அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/273-383
269. தேசத்தில் சீவகாருண்யம் உள்ளோருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகுமா சீவகாருண்யமில்லாருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகுமா
சீவகாருண்யம் இல்லாருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகவே தகாவாம். அதாவது பேதைமக்கள் வாழுந்தேசத்தைக் கொடுங்கோல் மன்னன் ஆளுவதற்கு ஒக்கும்.
சீவகாருண்யம் இல்லாதோர் யாவரெனில் தம்மெய்ப்போல் ஒத்த மக்களை மக்களாக பாவிக்காதவர்களும், நூறுகுடி கெட்டாலுங் கெடட்டும் தன்குடி ஒன்று பிழைத்தால் போதுமென்போர்களும், மனதாறாது வஞ்சித்தும், பொய் சொல்லியும் பொருள் பறிப்போர்களும், பசியோடுவாதைப் படுவோரைக் கண்டும் இதங்காது தாங்கள் மட்டிலும் பசிதீர உண்டு களிப்போர்களும், வீதியிலோர் மனிதன் தள்ளாடி விழுந்து விடுவானாயின் அவனைக் கண்டும் காணாதது போல் ஒதிங்கிவிடுவோர்களும், கிராமத்தில் ஏதோ ஓர்க் குடியானவன் அறியாது தீங்கு செய்யின் அக்கிராமத்தையே கெடுக்க முயல்வோர்களும், தம்மெயொத்த மக்கள் அசுத்த நீர்களை மொண்டு குடித்துப் பலவகை வியாதிகளால் மடியவேண்டும். தாங்கள் மட்டிலும் சுத்தநீரை மொண்டு குடித்து சுகம் பெறவாழ வேண்டும் என்போர்களும், பலபேர் பேரிலுங் கோட் சொல்லி அவரவர்கள் குடிகளைக் கெடுத்து தங்கள் மட்டிலுங் கெட்டிக்காரர்களென காலம் பார்த்து அபிநயிப்பவர்களும், எத்தொழிலும் செய்தறியா சோம்பேறிகளாயிருப்பினும் எல்லாம் அறிந்தவர்கள் போற் பொய்ச்சொல்லி ஏமாற்றுகிறவர்களும், எல்லா மக்களும் உழைத்து சீவிக்க வேண்டும். தாங்கள் மட்டிலும் உழைப்பின்றி சீவிக்க வேண்டும் என்று எண்ணுவோர்களும், தங்கள் புசிப்பிற்காக மனிதர்களையும், மாடுகளையும், குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு வதைத்து சுட்டுத்தின்றுள்ளவர்களையும், தின்போர்களையும், தம்மெயொத்த ஏழைகள் கல்வி விருத்தியடைந்து நாகரீகம் பெற்று வாழக் கூடாதென்று எண்ணுவோர்களேயாவர். அத்தகையோர்களுக்கு அதிகாரமும் அந்தஸ்துமுள்ளப் பெரிய உத்தியோகங்களை அளிப்பதாயின் அவர்களுக்குள்ள சீவகாருண்யமற்ற சிறியச்சிந்தையால் பெரிய உத்தியோகத்தைப் பெயரினும் அக்குணம் மாறாது. அவர்களுக்குள்ளடங்கிய உத்தியோகஸ்தர்களையுங் குடிகளையும் அலங்கோலப்படுத்திக்கொண்டே வருவார்கள். அவர்கள் செய்துவரும் சீவகாருண்யமற்றச் செயல்களால் சீவகாருண்யமுள்ள ராஜாங்கத்தின் சிறப்புங் குன்றிப்போம். ஈதன்றி சீவகாருண்யமில்லாதோர்க்கு செல்வாக்குள்ள உத்தியோகங்கள் பெருகிவிடுமாயின் சீவகாருண்யமுள்ள இராஜாங்கத்தையே கெடுக்க முயல்வதன்றி வாக்கு செல்லுகையால் அவர்களுக்குள் விரோதிகளாயக் குடிகளை அன்றே நசிக்க யெத்தனிப்பார்கள். சீவகாருண்யம் எவரிடத்து இல்லையோ அவர்களுக்கு நன்றியும் இருக்காதென்பது திண்ணம். அவர்களுக்குச் செய்யும் நலங்கள் யாவும் நெருப்பில் விழுந்த தேளை எடுத்து வெளியில் விடுவதற்கும், வலையில் அகப்பட்டுள்ள புலியை விடுவித்தலுக்கும் ஒக்கும். ஆதலின் எத்தகையக் கல்விக்கற்றோர்களேயாயினும் சீவகாருண்யம் ஒன்றுமட்டிலும் இல்லாத வம்மிஷ வரிசையோர்களைக் கண்டறிந்து பெருத்த உத்தியோகங்களை அளித்தல் வேண்டும். அப்போதுதான் தேசமும் சிறப்பைப் பெறும், இராஜாங்கமும் ஆனந்தமடையும், சகல குடிகளும் சுகவாழ்க்கைப் பெறுவார்கள். அங்ங்னக்காணாது சீவகாருண்யம் இல்லாருக்குப் பெருத்த உத்தியோகங்களை அளிப்பதாயின் தேசம் சீர்கெடுவதுடன் இராஜாங்கமுங் கவலைக்குள்ளாகிக் குடிகளும் சுகமற்றுப்போவார்கள்.
