, இவர் எழுதியுள்ள அநியாயக் கடிதம் 64-வது வரியில் “இங்கோ பொறாமைப் பிண்டங்களும் வெள்ளைத் தோல் போர்த்த மிருகங்களும் சுயநலப் பயித்தியங் கொண்ட கண்மூடிகளுமான அற்ப வெள்ளையரே பெரும்பான்மையோரா இருக்கச்சே” என்றும் அதற்குப் பின் வரிகளில் இந்தியர்களில் கனவான்களையும் ஏழைகளையுங் கூலி கூலியென்று அழைத்துவருகின்றார்கள் என்றும் கூலிகளை மட்டிலுங் கூலியென்று அழைக்க வேண்டும் கனவான்களைக் கூலிகள் என்று அழைக்கலாமோவென்றும், அதற்குப் பின்வரிகளில் இழிகுலத்தோர்களில் பலர் கல்விகற்றுக் கொண்டு இதே தருணத்தில் இந்தியாவின் சாதி வித்தியாசத்தைப் பற்றியும் உயர்குலத்தோரைப் பற்றியும் மற்றும் பெரியோர்களைப் பற்றியும் வாயில் வந்தபடி பேசுவதுமாயிருக்கின்றார்கள் என்றும் வரைந்திருக்கின்றார். அவர் வரைக்குமாறாய் யாமுஞ் சிலதை வரைகிறோம்.

ஐயா ஞான சம்பன்னரே கேண்மின்:-

இந்தியாவில் உடுக்கைப் பறை, பம்பைப் பறை, மத்தளப்பறை, மேளப்பறை அடிப்பவர்களை பறையர்கள் என்று அழைப்பது பொருந்தும் அங்ஙனமின்றி சோதிடவல்லவர்களையும், வித்துவான்களையும், பண்டிதர்களையும், இஸ்டார் பட்டம் பெற்றவர்களையும், இராயபாதூர் பட்டம் பெற்றவர்களையும், அஜுர் செருஸ்தாதாரர்களையும், ரிஜிஸ்டிரார்களையும், இஞ்சினீயர்களையும், டாக்ட்டர்களையுங், கனதனம்பெற்ற வியாபாரிகளையும், பறையர் பறையர் என்று கூறி மனந்தாங்கச்செய்தல் மகிழ்ச்சியாமோ.

திரான்ஸ்வாலில் நூதனமாகக் குடியேறியுள்ளவர்களுக்கு மட்டிலும் நியாயம் வேண்டும். இந்தியப் பூர்வக்குடிகளுக்கு நியாயம் வேண்டாம் போலும்.

அந்தோ ஞானசம்பன்னரே,-

இந்தியாவிலிருந்து திரான்ஸ்வாலுக்குக் குடியேறியவர்கள் திரான்ஸ்வாலர்களேறும் வண்டிகளுள் ஏறப்படாது. அவர்கள் நடக்கும் வீதிகளில் நடக்கப்படாதென்று அநியாயமாக நடத்துகின்றார்கள். இத்தகைய நீதியுமுண்டோ நியாயமுமுண்டோவென நீதிகூறும் கியானசம்பன்னர்கள், இந்தியாவிலிருக்கும் பூர்வக்குடிகளும் விவேகமிகுத்தவர்களும் முயற்சியில் தளராதவர்களும் பூமிகளைப் பண்படுத்த வல்லவர்களுமாகியவர்களை பறையர் பறையர் என்று தாழ்த்தி சுத்தசலங்களை மொண்டுக் குடிக்கவிடாமலும் அம்பட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும் வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும் சில ராஜாங்க உத்தியோகங்களில் சேர விடாமலும் சிலவீதிகளிற் போகவிடாமலும் செய்துவரும் கொடூரங்களைத் கேட்டதற்கும் இது யாதுகாரணம் என்று விசாரிப்பதற்கும் நியாயமில்லாமற் போயதென்னோ.

திரான்ஸ்வாலுக்குச் சென்றவர்களுக்கு மட்டும் நியாயம் வேண்டும். இந்தியாவில் இடுக்கணடையும் பூர்வக் குடிகளுக்கு நியாயமில்லையோ. யாதுகாரணமென்று விசாரிப்பாருமில்லையோ. திரான்ஸ்வாலர்களுக்கு நீதிகூறும்படிச் சென்ற ஞானசம்பன்னர் இந்தியப் பூர்வக் குடிகளின் குறைகளை நீக்குவாரேல் நீதிகோலுக்கு நடுநிலை உள்ளார் என்று கூறலாம். அங்ஙனமின்றி தங்கள் பிரயோசனத்தைக் கருதி பேசியவர் வெள்ளையரை சுயப்பிரயோசனரெனக் கூறியுள்ளது விந்தையேயாம்.

“யதீசங் வபதீ பிஜங் ததிஸங் ஹரதீ பலங்.”

செய்த கருமத்திற்குத் தக்க பலனை அனுபவிப்பார்கள் என்பது புத்ததன்மம். அதன் பகரமாய் இந்தியாவில் செய்துவருங் கருமங்களுக்குக் காட்சி திரான்ஸ்வாலில் அநுபவிப்பதே பிரதிபலனாகும்.

மற்றுமுள்ளக் கன்மபலன்கள் யாவும் இந்தியாவில் கூடிய சீக்கிறத்தில் விளங்கும்.

- 1:38; மார்ச் 4, 1908 -