அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/065-383
61. கனந்தங்கிய லார்ட் கிச்சினரவர்களை இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் சேர்க்கப்படாதென்று மறுக்கின்றார்களாம்
பிரிட்டிஷ் ராஜரீகம் இந்தியாவில் தோன்றிய காலத்தில் மிலிட்டேரி கவர்னர்களும், மிலிட்டேரி கமிஷனர்களும், மிலிட்டேரி டிஸ்டிரிக்ட்டு மாஜிஸ்டிரேட்டுகளுமிருந்து ஆளுகை செய்துவந்தார்கள், குடிகளும் அவர்களுக்கடங்கி இராஜவிசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள்.
அத்தகைய மிலிட்டேரிகளின் ஆளுகை நாளுக்குநாள் குறைந்துவிட்டபடியால், “கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி” என்னும் பழமொழிக்கிணங்க சுதேசியக் கூச்சல் தோன்றிவிட்டது.
அக்கூச்சல்களுக்குக் காரணம்! இரண்டொரு மித்திரபேத சத்துருக்களிருந்து ஏழைக்குடிகளை முன்னிழுத்து விட்டு தாங்கள் யாதுமறியாதவர்கள்போல் பின் பதுங்கி இராஜவிசுவாசமற்ற காரியங்களை நடத்தி வருகின்றார்கள்.
இத்தியாதி மித்திரபேத சத்துருக்கள் தோன்றுவதற்கு தைரியம் இராஜாங்கக் காரியாதிகளை நடத்துபவர்களில் ஓர் மிலிட்டேரி உத்தியோகஸ்தரும் இல்லாதபடியினாலேயாம்.
இதன் உளவறிந்தவர்களே தற்காலம் வெளிதோன்றி லார்ட் கிச்சினரவர்களை ஆலோசினை சங்கத்தில் அமைக்கப்படாதென்று கூச்சலிடுகின்றார்கள். கருணைதாங்கிய இராஜாங்கத்தோர் இவைகளை சீர்தூக்கி வங்காளக் கவுன்சலில் ஓர் மிலிட்டேரி அதிபதியை நியமிப்பதுடன் சென்னை பம்பாய் முதலிய இராஜதானி கவுன்சல்களிலும் ஒவ்வோர் மிலிட்டேரி அதிபதிகளை நியமித்து ஆலோசினை சங்கங்களை வலுச்செய்யவேண்டும்.
ஈதன்றி ஒவ்வோர் ராஜதானியிலும் பிரிகடியர் ஜெனரல்களும், ஜெனரல்களும் அவர்களுக்குப் போதுமான பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுமிருத்தல் வேண்டும்.
இராஜாங்கத்தோர் அத்தகைய ஏற்பாடுகளை செய்து விடுவார்களாயின் “பூனைக்குந்தோழர் பாலுக்கும் காவல்” போலிருக்கும் மித்திரபேதச் சத்துருக்கள் அடங்குவதுடன் அவர்கள் தூண்டுதலால் சுதேசியம் என்பது இன்னது இனியதென்றறியாதபேதை ஜனங்கள் யாவரும் பாழடையாமல் சுகம் பெற்று வாழ்வார்கள்.
நூறுகுடிகளைக் கெடுத்து தாங்கள் ஒருகுடி சுகமடையக் கோறும் சாதித்தலைவர்களின் கொடியச்செயல்களை அடக்கியாளுவதற்கு அறக் கருணையாம் செங்கோலுதவாது, மறக்கருணையாம் கொடுங்கோல் கிஞ்சித்திருந்தே தீரவேண்டும்.
மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால் மிஞ்சுவதுமாகிய வஞ்சநெஞ்சமுள்ளோர் வாசஞ்செய்யும் இடங்கடோரும் பிரிட்டிஷ் இராணுவத் தலைவர்களும் இருப்பார்களாயின் தேசம் சிறப்படைவதுமன்றி சகலசாதி குடிகளும் ஆறுதலடைடவார்கள்.
- 3:5; சூலை 14, 1909 -