சீவகாருண்யம் உள்ளோர்கள் யாவரெனில் தம்மெய் ஒத்த மக்களை தம்மெய்போல் பாவிப்பவர்களும், நூறு குடிகள் சுகம்பெற்று வாழின் தாமும் அவர்களுக்குள் சுகம்பெற்று வாழலாமென்று எண்ணுவோர்களும், மனமாற வஞ்சினம் இல்லாமலும், பொய் சொல்லாமலும், கஷ்டப்பட்டுப்பொருள் சம்பாதிப்பவர்களும், தாங்கள் பசியுடனிருப்பினும் எதிரியின் பசியையாற்றி ரட்சிப்பவர்களும், வீதியிலோர் மனிதன் விழுந்து விடுவானாயின் அவனைத் தாம் தம்மெய் ஒத்தவன் எனக்கருதி அருகில் நெருங்கி எடுத்து ஆதரிப்பவர்களும், அறியாமெயால் ஒருவன் ஏதோ தீங்கு செய்துவிடினும் அவற்றைக் கருதாது அவனுக்கு நலம்புரிவோர்களும், தாங்கள் அருந்தும் சுத்தநீரை சகலமக்களும் அருந்தி சுகம் பெறவேண்டுமென்று எண்ணுகிறவர்களும், தங்களால் ஏனைய மக்களுக்கு சுகமளிக்க இயலாவிடினும் அளிப்பவர்களைக் கொண்டேனும் சுகமளிக்கச் செய்பவர்களும், எத்தொழில் வல்லவர்களாயிருப்பினும், மேலும் மேலும் உழைத்து அத்தொழிலை சகல மக்களுக்கும் உபகாரம் உண்டாகச் செய்வோர்களும், கண்டதைக் கண்டோமென்றும், காணாததைக் காணோமென்று மெய்ப்பேசுகிறவர்களும், தம்மெய் ஒத்த மக்கள் தம்மெய்ப்போல் சுகச்சீர் பெறவேண்டும் என்று எண்ணுகிறவர்களும், சகல மக்களுந் தங்களைப்போல் கல்வி கற்று அறிவின் விருத்தியுண்டாகி சுகச்சீர் பெறவேண்டுமென்று எண்ணுகிறவர்களேயாவர். அத்தகையோர்களுக்கே பெருத்த உத்தியோகங்களை அளிப்பதாயின் அவர்களுக்குள்ளடங்கிய உத்தியோகஸ்தர்கள் யாவருங் களங்கமற்று வாழ்வதுடன் அத்தேச மக்களும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள். அரசாங்கமும் ஆறுதலில் நிலைக்கும். இதுகொண்டே சீவகாருண்யம் இல்லார்க்கு இராஜாங்கத்தின் பெருத்த உத்தியோகங்கள் தகவே தகாதென வற்புறுத்திக் கூறியுள்ளோம்.
- 6:14; செப்டம்பர் 11, 1912 -