அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/095-383
91. போலீஸு உத்தியோகம்
தற்காலம் இத்தேசத்தில் போலீஸ் உத்தியோகஸ்தர்களை அதிகரிக்கச்செய்யவும், பணச்சிலவுண்டாகவும் நேரிடுங் காரணம் யாதெனில்:- தேசத்தில் துற்செய்கை மிகுத்தோரும், கள்ளரும், பொய்யரும், கொலையரும், வெறியரும் அதிகரிப்பதினால் போலீஸ் உத்தியோகஸ்தர்களை அதிகரிக்கச்செய்யவும் பணவிரையமாக்கவும் நேரிடுகின்றது.
அத்தகைய துற்சனர்களும், கள்ளரும் பெருகுவதற்குக் காரணம் யாதென்பீரேல், கைத்தொழில் பெருக்கமில்லாமலும், விவசாயப் பெருக்கமில்லாமலும் சோம்பேரிகள் அதிகரித்துவிட்டபடியால் கொலைத் தொழிலிலும், களவுத் தொழிலிலும் பிரவேசித்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் குடிகளைக் கண்கலங்கச் செய்துவருகின்றார்கள்.
யாதொரு தொழிலுமின்றி சோம்பேரிகளாய்த் திரிபவர்களையும் சாமிகள் வேஷம் போட்டு ஏழைகளை வஞ்சிப்பவர்களையும் பெரியசாமிகளென்று வேஷமிட்டுப் பிச்சையிரந்து தின்பவர்களையும் இராஜாங்கத்தோர் கணக்கெடுத்து அவரவர்களுக்குத் தக்கக் கைத்தொழிலையும் விவசாயத் தொழிலையுங் கொடுத்து வேலைவாங்குவார்களானால் தானிய விருத்தியும், கைத்தொழில் விருத்தியும் பெருகுவதுடன் போலீசுக்குச் சிலவிட்டுவரும் பணமும் மிகுதியாகும். சோம்பலில் தேகத்தை வளர்ப்பதால் வியாதிகளும் அதிகரித்து வைத்தியசாலைகளுக்கும் பணச்சிலவு அதிகரிக்கின்றது. சோம்பேரிகள் கைத்தொழில்களிலும் விவசாயத் தொழில்களிலும் பிரவேசிப்பார்களானால் சோம்பலும் நீங்கி வியாதியுங் குறைந்து வைத்திய சாலைச்சிலவும் மிகுந்துபோம்.
இவற்றை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்து கைத்தொழிலையும், விவசாயத்தையும் முன்பு கூறியுள்ள மூன்று வகை சோம்பேரிகளைக் கொண்டு நடத்துவார்களாயின் போலீஸ் உத்தியோகஸ்தர்களையும் அதிகப்படுத்தவேண்டியதில்லை. போலீஸாருக்கும் அதிக கஷ்டமிருக்கமாட்டாது. ஒவ்வோர் கிராமங்களிலும், பட்டினங்களிலும் ஓர் தொழிலும் அற்றிருப்பவர்களை விடாமற் கணக்கெடுத்து தொழிலளித்தா தரிக்க வேண்டுகிறோம்.
- 3:22; நவம்பர் 10, 1909 -